கதிர் விஜயம்

பொம்மை காதல்-35 காற்றில் மிதக்கும் விமானம்!

வீரா வேலையில் இருந்தான், கபினியிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

“ஒரு தடவை போனை எடு” கபினியிடம் இருந்து வந்த மெசஜை படித்துக்கொண்டிருக்கும் பொழுதே, மீண்டும் கபினியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு என்ன?”கொஞ்சம் அமைதியாகவும் வேகமாவும் வீரா கேட்டான். “உன்கிட்ட சொல்லலாம்ன்னு வந்தா ரொம்ப பண்ற! மெசேஜ் சொல்லிருப்பேன் ஆனா, அதை முன்னாடியே அனுப்பிட்டா, உன் முகத்தில் ஏறியிருற பல்பை பார்க்க முடியாது ன்னு வீடியோ கால் பண்ணேன்! வாய்ஸ் கால் ஓகே தான்” கபினி செல்லமாக மிரட்டினாள்.

“அப்படி என்ன வச்சுருக்க?” பேசிக்கொண்டே அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தான் வீரா.
“லவ் யூ சொல்லு சொல்றேன்” எப்போதும் போல் செய்யும் விளையாட்டை வேலை நேரத்தில் கபினி செய்யவும், “தேவை இல்லை! Bye” என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள், “நானும் உன் புள்ளையும் ஹாஸ்பிடல் போனோம் அங்க உமாராணியை பார்த்தோம்!” வீராவின் கண்கள் விரிந்தது. “இப்ப பேசலாமா போனை வைக்கிறீயா?” என்றதும் வீரா மெல்லமாய் புன்னகைத்தான், “வாய்ஸ் கால் லையே நீ இளிக்கிறது தெரியுது என்று கபினி பரிகாசம் செய்யவும். “சொல்லு!” என்றான் வீரா.

“லவ் யூ கேட்டேனே” கபினி விடவில்லை. “அப்படி ஒன்னும் சொல்ல வேணாம் எனக்கு வேலை இருக்கு” என்றான் வீரா. “அப்ப நாங்க அன்னிக்கு எடுத்த போட்டோ வேணாம் ல” கபினி முடிக்கவில்லை, “சரி! லவ் யூ!” வீரா சொன்ன அந்த லவ் யூ வில் ஒரு அவசரம் இருந்தது. “அந்த அளவுக்கு ஆகிருச்சு!” என்று செல்லமான கோபத்தோடு இழுத்தாள் கபினி.

“செக் அப் எல்லாம் முடிச்சுட்டு கிளம்பும் போது; கேன்டீன்ல பாத்தேன்! அப்புறம் அது கூட இன்னொரு பொண்ணு இருந்தது; introduce பண்ணிட்டு, பாப்பா வச்ருந்துச்சு கொஞ்சம் நேரம். அப்படியே பேசிட்டு இருக்க அப்ப, அந்த போட்டோ ப்ளூடூத் ல அனுப்பி விடுறீயாப்பா ன்னு கேட்டேன். ஐயோ உங்களுக்கு அனுப்பலையா! நான் எங்க அம்மாக்கு அனுப்பினேன்! அப்புறம் அம்மாட்ட எல்லாம் சொன்னேன், நீங்க எல்லா டாக்டர்ஸ்க்கும் லெட்டர் கொடுத்தது எல்லாம்ன்னு சொல்லி வாட்சப் நம்பர் கேட்டு அப்பறம் அனுப்பிவிட்டுச்சு” கபினியின் அத்தனை நீளமான கதையை பொறுமையில்லாமல் கேட்ட வீரா, படத்திற்காக காத்திருந்தான். அவனுக்கு அதை ஷாராவிடம் காட்ட வேண்டும். கபினியும் வீராவும் பேசி முடித்ததும், வீராவின் போனிற்கு அந்த புகைப்படம் வந்தது.வந்த வேகத்தில் அது ஷாராவின் போனை அடைந்தது.

“டாக்டரா?” ஷாரா கேட்டாள். அத்தனை வேகமாக அந்த புகைப்படத்தை ஷாராவிற்கு அனுப்பிய வீராவிற்கு என்ன சொல்லவது என்ன பேசுவது என்று தெரியவில்லை. “ஏன் சந்தேகமா கேக்குறீங்க?” “இந்த பக்கம் டாக்டர் அந்த பக்கம் நர்ஸ், அவங்க போன் ல எடுத்தது இன்னிக்கு அனுப்பினாங்க” வீராவின் இந்த பதிலுக்கு பின் ஷாராவிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.

“சொல்லு!” வீராவின் மனம் வீராவை அனத்திகொண்டிருந்தது.

அவனே மீண்டும் தொடர்ந்தான், “டாக்டர் தான், she is doing pg there” இதற்கும் ஷாராவிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.
இதையும் கூட சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடுமோ என்கிற அச்சம் வீராவிற்கு ஏற்பட்டது. “நீங்க விஜி மிஸ் எல்லாம் யாரா இருக்கும்ன்னு யோசிச்சீங்கள?அந்த பொண்ணும் இப்படித்தான்” என்றான் வீரா.

வீரா எழுதும் கவிதைகளை படித்துவிட்டு ஒரு முறை ஷாரா, அது அவளாக தான் இருக்கும் என்றாள், அது நிச்சயம் எனக்கு தெரிஞ்ச பெண்ணா தான் இருக்கும் என்றார் அவர்களின் கணினி ஆசிரியர்.

“புரியலை” வீராவின் மெசேஜ் க்கு ஷாராவிடம் இருந்த வந்த பதில்.

வீரா ஷாராவிற்கு அந்த உரையாடல்களை நினைவுப்படுத்தி, அவளாக தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்த அவள் இப்படி தான் இருப்பாள் இந்த டாக்டர் மாதிரி என்றான்.

பொம்மை புன்னகை ஒன்று தேடி அனுப்பினாள் ஷாரா.

வீரா மனதில் ஒரு நிறைவு. அந்த நிறைவிலும் சில கேள்விகள், “டாக்டரான்னு கேட்கும் போதே தெரிஞ்சு தான் கேட்டு இருப்பாய்ங்களோ” இப்படி எல்லா தருணங்களிலும் அவனுக்கு எழுந்து ஷாராவிடம் அவன் கேட்க வைத்திருக்கும் கேள்விகள் மட்டும் ஆயிரம் இருக்கும்.

ஆனால், அவனிடம் இருக்கும் எந்த கேள்விகளும் ஷாராவிடம் சென்றதில்லை. அவனிடம் இருந்து குட் மார்னிங் மெசேஜ் கள் மட்டுமே தான் சென்று கொண்டிருந்தது. பள்ளிக்காலத்தில் தினமும் ஆசிரியர்களுக்கு குட் மார்னிங் சொன்னதற்கு பிறகு அவன் தினமும் தவறாமல் குட் மார்னிங் அனுப்புவது ஷாராவிற்கு மட்டும் தான்.அந்த குட் மார்னிங்கள் தான் அவர்களை இன்னும் இணைப்பில் வைத்திருக்கிறது என்று நம்பினான்.

எப்போதும் போல், அன்றும் ஒரு குட் மார்னிங் வீராவிடம் இருந்து ஷாராவிற்கு வந்தது. அந்த குட் மார்னிங் பார்த்த ஷாராவின் பெருவிரல்கள், “this weekend I am going to germany” என்று வேகமாக தட்டிக்கொண்டிருந்தது. அந்த மெசேஜ் இன்னும் வேகமாக வீராவின் போனிற்கு பறந்தது.

சாதாரணமாக வீரா அனுப்பும் குட் மார்னிங்கள் கூட வீராவிற்கு திரும்புவதில்லை. ஷாரா வீராவிடம் எதையும் அதிகம் பகிர்ந்துகொண்டதும் இல்லை. அந்த வீராவிற்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை கொடுத்தது. ஒன்று அவள் ஜெர்மனி செல்வது.மற்றொன்று, “சொல்லிருக்க வேண்டியதில்லையே! ஆனா என்கிட்ட சொல்லிருக்காய்ங்க!” நினைத்து நினைத்து சந்தோஷப் பட்டுக்கொண்டான் வீரா .

“2006-07 இருக்கும் டா! நான் பத்தாவது படிக்கும் பொழுது, இல்லை! நான் லெவன்வெத்(11th)” அந்த மகிழ்ச்சியோடு கபினியிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் வீரா. இருவரும் வீராவின் கடந்த காலத்திற்குள் சென்றார்கள்.

வருஷம் -2006, அன்று மாலை ஒரு ஏழு மணி இருக்கும்.அந்த இடத்தில் அவர்கள் ஒரு மூன்று பேர் இருந்தார்கள்.

அந்த இரண்டு  பெண்களும் பேசிக்கொள்ளும் பொழுதுகளில் அவ்வப்போது வீராவையும் சேர்த்துக்கொள்வார்கள். அதிசயமாக ஷாராவாகவே வீராவிடம் பேச்சை தொடங்கிய அரிதான தருணங்களில் அதுவும் ஒன்று.

“நீ இந்த தமிழ் second paper  ல பழமொழிக்கு கதை எழுதுறது, இல்லாட்டி தலைப்புக்கு கவிதை  எழுதறது இதுல எப்வாவது கவிதை எழுத்திருக்கியா?” என்றாள். அன்று ஷாரா, தமிழ் இரண்டாம் தாள் மாதாந்திரத் தேர்வை எழுதியிருந்தாள்.

அவள் அன்று ஒரு கவிதையும் கூட எழுதியிருந்தாள். அதைப்பற்றி சொல்வதற்காகவே தான் பேச்சை ஆரம்பித்தாள்.

“நம்மை எங்க கவிதை எழுதினோம் அதுனால அந்த பக்கம் போறதில்ல” இந்த வார்த்தைகளை ஷாராவிடம் சொல்லிக்கொண்டிருந்த வீராவிற்கு தெரியாது. அவன் பின்னாளில் கவிதைகளும் எழுதுவான்; அந்த கவிதைகளில் பாதி ஷாராவின் பெயர் சொல்லிக்கொண்டிருக்கும் என்று.

‘வானமே எல்லை’ அது தான் தலைப்பு என்றாள் ஷாரா.  ஷாரா பத்தடி தூரத்தில் யாரோ ஒருவருடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாலே பரவசத்தில் வீராவிற்கு தலைகால் புரியாது. இரண்டி தூரத்தில் இருந்து அவனிடமே பேசும் பொழுது அவனுக்கு என்ன கேட்கும்! என்ன புரியும்!

‘என்ன எழுதினீங்க? சொல்லுங்க?’ ஷாரா எதிர்பார்த்திருக்க கூடும் இந்த கேள்வியை வீரா கேட்கவேயில்லை. அவர்களுடைய பேச்சும் மடைமாறியது. அதோடு அன்று வீராவும் ஷாராவும் பேசவில்லை. ஷாரா அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவளே பேச ஆரம்பித்தும் நாம் பேசாமல் விட்டுவிட்டோமோ என்று  புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.

வீராவின் நினைவுப்பக்கங்கள் புரட்டப்படும் பொழுதெல்லாம் அந்த நாட்களில் அவளும் கூட வீராவிடம் பேச காரணங்களை தேடியிருக்கின்றாளோ என்கிற எண்ணம் வீராவிற்கு தோன்றாமல் இருந்ததில்லை.

நமக்கு மகிழ்ச்சியை தரும் எந்த ஒரு விஷயத்தையும்,  அல்லது நம் வாழ்வில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும், நமக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது மிக பிடித்தமானவர்களிடமோ பகிர்ந்து கொள்வதில் இருக்கின்ற ஆனந்திற்கு அளவே இல்லை.சமயங்களில் நமக்கு பிடித்தமானவர்கள் அவர்கள் சார்ந்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் பொழுது இருக்கின்ற மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

அந்த ஒரு நாள் மட்டும் தான் அவளாக வீராவிடம்  அவள் செய்த ஒன்றைப் பற்றி பேச வந்தாள். “நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன் கேக்குறியா?” என்று கேட்பது போல். “என்ன கவிதை?” என்று வீரா கேட்டிருந்தால், கேட்டிருந்தால்?! வீரா தான் கேட்கவில்லையே.

அதன்பின், 2011ம் வருடம் “இன்னிக்கு நான் fish  fry செய்தேன்” வீராவிடம் போனில் சாட் செய்யும் பொழுது ஷாரா கொஞ்சம் மகிழ்ச்சியோடு வீராவிற்கு அனுப்பிய மெசேஜ் . அந்த SMS ஐ பார்த்த மாத்திரத்தில் ஷாராவின் மகிழ்ச்சியை விட அதிகமான ஒரு மகிழ்ச்சி வீராவின் முகத்தில் வெளிப்பட்டது.

ஆனாலும் அவன், “தோசை கல்லுல போட்டு எடுத்தா சமைச்ச கணக்கா?” என்றான்; “எல்லாமே நான் தான் செஞ்சேன்” என்று பதில் வந்தது.

மகிழ்ச்சி சில நேரங்களில் அசாத்தியமான தைரியத்தை கொடுத்துவிடும், அல்லது அது அச்சம் தரும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஏற்படுத்துவது இல்லை. அந்த நேரத்தில், அந்த மகிழ்ச்சியில் “நீங்க சமைச்சு நான் சாப்பிடணும் ஒரு நாள்”என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, அவசரப்பட்டுவிட்டோமோ, அந்த மெசேஜ் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று பயந்தான் வீரா.

“அப்புறம் உனக்கு டன் டனக்கா தான் டி” என்ற பதிலை நெருக்கமான கூட்டத்திற்கு நடுவில், பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது பார்த்த வீராவின் முகத்தில் இருந்து வழிந்த புன்னைகைகள்  அத்தனை கூட்டத்திற்கும் நெருக்கத்திற்கும் இடை இருந்த வெளியை தேடி நிறைத்து கொண்டு இருந்தது.

அவள், அன்று எழுதிய கவிதையைப் பற்றி வீரா கேட்காததாலோ என்னவோ? அவன் எழுதும் கவிதைகளை அவள் பெரிதும் சட்டை செய்வதில்லை.

அவர்களுக்கு இடையிலான தூரம் நிலவுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கின்ற தூரத்தின் அளவிற்கு வளர்ந்திருந்தது. அவள் நிலா என்றால் வீரா பூமி.

நிலவில் என்ன நடக்கிறது என்று யாருக்கு தெரியும்! அது மாதிரி தான்.அவள் எதையும் வீராவிடம் பகிர்ந்துகொண்டதில்லை. அதற்கு அவசியம் என்ன இருக்கின்றது என்று வீரா சமாதானம் சொல்லிக்கொள்வான்.

ஆனாலும், அந்த நிலவில் இல்லாத ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக நம்பிக்கொண்டு இருப்பதில் தானே ஒரு அழகே இருக்கின்றது.வீராவும் அப்படியான நம்பிக்கைகளை அதிகம் கொண்டிருந்தான்.

“சரி! இன்னிக்கு என்ன ஆச்சு?” கபினி வீராவின் கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தாள்.

“பேமிலி டூர்ரான்னு கேட்டேன் ட்ரைனிங் ஆம்!” என்றான் வீரா. “சரி! நீ அப்படி தனியா போய் குதூகலம் அடைஞ்சுக்கோ உன் புள்ள போன் பேச விடலை” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் கபினி.

வீராவிற்கு அவனே எதையோ சாதித்து விட்டதை போல் இருந்தது, கதைகளில் அவன் கேட்டு பிரம்மித்த ஜெர்மனியில், ஒரு பிரம்மிப்பாகவே அவன் பார்த்த ஷாரா.Veera is little more excited.வானத்தில் இருக்கும் நிலா உங்களிடம் வந்து இந்த பௌர்ணமி முடிந்தால், அடுத்த பௌர்ணமிக்கு தான் வருவேன் என்று உங்களிடம் சொல்லிவிட்டுச் சென்றால் எப்படியிருக்கும் வீராவிற்கும் அப்படித்தான் இருந்தது.

 

இன்று வந்த நிலா

என்றும் இல்லாமல்

ஒன்று சொன்னது  என்னிடம்,

“இந்த பெளர்ணமி முடிந்து

இன்னும் மேற்கே சென்று

வரும் பெளர்ணமி வருமுன்

வருவேன் கிழக்கே” என்று.

இதில் இரகசியம் ஒன்றுமில்லை

நிலவிற்கு அவசியம் கூட இல்லை

அவசியம் இரகசியமில்லை

அதிசயம் ஆயிரம் உண்டு -அந்த

அதிசயம் எதுவெனக்கேட்டால்

நிலவே அதிசயம் தானே!

அதிசயம் ஆயிரம் என்னெனக்கேட்டால்

அத்தனை பேர்க்கும் சொல்லி

எனக்கும் சொன்னது நிலவு

இதில் அதிசயம் எங்கெனக்கேட்டால்

நிலவுள் தேடுங்கள் கிட்டும்

ஷாராவும் வாசிக்க, இந்த கவிதையை போஸ்ட் செய்தான் வீரா. ஷாரா அவனிடம் பேசுவதே அதிசயம் தான்.இன்னும் அதிசயமாய் அவள் வாழ்வின் ஒரு பெரு நிகழ்வு ஒன்றை வீராவிடம் சொன்னது, அந்த நாள் முழுதும் வீராவை மகிழ்ச்சியில் வைத்து இருந்தது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான் வீரா, பக்கத்து வீட்டுக் குழந்தை எப்போதும் போல், அவனிடம் விளையாட வந்தது.மதியம் நடந்த அந்த உரையாடலை நினைத்து அதிலேயே மூழ்கியிருந்தான் வீரா.குழந்தை வீடு கட்டியது; தோசை ஊற்றியது.அந்த உரையாடலை நினைத்து மிதந்து கொண்டு இருந்து வீராவிடம்  வந்து  , “மாமா என்ன வேண்டும்” என்றது குழந்தை. “எனக்கு என்ன வேணும் ஒன்னும் வேணாம்” என்று நினைத்து சிரித்துக்கொண்டிருந்த வீராவிற்கு அந்த தருணத்தையும் ஷாராவிடம் சொல்லிவிட வேண்டும்;எழுதினான்,

“காற்றில் மாவாட்டி

கையில் தோசை சுட்டு

உனக்கு என்ன வேணும்

என்ற குழந்தையிடம்

எதுவும் கேட்கவில்லை நான்

காலையில் வந்த நிலா

கண்ணிலே பதித்த வார்த்தை

நெஞ்சிலே நிறைந்திருக்க

இன்னும் என்ன கேட்பேன் நான்!”

அவன் ‘எப்போ’ என்றதும், அவனுடைய போனிற்கு பயணச்சீட்டு ஒன்று வந்தது.கொஞ்சம் அதிகம் பேசினால், அவள் அவனிடம் பேசாமல் இருந்து விடுவாளோ என்கிற தயக்கம் எப்போதும் வீராவிற்கு இருந்திருக்கின்றது. அவளிடமோ தயக்கம் ஒன்றும் இருந்திருக்காது; “இவன்ட்ட நம்ம என்ன *&*&*^ பேசனும் ”  என்கிற எண்ணம் வேண்டுமென்றால் இருந்திருக்கும் என்றெல்லாம் வீரா நினைத்துக்கொண்டிருந்த ஒரு சூழலில் அவள் பயணம் பற்றிச் சொன்ன பரவசநிலையில் இருந்து வீரா மீள்வதற்குள்,அவள் பயணசீட்டை அனுப்பியதும். அதை வீரா திறந்தானே தவிர ஒரு விவரமும் பார்க்கவில்லை.

“எனக்கே இவ்வளவு excitement ஆ இருக்கு அந்த ஃபிளைட்டுக்கு எப்படி இருக்கும்!” ஷாரா என்றதும் வீரா குழந்தையாகி போவது இப்படித்தான். வீராவின் கவிதைகள் தோன்றுவதும் இப்படியான எண்ணங்களில் இருந்தது தான்.

“நீ எ. ன்ற.. நொடி,,யிலேயே.. பற…க்கி..றேன் நான்….. பறக்கும்ம்ம் வி.. மா…னங்கள்.. என்ன செய்..யும்!” வீராவின் மனம் சொல்லச் சொல்ல வீரா எழுதிக்கொண்டிருந்தான். “என்ன செய்யும்!” வீராவின் கவிதை அப்படியே நின்றது. “மிதக்குமோ அது” வீராவின் மண்டைக்குள் ஒலித்தது. “இரு! இரு! இரு!” அவசரமாய் அவன் மனம் அவனை நிறுத்தியது. “இப்ப தான் முதல் தடவை ஃ பிளைட்டுல போறாய்ங்க இப்படியா எழுதுறது!” மீண்டும் கவிதை அப்படியே நின்றது. “ஹான்! அது மிதக்குமோ காற்றில்” புன்னகையோடு முடித்தான் வீரா. ஷாரா இந்த கவிதையை படித்தாள் நிச்சயமாக புரிந்துகொள்ள முடியும் அவர்களின் உரையாடல் தான் அந்த கவிதையின் பிறப்பிடம் என்று. ஆனால், அவள் பார்ப்பாளா? படிப்பாளா? பொம்மைகள் எப்படிச் சொல்லும்?!

‘நீ’ என்ற நொடியிலேயே

பறக்கிறேன் நான்

பறக்கும் இந்த விமானங்கள் என்ன செய்யும்!

அது மிதக்குமோ காற்றில்!

வீராவின் குழந்தைத்தனமான எண்ணங்கள் அதோடு நிற்கவில்லை. “அவைங்க வருவாங்கன்னு நினைச்சு அந்த பஸ் ல தான் ஏறணும்ன்னு நம்ம வெய்ட் பண்ண மாதிரி இந்த மேகமெல்லாம் அங்கையே வெய்ட் பண்ணா என்ன ஆகுறது!”

” மே..கங்..களே! அவள் வரு..கிறாள் என்று… வா..னத்தில்.. தங்கி..விடாதீர்கள்.” வீரா நிறுத்தினான். அவனுக்கு மீண்டும் ஒரு அச்சம் அவள் பத்திரமாக திரும்ப வேண்டுமே. மீண்டும் புதிதாய் எழுதினான், “மே..கங்..களே! .. வா..னத்தில்.. தங்கி..விடா…..தீர்கள்.. அவள்.. வரும்ம்ம். அந்த…. வி..மா..னமும்.. தரையிறங்க தான் போகிறது.” எழுதி முடித்து உதடுகள் வலிக்காமல் புன்னகைத்தான்.

மேகங்களே!

வானத்தில் தங்கி விடாதீர்கள்

அவள் வரும் அந்த விமானமும்

தரையிறங்கத் தான் போகிறது .

அவனுடைய அத்தனை பரவசமும் கவிதைகளாய் கொட்டிக்கொண்டிருந்தது.

வானூரும் தேவதைகளே!

இம்முறை உலா செல்கையில்

அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்

அவள் எங்க ஊரு தேவதை

உங்க ஊர்ல நீங்க தேவதை என்றால் எங்கள் ஊரில் அவளும் தேவதை வானத்திடம் பேசிக்கொண்டிருந்தான் வீரா. சிறிது நேரத்தில், அவன் பரவசமெல்லாம் கொஞ்சம் அடங்கியது.

ஷாராவிற்கு மெசேஜ் அனுப்பினான்.

வீரா: என்னையும்  CSE எடுக்க சொல்லிருக்கலாம். ஒரு பையனுக்கு எதாவது ஒரு வழி காட்டுனீங்களா? நானும் வெளிநாடு எல்லாம் போயிருப்பேன்.
ஷாரா: நீ டாக்டர் ஆகப்போறேன் சொன்னேயே!
வீரா: ஏங்க இன்ஜினியரிங் எடுத்த பிறகு இந்த கோர்ஸ் படி அது படி சொல்லிருக்கலாம் ல
ஷாரா: இப்பவும் என்னப்பா! நீ எட்டு வருஷம் வெளிநாட்டுல இருக்க நான் சும்மா 3 வாரம் தான்.
வீரா: நீங்க ஒன்னு பண்ணுங்க சினிமா ல காமெடி ட்ராக் எழுதுங்க சரியா!
ஷாரா: உன்னைப் பார்த்தா தானா வருது!
வீரா: சரி! ஜெர்மனி போய்ட்டு கால் பண்ணுங்க! எங்களுக்கும் ஜெர்மனியை சுத்திகாமிங்க

வீராவின் கடைசி மெசஜ்க்கு ‘ம்ம்’ என்று மட்டும் பதில் வந்தது. ஷாரா இப்படியெல்லாம் வீராவிடம் பேசி பல வருடங்கள் ஆகிறது. ஜெர்மனி சென்றதும் அந்த மூன்று வாரத்தில் ஒரு நாளேனும் வீராவை போனில் அழைப்பாள் என்று நினைத்தான் வீரா.

ஷாரா ஜெர்மனி போனாளா? வீரா நினைத்துக்கொண்டிருந்தது போல் அவனைப் போனில், அழைத்து பேசினாளா?

தொடர்ந்து படியுங்கள்…

Error happened.
Exit mobile version