கதிர் விஜயம்

தெளிவான திசை நோக்கி பயணப்படுவோம்!

 

இன்று நம் ஆசிரியர் குழுவிற்கு பழைய நண்பர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நட்பு ரீதியாக பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது, கரூர் சம்பவம் குறித்த பேச்சு வந்தது. அவர் நிறைய கேள்விகளை எழுப்பினார்.

காவல் துறையை எப்படி பொறுப்பாக்க முடியும்?

.வெ..வினர் எந்த ஒழுங்கும் இல்லாமல்; சரியான திட்டமிடல் இல்லாமல்,காவல் துறையினர் தான் கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்” என்பது எப்படி சரியாகாகும்?

மக்களும் சிந்திக்க வேண்டும், இப்படியான ஆபத்துக்கள் இருக்கின்ற கூட்டங்களுக்கு போவதை தவிர்த்திருக்க வேண்டும். விஜய் வருகிறார் என்பதற்காக அவர்களைப் பற்றி சிந்திக்காமல் இப்படி செல்லலாமா?

அதோடு முந்தைய கூட்டங்களில் காவல்துறை பாரபட்சம் பார்க்கிறது, எங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகளை  விதிக்கிறது என்று இவர்கள் பேசிய பின்னர், இவர்களை கட்டுப்படுத்த காவல்துறை என்ன செய்தாலும் மேலும் காவல் துறை எங்களை கட்டுப்படுத்துகிறது.அடுக்குகிறது என்றெல்லாம் தானே இவர்கள் குதித்து இருப்பார்கள்?

தி.மு. மீது சந்தேகம் வரும் என்று தெரிந்தே,அரசாங்கத்தை குறை கூறுவார்கள் என்று தெரிந்தே தி.மு. இப்படி செய்யும் அளவிற்கு முதிர்ச்சியில்லாமலா இருக்கும்?

பாதிக்கபட்டர்வகளும் அரசையும் தி.மு.கவையும் குற்றம் சாட்டுகிறார்கள், முந்தைய கூட்டங்களில் விஜய் பேசியதன் தாக்கமாக கூட இருக்கும்  என்று பல கேள்விகளை கேட்டிருந்தார்.

எல்லாமே சரியான கேள்விகள் தான். .வெ.. மீது இருக்கும் வெறுப்பிலோ அல்லது தி.மு..மீது உள்ள பாசமோ கிடையாது. எந்த ஒரு நிகழ்வையும் ஒவ்வொருவரும் அவர் அவர் அறிவிற்கும் அனுபவத்திற்கும் அவர் அபிமானத்திற்கும்  வெறுப்பிற்கும் ஏற்ப எடுத்துக்கொள்வார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் இதற்கும் அவர் பா..கவை இழுத்து பேசியிருக்கிறார். விஜய் மீது மட்டும் ஏன் வழக்கு போடவில்லை என்று கேட்டு இருக்கிறார்.அரசாங்கத்திற்கும் விஜய்க்கும் திரைமறைவில் எதுவும் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்றும் கேட்டு இருக்கிறார்.

அப்படியாக இங்கு தி.மு.. ஆதரவாளர்கள் முழுதாக விஜயையும், .வெ. ஆதரவாளர்கள் முழுதாக தி.மு..வை யும் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதில் மும்மரமாக இருக்கும் பொழுது, இருதரப்பினரும் அவரவர்களுக்கு எதிரான உண்மைகளை லாவகமாக புறக்கணித்து விடுகிறார்கள். இதில், நம்முடைய நண்பர், பொதுவில் பாஜகவின் அண்ணாமலை போன்றவர்கள்  இரு பக்கங்களும் இருக்கும் குறைகளை பேசினாலும் அண்ணாமலை போன்றவர்கள் பெரிதும் அரசையும், சிலர் பெரிதும் .வெ..வையும் குற்றம் சாட்டுகிறார்கள்.

சரியான கேள்விகளும் எல்லா தரப்பில் இருந்து கிடைக்கும் உண்மைகளை  கருத்தில் கொள்கிற விவாதங்களும் தான் நம்மை தெளிவான திசையை நோக்கி செலுத்தும்.

முதலில், காவல்துறை மீது குற்றச்சாட்டுக்கள் வைப்பதற்கு காரணம் என்ன?

ஏன் விஜய் தரப்பு மரத்தின் மீது ஏறினார்கள் கம்பங்களின் மீது ஏறினார்கள் அவரவர்களுக்காய் ஒரு அறிவு இருக்க வேண்டாமா? காவல் துறை தான் இவர்களை கட்டுப்படுத்த வேண்டுமா?இப்படி கூட்டங்களுக்கு ஏன் குழந்தைகளை கூட்டிச்  செல்ல வேண்டும்?

ஒரு வாதத்திற்கு முழு பொறுப்பையும் விஜய் தரப்பின் மீது ஏற்றிவிடுவோம், அவர்களிடம் சரியான திட்டமிடல் இல்லாததும், அவர்களிடம் பொறுப்பான நிர்வாகிகள் இருந்து கூட்டத்தை கட்டுப்படுத்தாமல், அவர்களே கட்டுப்பாடுகளை மீறுகிறவர்களாகவும் இருந்தார்கள் அதெல்லாம் மட்டும் தான் இதற்கு காரணம் என்று வைத்துக்கொள்வோம். இப்படி மட்டும் இதை எடுத்துக்கொண்டு, .வெ.கவை தண்டித்து கடந்து போனால், என்ன நடக்கும்?(நடந்த இந்த துயர சம்பவமே .வெ.கவிற்கு பெரிய தண்டனை தான்.எழுவதற்கு முன்னதாகவே வீழ்ந்து கிடக்கிறார்கள்)

பொது இடத்தில் ஒரு கொலை நடக்கிறது, கொலையாளியை தண்டித்துவிட்டோம். ஆனால், மீண்டும் கொலை நடக்காமல் தடுக்க என்ன செய்யப்போகிறோம்?!த.வெ.க.வை மற்றும் குற்றம் சொல்லி தண்டித்துவிட்டு கடந்துவிடலாம் என்பது மீண்டும் மீண்டும் ஒரு குற்றம் நடக்க இருக்கின்ற வாய்ப்பை கண்டுகொள்ளாமல் விடுவதை போன்றது.

மீண்டும் கொலை நடக்காமல் தடுக்க, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில்  உள்ள குறைபாடுகளை கண்டறிந்து உணர்ந்து அதை மேம்படுத்த வேண்டும். மேம்படுத்திய பின்னர் இன்னோரு குற்றம் நடக்கலாம். அது நம் விதிமுறைகளில், கண்காணிப்பில், பாதுகாப்பில் எங்கு ஓட்டை இருந்தது என்பதை நமக்கு காட்டும். மீண்டும் அதை உணர்ந்து நாம் சரி செய்து கொள்ள வேண்டும்.

நாளை .வெ.. என்கிற கட்சி அரசியலில் இல்லாமல் கூட போகலாம்.  இன்று இருக்கின்ற அரசியல்வாதிகளின் காலத்திற்கு பிறகும் ஒரு கூட்டம் நடக்கும்; மக்கள் கூடுவார்கள்.மீண்டும் மீண்டும் லாவகமாக ஒருவரை குற்றம் சுமத்திவிட்டு  நிர்வாகமும் சமூகம் இதே இடத்தில் தேங்கி கிடக்க போகிறதா?

நடிகரை பார்க்க சென்றார்கள் என்பதை குற்றமாக பார்க்கிறோம். மதுரையில் அழகர் இறங்குவதற்கு வரும் கூட்டத்தை விட எந்த கட்சிகளும் பெரிய கூட்டத்தை கூடியிருக்காது.அதிலும் 2022, இரண்டு பேர் கூட்டத்தில் சிக்கி இறந்திருக்கிறார்கள். சாலையில் செல்லும் பொழுது, எந்த திருவிழாவோ கட்சி கூட்டமோ இல்லாமலும் கூட சில நேரங்களில் நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. எல்லாவற்றிற்கும் நம் மக்களிடம் ஒரு ஒழுங்கு இல்லாததை மட்டுமே காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.ஒழுங்கை ஏற்படுத்தி நிலைநாட்ட வேண்டிய நிர்வாகம் என்ன செய்கிறது?

ஒரு பள்ளியில் நடக்கும் விபத்தில் ஒரு குழந்தை இறந்து போகிறது,அந்த சமயத்தில் பள்ளி நிர்வாகத்தையும் ஆசிரியர்களையும் குற்றம் சொல்ல நாம் தவறுவதில்லை. காவலர்கள் சமூகத்தின் ஆசிரியர்கள், எல்லோரும் அவர் அவர் தன்னளவில் ஒழுக்கமாக இருந்துவிடுவார்கள் என்றால், சட்டம் ஒழுங்கு என்கிற பிரிவு எதற்காக, சமூகத்தில் எருமைகள், பூனைகள், எலிகள், குரங்குகள், அடையாளப்டுத்தப்படுத்தாத இன்னும் எத்தனையோ விலங்குகளின் குணம் கொண்டவர்கள் இருப்பார்கள். இவர்கள் எல்லோரையும் பொது இடத்தில் ஒரு ஒழுங்கில் வைத்திருப்பதற்கு தான் காவல் துறை.பேருந்து பயணங்களின் பொழுது குடித்துவிட்டு ஒருவர் பேருந்தில் வாந்தியெடுக்கலாம்; நம் மீது சாய்ந்து மட்டை ஆகலாம். இதெல்லாம் குற்றமாகவே இருந்தாலும் நிர்வாகம் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. நாம் சகித்துக்கொள்கிற இப்படியான குற்றங்கள் அநேகமான நாடுகளில் பெருங்குற்றங்கள். நாம் எப்படி பழகிவிட்டோம் என்றால், நாய் தண்ணி அடிச்சுட்டு வந்து இப்படி செய்துவிட்டது என்று திட்டிவிட்டு கடக்க பழகிவிட்டோம் மீண்டும் அதே தவறு நடக்கும் அப்போதும் மதுபிரியரையே திட்டிவிட்டு கடப்போம். த.வெ.க மீது ஆயிரம் குற்றசாட்டு வைப்போம், எல்லாம் சரி. இதில் அரசாங்கத்தின் பங்கு மற்றும் பொறுப்பு தான் என்ன?

திருமாவளவன், அரசிற்கும் விஜய்க்கும் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடக்கிறதா? விஜயை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறார். நடந்த சம்பவம் தனி ஒரு இடத்தில் நிகழவில்லை. உதாரணமாக ஒரு மைதானத்தையோ வெற்று இடத்தையோ கட்சிகள் தேர்வு செய்து, முழுதும் அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு உணவு தண்ணீர் முதலிய ஏற்பாடுகளை செய்து நடத்துகின்ற கட்சி விழாவில், விழா ஏற்பாட்டில் இருக்கின்ற குறைகளால் ஒரு விபத்து நேர்ந்திருக்கிறது என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி முதலில், அதை ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யலாம். விஜய்யின் மாநாட்டு ஏற்பாட்டில், கொடி கம்பம் சாய்ந்து ஒரு காரின் மீது விழுந்தது; உயிர் இழப்புகள் இல்லை என்றாலும் கூட அந்த விபத்து நடந்ததற்கே நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருக்க முடியும்.ஆனால், இந்தியாவில் அது வழக்கம் இல்லை. காரணம், சட்டத்தில் தெளிவான வழிகாட்டுதல் இல்லை.

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன், விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது சிங்கப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்துகிறார். சன் டிவி அதை ஒருங்கிணைத்து நடத்தவும் விழா ஏற்பாடுகளை செய்யவும் உதவியதாக சன் டிவியில் அந்த நிகழ்ச்சி  ஒளிபரப்பப்பட்டபொழுது  காட்டினார்கள். அப்போது அவர்கள், இந்த நாட்டில் (சிங்கப்பூரில்) நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது, அரங்கிற்குள் மேடை அலங்காரத்திற்காகவோ விளம்பரத்திற்காக கொண்டு வரப்படும் பொருள்கள் எளிதில் தீப்பற்றக் கூடியதாக இருக்க கூடாது என்றும் , எல்லாவற்றையும் ஆய்வு செய்த பின்னர் தான் அனுமதித்தார்கள் என்றும் சொன்னார்கள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது, எந்த ஒரு இடமாக இருந்தாலும், அந்த நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில்,அந்த அரசாங்கம்  பாதுகாப்பை உறுதி செய்வதற்கென  சில வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் வைத்து இருக்கிறது.  ஒரு விபத்து நடக்கிறது என்றால், விசாரணையின் முடிவில் எந்த வழிகாட்டுதல் மீறப்பட்டு இருக்கின்றது அதற்கு பொறுப்பானவர்கள் யார், ஆய்வு செய்த அதிகாரிகள் எங்கே தவறினார்கள்? என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து குற்றவாளிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்கும். ஒருவரை குற்றவாளி என்று நாம் சொல்வதற்கு சட்டம் தான் நமக்கு தான் நமக்கு வழிகாட்டுகிறது. நம் நாட்டின் சட்டங்கள் அநேக இடங்களில் நம்மை முட்டு சந்தில் நிறுத்தி வைத்துவிடுகிறது.

அத்தனை பெரிய கொடி கம்பத்தை நிறுவ யார் அனுமதிக்க வேண்டும் திறன் வாய்ந்த பொறியாளர்கள் அதை ஆய்வு செய்தார்கள், அப்படி எந்த பொறியாளர்களின் ஆலோசனையும்  இல்லாமல்  யாரும் ஆய்வு செய்யாமல்  அத்தனை பெரிய கொடி கம்பத்தை நிறுவலாமா? இது எல்லா கட்சி கூட்டங்களிலும் நடக்கிறது. அந்த விபத்தில் உயிழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்த அரசாங்கத்தால் யாரையும் பொறுப்பாக்கி இருக்க முடியாது. அதற்கு சட்டத்தில் தெளிவு இல்லாதது தான் காரணம். இப்படி இடங்களில், ஒரு சாதாரணமாவர் தான் முதலில் கைது செய்யப்படுகிறார். இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்திற்கு கிரேன் ஆபரேட்டரை  கைது செய்தார்கள். கிரேன் ஆபரேட்டர் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் அவர் அதையெல்லாம் செய்தாரா? என்று யார் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். எதைப்பற்றிய தெளிவும் இல்லை அல்லது அப்படி நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசிடம் தெளிவான திட்டம் இல்லை.தொழிற்சாலைகள் சட்டம், 1948 இல் இயற்றப்பட்டு 87இல் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, 2020இல் புது சட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது, இருந்தும் இப்படியான விபத்துக்களை நிர்வாகம் இன்னும் பின்தங்கியிருக்கிறது தானே !

என் அறிவிற்கு எட்டிய வரை, த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டு இருப்பது சட்டத்தின் படி சரியா என்றால், அது விவாதத்திற்கு உரியது.கைது நடவடிக்கை இல்லாமலும் தனிநபர்கள் மீது இத்தனை அவசரமாக வழக்கு பதியாமலும் கூட விசாரணை நடத்தியிருக்க முடியும்.இது, அரசின் பங்கிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை காட்டுவதற்கும் அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் பதியப்பட்ட வழக்காக இருக்கலாம் என்பது தான் பலரின் சந்தேகமாக இருக்கிறது. அப்படியொரு அவசியம் இருந்திருந்தால், விஜயும் மீதும் பதிந்து இருக்க வேண்டும். சட்டம் எல்லோருக்கும் சமமானது தானே, அதன் (விஜய் மீது வழக்கு பதிவதின்) விளைவுகளை புரிந்துகொண்டிருக்கும் ஆளும் அரசு அதை செய்ய துணியாது.

 காவல் துறை 500 காவலர்களை பணியமர்த்தியதாக சொல்கிறார்கள், இந்த 500காவலர்களுக்கும் பொறுப்புகள் எப்படி பிரித்தளிக்கப்பட்டது? இதைப்பற்றி எந்த விளக்கமும் அரசாங்கமோ காவல்துறையோ அளித்ததாக தெரியவில்லை.

 கேட்ட இடத்தை விட பெரிய இடத்தை கொடுத்தோம், விஜய் தரப்பு சொன்னதை விட அதிகம் கூட்டத்தை எதிர்பார்த்து பெரிய இடமாக கொடுத்தோம் என்று காவல் துறை விளக்கமளித்த பின், ஆளும் கட்சிக்கு கொடுத்த இடத்தை ஏன் மற்ற கட்சிகளுக்கு கொடுக்கவில்லை என்று அடுத்த கேள்வி எழுந்தது.  இப்படி கேள்விகள் எழுந்த பின்னர், செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுதுதிமுகவை விட விஜய்க்கு அதிக கூட்டம் வரும் ஆளும் கட்சிக்கு கொடுத்த இடத்தை கொடுத்திருந்தால், பெரிய வாகன நெரிசல் ஏற்பட்டு இருக்கும் என்கிறார்.இந்த விளக்கம் மேம்போக்காக சரியென்று தோன்றலாம். ஆனால், நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆளும் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தும் பொழுது, முக்கியமாக முதல்வர் துணை முதல்வர், அமைச்சர்கள் போன்றவர்கள் சாலைகளில் கூட்டம் போட்டாலும் தனியாக மாநாடு நடத்தினாலும், காவல் துறை ஒரு வரைபடம் வைத்துக்கொண்டு திட்டம் வைத்துக்கொண்டு வாகனங்களை எப்படி திரும்பிவிடலாம் என்பதையெல்லாம் திட்டமிட்டு; 500 காவலர்களை எப்படி எங்கெல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த போகிறார்கள் என்று ஒரு ஒத்திகையும் நடத்துவார்கள். சில காவலர்களை போக்குவரத்தை சீர் செய்வதற்கு சில காவலர்களை பாதசாரிகளை அதாவது மக்கள் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கும் பயன்படுத்தவர்கள்.அந்த ஒத்திகையில் அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும், கூட்டம் நடக்கின்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழி போக்குவரத்து என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ற இடத்தை தான் கொடுப்பார்கள்.காவலர்களுக்கு பணிகளை பிரித்துக்கொடுக்கும் பொழுது,  செருப்பு வீசுவது போன்ற சமூக விரோத செயல்களில் யாரும் ஈடுபடுவதை தடுக்கவும் கண்காணிக்கவும் கூட்டத்தோடு கூட்டமாய் சில காவலர்களை இருக்கச்  செய்வார்கள்.

இதெல்லாம், கரூர் விஷயத்தில், நடந்ததா என்கிற கேள்விகளும் எழவில்லை அதனால், பதில்களும் கிடைக்கவில்லை.விஜயை பொறுத்தவரையில், y-பிரிவு பாதுகாப்பு பெற்றவர், ஆளும் தரப்பு தலைவர்களுக்கு அடுத்த நிலை பாதுகாப்பை பெற்றிருப்பவர். கிட்டத்தட்ட மேற்சொன்ன விஷயங்களை, திட்டமிடுதலைகளை கட்சி நிர்வாகிகளோடு போலீசார் ஆலோசித்து சரியாக கூட்டத்தை கையாண்டிருக்க வேண்டும். இடத்தேர்வை பொறுத்தவரையில், விஜய்க்கு அந்த கூட்டத்தில் ஏதோ அவசரம் என்றாலும் போக்குவரத்தை கூட்டத்தை சீர்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையிடம் தான் இருந்தது. காவல்துறை பக்கம் இருக்கின்ற குறைபாடுகளாக இவற்றையெல்லாம் தான் நாம் சுட்டுகிறோம்.

முதல் தகவல் அறிக்கையில் காவல் துறை, விஜய் அரசியல் பலத்தை காண்பிக்க வேண்டுமென்றே தாமதமாக வந்தார் என்று பதிவு செய்து இருக்கிறது.  தாமதமானது தெரிந்ததும், விஜய் வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்னமே கூட்டம் கூடாமல் இருக்கும் படி காவல்துறை தடுத்திருக்க வேண்டும் அல்லது கூட்டத்தை கலைத்து இருக்க வேண்டும்.

 அதை செய்திருந்தால் தான் விஜய் தரப்பு, எங்களை காவல் துறை அமுக்குகிறது, பிதுக்கிறது என்கிறார்களே என்று கேள்வி வரலாம். அதையும் திறம்பட கையாண்டிருக்க வேண்டியது காவல்துறையின்  பொறுப்பு தான்.

 அண்ணன் திருமாவளவன் அவர்களின் கட்சி போன்ற ஒரு கட்சியின் மாவட்ட நிர்வாகி இறந்து போகிறார்.அவரின் இறுதி ஊர்வலத்தில், பல பேர் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். எங்கள் நண்பர் சுட்டிக்காட்டியது போல, கட்சி ஊர்வலங்கள், குரு பூஜை, போன்ற நிகழ்வுகளில்  காவல் துறையால் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருக்கிறது.இதுவும் நிர்வாகத்தின் பெரிய குறை தான். அதை யார் வந்து எப்போது சரி செய்யப்போகிறார்களோ!

 அந்த கட்சி நிர்வாகியின் இறுதி ஊர்வலத்தில் வந்த மதுபிரியர்கள், மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஊர்வலத்தை நிறுத்தி,வீரவணக்கம்! வீரவணக்கம்!” என்று கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். வாகன நெரிசல் அதிமாகி கொண்டிருந்தது.அங்கே ஒரு காவலர் வந்தார் ஒரேயொரு காவலர் தான் வந்தார், அந்த ஊர்வலத்தில் வந்த கட்சியின் மூத்தவர் ஒருவரிடம் பேசினார், அந்த மூத்தவர் மூலம் அந்த இளைய மதுபிரியர்களை  கலைந்து போக செய்து, அதற்கு பின் போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தார். இந்த சம்பவத்திலும் கட்சி தொண்டர்களிடம் ஒழுக்க குறைபாடு இருந்தது, இப்படியான இறுதி ஊர்வலங்களுக்கு அனுமதிகள் பெறப்படவேண்டியதில்லை.அந்த ஒரு காவலரால் செய்ய முடிந்ததை ஐந்நூறு காவலர்கள் சேர்ந்து செய்து இருக்கலாமே! விஜய் காலையில் குறித்த நேரத்திற்கு கிளம்பவில்லை என்பது தெரிந்து மக்கள் போக்குவார்த்தையும் கூட்டம் கூடுவதையும் தடுக்க முடிகிற வாய்ப்பு இருந்த போது ஏன் அதை செய்யவில்லை? காவல் துறை மேல் ஏற்கனவே விமர்சனம் வைத்துக்கொண்டிருந்தார் விஜய் என்பதற்காக காவல் துறை தங்கள் கடமையில் இருந்து வழுவியிருக்கலாமா நிலைமையின் போக்கில் இருந்த ஆபத்தை அவர்களும் உணரவில்லையா?! எப்போது காவல் துறையினரை நாம் வசைபாடாமல் இருந்திருக்கிறோம்! இந்த சூழலில் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்கிற சிந்தனையை விட மக்களின் பாதுகாப்பு முதன்மையானது இல்லையா?

 சில நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி கொடுக்கப்பட்ட்டதாக தான் தெரிகிறது. சில நிமிடங்கள் மட்டும் பேசுவதற்கு. .வெ. ஏன் ஏழு மணி நேரம் அனுமதி கேட்டது? காவல்துறை அது பற்றிய கேள்விகள் எழுப்பாமல் 7 மணி நேரம் எதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்? .வெ..விற்கு 7 மணி நேரம் தேவையிருந்திருந்தாலும். 7 மணி நேரம் ஒரு சாலை அடைப்பதற்கு எப்படி அனுமதிக்கலாம்?

 .வெ..நிர்வாகிகள் எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தினார்கள் என்று காவல்துறை குறிப்பிட்டு இருக்கிறது. விதிகளை மீறுகிறவர்களை கட்டுப்படுத்த தானே காவல் துறை! நிலைமையை  விஜயிடம் காவல் துறை நேரடியாக எடுத்து சொன்னதா? விஜய்யும் அந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தினாரா? விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தினார்களா?

அவசர கால திட்டங்கள் காவல்துறையிடம் இருந்ததா?அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்கிற ஒத்திகை நடந்ததா? கூட்டம் நடக்கின்ற இடத்தில் இருந்து மருத்துவமனை செல்லும் வழிகள்,மக்கள் கூட்டம் வெளியேறும் வழிகள் பற்றியெல்லாம் காவல் துறை ஆய்வு செய்திருந்ததா? மற்ற மாவட்டங்களில் விஜய் வந்த கூட்டத்தை காவல்துறை கருத்தில் எடுத்துக்கொண்டிருந்ததா?

மின்வாரிய தலைமைப் பொறியாளர் பேசும் பொழுது மின் தடை இல்லை. ஆனால், தொண்டர்கள்  மரத்தில் ஏறியதால்  ட்ரான்ஸ்பார்மாரில் ஏறியதால் தடை செய்து பின் காவல் துறையிடம் கேட்டுவிட்டு  எல்லோரும் இறங்கியதை காவல் துறையிடம் உறுதி செய்துகொண்டு நாங்கள் மீண்டும் இணைப்பை கொடுத்தோம் என்றார்கள். இந்த செய்தி கூட்டத்தில், சில நொடிகளேனும் மின்தடை இருந்தது என்பதை உறுதிப்படுத்திக்கிறது. மரம் எத்தனை உயரம் இருந்தது என்பது ஒரு கேள்வி, மரம் மின்கம்பிகளை உரசும் படி இருந்திருந்தால் அது வெட்டப்பட்டிருக்கும். மரத்தில் ஏறும் பொழுது காவல்துறை மின்வாரியத்திற்கு தெரிவித்து மின்தடை ஏற்படுத்த சொல்லி எல்லாம் இறங்கிட்டாங்க மீண்டும் இணைப்பை கொடுங்கள் என்றது போல பொறியாளரின் அறிக்கை இருந்தது, பாத்ரூம் லைட்டை போட்டு அணைப்பது போல சொல்கிறார். மற்ற கூட்டங்களில், .வெ. வினரிடம் நாம் கண்ட ஒழுங்கீனங்கள்,நம்மை இந்த அறிக்கையை  அப்படியே ஏற்றுகொள்ளச் செய்கிறது. ஆனால், நெரிசலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும் கொஞ்சம் அசுவாசமான இடத்தை தேடியுமே  தான் இந்த கூட்டத்தில், சில இளைஞர்கள் சிறார்கள் அப்படி ஏறியிருக்கிறார்கள். எத்தனை நிமிடங்கள் இந்த மின்தடை நீடித்தது, எந்த நிமிடம் ஏற்பட்டது என்பதை பற்றிய தகவல் இல்லை.காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் நீண்ட நேரம் காத்திருத்தல், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமை, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்கள் உடல் நிலை சோர்ந்து கீழே விழுந்ததாகவும், அவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும்  கூறப்பட்டுள்ளது.

 

இந்த ரோடு ஷோக்களில் எப்போதும் நீரும் சோறும் எந்த கட்சியும் கொடுத்ததாக தெரியவில்லை. இப்படி நிகழ்வுகளில் மக்கள் ஒரே நேரத்தில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது. 12 மணிக்கு கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது என்றே போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். 7 மணிக்கு தான் விஜய் பேச ஆரம்பித்தார். நிலைமையை அனுசரித்து .வெ .. நிர்வாகிகளிடம் பேசி12 மணிக்கு கூடிய கூட்டத்தை கலைத்து இருக்க வேண்டும்.

என்ன நடந்தது என்று ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்தையும் அனுமானத்தையும் சொல்லலாம்.

உறுதிப்பட சொல்ல முடிந்த விஷயங்கள்

1. விஜய் தாமதமாக வந்தார்

2. அது தெரிந்தும் அதற்கு முன்பு சேர்ந்த கூட்டத்தை  கட்டுப்படுத்தவோ  கலைக்கவோ  காவல் துறை ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

3. .வெ. நிர்வாகிகள் எச்சரிக்கையை மதிக்கவில்லை என்றால் அவர்களை காவல்துறை அப்போதே அவர்களின் விருப்புரிமை அதிகாரம் ப்ரோயோகித்து  கைது செய்து கூட்டத்தை கலைத்து இருக்க வேண்டும். விஜய் தரப்பிற்கு எச்சரிக்கை கொடுத்தவர்கள், 12 மணியில் இருந்து கூடி கொண்டிருந்த கூட்டத்திடம் ஒலிபெருக்கி மூலம் விஜய்யின் தாமதத்தை தெரியப்படுத்தி ஏன் கலைந்து போக சொல்லவில்லை?

4. 7 மணி நேரம் அனுமதி கேட்டதும் தவறு, கொடுத்ததும் தவறு.

5. மின்தடை இருந்திருக்கிறது.

6. ஜெனெரேட்டரையும் யாரோ எப்படியோ நிறுத்தியிருக்கிறார்கள்.

7. மரத்தில் கிளை ஒடிந்து அதன் மூலமும் நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

8.ஆள் நிற்பதற்கு இடமில்லாத இடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது மேலும் நெரிசலை அதிகப்படுத்தியிருக்கிறது.

9. செருப்புகள் வீசப்பட்டு இருக்கிறது.

10. எந்த பெரிய அதிகாரமும் இல்லாத த.வெ.க.மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கிறார். எல்லா குற்றங்களிலும் இப்படி பலியாடாய் ஒருவர் மாட்டிக்கொள்கிறார். அரசியல் சாமானியர்களுக்கானது இல்லை என்கிற அச்சத்தை இந்த கைது ஏற்படுத்துகிறது. அதிகாரமும் 500 காவலர்களும் இருந்தும் காவல்துறையால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த நிர்வாகிக்கு மேல் இருக்கும் தாமதமாக வந்ததற்கு குற்றம் சாட்டப்பட்ட விஜய் மீது எந்த வழக்கும் இல்லை.(இது அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கை என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும் ஆளும் கட்சியின் அரசியல் நடவடிக்கை என்கிற விமர்சனங்களை எப்படி மறுக்க முடியும்.

செந்தில் பாலாஜி அவர்கள், அவரைப்பற்றி பேசும் பொழுது செருப்பு வீசப்படவில்லை என்று சொல்கிறார். ஆனால், முதல் மூன்று நிமிடங்களிலேயே விஜய் அவரை பற்றி பேசினார் என்றும் சொல்கிறார். முதல் மூன்று நிமிடங்களில் பேசியதற்கான எதிர்வினை ஆறாவது நிமிடத்தில் நடந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தை எதிர் தரப்பு எழுப்ப வாய்ப்பு இருக்கிறது.அநேகமான சந்தேங்கங்கள் வெறும் சந்தேகங்களாக மட்டுமே தான் இருக்கிறது. அதனால், இந்த நேரத்தில் தி.மு.கவை குற்றம் சொல்வதை விஜய் தரப்பு நிறுத்திக்கொள்ள வேண்டும், பொது வெளியில் நாம் வைக்கும் கருத்துக்கள் வார்த்தைகள் யாராலும் வீழ்த்தமுடியாததாக இருக்க வேண்டும். அதனால் சாட்சியங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களை தவிர்க்க வேண்டும்.

நாம் ஏன் நிர்வாகத்தை நோக்கி மட்டும் அதிகமான கேள்விகளை எழுப்புகிறோம்? நாளையே கூட .வெ.. என்கிற கட்சி கலைக்கப்படலாம். ஆனால், இந்த சிஸ்டம் ஓடிக்கொண்டு தான் இருக்கும். அதிலிருக்கும் குறைகளை நாம் அவ்வப்பொழுது சரி செய்ய வேண்டும்.கரூர் நிகழ்வுக்கு முன்னமே நீதிமன்றம் பொதுவான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தச் சொல்லியிருக்கிறது. விசாரணை முடிந்ததும் நீதிபதியின்  பரிந்துரை கேட்டு அதை செய்வோம் என்றிருக்கிறார் முதல்வர். அந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வரும் வரை எந்த கட்சிக்கும் இப்படி கூட்டங்கள் நடத்த  அனுமதி அளிக்க கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த ஒருவர் ஏன் அப்படி வழக்கு தொடர வேண்டும். காரணம், இதையெல்லாம் தடுக்க வேண்டியது கட்டுப்படுத்த வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு என்பதால்.த.வெ.க. அவர்களுடைய குற்றங்களை குறைகளை களைந்து மீண்டும் வருவதும் வராததும் அவர்கள் பிரச்சனை.பொது இடம் என்று வந்துவிட்டால் அங்கு எந்த ஒழுங்கு மீறல் யாரால் நடந்தாலும் அது மக்களின் பிரச்சனை, நிர்வாகத்தின் பொறுப்பு.

தங்கள் மீது சந்தேகம் வரும் தங்கள் அரசை குற்றம் சொல்வார்கள் என்பதை அறிந்தும் தி.மு.க இதை செய்யுமா? என்கிற கேள்விக்கு என்ன பதில்?இதில் பேரிழப்பும் பெரிய பின்னடைவும் தி.மு.கவிற்கு இல்லை.அரசியல் களத்தில் நடக்காத குற்றங்கள் இல்லை. அது எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாராலும் எதையும் நிரூபிக்க முடியாது.சாட்சியங்கள் இல்லாத குற்றசாட்டுகளில் உண்மை இருந்தாலும் சாட்சியம் இல்லையென்றால் மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் மற்ற கட்சிகளின் சதிகள் இருக்காது என்று சொல்கிறீர்களா நிச்சயமாக சதிகள் இருக்கலாம் இங்கு எல்லாவற்றிக்கும் தி.மு.கவை குறை சொல்ல சிலர், பா..கவை குறை சொல்ல சிலர், .தி.மு.கவை குறை சொல்ல சிலர் என்று ஒவ்வொருவரும் இது தி.மு.கவின்.சதி, பா..கவின் சதி, .வெ. வின் சதியாக கூட இருக்கும் என்று பேசுவதை பார்க்க முடிகிறது. சதிகள் இல்லாமல் அரசியல் இல்லை. சதிகள் சூரிய வெளிச்சத்திதைப் பார்ப்பதும் இல்லை. சேற்றில் கால் வைத்த பிறகு அம்மா கால் அழுக்காகிருச்சு என்று அழுகக் கூடாது.

 

நிர்வாகத்தில் (System) பிழை இல்லாமல் இருந்திருந்தால் எந்த கட்சி ஆட்சியென்றாலும், எந்த சதிகளும் வேலை செய்திருக்காது. எந்த கட்சி எத்தனை பெரிய கூட்டம் கூட்டியிருந்தாலும் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்காது.எப்போதும் நாம் நிர்வாக ரீதியிலான அரசியலையும் அதில் கொண்ட வரப்படவேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றியும் அதிகம் பேசி பழகுவோம். பெரிய சீர்திருத்தங்கள் நடக்க வேண்டுமென்றால், அரசியலில் பெரிய மாற்றம் நிகழ வேண்டும் அதைத்தான் தேட வேண்டியதாக இருக்கிறது. சீக்கிரம் கிடைக்கும் என்று நம்புவோம்.

 

Error happened.
Exit mobile version