இன்று ஞாயிற்றுக்கிழமை! கடைசியாக வேலை, எழுத்து, இவைகள் கொண்டு தன்னை நிறைத்துக்கொண்ட என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகளிலிருந்து இந்த ஞாயிற்றுக்கிழமை வெகு தொலைவில் இருக்கிறது. எதை செய்ய நினைத்தாலும், ‘என்ன செய்வது என்றும்; செய்து என்ன ஆகப் போகிறது!’ என்றும் ஒரு சலிப்பு தட்டுகிறது.
பிரிவு, ஆற்றாமை, இவைகளோடு எது செய்தாலும் நினைத்த படியான தீர்வை நினைத்தது போலவே எட்டமுடிவதில்லையே என்கிற ஏக்கம் எல்லாம் சேர்ந்து மனதையும் அறிவையும் ஒரு தேக்க நிலைக்கு தள்ளி விட்டு இருந்தது. நான் நட்டதும் ரோஜா ஏன் இன்றே பூக்கவில்லை என்கிற எண்ணம் எப்போதும் இருந்தாலும், ரோஜா பூப்பதற்கான நேரம் தேவை என்பதும் அறிவிற்கு உரைக்கவே தான் செய்கிறது, இருந்தாலும் மனம் மீண்டும் நட்டதும் ரோஜா இன்றே பூக்க வேண்டும் என்று கிடக்கிறது. இப்படியான மனசிக்கல்களுக்குள் இருந்து கொண்டு என்ன எழுத முடியும்?!
மிக முக்கியமாக அரசியல் எழுதவே முடியாது. எழுத்து, யாரோ ஒருவறையேனும் சிந்திக்க வைக்கும் என்கிற எண்ணத்தில் இருந்து எழுதி என்ன மாறிவிடும் இந்த அரசியல் என்கிற வெறுமையான உணர்வுகளுக்குள் மனம் சிக்கிக்கொண்டிருந்தது. எதாவது செய்துகொண்டோ எழுதிக்கொண்டோ இருக்கும் நான் ஏதும் செய்யாமல் நாட்களை கடத்திக்கொண்டிருந்தேன், ஓடிக்கொண்டே இருக்கும் ஒவ்வொருவருக்கும் சலிப்பின் பொருட்டேனும் இப்படியான நாட்கள் தேவை தான். இது ஒரு இடைவேளை மாதிரி.
இந்த இடைவேளையில், LINCOLN LAWYER என்கிற தொடரை பார்த்து முடித்து, SUITS என்கிற தொடரை பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றும் ஒன்றும் உருப்படியாக செய்யவில்லையே என்று உறுத்திக்கொண்டிருக்க, SUITS பார்த்துக்கொண்டிருந்த நான் எழுந்து அடுப்படிக்கு சென்றேன், அங்கே மேசை மீதிருந்த கண்ணாடி குடுவைக்குள் இருந்த அதிரசங்கள் என் கவனத்தை ஈர்க்க, அந்த சிவப்பு மூடியை வேகமாக திறந்து ஒரு அதிரசத்தை கையிலெடுத்து அதை வாயில் வைப்பதற்குள் அம்மாச்சி நினைவிற்கு வந்துவிட்டார். 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, இன்னமும் அதிரசம் என்றால் அம்மாச்சி தான் நினைவுக்கு வருகிறார், ஏன்?! எனக்குள் இருந்து வந்த கேள்விக்கு எனக்குள்ளே இருந்தே பதிலும் வந்தது.
அம்மாச்சி தான் அதிரசத்தை அறிமுகம் செய்துவைத்தார், அம்மாவிற்கு பின்னரே தான் மாமா சித்தி என்று ஒவ்வொருவரின் திருமணமும் நடந்தேறியது. ஒவ்வொருவரின் திருமண ஏற்பாடுகளிலும் முக்கியமானது பலகாரம் செய்வது.அம்மாச்சி தாத்தா அம்மா எல்லாருமாக சேர்ந்து தான் பலகாரங்கள் செய்யவார்கள், அதில் நடுநாயகமாக அம்மாச்சி தான் அத்தனைக்கும் கர்த்தாவாக இருப்பார். திருமண நிகழ்வுகள் முடிந்திருந்தாலும் சுட்டு வைத்த பலகாரங்கள் தீராமல் இருக்கும்.
எனக்கும் தங்கைக்கும் என்று ஒரு வாளி நிறைய பலகாரம் எப்போதும் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஒரு வாளி நிறைய முறுக்கு, ஒரு வாளி நிறைய சத்து மாவு, ஒரு வாளி நிறைய அதிரசம். அலிபாபா குகை மாதிரி அந்த வாளிகள் என் குரலுக்கும் என் தங்கை குரலுக்கும் மட்டுமே தான் திறக்கும்.இது தான், இதெல்லாம் தான்; இன்று வரை அதிரசம் என்றாலே அம்மாச்சியின் ஞாபகம் வர காரணம். இன்று வரை கண்ணாடி கதவுகள் கொண்ட குளிர்ந்த பலகார கடைகளில் இந்த அதிரசம் கிடைப்பதில்லை, இன்றும் யாரோ ஒருவரின் அம்மாச்சி தான் ஏதோ ஒரு வீட்டில் இருந்த படி அதிரசம் சுட்டு விற்றுக்கொண்டும் இருக்கிறார்.
அதிரசத்தை இத்தனை கொண்டாடிக்கொண்டிருக்கும் பொழுதே, ஏன் அம்மா ஒன்னும் செஞ்சு தரலையா? என்கிற கேள்வி வருகிறது.யாரோ சுட்டு தருகின்ற அதிரசம் அம்மாச்சியின் நினைவுகளை இன்றும் தருகிறது தான்.ஆனால், அம்மாவின் நினைவை யார் ஒருவரின் சமையலும் யார் ஒருவர் தரும் பலகாரமும் தருகிறதில்லை. இன்றும் எல்லோரும் தக்காளி சாதம் செய்கிறார்கள். ஆனால், அம்மா செய்வது போல் இல்லை.உணவகங்களில் எப்போதாவது கோலா உருண்டை கிடைக்கிறது.அதுவும் அம்மா செய்வது போல் இல்லை. வாழைப்பூ வடை அம்மா செய்தே ஒரு தசாப்தம் முடிந்திருக்கும். வாழைப்பூ வடை இப்போது யாருக்கும் செய்யத் தெரியுமா? என்கிற ஐயம் கூட எழுகிறது.
இப்படியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்த பொழுதில் ஒன்று புலப்பட்டது.சாதாரணமாக அம்மா அம்மாச்சி இவர்களை நாம் நினைக்க அதிரசமும் வாழைப்பூ வடையும் தேவைப்படுவதில்லை.ஆனால், அம்மாவை தாண்டி யாரோ ஒருவர் எப்போதோ செய்துகொடுத்த ஏதோ ஒரு உணவு நம் மனதில் ஆழப்பதிந்து கிடக்கிறது தானே. அம்மா மாதிரி ஒரு சித்தி சாம்பார் செய்வார். எப்போதோ ஒரு நாள் ஒரு சித்தி செய்து கொடுத்த மட்டன் குழம்பை இன்னுமும் எங்கும் கிடைக்கவில்லை .
இதையெல்லாம் நினைக்கும் பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வாழ்க்கையில் ஏதோ ஒன்றை ஒழுங்காக சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும், அதை ஒரேயொருவருக்கேனும் சமைத்துக்கொடுக்க வேண்டும். உண்மையில் மனிதனுக்கு உணவு தரும் நிறைவை ஏதொன்றும் தருவதில்லை. அந்த நிறைவு அவனுடன் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.ராமகிருஷ்ண பரமஹம்சர், மாணிக்கவாசகர் எல்லாம் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு மனம் இயல்புக்கு திரும்பியதும் “இறைவன் எங்க என்னை விட்டுட்டு போனான்” என்று தேடுவார்களாம்!
அது போல, “அன்னிக்கு வச்ச மாதிரி குழம்பு மாதிரி வைம்மா!” ;”எங்க சித்தி ஒரு நாள் மட்டன் குழம்பு வச்சாங்க அது மாதிரி எங்கையும் இன்னும் சாப்பிடலை!”; “நான் வடை சாப்பிடவே மாட்டேன் அத்தனை வடை சாப்பிட்டேன் அப்படியிருந்தது என் தங்கச்சி செஞ்சது” என்று உணவால் கிடைக்க பெற்ற நிறைவுகளை மனம் எப்போதும் தேடிக்கொண்டே தான் இருக்கிறது. அப்படியொரு நிறைவை யாரேனும் ஒருவருக்கேனும் நாம் கொடுத்துவிட வேண்டும்.
உணவில் இத்தனை நிறைவு இருக்கும் பொழுது, செயற்கையாய் நாம் ஏற்படுத்திக்கொண்ட பொருளாதார சிக்கல்களையும்,இயற்கையாய் ஏற்படும் தவிர்க்க முடியாத பிரிவுகளையும் எண்ணி, ஏன் நம்மை நாமே ஒரு ஆற்றாமைக்குள் புகுத்தி தேங்கி நிற்கிறோம்?
நிறைவாய் உணவு கிடைக்கிற அளவு ஓடினால் போதும் என்கிற மனம் இருந்தால் எந்த பொருளாதார சிக்கல்களுக்குள்ளும் நாம் மாட்டிக்கொள்ளப்போவதில்லை.
ஆனால், நாம் எல்லோரும் நம்மை அப்படியொரு சிக்கலுக்குள் பொருத்திக்கொண்டு தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். என்ன செய்வது! “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதும் மண்டைக்குள் ஒலிக்கிறது. இப்போதைக்கு இன்னும் இரண்டு அதிரசம் தின்றுவிட்டு இன்றைய வேலையை பார்ப்போம்..