வருஷம் 2011, அன்று முப்பதாம் தேதி, புதன்கிழமை. ஆனால், அன்று வீராவின் கையில் மொபைல் இருந்தது. அவன் தனக்கென்று தனியாக ஒரு மொபைல் போன் வைத்துக்கொள்ள தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. அவனுடைய அம்மாவின் மொபைலை தான் அவன் தனக்கென்று எடுத்துக்கொண்டான்.
அன்று வீராவின் பிறந்தநாள்.
கையில் அந்த மொபைல் போனை வைத்துக்கொண்டிருந்த படி, இன்றாவது அவனுக்கு ஷாராவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்துவிடாதா என்று தேடிக்கொண்டிருந்தான்.
“Happy Birthday Thambu” ஷராவிடம் இருந்து அழைப்பு வர காத்திருந்த வீராவின் மொபைலில் வந்த மெசேஜ் இது.
மெசேஜ் அனுப்பியிருந்தது ஷாரா இல்லை. அது விமலிடம் இருந்து வந்திருந்த மெசேஜ்.
“ஏன் டா! நானே அந்த நம்பருக்கு call கூட போகலை ன்னு இருக்கேன்” என்று விமலிடம் வெட்கத்துடனும் சந்தோஷத்துடனும் நொந்து கொண்டான் வீரா.
ஆம், அதே மாதத்தின் 13ம் தேதி வீராவின் மொபைலுக்கு வந்த டெலிவரி ரிப்போர்ட்,”your message to shara not delivered” என்று காட்டியது.
‘என்ன ஆச்சு?’ அந்த டெலிவரி ரிப்போர்ட் ஐ கண்ட நொடியில் வீரா வேகமாக ஷாராவை அழைக்க முயற்சித்தான், “இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை” என்கிற அந்த குரலை கேட்கும் பொறுமை வீராவிற்கு இல்லை.
“நம்பர் block பண்ண முடியுமா? பண்ணா இப்படி வருமா?” மொபைல் பயன்படுத்தும் அத்தனை நண்பர்களிடமும் வீரா கேட்ட கேள்வி.
அந்த 13ம் தேதிக்கு முன்பிருந்தே ஷாரா வீராவிற்கு எந்த பதிலும் அனுப்பவில்லை.அந்த 13ம் தேதியிலிருந்து அவளின் தொடர்பு எண்ணும் உபயோகத்தில் இல்லை.
“என்ன ஆச்சு? ஏன் பேசலை? நம்ம என்ன பண்ணோம்!” வீராவின் மண்டைக்குள் இந்த கேள்விகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தாலும். ஷாரா மீண்டும் பேசுவாள் என்று நம்பிக்கொண்டிருந்தான்.
நிச்சயமாக வீராவின் பிறந்தநாளுக்கு அவனை அழைத்துப்பேசுவாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். சில மாதங்களாக ஷாரா அவனிடம் பேசாமல் இருந்தும் கூட அவள் பேசுவாள் என்று வீரா எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த தருணத்தில் விமலிடம் இருந்து வந்த மெசேஜ் தான்,
“Happy birthday தம்பு”.
2011 பிப்ரவரி மாதம்.
ஷாராவும் வீராவும் சந்தித்துக்கொண்ட அந்த பிப்ரவரி 13ம் தேதிக்கு பின், வீராவால் அடுத்த விடுமுறை வரை காத்திருக்க முடியவில்லை.
அந்த வாரத்தில் விமலும் வீராவும் மீண்டும் கல்லூரியில் அவர்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பின் நிமித்தமாக வெளியில் வந்திருந்தார்கள்.
நட்சத்திரங்களோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த சாலை விளக்குகள்; சாலையை விடவும் கருமையாய் ஒரு வானம்;அந்த வானத்தின் கீழே மலைக்கோட்டை;அந்த மலைக்கோட்டையை சுற்றியும் கடைகள்; அந்த கடைகளை மொய்த்தப்படி மனித கூட்டங்கள்; அந்த கூட்டத்திற்கு நடுவே; அந்த மலைக்கோட்டை வாயிற்கதவுகளுக்கு வெளியே; மஞ்சள் ஒளி பூசிய கருமையான சாலையின் மத்தியில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருக்க அதே அந்த சாலையின் ஓரத்தில், விமலும் வீராவும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வந்த வேலை முடிந்திருந்தது. விமல் கையில் ஒரு பை இருந்தது. வீராவின் கையில் விமலுடைய போன் இருந்தது.வீரா, ஷாரா போனை கையில் எடுப்பதற்காக காத்திருந்தான்.
“ஹலோ!”ஷாரா போனை எடுத்துவிட்டாள். மலைக்கோட்டையும் மஞ்சள் ஒளியும் மனித தலைகளும் இனி வீராவிற்கு தெரியப்போவதில்லை.
அந்த நொடியில் இருந்து விமலின் கவனம் வீரா மேல் குவிந்தது. நெரிசலான அந்த சாலையை கடந்து அவர்கள் பேருந்தில் ஏறும் வரைக்குமேனும் விமலுக்கு அந்த கவனம் தேவையாக இருந்தது. போனையும் வீராவையும் அவன் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
“பார்க்கலாம் சொன்னது நான், வீட்டுக்கு வந்து அம்மாட்ட பேசிட்டு அப்படியே கிளம்பிட்டா என்ன? treat உம் வைக்கலை” என்ன பேசுவதென்று தெரியாமல் எதையோ பேசி ஆரம்பித்தான் வீரா.
“நீ தான் ஊருக்கு போயிட்ட!”என்றாள் ஷாரா.
இப்படியே அன்றைய சந்திப்பை பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ஆமா! உன் date of birth என்ன?” ஷாரா கேட்டாள்.
அத்தனை நேரம் பரவசமாய் இருந்த வீராவின் முகம் கொஞ்சம் மாறியது. அந்த மாறிய முகத்தோடு அவன் அவள் பிறந்த தேதியை சொன்னான்.
அவள் பிறந்த தேதியை அழுத்தமாய் சொல்லிவிட்டு “ஒரு தடவை தான் கேட்டேன் !எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு! எப்பவும் இருக்கும்!” என்றான் வீரா
ஷாரா ,”சொல்லு டா” என்றாள் .
“இரண்டு தடவை கேட்டு இருக்கீங்க ..ரெண்டாவது தடவை நீங்களா கேட்ட பிறகு மறக்க மாட்டீங்க ன்னு நினச்சேன்” மீண்டும் அழுத்தினான் அவன் முகம் இன்னும் அழுத்தமாய் இருந்தது.
“இப்ப சொல்லு”அவள் மீண்டும் மீண்டும் கேட்டாள்.
“நானும் தொண்ணூறு தான்” என்ற வீரா முடிப்பதற்குள் “தேதி சொல்லு” என்றாள் ஷாரா.
வீரா அவன் பிறந்த தேதியை சொன்னான்.
அவர்கள் பேசிமுடித்து போனை வைத்தார்கள்.
“Take care thambu” என்று ஷாரா மெசேஜ் அனுப்பியிருந்தாள். அந்த தருணத்தில்,மலைக்கோட்டையை சுற்றியும் இருந்த அத்தனை மனித முகங்களில் வீராவின் முகம் தான் சிறியதாக இருந்தது.
தமிழ் தெரிந்தவர்கள், தம்பு என்றால் என்னவாக இருக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனாலும், “தம்பு ன்னா தெலுங்கு ல என்ன டா” வேகமாவும் சலிப்பாகவும் விமலிடம் கேட்டான் வீரா.
“Take care Thambu “விமல் அந்த மெசேஜை படித்துவிட்டு சிரித்தான்.
போனை வேகமாக விமலிடம் இருந்து வாங்கிய வீரா, “what does thambu mean?” என்று வேகமாக தட்டி ஷாராவிற்கு அனுப்பி வைத்தான்.
“thambu means thambi” ஷாராவும் வேகமாக பதிலனுப்பினாள்.
அத்தனை வருடத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த அத்தனை நாளில் ஒருநாளும் ஷாரா இப்படி விழித்ததில்லை. “who I am to you ?” என்ற போது, “special one” என்று சொல்லிய இடத்தில் தம்பு என்று அவள் சொல்லியிருக்கவில்லை.அன்று வீம்பாய் அவன் பிறந்த தேதியை கேட்டு பேசி முடித்து இணைப்பை துண்டித்த பின் வேகமாக “take care Thambu” என்று அனுப்பியிருந்தாள்.
குழந்தைகளை பட்ட பெயர் வைத்து சீண்டினால் அவர்கள் எப்படி கொஞ்சிக்கொண்டு கோபம் கொள்வார்கள்.அதை ஒத்த கோபத்தோடு வேகமாய் ஷாராவை அழைத்தான் வீரா.
“நான் ஒன்னும் சின்ன பையன் லாம் இல்ல. உங்க friend.. யாரு… வினோ! photo காமிச்சீங்களே! நானும் அவங்கள லவ் பண்ணலாம் ன்னு இருக்கேன் என்ன பத்தி சொல்லி வைங்க சும்மா தம்பி எல்லாம் சொல்லாம. நான் ஒரு பையன பார்த்தேன் செம அழகா இருப்பான்” என்று வீரா படபடத்துக்கொண்டு இருக்கும் பொழுதே மறுபக்கம் சிரித்துக்கொண்டு ரசித்தபடி, “ஆமா ஒரு பையனை பார்த்தேன் குரங்கு மாதிரி இருப்பான்” என்று சீண்டினாள் ஷாரா.
“சரி உங்க கண்ணுக்கு அப்படி தெரிஞ்சுட்டு போறேன் வினோட்ட நல்ல விதமா சொல்லி வைங்க.. வினோட்ட தம்பி ன்னு எல்லாம் சொல்லாதீங்க ” என்று பேசி முடித்து போனை வைத்த பின்,தம்பி என்று விழிக்க வேண்டாம் என்பதை அவளிடம் சொல்வதற்கு வழி தெரியாமல் எப்படியோ சொல்லிவிட்ட படபடப்பு அடங்கிய பின், சுருங்கியிருந்த வீராவின் முகம் அதிர்ச்சியில் கொஞ்சம் நிமிர்ந்தது, “குரங்கு மாதிரியா இருக்கோம்!” அவள் சிரித்துக்கொண்டே தான் சொன்னாள் என்றாலும், “நம்ம கருப்பா ஆகிட்டோமா! நல்லா இல்லையா! பிடிச்ச மாதிரி இல்லையா ” என்று தன்னை தாழ்த்தி நினைக்க தொடங்கினான். “அங்கையும் தான் முகம் எல்லாம் கரும் புள்ளியா இருந்துச்சு”அவன் மனதின் மறுமூலையில் இப்படி ஒலித்தது.
தாழ்மையுணர்ச்சி கொள்ளும் மனங்களில் இயல்பாக வரும் கோபம் இது. இந்த கோபம் பெரிதாக ஒன்றும் நிலைக்க போவதில்லை.
“கண் பட்டுவிடக்கூடாது என்று
கதிரவனே மை வைத்தான்
அவள் கண்ணங்களில் கரும்புள்ளிகளாய்!”அந்த கரும்புள்ளிகள் அவனுக்கு தந்த கவிதை இது.
கவிதையெல்லாம் எழுதிவிட்டு,”அங்கையும் தான் முகம் எல்லாம் கரும் புள்ளியா இருந்துச்சு” என்கிற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டதற்கு காரணம், “ஷாராவிற்கு பிடிக்காத அளவிற்கு நாம் இருக்கிறோமோ” “நாம் ஒன்றும் வசீகரமாக இல்லையோ” என்கிற தாழ்மையுணர்ச்சி.
அவளைப் பார்த்த நினைவோடு இருந்த பரவசம் அவளிடம் பேசியதில் இருந்த பரவசம் எல்லாம் எதையும் இப்போது வீராவின் முகத்தில் காண முடியவில்லை.
பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்களை எல்லாம் பிரதிபலிக்கும்,கண்ணாடி போல் மேனி கொண்ட பேருந்து ஒன்று வந்து நின்றது. மலைக்கோட்டை பக்கம் அநேகமான தனியார் பேருந்துகள் அப்படித்தான் இருக்கும். அந்த பேருந்து பிரதிபலித்த பிம்பங்களின் நடுவே வீரா தன்னைப் பார்த்தான்.
“அப்ப நீ வெள்ளையா இருந்தீயா! ஆமா குரங்கு மாதிரி இருந்தான்”என்று ஷாராவின் குரல் வீரா மனதில் ஒலித்தது.வினோவை தானும் காதலிக்க போவதாக வீரா விளையாட்டாக சொன்னதற்காக காரணம் ஷாராவுக்கு புரிந்திருக்குமோ என்கிற கேள்வி வீராவின் மனதில்.
கண்ணாடி மேனி கொண்ட அந்த பேருந்து நகர்ந்தது, வீராவின் பிம்பமும் பேருந்தின் மத்தியில் இருந்து ஓரத்திற்கு வந்து மறைந்தது.அதற்கு அடுத்து வந்த பேருந்தில் விமலும் வீராவும் ஏறினார்கள். வீரா ஒன்றுமே பேசவில்லை.
ஆனால், வீராவின் மனதில் எந்த சந்தோஷமும் இல்லாமல் இல்லை. அவள் செய்கின்ற எல்லாவற்றையும் ரசித்து கொண்டாடி மகிழ்வது போல, தம்புவும் அவனுக்கு அழகாகவே தான் இருந்தது.
‘அவள் தன்னை செல்லமாக விழிக்கிறாள்! ஒரு வேலை அது செல்லமான சீண்டலாக கூட இருக்கும்.. அவள் சிரித்து கொண்டே தான் குரங்கு மாதிரி இருப்பதாக சொல்லி சீண்டினாள்’ என்றெல்லாம் சொல்லி அவன் மனமே அவன் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து அவன் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தாலும். எது நிஜம் என்கிற அவன் ஆழ்மனதின் கேள்விக்கு தான் எந்த பதிலும் புலப்படவில்லை.
இந்த பிப்ரவரி மாதத்திற்கும் வீராவின் பிறந்தநாளுக்கும் இடையில் என்ன நடந்தது? அத்தனை முறை அவனிடம் அவன் பிறந்தநாள் எப்போது என்று கேட்டவள் எப்படி மறந்து போனாள். அவள் மொபைல் என்ன ஆனது. அதன் பின்னரும் தம்பு என்றே தான் அழைத்தாளா?
இதெல்லாம் இப்ப சொல்ல மாட்டா அடுத்த episode ல தான் சொல்லுவ அதானே!
தொடர்ந்து படியுங்கள்.