கதிர் விஜயம்

பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு! விஜயகாந்த் எனும் தே.மு.தி.க.!

“என்ன! இப்ப உங்க எல்லாரு வீட்டுக்கும் வந்தா? ஒரு ஒரு வேளை சோறு போடமாட்டீங்களா!?” இப்படியான வார்த்தைகளை துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு வாசிக்க முடியாது; சுவாசத்தில் கலந்திருந்து உணர்ச்சி தீவிரத்தால் விஜயகாந்த்திடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவை.

“இந்த அரசியல் யுத்தத்தில் எல்லாவற்றையும் தான் இழந்துவிட்டாலும் கூட என்ன ஆகிவிட போகிறது! எனக்காக இத்தனை பேர் இருக்கின்றீர்கள்; நீங்கள் எல்லோரும் ஆளுக்கொரு வேளை சோறு போட மாட்டீர்களா?” என்னும் அர்த்தத்தில் மக்களை பார்த்து விஜயகாந்த் கேட்ட கேள்வி அது.

வேம்பத்தூர்- விஜயகாந்த் பிறந்த ஊரோ வளர்ந்த ஊரோ அல்ல. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். தொண்ணூறுகளில், எனக்கு தெரிந்து வரையில் அந்த ஊரில் இருக்கும் அத்தனை வீடுகளிலும் விஜயகாந்த் இருந்தார். ஒவ்வொரு வீடுகளிலும், அலமாரியிலோ சுவற்றிலோ படமாகவோ அல்லது அந்த வீட்டில் இருக்கும் ரசிகரின் மனதிலோ என்று எல்லா வீடுகளிலும் விஜயகாந்த் இருந்தார். அங்கு இருந்தவர்கள் எல்லாம் வெகு தீவிரமான விஜயகாந்த்தின் பக்தர்களாக இருந்தார்கள்.அவர்கள் விஜயகாந்த் மீது கொண்டிருந்த அன்பு முரட்டுத்தனமானது. இப்படி தமிழகத்தின் அநேகமான கிராமங்களிலும் விஜயகாந்த்தின் பக்தர்கள் இருந்தார்கள். அந்த அத்தனை பக்தர்களும் ரஜினிகாந்த்தையும் நேசிக்கவே செய்தார்கள். இந்த கட்டுரையில் எதற்கு ரஜினி அதையும் கொஞ்சம் தாமதாக புரிந்து கொள்வீர்கள்.

திரையில் தோன்றும் விஜயகாந்தை யாரும் உதாசீனப்படுத்தி விட முடியாது. அவரின் எல்லா சண்டைக்காட்சிகளை எல்லா 90ஸ் கிட்ஸ்களை போல நானும் வாய் பிளந்து ரசித்து இருக்கின்றேன்.ஆனால், அன்பை வெளிப்படுத்துவதில் கூட அவரின் ரசிகர்களிடம் இருந்த முரட்டுத்தனமும்; விஜயகாந்தின் ரசிகர்களும் கூட நாம் ரசிக்கும் ரஜினியை ரசிக்கின்றார்கள் என்கிற பெருமிதமும்  சேர்ந்து திரைக்கு வெளியில் விஜயகாந்த் மீது எந்த பெரிய ஈர்ப்பையும் உண்மையில் கிட்ஸ் வகையறாவில் இருந்த காலத்தில் எனக்கு ஏற்படுத்தவில்லை. அதாவது விஜயகாந்த் ரசிகர்கள் மீதிருந்த பிடிப்பின்மை விஜயகாந்த் வரை நீண்டு இருந்தது.

சில வருடங்கள் கழித்து, விடுமுறையில் தாத்தா ஊருக்கு சென்றிருந்த பொழுது. மாலையில் அவரின் கடைக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அப்போது பதினைந்து வயதான என்னிடம் ஒரு எட்டு வயது சிறுவனை காட்டி சிரித்துக்கொண்டே, இவன் யாரு தெரியுமா? விஜயகாந்த்தின் கொள்கைப்பரப்பு செயலாளர் என்றார். அந்த தருணத்தில் நான் கொஞ்சம் நக்கலாகவே தான் சிரித்தேன். அங்கு எதிரே இருந்த தே.தி.மு.க பேனரை காட்டி அந்த சிறுவனிடம் யாரு இவரு என்றதற்கு அந்தச் சிறுவன் ,”எங்க தலைவர்! கேப்டன்!” என்றான். “இது ஒரு கட்சி! இதுக்கு ஒரு பேனர்! +இது வயசுக்கு என்ன தெரியும்!” என்று மேதாவித்தனமாக நினைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் திரிந்த எனக்கு அப்போது தெரியாது, விஜயகாந்த் ஏற்படுத்தி வைத்திருந்த தாக்கமும் திராவிட கட்சிகளின் சூழ்ச்சியும்.

பதினெட்டு வயது ஆனது. அந்த வயது வந்ததும் கையில் ஒரு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததும், நாட்டை திருத்தப்போகிறது போல் எல்லோருக்கும் வரும் எண்ணம் எனக்குள்ளும் வந்தது. வெகு தீவிரமாக அரசியல் செய்திகளை பார்க்கவும் கேட்கவும் படிக்கவும் செய்கிறேன். என் கைக்கு வாக்காளர் அடையாள அட்டை வரும் முன்னதாகவே விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்தார். அவர் சந்திக்கும் போகும் இரண்டாவது தேர்தல், நான் வாக்களிக்க போகும் முதல் தேர்தலாக இருந்தது. ஒளி ஊடங்களை தன் பக்கம் வைத்திருந்த திராவிட கட்சி அத்தனை வன்மங்களையும் விஜயகாந்தின் மீது வாரியிறைத்தது. சரி! நாம் என்ன செய்தோம்? அந்த திராவிட கட்சிகளின் கைப்பாவைகளாய் இருந்தோம். அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை அப்படியே பேசினோம்.
“இவன் ஒரு கோமாளி; இவனை யாரு அரசியலுக்கு வர சொன்னா?” இதே எண்ணங்களுடனே தான் நானும் இருந்தேன்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால், மதுரை வட்டாரத்தில் வெளிவரும் தினமலர் பதிப்பில் தேர்தல் களம் பற்றிய பகுதிகளில் துண்டுச்செய்தி அளவில் வாசகர்களின் எண்ணங்கள் பிரசுரிக்கப்படும்.அதில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார், “விஜயகாந்த் கூட்டத்தில் யாரையும் தண்டிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அதைவைத்து அவரை ஏளனம் செய்ய அதில் என்ன இருக்கிறது? அவர் அந்த கூட்டத்தில் ஒரு ஒழுங்கை எதிர்பார்க்கிறார், அந்த ஒழுங்கில்லாமல் போகும் பொழுது கோபத்தை வெளிப்படுத்துகிறார்” .

அந்த ஒரு வாசகரின் எண்ணம் தான் விஜயகாந்த் மீதான என்னுடைய பார்வையை மாற்றியது. சரி தான்! அவர் கூட்டத்தில் ஒரு ஒழுங்கை எதிர்ப்பார்க்கின்றார் தான். உணர்வுகளை உள்ளபடியே உள்ளது போல் வெளிப்படுத்துகிறார். அதில் எப்படி பொய்மை இருக்க முடியும்! அரசியல்வாதி விஜயகாந்தை தான் அதிகம் கவனிக்க ஆரம்பிக்கின்றேன்.

ஒரு ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர் ஆங்கிலத்தில், “வேலைவாய்ப்பு இல்லை என்று குற்றம் சொல்கிறீர்கள், நீங்கள் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்குவீர்கள் என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்” என்று கேட்கிறார்.அதை உதவியாளர் ஒருவர் தமிழில் விளக்கியதும், “இந்த இப்ப ரேஷன் பொருள் எல்லாம் வீட்டுக்கே கொண்டு போய் கொடுப்போம் ன்னு சொல்லி இருக்கோம்! அப்ப அந்த வேலைக்கு எல்லாம் ஆள் வேணும் ல இப்படி ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆள் வேணும் ல” பொருளாதார வல்லுநர்கள் எல்லாம் தேவை இல்லை மக்களைப்பற்றிய எண்ணம் இருந்தால் போதும் என்று வெளிப்படுத்திய விஜயகாந்தின் எளிமையான பதில் அது.

அது சரி! “நாம் ஏன் அவரை தவறாக புரிந்து கொண்டோம்? தவறான கண்ணோட்டத்தில் ஏன் பார்த்தோம்?” என்கிற கேள்விகள் என்னுள் எழுந்தது.

நாம் எங்கே அவரை புரிந்துகொண்டோம்! ஒருவரை சரியாக கவனிக்கவே இல்லாத பொழுது; அவரை எப்படி புரிந்து கொள்ள முடியும்! இப்படி நான் புரிந்து கொள்ளாத ஒருவரைப் பற்றி எனக்கு காண்பித்த திராவிட அரசியல் சார் ஊடங்கள், அவரின் செயல்களுக்கெல்லாம் கோமாளித்தனம் என்கிற முத்திரை பதித்தே தான் எனக்கு காட்டியது.

விஜயகாந்தை கவனிக்க தொடங்கிய பொழுது தான், திராவிட கட்சிகள் நம்மை அவர்களின் கை பாவைகளாய் வைத்திருந்தும் இப்போதும் அப்படியே வைத்திருப்பதும் ஓரளவு புரிய வருகிறது. விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவருக்குமான பாடம்.

நாம் எல்லோர்க்கும் ஒரு மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும்? அதில் தான் நம்மை இந்த திராவிட கட்சிகள் குழப்பிவிட்டு ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றது.

விஜயகாந்த் நல்லவர் ஆனால் அவர் தமிழர் இல்லை. அவருக்கு என்ன தெரியும்? இதே template தான் ரஜினிக்கும் வைத்திருந்தார்கள். இதை இனிமேல் வேறு யாருக்கும் அவர்கள் பயன்படுத்த போவதில்லை. காரணம், இனி celebrity வட்டாரத்தில் நல்லவர்கள் என்று சொல்லிக்கொண்டு அரசியல் பிரவேசம் செய்ய ஆள் இல்லை என்பதே உண்மை.

இன்றைக்கு எந்த யூ டுயூப் சேனலை திறந்தாலும், அதில் ஆளை விட பெரிய சோபா இரண்டை போட்டு அமர்ந்துகொண்டு, “விஜயகாந்த் ரொம்ப நல்லவர். அவரை மாதிரி மனுஷனை பார்க்க முடியாது” என்றெல்லாம் உருகுகிறார்கள்.

அந்த திரைப்பிரபலங்களை காணும் போது, “வேணாம் அப்புறம் நான் எதாவது சொல்லிப்புடுவேன்! எனக்கு ஆத்திரங்கள் வருது மக்களே!” அந்த திரைப் பிரபலங்களில் சிலரைத்தவிர அநேகமானவர்கள் பணம் வாங்கிக்கொண்டோ அல்லது மொத்த சினிமாவும் அந்த கட்சிகளின் பிடியில் இருக்கிறது என்பதற்கவோ திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள்.

அதிலும், கூட ரஜினி ஒருவர் தான்,அந்நாள் முதல்வர் கருணாநிதி இருந்த மேடையில், கீழே இருந்த விஜயகாந்தை குறிப்பிட்டு அவரின் அரசியல் வெற்றியை மனமாற பாராட்டினார். அப்படி பேசுவதற்கு ரஜினியால் மட்டும் தான் முடியும். காரணம்,அன்றைய தேதியில் அவர் ஒருவரைத்தான்  இரண்டு திராவிட கட்சி தலைவர்களும் நேரடியாக எதிர்க்கவோ எதிர்த்து கருத்து சொல்லவோ அஞ்சி அந்த ரஜினியை பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்கள்.

இந்த கட்டுரையில் எதற்கு ரஜினிகாந்த்? உங்கள் மனதில் முன்னமே இந்த கேள்வி எழுந்திருக்கும். நீங்கள் கவனியுங்கள்! தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சியை வீழ்த்துவது சாதாரணமான காரியம் இல்லை. தேசிய கட்சிகளும் கூட தடுமாறிக்கொண்டிருக்கின்றது. காரணம், அவர்களின் நெட்ஒர்க் அத்தனை பெரியது. ஒரு அமைச்சர் அவரால் நல்லவிதமாகவோ அல்லது ஊழல் மூலமாகவோ பயனடையும் பத்து பேர், அந்த பேருக்கு துணை நிற்கும் நூறு பேர். அந்த நூறு பேருக்கு துணை நிற்கும் ஆயிரம் பேர் என்று முடி தொட்டு அடி வரை அனைவரும் பயனை எதிர்பார்த்து பயனடைந்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் எப்படி அந்த அமைச்சரை தோற்கவிடுவார்கள்.

மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் பஞ்சாயத்து ப்ரெசிடென்ட்கள் என்று ஓவ்வொரு பதவிக்கும் வெட்டுக்குத்தும் அடிதடியும் நடந்துகொண்டிருப்பது தமிழக மக்கள் அறிந்ததே. ஒவ்வொரு பதவியாலும் பயனடைந்து கொண்டிருப்பவர்கள், அவர்களால் பயனடைந்து கொண்டிருப்பவர்கள் என்று முழுக்க முழுக்க சுயநலன்களால் பின்னப்பட்ட வலை தான் இந்த திராவிட கட்சிகளின் நெட்ஒர்க். இத்தனை பெரிய போட்டி மக்களுக்கு சேவை செய்வதற்காக நடக்கின்றதா? நிச்சயமாக இல்லை என்பதும் உங்களுக்கும் தெரியும். கட்சியில் இருந்து கொண்டு ஒருவர் பெரிதாக பணம் சம்பாரிக்கவில்லை என்றால் நீங்களும் நானுமே அவரை கூட பிழைக்க தெரியாதவர் என்போம். உங்களையும் என்னையும் உள்ளடக்கிய இந்த சமூகம் இப்படியானதாக தான் இருக்கின்றது.

 

இப்படிச் சூழலில், இந்த சமூகத்தில் இருந்து திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒருவன் வரும் பொழுது அவனிடம் மட்டுமே தான் நாம் நன்னடத்தை சான்றிதழ் (Condut certificate) , nativity certificate எல்லாம் கேட்கிறோம். உண்மையில் கேட்க வைக்கப்படுகிறோம்.

இந்த சமூகத்தில், இரண்டு திராவிட கட்சிகளின் பெரிய network ஐ அசைத்து பார்க்கும் வலிமை இருவரிடம் மட்டுமே தான் இருந்தது. அந்த வலிமையாக இருந்தவர்கள் அந்த இருவரின் வெகு தீவிரமான பக்தர்கள். ரசிகர்கள் எல்லோருக்கும் இருப்பார்கள்; தேர்தல் என்று வந்தால், எந்த பலனும் எதிர்பாராமல் எல்லா நிலைகளிலும் அவர்கள் கட்டளை ஏற்று நடத்த தயாராக இருந்த படை பலம் பெற்றுஇருந்தது  இருவர் மட்டுமே தான். எல்லா நிலைகளிலும் என்கிற வார்த்தையை நீங்கள் கவனித்து மீண்டும் அந்த வாக்கியத்தை படியுங்கள்.

அந்த இருவரில் ஒருவர் ரஜினிகாந்த் இன்னொருவர் விஜயகாந்த் இவர்கள் இருவரை தாண்டி, ஒரு பேர் சொல்லுங்கள்.

Yes! சீமான், திருமாவளவன், அன்புமணி என்று வராதீர்கள். விஜயகாந்த் முதல் தேர்தலில் பெற்ற 8.38% சதவீத வாக்கை இன்னும் எட்ட முடியாமல். ரஜினிகாந்தையும் விஜயகாந்தையும் வசை பாடுவதற்கெனவே உருவாக்கப்பட்ட ஸ்லீப்பர் செல்லாக தான் சீமான் போன்றவர் என் பார்வைக்கு தெரிகிறார்.

விஜயகாந்த் ஆட்சியில் இல்லாத பொழுதே, தங்களுடைய முதல் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் மரியாதை துளியும் இல்லாமல் பேசியது, “விஜயகாந்த் கிட்ட நாட்டை கொடுத்துட்டு உட்கார்ந்து இருப்போம் ன்னு பார்க்கிறீயா!” அந்த பிரச்சாரத்தில், அவருடைய தேர்தல் மேடைகளிலும் அவர் அதிகமாக வசை பாடியது கட்சியே தொடங்காத ரஜினிகாந்தையும் ஒரு முறை கூட தமிழகத்தை ஆட்சி செய்யாத விஜயகாந்தையும், அத்தனை பெரிய அவரின் பிரச்சாரத்திற்கு அந்த தேர்தலில் கிடைத்தது 1.06 சதவீத வாக்கு.

அன்புமணியும் திருமாவளவனும் கூட மூன்றாவது அணிகளையே தான் அதிகம் வசை பாடியிருக்கின்றார்கள் அதோடு திராவிட கட்சிகளை சேர்க்காமல் அவர்களின் அரசியல் வரலாற்றை நிச்சயமாக எழுத முடியாது.

இங்கிருக்கும் நல்லவர்கள் யாரும், விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் பொழுதும் ஆதரிக்கவில்லை. நான் கட்சி ஆரம்பித்தால், என் செல்வாக்கை பயன்படுத்தி, இளைஞர்களுக்கும் நேர்மையான அதிகாரிகளுக்கும் வாய்ப்பளிப்பேன் என்ற ரஜினிகாந்தின் கருத்தையும் ஆதரிக்கவில்லை. அதிசயமாக 10க்கு 7 நல்ல எண்ணங்கள் கொண்ட இயக்குனர் சேரன் மட்டும் நல்ல திட்டம் சார் நான் வரவேற்கிறேன் என்று ரஜினி முன்வைத்த திட்டத்தை ஆதரித்தார்.

ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டது போல், விஜயகாந்த் ரஜினிகாந்த் போன்ற திராவிட கட்சிகளுக்கு எதிராக பெரிய தாக்கத்தை உண்டு செய்ய கூடிய ஆளுமைகள் அரசியலுக்கு வந்தால் மக்கள் அந்த ஒரு ஆளுமை கீழ் கூட வேண்டும்.கூடியிருக்க வேண்டும்.அது தான் ரஜினி கேட்ட எழுச்சி

ஆனால், நாம் என்ன செய்தோம்? விஜயகாந்த்தை கிண்டல் செய்து கொண்டிருந்தோம், ரஜினிகாந்த் மீது எவனோ மீது உமிழ்ந்த வெறுப்பு எனும் எச்சிலை நாம் சுவைத்துக்கொண்டிருந்தோம்.

நீங்கள் இந்த இருவர் மீதும் வெறுப்பை உமிழ்ந்த அத்தனை வாய்களிலும் காதுகளை வைத்துக் கேளுங்கள். அத்தனையும் ஒரு குரலில் அவர்களை நல்லவர்கள் என்று சொல்லும். நல்லவர்களாக இருந்த்தற்காகவே அதிகம் வெறுப்பிற்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள். காரணம், திராவிட கட்சிகளின் கைப்பாவைகளாக நாம் இருந்ததும் இருப்பதும் தான்.

கூட்டத்தில் நின்று கொண்டு இந்த இருவரையும் கிண்டல் செய்த்தவர்கள்; இவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்கள். அவர்களிடமெல்லாம் கேட்க வேண்டும், “நீங்கள் செய்திகளாக எதை கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கின்ற இரு பெரும் கூட்டங்களை எதிர்த்து ஒரு மாற்றத்தை சாத்தியப்படுத்த உங்களிடம் என்ன இருக்கின்றது”. அந்த வெறுப்பினால் நீங்களோ உங்கள் சமூகமோ அடைந்த ஆதாயம் என்ன!

நடிகன் பின்னால் போகாதீங்க என்கிற ஆர்.ஜே. பாலாஜி போன்ற அறிவாளிகளிடம் இருந்து வரும் அறிவுரைகள் எல்லாம் அதிகம் கோபத்தையே தான் கிளறியிருக்கின்றது . நல்லதோ! கெட்டதோ! அரசியலில், இன்று எனக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது, அந்த மாற்றம், இன்னும் ஐம்பது வருடம்; நூறு வருடம் கழித்து வரும் என்கிற மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்க நான் தயாராக இருந்ததில்லை. அந்த மாற்றத்தை சாத்தியப்படுத்த தனக்காக எல்லா நிலைகளிலும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் வேலை செய்யும் கூட்டத்தை கொண்டிருக்கும் முகம் தேவைப்படுகிறது என்று நான் நம்பினேன், இன்று அரசியலில் இருக்கும் சூழலில் இப்போதும் அதையே தான் நம்புகிறேன்.

அந்த முகம் இல்லாமல் தான் தேசிய அளவிலான கூட்டணி கூட தடுமாறுகிறது. தேசிய அளவில் அப்படி ஒரு முகம் இல்லாமல் தான் காங்கிரஸ் பா.ஜ.க தாண்டி ஒரு மூன்றாவது அணி உருவாக முடியாமல் இருக்கின்றது.

அதிர்ஷ்டவசமாக தமிழக அளவிலான அரசியலுக்கு இரண்டு முகங்கள் கிடைத்தது.

ஒன்று, அன்று எட்டு வயது சிறுவனுக்கும் தெரிந்திருந்த விஜயகாந்த்தின் முகம்; அந்த ஒருவரின் முகத்திற்காக மட்டுமே தான் இன்று வரை உயிர் வாழ்ந்துகொண்டிருந்தது தே.மு.தி.க என்னும் கட்சி.

மற்றொன்று, இன்றும் மூன்று வயது மட்டுமே ஆன குழந்தைக்கும் பரீட்சயமான ரஜினிகாந்தின் முகம்.அதன் காரணமாகவே அவர்களை என்னால் முடிந்த எல்லா வகையிலும் ஆதரித்து வந்தேன்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று சென்றுவிட்டார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தும் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.

விஜயகாந்த் மறைந்து விட்டார் என்பதை விட;இனி இந்த திராவிட கட்சிகளை எதிர்க்கும் வலிமையான செல்வாக்குள்ள முகத்தை நல்ல மனிதர்களை எங்கே தேடுவேன் என்பதே தான் என்னுடைய வருத்தமாக இருக்கின்றது.

தே.மு.தி.க.விலும் கூட விஜயகாந்தின் பட்டத்தை ஏற்க போகும் சிற்றரசர்கள் ஒருவரும் இல்லை.அந்த உண்மையை யாருமே மறுக்க முடியாது.

2016 தேர்தலுக்கு பின் தி.மு.க வுடன் கூட்டணி வைக்கவில்லை என்று தே.மு.தி.க.வில் இருந்து வெளியேறிய ஒருவர் கட்சியை உடைக்க போகிறேன் என்று சில சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.அத்தனை தைரியமும் வீரமும் கொண்டவராலேயே கட்சியை உடைக்க முடியவில்லை.
பரிதாபமாக இன்று அந்த ஒருவரின் முகமும் ஒருவருக்கும் நினைவில் இல்லை. தே.மு.தி.க. என்றால் மக்களுக்கு தெரிந்தது ஒரே முகம் தான்.

தே.மு.தி.க வின் அந்த முகம், மாற்றத்தையும் வலிமையான மூன்றாவது அணியையும் எதிர்நோக்கியிருந்த என்னையும் உங்களையும் போன்றவர்களின் மனதில் பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கின்றது.

விஜயகாந்த் கூடுமான வரையில் நிறைவான வாழ்வை தான் வாழ்ந்திருக்கின்றார். தமிழக அரசியல் தான் நிறைவான இடத்தை இன்னும் எட்டவில்லை.சூழ்ச்சிகளால் ஒரு அரசன் வீழ்த்தப்பட்ட பின், அங்கே அவனை விட வலிமையான ஒரு அரசன் உருவாகுவான் என்ற நம்பிக்கையோடு அவர் இறைவனை அடைந்ததில் மட்டுமேனும் நாம் நிறைவு கொள்வோம்.

 

 

 

Error happened.
Exit mobile version