கதிர் விஜயம்

மொழி எதிர்ப்பு அரசியலும் மையமாய் அமர்த்தப்பட்டிருக்கும் ஹிந்தியும்

“ஒரு நாட்டிற்கு என்று பொதுவான மொழி தேவை தான் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அது சாத்தியமில்லை” இப்படி பொருள்பட  ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர் இந்த ஹிந்தி பஞ்சாயத்து சம்மந்தமாக கேள்வியெழுப்பிய போது  ரஜினி பதிலளித்தார்.

இந்த அளவிற்கு நிதானமாக ஒருவரால் சிந்திக்க முடியுமா! முடியும் என்று உணர்த்தாகவே இருக்கின்றது ரஜினியின் ஒவ்வொரு பதிலும் அரசியல் சார் ஒவ்வொரு முன்னெடுப்புகளும்.

நம் எல்லாருக்கும் அரசியல்வாதிகள் பழக்கப்படுத்திவிட்ட ஒன்று, அவர்களாக கிளப்பும் பிரச்சனைகளில் நம்மை வாதியாவகவும் பிரதிவாதியாகவும் ஆக்கி முட்டி கொள்ளச் செய்வது அதனையே எல்லாக் காலங்களிலும் சிறப்புற செய்துகொண்டிருக்கின்றோம்.நாம் இப்படி முட்டி கொண்டிருப்பதாலேயே பிரச்சனையின் எல்லா பக்கங்களையும்  எல்லா கோணங்களிலும் பார்க்க தவறுகிறோம் அதன் காரணமாக எல்லா பிரச்சனைகளும் அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்கு ஏதுவான தீனியாக அமைந்து பிரச்சனைகளோடு நாமும் இறையாகிறோம்.

 ஹிந்தி மும்மொழிக் கொள்கை மூலம் திணிக்கப்படுகிறதா?

மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிக்கப்படுகிறது என்னும் அசாதாரண சூழலை மீண்டும் நம்முள் கொளுத்திவிட்ட பொறி. புதிய கல்வி கொள்கை அறிவிப்பு வெளியான போது மூன்று மொழி படிக்க வேண்டும் என்றும் அதில் ஒன்று ஹிந்தியாக இருந்து பின் ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்றும் மாற்றப்பட்டது.

புதிய கல்வி கொள்கையை பொறுத்தமட்டில் நடுவணரசு மாநில  அரசுகள் கட்டயாமாக இதனை பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. மாநிலங்கள் அவற்றிக்கான கல்வி சார் சட்டங்களை இயற்றி கொள்ளலாம் என்றே விளக்கப்பட்டுள்ளது. ஆக , கல்வி கொள்கை என்பதே திணிக்க படாத போது கல்வி கொள்கையின் மூலமும் அதில் இருக்கும் மும்மொழி கொள்கையின் மூலமும்  மொழி திணிக்கப்படுவதாக வாதிடுவதில்லை எந்த வித நியாமும்  இல்லை. தாய் மொழி, ஒரு அந்நிய மொழி , தாய் மொழி அல்லாத தேசிய மொழிகளில் ஒன்று இப்படி மூன்று மொழிகளை படிக்க வலியுறுத்துவதாகவே மும்மொழி கொள்கை அமைந்திருக்கின்றது. இது ஒருவகையில் ஹிந்தி திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வேறு வடிவமாக கூட இருக்க முடியும் என்னும் ஐயமே பல குழப்பங்களுக்கும் வாதங்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. புதிய கல்வி கொள்கை வரைவின் படி அதில் எந்த குழப்பமும்  இல்லை. பிராந்திய மொழி அல்லாத பிற மொழிகளுக்கான ஆசிரியர்கள் நியமனத்திற்கு கூட சில பரிந்துரைகளை மாநிலங்களுக்கு முன் வைக்கின்றது.புதிய கல்வி கொள்கை வரைவின் படி அரசு எந்த விதத்திலும் ஹிந்தியை திணிக்க வில்லை என்பதை உறுதியாக சொல்லிவிட முடியும். அதனால் மும்மொழி கொள்கையை ஹிந்தி திணிப்பிற்கு காரணம் சொல்லி வாதிடுவது  அடிப்படையற்றது.

ஹிந்தி புதிதாக திணிக்கப்படவில்லை சட்டங்களாலும் கூட நம்மை மீறி நம் மீது திணிக்கவும் முடியாது. அது ஏற்கனவே பல வகைகளில் திணிக்கப்பட்டு தான் இருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் என்பது நம் ஊரில் பருவகால பாதிப்பு கோளாராகவே உள்ளது. மாநிலங்களில் உள்ள நடுவணரசு சார் நிறுவனங்களில் எல்லாம் ஹிந்தியில் பெயர் பலகைகள் படிவங்கள் என்பது புதிதாக நேற்று நிறுவப்பட்டதல்ல . நம்முடைய நடுவணரசு சார் அடையாள அட்டைகளில் கடவுசீட்டுகளில் ஹிந்தி என்பது இன்றைய ஆளும் கட்சியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதல்ல. இத்தனை  காலம் மொழி உரிமைக்காக போராடுவதாக தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் நடுவண் அரசில் பங்கு கொண்டிருந்த எந்த அரசியல் கட்சிகளும் இதனை மாற்ற எந்த ஒரு முயற்சியும் எடுத்தாக தெரியவில்லை.

இதையெல்லாம் தாண்டி, நம் மாநிலத்தில் அநேகமான  அல்லது 90 சதவீத தனியார் பள்ளிகளில் ஹிந்தியும் ஒரு பாடமாக இருந்தததை ஹிந்தி எதிர்ப்பாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவில்லை. இதை போன்ற இன்னும் சில காரணங்களால் உளவியல் ரீதியாகவே நம் மக்களிடம் மூன்றாவது மொழி என்று ஒன்றை தேர்வு செய்ய சொன்னால் அவர்களாகவே ஹிந்தி தெரிவு செய்வதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. சட்டங்களை அதிகம் மதிக்காத அல்லது மீறுகின்ற பெருங்கூட்டத்தை உள்ளடக்கிய  சமூகமாக மாறிவிட்ட  நாம் தான்  சில வரைவுகள் கூட நம்மை நசுக்குகிறது என்கிற போக்கில் எந்த ஒரு புதிய முயற்சியும் ஆக்கபூர்வமாக அணுகாமல் இரண்டு கூட்டங்களாக பிரிந்து ஆதரிக்கவும் எதிர்க்கவும் செய்து கொண்டு இருக்கின்றோம்.

பொதுவான மொழி அவசியமா?

இந்தியாவிற்கென்று பொதுவான ஒரு மொழியும் அவசியமானதே மறுப்பதற்கில்லை .இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துகொண்டமேயானால் அணியில் உள்ள 11 பேரும் 11 மொழி பேசுகிறர்வர்களாக இருந்தால் அணி எப்படி அணியாக இருக்க முடியும் அதற்கு தான் ஆங்கிலம் இருக்கிறதே என்று பேசும் நாம் தான் “எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க” கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றோம். தோனி எதிரணியினர் புரிந்து கொள்ள முடியாத வகையில் பந்து வீச்சாளர்களுக்கு ஹிந்தியில் யோசனை சொல்வதை பெருமிதத்தோடு பேசும் கூட்டமாக இருக்கின்றோம். இந்திய கிரிக்கெட் அணியை பொருத்தமட்டில் அது ஒரு தனியார் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் ஒரு அணி, லாப நோக்கத்திற்காக நடத்தப்படும் விளையாட்டு அணிக்கே ஒரு பொதுவான, எதிரணியினர் புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழி இருப்பது பெரிய சாதகமாக இருக்கிறது. இந்திய ராணுவத்தை எடுத்துக்கொள்வோம் அங்கும் ஆங்கிலமே பொதுவான மொழியாக இருந்துவிட்டு போகட்டும் என்று இருந்துவிட முடியுமா? பல்வேறு மொழிகளை தன்னகத்தே கொண்ட ஒரு சமூகம் நிர்வாக ரீதியிலும் ராஜாங்க விவகாரத்திலும் ஒரு அந்நிய மொழியை சார்ந்திருப்பது சகிக்க முடியாதது என்னும் வாதம் ஏற்புடையதே  

மொழி சார்ந்த ஆட்சியியல் ரீதியான அரசியல் எப்படி கையாள பட வேண்டும்

ஒரே மொழியை அதுவும் ஒரு கலப்பின இறக்குமதி செய்யப்பட்ட மொழியை இந்தியாவின் முகமாக காட்டுவதும் கட்டமைப்பதும் நிறுத்தப்பட வேண்டும்.

அறிவிப்பு பலகைகள் படிவங்கள் பொறுத்தமட்டில் common sense ஐ பயன்படுத்தினால் போதும். பொதுவான மொழியை விட  நுகர்வோருக்கு புரியும் மொழியாக இருப்பதே இந்த இடங்களில் அவசியமாக இருக்கின்றது சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் ஒரு பயணிக்கு கூட ஹிந்தி தெரிய வாய்ப்பில்லாத இடங்களில் ஹிந்தியில் அறிவிப்புகள்  இருப்பது தவிர்க்க வேண்டியது.

பொதுவான மொழி தேவைப்படுகின்ற துறைகளில் துறைக்கு ஒரு இந்திய மொழியை வைத்துக்கொள்வது இந்தியாவின் பன்முகதத்தன்மையை பாதிக்காத வகையில் அமையும். விளையாட்டு துறைக்கென்று ஒரு மொழி, ராணுவத்திருக்கென்று ஒரு மொழி என்று வைத்து கொள்ளலாம் . இது இரு துறைகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமான தொடர்பில் சில சிக்கலை ஏற்படுத்தினாலும் கூட அவை பெரிய சிக்கல்களாக இருக்காது.

மும்மொழி கொள்கை அவசியமா? தேவையா?.

அவசியமா என்று தெரியவில்லை ஆனால் தேவை இல்லாமல் இல்லை. நம் தமிழகத்தை எடுத்துகொண்டுமேயானால் பள்ளிகளில் உருது கற்பிக்க பட வேண்டும் என்ற கோரிக்கை வெகு காலமாக இருக்கின்றது. அதே போல நம் மாநிலத்தில் வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் இல்லாமல் இல்லை குறிப்பாக தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாகவே இருக்கும் நம் மாநிலத்தில் எல்லோர்க்கும் அவர்களின் தாய் மொழியை கற்பதற்கான உரிமை இருக்கின்றது என்கிற பட்சத்தில் தாய் மொழி, ஆங்கிலம் மூன்றாவது மொழியாக  அவர்கள் இருக்கும் மாநில மொழியை கற்பதை கட்டாயமாக்கலாம்.சமீபத்தில் குஜராத்தில் உள்ள தமிழ் வழிக் கல்வி தரும் பள்ளி மூடப்படுவதை தடுக்க நம் மாநில முதல்வர் கடிதம் எழுதியதை இங்கு நினைவு கூற வேண்டும்.காரணம்,வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழர்கள் அந்த மாநில மொழிகளோடு தமிழ் படிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டால் இப்படியான பள்ளிகள் மூடப்படுவதால் அந்த மாநிலங்களில் இருக்கும் வேற்று மொழி பேசும் வேறு மாநிலத்தவர்களை அது பெரிதும் பாதிக்காது.

ஒரு இந்தியனாக தன் தாய் மொழி இல்லாமல் மற்றும் ஒரு இந்திய மொழியை ஒரு இந்தியன் தெரிந்துவைத்திருப்பது வேறு வேறு மொழி பேசும் இந்தியர்களுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத்த ஒரு வழி வகுக்கும் என்பதை நான் நம்புகிறேன். பல மொழிகள் பேசும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த பன்னாட்டு சமூகத்தோடு வேலை செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கும் அனுபவத்தில் நான் உணர்ந்தது இது .நான் வேலை பார்க்கும் இடத்தில மலேஷியா வை சேர்ந்த சீனர்கள், தமிழர்கள் மலாய் யும் கற்று வைத்திருக்கிறார்கள் அவர்கள் மலேசியர்கள் அல்லாதோர் முன் சீனர்கள் தமிழர்கள் என்றில்லாமல் மலசியர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அதே மலையாளம் தமிழ் தெலுங்கு  வங்காளம் என வேறு வேறு மொழி பேசும் இந்தியர்கள் ஆங்கிலத்தின் உதவியோடு பேசும் நிலையே இருக்கின்றது. இது இந்தியர்களான நம்மை வெளியாட்கள் முன் ஒரு பிரிவு பட்ட என்பதை விட பிளவு பட்ட சமூகமாகவே காட்டுகிறது. என்னுடன் வேலை செய்யும் வங்காளி என்னுடன் பேசும் போது தமிழில் பேசுவார் . ஹிந்தி தெரிந்த மலையாளியுடன் பேசும் போது ஹிந்தியில் பேசுவார். மலையாளம் தெரிந்த தமிழர் மலையாளியுடன் மலையாளத்தில் பேசுவார். தாய் மொழி அல்லாத ஒரு இந்திய  மொழியை கற்றுக்கொள்வது நிச்சயம் பல்வேறு மொழி பேசும் கூட்டங்களாக இருக்கும் நம்முள் ஒரு நெருக்கத்தை உண்டு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறேன். அதே சமயம் இந்தியர்களாக வேறு நாட்டினர் முன், ஒருவர் பேசும் மொழி மற்றொரு இந்தியருக்கு புரியாது என்கிற நிலை இருக்க கூடாது என்றும் நினைக்கிறேன்.  

மாநில மொழியையே தாய் மொழியாய்  கொண்டவர்களுக்கு அவர்கள் தேர்ந்து எடுக்க விருப்பும் துறைக்கான இந்திய மொழியை கற்றுக்கொள்ள செய்யலாம்.

மூன்றாவது மொழி என்பதை ஹிந்தியாக பார்ப்பதும் ஹிந்தி கற்றுக்கொண்டால் தான் வேலைவாய்ப்பிற்கு பயன்படும் என்கிற நம் மன நிலையும்  மாற வேண்டும்.மும்மொழி கொள்கையை ஆதரிப்பது என்பது வேறு,ஹிந்தியை ஆதரிப்பது என்பது வேறு இரண்டிற்குமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

ஹிந்தியை எதிர்க்கிறேன் என்று காட்டிக்கொள்ளும் யாரும் உண்மையாக ஹிந்தியை எதிர்க்கவில்லை என்பதே உண்மை. பல மொழிகளை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகளில் அவர்கள் விருப்பும் மொழிகளிளேயே அரசு சேவைகள் இருக்க, நம் நாட்டில் அநேகமான நடுவண் அரசு சார் விஷயங்கள் ஹிந்தியில் இருப்பதே அதற்கு சான்று. இப்படி ஒரு போலியான ஹிந்தி எதிர்ப்பாளர்களை எதிர்ப்பதாக சொல்லி நான் ஹிந்தி படிப்பேன் என்று கிளம்புவதை காட்டிலும் அசட்டுத்தனம் வேறு இல்லை.” ஹிந்தி தெரியாது போடா ” என்பதும் “ஹிந்தி படிப்பேன் போடா” என்பதும் கட்சி சார் அரசியல் சண்டைகளாகவே இருக்குமேயன்றி எந்த காலத்திலும் ஆக்கபூர்வமான முன்னெடுப்பாக இருக்காது.

நாம் கற்றுக்கொள்ளும் மூன்றாவது மொழி, பன்முகத்தன்மையை ஆக்கிரமிக்காத மொழியாக பார்த்துக் கொள்வது சட்டத்தின் கையில் மட்டும் இல்லை. அது சமூகத்தின் பிடியிலும் இருக்கின்றது.பிரதானப்படுத்தப்பட்டுவிட்ட ஹிந்தியையே மூன்றாவது தேர்வாக நினைப்பதை இந்தியர்கள் எல்லோருமே மாற்றிக்கொள்ள வேண்டும்.தாய்மொழி அல்லாத மற்றுமொரு இந்திய மொழியை கற்றுக்கொள்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எல்லாரும் ஹிந்தியை தேர்ந்துஎடுக்காத பட்சத்தில்(அநேகமானவர்கள் தவிர்த்துவிட்டால்). அதோடு நிர்வாக ரீதியில் அவசியமற்ற இடங்களில் ஹிந்தி திணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அதனை நோக்கியே நம் எதிர்ப்பு இருக்க வேண்டும்.நாம் அப்படி செய்ததாக தெரியவில்லை ஏழு தசாப்பதங்களுக்கும் மேல் அதனை ஏற்றுக்கொண்டு இருக்கும் நமக்கு உண்மையில் இருப்பது மொழி உணர்வா? அல்லது நம் சார்ந்த கட்சிகளின் மீதான காதலா? கட்சி மீதான காதல் தான் பருவ கால மொழி எதிர்ப்பு உணர்வை தரும்.மொழி மீதான காதல் எந்த மொழியையும் வெறுக்க செய்யாது அதோடு தன் மொழிக்கு கிடைக்க வேண்டிய இடத்தை பெற்று தர வைத்திருக்கும்.

இந்தியாவில் பொதுவான ஒரு மொழிக்கான தேவையும் இருக்கின்றது அதே வேளையில் மொழி என்பது உணர்வு சார் விஷயமாக இருப்பதால் இங்கு அது சாத்தியமில்லை என்பது வரை புரிந்து வைத்திருக்கும் ஒருவரை தலைவராய் ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் நிச்சயம் முட்டாள் ரசிக கூட்டம் இல்லை. ஆக்க பூர்வமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் தூண்டவதற்காகவேனும் ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இருப்பதை காலம் தெரிந்தே வைத்து இருக்கின்றது.

Error happened.
Exit mobile version