கதிர் விஜயம்

முன்பு ரஜினி;இன்று விஜய் – யார் ரியல் வில்லன்

எங்கு எது புகைந்தாலும் அதை நெருப்பாக்கி குளிர் காயும் அரசியல்வாதிகளை கொண்ட சமூகத்தில் இருக்கும் நாம் எந்த செய்தியையும் நிதானித்து உள் வாங்கிக்கொள்வதற்கான தேவை இருக்கின்றது. ஆனால், நாம், நம்மிடம் அவசரமாக சேர்க்கப்படும் செய்திகளையும் கருத்துகளையும் அப்படியே நமக்கு ஏற்றாற்போல் ஏற்றுக்கொண்டு அங்கேயே நின்றுவிடுகிறோம்.

செய்திகள் எப்படி புரளிகளை உருவாக்கிறது.

சில நாட்களுக்கு முன் ரஜினி தன் மண்டபத்திற்கு வரி விலக்கு கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்ததைப்பற்றி, நாம், “சிஸ்டம் ரொம்பவே தான் கெட்டு போய் இருக்கு”என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.அதில் அரசாங்கத்திலும் நீதியமைப்பிலும் உள்ள குறைகளை சுட்டி காட்டி இருந்தோம்.

இந்த சிஸ்டத்திற்குள் தான் ஒவ்வொரு தனி மனிதர்களும் இருக்கின்றார்கள். இந்த தனி மனிதர்களே நடிகர்களாகவும் நீதிபதிகளாகவும் அரசு அலுவலராகவும் ஊடகத்துறை சார்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள்(இருக்கின்றோம்).

ரஜியின் வரிவிலக்கு வழக்கில் செய்த அதே தவறையே ஊடகம் இப்போதும் செய்து இருக்கின்றது.இதற்கு ஊடகத்தின் அத்தகைய போக்கை சமூகத்தில் ரஜினிக்கு எதிரானவர்கள் ஆதரித்ததே காரணமாகும் அந்த வகையில் விஜயின் நுழைவு வரி வழக்கு விவகாரத்தில் தற்போது நடக்கும் தவறுகளுக்கும் நாம் ஒவ்வொருவரும் காரணம்.

ரஜினியின் மண்டப வரி விலக்கு தொடர்பான செய்தியை பற்றிய முழு தகவலையும் வெளியிடுதற்கு முன்,”நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.நீதிபதி எச்சரிக்கை.மண்டபத்திற்கு வரி விலக்கு கோரிய ரஜினியின் மனு தள்ளுபடி” என்று மேலோட்டமான, சமூத்தில் தவறான செய்தியை பரப்பக்கூடிய வாக்கியங்களையே ஊடகங்கள் செய்திகள் ஆக்கின.நம் சமூகத்தில் அநேகமானவர்கள் முதலில் அவர்கள் பார்க்கும் அல்லது கேட்கும் இப்படியான தலைப்புகளை அல்லது ஒரு வரி செய்திகளை மட்டுமே பிடித்துக்கொள்வதுண்டு.

ரஜினியின் வழக்கில் நீதிபதி எச்சரிக்கை செய்து இருக்க வேண்டியதில்லை அறிவுறுத்தியிருக்க வேண்டும்.காரணம், அங்கே தவறு ரஜினிக்கு பதிலளிக்க தாமதித்த மாநகராட்சியின் உடையது.மாநகராட்சி சட்டத்தில் மண்டபம் தொடர்பான கட்டிடங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கை சுட்டிக்காட்டி, தன் கடித்திற்கும் மாநகராட்சி பதில் தரவில்லை என்ற நிலையில் நீதிமன்றத்தை அணுகியவரை மீண்டும் மாநகராட்சியில் மேல் முறையீடு செய்யுங்கள் என்ற அறிவுறுத்தலை நீதிபதி (காங்கிரஸ் கட்சி தலைவரின் முன்னாள் வழக்கறிஞர் என்று அறியப்படுபவர்)எச்சரிக்கையாக கொடுத்து இருக்க வேண்டியதில்லை. இங்கே, ஊடகங்களின் தவறு, சமூத்தில் பெரும் பகுதியினரை ரஜினி வரி கட்ட மறுக்கிறார் என்று நம்ப வைத்தது.அதே தான் இன்று நடிகர் விஜய்க்கும் நடந்து இருக்கின்றது.

சில ஊடகங்கள் யார் முதலில் செய்தி வெளியிடுகிறோம் என்கிற முனைப்பிலேயே சில செய்திகளை வெளியிடுகின்றன. முக்கியமாக யார் மீதேனும் அவதூறு பரப்பக்கூடிய சர்சைக்குரிய விவகாரங்களில் மட்டுமே இந்த வேகத்தை இவர்களிடம் காண முடிகிறது. மக்களின் கருத்து கேட்க அரசாங்கம் வெளியிடும் எந்த அறிவிப்புகளையும் இவர்கள் இதே வேகத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை.

விஜய் எப்போது வழக்கு தொடர்ந்தார்? என்ன வழக்கு? என்ற எந்த விவரமும் இல்லாமல் ஒரு வரி செய்தியை பரப்பி ஒரிரு நாட்கள் அல்லது சில மணி நேரம் கழித்து அதே ஊடகங்கள் எத்தனை விளக்கங்கள் எழுதினாலும் அந்த ஒரு வரி செய்தி, சமூகத்தில் விதைத்த எண்ணங்களையும் கருத்துக்களையும் மாற்ற முடிவதில்லை.

நுழைவு வரியில் உள்ள சட்ட சிக்கல்

முன்னதாக ரஜினியின் வரிவிலக்கை பொறுத்தவரையில் மாநகராட்சி சட்டத்தில் ரஜினி கோரிய, மண்டப வரிவிலக்கு தொடர்பான தெளிவான சரத்து இடம்பெற்று இருந்தது. நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதற்கு தான் சட்டப்பரிவுகளும் குறிப்புகளும்(reference) அவசியமாகிறது.வழக்கை தள்ளுபடி செய்வதற்கு எந்த வழிமுறைகளும் தேவைப்படுவதில்லை. அதனால், அந்த வழக்கு மீண்டும் ஒருமுறை மாநகராட்சியிடம் முறையிட சொல்லி தள்ளுபடி செய்யப்பட்டது.அதே வழக்கை வேறொரு நீதிபதி விசாரித்து இருந்தால் அந்த வழக்கு வேறு விதமாக முடிக்கப்பட்டிருக்கும். விஜய் கோரிய வரி விலக்கு மீதான விசாரனையும் அதில் வந்த தீர்ப்பும் அத்தகையதே.ரஜினி கோரிய மனுவை பொறுத்தவரை சட்ட தெளிவு இருந்தது நிர்வாக பின்னடைவு மட்டுமே அங்கு பிரச்சனை. நடிகர் விஜயின் வழக்கை பொறுத்தவரை சட்டதெளிவும் இல்லை.

Gst அறிமுகத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்தது தான் இந்த நுழைவு வரி. மாநிலங்களுக்கு இடையே கடத்தப்படும் (transfer)பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி. இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்த விதி பொருந்தும் பொருந்தாது என்கிற தெளிவு சட்டத்தில் இல்லை.

இந்த நுழைவு வரி எந்த எந்த பொருள்களுக்கு விதிக்கலாம் என்கிற அதிகாரம் அந்த அந்த மாநில அரசுகளிடமே இருக்கின்றது.

பொதுவாக இந்த வரிகளை வாங்குபவர்களிடம் இருந்து பெற்று விற்பனையாளர்களே(dealers) அரசிற்கு செலுத்தியருக்க வேண்டும் . ஆடம்பர கார் அல்லாத நுழைவு வரி விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு மக்கள் யாரும் நேரடியாக அரசாங்கதிற்கு வரி செலுத்திக்கொண்டும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பொருந்தாது என்றும் வாதிட்டு கொண்டு இருக்கவில்லை. அங்கே விற்பனையாளருக்கென்ற வழிமுறைகள் என்ன? என்கிற கேள்வி எழுகிறது.இதனை கருத்தில் கொண்டால் விஜய் விவகாரத்தில் விற்பனையாளர் வழிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை விற்க முடியுமா? என்கிற சந்தேகங்களும் மக்கள் மனதில் ஏழாமல் இல்லை.

இறக்குமதி செய்ப்பட்ட பொருட்களுக்கு நுழைவு வரி விதிக்கலாம் என்ற தெளிவு சட்டத்தில் இல்லை என்பதால் இறக்குமதி செய்ப்பட்ட கார்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்று கேரளா உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பையும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டி விஜய் அல்லாமல் இன்னும் பலர் நுழைவு வரிக்கு மட்டும் வரிவிலக்கு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்கள்.அநேகமான வழக்குகளில் குறைந்தபட்ச வரியை செலுத்த நீதிமன்றம் பணித்து இருக்கின்றது.

2012 இல் மனுதாக்கல் செய்த விஜய்க்கும் அதே உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கின்றது. அதாவது நுழைவு வரியில் குறைந்த பட்சம் 20% செலுத்த சொல்லி இருக்கின்றது. அதை அவர் செலுத்தியும் இருக்கின்றார்.

தற்போது வந்த தீர்ப்பில் , மாநில அரசிற்கு நுழைவு வரி வசூலிக்கும் அதிகாரம் இருப்பதை சுட்டிகாட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. அதே வேளையில், அபாரதம் விதித்ததற்கு நீதிமன்றம் எந்த சட்டத்தையும் அடிப்படையாக கொள்ளவில்லை.அதன் காரணமாகவே முதல்வரின் கொரோன நிதி நிவாரணத்திற்கு அந்த அபாரத்தை செலுத்த சொல்லி பணித்து இருக்கின்றது.

இதை நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் சட்டத்தின் படி நிச்சயமாக அவருக்கு விதிக்கப்பட்ட அபாரதம் விலக்கிக்கொள்ளப்பட வாய்ப்பிருக்கின்றது.

ரஜினியை பொறுத்தவரையில் முதலில் வரியை கட்டிவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றோ.இதை இப்படியே விட்டுவிடலாம் என்றோ எண்ணி அவர் வரியை செலுத்திவிட்டார்.

இதே போக்கை விஜய் கடைபிடித்து இனி வருபவர்களும் செய்வார்களேயானால்.சிஸ்டத்தில் உள்ள தவறு கண்டறிப்படாமலும் சரி செய்யபடாமலும் போக வாய்ப்பு இருக்கின்றது.

நீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல் மாநில அரசிற்கு வரி விதிக்கும் அதிகாரம் இருக்கிறதென்றால் இறக்குமதி செய்யபடும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படும் என்பதை ஒரு அரசாணை அல்லது சுற்றறிக்கை மூலமாக கூட மாநில அரசு தெளிவுபடுத்தாமல் ஏன் இருந்தது என்ற கேள்வியை வைத்திருக்க வேண்டும்.சட்டமியற்றும் மன்றங்கள், இது போன்ற விசயங்களில் தெளிவில்லாமல் பல வழக்குகள் தொடரப்பட்ட பின்னரும் அதை சரி செய்யாமல் இருந்ததை நீதிமன்றம் கண்டித்து இருக்க வேண்டும்.தற்போது இந்த வரி gst வருகைக்கு பின் பொருந்தாது என்பதால் இது தொடர்பான குழப்பம் ஏற்பட போவதில்லை.

விஜய் என்ன தவறு செய்தார்

ரஜினி, விஜய் போன்றவர்கள் செய்த தவறென்பது இந்தியாவில் ரஜினியாகவும் விஜயாகவும் இருப்பது மட்டுமே. விஜய் வழக்கில் நீதிமன்றம், “நுழைவு வரி கட்ட வேண்டும். அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நீதிமன்றம் அதில் தலையிட அதிகாரம் இல்லை” என்பதோடு தீர்பை முடித்து இருக்கலாம். அப்படி முடித்து இருந்தால் ஏற்கனவே 20% நுழைவு வரி கட்டியவர் மீதியை கட்டியிருப்பார்.அபாரதம் விதித்திருக்க வேண்டியதில்லை.

சட்டத்தெளிவோடு இருக்கும் தீர்ப்புகளே மேல் முறையீடு செய்யப்படும் வேளையில் சட்ட தெளிவில்லாத இந்த வழக்கை நிச்சயம் மேல் முறையீடு செய்யலாம்

ஆதரவு,எதிர்ப்பு, கொண்டாட்டம்

நீதிபதிகளும் சாதரணமான மனிதர்கள் என்பதையே இந்த இரு வழக்குகளும் நமக்கு காண்பிக்கின்றது.காரணம், நவீன யுகத்தில் பரப்பரான விசயங்கள் நொடியில் பிரமலாக்கப்படும் காலத்தில், பிரபலங்களின் வழக்கை விசாரிக்கும் போது, நிச்சயமாக மற்ற வழக்குகளை விசாரிக்கும் மனநிலையில் நீதிபதிகள் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு பூரிப்பு(excitement) கலந்த அழுத்தம்(pressure) அங்கே இருக்ககூடும்.நம்முடைய தீர்ப்பு எத்தனை பெரிய அளவில் கவனிக்கப்படும் என்ற சிந்தனை அவர்களுக்கு ஓடக்கூடும் அதுவே அறிவுறுத்தல்களை எச்சரிக்கையாக செய்கிறது.நிர்வாக குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் நீதிமன்றத்தை நாடியதையே குறையாக சுட்டச்செய்கிறது.

நாமும் அதை எதிர்க்கவும் கொண்டாடவும் செய்கிறோம் . கொண்டாடுவதற்கு காரணம், நம்மில் பலருக்கு ரஜினியையும் விஜயையும் பிடிக்காது என்பது மட்டுமே .அவர்கள் உங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் என்பதை தாண்டி சக குடிமகன்கள்.நாளை நாமும் இதே இடத்திற்கு வரும் போது விஜய் ரஜினியை பார்த்து நாம் சிரித்தது போலவே இந்த சிஸ்டம் நம்மை பார்த்து சிரிக்கும்.அரசியல் காரணங்களுக்காவும் சிலர் இந்த தீர்ப்பை கொண்டாடி விஜய் மீது அவதூறு பரப்புகிறார்கள்.இது சமூத்தின் அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல.

ரசிகர்களும் கூட ரசிகர்கள் என்கிற அளவில் மட்டுமே இதை அணுகிறார்கள்.அவர்கள் அல்லாமல் ஆதரிக்கும் சிலர் அவர்களின் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக ஆதரிக்கின்றேன் என்கிற பெயரில் தவறான கருத்துக்களையே தான் பரப்புகிறார்கள்.

நீதிமன்ற தீர்ப்புகள், வருமான வரி சோதனை போன்றவைகளை அரசின் அச்சுறுத்தல்களாக சித்திரிக்கும் அரசியல்வாதிகளும் அந்த கருத்துக்களை அப்படியே ஏற்றக்கொள்ளும் மக்களும் நம்முடன் இதே சமூகத்தில் தான் இருக்கின்றார்கள்.சரியாக வரி கட்டும் ஒருவரை எந்த சோதனையும் அச்சுறுத்த போவதில்லை நீதிமன்ற தீர்ப்புகளை எந்த ஒரு குடிமகனும் மேல் முறையீடு செய்யவும் மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யவும் உரிமை இருக்கும் போது இவைகளை அச்சுறுத்தல்களாக நம் சமூகத்தை எண்ண செய்யும் அரசியல்வாதிகள் இந்த சமூகத்தின் குறைபாடுகள்.

தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்த ஆண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. அவர் வரிஏய்ப்புச் செய்ததாக எவ்வித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி மிரட்டிப் பணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்கு எதிராகக் குரலெடுக்கக்கூடாது என்பதற்காகவுமே வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் நாட்டைவிட்டுத் தப்பும்போது என்ன செய்தார்கள்?

அவர்களைத் தப்பிக்கவிட்டு வேடிக்கை பார்த்த மோடி அரசு மீது என்ன விமர்சனத்தை வைத்திட்டார்கள்? இன்றுவரை பல லட்சம் கோடியிலான மக்களின் வரிப்பணம், வாராக்கடனாக மாற்றப்பட்டு ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்யப்பட்டு அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்குப் பெரும் சலுகை வழங்கப்படுகிறதே அதற்கெல்லாம் இவர்கள் எவரும் கேள்வி கேட்கவில்லையே ஏன்? அதனையெல்லாம் கண்டும் காணாது போல இருந்து அச்செயல்பாடுகளை மறைமுகமாக ஆதரித்துவிட்டு இப்போது விஜய்யின் வரிவிலக்குச் சலுகை கோரும் வழக்குக்கு எதிராகப் பொங்கித் தீர்ப்பது எவ்வகையில் நியாயம் என்பது புரியவில்லை.

-சீமான்

மாநில அரசு தொடர்பான சட்ட சிக்கலை சிலர் மத்திய அரசோடு தொடர்புபடுத்துவது அறியாமையின் உச்சம்.மேலும் கடன் வாங்கி ஏமாற்றிய பெருமுதலாளிகளை கேள்வி கேட்காமல் விட்டதாக சொல்லி தவறு செய்தவர்களோடு தவறு செய்யாத நடிகரை ஓப்பீடு செய்து “அவன கேட்டியா இவன கேட்கிற” என்பது போன்ற எண்ணங்களை வளர்க்கும் கருத்துகள் சமூத்தில் சிறு சிறு தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை வளர்க்க வல்லது.

லலித் மோடி, மல்லையா வாங்கிய கடன்களை திரும்ப பெற அவர்களின் (நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள்)கடன் சொத்துகளை முடக்குவதற்கு சட்டம் இயற்றப்பட்டு மல்லையா,லலித் மோடி வாங்கிய கடன்களின் மதிப்பில் 40% சதவீத அளவு சொத்துகள் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றது. அவர்கள் பெற்ற கடன் தொகையில் 80% அளவு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அரசியல்வாதிகள், மற்றும் கட்சி சார் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் எப்போதும் எரிகின்ற நெருப்பில் குளிர்காய பார்க்கின்றார்கள்.ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க நினைத்தவர்கள் ரஜினியை ஆதரித்த போது அதை எதிர்த்தவர்களே, இன்று விஜயை தங்கள் பக்கம் இழுக்க ஆதரிக்கின்றார்கள். சமூத்தின் இந்த இரு கூட்டங்களும் தங்களுக்கு சாதகமானதை மட்டுமே எடுத்துக்கொள்கின்றது.

இத்தகைய எதிர்ப்புகளும் ஆதரவுகளும் சமூகத்திற்கு எந்த வகையிலும் நன்மை அளிக்காது.

என்ன செய்ய வேண்டும்

ஊடகங்களுக்கு என்று ஒரு தணிக்கை அமைப்பு வேண்டும். அது ஊடக சுதந்திரத்தை பாதிக்காமல் தவறான சிந்தனைகளை, செய்திகளை ஊடகங்கள் புகுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.எந்த ஒரு நிகழ்வையும் ஒரு வரி செய்தியாக பிரசுரிக்க அது அனுமதிக்க கூடாது.

மேற்சொன்வைகள் நடக்க காலம் எடுக்கலாம் அல்லது நடக்கமாலும் போகலாம். ஆனால், நடக்கூடியது என்னவெனில், நாம் பார்க்கும் செய்திகளின் முழு ஆழத்தையும் அறிந்து கொள்ள நாம் முற்படுவது.அந்த செய்தி எதன் அடிப்படையிலானது என்பதை அறிந்து கொள்வது.தவறான செய்திகளை கருத்தில் கொள்ளாமல் இருப்பது. பொது வாழ்வில் இருக்கும் நமக்கு பிடிக்காத ஆளுமைகள் பற்றி தவறான செய்திகள் வந்தால் அதை ரசிக்காமல் அதை பற்றி முழுதும் தெரிந்துகொள்ள முற்படுவது.

தவறுகளை, குற்றங்களை தடுக்கும் சமூகம் அதனை ஒரளவு கட்டுபடுத்தும். தவறுகள் , மற்றும் குற்றங்களுக்கான காரணிகளை அலசி அந்த காரணிகளை நீக்கும் சமூகம் குற்றங்களை குறைப்பதில் பெரு வெற்றி அடையும்.எது நடந்தாலும் யார் மீதேனும் குற்றம் சொல்லி ரசித்து;பல அணிகளாக பிரிந்து வாதாடிக்கொண்டிருக்கும் சமூகம் எதனையும் எந்த காலத்திலும் திருத்திக்கொள்ளாது.நாம் எத்தகைய சமூகமாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தனிமனிதர்களின் அணுகுமுறையில் இருக்கின்றது.குற்றங்களை, செய்திகளை நாம் அணுகும் முறைகளே சமூத்தின் மிக பெரிய வில்லனாக இருந்து எதனால் ஒரு பிரச்சனை எழுகிறது என்ற புரிதலை நோக்கி நம்மை நகரவிடாமல் செய்கிறது.

கடந்த 5வருடத்தில் மட்டும் தற்காலத்திற்கு பொருந்தாத சிஸ்டத்தை முடக்கும் 1500 சட்டஙகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது.மாநில சட்டங்களும் காலத்திற்கேற்ற திருத்தங்களையும் மாற்றங்களையும் கால தாமதமின்றி செய்திருக்க வேண்டும்; இனியும் செய்ய வேண்டும். அதை தான் மையமாக அரசியல்வாதிகள் சுட்டிகாட்டி இருக்க வேண்டும்.சமூத்தின் வாத பிரதிவாதங்களின் மையமாக அதுவே இருந்திருக்கவேண்டும்.

மாநில அரசிற்கு வரி வசூலிக்கும் அதிகாரம் இருப்பதை சுட்டிகாட்டிய தீர்ப்பு, சட்டத்தின் எந்த சரத்தின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு நுழைவு வரி விதிக்கபடலாம் என்பதை சுட்டிக்காட்டவில்லை என்பதையே சமூகம் கவனித்திருக்க வேண்டும்.அபாரதமும் கூட சட்ட அடிப்படையிலனாதா? என்கிற கேள்வியே எழுந்திருக்க வேண்டும். ஆனால், ஜோசப் விஜய் மாட்டிக்கொண்டார் என்று ஒரு தரப்பும் நம்ம தம்பிய விமர்சனம் பண்றாய்களா யாருடா அவன் , அவன் முதல ஒழுங்கா என்று ஒரு தரப்பும் இருப்பது திருத்திக்கொள்ளப்பட வேண்டியது.

நீதிமன்றம் சொன்னது போல் வரி நன்கொடை இல்லை தான்.ஆனால் தன்னுரிமையின் படியும் சட்டத்தின் படியும் தனக்கு இருக்கும் வரிசலுகைகளை பற்றிய தெளிவு ஏற்படவேணும் ஒருவர் நீதிமன்றம் நாடுவது சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டதேயாகும்.

Error happened.
Exit mobile version