உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில்,ஒரு காட்சியில் வரும் உரையாடல்
கதாநாயகன்: அநியாயம் எங்க நடந்தாலும் அதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது.
கதாநாயகியின் அப்பா: அப்ப உனக்கு வேலை வெட்டி கிடையாதா?
கதாநாயகன்: புத்திசாலி சார் நீங்க! எப்படி கண்டுபிடிச்சீங்க!
கதாநாயகியின் அப்பா: இப்ப அநியாயத்தை தட்டி கேட்கணும்னா வேலை வெட்டி இல்லைனா தானப்பா முடியும்.வேலை வெட்டி இருந்தா தான் அவன் duty க்கு timeஆச்சு னு போய்டுறான் ல
இப்படி போகிற போக்கில் வாழ்வியலோடு பொருந்திவிட்ட அரசியல் சகிப்புத்தன்மைகளை நகைச்சுவையோடு சொல்ல முடிந்த ஒரு ஊடகம் சினிமா ஊடகம்.அதே சினிமாவில் பெண்களுக்கு எதிரான வன்மங்களை தூண்டும் காட்சிகளும் இடம்பெறுவதுண்டு.
உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் வரும் காட்சியில் சொன்னது போன்று தான் இன்று அநேகமான சந்தர்ப்பங்களில் நடக்கின்றது.நியாயமோ? அநியாயமோ ? அநியாயத்திற்கு எதிர்க்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கின்றது. வேலை இருப்பவர்கள் எதையும் படித்து தெரிந்து கொள்ள கூட நேரம் ஒதுக்காததால், எதையும் எதிர்த்தே பழகிவிட்ட கூட்டம் செய்யவதையும் சொல்வதையும் மனதில் ஏற்றிக்கொண்டு விடுகிறது இந்த சமூகம். உதாரணம், சொல்லவேண்டுமாயின் சாலை வரி கட்டுறேன் அப்பறம் எதுக்கு சுங்க சாவடி என்பது போன்ற விசித்திரமான கருத்துக்களை புகுத்தும் தமிழை முழுதும் படித்தறியாத தமிழ் இன பிரியர்கள் கிளப்பிய கருத்துக்களை ஏற்று பழகியது போல. நிர்வாக அரசியலை புரிந்து கொள்ளாமல் கட்சிகளின் வெறுப்பு அரசியலுக்கு சிக்கி எது செய்தாலும் எதிர்க்க பழகிவிட்டோம்.அந்த வரிசையில் புதிதாக இணைந்து இருப்பது ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021.ஒரு சட்ட வரைவு மக்களின் கருத்துக்காக வெளியிடப்படும் போது பரிந்துரைகளும் கருத்துக்களும் எழுவதில்லை மொத்தமாக திரும்ப பெற வேண்டும் என்ற எதிர்ப்பு குரல்களே அதிகம் எழுவதை நம்மால் காண முடிகிறது.அதிலும், மிக நேர்த்தியாக நம்மை கையாள; நமக்குள் அவர்களின் கருத்தை திணிக்கும் வண்ணம் ஊடகங்களை கொண்டிருக்கும் குடும்ப ஆட்சியை ஆதரித்துவரும் குரல்களிடம் இருந்தே அநேகமான சந்தர்ப்பங்களில் எதிர்ப்பு வர காண்கிறோம். குடும்ப ஆட்சியை கொண்டாடி பழகிய கூட்டமாகிவிட்டு காலத்திற்கேற்ற சட்ட திருத்தங்களை மக்களாட்சிக்கு எதிரானது என்று கூவி அஞ்சுகிறோம்; திணிக்கப்படும் கருத்துக்களை நம் கருத்து என நினைத்துக்கொண்டு திரியும் நாம் தான் புதிய சட்ட திருத்தங்களை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கிளம்புகிறோம்.வார்டன்னு சொன்னா அடிப்போம் என்கிற கதையாக ஆளும் கட்சி(எல்லா காலங்களுக்கும் பொதுவாக) என்ன செய்தாலும் எதிர்ப்போம் என்கிற மனநிலையிலையே எல்லா காலத்திலும் நம்மை அரசியல்வாதிகள் வைத்துக்கொள்கிறார்கள்.
புதிதாக என்ன இருக்கின்றது இந்த புதிய மசோதாவில்
என்னுடைய மிக சிறிய வயதில்(6 அல்லது 7 வயதிற்குள்) மனிதர்கள் இயற்கையாக இறக்க கூடியவர்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. சுற்றி நடப்பவைகளையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளும் வயது அது. திரைப்படங்களில் வரும் கொலைகளை பார்த்து, கொல்லப்பட்டால் மட்டும் தான் மனிதர்கள் இறந்து போவார்கள் என்ற எண்ணம் எனக்குள் பதிய தொடங்கியது. அதன் காரணமாக உறவுகளுக்குள் ஏற்படும் சிறு சிறு சண்டைகளும் எனக்குள் பெரிய பயத்தை தந்தது. எங்கள் ஊரில் அந்த காலகட்டத்தில் அரசியல் ஊர்வலங்களால் நடக்கும் கலவரங்களும் அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் கொலைகளும் பரவலாக இருந்த சமயம்.கொலைகளால் மட்டுமே மனிதர்கள் இறக்க முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த எனக்கு,அந்த செய்திகள் சமூகத்தின் மீதான என்னுடைய பயத்தை இன்னும் அதிகரிக்கின்றது.இப்படியாகவே வன்முறைகள் ரசிக்கும் படியாக இருந்தாலும் குழந்தைகள் மனதில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத எந்த விதமான எண்ணங்களையேனும் அது ஏற்படுத்தும்.
சினிமாவில் வரும் காட்சிகள் ஒவ்வொவன்றும் பயம்,காமம்,குரோதம், வன்மம், தொடங்கி பல்வேறு உணர்வுகளை பெரியவர் சிறியவர் பேதமின்றி திணிக்கவல்லது.இப்படி குழந்தைகளும் பார்க்கக்கூடிய திரைப்படங்கள் 1952க்கு பின் தங்களின் உருவத்தில் எத்தனையோ மாற்றங்ககள் செய்த பின்னர் 1952இல் இயற்றப்பட்ட சட்டத்தில் மட்டும் பெரிய திருத்தத்தங்கள் செய்யப்படவில்லை.
இது நாள் வரையிலும், நம் நாட்டில் திரைப்பட தணிக்கையில் 4 விதமான சான்றிதழ்களே திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- “U”(unrestricted public exhibition)-எல்லாரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
- “A”(restricted to adult audiences)-18 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய திரைப்படம்.
- “U/A” (unrestricted public exhibition subject to parental guidance for children below the age of twelve) -12 வயதிற்கு குறைவானவர்கள் பெற்றோர்களுடன் பார்க்க கூடிய திரைப்படம்.
- “S” (restricted to specialized audiences such as doctors or scientists)-மருத்துவர்கள் விஞ்ஞானிகள் போன்ற குறிப்பிட்ட பிரிவினர் பார்க்க தடை செய்யப்பட்ட திரைப்படம்
தற்போதைய பிரிவில் “U/A” பிரிவை மூன்றாக பிரிப்பதற்கு புதிய சட்ட திருத்தம் வழி செய்கிறது. அதன் படி,
- “U/A 7+”7 வயதிற்குமேற்பட்டோர் பார்க்கக்கூடியது.
- “U/A 13+”13 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கக்கூடியது.
- “U/A 16+”16 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கக்கூடியது.
என்று மூன்றாக பிரித்து இருக்கின்றார்கள்.இது சமூகத்திற்கு அவசியமான சீர்திருத்தமே. திரைப்படங்களை இவ்வாறாக வகைப்படுத்தி சான்றிதழ் அளிக்கும் வழக்கம் பல நாடுகளில் பல காலமாக இருந்து வருவதும், OTT தளங்கள் இப்படி வயதுவாரியான ரேட்டிங்கைத் தங்களின் படைப்புகளுக்குக் காட்டவேண்டும் என்று மத்திய அரசு பணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. சட்டதிருத்தத்தின் இந்த அம்சத்தை எந்த கருத்து சுதந்திர போராளிகளும் வரவேற்றதாக தெரியவில்லை.உண்ணமையாகவே இருப்பினும்,நல்ல விஷயமாகவே இருப்பினும், அதனை வரவேற்கவோ ஆதரிக்கவோ செய்தால் இன்றைய சூழலில் சங்கி பட்டம் கட்டிவிடுவார்கள் என்கிற அச்சம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.அத்தகைய அச்சம் உடையவர்களும் அல்லது உண்மையை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினாலும் படிக்க மனமில்லாமல் வெறுப்பு மனநிலையில் இருந்துகொண்டு எதிர்ப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்று இருக்கின்றது.
இந்த சட்ட திருத்தத்தின் மீதான பரிந்துரை செய்த குழுவில் இருந்தவர்கள்
இந்த சட்ட திருத்தம் மீது மக்கள் கருத்து சொல்ல வெளியிடப்பட்ட அறிவிப்பின் முதல் பத்தியில் சொல்லப்பட்டதாவது, “திரைப்பட திருட்டை கையாள அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு (2019 )12.2.19 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தொடர்ந்து புதிய பிரிவு 6AA மற்றும் புதிய உட்பிரிவு 1ஐ 7ம் பிரிவில் சேர்க்க முன்மொழியப்பட்டது.அதன் தொடர்ச்சியாக 16.03.20 அன்று, இந்த திருத்தத்தின் மீதான 9வது அறிக்கையை தொலைத்தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இரு அவைகளிலும் எடுத்துதுறைத்தது.தொலைத்தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையையில் சுட்டிக்காட்டப்பட்ட பரிந்துரைகளை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2019ன் சில சரத்துகளை திருத்தியமைக்க முன்மொழியப்பட்டது.”
மத்திய அரசின் தற்போதைய அனைத்து நடவடிக்கையையும் ஆழ படித்தறியாமல்; காலம் காலமாக அரசாங்கம் எப்படி இயங்குகிறது என்ற புரிதலும் இல்லாமல்; அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்ட கருத்துக்களை பிடித்துக்கொண்டு அரசின் அத்தனை போக்குக்களையும் எதிர்த்து; அவர்கள் ஆதரிக்கும் கட்சிகளின் குறையை சுட்டிகாட்டுபவர்களையெல்லாம் சங்கி என்றும் காவி என்றும் கூவி பழகிவிட்டவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில், தொலைத்தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு சசி தரூர் ஆவார். 2014-2019இல் வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக செயலாற்றினார்.தற்போதைய தொலைத்தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் தி.மு.க. வை சேர்ந்த மதிப்பிற்குரிய தமிழ்ச்சி தங்கபாண்டினும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனை நாம் இங்கு குறிப்பிடுவதற்கான காரணம், சட்ட திருத்தங்கள்; பொருளாதார சீர்திருத்தங்கள் என்று எதுவும் கட்சிகளால் தன்னிச்சையாக முடிவு செய்யப்படுவதில்லை. இரு அவைகளின் உறுப்பினர்களை கொண்ட நிலைக்குழு, நிபுணர்குழு என்று அத்தனை தரப்பு கருத்துகளையும் பரிந்துரைகளையும் கேட்டு வரைவு இறுதி செய்யப்பட்டபின் மக்கள் கருத்தை கேட்க அறிவிப்பாகவும் வெளியிடப்பட்டு அதன் பின்னரே அவைகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமாகிறது.
ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும் பட்சத்தில் அதனை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்.
ஆனால், நாம் எதிர்ப்பு குரல் எழுப்பவதற்கு மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டு இருக்கின்றோம்.
வேறு என்ன அம்சம் உள்ளது?
நடப்பில் உள்ள சட்டத்தின் படி, ஒரு படத்திற்கு அளிக்கப் படும் சான்றிதழ் என்பது 10 வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இதனை நிர்வாக உத்தரவுகள் மூலம் விலக்கிக்கிக்கொண்டிருந்தாலும் சான்றிதழின் செல்லுபடித்தன்மையை சட்டபூர்வமாக நிலைக்க செய்ய சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதன் படி புதிய சட்ட திருத்த வரைவில் , சென்சார் சான்றிதழ் இனி காலக்கெடு ஏதுமின்றி ஆயுள் முழுவதுக்குமான சான்றிதழாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.10வருடங்களுக்கு ஒரு முறை சான்றிதழை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை .இது நிர்வாக சுமையை குறைக்கும்.
நடப்பில் உள்ள சட்டத்தில் திரைப்பட திருட்டு சம்மந்தமாக எந்த சரத்தும் இல்லை என்பதால் அது தொடர்பான சரத்துகள் 6A மற்றும் 7 1 A வில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் படி, படைப்பாளியின் எழுத்துபூர்வமான அனுமதி இல்லாமல் திரைப்படத்தின் எந்த ஒரு பகுதியையும் யாரும் பதிவு செய்வவதோ பதிவு செய்து பகிர்வதோ கூடாது. அதை மீறுபவர்களுக்கு 3 மாதம் முதல் 3 வருடம் வரை சிறை தண்டனையும் 3 லட்சம் அல்லது திரைப்படத்தின் மொத்த பொருட்செலவில் 5% அபராதமாக விதிக்கப்படும்.
ஏன் எதிர்க்கிறார்கள்?
நடப்பில் உள்ள சட்டத்தின் படி மத்திய அரசாங்கம் ஒரு படத்திற்கு எவ்வாறு சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது தொடர்பான நடவடிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை தொடர்ந்து திரைப்படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்த ஆணையிட முடியும் இருந்த போதிலும், கர்நாடக உய்ரநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில் ஏற்கனவே வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களைப் பொறுத்தவரை மத்திய அரசு சான்றிதழை திரும்பப்பெறுவோ மாற்றி அமைக்கவோ செய்யும் அதிகாரங்களை பயன்படுத்த முடியாது என்றும், தணிக்கை செய்த படங்கள் மீது எழும் பிரச்னைகளில் தலையிட மத்திய அரசு முறையான சட்டங்கள் இயற்றினால் அதற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.உச்சநீதிமன்றமும் அந்த தீர்ப்பை வழிமொழித்ததோடு சட்டமியற்றும் அவைகள் சரியான சட்டங்களை வகுப்பதன் மூலம் இதனை தெளிவுபடுத்தவும் சரி செய்யவும் வேண்டும் என்பது போன்ற கருத்து தெரிவித்து இருந்தது.
சான்றிதழ் அளிக்கப்பட்டு வெளியிடப்படும் டிரெய்லர் மற்றும் திரைப்படங்களுக்கும் கூட சமூகத்தில் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுவது வழக்கமானதோடு சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் சில கிளர்ச்சிகளையும் கூட உண்டு செய்கிறது. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கான வழியை உறுதி செய்யும் சரத்தை 6(1) சுட்டிக்காட்டியே எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டு இருக்கின்றது.
இந்த சட்ட திருத்தமானது ஏற்கனவே இருந்த சட்டத்தை தெளிவுபடுத்தும் வண்ணமே அமைந்து இருக்கின்றது.ஏற்கனவே இருந்த சட்டத்தின்படிபிரிவு 6(1) படி , மத்திய அரசாங்கம் சான்றிதழ் அளிக்கப்பட ஒரு திரைப்படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்த முடியும்.
மேலும்பிரிவு 5(ஆ ) படி ,சான்றிதழ் அளிக்கும் அமைப்பு , ஒரு திரைப்படம் அல்லது அதன் பகுதி எதுவும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அரசின் பாதுகாப்பு அல்லது அயல்நாடுகளுடனான நட்புறவு பொது ஒழுங்கமைதி, பண்புநலம்,ஒழுக்கநெறி,இவைகளின் நலன்களுக்கு எதிராக இருக்கின்றது அல்லது நீதிமன்ற அவமதிப்பை உள்ளடக்கியிருக்கின்றது பெரும்பாலும் குற்றச்செயல்களை தூண்டி விடுவதாக இருக்கின்றது என்று கருதுமாயின் அது பொது மக்கள் காட்சிக்கு என்று சான்றளிக்கலாகாது.
தற்போது திருத்தப்பட்ட சட்டத்தின் படி சான்றிதழ் அளித்த படத்தின் மீது ஏதேனும் பிரச்சனை எழுமானால், சான்றிதழ் அளிக்கப்பட்ட படம், பிரிவு 5(ஆ) (section5b) ல் சொல்லப்பட்ட இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு; அரசின் பாதுகாப்பு அல்லது அயல்நாடுகளுடனான நட்புறவு; பொது ஒழுங்கமைதி, பண்புநலம்,ஒழுக்கநெறி,இவைகளின் நலன்களுக்கு எதிராகவோ நீதிமன்ற அவமதிப்பை உள்ளடக்கியோ பெரும்பாலும் குற்றச்செயல்களை தூண்டி விடுவதாகவோ இருக்குமானால் அதனை மறுதணிக்கைக்கு உட்படுத்த மத்திய அரசிற்கு அதிகாரம் வழங்குகிறது.
அதாவது புதிய சட்டதிருத்தத்தின் படி சான்றிதழ் அளிக்கப்பட்ட திரைப்படங்கள், பிரிவு 5ஆ வை மீறுவதாக அறியப்பட்டால் அப்போது மத்திய அரசாங்கம் அந்த திரைப்படத்தை மறு தணிக்கைக்கு உட்டுப்படுத்த முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டு இருக்கின்றது.இதை தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று திரைத்துறையினர் எதிர்த்து வருகிறார்கள்.
அரசியல்வாதிகளுக்கோ, ஜாதியமைப்புக்களுக்கோ ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு திரைப்படத்தில் வரும் ஒரு வசனத்தையோ காட்சியையோ மாற்றியமைக்க இதுவரை முறையான சட்டம் தேவைப்பட்டதில்லை. இதற்கு முன்னர், திரைக்கலைஞர்களான எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் திரு.வெற்றிமாறன், திரு.கமலஹாசன் போன்றவர்கள் சான்றளிக்கப்பட்ட அவர்களின் திரைப்படத்தில் வந்த சில வசனங்களையும் காட்சிகளையும் சில நிர்பந்தத்தின் பெயரில் மாற்றியிருக்கின்றார்கள். அதையே அரசாங்கம் கையிலெடுத்து சட்டத்தின் மூலம் நெறிப்படுத்தும்(என்ன காரணங்களுக்காக என்று தெளிவுபடுத்தியும்)என்னும் போது எதிர்வினை ஆற்றுவதை என்ன சொல்ல! எதுவும் சொல்ல முடியாது! அது அவர்களின் கருத்து சுதந்திரம்.
சட்டத்தின்படி ,மேற்சொன்ன (பிரிவு 5ஆ section 5b)எந்த விஷயங்களுக்கும் குந்தகம் விளைவிக்காத எந்த படைப்பையும் யாரும் எந்த கேள்வியும் கேட்க போவதில்லை. கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நான் ஒருவரை போடா **** என்று கூறிவிட்டு என் சுதந்திரம் என்று இருந்துவிட முடியாது. என் எதிரில் இருப்பவர் அதற்கு எதிர்வினை ஆற்றும் போது அது சமூகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று ஆகிறது. அங்கே சட்டமும் அரசாங்கமும் தலையீடு செய்யக்கூடாது அது எங்கள் உரிமைகளுக்கு எதிரானது என்று கொடிபிடிக்க முடியாது.இது எல்லாருக்கும் புரியும் தான். ஆனாலும், என்ன செய்ய வெறுத்தும் எதிர்த்துமே பழகிவிட்டோம் அதோடு எதிர்கருத்தை பதிவு செய்வதென்பது அவர்களின் சுதந்திரம்.சட்டமாக்கப்படும் வரை பேசிவிட்டு போகட்டும்.அதற்கிடையில் சும்மா இருந்தீங்கன்னா வாங்க நாமும் ஒரு எதிர்ப்பை பதிவு செய்துவைப்போம் இல்லையேல் காவி சங்கி ஆகிவிடுவோம்.