கதிர் விஜயம்

பொம்மை காதல்-32; உயிர் நனைக்கும் மழை அவள்

“சட்னு வந்து
சில்னு சுட்டு
முழுசா நனைச்சு
வானவில் காட்டி
மெதுவாய் குறைந்து
முழுதாய் நின்றது

மழை தான் அப்படின்னா
நீ பேசறதும் இப்படியா!

வானம் பாத்து காத்திருப்பேன்

மழை வரும் வரை
சொல்லாது வானம்
சொல்லாமலே வரட்டும்
மழை கொட்டும் மேகம்”

இந்த கவிதை போலவே தான் இருந்தது ஷாரா வீராவிடம் பேசுவது. மழை போல தீடீர் என்று தொடங்கி கொஞ்சமாய் குறைந்து முழுதாய் நின்று விடும்.

பருவக்காலங்களுக்கு காத்திருக்காமல் எல்லாக் காலங்களிலும் மழையை பொழியும் வானத்தின் கீழ் உள்ள தீவு அது. அப்படியொரு தீவில் இருந்து கொண்டு 2019இல் மீண்டும் ஷாரா பேசத் தொடங்கிய நாளில் இருந்து அவள் பேசும் நாளெல்லாம் மழை வருகிறது என்று நம்பினான் வீரா. மழையும் பொழிந்த அவள் பேசும் தருணங்களை எல்லாம் கவிதைகளாய்  அவன் பிரதி எடுத்துக்கொண்டிருந்தான். உலகத்தின் ஒரு மூலையில் புதிதாக ஒரு வைரஸ் தோன்றி அது தன்னைத் தானே ஒரு பக்கம் பிரதி எடுத்துக்கொண்டிருந்தது.

2020இல் உலகம் முழுதும் அந்த வைரஸ் தொற்று வேகமாக பரவத்தொடங்கி இருந்தது. ஆனாலும், வீராவின் பணியிடத்தில் இருந்த பரபரப்பு கொஞ்சமும் குறையவில்லை, அலுவலகத்தை விட்டுவிட்டு கட்டுமான வேலைகளை பார்வையிட வெளியில் சென்றவன் மழையில் மாட்டிக்கொண்டான்.ஒரு வழியாக மழை குறைந்த பின் அலுவலகத்தை வந்து அடைந்தான்.மழையின் காரணமாக ஐந்து மணிக்கெல்லாம் அன்று வேலையை முடித்துக்கொண்டார்கள்.

நனைந்த சாலை; நனையாத காற்று; எல்லாம் ஈரமாவே இருந்தது. அந்த ஈரமான காற்றில் ஈரமான அவன் மேல் சட்டையும் கால் சட்டையும் எங்கிருந்து காயும்!அப்படியே வீட்டிற்கு கிளம்பினான். வீடு வரை செல்லும் அத்தனை வாகனங்களிலும் குளிர்சாதன வசதி; எங்கிருந்து காயும் அந்த ஈரம்? காயாத அந்த ஈரமும் இன்னும் விடாத தூவானமும் வீராவை ஷாராவின் மெசேஜ் ஐ தேடச்செய்யதது.

பெரிதாக ஒன்றும் இல்லை. காலையில் வீரா அனுப்பும்,”குட் மார்னிங்” க்கு பதிலாக வரும் “good afternoon” அல்லது “good evening” ஐ தான் தேடிக்கொண்டிருந்தது அந்த ஈரம்.

ஈரமும் மழையும் தொடமுடியாத மனவெளியில் நின்று கொண்டு வீரா ஷாராவை கேட்டான், ” இன்னிக்கு good morning அனுப்பலாம் இன்னிக்கு அனுப்புக்கூடாது எதுவும் கணக்கு இருக்கா?”

மனவெளியில் பேசுவதெல்லாம் யாரை சுட்டி பேசுகிறோமோ அவர்களுக்கு கேட்கும் என்று உத்தரவாதமாக சொல்லிவிட முடியாது தானே!

மனதிற்குள் பேசவதெல்லாம் மற்றவர்களுக்கும் கேட்கும் என்று நம்பும் வீராவிற்கும் அந்த சந்தேகம் இருக்கவே செய்தது. அவன் மனதில் பேசுவதெல்லாம் ஷாராவிற்கு கேட்டிருந்தால் அவளும் பேசியிருப்பாள்.சந்தேகங்கள் இல்லாமல்;மனவெளியில் பேசுவதெல்லாம் அவளுக்கு கேட்காது என்றே தீர்மானித்துக்கொண்டான்.

அவன் மனம் பேசுவதெல்லாம் அவளுக்கு கேட்க வேண்டும்; ஆனால், அவளுக்கு மட்டுமே தான் கேட்க வேண்டும். என்ன செய்வது ? அதற்காகவே தான் கவிதைகள் எழுதலானான் வீரா.

மழையே தான் தீர்மானிக்கிறதா!
என்னையும் மண்ணையும்
நனைக்கும் நொடிகளினை
இல்லை விழுந்த பின் முழிக்கிறதா!
நீ தான் சொல்லேன்
அதை மட்டுமாவது.
காயும் ஈரம்
நனையக் கேட்கிறது
மீண்டும் என்னை.

வீராவை மகிழ்ச்சியில் நனைக்கும் மழை ஷாரா. “மழை அதுவாக தீர்மானிக்குமா யாரை இன்று நனைக்க வேண்டுமென்று அல்லது நனைத்த பின் முழிக்குமா? நீயும் அப்படித்தான் தெரியாமல் பேசி விடுகிறாயா? அதை மட்டுமாவது.நீ  சொல்லேன்” என்னும் ஷாராவை நோக்கியே கேள்வியே தான் அந்த கவிதை.

வீராவால் எழுதப்படும் இந்த கவிதைகள் எல்லாம் அவளை நோக்கி எழுதப்பட்டது என்று அவள் புரிந்து கொள்வாள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

“இங்க பார்த்தீங்களா? அன்னிக்கு பேசினப்ப எழுதினது! அப்பறம் இது,அன்னிக்கு ஏன் பேசலை ன்னு எழுதினது”என்று அத்தனையும் ஒரு நாள் ஷாராவிடம் பேச வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு வீராவின் கனவாக இருந்துகொண்டே இருந்தது.

வாழ்க்கையில் சில விஷயங்களை இழந்த பின்னர், இனி இந்த வாழ்க்கையில் கூடுமான வரையில், இதைச் செய்வில்லையே அதைச் செய்யவில்லையே அவர்களிடம் இதை பேசியிருக்கலாமே! என்பது போன்ற எந்த வருத்தங்களுக்கு(regrets) இடமளிக்க கூடாது என்கிற எண்ணம் சிலருக்கு மேலோங்கும்.அது வீராவிற்கும் நடந்தது.

அவள் பேச வேண்டாம்; ஆனால், அவளுக்கு தெரிய வேண்டும். தெரியாமல் இருந்து விடக் கூடாது என்கிற வீராவின் தீவிரமான எண்ணத்தின் வெளிப்பாடு தான் அந்த எதிர்பார்ப்பு.

அவள் பேசாத நாட்களில் எல்லாம் அந்த எண்ணம் இன்னும் தீவிரமானது. ஒரு நாளில் எல்லாம் பேசி விட முடியுமா! அந்த ஒரு நாள் அமைந்தால் மகிழ்ச்சியில் வீரவால் பேசவந்ததை பேசவும் தான் முடியுமா!

ஷாரா, கவிதைகளையோ குட் மார்னிங் களையோ அவள் பார்த்ததற்கோ படித்ததற்கோ எந்த சமிக்கைகளும் யாருக்கும் காட்டாதபடி பார்த்துக்கொண்டாள். வீராவிடம் இருந்து செல்லும் குட் மார்னிங்களை கூட அவள் பார்க்கின்றாளா என்பதும்  அவனுக்கு தெரியாது என்கிற நிலை.

ஷாரா படிக்கின்றாளா என்பது தெரியாமலேயே கவிதைகளை எழுதிக்கொண்டே இருந்தான் வீரா.அதாவது குழந்தை மட்டுமே அந்த பொம்மை கேட்டுக்கொண்டு இருப்பதாக எண்ணி பேசிக்கொண்டே இருந்தது.இப்படிச் சுற்றிக்கொண்டே இருந்த உலகத்தில் வைரஸ் பரவல் இன்னும் தீவிரமானது.தீவிரமான அந்த பரவலின் தீவிரம் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியிருந்தது. தன்னிடம் பேசாத ஷாராவிடம் நலம் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும், அவள் பக்கம் எல்லாம் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இது எதற்கும் வழியில்லாமல் இருந்தான் வீரா.

இயல்பாக போனில் அழைத்து, “எப்படி இருக்க?” என்று கேட்கும் இடத்தில் வீராவும் இல்லை. அப்படி ஒரு இடத்தை வீராவிற்கு கொடுக்கும் இடத்தில் ஷாராவும் இல்லை.

“ரெண்டு பேருக்கும் பொதுவா ஒரு friend கூட இல்லையே! இருந்தா common ஒரு group ல இருந்திருக்கலாம் . என்ன பண்றாங்க? எப்படி இருக்காங்க ன்னு தெரிஞ்சுக்கலாம்.” என்று யோசித்துக்கொண்டிருந்தான் வீரா. மனவெளியில் பேசுவதெல்லாம் ஷாராவிற்கு கேட்குமோ இல்லையோ இறைவன் கேட்டுக்கொண்டே தானே இருப்பார்.

ஷாராவின் திருமண நாள் வந்தது. “how are you?” என்று கேட்க முடியாத இடங்களிலும் கூட வாழ்த்துக்களுக்கு இடம் இருப்பது உண்டு. அன்று வீரா அனுப்பிய வாழ்த்துச்செய்திக்கு பதில் அனுப்பிய சில நிமிடங்களில், ஒரு ஓவியத்தை அனுப்பினாள் ஷாரா, அது ஒரு ஓவியம் என்று அவள் சொல்லும் முன்பு வரை அதை ஒரு graphic image என்று நினைத்துக்கொண்டிருந்தான் வீரா. அந்த ஓவியம் அவனை திகைக்கச் செய்தது.
“stunning ன்னு சொல்லுவாங்க ல” அப்படி இருக்கு என்றான் வீரா.அதற்கு அவளிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. அந்த தருணமும் வீராவின் கவிதையானது.

“எனக்கும் ஓவியங்களை பிடிக்கும் அதான் உனக்கு அனுப்பினேன்” என்று காரணம் தேடிச் சொன்னாள் வீரா. அவளுக்கு ஓவியங்கள் பிடிக்கும் என்பது எப்படி வீராவிற்கு தெரியாமல் இருக்கும்!

காரணங்களை தேடிச்சொல்லும் பொழுதே சொல்லாத காரணங்கள் இருப்பதாக மனம் நம்ப தொடங்கும். வீரா அப்படி நம்பிய நாட்கள் ஏராளம், அவன் மனம் காலத்தில் பின்னோக்கிச்சென்று அப்படி ஒரு நாளில் உட்கார்ந்து கொண்டது.

அந்த நாளில், அந்த கம்ப்யூட்டர் சென்டர்க்கு தாமதமாக சென்ற வீரா, மீதம் இருந்த இரண்டு பெஞ்சுகளில் சாய்ந்து கொள்ள வசதி இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்துகொண்டான். அவனை விட தாமதமாக வந்த ஷாரா வீராவுடன் அதே பெஞ்சில் அமர வேண்டும் அல்லது வசதி குறைவான பெஞ்சில் அமர வேண்டும். அங்கே சில நொடிகள் நின்றுவிட்டு “முதுகு வலிக்குது” என்று தானாய் சொல்லிக்கொண்டே வீரா இருந்த அதே பெஞ்சில் உட்கார்ந்தாள் ஷாரா. அந்த பெஞ்சில் உட்காரும் முன்னரே கொஞ்சமாக அதை எதிர்பார்த்த வீரா அதிமாக அது நடக்காது என்றே நம்பிக்கொண்டிருந்தான். ஒரே பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர்கள் இருவருக்குமான அந்த இடைவெளியில் நான்கு புத்தங்களை அடுக்கலாம். அவர்களுக்கு இடையில் இருந்த அந்த இடைவெளி தான் அவர்களிடம் இருந்த அழகே!

அன்று அந்த நொடியில் இருந்து வீரா நிமிரவும் இல்லை திரும்பவும் இல்லை.அவனுடைய அத்தனை சந்தோஷத்தையும் அவன் உதடுகளுக்கு பின்னால் கட்டி வைத்திருந்தான்.

அன்றைய பாடம் முடிந்து எல்லோரும் கிளம்ப கொஞ்சமாய் பெரு மூச்சு விட்டு சிரித்துக்கொண்டான் வீரா. அதோடு கிளம்பிய வீரா, நிஜத்திற்கு வந்தான்.

அந்த ஓவியம் ஷாராவின் தோழி வரைந்தது. “என் கவிதைக்கு படம் வரைஞ்சு தருவாங்களா?” ஷாராவிடம் கேட்டான். அவன் கவிதைகளுக்கு ஷாராவே படம் வரையவே வேண்டும் என்கிற ஆசையும் கூட அவனுக்கு இருந்தது. அதற்கு ஷாரா மறுத்துவிட்டாள், இந்த முறை அவள் மறுக்கவில்லை. “நான் கேட்கிறேன்” என்று பதிலனுப்பினாள்.

வீரா தேடிக்கொண்டிருந்த அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நட்பு அன்று உதயமானது. ஷாரா ஒரு வாட்சப் குழுவை உருவாக்கி, அவள் தோழியிடம், “Veera is my childhood friend” என்று அவள் தோழியிடம் அறிமுகம்  செய்து வைத்தாள்.

“you know what? we are childhood friends” அந்த அறிமுகம் தந்த பரவசத்தோடு அத்தனை சந்தோஷத்தையும் கபினியிடம் கொட்டினான் வீரா. அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியுமென்றாலும் கூட அவர்கள் நண்பர்களாக இருக்கவில்லை. வீரா மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் ஷாரா மனதிலும் இருந்திருக்கும் என்பதும் நிச்சயம் இல்லை. அப்படியிருக்கையில் ஷாரா தன் தோழியிடம், “Veera is my childhood friend” அறிமுப்படுத்தியது வீராவிற்கு அன்று புதுமுகத்தை கொடுத்தது; அந்த முகமெல்லாம் உதடுகளால் மறைக்க முடியாத புன்னகைகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

நினைக்கும் பொழுதுகளிலும் கிடைக்கும் பொழுதுகளிலும் அந்த குழுவில், அவன் எழுதிய கவிதைகளை எல்லாம் ஒவ்வொன்றாய்  விளக்கி கொண்டிருந்தான் வீரா.

“அவ்வளவு பெரிய மெசேஜ் படிக்கவா போறாய்ங்க!” எல்லா நேரங்களையும் போல் இந்த சந்தர்ப்பத்திலும் வீராவை அவநம்பிக்கை தொற்றிக்கொண்டது.

“குரூப் ல மெசேஜ் எல்லாம் பாப்பீங்களா” வீரா ஷாராவிடமே கேட்டான்.

“yes! I will! I could relate the meaning😊” அளந்து பேசும் ஷாராவிடம் இருந்து அதியசமாய் வந்த முழுவாய்க்கியம் அது. ஆனாலும் அவள் சொன்னதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்! வீராவிற்கு புரியவில்லை.

“I could relate the meaning ன்னா என்ன டா?  தெரியும் ன்னு அர்த்தமா தெரியாது ன்னு அர்த்தமா” அந்த மெசேஜ் பார்த்த மகிழ்ச்சியோடு கபினியிடம் கேட்டான் வீரா.

“தெரியும் தான் மயிலு!” கபினி சொன்னாள்.

“பொதுவா கூட அவங்க life ல அது மாதிரி நடந்து இருந்து அதை கூட நினச்சு சொல்லிருக்கலாம் ல அப்ப தெரியாது தான?” ஷாராவால்  வீராவிற்குள் அவனுக்குள் ஏற்படும் அலைவுகளை  எல்லாம் வீரா கடந்தும் இடம்; வீரா கொட்டும் இடம் கபினி.

“நீ முதலை கொஞ்சம் கீழ இறங்கு சீலிங் தட்டுது பார் ; கீழ இறங்கிட்டு;பேசாம போன் பண்ணி அங்கையே கேளு!”என்று கபினி வீராவை கிண்டலடித்தாள் இல்லையென்றால் அன்று முழுதும் அப்ப தெரியும் அப்ப தெரியாது என்கிற பாட்டை பாடிக்கொண்டிருந்திருப்பான் வீரா.

“I could relate the meaning” அதே புன்னகையோடு அந்த மெசேஜை மீண்டும் படித்து விட்டு , “சரி விடு! could relate the meaning என்ன அர்த்தமோ இருக்கட்டும்! ” என்று முடித்த வீரா, இன்னும் சீலிங் ஐ தொட்டுக்கொண்டு தான் இருந்தான்.

😊😊😊பொம்மை மொழியில் பேசும் பொம்மை
புரிந்தும் புரியாமலும் பதில் பேசும் குழந்தை
இரண்டும்,
உலகம் புரிந்து கொள்ளா கவிதை !

உலகம் புரிந்து கொள்ளா கவிதை இரண்டும் பேசும் நொடியில்                                                                                      காலம் எழுதும்
பொம்மை காதலை
புரியா கவிதைகளாய்…!

அந்த பொம்மை காதல் கவிதைகளுக்கு ஓவியம் வரைவதற்கு தான் எல்லா விளக்கங்களையும் ஷாராவும் இருந்த குழுவில் ஷாராவின் தோழிக்கு கொடுத்துக்கொண்டிருந்தான் வீரா.
வீரா எழுதும் இந்த கவிதைகள் எல்லாம் வீரா எழுதும் அர்த்தத்திலேயே தான் ஷாராவிற்கு புரிந்ததா? அப்படி புரிந்து இருந்தால் அவளுக்கு புரிந்து தான் இருக்கிறது என்பதை வீரா தெரிந்துகொண்டானா?

தொடர்ந்து படியுங்கள்.

Error happened.
Exit mobile version