கதிர் விஜயம்

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-6)!சீரமைக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள்

 

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!

நமக்கே சில நேரங்களில் தி.மு. மீது அதிகமான விமர்சனங்களை வைக்கின்றோமோ என்றும் தோன்றும் அளவுக்கு தி.மு..வின் செயல்பாடுகள் இருக்கிறது. இருந்தாலும் அவர்களும் கூட சில வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள்  தான்.

நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும் என்று சொன்னதை செய்திருக்கிறார்கள். ஆனால், நம்மாழ்வார் அவரே அப்படியொரு அமைப்பை உருவாக்கி இயற்கை வேளாண் ஆய்வுவுகளையும் செய்வதோடு அது சார் பயிற்சிகளையும் வழங்கி வந்தார். கபில் தேவ் ICL தொடங்கிய பிறகு, BCCI IPL தொடங்கியது போல், இது நடந்திருக்கிறது.

தோட்டக்கலை ஆய்வு மையம் தொடங்கப்படும் என்று சொன்னபடி செய்திருக்கிறார்கள்.

விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சொல்லி அதை செய்கிறார்கள். நமக்கு முன்னமே கர்நாடகமும், ஆந்திராவும் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருந்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி தரமாட்டோம் என்றார்கள். அனுமதி தரவில்லை. அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது இது சார்ந்து தூண்டிவிட்ட போராட்டங்களின் விளைவாய், தண்ணீரை தேடிக்கொண்டிருக்கும் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், இயற்கை எரிவாயு எடுக்க இவர்கள் கொடுத்த அனுமதிக்கும் எதிர்ப்பு கிளம்ப தொடங்கி கொடுத்த அனுமதிகளை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். வேளாண் பகுதிகளில் எரிவாயு எடுக்க அனுமதி மறுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தண்ணீர் பஞ்சம் இருக்கின்ற மாவட்டங்களில், எரிவாயு எடுக்க தொடங்கினால் வேலைவாய்ப்பு பெருகும் தானே!  நீ பற்ற வைத்த நெருப்பு உன்னை பற்ற வைக்க காத்திருக்கும் என்பது போல, பொதுவாக எரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கு கையெழுத்துவிட்டு இவர்களே அதன் மீது பெரும் வெறுப்பை பரப்பியதன் காரணமாய் தமிழகத்தில் எங்கும் மீத்தேன் என்று சொல்ல கூட முடிகிறது இல்லை. நம் எல்லோருக்கும் சமையல் எரிவாயு கம்மியான விலையில், மானியத்தோடு வேண்டும், பெட்ரோல் விலை ஏற்றம் வேண்டாம். ஆனால், மீத்தேனும் எடுக்க கூடாது.எப்படி?!  நெஞ்சுரம் கொண்ட ஒரு அரசாங்கம், எல்லா திட்டங்களுக்கும் எதிராக மக்களை கிளப்பி விட்ட கட்சி என்ன செய்திருக்க வேண்டும், ராமநாதபுரத்தில் எரிவாயு எடுப்பதில் என்னங்க சிக்கல் ஏற்கனவே அங்கு இயற்கை எரிவாயு எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் புரிய வைத்திருக்க வேண்டும்.

அடுத்து ஒரு வாக்குறுதி, அதை நிறைவேற்றினார்களா இல்லையா என்பதை தனியாக எழுத வேண்டியதில்லை.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவிரி வைகை மற்றும் தாமிரபரணி ஆற்றுக் கரைகள், சாலைகள் ஆகியவற்றில் பூங்காக்கள் ஏற்படுத்தி அழகுபடுத்துவதற்காகத் தனித்தனியான ஆணையங்கள் உருவாக்கப்படும்.

காவேரி வைகை தாமிரபரணி ஆற்றுக்கரைகள் என்று வருகிற பொழுது , தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 17 மாவட்டங்களை இந்த மூன்று நதிகள் கடக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக ஆணையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.  இந்த ஆற்றுக்கரைகளில் குப்பைகளை அசுத்தங்களை கொட்டாமல் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இந்த பூங்காக்களை 17 மாவட்ட மக்களில் யாரேனும் பார்த்திருந்தால், தெரியப்படுத்துங்கள். நோக்கம் ஆற்றுக்கரைகள் முறையாக வைத்துக்கொண்டு நதிகளில் அசுத்தம் சேராமல் தடுப்பது, உடன்பிறப்புகள், ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக டைனோசர் காலத்தில் இருந்து இருக்கும் பூங்காக்களை சாட்சியங்களாக தூக்கிக்கொண்டு வர வேண்டாம்.

நதிகள் இணைப்புத்திட்டம்: எந்த வருடம் என்று சரியாக நினைவு இல்லை.நான் கல்லூரி முடித்த சமயம் என்று நினைக்கிறேன். அம்மையார் ஜெயலலிதா அதிரடியாக பல அறிவிப்புகளை சட்டமன்றத்தில் அறிவித்துக்கொண்டிருந்த காலம், அதில் சில அறிவிப்புகள் நடைமுறை சிக்கல்களாலும் சரியாக செயல்படுத்தப்படாததனாலும்,தோல்வியை கண்டது, அந்த அறிவிப்புகளில் நதிகள் இணைப்பு சம்மந்தமாக ஒரு கல்லை கூட இன்று வரை தமிழக அரசு நகர்த்தியதாக தெரியவில்லை. ஆனால், தி.மு. வின் வாக்குறுதியில் குறிப்பிட்டு உள்ள படி பார்க்கும் பொழுது 2009 இல் அவர்கள் ஆட்சிக்காலத்திலேயே இப்படியான அறிவிப்புகள் வந்திருக்கிறது. இப்பொழுது, காவிரி நதிநீர் இணைப்பு விஷயமாக நாம் ஒன்றை தொடங்கினால், நாம் எப்படி கர்நாடகாவை அணை கட்டக்கூடாது கேரளாவை அணைகட்டக்கூடாது என்று வழக்கு போடுகிறோமோ அதே போல் காவேரியை தொட்டால் அவர்கள் வழக்கு என்று வருகிறார்கள். இதற்கெல்லாம் ஒப்புதல் மத்திய அரசாங்கத்தின் ஜல் சக்தி அமைச்சகத்தில் இருந்து வர வேண்டும். இந்தியாவில் நதிகளை இணைப்போம்  என்கிற வாக்குறுதியை என்பதை மாநில கட்சி அரசியல்வாதிகள்  எப்போதும் உயிர்ப்பும் இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள். இந்த அரசியல்வாதிகள் வீரபாகு மாதிரி அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் இது மாநில கட்சிகளுக்கு இடையிலான சட்ட சிக்கலாகவே  தான் தொடரும். நாம் இந்த காவேரியை விட்டுவிட்டு மற்ற மாநில நதிகளை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம். ஆனால், இந்த திட்டங்களுக்கு எல்லாம் பெரிய நிதி தேவைப்படுகிறது.  அரசாங்கங்களை அபாரதத்தில் ஓட்டிக்கொண்டிருப்பவர்களால், இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்!

அரசாங்கமே அபாரதத்தில் ஓடுகிறது என்றதும், இவர்களின் ஒரு வாக்குறுதி நினைவிற்கு வருகிறது.

தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைப்பு: மக்களோடு நேரடி தொடர்பில் இருக்கின்ற இரண்டு நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம்.

2018 இல், நாளொன்றுக்கு போக்குவரத்து கழகத்தின் நஷ்டம் தோராயமாக 9 கோடி இருந்தது, 2022 இல் அது 18 கோடியாக ஆகியிருக்கிறது.வாக்கு வங்கியை  டிக்கெட் விலையை ஏற்றாமல் இருப்பது, நிர்வாக குறைபாடு சீர்கேடு, மற்றும் இலவச பயணங்களுக்கான  மானியங்களை சரியான கணக்கு இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஒதுக்குவது, என்று நிர்வாகத்தில் இருக்கும் எந்த குறைகளும் களையப்பட்டு நிர்வாகம் மேம்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. மறைமுகமாக டிக்கெட் விலையும் ஏற்றப்பட்டு இருக்கிறது தான். ஒரு அரசு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி கடனாகும் பொழுது அது மக்களை தான் பாதிக்கும் அதற்கு டிக்கெட் விலையை இயக்க செலவுகளுக்கு ஏற்ப ஏற்றுவது சரியாக இருக்கும். ஆரம்பம் தொட்டே நிர்வாகத்தில் இருந்த குறைகள் சீர் செய்யப்படாமல், மேற்கொண்டு தவறான முடிவுகள் மற்றும் அணுகுமுறைகளால்,போக்குவரத்துக்கு துறையின் கடன் அதிகமாக ஆகியிருக்கிறது என்பதைத் தாண்டி தற்போது இருக்கும் நிலைமைகளை கொண்டு பார்த்தால், வரும் ஆண்டுகளில் இன்னும் இந்த கடன் சுமை பெருகவே தான் செய்யும்.

 மின்வாரியத்தின் நிலைமையையும் அதே தான், 2018 எழுபத்தி ஒன்பதாயிரமாக இருந்த கடன் சுமை 1.8 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. எந்த சீரமைப்பு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஒரு பெரிய நிர்வாக சீர்திருத்தம் தேவைப்படுகிறது, நல்ல திட்டங்களுக்கு எதிராக மக்கள் தூண்டிவிட்டு பழகி வாக்கு வங்கியை மனதில் வைத்து அரசியல் செய்யும் இவர்களால் அப்படியொரு நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியாது. அநேகமான துணை மின் நிலையங்களுக்கு தனியாக வேலையாட்கள் நியமிக்க வேண்டியதில்லை.

இது தான் சரி என்று முடிவுகளை எடுக்க துணியும் தலைமை அமைய வேண்டும். வெளிப்பார்வைக்கு சர்வாதிகாரமாக தோன்றினாலும், எதிர்க்கட்சிகளுக்கு அஞ்சாமல், வாக்கு வங்கி பாதிக்கும் என்று எண்ணாமல், சரியான முடிவுகளை துணிந்து எடுத்து அதன் விளைவுகளைப்பற்றி வெளிப்படையாக மக்களுக்கு எடுத்து சொல்லும் தலைமை வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அந்த துணிச்சல் கொஞ்சம் இருந்தது. ரேஷனில் அரிசி வாங்காமல் இருந்தவர்களின் பெயரில் அரிசி திருட்டு நடந்ததை தடுக்க அதிரடியான சில நடவடிக்கைகளை எடுத்தார்.அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்கிற முடிவை எடுத்தார். பின்னர் அதை நாடுளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின் மாற்றிக்கொண்டார், ஆனால், இந்த முறை அவர்களை ரேஷனில் நேரடியாக வந்து பொருள் வாங்க நிர்பந்தித்தார், இவ்வாறாக அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பெயரில் யாரோ ஒருவர் அரிசி வாங்கி கொண்டிருந்ததை தடுத்தார். ஜெயலலிதா அவர்கள் எடுத்த பல முடிவுகளில் கூட குறை இருந்தது, அதெல்லாம் விவாத்திற்குரியது. ஆனால், அவரிடம் ஒரு துணிவு இருந்தது. விலையேற்றம் தேவைப்படுகிறது என்று நேரடியாக மக்களிடம் அறிவித்துவிட்டு விலையேற்றினார். மின்வாரியத்தில், அநேகமான பணிகளுக்கு ஆட்களை அரசாங்கம் நேரடியாக நியமிக்க வேண்டிய தேவையே இல்லை.ஒரேடியாக ஆட்குறைப்பு நடவடிக்கை கூட எடுக்க வேண்டாம், ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் தேவைப்படாத அளவிற்கு துணை மின் நிலையங்களை மேம்படுத்தலாம்.அல்லது தனியாரிடம் ஒப்படைக்கலாம். எதையும் செய்யமாட்டார்கள். அரசு ஊழியர்களின் வாக்கு வாங்கி தான் தேர்தலின் இதய துடிப்பு.

மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் நூற்றைம்பது நாள் வேலைத்திட்டமாக மாற்றப்படும் என்று சொன்னார்கள் செய்யவில்லை. இதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் இருக்கிறது. முதலில் இந்த திட்டத்தில் இருக்கின்ற சீர்கேடுகளையும் முறைகேடுகளையும் களைய வேண்டும். இந்த திட்டம் வந்த பின், விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது சிரமமாக ஆனது என்று பல விவசாயிகள் குறைபட்டுக்கொண்டது தான் மிச்சம்.

ஒரு வாக்குறுதி மக்களே! அதை நீங்களே படியுங்கள் முதலில்:

கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் பத்து பேர் இணைந்து நடத்தும் ஆடு மற்றும் கோழி வளர்ப்புப் பண்ணைகளுக்கு 30 சதவிகித மானியம் வழங்கப்படும்.

 

செந்தில் ஒரு படத்தில், நீங்கள் எல்லோரும் அந்த மலையை தூக்கி என் தோளில் வையுங்கள் நான் மலையை தூங்குகிறேன் என்பது போல இருக்கிறது. இதை விமர்சனம் செய்து அந்த செந்தில் காமெடியயை எடுத்துச் வாக்கியத்தை முழுதாக முடிப்பதற்கு முன்னர் மீண்டும் நானே சிந்தித்து பார்க்கிறேன், இதில் யாரும் பயன்படு இருப்பார்களா, இது எப்படி சாத்தியப்படும். நீங்கள் நினைத்து பாருங்கள் ஒரு கிராமமோ அல்லது ஒரு பகுதியோ இருக்கிறது, அங்கிருக்கும் பத்து பெண்கள் ஒன்றிணைந்து நடத்தும் பண்ணைகளுக்கு மானியம் என்று வாக்குறுதி இருந்தால் சரி. அவர்கள் கணவனை இழந்த பெண்ணாக இருந்தால் என்ன கணவோடு இருக்கும் பெண்ணாக இருந்தால் என்ன? இந்த மானியத்திற்காக ஒரு பகுதியிலோ அல்லது கிராமத்தில் இருந்தோ இப்படியொரு பத்து பேர் குழுவாக சேர முடியுமா? இந்த வாக்குறுதி என்னை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறது. இது எப்படி? இது சரியா? யாருக்கேனும் பயன்படுமா?

எல்லா ஒன்றியங்களில்(ஊராட்சி ஒன்றியங்கள்) தானிய சேமிப்பு கிடங்கு அமைப்போம் என்றார்கள், எனக்கு தெரிந்த வரையில் அப்படி எல்லா ஒன்றியங்களிலும் இவர்கள் தானிய சேமிப்பு அமைக்கவில்லை. ஐரோப்பா ஒன்றியத்திலும், அமெரிக்க ஒன்றியத்திலும், இவர்களால் ஏதேனும் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அந்த ஊருக்கு செல்லும் நம் மக்கள் பார்த்து சொல்லும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இது இன்னும் முடியவில்லை மக்களே. இந்த தொடர் இனியும் தொடரும். ஆனால், இந்த நாடக கம்பெனியின் ஆட்சி 216 நாட்களில் முடிந்து விட வேண்டும். ஓட்டை பிரிக்க நான்கு கட்சிகளை வைத்துக்கொண்டு தான் இவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். இவர்களின் தேர்தல் வரலாற்றை எடுத்து பாருங்கள்.

 

Error happened.
Exit mobile version