கதிர் விஜயம்

பொம்மை காதல் -30; நீளும் இடைவெளி

ஷாரா மீண்டும் பேச தொடங்கிய நாளிலிருந்து அவளிடம் பேசும் பொழுதெல்லாம் வீரா உலக நியாயங்களையும் ஞானங்களையும் மறந்து தன்னையும் மறந்து அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய அந்த பேச்சுக்கள் எல்லாம் அத்தனை குழந்தை தனமானது என்றாலும் அவனும் ஷாராவும் குழந்தைகள் இல்லை என்பதை அவன் மறந்து போனான். யாரைப் பற்றியும் எதனைப் பற்றியும் அவன் எந்த சிந்தனையும் கொள்ளவில்லை.

அன்று  ஷாராவிடம் பேசிய பின் கபினி வீராவிடம் பேசினாள்.

“நீ பார்க்கிற மாதிரியே; நீ நினைக்கிற மாதிரியே; எல்லாரும் எல்லாத்தையும் எடுத்துக்குவாங்க நினைக்க முடியாது! அது உனக்குமே தெரியும். ஷாரா எதையும் தப்பா எடுத்துக்கலை. நீ பேசினதும் தப்பு இல்ல; தப்பாவும் பேசலை தான். ஆனா, நீ அவங்களுக்கு கொடுக்கிற அந்த importance அவங்களை ஒரு uneasy ஆன situation க்கு கொண்டு போயிருக்கலாம். மறுபடி பேசனும் ன்னு நினைச்ச, பேசின; இனி அவங்க பேசினா பேசு! ஆனா, சரியாவே இருந்தாலும் எல்லாமே பேசனும் நினைக்காத; இதை ரொம்ப யோசிச்சு உன்னை நீ குழப்பிக்காத; அவங்க உன்னை தப்பா நினைச்சு உன்கிட்ட பேசாம இல்லை. அவங்களுக்கு family இருக்கு; அவங்க circle வேற உன் circle வேற” கபினி பேசியதெல்லாம் வீராவின் இடது காதில் இருந்த அந்த போனில் ஒலித்துக்கொண்டிருந்தது. வீராவின் மனமோ பல்வேறு சிந்தனைகளிலும் கேள்விகளிலும் மூழ்கியிருந்தது. கபினி பேசி முடித்ததும் காதில் இருந்து போனை எடுத்த வீரா, “நான் எதிர்பார்கலை; இனி தொந்தரவு பண்ண மாட்டேன்; just wanted share old memories; not wanted you to recall everything; Sorry ! Take Care! ” என்று வேகமாக தட்டி ஷாராவிற்கு அனுப்பினான் வீரா.

“It’s Ok டா! sorry எல்லாம் வேணாம்!” என்று அவள் அனுப்பிய பதில் எப்போதும் போல் வீராவின் அந்த சின்ன புன்னகையை பார்த்தது.

“I got a feeling that I got you in trouble; You turned off read receipts. அதுக்கும் நான் தான் காரணம் மாதிரி… ” என்று மென்று முழுங்கி வீரா அனுப்பிய மெசேஜ்க்கு ஷாரா பதில் அனுப்பவில்லை.

மீண்டும் ஷாராவிடம் பேசவே முடியாது என்கிற சூழலில் தான் இருப்பதை வீரா உணர்ந்தான்.அவளிடம் பேச நினைத்த எதையும் இன்னும் பேசிவிடவில்லை, மீண்டும் பேச முடியாத சூழல், இனி எத்தனை வருடம் காத்துக்கொண்டிருந்தாலும் எதையுமே பேச முடியாது என்று உணர்ந்தான் வீரா.

2011இல் வீராவிடம் பேசுவதை நிறுத்திக்கொண்ட ஷாரா மீண்டும் வீராவிடம் பேசியது 2019 இல். பேச தொடங்கிய இரண்டு மாதங்களில் மீண்டும் பேசிக்கொள்ள முடியாத சூழல். தினமும் அந்த chat box ஐ திறந்து பார்த்து விட்டு எந்த மெசேஜும் அனுப்பாமல் விட்டுவிடுவான் வீரா. நாட்கள் இப்படியே நகர்ந்தது. அவனுக்கு அவன் மனதில் இருப்பதெல்லாம் ஷாராவிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.அதற்கான இடம் அவர்களின் chat box இல் இல்லை. தினமும் அவன் அவளிடம் சொல்ல நினைப்பதை அவளும் பார்க்கும் படி whatsapp status களில் எழுதி வைத்தான்.அவளுக்கு மட்டுமே புரிய வேண்டும் என்று நினைத்ததை எல்லாம்,கவிதைகளாய் எழுதி வைத்தான். ஆனால், அவனுடைய அந்த கவிதைகளையும் அவனுடைய தினசரி கதைகளையும் ஷாரா வாசிக்கின்றாளா என்பது நிச்சயமாக தெரியாது.

நாட்கள் இப்படியே நகர்ந்துகொண்டிருந்தது.

நாள் வளர
நாளும் வளர்ந்தது
நமக்குள்ளான இடைவெளி!
வரைமுறைகளும்
வரையறைகளும்
சூழ இருக்கின்ற உலகம்;
வாய்விட்டு விடும் என்ற பயம் தான் எனக்கும்
” சிறுவன் இல்லை இன்னும் பொம்மை கொண்டு விளையாட”
என்று

வீரா எழுதிய இந்த கவிதையை ஷாரா வாசித்து முடித்தாள். “அவளுக்கு என்ன புரிந்தது? அந்த கவிதையில் இருக்கும் பொம்மை யார் என்று ஷாரா புரிந்துகொண்டிருந்தாளா?”இந்த கேள்விகள் எதற்கும் வீராவிற்கு விடை தெரியாது. ஷாரா வாசித்ததும் கூட வீராவிற்கு தெரியாது.

வளர வளர குழந்தைக்கும் பொம்மைக்கும் இடையிலான இடைவெளி எத்தனை பெரிதாகிறது! அப்படித் தான் இருக்கின்றது நமக்குள் வளரும் இந்த இடைவெளியும் என்பதை ஷாராவிற்கு சொல்ல வீரா எழுதிய கவிதை அது. வளர்ந்துவிட்ட குழந்தைகள் பொம்மைகளுடன் பேசுவதில் இருக்கும் குழந்தைத்தனத்தை இந்த உலகம் சரியாக புரிந்துகொள்வதில்லை.அந்த சிக்கலுக்குள் தான் அவர்கள் இருவரும் இருந்தார்கள்.

ஷாராவின் தொடர்பு எண் இருக்கிறது. தினமும் அவளுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால், அதை அனுப்பாமல் இருக்க வேண்டும். வீராவிற்கு அது பெரிய தவம் போன்றது. ஷாராவிடம் பேசும் வாய்ப்பு இருந்தும் அவளிடம் பேசாமல் அவன் அவனை கட்டுப்படுத்துவது அவனுக்கு பெரிய தவம் போன்றது. பொம்மைகள் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை. ஆனால், குழந்தைகள் பொம்மைகளிடம் பேசுவதை நிறுத்துவதில்லை.வீரா தினமும் ஷாராவிடம் பேச நினைப்பதையெல்லாம் அவள் பார்க்கும் படி எழுதிவைத்தான். ஆனால், அவள் அதை பார்க்காமலும் கூட இருக்கலாம்.

இந்த நாட்களும் இந்த இடைவெளியும் இப்படியே வளர்ந்தது. வீராவின் திருமணம் முடிந்து நூறு நாட்கள் ஆனது. கபினியை எப்போது எப்படி வீரா பார்த்தான் என்கிற கதைகளை எல்லாம் அவனுக்கு ஷாராவிடன் சொல்ல வேண்டும்; அந்த காட்சிகளை எல்லாம் whatsapp status இல் எழுதிக்கொண்டிருந்தான்.

 

“அப்போதெல்லாம் யாரைப்பார்த்தாலும் என்னுடைய கண்கள் அந்த நெற்றியையும் அந்த நெற்றியில் சந்தனம் இருக்கிறதா என்பதை தான் தேடும். தேடிக்கொண்டே நாட்களை கழித்த என் கவனம் வேலை தேடுவதில் இல்லை.அந்த போட்டோ, ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்கிற தீவிரமான எண்ணத்தை தந்தது.அப்படி ஒரு வேலைக்குச் சென்ற பொழுது, எதார்த்தமாக என் கண்களில் பட்ட ஒரு நெற்றியில் அதே சின்ன பொட்டு அதற்கு மேல் சந்தனம். அந்த சந்தனம் தான் அப்போதும் கவனத்தை ஈர்த்தது. அந்த நெற்றிக்கு கீழ் இருந்த கண்களை பார்த்த அந்த நொடிகளில், அந்த பொண்ணு நம்மள நேசிச்சா எப்படி இருக்கும் தோன்றிய அதே வேளையில், நிச்சயமாக அது நடக்காது அந்த பொண்ணு அளவு நீ அழகு இல்லை. என்கிற அவநம்பிக்கையும் சேர்ந்துகொண்டது. அந்த நொடிகளில் தோன்றிய அந்த எண்ணங்களை கடந்து அந்த பெண்ணை தேடவோ பேசவோ இல்லை. ஆனால், அவள் என்னை தேடி வந்தாள் என்னிடம் பேசினாள். It happened like a magic.இப்பொழுது திருமணம் முடிந்து 100 நாட்கள் ஆகிறது. ”

கபினியுடனான முதல் சந்திப்பை ஷாராவிடம் சொல்லும் இந்த கதையை ஷாரா படித்தாளா என்பது யாருக்குமே தெரியாது. வீராவிற்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. பொம்மை எப்படி பேசும்!

வீராவின் திருமணம் முடிந்து நூற்றியொன்றாவது நாள். எப்போதும் போல், சூரியன் உதிப்பதற்கு எழுந்து கிளம்பி ஓடிக்கொண்டிருந்தான் வீரா, அவன் வேலை செய்யும் தீவிற்கு அவனையும் அவன் சகாக்களையும் கொண்டு சேர்க்கும் தோனி துறையில் இருந்து 7 மணிக்கெல்லாம் கிளம்பிவிடும்.7 மணிக்குள் அவன் துறையை அடைய வேண்டும். அன்றைய நாளின் பணி நேரம் முடிந்து மீண்டும் அந்த படகுத்துறையில் வீரா இறங்கி மணி பார்க்க அவன் போனை எடுத்தான். எப்போதும் போல், எந்த மெசேஜும் அனுப்பப்போவதில்லை என்றாலும் அந்த chat box ஐ திறந்தான். வீராவிற்கு ஒரே பரவசம். “என்ன தம்பி!ஒரே சிரிப்பா இருக்கு” வீராவுடன் பணிபுரியும் ஒருவர் வீராவை கேட்க சிரிப்பையும் மூச்சையும் அடக்கிக்கொண்டு “ஒன்னும் இல்லை ண்ணா” என்று திரும்பிக்கொண்டான் வீரா. அவனுடைய அந்த பரவச நிலையை அப்படியே ஷாராவிற்கு சொல்லவேண்டும். அப்படியே எழுதினான்.

“நீ ஏதும் செய்யாதிருந்தாலும்
ஏதோ செய்து கொண்டு இருந்தாலும்

கொஞ்சம் இரு
கொஞ்சம் பொறு
என்றேன் என்னை கடக்கும்
அவசர நொடிகளிடம்

நிதானித்து நிமிராமல்
நின்றேன்
என் இதய அறைகள் நான்கிலும்
நானே உள்ளிருந்து சிரிப்பது
போல் உணர்ந்து

நீ நீயாக ஏதும்
செய்தாலும் கூட
என் நொடிகளை நீட்டி
நீள செய்கிறாய்
நான் வாழும் நாட்களை

பேசாத பொம்மையாய் நீ
இருந்தாலும் போதும்
சாகாது இருப்பான்
என்னுள் உள்ள கவிஞன்
உன் சார்ந்த ஏதும்
அவன் புலன் தொடும் போது”

காலையில் இருந்து ஓடிக்கொண்டு இருந்த நேரத்தை நிறுத்தி; “ஓடிக்கொண்டே இல்லாமல் கொஞ்சம் பொறுங்களேன் கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம்; இந்த நொடியில் இன்னும் கொஞ்சம் நேரம்” என்று வீராவின் மனம் சொன்னதை வீரா அந்த கவிதையில் எழுதியிருந்தான். chat box ஐ வீரா திறந்த பொழுது ஷாராவின் Display picture மாற்றப்பட்டு இருந்தது. பல வருடங்கள் கழித்து ஷாராவின் நெற்றியில் அதே அந்த சந்தனம்.இது போதாதா! அவள் பேசவும் வேண்டுமா! ஓடிக்கொண்டிருக்கும் நொடிகளை உட்காருங்கள் கொஞ்சம் என்றது வீராவின் மனம்.காலம் அநேகமான விஷயங்களை மாற்றியிருந்தது. இத்தனை வருடங்களில் ஷாரா சந்தனம் வைப்பதை நிறுத்திக்கொண்டிருந்திருக்கலாம் என்று வீரா நினைக்கும் அளவிற்கும் காலம் எல்லாவற்றையும் மாற்றியிருந்தது. அப்படிச் சூழலில் ஷாராவின் நெற்றியில் மீண்டும் அந்த சந்தனம்! அவன் நினைவு உலகில் அவனும் ஷாராவும் காலத்தில் பின்னோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்கள். வீரா இன்னமும் கூட புன்னகைத்துக்கொண்டிருந்தான்.கபினியுடனான முதல் சந்திப்பை பற்றி அவன் எழுதியதை அவள் படித்திருப்பாள் என்று வீரா நம்பினான். அதற்காகவே தான் அவள் சந்தானமிட்டு ஒரு புகைப்படம் வைத்திருக்கின்றாள் என்று அவனாக நினைத்துக்கொண்டான். அது எதார்த்தமாக கூட நடந்திருக்கலாம் என்றும் கூட அவன் அறிவு சொன்னது.எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்.

“நீ நீயாக ஏதும்
செய்தாலும் கூட
என் நொடிகளை நீட்டி
நீள செய்கிறாய்
நான் வாழும் நாட்களை

பேசாத பொம்மையாய் நீ
இருந்தாலும் போதும்
சாகாது இருப்பான்
என்னுள் உள்ள கவிஞன்
உன் சார்ந்த ஏதும்
அவன் புலன் தொடும் போது”

“பொம்மை போல், நீ பேசாமலே கூட இரு! உன்னைப்பற்றி ஏதேனும் ஒன்று எனக்கு தெரிந்தால், அதுவே என் சந்தோஷத்துக்கு போதுமானது; அது என்னுள் இருக்கும் கவிஞனை சாகாமல் வைத்திருக்கும்” இது தான் வீரா அவளிடம் சொல்ல நினைத்தது. சரி தான்! அவள் பேசவும் கூட வேண்டாம் தான். அவள், அவன் அந்த சந்தனம் பற்றி நினைவு கூறியதால் அவள் வைத்துக்கொண்டாளோ? அல்லது எதார்த்தமாகவே இது நடந்ததோ? எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். யாரோ ஒருவர் அவனிடம் வந்து ஷாரா பற்றி ஏதேனும் பேசினால் போதும் அதுவே அவனை எல்லையில்லா பரவசமடைய செய்யும் . வீராவிற்கு அந்த சந்தோசம் தான் வேண்டும்.

சரி! அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லையா?. வீரா எழுதும் இந்த கவிதைகளை ஷாரா படிக்கின்றாளா என்பதும் தெரியாது என்கிற பொழுது. அவளுக்கு வீரா மனதில் இருந்தது தெரிந்திருந்தா? அவள் வீராவை சரியாக தான் புரிந்துகொண்டு இருந்தாளா? அன்று சந்தனமிட்டு கொண்ட அந்த புகைப்படத்தை அவள் பதிவேற்றியதற்கு வீரா தான் காரணமா அல்லது எதார்த்தமாக நடந்ததா? தொடர்ந்து படியுங்கள்

 

Error happened.
Exit mobile version