படம் வெளியாகி மூன்று நாள் ஆகிவிட்டது. நாம் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டோம் தான். ஆனாலும், முதல் நாளே ஏனோ விமர்சனம் எழுதத் தோன்றவில்லை. படம் தந்த பாதிப்பில் பூரித்துக் கிடந்ததில் படம் பற்றி ஒன்றும் எழுதத் தோன்றவில்லை.
எல்லோரும் கோவிலுக்குச் சென்று இருப்பீர்கள் தானே, அங்கே உற்சவர் ஒருவர் இருப்பார். கோவிலுக்குச் செல்லும் பொழுது நாம் மூலவரைக் கருத்தில் கொள்கிற அளவு உற்சவரைக் கருத்தில் கொள்வதில்லை. அதுவே திருவிழா சமயங்களில் உற்சவர் வெளியே வந்துவிட்டால், மூலவரை நாம் பார்ப்பதே இல்லை.
திரைக்கு வெளியே இருக்கும் ரஜினிகாந்த் மூலவர் என்றால், திரையில் தோன்றும் ரஜினிகாந்த் உற்சவர் மாதிரி. அவரின் திரைப்படங்கள் என்பது உற்சவமே அன்றி வேறில்லை. இந்த உற்சவரை எப்படி அலங்காரம் செய்கிறோம், எப்படித் தேரில் கொண்டு வருகிறோம், எத்தனை மங்கள வாத்தியங்கள் நடனங்கள் எல்லாம் சேர்த்து அவரைப் பவனி வரச் செய்கிறோம் என்பதில் தான் திருவிழாவின் உயிர் இருக்கிறது. உற்சவர் பவனி வந்தால் மட்டும் போதும்.
ரஜினிகாந்த் என்னும் உற்சவரைக் கொண்டு அனிருத்தும் நெல்சனும் மஹோற்சவம் நடத்தியிருக்கிறார்கள். பெரும் தேரில் ஏற்றி அவரைப் பவனி வரச்செய்திருக்கிறார்கள். எல்லா திருவிழாக்களிலும் நடப்பது போன்று ஊர்வலத்தில் யானை ஒட்டகம் ஒயிலாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் என்று என்ன இருந்தாலும் எல்லார் கவனமும் உற்சவர் மீது தான் இருக்கும். அதுவே இங்கே ரஜினியிடமும் நடக்கிறது. அந்த மாயம் இன்னும் வரும் காலங்களிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கப்போகிறது.
ஜெயிலர்-2 ஏன் இத்தனை கொண்டாடப்படுகிறது? அதன் எழுத்து அது தான் காரணம்.. ஜெயிலர்-2ஐக் கொண்டாடும் சிலர் போகிற போக்கில் முதல் பாகத்தைப் பற்றி மோசமான விமர்சனங்களை வைக்கிறார்கள். ஆனால், இரண்டிலும் எழுத்து சிறப்பாக இருந்ததால் தான், படமாக அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
பல காலமாகவே சினிமாவில் ஒரு போக்கு இருக்கிறது. சினிமாக்காரர்களிடமே கூட இருக்கிறது. அது இன்று அதிகம் பரவலாகவும் ஆகியிருக்கிறது. அது எல்லா மக்களையும் கவரும்படி இருக்கின்ற படங்கள் மீது செய்யப்படுகின்ற தாக்குதல்.
சினிமா என்பதே கூத்தின் பரிணாம வளர்ச்சி தான்; நாடகம் கூத்து இசை எல்லாமே மக்களைக் கவர்வதற்கு உருவாக்கப்பட்டது தான். அப்படி மக்களைக் கவர உருவாக்கப்பட்ட கலை மக்களுக்குப் புரியாமல் அணு விஞ்ஞானிகளுக்கு நிகரான அறிவு இருப்பவர்களுக்குத் தான் புரியும் என்கிற கதையாய்ப் போனது தான் குறை. ஆனால், சினிமா எடுக்கின்றவர்களில் ஒரு கூட்டமும், சினிமாவை ரசிக்கின்ற ஒரு கூட்டமும் இது மட்டும் தான் சினிமா, மற்றதெல்லாம் கமர்ஷியல் என்று குறுக்கி விடுகிறார்கள்.
உண்மையில், நாம் எப்போதும் குறிப்பிடுவது போல, எல்லோரையும் ஈர்க்கும்படி ஒரு கதையைச் சொல்வது; எல்லோரையும் ஈர்க்கும்படி ஒரு சினிமாவை உருவாக்குவது இதெல்லாம் தான் மிகப்பெரிய சவால். நீங்கள் ஒரு கதை சொல்கிறீர்கள், அதை எப்படிச் சொல்வீர்கள்? ஒருவர் ஒரு சாலையில் நடந்து வருகிறார் என்பதை ஒருவர் ஒரு சாலையில் நடந்து வருகிறார் என்றே சொல்வது கதை சொல்லல் கிடையாது. அது செய்தி வாசிப்பு.அத்தகைய சில செய்திவாசிப்புகளை அறிவார்ந்த சமூகத்திற்கான சினிமா என்று வரையறுத்து வைத்துவிட்டார்கள்.
கதை காட்சிகளாக விரிய வேண்டும். ஒரு பிரமிப்பைத் தர வேண்டும். மனிதனின் உணர்வுகளோடு ஒன்றி விளையாட வேண்டும். உங்களின் உலகத்தை மறந்து அது கதையின் உலகத்திற்கு உங்களை இட்டுச் செல்ல வேண்டும். கதையின் போக்கில் உங்களுக்கு எந்தக் கேள்விகளும் எழக்கூடாது. இது தான் கதை சொல்லலின் பெரிய வெற்றி. இது தான் சினிமாவை உருவாக்குவதில் பெரிய வெற்றி.ஜெயிலர் படத்தின் இரண்டு பாகங்களும் பார்வையாளர்களை கதையோடு பயணிக்க வைக்கும் அந்த திறன் பெற்றிருந்தது.
இது இன்று பலருக்கு கைவருவதில்லை. அது கைவராத பலர் இதெல்லாம் சினிமாவே இல்லை என்று ஒதுக்குவதை நாம் பார்த்து இருக்கிறோம்.
கதை சொல்லலில் அல்லது ஒரு திரைப்படத்தை எல்லோரும் ரசிக்கும்படி எடுப்பதில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் இவர்களுக்கு அடுத்தபடியாக அல்லது இவர்களை விட இன்னும் மேலானவராக நெல்சன் தெரிகிறார்.
நான் உங்களிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், எடுத்தவுடன் நாயகன் ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறான் என்று சொன்னால், சொன்ன மாத்திரத்திலேயே நீங்கள் எழுந்துவிடுவீர்கள். முதலில் நான் உங்களைக் கதைக்குள் இட்டுச் செல்ல வேண்டும்.
கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல வேண்டும். மெதுவாக கதைக்குள் வந்ததும் நீங்கள் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க எத்தனிப்பீர்கள், உங்கள் யூகங்களை நான் உடைக்கும் அதே வேளையில், உங்களை அறியாமல் நீங்களே உங்களை அந்த கதாநாயகன் இடத்தில் பொருத்திக்கொள்ளச் செய்ய வேண்டும். கதாநாயகன் அழுதால் நீங்கள் அழ வேண்டும், அவன் சிரித்தால் நீங்கள் மகிழ வேண்டும், அவன் அடுத்து ஒருவனை அடிக்கப்போகிறான் என்றால் நாயகன் யாரை அடிக்கப் போகிறானோ அவன் மீதான ஒரு பெரும் கோபத்தை நான் உங்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும், அப்படி ஏற்படுத்திய பின் நாயகன் கற்பனைக்கு எட்டாத வகையில் அங்கே சண்டை செய்தாலும் உங்கள் மனம் அதைப் பொருட்படுத்தாது. இந்த மாயத்தைச் செய்ய வல்ல கதைகளையும் சினிமாக்களையும் தான் இக்காலத்து அறிவுஜீவிகள் கமர்ஷியல் சினிமா என்கிற வட்டத்தில் அடக்குகிறார்கள்.
ஜெயிலர் முதல் பாகத்தை எடுத்துக்கொள்ளுங்கள், ரஜினி ஒருவனது தலையை வெட்டுவார். அது அதீத வன்முறை என்பதைத் தாண்டி கதையோடு நம் மனம் பயணிக்கிற பொழுது, அது தான் சரி என்று நம் மனம் கொண்டாடியிருக்கும். காரணம் ரஜினி அந்த கதாபாத்திரத்தின் தலையை வெட்டுவதற்கு முன்னர் செய்யும் செயல்கள் நாயகனின் பொறுமையைச் சோதித்து இருக்கும். எப்போதும் பார்வையாளர்கள் தங்களை நாயகர்களோடே தான் பொருத்திக்கொள்கிறார்கள். அப்படி நம்மை நாயகர்களாகவே நினைக்கச் செய்வது தான் சினிமா அல்லது கதை சொல்லலில் இருக்கும் வெற்றி. நாயகனின் பொறுமையைச் சோதிப்பது என்பது இருக்கையில் இருக்கும் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிப்பது போன்றது. இருக்கையில் இருக்கும் நாமே எழுந்து அவன் தலையை வெட்ட வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் நாயகன் செய்து முடித்திருப்பார்; நம் மனம் அங்கே ஒரு பெரிய வெற்றி அடைந்த உற்சாகத்தில் இருக்கும்.அப்படி ஒரு பெரிய வெற்றியை அடைந்து விட்ட பூரிப்பை ஜெயிலர்-2 பார்வையாளர்களுக்கு பல இடங்களில் தருகிறது.
கதைகளில் இப்படிப்பட்ட காட்சிகள் ஒரு பெரிய உற்சாகத்தைத் தரும் என்பதற்காக அதைத் திணித்தால் கதை வேலை செய்யாது. ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் உச்சகட்ட காட்சியில் சிவராஜ் குமார் எந்த ஆயுதங்களுமின்றி வெறும் திசு பேப்பர் பாக்ஸைக் கொண்டு வருவார், அது ஒரு பெரிய உற்சாகத்தை நமக்கு தந்தது என்றால், அந்த கதை அந்த திசு பேப்பர் பாக்ஸைப் பற்றிய ஒரு முன்கதையை நம் மனதில் விதைத்ததன் விளைவு தான் அது.
கதையாகச் சொல்லும் பொழுது காட்சிகளை நாமே கற்பனை செய்கிறோம். அதுவே சினிமா என்று வருகிற பொழுது இந்த கதை சொல்லலை முழுமையாக்குவது நடிகர்களின் நடிப்பும் காட்சிகளைக் காட்சிப்படுத்தும் விதமும் தான்.
நெல்சன் ஒரு கதையை எப்படிச் சொல்ல வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார். நடிகர்களை எப்படி நடிக்க வைக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக காட்சிகளை எப்படிக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறார்.
படத்தை இவர் மட்டும் தான் தாங்குகிறார், அவர் மட்டும் தான் தாங்குகிறார் என்றெல்லாம் சொல்ல முடியாத அளவிற்கு, இந்த படத்தில் சிறிய காட்சியில் வரும் நடிகர்களும் கூட சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ரஜினியைக் கண்டு ஒருவர் அஞ்சுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் அஞ்சுவது இயல்பாக இல்லாமல் இருந்தால் எப்படி ரஜினியின் கம்பீரம் மேம்பட்டுத் தெரியும்? சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவர்களும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அதிகம் விமர்சனத்திற்கு உள்ளான நெல்சனின் பீஸ்ட் படத்தின் காட்சியமைப்புகள் கூட அத்தனை அழகாகவும் அழுத்தமாகவும் இருக்கும். எல்லா தொழிலிலும் இருக்கும் எல்லா வல்லுநர்களும் தவறு இழைப்பார்கள். அப்படி பீஸ்ட் படத்தில், கதையமைப்பிலும் சிறு சிறு வசனங்களில் நடந்த சின்ன சின்ன பிழைகள் அந்த கதைக்கு சம்பந்தமில்லாததைத் திணித்தது போன்று ஆனதால், அந்த படம் பெற்றிருக்க வேண்டிய பாராட்டுகளையும் இழந்தது.
பீஸ்ட் படத்தில், கதை ஆரம்பிப்பதற்கு முன்னமே நடக்கும் சண்டைக்காட்சி, அதன் தொடக்கத்தில் வரும் வசனம் இரண்டுமே கதைக்குள் செல்ல விடாமல் அநேகரைத் தடுத்துவிட்டது. ஜெர்மனிக்குச் சென்று ஜெர்மனிக்காரரிடம் தமிழில் பேசி உனக்கு தமிழ் தெரியலைன்னா தமிழ் கத்துக்கோ என்று கதை ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? கதைக்குள் நிகழ்கால அரசியலை நிச்சயமாக பேசலாம். ஆனால், அது கதையோடு ஒன்றாது என்றால் நாம் அதைத் திணிக்கக் கூடாது.
இது மாதிரியான பிழைகள் எவ்வளவு குறைவாக ஒரு படத்தில் இருக்கிறதோ அதற்கேற்பவே தான் அந்த படம் வெற்றியடைகிறது. ஜெயிலர் முதல் பாகத்தை இன்னமும் சிலர் மோசமாக விமர்சிக்கிறார்கள். ஆனால், ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றிக்கு காரணமே நெல்சனின் எழுத்து தான். எல்லாமே கதைக்குள் இருந்தது. ரஜினி சும்மா நடந்து தான் வருகிறார் என்கிற காட்சிகளிலும் கூட கதையோடு ஒன்றி இருந்தது.
கதையோடு ஒன்றாத காட்சிகளை பற்றி சொல்ல, நிறைய பேர் புகழும் வேட்டையன் திரைப்படத்தை நாம் எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஜெய்பீம், ஜெயிலர் இந்த இரண்டு திரைப்படங்களும் வெவ்வேறு தளத்தில் சிறந்த எழுத்தைக் கொண்ட திரைப்படங்கள், வேட்டையனைப் பொறுத்தவரையில் இந்த இரண்டில் நாம் எந்த பக்கம் நிற்பது என்று குழம்பிப் போன படம். நல்ல கருத்து என்பது வேறு, நல்ல சினிமா என்பது வேறு, வேட்டையன் படத்தில், ரஜினியைச் சுற்றிச் சுற்றி காண்பித்தால் போதும் என்பது போன்று சில காட்சிகள் இருக்கும். ரஜினி ரசிகனான எனக்கே இந்த காட்சிகள் எல்லாம் வீம்புக்கு இப்படி எடுத்தால் தான் ரஜினி படம் என்கிற எண்ணத்தில் வைத்திருக்கிறார்கள் போல என்று தோன்றியது.
அப்படியான சிந்தனைகளுக்கு எல்லாம் இடம் கொடுக்காமல் நிற்பது நடப்பது உட்காருவது எதுவாயினும் அது கதையோடு இருக்க வேண்டும் என்கிற தெளிவோடு எழுதப்பட்ட திரைக்கதை தான் ஜெயிலர் முதல் பாகம்.
அதை விட சிறப்பாக என்ன செய்துவிட முடியும்? இந்த கதையை இனி எப்படிக் கொண்டு செல்வார்கள்? என்கிற கேள்விகள் இருந்தன. ஆனால், மிகக்கச்சிதமாக அதை விட சிறப்பான ஒரு திரைக்கதை வடிவமைத்துள்ளார் நெல்சன்.
ஆரம்பத்தில் வருகின்ற நகைச்சுவை காட்சிகளாகட்டும், சண்டைக்காட்சிகளாகட்டும் ஒரு எழுத்து ஒரு வார்த்தை கூட தேவையில்லாமல் திணிக்கப்பட்டதாக இல்லை.
எதிர்பாராத இடங்களில் எல்லாம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து இருக்கிறார். ஸ்நைப்பரில் இருந்து புல்லட் பறக்கும் என்று நினைக்கும் பொழுது வசனங்களில் நகைச்சுவை பறக்கிறது.
மறைந்த இசையமைப்பாளர் தேவா ஒரு பேட்டியில் சொன்னார், “ஒரு திரைப்படத்தில் இசை நன்றாக வருகிறது என்றால் அதற்கு அந்த படத்தின் இயக்குநர் தான் காரணம்” என்று. அனிருத்தை தனுஷை விட சிறப்பாக வேலை வாங்குகிறவராக நெல்சன் இருக்கிறார். பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பது முதற்கொண்டு நெல்சனின் தாக்கம் நிச்சயமாக இருக்கிறது.
ஜெயிலர்-2 பாடல்கள் என்று வெளியான பொழுது, ஒன் நேம் டு ரூல் தி கேம் பாடலைத் தவிர ஏதும் நம்மைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், படத்தோடு கதையோடு பின்னணி இசையாக அந்த பாடல்கள் ஒலிக்கும் பொழுது அத்தனை கச்சிதமாக பொருந்தியிருக்கின்றன.
உணர்வுகளைக் கடத்த வேண்டிய வேலையைச் செய்யும் இசைக் கோர்ப்பில், அனிருத், ரசிகர்கள் தங்கள் இதயத்தில் இருந்து “உசுர கொடுக்க கோடி பேர்“ என்று பாடியதைப் பின்னணி இசையில் சேர்த்து நம்மை உணர்ச்சித் தீவிரத்திற்கு கொண்டு செல்கிறார்.
நாயகனோடு நம்மை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சிகளுக்கு முன்பாக நாயகன் ஏன் இன்னும் ஒன்றும் செய்யவில்லை என்று நம் பொறுமையை இழக்கச் செய்து பின் அங்கே நாயகனை வெடிக்கச் செய்யும் பொழுது, பார்வையாளர்கள் ஒரே அலையில் ‘தலைவா’ என்று வெடிக்கிறார்கள். இது தான் நெல்சனின் எழுத்தின் திறன். நாயகன் மாட்டிக்கொள்ளும் பொழுது நாமே மாட்டிக்கொண்டது போன்ற உணர்வைத் தந்து நாயகன் அதில் இருந்து மீண்டு நிற்கும் பொழுதே நாமே வெற்றி பெற்றது போன்ற உணர்வைத் தருகிறது இந்த படம்.
படத்தில் குறைகளே இல்லையா? நாம் எந்தப் படங்களைப் பற்றி எழுதும் பொழுதும் பெரிதாக அதன் குறைகளை எழுதியது இல்லை.
ஆனால், இந்த திரைப்படத்தைப் பற்றி நாம் சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறோம். கதை படமாக வெளியிடப்பட்டதை விட கொஞ்சம் பெரிய கதையாக இருக்கிறது. இத்தனை பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் நீளம் 3 மணிநேரத்திற்கு உள்ளாக இருக்க வேண்டிய வணிக கட்டாயம் இருக்கிறது. அதன் பொருட்டு இரண்டு இடங்களில் கதையை நகர்த்தும் சில விஷயங்களை நீண்ட வசனமாகச் சொல்லியிருப்பார்கள். கதையை நகர்த்தும் விஷயங்கள் என்பதை விட கதாபாத்திரங்களின் செயல்களுக்கான விளக்கங்கள். அப்படி அந்த விளக்கங்கள் வசனங்களாக வருகிற பொழுது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இரண்டு இடங்களில் வசனங்களில் இருந்த தொய்வைத் தவிர்த்து படம் நெடுகிலும் நெல்சனின் எழுத்து நகைச்சுவை சண்டை மற்றும் எல்லா விதமான உணர்ச்சிகளையும் சரியாகக் கையாண்டு சரியாகக் கடத்தியிருக்கிறது.
தொய்விற்கு உதாரணமாக இதைச் சொல்லலாம். ரஜினிக்கு உதவும் எல்லா கதாபாத்திரங்களும் ரஜினி உதவியதால் தான் அவருக்கு உதவுகிறார்கள். இது தெரிந்த விஷயம். ஜாக்கி ஷ்ராஃப் உடனான ரஜினியின் தொடர்பு காட்சிகளாகவே முதல் பாகத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும். இரக்கமற்ற மோகன்லால் கதாபாத்திரம் சிவராஜ் போன்று உருக்கமாக உங்களால் தான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றெல்லாம் பேசாமல், நேரடியாக ANYTHING FOR YOU SIR என்று முடித்துவிடும். இரக்கமே இல்லாத அளவு ஒருவனை அடித்தே கொல்லும் ஒரு கதாபாத்திரம் முத்துவேல் பாண்டியனிடம் உங்களுக்காக எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்வேன் என்று சொன்னதே கதைக்கும் போதுமானதாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் ரஜினி ஹ்ரித்திக் ரோஷனுக்கு நன்றி சொல்கிறார். உடனே ஹ்ரித்திக் அதற்குப் பதிலாய், “நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள்” என்று பேசுவது பழைய பல்லவியைப் பாடுவது போல இருந்தது, அந்த இடத்தில் ஹ்ரித்திக் ” அதென்ன உங்களுக்கு, மத்தவங்க உங்களுக்கு செய்யுற உதவி மட்டும் தான் தெரியுமா? நீங்க மத்தவங்களுக்கு செஞ்ச உதவி எல்லாம் மறந்துருமா? நாங்க மறக்கல AND I will not forget until my last breath, anything for you anytime at any cost” என்று சொல்லியிருந்தால் அது உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி பார்வையாளர்களை ஒன்றச் செய்திருக்கும். இப்படி இரண்டே இரண்டு இடங்களில் வசனங்களில் தொய்வு இருந்ததை தவிர இந்த திரைப்படம் நீங்கள் உங்களை மறந்து உலகை மறந்து மகிழ்ந்து கிடக்கச் செய்யும் ஒரு அற்புத மாயாஜாலம். படம் பார்த்து வெளியில் வந்த பிறகு சில நாட்களுக்கு நீங்கள் படத்தின் நகைச்சுவை காட்சிகளை நினைத்து சிரிக்கச் செய்யும் திறன் கொண்ட திரைப்படம். படம் உங்களை ஓரிரு நாட்களுக்கு ஒரு மகிழ்வான நிலையில் வைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி.
நெல்சன் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ஓவியம் போல வடிவமைக்கிறார். அது தான் அழகாய் கம்பீரமாய் இருக்கும் தலைவரின் கம்பீரத்தையும் அழகையும் இன்னும் மேம்படுத்திக் காட்டுகிறது. ரஜினியை ரஜினியாகவே காண்பித்தால் போதும் அதை எப்படிச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதை அவர் சரியாகச் செய்திருக்கிறார். ரஜினியின் தோல்விப் படங்களாகச் சொல்லப்படுகிற லிங்கா, பாபா, அண்ணாத்த போன்ற படங்களில் ரஜினி ரஜினியாக தெரியமாட்டார். நீங்கள் அரிதாரம் பூசாத ரஜினியை ரசித்த அளவில் கூட இந்த படங்களில் இருந்த ரஜினியை ரசித்திருக்க மாட்டீர்கள்.
நாயகனின் அறிமுகக் காட்சி வானத்தில் இருந்து பறக்க வேண்டும் என்றெல்லாம் நெல்சன் யோசிப்பதில்லை. மிக யதார்த்தமாக சாதாரணமான ஒரு காட்சியைக் கேமரா கோணங்களால் எப்படி அசாதாரணமான அறிமுகக் காட்சியாகச் செய்ய முடியும் என்பதைச் செய்து காண்பித்து இருக்கிறார். கம்ப இராமாயணத்தில் கடவுளை யாரும் முழுமையாகக் காண முடிந்ததில்லை. “தோள் கண்டார் தோளே கண்டார்“ என்பது போல, நாயகனின் தோள், கை, கால் என்று காட்டி பின் முகத்தைத் திரையில் காண்பிக்கும் பொழுது, கேமரா இரண்டடி தூரத்தில் இருந்து குடையோடு நகர்ந்து ரஜினியின் முகத்திற்கு நேராக வந்து நிற்கும் போது அமைதியான குணம் கொண்டவர்கள் கூட தலைவா என்று தங்களை மறந்து கத்துவார்கள்.
இந்த “தோள் கண்டார் தோளே கண்டார்” கம்ப ராமாயண பாடல் போன்று நீங்கள் ஒரு வசனத்தை ரசித்து பூரிக்கும் பொழுது அடுத்த வசனத்தை தவற விடுவீர்கள். ஒரு முறையில் இந்த படத்தை நீங்கள் முழுமையாக அனுபவித்து விட முடியாது.எல்லோரையும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றச் செய்யும் படம்.
இது திரையரங்கக் கொண்டாட்டத்திற்கு என்றே உருவாக்கப்பட்ட படம். அந்த பெரிய திரையில் விரியும் காட்சிகள் உங்கள் மனதோடு ஒன்றிச் செய்யும் ஒரு மாயத்தில் நீங்கள் மூழ்க வேண்டுமெனில் நீங்கள் இதைப் பெரிய திரையில் பார்த்தால் தான் உண்டு. இன்ஸ்டா ரீல்களில் சின்ன சின்ன காட்சிகளாகப் பார்க்காமல் நேராக படத்தைப் பெரிய திரையில் பார்க்க முடிந்தவர்கள் பாக்கியவான்கள்.
ஜெயிலர்-2 ஒரு திரை அற்புதம்.
குறிப்பு: இந்த ஐம்பது வருட வசனத்திற்கு விஜய் ரசிகர்கள் எங்களைத்தான் சொன்னார் என்று குதிப்பதும், திமுக மட்டும் நா.த.க. காரர்கள் விஜயை தான் சொல்கிறார் என்று பூரிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியது. விஜய்க்கு வயதே 52 தான் ஆகிறது. ரஜினியே சொன்னது போல விஜயோடு ரஜினியை ரஜினியோடு விஜயை ஒப்பிடுவது சரியான ஒப்பீடே கிடையாது. அவர் பார்த்த எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஒப்பீட்டால், விஜய் எந்த வரிசையிலும் வரமாட்டார்.
