கதிர் விஜயம்

வாக்கு வங்கி அரசியலின் பலம்-மதம்-சாதி-இட ஒதுக்கீடு-பிரிவினை

 

டந்த மாதம், ரோஹிணி தியேட்டரில் நடந்த விவகாரம் பற்றி அனேகமாக நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

 

பத்து தல திரைப்படத்தை காண வந்த பழங்குடியினராக அரசியல் சாசனத்தால் வகைப்படுத்தியவர்களாக அறியப்படுகிறவர்கள் , டிக்கெட் வைத்திருந்தும் திரையரங்க ஊழியர்கள் அவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்கவில்லை. உடனே அது மிக பெரிய சர்ச்சையானது, திரைப்பிரபலங்கள் வேகமாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.  இது ஒரு தீண்டாமை செயல் என்பது அவர்கள் கருத்து. முதலில் அவர்கள் அனுமதிக்கப் படாமல் இருந்தாலும் கூட திரையரங்க நிர்வாகம் அவர்களை அனுமதித்து, ஒரு விளக்க அறிக்கையோடு அவர்கள் திரைப்படத்தை காணும் விடியோவையும் வெளியிட்டு இருந்தது.

 

திரையரங்க நிர்வாகம், ஒரு பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம் அல்லது நேர்மையாக இது தான் காரணம், இதற்காகத்தான்  அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று தைரியமாக பொது வெளியில் சொல்லியிருக்கலாம்.  ஆனால், அவர்கள் கூடுமான வரையில் நியாயப்படுத்தபார்த்தார்கள்.  காரணம், பொது மன்னிப்பு அறிக்கைக்கோ அல்லது உண்மையை தைரியமாக சொல்வதற்கோ பேசுவதற்கோ இந்த சமூகம் எப்போதும் இடமளிப்பதில்லை.

வியாபாரிகளிடம் எப்போதும் ஒரு பொய் தன்மை இருக்க வேண்டிய கட்டாயத்தை நிர்பந்தத்தை இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்து இருக்கின்றது.

 

U/A சான்றிதழ் பெற்ற படத்தை குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை அதனால் தான் அவர்களை அனுமதிக்கவில்லை என்று திரையரங்க நிர்வாகம், நியாயப்படுத்தியிருந்தது. U/A சான்றிதழ் பெற்ற படங்களை குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களுடன் பார்க்கலாம்(under parental guidance) என்பது அவர்களுக்கு தெரிந்தே இருக்கும்.

 

நடந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு இந்த மொத்த சமூகமும் காரணம் என்றாலும் கூட, மாத சம்பளம் பெறும் இரண்டு ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

எப்படி இந்த சமூகம் காரணம்?

 

அந்த திரையரங்க ஊழியர்கள் அவர்களை அனுமதிக்காததற்கு நிச்சயமாக அவர்களின் ஜாதி காரணம் இல்லை.

அந்த ஊழியர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்ததற்கு காரணம் அவர்களுடைய தோற்றம்.சிந்தித்துப் பாருங்கள், எந்த வகுப்பினரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நல்ல ஒரு தோற்றத்தோடு ஒரு பெரிய ஆடம்பரமான காரில் வந்து ஒரு குடும்பம் இறங்கியிருந்தால், நிச்சயம் அவர்களை யாரும் தடுத்திருக்க மாட்டார்கள்.இந்த தோற்றம் தான் ஒருவகையில் ஒருவன் எத்தனை முன்னேறியிருக்கிறான் என்பதை வெளிப்படுத்துகிறது.

 

ஒரு தனி நபரோ அல்லது குடும்பமோ தங்களின் ஆரோக்கியத்திற்கும் வெளித்தோற்றத்திற்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர்களின் பொருளாதார நிலையே தான் தீர்மானிக்கிறது.மழை வெயிலுக்கு ஒதுங்க வீடில்லாதவர்கள் குடிப்பதற்கு சுகாதாரணமான தண்ணீரை கிடைக்கப்பெறாதவர்கள் குளிப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.வருடத்திற்கு எத்தனை புத்தாடைகள் வாங்குவது, பற்களை சரி செய்து கொள்வது, laser சிகிக்சை செய்துகொள்வது, இப்படி ஆரோக்கியம் தோற்றம் இவைகள் சார்ந்த விஷயங்களை அவரவரின் பொருளாதார நிலையே தான் தீர்மானிக்கிறது.

இந்த தோற்றம் தான் ஒருவரை நாம் எப்படி நடத்துகிறோம். எதை தேர்வு செய்கிறோம் என்பதையும் தீர்மானிக்கின்றது. ஒரு உதாரணம், ஒரு உணவகத்தில் சாப்பிட செல்லுகிறீர்கள்,அங்கே சென்றது, எங்கே இடம் காலியாக இருக்கின்றது அதில் எந்த மேசை சுத்தம் செய்யப்பட்டு இருக்கின்றது என்று பார்த்து தான் நாம் எங்கு உட்கார வேண்டும் என்று தீர்மானிக்கிறோம்.பொதுவெளியில் மனிதர்களிடமும் அதையே தான் நாம் எதிர்பார்க்கிறோம். யாரும் இதை மறுத்துவிட முடியாது.

 

ஈ.வே.ரா. தோன்றி மறைந்து விட்டார். சமூக நீதி பேசும் முன்னேற்ற கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு அரைநூற்றாண்டை கடந்துவிட்டது. ஆனால், இந்த மக்கள் இன்னுமும் அவர்களின் நிலையில் பெரிய முன்னேற்றம் அடையாமல் இருக்கிறார்கள் என்பதை யாருமே இங்கே பேசவில்லை. திரையரங்கத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட அவர்கள் ஒரு அதிகாரியாகவோ அல்லது ஒரு செல்வந்தராகவோ அல்லது இந்த சமூகத்தில் இருக்கும் மற்ற சாதாரணமானவர்கள் அளவிலோ என்று எந்த அளவிலோ அவர்கள் முன்னேற்றம் அடையவில்லை என்பதை நாம் கவனிக்க தவறுகிறோம். அன்றைய தேதிக்கு ஒரு கண்டனம் அங்கே மாதச் சம்பளம் பெறும் இரண்டு ஊழியர்களிடம் வாய் சவடால் விடுவது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்வது. அது நமக்கு போதுமானதாக இருக்கின்றது.

 

பட்டியலினத்தவராக வகைப்படுத்தப்பட்டு இருப்பவர்களில் இன்னும் பலரின் நிலை இன்னும் எந்த முன்னேற்றத்திற்கு உட்படாமல் இருக்கின்றது என்பது தற்போதைய இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள குறையைத் தான் எடுத்துக்காட்டுகிறது. அதில் சில சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.நாம் தான் அதை எதை கருத்தில் கொள்ளாமல் எப்போதும் போல் கண்டனம் தெரிவித்து, சமூக ஊடகங்ளில் கருத்து சண்டை போட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறோம்.

 

இத்தகைய சூழலில், தேவையில்லாத ஆணியாக தமிழக சட்டப்பேரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

 

கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்தாலும் பட்டியிலின சமூகத்திற்கு வழங்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அந்த தீர்மானம்.

 

பட்டியலின சமூகத்திற்கு இந்திய அரசியல் சாசனம் இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை அளித்ததற்கு எனக்கு தெரிந்த வரையில் இருக்கின்ற இரண்டு காரணங்கள்:

  1. சமூகத்தில் பொருளாதார ரீதியில், கல்வியில் பின்தங்கியிருக்கும் அவர்கள் முன்னேற்றத்திற்கு கை கொடுக்க வேண்டும்.
  2. சமூகத்தில் இருந்த, இன்னமும் ஆங்காங்கே தலை காட்டுகின்ற, பட்டியிலின சமூகத்திற்கு எதிரான ஒடுக்கு முறைகளை எப்போதும் அரசாங்கம் கண்காணித்து கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு அவர்களே ஒரு அரணாக அமைய வேண்டுமென்றால். அவர்கள் படிக்க வேண்டும். அரசு துறைகளில்,அதிகாரம் செலுத்துகிற இடத்தில் அவர்களுக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும்.

 

இந்த இரண்டு காரணங்கள்  தான் இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை வழங்குவதற்கு பிரதான காரணமாக இருக்க முடியும்.

 

 

சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு அரணாகவும் பொருளாதார ரீதியில் ஒரு முன்னேற்றத்திற்கு கை கொடுக்கவும் தான் இந்த இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் ஏற்படுத்தப்பட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

இந்த ஏற்பாடு முழுமையான வெற்றியை அடையவில்லை என்பதையே தான் ரோகினி திரையரங்க விவகாரம் நமக்கு காட்டுகிறது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மூன்று தலைமுறையினர் இந்த சலுகைகள் பெற்று மேலும் மேலும் மேம்பட்டு கொண்டிருக்க, இன்னமும் அந்த சலுகைகள் பற்றி அனுபவிக்காத அடித்தட்டு மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? இந்த பட்டியிலினத்தவர்களிலேயே இட ஒதுக்கீடு யாருக்கு கிடைக்க வேண்டுமென்பதை தீர்மானிக்க வழி ஏற்படுத்த வேண்டும். சலுகைகள் பெறுவதில் யாரை பிரதானபடுத்த வேண்டும் என்பதை அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.அதோடு முந்தைய தலைமுறையில் யாரும் அந்த சலுகைகளை அனுபவிக்காது இருப்பார்களெனின் அவர்களையே அதற்கு தகுதியானர்வர்களாக பிரதானப் படுத்த வேண்டும்.இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் இட ஒதுக்கீடு போன்ற சலுகையை பெற அவரின் சாதி, பொருளாதார நிலை, முந்தைய தலைமுறை பெற்ற சலுகை இவை மூன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

 

இப்படியான முன்னெடுப்புகள் அரசியல்வாதிகளின் வாக்கு வங்கி அரசியலை பாதிக்கும் என்பதால் அவர்கள் இதை பேசுவதில்லை. இந்த முன்னெடுப்புகள் தேவை என்பதையும் கருத்தில் கொள்வதில்லை.

 

மாறாக இப்போது, இந்த ஜாதி அரசியலை வைத்து, வாக்காளர்களாக இவர்களை ஒன்று சேர்த்து நம் பக்கம் ஈர்ப்பது எப்படி என்பதை யோசித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றார்கள்.அது தான் கிறிஸ்துவத்தை தழுவிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் கிடைக்க வேண்டும் என்கிற தீர்மானம்.

 

இந்த தீர்மானத்தை நாம் ஏன் தேவையில்லாத ஆணி என்று சாடினோம்.

 

இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அரண் என்பதை நாம் பார்த்தோம். ஒருவர் கிறிஸ்துவத்தை தழுவிய பின்னர், வேற்று சாதியினர் அவர்கள் மீது சாதிய ரீதியிலான எந்த ஒரு வன்முறையோ ஒடுக்குமுறையோ ப்ரோயோகிக்க வாய்ப்பில்லாமல் போகிறது.துரதிர்ஷ்ட வசமாக  அவ்வாறு நடந்தாலும் கூட அது இரண்டு மதங்களுக்கு இடையிலான பிரச்சனை ஆகிறது. மதம் என்கிற கூட்டமைப்பே அவர்களுக்கு அரணாக ஆகிவிட்ட பின் ஒரு அரணாகஇந்த சலுகைகள்  இருக்க வேண்டிய தேவை இங்கே இல்லை.

 

பொருளாதார ரீதியில் அதற்கான தேவை இருக்கின்றது என்கிற ஒரு வாதம் எழுமானால். எல்லா வகுப்பிலும் பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் எத்தனை பேர் இருக்கின்றார்கள். மிக முக்கியமாக பட்டியலின சமூகத்திலேயே இன்னும் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதையெல்லாம் அலசி ஆராயாமல், மதம் மாறியவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் தேவைப்படுகிறது என்கிற முடிவை எட்ட முடியாது.

 

மன் மோகன் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது, கமிட்டி அமைக்கப் பட்டு மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றதா என்பது ஆராயப்பட்டது. ஆனால், தரவுகள் அந்த தேவையை ஆதரிக்க போதுமானதாக இல்லை. உச்ச நீதிமன்றத்தில், எந்த மதத்தித்தனராக இருந்தாலும் பட்டியல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை அடுத்து அரசின் நிலைப்பாட்டை விளக்க உச்ச நீதிமன்றம் கேட்டு இருக்கின்றது. அதன் காரணமாய் மத்திய அரசாங்கமானது, 2022இல் மீண்டும் ஒரு கமிட்டி அமைத்து அதற்கான (delinking religion from caste  based reservation) தேவைப்பற்றி அலசி ஆராய்ந்து வருகிறது.

 

அதாவது ஏற்கனவே எழுந்த கோரிக்கைகளின் படி எந்த மதமாக இருந்தாலும், பட்டியிலன சமூகமாக இருந்தால் இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுப்பதுபற்றி ஆராயப் பட்டுவரும் வேளையில், கிறிஸ்துவர்களை மட்டும் குறிப்பிட்டு அவர்களில் பட்டியிலினத்தவருக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்கிற தீர்மானம், வாக்கு வங்கி போன்ற காரணிகளை மனதில் வைத்துக்கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகவே தெரிகிறது.

 

இந்த தீர்மானத்திற்கு கிறிஸ்துவர்கள் தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். மதம் மாறினால் தான் சனா தனத்தை ஒழிக்க முடியும் சாதியை ஒழிக்க முடியும் என்று பேசியிருக்கின்ற திருமா அவர்கள் எதிர்த்து இருக்க வேண்டும்.இவர்கள் யாருமே எதிர்க்கவில்லை.

 

 

ஒருவேளை மத்திய அரசு அமைத்து இருக்கும் கமிட்டியும் கூட எந்த மதமாக இருந்தாலும் சாதி அடிப்படியிலாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை மறுக்க கூடாது என்று பரிந்துரைத்தால். அது சாதியை வளர்க்கும் முடிவாகவே இருக்கும். நிச்சயமாக கிறிஸ்துவர்களுக்கு இடையே பல பாகுபாடுகள் இருக்கவே செய்கிறது. அதில் சாதிய பாகுபாடும் இருக்கவே செய்கிறது. இந்த தீர்மானத்தின் இருக்கும் கோரிக்கை படி  எதிர்காலத்தில் எந்த  மதமாக இருந்தாலும்  சாதிய ரீதியிலான சலுகை கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டால், அது சாதியை மேலும் ஊக்குவிக்க செய்யும். அதோடு கிறிஸ்துவர்களுக்கு இடையே ஏற்கனவே இருக்கும் பாகுபாடுகளை இன்னும் வளர்த்தெடுக்கும். அரசியல்வாதிகளுக்கு அது தான் தேவை.

 

தி.மு.க அரசாங்கம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பொழுது, முதல்வர் ஸ்டாலின், பேசியதில் கவனிக்க வேண்டியது எல்லா மக்களுக்கும் அவர்கள் விருப்பத்தின் பெயரில் குறிப்பிட்ட நம்பிக்கையையோ மதத்தைதையோ பின்பற்ற உரிமை இருக்கின்றது.

 

இதை கேட்கும் மக்கள் மனதில் எங்கிருந்து சார் உங்களுக்கு  இந்த ஞானம் பிறந்தது என்று கேட்க தோன்றும்.

அதோடு அவர் குறிப்பிட்ட மற்றொரு விஷயம்,” மதம் மாறினாலும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன் கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாகிறார்கள்”  என்பது

 

எந்த ஒரு சரியான தரவுகளின்  அடிப்படையிலும் அல்லாத இந்த குறிப்பை  பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆட்சேபிக்கப்பில்லை.

 

வரலாற்று ரீதியாக தலித்துகளாக இருப்பவர்கள் தலித்தாகவே கருதப்பட்டு அவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் நிலைப்பாடு.அதாவது பிறப்பின் அடைப்படையில் இந்த பாகுபாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.அவர்கள் இதை வைத்து அரசியல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

 

2022 லேயே அமைக்கப்பட்டு  இருக்கும் கமிட்டியானது, மதம் மாறிய பிறகும் அவர்கள் சாதிய ரீதியிலான வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை ஆராயும். கலப்பு திருமணம், பொருளாதாரம் என்று இன்னும் பல்வேறு காரணிகளை அது ஆராயும். அத்தனையும் ஆராய்ந்து தரவுகள் சமர்ப்பிக்கும். அவ்வாறு சமர்ப்பித்த பின் உண்மையில்   தேவை இருந்து அதில் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் நம் மாநில அரசு தீர்மானம் இயற்றியதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். எந்த ஒரு சரியான தரவுகளை அடிப்படையாக கொள்ளாமல் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது,கிறிஸ்துவ சபைகளின் ஆதரவால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது அவர்களுக்கான ஆட்சி தான் இது என்று திமு.கவினர் பேசியதின் வெளிப்பாடாக மட்டுமே தெரிகிறது. இதுவும் கூட மதம் அடிப்படைவாத அரசியல் தான். இதில் சமத்துவமோ சமூக நீதியோ ஒன்றும் இல்லை.

 

ரோஹிணி திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டவர்கள் எந்த மதத்தையும் எந்த நம்பிக்கையும் பின்பற்றுகிறவர்களாக இருக்க மாட்டார்கள்.எந்த நம்பிக்கையும் பின்பற்றாதவர்கள் by default hindu ஆகி விடுகிறார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கே  இன்னும் எந்த சலுகையும் கிடைக்காமல் இருப்பததை  நினைவுபடுத்திக்கொண்டு , இந்த கட்டுரை சுட்டிக்காட்டிய விஷயங்களை அசை போடுங்கள். நீங்கள் அப்படி செய்யவில்லையென்றால் உங்கள் பார்வையில் நான் சங்கியாகவும் என் பார்வையில் நீங்கள் உ.பி.யாகவும் தெரிய வாய்ப்பு இருக்கின்றது.

Error happened.
Exit mobile version