கதிர் விஜயம்

திருவாசகம்-8: வார்த்தைகளின் முக்கியத்துவம்

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

ஒவ்வொரு பகுதியையும் தொடங்குவதற்கு முன், பற்பல எண்ணங்களும் சிந்தனைகளும் எழுவதுண்டு. ஆனால், எல்லாவற்றையும் எழுதிக்கொண்டு இருந்தால், எதையுமே யாரும் படிக்கமாட்டார்கள்.

மாணிக்கவாசகர்: (இப்ப அப்படி எத்தனை பேர் படிக்கிறாங்க தம்பி!)

இந்த எண்ணங்களை கட்டுப்படுத்தி, எழுதும் போதே எதை சேர்க்க வேண்டும்; எதை நீக்க வேண்டும் என்று தீர்மானிப்பது பெரும்
சிரமம்.இதில் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது அதை விட சிரமம். ஆனால், எழுத தொடங்கிவிட்டால் எதை நீக்க வேண்டும்; எப்படி தொடங்க வேண்டும் என்று எதை பற்றிய சிந்தனையும் எழுவதில்லை. அது எப்படியோ நடந்துவிடுகிறது.நடத்துவது அவன் என்கிற பொழுது நடப்பதை பற்றி நாம் சிந்தித்துக்கொண்டே இருந்து என்ன ஆகப்போகிறது. சிந்தித்துக்கொண்டே இருந்தால் எதுவுமே நடக்காது.இது போல,

மாணிக்கவாசகர்: (இந்த இடத்தில் உங்கள் எண்ணத்தில் ‘எது போல?’ என்ற அசரீரி ஒலிக்க வேண்டும். அதுக்கு பின் நம்ம தம்பு, கதை அல்லது கவிதை சொல்ல ஆரம்பிப்பார்)

வெளியிடப்படாத ‘ஊமை வார்த்தைகள்’ எனும் கவிதை தொகுப்பில் இருந்து

போன பகுதியில் ஒரு பள்ளிப்பருவப் பையனைப்பற்றிய கதையை பார்த்தோம் தானே? அவன் கதையில், பள்ளி பருவம் முடிந்தவுடன். அவனும் அவளும் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு அமையாமல் போகிறது. அவள் எந்த கல்லூரியில் சேர்ந்தாள் என்பதும் கூட வெகு தாமதகமாவே அவனுக்கு தெரியவருகிறது.சில வருடங்கள் கழித்து, ஒரு வழியாக இருவருக்கும் பரீட்சியப்பட்ட ஒருவர் மூலம் அவளிடம் பேசும் வாய்ப்பை அவன் ஏற்படுத்திக்கொள்கிறான்.அப்படி பேச ஆரம்பித்த பின்னால், ஒரு நாள் சந்தித்தும் கொள்கிறார்கள். ஆனால், இத்தனை பெரிய இடைவெளிக்கு பின் பேச கிடைத்த வாய்ப்பிலும் அவன் கொண்டிருந்த அன்பை அவன் வெளிகாட்டிக்கொள்ளவேவில்லை.அடுத்த சில மாதங்களிலேயே, அவனிடம் அவள் பேசாமல் இருந்துவிடுகிறாள். அவன் மீண்டும் தேடுகிறான்.பேசிக்கொண்டிருந்த நாட்கள் தந்த நினைவுகளை கவிதைகளாய் எழுதுகிறான்.அந்த நினைவுகள் தந்த (60%) கவிதைகளோடு தான் எழுதிய மற்ற சில கவிதைகளையும்(40%) சேர்த்து ஊமை வார்த்தைகள் என்கிற பெயரில் தொகுத்து வைக்கிறான்.ஆனால்,அதனை வெளியிடவில்லை அல்லது வெளியிட முடியவில்லை.அந்த கவிதை தொகுப்பிற்கு பின்னர் எழுதப்பட்ட கவிதைகளை கூட வெளியிட்டுவிட்டான்.

என்ன காரணமா இருக்கும்?

என்ன காரணம் என்று சொல்வதற்கு முன், உங்களுக்கு மற்றுமொரு கதையை சுருக்குமாக சொல்லவேண்டும்.

இந்த கதை, இலங்கை ஜெயராஜ் அவர்கள், அவரின் சொற்பொழிவுகளில் ஒன்றின் இடையில் சொன்னது.

“குலோத்துங்க சோழனின் அவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர் தான் சேக்கிழார்.
மன்னர் சிற்றின்ப நூல்களை படிப்பது, மன்னர்கோ மக்களுக்கோ நற்பயனை நல்காது என்று நினைத்த சேக்கிழார், மன்னரிடம் சென்று தன் எண்ணத்தை எடுத்துச்சொல்கிறார்.
மன்னரும், “அப்படியென்றால் என்ன படிக்கலாம் என்பதையும் நீங்களே சொல்லுங்களேன்” என்கிறார்.
“நாயன்மார்களின் கதைகளை படிக்கலாம்” என்கிறார் சேக்கிழார்.
அன்று வரையில் நாயன்மார்களின் கதை, ஒரு நூலாக தொகுக்கப்பட்டு இருக்கவில்லை.

மன்னர் சேக்கிழாரிடமே, “நீங்களே நாயன்மார்களின் வரலாற்றை தொகுத்து நூலாக எழுத வேண்டும்” என்கிறார்.
நாயன்மார்களின் வரலாற்றை நூலாக தொகுத்து எழுதுவது சாதாரண விஷயமில்லை என்று நினைத்த அவர். அமைச்சர் பொறுப்பை துறந்துவிட்டு, இறைவன் அருள் இல்லாமல் இந்த நூலை இயற்ற முடியாது என்கிற முடிவில், சிதம்பரம் செல்கிறார்.
அங்கே தான் வந்த நோக்கத்தை மனதால் இறைவனிடம் சொல்லி,இறைவன் முன்னால் அமர்ந்துவிடுகிறார்.

சேக்கிழாருக்கு “உலகெல்லாம்” என்று அசரீரி கேட்கிறது.
இறைவனே,”உலகெல்லாம்”என்கிற வார்த்தை எடுத்துக்கொடுத்து அந்த நூலை எழுத வைக்கின்றான்.

அசரீரி என்பது, நமக்கு மட்டும் நம் உள்ளத்தில் கேட்பது.சினிமாக்களில் காண்பிப்பது போல காதுகளில் ஒலிப்பது அல்ல.” இது தான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் மூலம் கேட்டறிந்த அந்த கதை.

நாம் ஒரு எண்ணத்துடன், இறைவனை நோக்கி நம் சிந்தனையை செலுத்தும் பொழுது, நம் சிந்தையில் இருந்தே இறைவன் அதை நிறைவேற்ற வழி செய்கிறான்.

இதில், உலகெல்லாம் என்கிற வார்த்தையின் சிறப்பு பற்றி பேசிய இலங்கை ஜெயராஜ்,
“ஓம் என்கிற வார்த்தை, ‘ஆ’ ‘உ’ ‘ம்’ என்கிற மூன்று எழுத்துக்களை கொண்டது. இதில் ‘ஆ’ படைத்தலை குறிப்பது; ‘உ’ நிலைத்தலை குறிப்பது; “ம்” முடிவை குறிப்பது. இந்த உலகெல்லாம் என்கிற வார்த்தையில் இந்த மூன்று எழுத்துக்களும் வந்துவிடுகிற படியால் ஓம் என்று ஆரம்பித்தாகி விடுகிறது. அதிலும் நிலைத்தலை குறிக்கும் ‘உ’ கொண்டு தொடங்கியதால் இந்நூல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றது. இதன் காரணமாகவே பெரியோர்கள் எதையும் தொடங்கும் முன் ‘உ’ போட்டு தொடங்குகிறார்கள்.” என்றார்.

‘உ’லகெல் (ல்+’ஆ’ =)லா ‘ம்’

(I am stunned)

இலங்கை ஜெயராஜ் அவர்களின் வலைப்பக்கத்தின் பெயரும் கூட உகரம். நாம் தமிழில் எந்த நூல்களை படிக்க வேண்டுமென்றாலும் இவர் போன்றவர்களிடம் தான் படிக்க வேண்டும். கம்பரின் கம்ப ராமாயணம் கூட “உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும்” என்று தொடங்குகிறது.

நம் முன்னோர்கள் தமிழையும் சமஸ்கிருதத்தையும் மந்திர மொழி என்கிறார்கள்.பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மிக கவனமாக நல்ல வார்த்தைகளை பேசி பழக வேண்டும்.இளையராஜா அவர்கள், எந்த மொழி என்றாலும் எல்லா வார்த்தைகளும் ஒரு ஆற்றல் இருக்கின்றது என்று சொன்னதாக கேட்ட ஞாபகம்.

உண்மை தான். இங்கு எல்லா வார்த்தைகளுக்கும் ஒரு சக்தி இருக்கின்றது.
கவிஞர் வாலி, பொதிகை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதைப் பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.பாடல்களை எழுதும் பொழுது எதிர்மறையான வார்த்தைகள் அமைந்துவிட்டால் அது எதிர்மறையான பலன்களை தந்து இருக்கின்றது என்றும். பலர் அப்படி அமையும் பொழுது அந்த எதிர்மறையான சொற்களை மாற்ற சொல்லி கேட்டு இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கின்றார்.வைரமுத்து அவர்களும் கூட எதிர்மறையான வார்த்தை ஒன்றை மாற்ற மறுத்துவிட்டு; பின்னர், பாடகி ஜானகி அவர்களின் வாழ்க்கையில் அந்த வார்த்தை ஏற்படுத்திய தாக்கத்தை சொல்லி வருத்தப்பட்டு இருக்கின்றார். இன்றைய தலைமுறை இசைமைப்பாளர்களுக்கு முந்தைய அத்தனை இசைமைப்பாளர்களும் இதில் கவனமாகவே இருந்து இருக்கின்றார்கள். ஒரு சிலரைத் தவிர.

இப்பொழுது சொல்லுங்கள், ‘ஊமை வார்த்தைகள்’ எப்படி அத்தனை சுலபமாக வெளி வரும். (பெயரை மாற்றி சில கவிதைகளை நீக்கி வெளியிடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றேன் ஹா!ஹா!.)

இது நாமாக தேர்ந்தெடுப்பதில்லை என்றாலும். பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஊமைவார்த்தை என்கிற கவிதை தொகுப்பில் ,ஒரு சில கவிதைகள் தவிர்த்து அனேகமான கவிதைகள் சோகமும் ஏக்கமும் பற்றியது. அந்த பெண் வாழ்வில் நடந்த சோகங்களை கேள்வி பட்டு சோகமான கவிதையையும் கூட எழுதி வைத்து இருந்தேன்.

மேலே நீங்கள் படித்த கவிதையின் இறுதி வார்த்தைகளை கவனியுங்கள்.பேசாமலேயே வைத்து இருந்து புதைக்கப்பட்ட வார்த்தைகள் எப்படி அத்தனை சுலபமாய் வெளிவரும்!
(மாணிக்கவாசகர்: தம்பி இத்தனை நேரம் யாரோ ஒரு தம்பியோடு கதை மாதிரி சொல்லி வந்தீங்க இப்ப expose பண்ணீட்டிங்க பாருங்க ஹா!ஹா! சரி இன்னும் திருவாசகத்திற்கு வரலை)

நம்முடைய வாழ்க்கையில், நாம் ஒவ்வொருவரும், மிகுந்த கடிமான நாட்களை சந்தித்து இருப்போம். அத்தகைய நிலைக்கு, நிச்சயம் நம்முடைய எண்ணங்களும் அதற்கு முந்தைய நாட்களில் நாம் உபயோகித்த வார்த்தைகளும் கூட காரணமாக இருக்கலாம்.மனதின் உதவியை கொண்டு ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிறது கீதை. நாம் வாழ்வின் சுகமான பகுதியில் இருக்கின்றோம் என்றால் நம்முடைய நல்ல வினைகளை (கர்மாக்களை)செலவழித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று அர்த்தம்.வாழ்வின் கடிமான பகுதியில் இருக்கின்றோம் என்றால் நம்முடைய தீவினைகளை (கர்மாக்களை)செலவழித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று அர்த்தம்.
நல்ல வினைகளால் நமக்கு நற்பலன்கள் கிடைக்கும் பொழுதே நாம் மேலும் நல்வினைகள் செய்து நற்பலன்களை தேடிக்கொள்ளவேண்டும்.வாழ்வின் சுகமான பகுதியில் இருக்கும் பொழுது நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் மிக கவனம் செலுத்தி நல்ல வார்த்தைகளே பேச வேண்டும்.

இத்தனை கதைகளை இந்த பகுதியில் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. திருமந்திரம் படிக்க வேண்டும் என்கிற ஆசையில்,படிக்க தொடங்கிய சில நாட்களிலேயே நிறைய நல்ல விஷயங்கள் நடந்தாக உணர்ந்தேன். தொடர்ந்து எதையும் படிக்கும் நல்ல பழக்கம் இருந்ததே இல்லை.ஆனாலும் அவ்வப்பொழுது படிப்பதுண்டு.

கடந்த இரண்டு வருடங்களாக எதுவும் சரியாக நடக்காமல் போனது போன்ற ஒரு எண்ணம்.அதிலும் கடந்த சில மாதங்கள் இன்னும் மோசம். இப்படியான சந்தர்ப்பங்களில் தான் நம்முடைய மனம் குற்றவாளி கூண்டில் ஏற்றுவதற்கு ஆள் தேடும்.நடந்த தவறுகளுக்கெல்லாம் காரணமாக ஒருவரை அல்லது ஒரு விஷயத்தை காரணம் சொல்லி குற்றவாளி ஆக்கிவிடுவோம்.

நம்முடைய மனதை போன்ற பயங்கரமானது எதுவும் இல்லை.ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் வரும் ஒரு நல்ல எண்ணங்களை பன்மைப் படுத்துவதை விட அதிவேகமாக எதிர்மறை எண்ணங்களை பன்மை படுத்திவிடும். என்னுடைய இந்த மனசு,”நீ திருவாசகம் எழுத தொடங்கிய பின் நிலைமை இன்னும் மோசம் அடைந்து இருக்கின்றது” என்றெல்லாம் சொல்கிறது.

(மாணிக்கவாசகர்: ஏன்டா!உனக்கு நான் தான் கிடைச்சேனா ?)

இந்த கேள்வி என்னை மேலும் சிந்திக்க செய்கிறது.
(“ஒருவேளை இருக்குமோ”)

திருவாசகத்தை பற்றியும் திருமந்திரத்தை பற்றியும் எனக்கு தெரிந்த வகையில் ஒப்பிட்டு பார்க்கிறேன்.மாணிக்கவாசகர் அளவிற்கு திருமூலர் தன்னை தாழ்த்திக்கொள்வில்லை.மாணிக்கவாசகர், திருவாசகம் முழுதும், தன்னை தாழ்த்திக்கொள்கிறார்.பல இடங்களில் தன்னை நாயுடன் ஒப்பிட்டு கொள்கிறார். தன்னை பாவி என்கிறார்.புலையன் என்கிறார்.மாணிக்கவாசகரை விட யாரும் இந்த அளவிற்கு தன்னை தாழ்த்திக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

இத்தனை எதிர்மறையான வார்த்தைகளை கையாண்டு எப்படி அத்தனை பெரிய நிலையை அடைந்தார்.அப்படியென்றால், மாணிக்கவாசகரின் வார்த்தைகளுக்கு எந்த சக்தியும் இல்லையா? அவர் எப்படி இறைவனோடு ஒன்றி தெய்வநிலைய அடைந்தார்?

நாம்,எப்பொழுதும் போல ரஜினியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ரஜினி பல இடங்களில் தன்னை தானே குறைத்து பேசியுள்ளார்.அதிலும் மற்றவர்களை உயர்த்தி தன்னை தாழ்த்தி பேசி இருக்கின்றார்.ரஜினியுடைய வார்த்தைக்கும் சக்தி இல்லையா?

நிச்சயம் இருக்கு.ரஜினி, தன்னை தாழ்த்திக்கொள்ளும் பொழுதும் பிறரை உயர்த்தி பேசும் பொழுதும் உண்மையையே தான் பேசுகிறார். இப்படி தன்னை தாழ்த்தி, பிறரை உயர்த்தும் பொழுது அவரின் அகங்காரத்தை அவர் தாழ்த்துகிறாரே ஒழிய தன்னையே தாழ்த்திவிடவில்லை.அதோடு எப்போதும் மற்றவர்களை உயர்த்திபேசுகிறார்.மற்றவர்களை உண்மையாக உயர்த்தி பேசும் பொழுது ஒருவகையில் நம்மை நாமே உயர்த்திக்கொள்கிறோம்.

தன்னுடைய வெற்றிக்கு, தான் ஒரு 10% சதவீதம் மட்டுமே காரணம்;தன்னை சுற்றி இருப்பவர்களும் இறைவனும் தான் 90% சதவீத காரணம் என்கின்ற பொழுது.அந்த 90% சதவீத விஷயங்களை தனதாக்கி தன்னை தானே வாழ்த்துகிறார் என்று தானே அர்த்தம். அதோடு,எல்லாவற்றிக்கும் இறைவனை கை காட்டும் பொழுது, அவரை அவரே உயர்திக்கொள்கிறார் என்று தானே அர்த்தம். எல்லோருள்ளும் இருக்கும்;எல்லாவற்றிக்குள்ளும் இருக்கும் இறைவன் தானே அவருக்குள்ளும் இருக்கின்றான்.மற்றவர்களை வாழ்த்தும் பொழுது நாம் இறைவனை வாழ்த்துவதாக தானே அர்த்தம். இறைவனை வாழ்த்தும் பொழுது நம்மையே வாழ்த்துவதாக தானே அர்த்தம்.

அதோடு, ரஜினி நடித்த அவரின் அநேகமான படங்களில் வரும் வசனங்களும் பாடல் வரிகளும் அதீத நேர்மறை ஆற்றல் கொண்டது. ஒரு பாத்திரத்திற்கு உயிர் ஊட்டும் எண்ணத்தில் அகங்காரம் இல்லாமல் அவர் உச்சரித்து உச்சரித்து அந்த வார்த்தைகளின் பலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார். “இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது” என்பதை பாடி நடிக்கும் முன் எத்தனை முறை கேட்டு இருப்பார்; எத்தனை முறை பாடியிருப்பார்.

இப்பொழுது திருவாசகத்திற்கு வாருங்கள்.தனக்கு என்ன தெரியாது என்பதை உணரும் பொழுதும்;தாம் என்ன தவறு செய்கிறோம் என்பதை உணரும் பொழுதும் தான் ஒருவர் தன் அகங்காரத்தை உடைக்கும் வண்ணம் தன்னை தாழ்த்திக் கொள்வார்.அதே வேளையில் இது நம்மால் நிகழவில்லை; இறைவன் நிகழ்த்துகிறான். இறைவன், நம்மை சுற்றி இருப்பவர்களை கொண்டும் நமக்குள் இருந்துகொண்டுமே தான் நடந்துகிறான் என்பதை உணர்ந்து; இறைவனை போற்றுகிறவர்கள்; தன்னையே போற்றி ஏற்றிக்கொள்கிறார்கள் என்று தானே அர்த்தம்.

திருவாசகம் முழுதும், மனிதனாக பிறப்பெடுத்து, ஜட இயற்கையின் விளைவால் தான் செய்யும் வினைகளை பழித்து, தன் அங்ககாரத்தை தாழ்த்தும் மாணிக்கவாசகர்; இறைவனை போற்றுகிறார்.இறைவனை வாழ்த்துகிறார்

தன் வினைகளை பழிக்கும் எதிர்மறையான வார்த்தைகளை திருவாசகத்தில் பயன்படுத்தி இருந்தாலும்;”உ” என்னும் நிலைத்தலை குறிக்கும் எழுத்தைக்கொண்டு திருவாசகத்தை அவர் தொடங்காவிட்டாலும்;
“நமச்சிவாய வாஅழ்க” என்று இறைவனை வாழ்த்தி தொடங்குவதன் மூலம், தன்னையும் சேர்த்து மொத்த பிரபஞ்சத்தையும் வாழ்த்தியே தான் திருவாசகத்தை தொடங்குகிறார்.இது நிலைத்தலை குறிக்கும் ‘உ’ என்கிற ஒலியை காட்டிலும் மேலான தொடக்கம் எனலாம்.அதன் காரணமாகவே, இன்னும் அந்த நூல் வாழ்ந்துகொண்டு இருக்கின்றது.மாணிக்கவாசகரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 
01 திருவாசகம்-சிவபுராணம்

நமசிவாய என்பதை நாம் material world இல் பெற்றுக்கொண்ட அறிவின் படி, நாம் அறிந்துவைத்து இருக்கும் கடவுள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.
இறைவனின் சொரூப நிலையை சொல்லும் ஒலி வடிவம்.

ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே

நாடுந் திருவடியி லே‘ந‘கரம் – கூடும்

‘கரம் உதரம் வளர்தோள் ‘சி‘கரம்

பகருமுகம் ‘வா‘முடி‘ய‘ப் பார்.

திருவதிகை மனவாசகம் கடந்தார் எழுதிய உண்மை விளக்கம்.

மேற்கண்ட பாடல் ஒலி வடிவான இறைவனின், பாதம்(ந),திருவுந்தி(ம) ,தோள்(சி),முகம்(வா),முடி(ய) என நமசிவாய எனும் இவ்வைதெழுத்து(சத்தம்) இருப்பதை சொல்கிறது.

“இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க” என்கிற அடியில், தான் எப்பொழுதும் இறைவனை நினைத்துக்கொண்டு இருப்பதாக சொல்ல நினைக்கவில்லை.அப்படி சொல்லி இருந்தால் அது தற்பெருமை பேசுவது போல ஆகிவிடும்.
அதோடு ஒருவரை நாம் மனதால்;அறிவால் நினைத்துக்கொண்டு இருந்தால் நிச்சயம் ஒரு கணமேனும் நினைக்காமல் இருக்கவோ அல்லது மறக்கவோ வாய்ப்பு இருக்கின்றது.

மாணிக்கவாசர் என்ன சொல்ல வருகிறார்? இறைவன் நமக்குள்ளேயும் தான் இருக்கின்றான் என்பதை தான் அப்படி சுட்டுகிறார்.தன்னில் இருந்து நம்மை பிறப்பித்தவன் எப்போதும் நம்மக்குள்ளேயே தானே இருப்பான்!(பகுதி-3 வானாகி மண்ணாகி பாட்டு பத்தி பாத்தோமா? படிக்கவில்லை என்றால் இங்கு கிளிக் செய்யுங்கள் திருவாசகம்-3: பொம்மை காதல்)

“ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க” இறைவன் ஒருவனே தான். அவன், தன்னில் இருந்து இந்த மொத்த பிரபஞ்சத்தையும் தோற்றுவித்து எல்லாமாமுக இருப்பதால் ஒருவனாக இருக்கும் இறைவன் எல்லாமுமாக ஆகி அநேகனாக இருக்கின்றான்.

"வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க"

ஏதேனும் கடினமான சூழல்களை கடக்கும் பொழுது,மனைவி சுற்றம் நட்பு என்று தொடங்கி திருவாசகம் படிக்கிறதனால் கூட நமக்கு நல்லது நடக்கவில்லையோ என்று காரணம் தேடுகின்ற வேகமான, சமயங்களில் கேவலமான மனஓட்டத்தை தொலைத்து ஆட்கொள்கிறான்; அவனுடைய அடி வெல்க என்று வாழ்த்துவதன் மூலம், மனம் எத்தனை வேகமாக ஓடக்கூடியது, அது வெல்லக்கூடாது; அதனை தடுத்து ஆளும் இறைவன் வெல்லட்டும் என்கிறார்.இப்படி தன்னை; தன் மனதை; தாழ்த்தி, இறைவனை போற்றியதன் மூலம் தன்னையே வாழ்த்தி உயர்திக்கொண்டார்.இப்படி தன் வினைகளையும் அகங்காரத்தையும் தாழ்த்தி இறைவனை வாழ்த்தி போற்றி எழுதப்பட்டதால் திருவாசகம் இன்றும் நிலைத்து இருக்கின்றது.

so,மக்களே! PRAISE THE LORD.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

ABUSE YOUR EGO BUT DO NOT ABUSE SELF AND OTHERS.நாம் கையாளும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

அப்பறம், தினமும் காலையில் திருவாசகமோ அல்லது வேறு நல்ல வார்த்தைகள் கொண்ட நூலோ படிக்க முயற்சி செய்யுங்கள்.அல்லது அதை விட சுலபமான வழி, எதாவது இரண்டு ரஜினி பாட்டு கேட்டு அந்த நாளை தொடங்குங்கள்.
“என்னோட ராசி நல்ல ராசி அது எப்போது பெரியவங்க ஆசி”

“உண்மையே சொல்வேன்! நல்லதே செய்வேன்! வெற்றி மேல் வெற்றி வரும்”

Error happened.
Exit mobile version