கதிர் விஜயம்

பொம்மை காதல் -34; எதிர்பாராத சந்திப்பு!

இராசி பலனில் எதிர்ப்பாராத சந்திப்பு என்று இருந்த நாட்களிலெல்லாம்
எதிர்பார்த்திருந்தேன் உன்னை
உன்னை எதிர்பார்த்ததால் என்னவோ
ஏமாற்றத்தில் முடிந்தது எதிர்ப்பாராத சந்திப்புகள்!

2012 இல் வீரா எழுதிய கவிதையை அவனே வாசித்துக்கொண்டு இருந்தான். நீல நிற சட்டையுடன் வீரா இருந்த அறைக்குள் வந்த ஒருவர், “இன்னிக்கு Discharge பண்ணிக்கலாம் ன்னு சொல்லிட்டாங்க சார்! நீங்க எப்ப ரெடியோ? நான் இங்க reception ல தான் இருப்பேன்; வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அதே அறையில், நீல நிற திரையை விளக்கிவிட்டு கபினியை பார்த்த வீரா, “வீட்டுக்கு போலாம்!” என்று புருவங்களை மேலே உயர்த்தி தலையாட்டிக்கொண்டே சொன்னான்.கொஞ்சமாய் புன்னகைத்து இமைகளை மூடி திறந்தாள் கபினி. “தூங்கிட்டாளா?” என்று கேட்டபடி குழந்தையை வாங்கிக்கொண்டார் கபினியின் அம்மா.

வீராவின் போனில் இருந்து வரிசையாக அழைப்புகள் பறந்தது.

“ஸ்கூல் க்கு போயிட்டு வந்தோன வண்டி அனுப்பி விடுப்பா” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு போனை வைத்தான். அவன் இடது பக்க கால் சட்டைப்பையில் இருந்த போன் அதிர்ந்தது,  கையில் எடுத்து பேர் பார்த்தான்,”குமார் அண்ணா”.

வீரா: ஹலோ! சொல்லுங்க பாஸ். நான் உங்களுக்கு போன் அடிச்சு ஒரு மணி நேரம் ஆச்சு!

குமார்: கோவில் இருந்தேன்’ப்பா! சொல்லு என்ன?
வீரா: Discharge பண்ண சொல்லிட்டாங்க எப்ப புண்ணியதானம் வச்சுக்கலாம்?
குமார்: பாப்பா எப்படி இருக்கு?
வீரா: எல்லாம் நல்லா இருக்காங்க!
குமார்: நீயே நாள் பார்க்க வேண்டிய தான’ப்பா?
வீரா: சரி! உங்க மாமன் மக’ என்னிக்கு காது குத்து வச்சு இருக்கு ?
குமார்: யாரு? உன் தங்கச்சி தானே? ஞாயிற்றுக்கிழமை…
வீரா: தெரியும்ம்ம்ம்… அதான் வெள்ளிக்கிழமை புண்ணியதானம் வச்சுக்கலாம்ன்னு இருந்தேன். இருந்தாலும் கேட்போம் ன்னு கேட்டேன்.சரி பாஸ்?

குமார்: சொல்லு?

வீரா:பையன் சைடு குலசாமி கோவில் ல தான் காது குத்துவாங்க; உங்க மாமா எதுக்கு இந்த பக்கம் இழுத்துட்டு விட்டார்?
குமார்: உங்க சித்தப்பாட்ட நீ கேட்க வேண்டியது தான? அது ஏதோ வேண்டிகிட்டாராம் ப்பா!
வீரா:  சரி ! உங்க மாமாவ என்னிக்கு பார்க்கப் போகலாம்?
குமார்: யாரு உங்க பெரியப்பாவையா?
வீரா: உங்களுக்கு முதல்ல மாமா! அப்பறம் தானே எனக்கு பெரியப்பா
குமார்: என்னிக்கு ஊருக்கு போற? ஏன் அலைஞ்சுக்கிட்டு! அவரை மறுபடி ஹாஸ்பிடல்லை வச்சு இருக்கிறதா சொன்னாய்ங்க; வீட்டுக்கு கூட்டு வந்துட்டாய்ங்களா தெரில உங்க சித்தப்பாட்ட கேட்கனும்.
வீரா: கார்டு ஓகே வா? இருங்க பாஸ் வரேன் . (மருத்துவ கட்டணங்களை செலுத்திக்கொண்டிருந்தான் வீரா)

வீரா: சொல்லுங்க பாஸ்! என்ன பேசிட்டு இருந்தோம்? ஹான்! போன தடவையும் பார்க்கல. அடுத்து நான் எப்ப வருவேன் தெரியாது….. சரி! கேளுங்க யாரெல்லாம் வரீங்க? உங்க மாமா வராரரா ன்னு கேளுங்க
குமார்: அந்த சித்தப்பா கிட்டையும் நீயே பேசுறது!
வீரா: நீங்க பேசிட்டு சொல்லுங்க! நீங்க கண்டிப்பா வாங்க எனக்கு உங்க பெரிய மாமா வீடும் தெரியாது; உங்க சின்ன மாமா; செல்ல மாமாகிட்ட சண்டை வேற போட்டு வச்சு இருக்கேன்.புதன் கிழமை போலாம். உங்களையும் என்னையும் சேர்க்காம ரெண்டு பேர் வரலாம்.

 

குமாரிடம் பேசிய படியே discharge செய்வதற்கான எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு அறையை நோக்கி நடந்த வீரா, குமாரிடம் பேசி முடிப்பதற்கும் அறைக் கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது.

“யாரு?” கபினி கேட்டாள். “குமார் அண்ணா! உமா ராணி இன்னிக்கு கண்ணுலையே படலைப்பா! நீ போட்டோவை அப்பவே கேட்ருக்கலாம்! ப்ச்! இல்ல நம்மை போன் ல எடுத்திருக்கலாம்! ஷாரா கிட்ட இப்ப எப்படி காட்டுறது!” கபினி கேட்டதற்கு பதிலளித்துவிட்டு இத்தனையும் சலிப்புகளையும் கொட்டினான் வீரா.

அசதியிலும் வீரா செய்யும் அலப்பறையிலும் சோர்வாய் “அது வாங்குவோம்ம்ம்! என்னிக்கு சென்னை போறீங்க?” என்று கேட்டுக்கொண்டே பெரு மூச்சுவிட்டாள் கபினி.

“என்ன செய்யுது?” வீரா கேட்டதற்கு அழுத்தமாய் “நீ சொல்லு” என்றாள் கபினி.

“புதன்கிழமை காலையில் போயிட்டு night வந்துடனும்; அம்மா இருப்பாங்களா?”  என்று வீரா கேட்டதற்கு “அம்மா கிளம்புறாங்க வெள்ளிக்கிழமை வருவாங்க” என்றாள் கபினி.

அன்று மாலை மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். செவ்வாய்கிழமை இரவே குமார் வீராவின் வீட்டிற்கு வந்துவிட்டார், விடிந்தால் புதன் கிழமை, வீரா சரியாக தூங்கவில்லை. ஆனால், நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விட்டான். அவனிடம் எப்போதும் பெரிதாக எந்த திட்டமிடலும் இருந்ததில்லை; இருப்பதில்லை. எல்லாம் கால நேரத்திற்கு ஏற்றாற்போல்  எடுக்கும் முடிவுகள் தான். அப்படியாக தான் இந்த பயணமும்; இரண்டு நாட்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.

குளித்துவிட்டு அறையில் இருந்து வெளியில் வந்தான் வீரா. கீழே மன்றம் வெளிச்சமாய் இருந்தது. குமார் எழுந்துவிட்டார் போலும் என்று நினைத்துக்கொண்டே அவன் கீழே இறங்க, “எவ்வளவு நேரம் ப்பா” படிகளில் இறங்கி கொண்டிருந்த வீராவைப்  அண்ணாந்து பார்த்து வீராவின் அம்மா கேட்டார். “நீங்க என்ன பாஸ்! எந்திரிச்சுக்க மாட்டிங்க நினைச்சேன்! கிளம்பிட்டீங்க! அலெக்ஸ் அண்ணா வந்துட்டாரா?” வீராவின் கேள்விக்கு, “அவன் கிளம்பிட்டான் அப்பவே அலெக்ஸும் வந்துட்டாரு.  நீ சீக்கிரம் கிளம்பி சீக்கிரம் வரப்பாரு” என்றார் வீராவின் அம்மா.

கதவைத் திறந்து அலெக்ஸை பார்த்ததும் பெரிய புன்னைகையோடு “அண்ணே! சீக்கிரமே வந்துட்டீங்களா? சாரி’ண்ணா! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றான் வீரா.

“பரவலா ‘ண்ணே இப்ப தான் வந்தேன் என்று சொல்லிக்கொண்டே” அலெக்ஸ் வண்டியில் ஏறினார்.

மாடியில் முற்றத்தில் நின்றுகொண்டு, “ஏன் வீட்டுக்காரர் எங்கையும் காணாம போகாம பாத்துக்கோங்க’ண்ணா”  விளையாட்டாக கபினி குமாரிடம் சொன்னதன் அர்த்தம் வீராவிற்கு புரிந்தது.

வழியும் தன் புன்னைகையையும் குமாரையும் கண்ணாடியில் பார்த்து, “சரி கிளம்பலாம் பாஸ்!” என்றான் வீரா.

“பாத்துகிறோம் பாத்துகிறோம்!” என்று குமார் சொல்ல,கொஞ்சமாக சக்கரங்களை சுழற்றி நகர்ந்தது அந்த வண்டி.

“சரி! வரோம் ப்பா!” வீராவும் குமாரும் விடைபெற்றுக்கொண்டார்கள்.

நிலவும் கூட விடைபெறத் தயாராக இருந்தது. சிறிது நேரத்தில் அவர்கள் நெடுஞ்சசாலையை அடைந்தார்கள். சாலை விளக்குகள் இன்னும் எரிந்துகொண்டிருந்தது.

“என்னோட ராசி மட்டும் எல்லாருக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்
எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே…
புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே…
ஆகாயத்தைத் தேடி நான் போறதில்லே பாரு
ஆண் பிள்ளை சிங்கம் அட என்னைப் போல யாரு…
நான் உள்ளதைச் சொல்லுறேன்
சொன்னதைச் செய்யுறேன்
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே… எட்டு ஒன்னு வச்சுப்புட்டா ” மாவீரன் திரைப்பட பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

பதினைந்து பாடல்கள் முடிந்திருக்கும். பதினைந்தும் ரஜினி படப்பாடல்கள்.

“என்ன ரஜினி பாட்டு மட்டும் ஓடுது!?” பின்னால் இருந்த குமார் அப்போது தான் வீராவை கவனித்தார். வீரா ரஜினியின் பாடல்களாக தேடித் தேடி வைத்துக்கொண்டிருந்தான்.

மெதுவாய் எழுந்து சோம்பல் உதறிக்கொண்டிருந்தான். பனியில் சூரியன் நனைந்தானோ அல்லது சூரியன் பணியினை நனைத்தானோ நீளும் அந்த சாலை தொடும் வானத்தை பனி மூடியிருந்தது.

அத்தனை பனியையும் போனில் அள்ளிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. வீராவின் அந்த ஆசை ரஜினி பாடல்களுக்கு நிறைவை கொண்டுவந்தது. அலெக்ஸ் பாடல்களை தேர்வு செய்ய ஆரம்பித்தார்.

“10:45am தாம்பரம்” மணி பார்க்க வீரா எடுத்த அலைபேசி காட்டிய இடம். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வீராவின் பெரியப்பா வீட்டை நெருங்கிவிட்டார்கள். சாலை ஓரத்தில் ஒருவர் கையை உயர்த்தி அசைத்த படி நின்றுகொண்டிருந்தார்.

“அங்க ஒருத்தர் நிக்குறாரு பாருங்க அங்க தான் அண்ணா!” குமார் அலெக்சிடம் சொல்ல, “யாரு பாஸ் எங்க நிக்கிறாங்க?”சாலையில் தேடிக்கொண்டே குமாரிடம் வீரா கேட்டான்.

“உங்க சித்தப்பா தான்’ப்பா நிக்கிறாரு!” என்று குமார் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே வண்டி அந்த சித்தப்பாவை நெருங்கி விட்டது.

” இதான்’ப்பா வீடு” அண்ணன் வீட்டைக் காண்பித்து விட்டு, “வண்டியை இப்படி நிப்பாட்டிக்கோங்க” என்று சொல்லி குமாரிடம் அந்த சித்தப்பா விடைபெற்றுக்கொண்டார்.

மணி-11:15. காரில் இருந்து இறங்கினான் வீரா. அதே அந்த காற்று; அதே அந்த வானம்; அவளும் இருக்கும் அதே அந்த சென்னை.சென்னையும் கூட இப்போதெல்லாம் அழகாக இருக்கின்றது வீராவிற்கு.

வேலை நாள், நிச்சயமாக சந்தித்துக்கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. இப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தான் வீரா. வீராவின் பெரியப்பாவிடம் நலம் விசாரித்து விட்டு 12 மணிக்கு அங்கிருந்து கிளம்பினார்கள்.நாம் எதிர்பார்த்திருக்கும் விஷயங்களை நாம் எதிர்பாராத பொழுது காலம் கொண்டு வரும். அன்று என்ன நடந்தத!?

“பாஸ் அடுத்து எங்க உங்க மாமா வீட்டுக்கு போகணுமா?” என்றான் வீரா.

“அட வா’ப்பா!”என்று வீராவின் சித்தப்பா வீட்டிற்கு வழி சொல்லிக்கொண்டிருந்தார் குமார். அப்போதும், வீரா “சரி! நம்ம வெளிய சாப்டுக்கலாம்” அவசரமாக கிளம்ப வேண்டும் என்கிற சாக்கில் வீராவின் வீம்பு வெளிப்பட்டது. ஆனாலும் உள்ளூற அவன் மனம் அங்கு இன்னும் அதிக நேரம் அவனை இருக்கச் சொன்னது.

“reached chennai” 11 மணிக்கு அறிவித்து அவன் வாட்ஸப்பில் போட்ட ஸ்டேட்டஸ் ஐ யாரெல்லாம் பார்த்து இருக்கின்றார்கள் என்று பார்த்தான். யாரும் பார்க்கவில்லை. ஐந்து பேர் மட்டும் பார்க்கும் படி வைக்கப்பட்ட அந்த அறிவிப்பில் அவன் தேடியது ஒரு பெயரை மட்டும் தான்.

குமார் சாப்பிட உட்கார்ந்து விட்டார். “வீரா! உட்காருப்பா” என்ற குரல் கேட்டதும் “இந்தா வரேன் சித்தி” என்று வீராவும் உட்கார்ந்தான் . சாப்பிட்டு முடித்தார்கள். “தாத்தா போட்டோ கேட்டான்’ப்பா; அவங்க ஆல்பத்துல இருக்கிறது பழசு’ன்னு உங்கள்ட்ட வாங்கிக்க சொன்னேன்” குமார் மேலும் நேரத்தை கடத்தினார்.

“சரி! வாங்க,  போய் உங்க தங்கச்சிய, அப்பறம் உங்க தம்பியை பார்த்துட்டு சீக்கிரம் கிளம்புவோம்” என்றான் வீரா.

வீரா,குமார்,வீராவின் சித்தப்பா மூவரும் கிளம்பி வீராவின் அண்ணன்கள் வீடு; தங்கை வீடு என்று அருகருகே இருந்த ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அளவளாவிக்கொண்டிருந்தார்கள். வீராவின் போனில் சார்ஜ் குறைந்து கொண்டே இருந்தது அவன் சார்ஜரும் எடுத்து வரவில்லை. எந்த வீட்டிலும் அவர்கள் அதிகம் நேரம் இருக்கவும் இல்லை. அளவளாவுதல் எல்லாம் முடிந்து மீண்டும் சித்தப்பா வீட்டிற்கு வந்தார்கள். அங்கிருந்து காதுகுத்து வேலைகளுக்காக சித்தப்பா சித்தி இருவரும் வீராவுடன் ஊருக்கு கிளம்பத் தயாராக, சார்ஜ் போட்டுவிட்டு காத்துக்கொண்டிருந்தான் வீரா.

சித்தப்பாவும் குமாரும் தாத்தாவின் போட்டோவை பிரதி எடுக்க சென்றிருந்தார்கள். சார்ஜ் ஏறியவரை போதும் என்று போனை எடுத்துக்கொண்டு காரில் ஏறினான்.அவர்கள் வந்ததும் கிளம்புவதற்கு காரோடு வீராவும் அலெக்ஸும் தயாராக இருந்தார்கள். அத்தனை நேரம் திறக்காத போனை அந்த காத்திருப்பின் பொழுது திறந்தான் வீரா.

“Come to Home! share your location, will let you know if you are near” ஷாராவிடம் இருந்து மெசேஜ் வந்து இருந்தது.

வீரா, பெரியப்பா மகன் வீட்டில் அளவளாவிக்கொண்டிருந்த பொழுதே அந்த மெசேஜ் வந்து இருக்கின்றது.

அதுவரை அத்தனை நீளமாய் இருந்த வீராவின் அந்த நாள் வேகமாக சுருங்கியது. “இவ்வளவு நேரம் மெசேஜ் பார்கலையே! நேர’ஆச்சு! ப்ப்ச்”

“இன்னிக்கு என்ன உங்க ஊர்ல எல்லார்க்கும் work from home ஆ ? அண்ணன் தங்கச்சி எல்லாரும் வீட்ல இருக்காய்ங்க; எல்லாம் பெரியப்பா சித்தப்பா பசங்க” என்று சொல்லிவிட்டு லொகேஷன் அனுப்பி வைத்தான் வீரா.

அவளுடைய லொகேஷன் screenshot வீராவிற்கு வந்தது. “ஆனா இப்ப கிளம்ப போறேன்; மெசேஜ் லேட்டா தான் பார்த்தேன்” செய்வதறியாமல் வீரா அனுப்பிய பதில்.அதை அனுப்பும் பொழுதே வீராவின் மனம் பின்னோக்கி சென்றது.

பள்ளிக்காலத்தில் கணக்கு பாடம் படிக்க அழைத்தாள்; வீரா செல்லவில்லை. கல்லூரி காலத்தில், ஷாராவின் வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்பிய பொழுது அழைத்தாள்; அப்போதும் வீரா செல்லவில்லை. இந்த காட்சிகள் எல்லாம் வீராவின் மனதில் நிழலாடியது.

அவனுக்குள் ஒரு தயக்கம், “இப்படியே ஊர் திரும்புவதா? இல்லை, அவளைச் சந்தித்துவிட்டு ஊர் திரும்புவதா?” என்கிற குழப்பம்.

நீண்ட காலம், நம் மனதிற்குள் நாம் கொண்டு இருக்கும் எண்ணங்கள் ஈடேறும் தருணத்தில் நாம் இப்படி குழம்பிப்போவதும் நடக்கவே செய்யும். ஆனால், இன்று இல்லையெனில்;  இனி காலம் அவர்களை எப்போது சந்திக்க வைக்கும்? இந்த கேள்வி வீராவை ஒரு தீர்மானித்திற்குத் தள்ளியது.

“To Airport?” ஷாராவிடம் இருந்து வந்திருந்த அடுத்த மெசேஜ்க்கு “நிவாஷினியோட காரை எடுத்துக்கிட்டு வந்தேன்” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, “அண்ணா, அந்த கடையில் ஏதும் நல்ல cream biscuit, கேக் இப்படி ஏதும் இருந்தா வாங்கிட்டு வாங்க” என்று அலெக்ஸை அனுப்பி வைத்தான்.

“ஊருக்கா?” ஷாராவிடம் இருந்து அடுத்த மெசேஜ் வந்தது. “வேலை இல்லையா இல்லை? work from home ஆ ?” என்கிற வீராவின் கேள்விக்கு “work from home”என்று பதில் வந்தது.

“அவைங்கள்ட மேரி கோல்ட் தான் இருக்காம்’ண்ணே! ” என்று வந்து நின்றார் அலெக்ஸ் . “ஏதும் வாங்காம எப்படி!” மீண்டும் குழப்பம். ஆனால், ‘இனி எப்போது?’ என்கிற கேள்வி அவன் தீர்மானத்திற்கு வலு சேர்த்தது.

“Coming” வீராவிடம் இருந்த வந்த மெசேஜைப் பார்த்தாள் ஷாரா.

நின்று நிதானமாக இது தான் வழி என்றெல்லாம் அவன் கிளம்பவில்லை,

“சரி! வண்டியை எடுங்க ஒரு இடத்துக்கு போய்ட்டு வருவோம்!” வீரா வழி கேட்கவில்லை. குமாரிடம் சொல்லவுமில்லை, கிளம்பிவிட்டான். அவள் இருக்கும் திசை தெரியும், இடம் தெரியாது, வலம் தெரியாது; வழி தெரியாது. “மீனாட்சி ஹாஸ்பிடல் மேப் இல் பக்கமாக இருந்துச்சு இன்னும் காணோம்” வீரா திசை தெரியாமல் வண்டியை நிறுத்தச் சொன்னான்.

தலை கால் புரியாமல் இருந்த வீரா  அவள் அனுப்பிய இமேஜை பார்த்து “அண்ணா வண்டிய திருப்புங்க என்றான்” வந்த வழியில் அவர்கள் திரும்பிச்சென்றார்கள்.

“சரியான வழில வரோம்ம்மா தெரில”
“took wrong route”

வழி நெடுகிலும் ஷாராவிற்கு வீராவிடம் இருந்து மெசேஜ் பறந்தது.

தாமதமாகவே  தான் வீராவிற்கு புரிந்தது அந்த இமேஜ் இல் அவன் கவனித்தது, சித்தப்பா வீட்டின் அருகே கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் முகவரி என்று.

அவர்கள் திரும்பியதும் நல்லதாகி போனது,அங்கே அவன் கண்ணில் ஒரு கடை தென்பட்டது. “இங்க எங்கையும் ஒரு நல்ல கடை இல்லையா?” அங்கு இருந்த எந்த கடையிலும் அவனுக்கு திருப்தி இல்லை. ஒரு வழியாக சில இனிப்புகளை வாங்கிக்கொண்டு, “location அனுப்புங்க”  என்று மீண்டும் கேட்டான்.

இமேஜாக இல்லாமல் அவள் இருக்கும் லொகேஷன் வீரா போனை வந்தடைந்தது. “நம்ம போன வழி correct தான். இன்னும் போகணும் வண்டியை எடுங்கண்ணா”அத்தனை நேரம் வீணான ஒரு பரபரப்பு வீராவிடம் இருந்தது.

புதிதாக ஒரு interview க்கு செல்லும் போது, சிறியதாக ஒரு நம்பிக்கை இருக்கும், புதிதாக ஒரு வேலை கிடைக்கப்போகிறது என்கிற  சந்தோசம் ஒரு ஓரமாய் இருக்கும், அங்கு யாரைச் சந்திக்க போகிறோம்? என்ன பேச போகிறோம்? என்கிற கேள்விகள் எல்லாம் இருக்கும். இது போன்ற ‘how it would be ?’ ரக meeting கள் எப்போதும் ஒரு பரவசத்தை தரும். அப்படியான eபரவசத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத பரவசத்துடன் அந்த பரபரப்பும் சேர்ந்துகொண்டது.

குமாரிடம் இருந்து அழைப்பு வந்தது, “இந்தா! வரேன் பாஸ் வெயிட் பண்ணுங்க” என்று போனை வைத்தவனின்  முகமெல்லாம் புன்னகை. அத்தனை நேரமில்லாமல் அவன் தனியாக இருந்த நேரத்தில், அவன் அந்த மெசேஜை கவனிக்க வேண்டும் என்று இருந்திருக்கின்றது. குமாரை விட்டுவிட்டு கிளம்ப வேண்டும் என்று இருந்திருக்கின்றது. ஏதுமே திட்டமிடப்படாத ஒன்று.

“இந்த left ண்ணா” வண்டி சாலையில் இருந்து குறுகிய தெருவிற்குள் நுழைந்தது.

“வந்துட்டேன்!” வீராவின் மெசேஜை பார்த்துவிட்டு அவனை அழைத்தாள் ஷாரா.

“அங்க ஒரு swift இருக்கே அந்த வண்டியா?”வீரா தேடிக்கொண்டிருந்த ஷாரா வீராவை தேடிக்கொண்டிருந்தாள்.

ஷாராவின் குரல் அத்தனை சாதாரணமாய் வீராவின் காதுகளில் ஒலிப்பதில்லை. அப்படி ஒலிக்கும் தருணங்களில் வீராவால் சாதாரணமாக இருக்க முடிவதில்லை. “Baleno” சிரித்துக்கொண்டே எஸ்.பி.பி. பாடுவது போல் சிரித்துக்கொண்டே சொன்ன வீரா, சுற்றியும் தனி வீடு ஒன்றை தேடினான். ஷாரா இருப்பது தனி என்றே தான் அவள் சொன்னதாக சொன்னது அவன் நினைவு.

“அந்த swift கிட்ட வா” ஷாராவின் அறிவுறுத்தல்கள் அலெஸ்க்கு கடத்தப்பட்டது.

ஷாராவிடம் பேசிக்கொண்டே காரை விட்டு இறங்கினான். மேலே கருப்பு வண்ணத்தில் இருந்த இரும்பு கட்டங்களுக்கு பின்னே ஷாரா.இமைக்கும் பொழுதளவில் மட்டுமே அந்த ஜன்னலை அவனால் பார்க்க முடிந்தது.ஷாராவின் பெயரையும் கூட அவனால் இமைக்கும் பொழுதளவிலே தான் பார்க்க முடியும் அங்கே ஷாராவே நின்றுகொண்டிருந்தாள்

“கீழ வரீங்களா? நான் இப்படியே கிளம்புறேன்”அவள் ஆரத்தி தட்டு எடுத்துக்கொண்டு வாசலுக்கு வருவாள் என்று நினைத்தானோ தெரியவில்லை. அத்தனை தூரம் வந்த பிறகும் அவனுள் அத்தனை தயக்கம்.

“சும்மா மேல வாங்க சார்” என்று கொஞ்சமாக நக்கலாக இழுத்தாள்.”சரி எந்த floor ” என்றான். “first floor” என்றதோடு இருவரும் போனை வைத்தார்கள்.

“இந்த ஊர் ல இது ground floor ல?” வீராவின் உயரத்திற்கு ஒரு லிப்ட். இரண்டு வீரா உயரத்தில் இருந்த முதல் மாடி. லிப்ட் கதவுகள் திறந்ததும். அங்கே மற்றொரு இரும்பு கதவும் திறந்தது. கதவை திறந்த ஷாரா ஒரு நொடி கூட நிற்கவில்லை. வீரா உள்ளே வருவதற்குள் உள்ளே சென்றுவிட்டாள்.

அவனுக்கு அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, அவன் பார்க்கும் எதுவும் அவன் மனதில் பதியவில்லை.இதற்கு பெயர் தான் தலை கால் புரியாமல் இருப்பது. அங்கே உள்ளே நுழைந்து இரண்டடிகள் மட்டுமே வைத்த வீரா அதைத்தாண்டி நகரவில்லை.அங்கிருந்த படங்களுக்கெல்லாம் அவன் கண்கள் சென்றது. அந்த திருமண காட்சியை அவன் முன்னமே பார்த்து இருக்கின்றான். இதில் இருக்கும் இரண்டு படங்களில் யார் ஷாராவின் அப்பாவாக இருப்பார்கள் என்று வீரா பார்த்துக்கொண்டு இருந்த பொழுது,  அவனுக்கு வலது பக்கம் இருந்த அறையில் வெளியில் வந்த ஷாரா, வீரா பார்த்துக்கொண்டிருந்த படங்களை அவளும் பார்த்தபடி தண்ணீரை நீட்டினாள் ஷாரா, வீராவின் வலது பக்கவாட்டு பார்வையில் அவள் வந்து நிற்பது தெரிந்து அவன் கண்களை அவள் பக்கம் திருப்பாமல் நேராக டம்ளருக்குள் இருந்த தண்ணீரின் மேல் பார்வையை திருப்பி அதை வாங்கிக்கொண்டு  “கடை இங்க ஒன்னும் பிடிக்கலை வழி ல இருந்த கடைல வாங்கினேன்”என்று அந்த இனிப்புகளை அவளிடம் கொடுத்தான்.

அந்த பரிமாற்றம் நடந்தது தான் தாமதம். “எதுக்கு இது!” என்று கேட்டபடியே அதைவாங்கிக்கொண்டு ஷாரா அங்கிருந்து நகர்ந்து அவள் நின்றுகொண்டிருந்த ஜன்னல் இருந்த பக்கம் சென்றாள்.அந்த அறையில் ஒரு மேசையில் ஒரு லேப்டாப் பக்கம் வீராவின் கவனம் சென்றது.

“என்ன உங்களுக்கு மட்டும் தான் ஒர்க் பிரம் ஹோமா? அவரை காணோம் ?”யாரையும் காணாத வீராவின் கேள்வி அது.

“ப்ச்! அவங்களுக்கு வேலை. தம்பி அம்மாவோட தூங்கிட்டு இருக்கான்”  என்று சொல்லிக்கொண்டே  லேப்டாப் மேசைக்கு எதிரே ஒரு நாற்காலியை வீராவிற்காக இழுத்து வைத்துவிட்டு எதிரே அந்த லேப்டாப் இருந்த மேசையின் பக்கம் ஏற்கனவே இருந்த நாற்காலியில் அவள் உட்கார்ந்தாள்.

“பாப்பா எப்படி இருக்கு? கபினி தானே? கபினி எப்படி இருக்கு?”

இந்த கேள்விகளை காதில் வாங்கிக்கொண்டு, தன் புன்னகைகளை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அனைத்துக்கொண்டிருந்த வீரா. மொத்தமும் குடித்து முடித்து, வலது காலை தரையில் வைத்து அழுத்தி, அந்த நாற்காலியோடு கொஞ்சம் பக்கமாய் அந்த லேப்டாப் இருந்த மேசை அவன் கைக்கு எட்டும் அளவில் நகர்ந்து, “கபினியே தான்! எல்லாம் நல்லா இருக்காங்க!” என்று சொல்லிக்கொண்டே வலது கையில் இருந்த அந்த டம்ளரை அந்த மேசையில் லேப்டாப் அக்கிரமிக்காத முனையில் வைத்துவிட்டு; கீழே, காலை அழுத்தி அவன் அமர்ந்திருந்த நாற்காலியை பின்னால் தள்ளிக்கொண்டு, “என்ன வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?” என்று சொல்லி வலது காலையும் தரையில் இருந்து எடுத்து அந்த நாற்காலியின் உருளை சக்கரங்கள் மீது வைத்துக்கொண்டு நிமிர்ந்து அவள் திசை பார்த்தான்.

வீராவின் கேள்வி ஷாராவின் காதை தொட்டதும் அந்த லேப்டாபிற்கு பின்னாலிருந்து இடது பக்கமாக முகத்தை சாய்த்து வீராவைப் பார்த்து, புருவங்களை உயர்த்தி கண்களை பெரிதாக்கி, “அப்படியா?” என்றாள்.

அத்தனை அருகில் இருந்தும்; இத்தனை நொடிகளுக்குள் அத்தனை நடந்தும்; அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவேயில்லை. எப்போதும் அவர்கள் அருகில் இருக்கும் தூரம் இப்போதும் அவர்கள் நடுவில் இருந்தது.

அவள்,  “அப்படியா?” என்று கேட்ட அந்த ஒரு இமைப்பொழுதில், வீராவின் கண்களில் ஷாராவின் கண்களும் ஷாராவின் கண்களில் வீராவின் கண்களும் இருந்தது. வீராவின் கண்களிடம் இருந்து அந்த நெற்றியும் சின்ன பொட்டும் கூட தப்பவில்லை. அவன் எப்போதும் தேடும் சந்தனம் மட்டும் தான் அங்கு  இல்லை.அந்த நெற்றி; அந்த சின்ன பொட்டு ; அந்த கண்கள் எல்லாம் சேர்த்து மொத்தமாய் வீராவின் கண்களை நிறைத்து இருந்தது. இப்போது அவன் வலது பக்கத்திலோ இடது பக்கத்திலோ அமிர்தமே கொண்டு வந்து யாரும் நின்றிருந்தாலும் அவனுக்கு தெரிந்திருக்காது.இமைக்கும் பொழுதிலும் அரை பொழுது மட்டுமே அந்த நான்கு கண்களும் சந்தித்துக்கொண்டிருந்திருக்கும்.

சரி! வீரா இனி  என்ன பேசுவான்!

வீராவின் கால்கள் தரையில் இல்லை , வீராவின் வானம் தரையில் இருந்தது.

எதிரில் வானம்

நானும் இருந்த அறையில்

என் கால்கள் படாத தரையில்!

கவிதை போன்ற அந்த தருணம் வீராவின் கவிதையாகவும் ஆனது. எத்தனை பக்கம் சென்றாலும் தூரமாகவே இருக்கும் வீராவின் வானம் தரையில் இருக்க வீரா தரை தொடாமல் பறந்து கொண்டிருந்தான்.

” work from home ஜாலியா இருக்கீங்க! ” என்ன பேசுவது என்று தெரியாமல் வீரா உதிர்த்த வார்த்தைகள்..

“ப்ச்! மீட்டிங் நீ வந்த’ன்னு பேசிட்டு இருக்கேன்!” ஷாரா லேப்டாப்பை பார்த்துக்கொண்டு பதிலளித்தாள்.

“சரி! அப்ப நான் கிளம்புறேன்! நீங்க வேலையை பாருங்க” என்று வீரா எழுந்ததும் அவளும் எழுந்தாள். ஆனால், அவள் ஏதும் சொல்லவில்லை.

வீரா கிளம்புவதற்காக காத்திருந்தாளோ? அல்லது அந்த கதவை அடைப்பதற்காகவோ காத்திருந்தாளோ? தெரியாது.வாசலுக்கு வெளியில் வீராவும் , வாசலுக்கு உள்ளே ஷாராவும் நின்றுகொண்டிருந்தார்கள். செருப்பை அணிந்து கொண்டே, பரவசத்தில் கொஞ்சம் பரிகாசமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு, வீட்டிற்கெல்லாம் அழைத்ததை சுட்டி, “இன்னிக்கு சூரியன் ஏதும் வடக்கு பக்கம் உதிச்சுச்சா தெரியல வீட்டுக்கெல்லாம் கூப்பிட்டு இருக்கீங்க! முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அந்த ஹெலிகாப்டர் எடுத்துட்டு வந்து இருப்பேன்” என்றான்.

வீரா, மூன்று வருடங்களுக்கு முன் தன்னுடைய சகோதரி நிவாஷினியின் குழந்தைகளுக்கு பொம்மை ஹெலிகாப்டர் வாங்கிய பொழுது, ஷாராவின் மகனுக்கும் ஒன்றை வாங்கி வைத்து இருந்தான். மூன்றும் இப்போது இல்லை என்பது அவனுக்கும் தெரியும். ஆனால்,அது திட்டமிடப்பட்ட சந்திப்பாக இருந்திருந்தால், முன்னூறு ஹெலிகாப்டர்கள் கூட அள்ளிக்கொண்டு வந்திருப்பான்.

“ப்ச்!”கதவோடு நின்றுகொண்டிருந்த ஷாரா வீராவின் அந்த வார்த்தைகளுக்கு அலட்சியமான அளவான ஒரு புன்னகையை அவள் கன்னங்களுக்கும் தெரியாத படி உதிர்த்தாள்.

லிப்ட்டின் கதவுகள் திறந்தது. வேகமாக உள்ளே சென்ற வீரா கட்டி வைத்திருந்த புன்னகைகள் லிப்ட் கதவுகள் மூடுவதற்குள் கொஞ்சம் சிந்தியும்விட்டது.அவன் அளவு மட்டுமே இருந்த அந்த லிப்ட்டில் அத்தனை நிமிடங்களும் பூட்டி வைத்திருந்த புன்னகைகளை கொட்டினான்.லிப்ட் நிறைய புன்னகையும் வீராவின் பெரு மூச்சும் நிறைந்து இருந்தது.

கீழே இறங்கிய அந்த லிப்ட்டின் கதவுகள் திறந்ததும், அந்த லிப்ட் கொள்ளாத புன்னைகைகள் எல்லாம் வீராவிற்கு முன் வழிந்தோடியது. லிஃப்டை விட்டு வெளியே வந்த அவன் கால்கள் அப்போது தான் தரையை தொட்டது.அப்போது தான் அவன் சுய நினைவிற்கு வந்தான்.

என்ன நடந்தது என்று யோசித்த வண்ணம் மேலே இருந்த ஜன்னல் பக்கம் ஒரு மாத்திரைக்கும் குறைவான கால அளவில் பார்வையை செலுத்தியவன் அங்கு ஜன்னல் மட்டுமே தெரிய வண்டியில் ஏறி கிளம்பினான்.

“எனக்கு இன்னிக்கு சாப்பாடு கூட வேணாம் இன்னிக்கு புல்லா இதை நினைச்சு நினைச்சு சிரிச்சிட்டே இருப்பேன்; சச்சின் படத்துல இந்த scene download பண்ணி கொடுடா இல்லாட்டி உங்க அக்காவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ” அவனிஷிடம் மிரட்டும் தொனியில் மன்றாடிக்கொண்டிருந்தான் வீரா.

“எனக்கு வேலை இருக்குங்க அப்பறம் பண்ணித்தரேன்” என்று இழுத்தான் அவனிஷ்.

வேகமாக கபினியை அழைத்தான். “என்கிட்ட போறதுக்கு முன்ன சொல்லலை! அது சரி! உனக்கு எல்லாம் மறந்து போயிருக்கும்” என்று  கபினி கிண்டலடித்தாள்.

“உன் தம்பிக்கு உன் மேல அக்கறையே இல்ல தெரியுமா ! சரி! download பண்ணி கொடுப்பா” அவனிஷ் எப்படியும் அவனுக்கு உதவ போவதில்லை என்று கபினியிடம் மன்றாடினான்.

வீரா ஷாராவிடம் கேட்டது போலவே! எந்த சகுனமும் எந்த ராசி பலனும் அவனுக்கு சொல்லவில்லை, இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று.இன்றும் கிழக்கில் தான் சூரியன் உதித்தது; இன்றும் வெயில் கொளுத்த தான் செய்கிறது; எல்லாமே சாதாரணமாக தான் இருக்கின்றது; இப்படி ஒரு நாளில் அதிசயமான  இந்த சந்திப்பு மட்டும் எப்படி நிகழ்ந்தது! அவனுடைய இந்த வியப்பு கவிதையாக மாறுகிறது.இறைவன் எழுதிய கவிதையை, அந்த அழகான தருணத்தை; எப்போதும் போல், கவிதையாய் செய்தான் அவன்.

 

 

கிழக்கே தான் வெளுத்தது இன்றும்

கொளுத்தும் வெயிலில் கருத்தது சாலைகள் இன்னும்

ஆனால் என்ன மாயம்!

குளிரும் புன்னகை மனதில் ஊற

வெளுத்தது மேற்கோ என்றே திரிந்தேன்!

தலை எது கால் எது அது புரியாமல்

பேசி பழகிய மொழியும் வராமல்

போகும் திசை அது தெரியாமல்

உன் திசை அது தேடி நான் திரிந்த பொழுதில்

எல்லாம் சரி! ஆனால் ஏனோ

இன்னும் தெரியவில்லை

இது ஏன் என்று புரியவில்லை

உனக்கேனும் தெரிந்ததா ஏதும்

பூரித்திரிந்த என் முகத்தில் இன்று..

 

“கொளுத்தும் வெயிலில் கருத்தது சாலைகள் இன்னும்

ஆனால் என்ன மாயம்!

குளிரும் புன்னகை மனதில் ஊற”

வெளியில் வெயில் கொளுத்துகிறது; அவனை மட்டும் அந்த வெயில் ஒன்றும் செய்யவில்லை.

 

அவன் முகத்தில் இருந்த அந்த பூரிப்பை அவள் ஏதும் கவனித்தாளா? என்று அவளை கேட்பது போல் அந்த கவிதை முடிகிறது. அவளை கேட்காமல் விட்டதாலேயே அது கவிதையாய் முடிந்தது.

 

lift நிறைய புன்னைகைத்தும், தீராத அவன் புன்னகையை, அவன் ஊர் திரும்பும் வழி நெடுகிலும் சிந்திச் செல்கிறான்.அதையும் கவிதையாக எழுதுகிறான்.

 

விடைபெறும் சூரியன் பார்த்து சிரிக்கிறேன்-எனை

விட்டுத்தொடரும் சாலை பார்த்தும் சிரிக்கிறேன்.

நகரா மரங்கள் எனை விட்டு நகர

நகரும் நொடிகள் இன்னும் வேகமாய் கடக்க

உன்னை கண்டு கடந்த நொடி அது என்னை

கடந்துபோ காமல் காக்க

கண்ணுக்குள் வைத்து

நகரு கிறேன்நான்

நகரும் நொடியொடு நகரும் சாலையில்

காணும் காட்சி எதிலும்

கண்ணில் வைத்துக்கொண்ட காட்சி அதனை பார்த்துக்கொண்டு

அவன் மனதை இன்னும் கொஞ்சம் நேரத்திற்காவது வேறு எந்த விஷயமும் ஆக்கிரமிக்க கூடாது என்று அந்த தருணத்தை மட்டுமே மனதில் நிறுத்தி வந்ததை தான் இப்படி எழுதிவைக்கின்றான்.

“சொன்னேனா! சண்டே பாப்பாவுக்கு பேர் வைக்கிறோம் ஆனா பேர் முடிவு பண்ணலை” வீராவிற்கு என்ன பேசினோம் என்று எதுவும் தெரியவில்லை.

“சொல்லலை” என்று பதில் வந்தது. “அப்புறம் தான் யோசிச்சேன் சொன்னோமா? சொல்லிருக்கணுமே! கடை ஒன்னும் இல்லை! ஸ்வீட் எப்படி இருக்கும்னு தெரில” வீராவின் விரல் தயங்கி தடுமாறி இந்த மெசேஜை அனுப்பி வைத்தது.

“பரவால்ல நீ தான் ரெண்டு நிமிஷம் கூட இருக்கலை” இந்த மெசேஜை பார்த்த வீரா, “ஆமா ரெண்டு நிமிஷம் கூட இல்ல தான்” என்று நினைத்துக்கொண்டான்.

“எனக்கு தண்ணி குடிச்சேனா ன்னு ஞாபகம் இல்லை” என்றான்.அதோடு அன்று அவர்களின் உரையாடல் முடிந்தது.

பேச பூட்டி வைத்திருந்த வார்த்தைகள்
ஆயிரமும் முட்டி மோதிக்கொண்டதில்
ஒன்றும் பேசவில்லை
பேச நினைத்திருந்த எதுவும்
பேச நினத்திருந்ததெல்லாம்
பேசாமல் போனாலென்ன
பேசாத அந்த வார்த்தைகள் எல்லாம்
இருக்கட்டும் என்னிடமே
என்னுடைய கவிதைகளாய்
நீயும் வாசிப்பதற்கு

அந்த நாளின் முடிவில் வீரா எழுதிய கவிதை இது. ஷாராவிடம் பேசுவதற்கும் கேட்பதற்கும் வீராவிடம் ஆயிரம் விஷயங்கள் இருந்தது. விமல் சொன்ன அந்த long conversation காக காத்திருந்தான் தான் வீரா. ஆனால், அந்த long conversation இன்றும் நடக்கவில்லை. அது இனி எப்போது நடக்கும்? அவன் மனதிற்குள் இருக்கும் கேள்விகளை எல்லாம் எப்போது அவன் அவளிடம் கேட்பான்.தொடர்ந்து படியுங்கள்.

Error happened.
Exit mobile version