கதிர் விஜயம்

சினிமாவும் சமூகமும்!

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!
கட்டுரையை தொடங்குவதற்கு முன்னர், ஒரு குட்டி கதை!

“நீயுமா!” என்று நினைக்காமல் மேலே படியுங்கள்.

ஒரு கதை நாயகன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு சாதாரணமான வாலிபன், மிகுந்த பயந்த சுபாவம் உடையவன், வன்முறைக்கு பழக்கப்படாதவன். உங்களையும் என்னையும் போல்.அவனுக்கு ஒரு நண்பன், முரட்டு சுபாவம், முன் கோபம், சண்டையென்றால் தயங்காமல் முந்திக்கொண்டு செல்லக்கூடியவன் அந்த நண்பன் . அவனும் கூட நல்லவன் தான். அந்த முரட்டு நண்பனுக்கு அழகான காதலி. அந்த காதலியை ஒரு ரௌடியும் காதலிக்கிறான்.அந்த ரவுடி தன் காதலிக்கு அடிக்கடி தொந்தரவு செய்கிறான் அவனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தீர்மானித்து, தன் முகத்தை மூடிக்கொண்டு கத்தியை எடுத்துக்கொண்டு அந்த ரௌடியை கொல்ல முற்படும் பொழுது, அந்த ரௌடியின் பெரும் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறான். காதலியின் கண் முன்னால், அந்த நண்பனை கொடூரமாக அடித்துக்கொள்கிறது அந்த ரௌடிக் கும்பல். அந்த ரவுடி கும்பலிடம் இருந்து தப்பித்து அந்த பெண் ஓடும் பொழுது, நாயகன் கண்ணில் படுகிறாள்.

நாயகனிடம் அவள்,நாயகனின் அந்த முரட்டு நண்பன் கொல்லப்பட்டதை எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவளை துரத்திக்கொண்டு வந்த ரௌடிக்கும்பல், அவர்கள் மறைந்து பேசிக்கொண்டிருக்கும் இடத்தை கண்டுபிடித்து நெருங்கிவிடுகிறது. அந்த கும்பல் அவர்கள் இருவரையும் கொலை செய்வதற்காக நெருங்கிகிறது. அவளோ, “வா போய்டலாம்!” என்று கதறிக்கொண்டு இருக்கின்றாள். நண்பன் கொல்லப்பட்து இறந்து போனதை அறிந்த நாயகன் கோபத்துடனும் இயலாமையுடனும் அழுதுகொண்டிருக்கின்றான்.அந்த இயலாமையும் கோபமும் நண்பர்களை கொலை செய்தவர்களை கொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை மேலோங்க செய்கிறது. அவர்களோ ஆயுத்தங்களுடன் இவனை கொல்ல வருகிறார்கள். நாயகன் கையில் எந்த ஆயுதமும் இல்லை. கையில் கிடைப்பதெல்லாம் எடுத்துக்கொண்டு அவர்களை தாக்குகிறான். ஆனால், அந்த ரௌடியால் அடித்து வீழ்த்தப்படுகிறான், அப்போது நாயகன் கையில் ஒரு கண்ணாடி பாட்டில் சிக்குகிறது, அதை இறுக்கமாய் பற்றி கையில் எடுத்து அந்த ரௌடியின் இடது கண்ணனுக்கு அருகில் நெற்றிப்பொட்டில் அடிக்கிறான், கண்ணாடி பாட்டில் நொறுங்கி அந்த கண்ணாடி சில்லுகள் எல்லாம் ரௌடியின் கண்களை பதம் பார்க்கிறது, அடுத்த நொடி, சீரில்லாமல் உடைந்திருந்த அந்த கண்ணாடி பாட்டிலை கொண்டு ரௌடியின் வயிற்றில் மீண்டும் மீண்டும் மீண்டும் குத்துகிறான். அவன் கோபன் தீரும் வரை குத்துகிறான்.

இந்த கதையும் காட்சியும் நம்மில் அநேகம் பேர் ரசித்த, கொண்டாடிய ஒரு வெற்றி திரைப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி.அநேகம் பேர் இன்னும் பாராட்டுகின்ற படம் அது. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்த கொலை. இந்த கொலை நம் கண்களுக்கு அல்லது அறிவிற்கு வன்முறையாக தெரியவில்லை.அது என்ன திரைப்படம், அது ஏன் நமக்கு நமக்கு வன்முறையாக தெரியவில்லை. அந்த கொலை ஒரு வன்முறையாக நம் மனதை ஏன் உறுத்தவில்லை? சரி! அது என்ன படம்? இறுதியில் சொல்கிறேன்.

இப்பொழுது உங்களுக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த கதை. ஆனாலும் கூட நீங்கள் கவனமாக படிக்க வேண்டும்.

பாகுபலி முதல் பாகம்

பாகுபலியால் அரசனாக முடியாமல் போகிறது. அவனுடைய மனைவி தேவசேனா அரச குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தும் சாமானியர் போல நடத்தப்படுகிறாள்.கோவிலுக்குச் செல்லும் அவளுக்கு, அரச குடும்பத்தினர் செல்லும் பிரத்யேக வழியில் அனுமதி மறுக்கப்படுகிறது. திட்டமிட்டு அவளை அவமதிக்க வேண்டுமென்றே தான் அங்கே அவளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.மேலும் அங்கே சோதனை என்கிற பெயரில் ஒருவன் பெண்களை மானபங்கப்படுத்துகிறான்.அவன் தேவசேனையை மானபங்க செய்ய முற்படும் பொழுது அவன் விரல்களை தேவசேனை வெட்டிவிடுகிறாள். அவனை கைது செய்யாமல், தேவசேனையை கைது செய்கிறார்கள்.குற்றவாளி போல் விசாரணை நடத்துகிறார்கள்.
“இதெல்லாம் கேட்க ஆள் இல்லையா என்ன? இந்த ரம்யா கிருஷ்ணனும் ஒரு பொம்பளை தானே அவளும் இப்படி உட்கார்ந்துகிட்டு ஒன்னும் சொல்லாம இருக்கா” என்கிற எண்ணம் படம் பார்த்த பல பெண்கள் மனதில் ஓடியிருக்கும். “இவன் எங்க போனான்” என்று ஆண்கள் அங்கே பிரபாஸை தேடிக்கொண்டிருந்தார்கள்.ஆர்ப்பாட்டமில்லாத ஒரு இசையோடு சபைக்குள் பிரபாஸ் நுழைகிறார். நடந்து கொண்டிருந்த வழக்கில் எல்லோரும் யாரேனும் உண்மையை சொல்லமாட்டார்களா நியாயம் கிடைக்காத என்று இருந்தோம்.உண்மையை தன் மனைவியிடம் இருந்து தெரிந்து கொண்ட பாகுபலி, அவனும் தன் மனைவியை குற்றம் சொல்கிறான். நீ செய்தது தவறு என்கிறான்.

“என்ன டா இது! நியாயம் சொல்லுவான் ன்னு பார்த்தா இவனும் அவளை தப்பு சொல்றான்” என்று நம் மனங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே, கர்ஜிக்கும் குரலில், “பெண்கள் மேல் கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல தலையை” என்பதில் மிக அழுத்தமாக தலையை என்று சொல்லி நாம் யாருமே எதிர்பார்க்காத பொழுது,பிரபாஸ் திரையில் ஒருவன் தலையை வெட்டிய பொழுது திரையரங்கமே பூரித்து போனதை என்னால் உணர முடிந்தது.

குடும்பங்கள் கொண்டாடிய ஒரு வெற்றி திரைப்படத்தில், சிறியவர்கள்…
இல்லை! இல்லை!

குடும்பங்கள் கொண்டாடிய ஒரு வெற்றி திரைப்படத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூரித்து கொண்டாடிய காட்சி ஒரு வன்முறை காட்சி. ஒரு கொலை.

காலம் காலமாக கதைகளும் காவியங்களும் இப்படித்தான் சொல்லப்படுகிறது, குழந்தைகளுக்கு நாம் இன்னமும் சொல்லும் மகாபாரத கதையில், திரௌபதியை மானபங்கம் செய்தததற்காக துரியோதனன் யுத்த நெறிகளுக்கு மாறுபட்டு தொடையில் தாக்கப்பட்டு, தொடைகள் கிழிக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இந்த கதையை நமக்கு தெரிந்த வரையில் பல ஆயிரம் வருடங்களாக சொல்லி வருகின்றோம்.

என்ன தான் சொல்ல வர?

சமீபத்தில் வெளியான லியோ படத்தின் ட்ரைலர் காட்சியில், சமூகம் எல்லா நேரமும் இயல்பாக பயன்படுத்தாத, அல்லது அப்படி இயல்பாக பயன்படுத்த முடியாத ஒரு வார்த்தை பயன்பாட்டை குறித்து எழுந்த சர்ச்சையை பற்றித்தான் கட்டுரை.

 

சமூக மனநிலையில் சொல்ல வேண்டுமென்றால், அந்த ட்ரைலரில் ஒரு கெட்ட வார்த்தை பிரயோகம் இருக்கின்றது. அது சரியா! தவறா! என்கிற விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. அது சரியா தவறா என்பதைப் பற்றி பார்க்கும் முன்னர், ஜெயிலர் படம் வெளியான சமயத்தில் கிளப்பப்பட்ட விவாதத்தைப் பற்றி பார்க்கலாம்.

படத்தில், ரொம்ப வன்முறை அதிகம். தலையை வெட்டுவதை அப்படியே காண்பிக்க தான் வேண்டுமா என்று நேரம் கிடைத்தவர்கள் எல்லாம் எழுதிக்கொண்டிருந்தார்கள். ரஜினி படம் என்பதற்காக இதை சொல்லவில்லை, நேரம் கிடைத்தவர்கள் எல்லாம் மட்டும் ஜெயிலர் படத்தின் வன்முறையை பற்றி எழுதியதாக. ரஜினி மீதான வன்மம் கொண்டவர்களும், ரஜினியின் மீது ஏதோ ஒரு வகையில் வெறுப்பை கொண்டவர்களும் தான் அந்த படம் மக்களிடம் பெற்ற வரவேற்பை பொறுக்க முடியாமல் அப்படி எழுதியிருக்க கூடும் என்றே எனக்கு தோன்றுகிறது.

கதைப்படியும், நிஜத்திலும் 70 வயது கிழவர். கதைப்படி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி. அப்படியான ஒருவர் தன் மகனை கொன்றுவிட்டார்கள் என்று சோகத்தில் இருக்கும் பொழுது, மேலும் தன் குடும்பத்தை கொன்று விடுவார்கள் என்கிற மிரட்டல்களை கேட்ட பின்னர், பெயரனை கொல்ல வந்தவன், தன் மகனுடைய மனைவியை பற்றி ஆபாசமாக பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு, என்ன செய்ய முடியும். கட்டி உருண்டு அவனோடு சண்டை போடவா முடியும். அப்படி செய்து இருந்தால் லாஜிக் இல்லை என்பார்கள். பாகுபலி திரைப்படத்தில் நடந்த அதே சம்பவம் ஆனால், ஜெயிலர் திரைப்படத்தில், கொஞ்சம் வேறுமாதிரியாக இருந்தது. இரண்டு படங்களையும் மக்கள் கொண்டாடவே தான் செய்தார்கள்.

 

ரஜினி மீதிருந்த வெறுப்பிலோ,அல்லது வேறு வேலைகள் இல்லாமல், நேரம் கிடைத்ததாலோ, தலை துண்டிக்கப்பட்ட காட்சியை குறை சொல்வதற்காக தேடி எடுத்துகொண்டுவந்தவர்கள். சில விஷயங்களை மறந்துவிடுகிறார்கள்.கதை சொல்லல் என்பது மனித மனங்களின் அழத்தில் இருக்கும் உணர்வுகளோடு விளையாடப்படும் விளையாட்டு.

பிரபாஸும் சரி, ரஜினியும் சரி ஒருவனை வெட்டுவதற்கு முன்னராகவே பார்வையாளர் மனம் அந்த ஒருவனை எதாவது செய்ய வேண்டும் என்கிற இடத்திற்கு வந்து நின்று ஏங்கிக்கொண்டிருக்கின்றது. கதையில்; காட்சியில் அந்த ஏக்கத்தை தருகிற இடம் வரும் பொழுது சரியாக நாயகன் அவனை வெட்டும் பொழுது நாம் பூரித்து போகிறோம்.

ரஜினிக்கும், பிரபாஸ்க்கும், அனுஷ்க்காவுக்கும் நடக்கும் அநியாயங்கள் அடுக்கப்பட்டு கொண்டே போகிறது. பாகுபலி படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அரசன் ஆக வேண்டிய பாகுபலி சூழ்ச்சியால் அல்லது சூழ்நிலையால் அரசன் ஆக முடியாமல் போவது தொடங்கி,தேவசேனையை மானபங்கம் செய்ய முயற்சித்து, தற்காப்புக்காக விரல்களை வெட்டியவளை கைது செய்தது வரை அநியாயங்கள் எடுக்கப்படுகிறது, உண்மையில் பார்வையாளர்கள் மனம் அதாவது சமூக மனம் இன்னமும் அநீதிகளை கண்டு வெகுந்து எழவே செய்கிறது. அந்த எழுச்சிக்கு ஒரு தீனியாக அந்த காட்சியின் முடிவாக நடக்கும் ஒரு கொலை பார்வையாளர்கள் மனதில் அநீதியின் முடிவாகவே தான் நிற்கிறது .

இந்த வன்முறை காட்சிகள் சமூகத்தை கெடுக்கின்றது என்று எழுதுகிறார்களே? இது எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

இப்படி எழுதுகிறவர்கள், வன்முறை என்பதற்கு சில வரையறைகள் வைத்துக்கொள்கிறார்கள்.மிக முக்கியமாக ஜெயிலர் படம் வெளியிட்ட பின் ஐயோ இந்த படத்தில் இத்தனை வன்முறை என்று கிளம்பியவர்கள் மனதிலும் இருந்தது தான்; வன்முறை வன்மம் தான்; ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தின் வெற்றியை பொறுக்க முடியாத வன்மம் அது .

காரணம், நாம் எல்லோரும் கொண்டாடிய ஜாக்கி சான் கதைகளிலும் கூட வன்முறை இருக்கவே செய்தது.Tom &Jerry? வன்முறை இருக்கவே செய்தது. மாவீரன் திரைப்படம், தெலுங்கில் மகதீரா. நூறு பேரை ஒருவன் கொலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஆசிரியப்பட்டு கொண்டாடினார்கள்.அதுல எல்லாம் இப்படி காண்பிக்கலை. என்பீர்கள் என்றால் எப்படி! ? வெட்டினால் வன்முறை சுட்டால் வன்முறை இல்லை. அடித்தால் வன்முறை இல்லை. அப்படியா? ஏன் பாகுபலி திரைப்படமும் ஜெயிலர் திரைப்படமும் வெற்றிபெற்றது.முன்னமே சொன்னது போல,கதை சொல்லல் என்பது மனித மனங்களின் அழத்தில் இருக்கும் உணர்வுகளோடு விளையாடப்படும் விளையாட்டு. அது எதையும் நம்முள் புகுத்திவிடுவதில்லை.

கதையில் அந்த காட்சிகள் எப்படி பொருந்துகிறது. எந்த இடத்தில் என்ன காரணத்திற்காக வன்முறை காட்சிகள் வருகின்றது என்பது அதில் மிக முக்கியமானதாக இருக்கின்றது.அடங்கமறு திரைப்படத்தில், ஒரு பெண்ணை கொடூரமாக கற்பழித்தவர்களை இன்னும் கொடூரமாக கொலை செய்யும் பொழுது நம் மனம் திருப்தி அடைகிறது.சமூகத்தில் நிகழ்ந்தேறும் அதி உச்ச அநியாயங்களை நம் மனம் அப்படியாகவே தான் கையாள நினைக்கின்றது.ஆனால், பல்வேறு காரணிகளால் நம்மால் அதை செய்ய முடிவதில்லை, அதை கதையில் ஒருவன் செய்யும் பொழுது அதை செய்வதற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நம் மனதிற்கு அது ஒரு தீனி போல் அமைந்து விடுகிறது. கதைகள் இப்படித்தான், மக்களிடம் வரவேற்பை பெறுகிறது.

நீங்கள் சிந்தியுங்கள், பாட்ஷா திரைப்படத்தில், ரஜினி அடி வாங்கும் காட்சி,ஒரு அனுதாபத்தை தான் ஏற்படுத்துகிறது. ஆயுதமில்லாத ஒருவனை, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது எத்தனை பெரிய வன்முறை.இப்படி ஒரு கதையில் வன்முறை எதற்காக எந்த இடத்தில் என்ன காரணத்திற்காக அமைக்கப்படுகிறது என்பது முக்கியம்.

வன்முறை காட்சிகளை பொறுத்தமட்டில் அவற்றை காட்சிப்படுத்தும் விதம் மட்டும் அதன் வக்கிரத்தை குறைப்பதில்லை. கதையில் அதற்காக சொல்லப்படும் காரணமும் சேர்ந்து தான் அந்த வக்கிரத்தை குறைக்கின்றது அல்லது வக்கிரம் அல்லாத உணர்வை நமக்கு தருகின்றது. aesthetic காக ஒரு வன்முறை காட்சியோ அல்லது காதல் காட்சியோ படம் ஆக்கப்படும் பொழுது அது வேறு ஒரு உணர்வை தருகிறது. பாகுபலி திரைப்படத்திலும் ஜெயிலர் படத்திலும் நாயகன் செய்யும் கொலையை , aesthetic காக காட்சிப்படுத்தியதும், கதையில் இருந்த காரணமும் ராவான ஒரு வன்முறையை உணர்வை மாற்றி , கதையில் அநியாயத்திற்கு அதர்மத்திற்கு முடிவாக நம் மனதிற்கு காட்டுகிறது.இங்கே ‘aesthetic ‘என்கிற வார்த்தை பிரயோகம் சரியா என்று தெரியவில்லை. அந்த இரண்டு காட்சிகளை விட தலையை வெட்டும் காட்சிகளை கொடூரமாக காட்டிய திரைப்படங்களும் இருக்கவே செய்கிறது.

முன்னமே சொல்லியது போல், ரஜினியின் படத்தில், மற்ற எல்லாவற்றையும் விட ரஜினியே தான் நம் மனங்களை ஆக்கிரமித்து இருப்பார். ஜெயிலர் திரைப்படத்தில் அந்த குறிப்பிட்ட காட்சியில் தலைவெட்டப்பட்ட பின் நமக்கு அங்கே தெரிவது ரஜினியின் முகம், அந்த முகம் தான் கதையோட்டத்தோடு ஒன்றிய பார்வையளர்களின் மனநிலை.

உயிர்களின் தோற்றம் முதலாகவே இயல்பில் நியாய அநியாயங்களுக்கான போராட்டம், தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கான போராட்டம் இருக்கவே தான் செய்கிறது.நம் சமூகத்தில் எல்லாமே வன்முறையாக தான் இருக்கின்றது. ஆனால், எது வன்முறை என்பதில் நாம் தான் சில வரையறைகளை வகுத்துக் கொண்டுள்ளோம். நமக்கு கீழ் உள்ளவர்கள் மீது நாம் செலுத்தும் அதிகாரம்; மற்றவர்களை பேச விடாமல், குரலை உயர்த்தி கோபமாக கத்துவது கூட வன்முறை தான். சமூகத்தில் இருந்து தான் கதைகள் பிறக்கிறது. ஒருவகையில் சமூகத்தின் இயலாமையை தாண்டி ஒருவன் வெற்றி பெறுவது போல காட்டுவது; உதாரணமாக சாமானியன் ஒருத்தனுக்கு ஒரு சக்தி கிடைத்து அவன் அநியாயங்களை தட்டி கேட்கும் அந்நியனாக மாறுவது; சாமானியன் முதலமைச்சர் ஆவது என்று கதைகள் மனித மனங்களின் ஏக்கத்திற்கு தீனி போடுவதில் தான் வெற்றி பெறுகிறது.

 

இது சமூகத்தில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒரு கதையை வாசிப்பவர்கள் அல்லது திரைப்படத்தை காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துகொண்டு பின்பற்றுவதில் தன்னால் முடியும் தன்னுடைய வரையறை எது என்று தெரிந்தே தான் தேர்ந்தெடுக்கிறது. நாற்பது வருடங்களுக்கு மேல், ரஜினி திரையுலகில் இருக்கின்றார். முப்பது வருடங்களுக்கு மேல் ரஜினி ரசிகராக இருக்கும் ஒருவரால் புகைப்பழக்கத்திற்கு ஆளாகாமலும் கூட இருக்க முடியும். இருக்க முடிகிறது.

திரைப்படங்களை விட ஒரு குழந்தை, அல்லது ஒரு மனிதன் என்ன மாதிரியான சூழலில் வளர்கிறான் என்பது தான் அவனுடைய பழக்கவழக்கங்களை தீர்மானிக்கின்றது. லியோ படத்தின் ட்ரைலரில் பயன்படுத்தப் பட்ட கெட்ட வார்த்தைக்காக பொங்கும் அத்தனை உள்ளங்களும் உச்ச பட்ச கோபத்தில் ஏதோ ஒரு வார்த்தையை கெட்ட வார்த்தையாக தான் பயன் படுத்திக்கொண்டிருக்கும். வெங்காயம் மண்ணாங்கட்டி மயிறு வெண்ணெய் என்று இது எதுவும் கெட்ட வார்த்தைகள் இல்லை.பிரயோகம் தான் அந்த வார்த்தையின் தன்மையை தீர்மானித்து இருக்கின்றது. லியோ படத்தின் ட்ரைலரில் பயன்படுத்தப் பட்ட கெட்ட வார்த்தை ஒட்டுமொத்தமாக பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அவள் விகடன் போன்ற பத்திரிகைகளில் செய்திகள் பார்க்க முடிந்தது. அங்கே அவள் விகடன் என்ன செய்கிறது என்றால் அந்த ட்ரைலர் பார்க்காதவர்கள் கவனத்திற்கு அதை எடுத்துச் செல்கிறது.

அந்த ட்ரைலரில் பயன்படுத்தப்பட்ட அந்த ஒரு வார்த்தை எனக்கு அறிமுகம் ஆன பொழுது எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது. ஆண்களில் அப்படி இருப்பவர்களுக்கு என்ன பெயர்? ஒரு பெயரும் இல்லையா? அதற்கு கண்ணதாசன் அவர் பாடலுக்கு சொன்ன விளக்கம் தான் சிறந்த பதிலாக இருக்க முடியும் என்று தோன்றியது. இயல்பில் ஆண் ஒரு பெண்னை மட்டும் நினைப்பதில்லை காதலிப்பதில்லை என்று ,”ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த நினைவிற்கு பெயர் காதல் ” என்கிற பாடலை குறித்து எழுந்த கேள்விக்கு கண்ணதாசன் சொன்ன விளக்கம்.அப்படியென்றால், இயல்பிலேயே ஆண் இப்படித் தான் என்று இந்த சமூகம் தண்ணி தெளித்து விட்டது என்று தானே அர்த்தம்!

வன்முறை காட்சிகளோ, அல்லது கதையின் ஓட்டத்தை கருதி அதில் வரும் கதை மாந்தர்களின் தன்மையை பொறுத்து அந்த கதை மாந்தர் உணர்வு மிகுதியால், நம்மில் பலரும் பயன்படுத்தும் ஏதோ ஒரு கெட்ட வார்த்தையை,சனியனே என்று வைத்துக்கொள்ளுங்களேன்.இப்படி ஏதோ ஒன்றை பேசினால்,அந்த காட்சி அல்லது வசனம் எங்கள் குழந்தைகளை பாதிக்கிறது என்பவர்களிடம் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்வி தான் இருக்கின்றது. யோக்கியனுக்கு இருட்டில என்ன வேலை. அத்தனை அவசியமாக உங்கள்  குழந்தைகளுக்கு அந்த சினிமாவை ஏன் காண்பிக்கிறீர்கள்?

பொழுதுபோக்கும் அவர்களுக்கு தேவை தான் என்று நீங்கள் வாதிடுவீர்கள் என்றால் புலி,கோச்சடையான், ஆதிபுருஷ் போன்ற படங்கள் ஏன் பெருமளவில் வெற்றியடையவில்லை. அனிமேஷன் சரியில்லை என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு எந்த குழந்தைகளுக்கும் விவரம் இருப்பதில்லை அவர்களை பொறுத்தவரையில்.3d படங்கள் ஒரு magic . குழந்தைகளுக்காகவும் குடும்பங்களுக்காகவும் எடுக்கப்படும் படங்களை சீரியல் cringe என்று விமர்சனம் செய்ய வேலையில்லாத அறிவாளி விமர்சகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.அவர்களே தான் வன்முறை காட்சிகளுக்காகவும் ஆபாச வசனங்களுக்காகவும் பொங்குகிறார்கள்.

இந்த சமூகத்தில் ஒரு சாரார் இப்படி எல்லாவற்றையும் குறை கூறி மற்றவர் மனங்களில் எதார்த்திற்கு புறம்பான அறிவாளித்தனமான எண்ணங்களை விதைக்க பார்க்கிறார்கள்.

கதை அமைப்பதில், இது அப்படி இருக்கனும். இது இப்படி இருக்க கூடாது என்றெல்லாம் நாம் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. தணிக்கை குழு திரைப்படங்களை வகைப்படுத்துதலில் எப்படி தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வேண்டுமென்றால் நாம் பேசலாம்.நடிகர்கள் மீதும் கதை வசனம் எழுதுபவர்களின் மீதும் வன்மங்களை உமிழ வேண்டியதில்லை.

இதைப்பற்றி நண்பன் ஒருவனிடம் பேசும் பொழுது அவன் கொஞ்சம் கோபம் ஆகி, இப்படி கெட்ட வார்த்தை பேசும் படங்களுக்கு A சான்றிதழ் வழங்காமல்,u/a வழங்குகிறார்கள் என்றான். கவனிக்கப்பட வேண்டியது அது தான். ஜெயிலர் பாகுபலி போல் அல்லாமல், ராவான வன்முறை காட்சிகள் இருக்கும் நான் மகான் அல்ல திரைப்படம்; பருத்திவீரன் திரைப்படத்திற்கும் கூட u/a தான் வழங்கியிருக்கிறார்கள். தணிக்கை குழுவும் கூட சமூகத்தின் அங்கம் தான். ஒரு சமூகமாக நாம் இங்கு தான் மேம்பட வேண்டும். ஆனால், திரைப்பட தணிக்கை சார் விஷயங்களில் அரசு சில மாற்றங்களை கொண்ட வர ,முற்படும் பொழுது, சினிமாக்காரர்களோடு சேர்ந்து சினிமாக்காரர்களை வன்முறை காட்சிகளுக்காக குறை சொல்லும் அறிவாளி எழுத்தார்களும் அரசை எதிர்க்கிறார்கள். கேட்டால், படைப்பு சுதந்திரத்தில் அரசு தலையீடுகிறது என்பார்கள்.

தணிக்கையை பொறுத்தவரையில், எந்த வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு திரைப்படத்தை காணலாம் என்கிற வகைப்படுத்துதல், தான் பீப் போட்டு, வண்ணங்களால் ஆபாசங்களை மறைத்து u/A சான்றிதழ் தரும் நிலை தான் மாற வேண்டும்.

தணிக்கை துறை திருந்தாது என்று வைத்துக்கொள்வோம். புகைபிடிக்கும் காட்சியை காண்பதால் மட்டும் ஒரு குழந்தை எதிர்காலத்தில் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகாது. கதையிலோ திரைப்படத்திலோ காணும் எதையும் பின்பற்றுவதில் இந்த சமூகம் selective ஆக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

parental guidance சான்றிதழ் பெறும் ஒரு திரைப்படத்தை உங்களுக்கு குழந்தைக்கு காட்டலாமா வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்கிற பொழுது, நடிகர்களை குறை கூறுவதில், அல்லது ஒரு கதையை குறை கூறுவதில் ஒரு நியாயமும் இல்லை.

அதோடு நம் சமூகமும் சரி! தணிக்கை குழுவும் சரி! 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் எல்லோரையும் குழந்தைகள் என்று வரையறை செய்து பழகிவிட்டது. எத்தனை வயதில் ஒரு கதையையோ ஒரு காட்சியையோ ஒரு குழந்தை புரிந்து கொள்ளகிறது. 13 வயதில் அக்பர் ராஜாவாகி விட்டார். நம் தாத்தாக்கள் பால்ய வயதில் (teenage) இல்வாழ்க்கையை தொடங்கியிருந்தார்கள். தணிக்கை குழுவும், அதை கொண்டிருக்கும் சமூகமும் இந்த விஷயத்திலும் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்.NC 16,PG 16 PG 13, என்று வெளிநாடுகளில் திரைப்பட தணிக்கையில் பல வகைகள் இருக்கின்றது.அது முறையாக பின்பற்ற படவும் செய்கிறது.நிர்வாக ரீதியில் நாம் அதை நோக்கி தான் நகர வேண்டும்.

personally, உங்கள் குழந்தைக்கு என்ன மாதிரியான சூழலை நீங்கள் உருவாக்கி தருகிறீர்கள் என்பது தான் அவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர நீங்கள் அவர்களுக்கு காட்டாத ஒரு திரைப்படம் அவர்களை எப்படியும் பாதித்துவிடாது. குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் சினிமா விளையாட்டு போன்ற விஷயங்கள் கொண்டிருக்கும் ஆசிரியத்தை விட ஆச்சரியங்கள் அவர்களின் பாட புத்தங்களிலும் கூட இருக்கின்றது. ஒரு தோசை, அழகா முறுகலா வருவதில் ஒளிந்திருக்கும் thermodynamics ஐ உங்களுக்கு பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லுங்கள். அவர்கள் சினிமாவால் கெட்டு போக மாட்டார்கள்.அவர்களை physics கெடுக்கும். thermodynamics ஆ அது தான் எனக்கே தெரியாதே! அது தானே?

 

அப்ப நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கதையாக இல்லாமல் இந்த சமூகத்தில் உண்மையாகவே நடக்கும் விஷயங்களில் உள்ள நன்மை தீமைகளை பகுத்தாய்ந்து சரியான வழியில் வாழ்க்கையை செலுத்த உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு வகையில் கதைகளும் திரைப்படங்களும் அதை தான் செய்கிறது.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது பாண்டிய நாடு படத்தில் வரும் கதை, தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்யும் ஒருவனை இறுதியில் நாயகன் கொல்லும் பொழுது நம் மனம் அதை ஏற்றுக்கொள்கிறதே தவிர கொலை செல்ல கிளம்புவதில்லை. இங்கு தான் நம் மனம் selective ஆக செயல்படுகிறது. ஆனால், அங்கே அந்த கதையில் எதெல்லாம் சரி எதெல்லாம் தவறு என்று காட்டப்படுகிறது. தீமையை எதிர்த்து நாம் நிற்கும் பொழுது, நமக்காக, நமக்குள்ளே ஒரு சக்தி பிறக்கும் என்று காட்டப்படுகிறது. அந்த சக்தி நம் உணர்வுக்குள் இருந்து தான் பிறக்கின்றது என்று காட்டப்படுகிறது. அது வெறும் கதையில் தான் நடக்கும் என்று நம்பும் கூட்டம் , selective ஆக சில படங்களை எதிர்க்கும் பொழுது, கேள்வியெழுப்பாமல் இருக்க முடியவில்லை.

கண்ணன் பாட்டு; குயில் பாட்டு; பாப்பா பாட்டு என்று எழுதிய பாரதி தான் துரியோதனன் தொடை கிழிக்கப்படாமல் கூந்தலை அள்ளி முடிய மாட்டேன் என்கிற பாஞ்சாலியின் சபதத்தையும் எழுதிவைத்திருக்கின்றார்.சினிமாவும் அப்படித்தான்,அதில் எதை எப்போது எப்படி உங்களுக்கு குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கதைகளையும் திரைப்படங்களையும் அப்படியே விட்டுவிடுங்கள். தணிக்கை குழு திரைப்படங்களை வகைப்படுத்தும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் அதை எதிர்க்காமல் இருங்கள் . அந்த வகைப்படுத்தல் மிக முக்கியமானது.நீங்கள் உங்கள் குழந்தைக்கு எதை காட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க, ஏதோ ஒரு வகையில் அந்த வகைப்படுத்தல் தான் இன்றுவரை நமக்கு உதவுகிறது.

 

அதை விட்டுவிட்டு, சினிமா நாட்டை கெடுக்குது என்று நாட்டை கெடுத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் ஸ்லீப்பர் செல்ஸ் கிளப்பும் வதந்திகளை உங்கள் குண்டிக்கு போட்டுகொண்டு உட்கார்ந்துகொள்ளுங்கள். அந்த விமர்சனங்களுக்கும், write up களுக்கும் அவ்வளவு தான் மரியாதை கொடுக்க வேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள், கதைகளும் சினிமாக்களும் மனித மனங்களில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. அது என்ன மாதிரியான தாக்கம் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தி தரும் சூழல் தான் தீர்மானிக்கின்றது.

 

பின்குறிப்பு: ‘குண்டி’ என்பது கெட்ட வார்த்தை இல்லை. பிரயோகிக்கும் முறையில், தக்காளி வெங்காயம் கூட கெட்ட வார்த்தை ஆக்கப்பட்டு இருக்கின்றது. இந்த தெளிவை தான் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

Error happened.
Exit mobile version