கதிர் விஜயம்

விவாதக்கூத்து -2 : ஒன்றியமா ! அல்லது தேசியமா!

சமீப காலமாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இத்தனை காலமாக மத்திய அரசு என்று அறிமுகமாகி இருந்த இந்திய  அரசை ஒன்றிய அரசு என்று சுட்டி வருவதை பார்க்கமுடிகிறது.

இது தொடர்பாக மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்கள், முதல்வர் அவர்களை சந்தித்துவிட்டு அளித்த பேட்டி ஒன்றில் ஒன்றியம் என்பதை தொடங்கியதே நான் தானே. இந்தியா என்னும் தேசமே உருவாக்கப்பட்டது தானே. இந்தியா என்கிற தேசம் எங்கு இருந்தது. அரசியலமைப்பும் அதை தானே சொல்கிறது என்று தன் கருத்தை நியாயப்படுத்தியிருந்தார்.அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருப்பதை பற்றி அலசுவதற்கு முன் அண்ணன் சீமான் அவர்களின் கருத்தின் உண்மை தன்மையை ஆராயலாம்.

அண்ணன் சீமான் பெற்றுவந்த படிப்பினைகளும் பெற வேண்டிய படிப்பினைகளும்

முன்னதாக சீமான், நாம் தமிழர் இயக்கம் தொடங்கிய காலத்தில் கடவுள் மறுப்பு பேசி வந்ததும் பின் தமிழ் சமூகத்தில் நிலங்களுக்குரிய தெய்வங்கள் வணங்கப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கருத்து எழுந்த பின் முப்பாட்டன் முருகன் என்று தன் கருத்தை சமாளித்து கொண்டதும்.ஆரம்ப காலங்களில் அந்தணர்களை ஆரியர் என்று கூறி வந்ததும் பின் அவர்களையும் தமிழர்களாக ஏற்றுக்கொண்டதும் என்று தன் கருத்தில் பிழை இருப்பது பற்றிய விமர்சனம் எழுந்தால் வெளிப்படையாக இல்லாவிடினும் திருத்திக்கொள்ளும் மாண்புடையவராகவே இருந்து வந்து இருக்கின்றார். அவர் இன்னுமும் கூட விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை, கிருஷ்ண ஜெயந்திக்கு விடுமுறை ஆனால் முப்பாட்டன் முருகனுக்கு விடுமுறை இல்லை என்னும் கருத்துக்களின் மூலம் விநாயகரும் கிருஷ்ணரும் தமிழ் கலாச்சாரத்திற்கு தொடர்பு இல்லாதவர்கள் போன்ற தோற்றம் ஏற்படுத்தும் கருத்துக்களையும்  கூட பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது . மாயோன்-கிருஷ்ணனை பற்றி சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் சொல்லப்பட்டு இருக்கின்றதே; ராமனை பற்றி சிலப்பதிகாரத்திலும் புறநானூற்றிலும் குறிப்பு இருக்கிறதே; திருமந்திரத்தில் விநாயகர் வணக்க பாடல் இருக்கின்றதே 18 புராணங்களில் ஸ்கந்த புராணமும் சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றதே  என்று கேள்விகள்  எழுப்பப்பட்டால் அதன் பின் படித்து தெரிந்து கொண்டு தன் கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் மாற்றிக்கொள்வார்.

இந்தியா என்கிற பெயர் தான் இல்லாமல் இருந்ததே தவிர, முகலாய ஆங்கிலேயே படையெடுப்பிற்கு பின்னர் இந்தியா பிளவுபடுத்தப்பட்டதே தவிர பாரதம் என்கிற தேசம் இல்லாமல் இல்லை. அதற்கு அண்ணன் சீமானின் முப்பாட்டன் சிவனே சான்று.

சிவன் அநேகமான காலம் இமய மலை பகுதிகளில் இருந்ததை பற்றிய குறிப்புகள் பாரத தேசத்தின் இலக்கியங்களிலும் புராணங்களிலும் காண முடிவது போல அவர் பாரத்தின் தென் பகுதிவரை பாரத்தின் எல்லா திசைகளிலும் கால்பதித்து இருக்க கூடும் என்பதையும் அறிய முடிகிறது. பாரதம் முழுமைக்கும் சிவன் பொதுவானராக இருந்திருக்கின்றார் என்பதை விட பாரதம் என்னும் சமூகம் ஒன்றே என்பதற்கு அடையாளமாக இன்றும் இருந்துவருகிறார் என்று சொல்ல முடியும்.

கால மாற்றங்களால், படையெடுப்புகளால் கலந்துப்பட்ட சமூகமாக மாறி பல முகங்களை ஏற்று இருக்கும் பாரத சமூகத்தின் இணைப்புப்புள்ளியாய் இன்றும் இருப்பது அண்ணன் சீமானின் முப்பாட்டன் சிவன்பெருமானே.சிவன் என்பவரை யோகியாக பார்த்த நம் பாரத சமூகம் சிவம் என்பதை ஒரு தத்துவமாக முன்வைக்கிறது.அதன் காரணமாகவே தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று மாணிக்கவாசகர் போற்றிய சிவனை முப்பாட்டன் எனும் போது மட்டும் அண்ணன் சீமானுக்கு முப்பாட்டன் என்று எடுத்தியம்பினோம்.

இனங்களின் வகைப்பிரித்தல்

உயிரினங்களை பொறுத்தவரையில் domain,kingdom,phylum,class,order,genus,speciesஎன்று வகை பிரிக்கப்படுகிறது(இதில் உட்பிரிவுகளும் இருக்கின்றது.).இதில் மீண்டும் மனிதர்களை சரியாக உயிரியில் ரீதியாக வகைப்படுத்தினால் புவியியல் ரீதியாக பெயர்களை கொண்ட ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள்,அரேபியர்கள் சீனர்கள்,பாரதர்கள்   என்று, பல இன குழுக்களாக பிரிக்கப்பட்டு இருப்பார்கள். உயிரியியல் ரீதியிலான வகைபிரித்தல் மொழியின் அடிப்படையிலானதாக அமைவதில்லை. சீனாவில் 302க்கும் மேற்பட்டமொழிகள் இருக்கின்றது.அவர்களது கலாச்சாரத்தில் அதற்கும் மேற்பட்ட மொழிகள் இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.ஆனால் , அவர்கள் எல்லோரும் சீனர்கள்.120க்கும் மேற்பட்ட மொழி பேசும் பிஹிலிபைன்ஸ் நாட்டினர் ஒரே இனமாகவே அறியப்படுகிறார்கள். இந்த வகைபிரித்தலை புரிந்து கொள்ள இரண்டு உதாரணங்கள் சொல்ல முடியும்.புலி, பூனை இனத்தை சேர்ந்தது. மனிதன் குரங்கினத்தை சேர்ந்தவன்  (இந்த உதாரணம் எளிய  புரிதலுக்காக எடுத்து சொல்லப்பட்டது).கால மாற்றத்தாலும் கலப்பினங்களின் உருவாக்கத்தாலும் பூனைகளிலும் புலிகளிலும் பல விதங்களை காலமும் இயற்கையும் உண்டு செய்வது போன்றதே.பாரதம் இன்று கொண்டிருக்கும் பன்முகம் என்பது. உயிரினங்களின் இந்த வகைபிரித்தல் சுற்றுசூழலையும் அதன் காரணமாக அந்த உயிர்கள் கொள்ளும் தோற்றத்தையும் அதன் வேர்களையும் (மூதாதையர்களையும்) அடிப்படையாக கொண்டதாக இருக்கின்றது.

தெய்வங்கள் என கொண்டாலும் மூதாதையர் என கொண்டாலும் புராணங்களில் வரும் ராமன்,கிருஷ்ணர்,திரௌபதி போன்றவர்கள் கருமைநிறம் கொண்டவர்கள் என்றே அறியப்படுகிறது.சிவனின் ஜடாமுடியை வர்ணிக்கும் தமிழ் மற்றும் சமஸ்கிருத நூல்கள் பின்னப்பட்ட ஒரு ஜடை போன்றது என்று கூறுகிறார்கள். அவர்களின் வருணனையை வைத்து பார்க்கும் போது மேற்கிந்தியர்களின் முடிக்கு ஒப்பானது சிவனின் ஜடை என்று கூற முடியும். மேற்கிந்திய தீவுகளை கண்டறிந்தவர்கள் அங்கு இருந்தவர்களை திராவிடர்கள் என்றும் தமிழர்களும் என்றும் சுட்டவில்லை. அவர்களின் தோற்றம் இந்தியர்களுடன் ஒப்பீடப்படுகிறது. Species என்கிற வகைபிரித்தலின் கடைசி கட்டத்தை போன்று ஒரு வகைபிரித்தலை மேற்கொண்டால் மனித இனம் இன்றும் வகைப்படுத்தப்படாத பல பிரிவுகளாக இருப்பது நிச்சயம் புலப்படும்.   நாகர்கோவிலை சேர்ந்த ஒருவருக்கும் சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் வேறுபாடு இருக்கின்றது என்பதே நிதர்சனம்.அதன் காரணமாக இவர்கள் வேறு வேறு இனத்தவராக ஆகி விடமாட்டார்கள்.பரந்த நிலப்பரப்பை கொண்ட பாரத சமூகத்தில் அநேகமான பிரிவுகள் இருப்பதன் காரணமாக பாரத தேசம் என்று ஒன்று இருந்ததில்லை என்றும் இந்தியர்கள் எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் கூறிவிட முடியாது.

பாரத சமூகத்தின் மொழி

சீமான் போன்ற திராவிட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தமிழ் சார்ந்த நம் பாரத இனம் சார்ந்தும் முன்வைக்கும் கருத்துக்கள் எதுவும் தமிழ் இலக்கியங்களை விட மேற்கத்திய ஆய்வுகளின் அடிப்படையலானதாகவே இருக்கின்றது. அவர்களின் ஆய்வுகளின் படியே தமிழும் சமஸ்கிருதமும் தொடர்பில்லாத இருமொழிகளாக அறியப்படுகிறது. மேற்கத்திய ஆய்வாளர்கள் நம்மை பற்றி எழுதிய வரலாற்றை படித்த மனநிலையில் நாம் இருக்கும் வரை இந்தியாவை வாஸ்கோட காமா கண்டுபிடித்தார் என்ற எண்ணமே நமக்குள் இருக்கும் இது ஒரு வகையிலான அடிமை எண்ணம். நம்மை பற்றி தெரிந்து கொள்ள நாம் நமது பழந்தமிழ் நூல்களை படிக்க வேண்டும்.

அப்படி படித்தறியாததன் காரணமாகவே அடிப்படையற்ற, தமிழ் நூல்களை சமஸ்கிருத நூல்களை படித்து புரிந்துகொள்ளாமல், மேற்கத்திய ஆய்வாளர்கள் திணித்த கருத்துக்களை இவர்கள் பிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியும்.திராவிட மொழிகளாக அறியப்படும் கன்னட,தெலுங்கு,மலையாளம், போன்ற மொழிகளில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் தாக்கமே தெரிகிறது.சமஸ்கிருதமும் தமிழும் கலந்து பிறந்ததே கன்னடம் என்பதை எழுத்தாளர் கல்கி பதிவு செய்து இருக்கின்றார்.திராவிட மொழிகள் என்று இல்லை இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் இந்த இரு மொழிகளின் தாக்கத்தை காண முடியும்.தமிழில் காலத்தை ஓரையாக பிரிக்கும் வழக்கம் இருக்கின்றது. சமஸ்கிருதத்தில் ஹோரா என்பது தமிழில் குறிக்கப்படும் அதே அர்த்தத்தில் ஒரு கிழமையில் பிரிக்க படும் கால அளவுகளை சுட்ட பயன்படுத்தப்படுகிறது.இந்த ஹோரா என்கிற வார்த்தை ஸ்பானிய மொழியில் மணி என்கிற பொருள் கொள்ளப்படுகின்றது. பாரத சமூகம் தமிழையும் சமஸ்கிருதத்தையும் வேறு வேறு காரணங்களுக்காக பயன்படுத்தியிருக்கக்கூடும்.சமஸ்கிருதத்திலும் தமிழிலும் இருக்கும் பொதுவான வார்த்தைகளை திருக்குறளிலும் கூட காண முடிவதுண்டு.சைவ நூல்களில் ஒலி தான் செறிவூட்டப்பட்ட நிலையில் ஒளி வடிவில் உயிராக இருக்கின்றது என்கிறார்கள். இந்த ஒலியை பயன்படுத்தி பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. நம் பாரத சமூக பயன்படுத்திய தமிழும் சமஸ்கிருதமும் நம் முன்னோர்களால் மந்திர மொழியாக அறியப்படுகிறது.அதன் காரணமாகவே சிவனின் சீடர்கள் ஞான நூல்களை இந்த இரு மொழிகளிலும் எழுதி வைத்திருக்கின்றார்கள்.அகத்தியர் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டிலும் தன் நூல்களை தந்துள்ளார்.

முப்பாட்டன் சிவனே இருமொழிகளுக்கும் மூலமானவன் என்பதை எடுத்தியம்பும் திருமந்திரம்

இந்த இரு மொழிகளில் இருந்து கலந்தும் பிரிந்தும் படையெடுப்பில் நம் நாட்டிற்குள் புகந்த மொழிகளோடு சேர்ந்து பல மொழிகள் உண்டானது.இன்று ஆங்கிலத்தின் தாக்கம் காரணமாக நாம் எப்படி குரோம்பேட்டை என்பதை குஷி ஜோதிகா போல குரோம்பேட் என்ற சொல்ல பழகினோமோ அதே போல முகலாயர் படையெடுப்பிற்கு பின் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் வழி மொழியாக இருந்த ஹிந்துஸ்தானி மறுவடிவம் கொண்டு எழுத்துரு பயன்பாட்டில் மட்டும் வேறுபட்டு ஹிந்தியாகவும் உருது ஆகவும் இருக்கின்றது.

ஹிந்துஸ்தானி பயன்படுத்திக்கொண்டிருந்த இந்தியர்களில் ஒரு ஒரு சாரரர் தேவநகரி எழுத்துருவையும் மற்றொரு சாரரர்பெர்சிய அரேபிய எழுத்துருவையும் பயன்படுத்தினார்கள்.பின்னர், இவர்கள் இரு வேறு மொழி பேசும் குழுக்கள் ஆனார்கள்,ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் இரு வேறு மொழி பேசுபவர்கள் ஆனார்கள்.பின், சிலரின் அதிகார ஆசையினால் அரசியல் காரணங்களுக்காக இரு வேறு நாட்டினர் ஆனார்கள். பாகிஸ்தானில் உருது ஆட்சி மொழியாக இருப்பதை அறிந்திருப்பீர்கள்.மொழி எப்படி சேர்ந்தும் கலந்தும் பிரிந்தும் பல்வேறு வடிவங்களை கொண்டதோ அதே போன்று மனிதர்களும் பல்வேறு முகங்களை கொண்டார்கள்.ஆங்கிலேயர்கள் நம்மை மேய்ப்பதற்காகவே மாகாணங்களாக இந்தியாவை பிரித்தார்கள் அதன் தொடர்ச்சியாக மீண்டும் சிலரின் தூண்டுதலால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.அப்படி பிரிக்கப்பட்டதற்கு பின்னரும் அது நிற்கவில்லை ஆந்திரம் இரண்டாக பிரிந்து இருக்கின்றது. அரசியல் காரணங்களுக்காக நிர்வாக ரீதியில் பிரிக்கப்படும் புவியியல் எல்லை கொண்டு ஒரு சமூகத்தை தொடர்பில்லாத இரு வேறு சமூகம் என கொள்ள முடியாது. 1947க்கு முன் பாகிஸ்தானியர்களும் இந்தியர்களே. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை உருது என்கிற மொழி ஹிந்தி என்றே அறியப்பட்டது.மொழியை கொண்டும், நிர்வாகத்தை எளிதாக்க பிரிக்கப்படும் எல்லைகளை கொண்டும் இனங்களை வேறுபடுத்துவது நிச்சயம் முதிர்ச்சியற்ற நியாயமற்ற அடிப்படையற்ற செயல்.அதிகார வேட்கையே பாகிஸ்தானை உருவாக்கியது. அதிகார வேட்கையே தெலுங்கானாவை உருவாக்கியது.

சமய நம்பிக்கைகளை கடந்து அரசியல் விருப்பு வெறுப்புகளை கடந்து இந்தியர்கள் ஒவ்வொருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருத நூல்களை படித்தறிய வேண்டும். அப்படி படித்தறிந்தால் மட்டுமே இந்தியர்கள் என்கிற உணர்வோடு, நாம் அனைவரும் ஒன்று என்கிற புரிதலோடு நாம் இந்தியன் என்கிற பெருமிதத்தோடு இருக்க முடியும். இன்றைய அரசியல் விளையாட்டுகளால்  சில வருடங்களுக்கு முன்னர் தேசத்தின் மீது இருந்த மதிப்பும் உணர்வும் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. ஒரு தேசம் என்பது எல்லைகளால் கட்டமைக்கப்படுவது அல்ல. அங்கு வாழும் மக்களின் உணர்வுகளால் கட்டமைக்கப்படுவது. இன்று அந்த உணர்வு அரசியல் வெறுப்புக்களால் மழுங்கடிக்கப்பட்டு வருவதோடு முற்றிலும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். வ.ஊ.சிதம்பரனார், முத்துராமலிங்கனார்,சுபாஷ் சந்திர போஸ்,பாரதியார்,ஜாகிர் உசேன், மௌலான அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் இன்று இருந்திருந்தால் “இந்தியா என்கிற நாடு எங்கு இருந்தது; அது உருவாக்கப்பட்ட நாடு தானே” என்னும் அடாவடித் தனமான பேச்சை கண்டு கிளர்ந்தெழுந்திருப்பார்கள்.

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும் அது பாரதமாக,இந்தியாவாகவே அறியப்பட்டு இருக்கின்றது.

அரசியலமைப்பும் அரசியலும்

ஒன்றிய அரசு என்கிற சொல்லாடலை பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை. அது உள்நோக்கத்தோடு கையாளப்படும் போதே தேசிய உணர்வு கொண்டவர்களை அச்சம் கொள்ள செய்கிறது. நிர்வாக அமைப்பில் ஒன்றிய அரசு என்னும் வரை அங்கே எந்த அச்சமும் இல்லை.

இவர்கள் இந்தியாவையே ஒன்றியமாக சித்தரிக்க முயல்வது தான் கவலையளிக்கிறது.அதிலும் சீமான் போன்றவர்கள் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் ஒப்பீடு செய்வது நிச்சயம் வருத்தமும் சீற்றமும் கொள்ள செய்கிறது.

மண்டேலா அவர்கள், கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது இங்கு பலர்,அவர்களுக்கு பிடிக்காதவர்கள் நமக்கும் பிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கூறியிருப்பார்.இந்திய அரசியலில் அரசியல்வாதிகள் அவர்களின் அதிகார பசிக்கு அத்தகைய போக்கையே கடைபிடிக்கிறார்கள். அதன் வெளிப்பாடே புதிதாக இவர்கள் பயன்படுத்தும் இந்த சொல்லாடல்.

இந்திய அரசியலமைப்பில், ஒன்றியம் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ஒன்றிய அரசு என்கிற பயன்பாடு இல்லை. அதே வேளையில் மத்திய அரசு என்கிற சொற்கூறுசட்டப்பிரிவு 243 இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.இது 2011 இல் சேர்க்கப்பட்ட அரசியலமைப்பின் 97வது சட்ட திருத்தம்.அப்போது மத்தியில் இருந்த ஆட்சியோடு கூட்டணியில் இருந்ததன் காரணமாக அவர்களுக்கு சாதகமாக ஒரு அரசு இருந்ததன் காரணமாக இதை சுட்டிக்காட்டாமல் இருந்திருக்கலாம்.

அரசியலமைப்பை சுட்டி காட்டும் இவர்கள் தான் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை மறக்க முடியாது(இங்கு நாம் ஒரு கட்சியை பற்றி பேசவில்லை). அரசியலமைப்பில் சட்டப்பிரிவு 370ஐ பற்றி கூறும் போதே அது தற்காலிகமானது என்று சுட்டப்பெற்று இருந்தது. அதை நீக்கியதை அராஜகமாக பார்த்தவர்கள் தான் இன்று அரசியல் காரணங்களுக்காக வழக்கத்தை மாற்றி ஒன்றியம் என்கிற சொற்கூற்றை பயன்படுகின்றார்கள்.

சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்று சுட்டப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் பகுதி

மத்திய என்னும் சொல் முதன்மையானது என்றோ அனைத்துக்கும் தலைமை என்றோ பொருள் இல்லை.அதற்கு மையம் என்று பொருள். இந்த மத்திய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை கொண்ட ஒரு அமைப்பே. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய மக்களுக்கு மையமாக செயல்படும் அரசை மத்திய அரசு என்று அழைப்பதில் என்ன கெட்டு விட போகிறது?

மத்திய அரசு  என்கிற சொற்கூற்றில் தவறில்லை என்பது போல ஒன்றிய அரசு என்கிற சொற்கூற்றிலும் ஒரு தவறும் இல்லை வெறுப்பு அரசியலை தவிர.

இது வெறுப்பு அரசியல் இல்லை என்பவர்களுக்குசட்ட பிரிவு 243ZR ஐ மீண்டும் நினைவு கூறுவதோடு மாநில நிதி அமைச்சரின் உரையில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை சுட்டும் போது மத்திய அரசு என்றும் தற்போது இருக்கின்ற அரசை சுட்டும் போது ஒன்றிய அரசு என்று குறிப்பிடத்தையும் சுட்டிக்காட்ட விளைகிறேன் . 

அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் பாதுகாப்பற்ற உணர்வை பெற்ற கட்சிகளுமே ஒன்றிய அரசு என்னும் சொற்கூற்றை சொந்த அரசியல் விருப்பு என்பது வெறுப்புகளுக்காக கையாள்கிறார்கள் அவர்களது செயல்பாடுகள் மூலம் தெளிவாகிறது.  

https://kathirvijayam.com/wp-content/uploads/2021/06/205356584_586968932273278_4396898041815958935_n-1.mp4
சட்டசபையில் காங்கிரஸ் ஆடசியை சுட்டும் போது மத்திய அரசு என்று கூறும் நிதியைமயச்சர்
சட்டப்பிரிவு 243ZH மற்றும் 243ZR

அரசியலமைப்பில் அதிகார பகிர்வைப்பற்றி தெளிவுபடுத்தியிருந்தும்; அந்த அதிகார பகிர்வுகளில் மாற்றம் கொண்டு வர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தான் முடியும் என்று தெரிந்து இருந்தும்; சுயாட்சி என்கிற போர்வையில் வெறுப்பையும் பிரிவினையும் வளர்ப்பவர்களின் போக்கை இந்தியர்கள் ஆதரிப்பதில்லை. குறிப்பாக தமிழர்கள் ஆதரிப்பதில்லை.

உயிரியியலில் மத்திய நரம்பு மண்டலம் என்கிற சொற்கூற்று நரம்பு மண்டலத்தை சுட்ட பயன்படுத்தப்படுவதுண்டு. ஒவ்வொரு செல்களும் தனித்து இயங்கவல்லது; ஒவ்வொரு உறுப்பும் தனித்து இயங்கவல்லது. மத்திய நரம்புமண்டலத்திற்கு தேவையான ஆற்றலை செரிமான மண்டலமும் அதை கொண்டு சேர்க்க ரத்த ஓட்ட அமைப்பும் தான் உதவுகிறது. ஆனால், இந்த மத்திய நரம்பு மண்டலமே எல்லா உறுப்புக்களின் செயல்பாடுகளையும் மையமாக இருந்து ஒருங்கினைக்கிறது.  அப்படியான வேலையை செய்யும் அரசாங்கத்தை இது நாள் வரையில் மத்திய அரசாங்கம் என்று சுட்டி வந்ததில் எந்த தவறும் இல்லை. இனி அப்படி அழைப்பதால் எந்த அசம்பாவிதமும் நிகழ்த்துவிட போவதில்லை என்பது, அரசியல் வெறுப்புகளின்றி அரசியலமைப்பை புரிந்து கொண்டவர்கள் அறிந்திருப்பார்கள்.

அரசியலமைப்பில் நிர்வாகத்தை ஒன்றியமாக சுட்டியிருக்கின்றார்களே தவிர இந்தியாவை அவ்வாறு சுட்டவில்லை.அது அல்லாமல் சில இடங்களில் “state” எனும் வார்த்தை மத்திய அல்லது ஒன்றிய அரசாங்கத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது . பல இடங்களில் இந்தியா என்பது ஒரு நாடு என்பதை வலியுறுத்தும் சரத்துகளும் இருக்கின்றது.

நிர்வாக ரீதியிலாக இந்திய அரசு,ஒன்றிய அரசு, மத்திய அரசு , பொது அரசு என்று எப்படியும் சுட்டலாம். ஆனால், இந்த வார்த்தைகள் அரசியல் லாபங்களுக்காக தேசிய உணர்வுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாக இருக்க கூடாது.அதேபோல, ஜெய்ஹிந்து என்பது மத சார்ந்த அல்லது கட்சி சார்ந்த கோஷம் இல்லை. அதை ஆளுநர் உரையில் இருந்து  நீக்கியதற்கு பெருமை பட்டுக்கொள்ள என்பதையும் நாம்  புரிந்து கொள்ள வேண்டும்.

Federal என்னும் கூட்டாட்சி பற்றி அரசியலமைப்பில் பேசவில்லை.இந்திய நிர்வாகம் என்பது முழுதும் federal இல்லை. சீமான் மற்றும் திராவிட இயக்கத்தினரின் போக்கு அதை நோக்கியதாகவே இருப்பதை இங்கு அநேகர் உணரவில்லை. கட்சி சார் விருப்பு வெறுப்பு அவர்களை உணரவிடாமல் செய்கிறது . அவர்கள் போற்றும் அதே அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்பை வடிவமைத்தபோது இந்தியாவை ”federal union of states” என்று சுட்டாமல் இருந்ததற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. அவ்வாறு சுட்டி இருந்தால் வழக்கத்தை மாற்றி புதிதாக வரும் இந்த ஒன்றியம் என்கிற சொற்கூற்று எல்லாவிதத்திலும் சரியானது என்று வாதிடலாம்.அப்படி சுட்டவில்லை என்கிற போது  நீங்கள் இதை ரசிப்பீர்களானால்; இதை ஏற்பீர்களானால் அரசியல்வாதிகள் விதைத்த வெறுப்பு உங்களுக்குள் ஆழ வேரூன்றி விட்டது அதை நீங்கள் நினைக்காமல் மாற்ற முடியாது.

“கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை”என்று ஒரு வழக்காடல் உண்டு அது போன்றதே புதிதாக கிளப்பப்படும் இந்த ஒன்றிய அரசு எனும் சொற்கூற்றை சுற்றிய அரசியல்.

Error happened.
Exit mobile version