கதிர் விஜயம்

உணர்ச்சிகளும் நீதியும்!

 

உங்களில் எத்தனை பேருக்கு தோனியை பிடிக்கும்? நிச்சயம் இங்கு, என்னைப்போன்ற ஒரு சிலரைத் தவிர எல்லோருக்கும் தோனி பிடித்தமானவராக தான் இருப்பார். ஒரு பக்கம் பி.ஆர். வேலைகளை காரணமாக சொன்னாலும்,  “எல்லா நாயகன்களுக்கும்நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று எழுதிவிட முடியாது” என்று வாலி சொல்வது போல, தோனி பெருமான்மையினரிடம் இருந்து வேறுபட்ட ஒரு ஆளுமையாக இருந்ததால், பி.ஆர். வேலைகள் எடுபட்டு, அவர் இங்கு என்னைப்போன்ற சிலரைத் தவிர எல்லோருக்கும் பிடித்தவராகி போனார். கிரிக்கெட் தெரியவதர்களுக்கும் தோனியை தெரிந்து இருந்தது, பிடித்து இருந்தது.

எனக்கும்  என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் கங்குலி, டிராவிட் போன்றவர்களை தான் பிடித்திருந்தது. 2007 டி20 உலக கோப்பை வென்று கொடுத்தது வரையில் எங்களுக்கும் அவர் மீது எந்த வெறுப்பும் இருந்தது இல்லை.எப்படி சசிகலா கொடுத்த இடத்தை எடுத்துக்கொண்டு சசிகலாவையே ஓரம்கட்டி எடப்பாடி தனக்கென்று ஒரு அணியை அமைத்துக்கொண்டாரோ; அதுபோலவே தான் தோனியும் தன்னை வழிமொழிந்த தன்னை தூக்கிவிட்ட வீரர்களையும் சீனியர் வீரர்களுக்கு ஆதரவாக இருந்த இளம் வீரர்களையும் ஒதுக்கி விட்டு ஒரு அணியை அமைத்துக்கொண்டார். அப்படி ஒரு அணியை அமைக்கும் பொழுது அவர் பெரிதும் பாரபட்சம் காட்டினார்.அது பின்னாளில் அணியை பாதித்தது.2011க்கு பிறகு மீண்டும் ஒரு உலகக்கோப்பை வெல்ல தாமதமானததற்கு அதுவும் ஒரு காரணம்.

எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தினகரன் அணி போன்றது, இன்னமும் கங்குலி டிராவிட் சச்சின் கோஷமிட்டு  கொண்டிருக்கும்  எங்கள் நண்பர்கள் குழு.

“எனக்கு தோனியை ஏன் பிடிக்காது?” என்று ஒரு பத்து பக்கமேனும் என்னால் எழுத முடியும். ஆனாலும், தோனியிடம் இருக்கும் ஒன்று கங்குலியிடம் இல்லை என்பதை நான் எப்போதும் ஒப்புக்கொள்வேன்.

ஒரு தொழில்முறை விளையாட்டு வீரர், ஒரு அணியின் தலைவர், தோனியை போன்று தான் இருக்க வேண்டும். எப்படி?

தன் உணர்ச்சிகளை கையாள தெரிந்தவனாக; வெளிப்புற காரணிகள்(external factors) தன்னை எந்த வகையிலும் பாதிக்காதவனாக இருக்க வேண்டும்.

2003 உலக கோப்பை இறுதி ஆட்டம். அதற்கு முன் வரை நடந்த போட்டிகளில், நாம் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தான் தோற்று இருந்தோம். அப்போது இந்திய முதலில் பேட் செய்து இருந்தது. அந்த தோல்விக்கு பின், இறுதி போட்டிக்கு முன், வெளியில் இருந்து சிலர், இந்தியா முதலில் பந்து வீச வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தார்கள்.

முந்தைய சந்திப்பில், முதலில் பேட் செய்து ஏற்பட்ட தோல்வி; வெளியில் இது பற்றி நடந்த விவாதம்; 1983க்கு பின் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் இந்திய அணி;எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் கங்குலி!

எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படியும் தோற்க அடித்துவிடும்.  ஒரு வேளை டாஸ் ஜெயிக்காமல் இருந்திருந்தால், முதலில் கண்டிப்பாக பேட் செய்ய வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்பட்டு இருந்தால், கங்குலி என்ன செய்து இருப்பார்?

கங்குலியும் பாண்டிங்க்கும் இங்கு தான் வேறுபட்டு இருந்தார்கள், கங்குலிக்கு தோல்வி குறித்த அச்சம் இருந்தது, அவர் துணிவான சில முடிவுகளை எடுக்கத்  தயங்கினார்.உணர்வுகளால் ஆளப்படுகிறவர்கள் சிறந்த தலைமைப்பண்புகளை கொண்டிருந்தாலும், இக்கட்டான சூழலில் கங்குலியை போன்று தான் தடுமாறுவார்கள்.

தோனி அதற்கு முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். அவர் பேட்டிங் சரியில்லை என்கிற விமர்சனங்களை ஒருநாளும் அவர் காதில் போட்டுக்கொண்டதில்லை. நிச்சயமாக அப்போதைய பி.சி.சி. யின் தலைமைக்கு செல்லப்பிள்ளையாக இருந்தார். அதனால், அவருக்கு விமர்சனங்களைப்பற்றிய கவலை இருக்க வேண்டியதில்லை என்று நாம் நினைக்கலாம். தலைமைக்கு செல்லப்பிள்ளையாக இல்லாமல் இருந்திருந்தாலும் தோனி விமர்சனங்களை துளியளவும் சட்டை செய்திருக்க மாட்டார். தோற்றுவிடக் கூடாது என்றோ, நிச்சயமாக ஜெயித்து விட வேண்டும் என்றோ அடிமனதில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்திக்கொள்கிற ஆளாக அவர் எப்போதும் இருந்தது இல்லை.
.

வெளியில் நடக்கும் எதுவும் தன்னை பாதிக்காத படி, தன் உணர்ச்சிகளை உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்த ஒருவராக  தான் தோனி இருந்தார். எனக்கு தோனியை பிடிக்காது தான்; ஆனால், இந்தியா தோனியை போன்ற ஒரு ஆளுமையை எல்லா துறைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம், நாம் கிரிக்கெட் மேட்ச்களை விட அதிகமாக  நீதிமன்ற வழக்குகளில் என்ன நடக்கிறது என்று கவனிக்கத்  தொடங்கியிருக்கிறோம் .

குறிப்பாக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பரபரப்பான செய்திகளான துயர சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை நாம் கவனிக்க தவறுவதில்லை.

இப்படி அநேகமானவர்கள் கவனிக்கும் வழக்குகளில்,நீதிமன்றத்தின் மீது மக்கள் பார்வை இருப்பது நீதிபதிகளுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று நாம் நம்புகிறோம். அதற்கு காரணங்கள் இருக்கிறது.

விஜய் அவருடைய காருக்கு வரி கட்டவில்லை என்கிறது போன்ற ஒரு பொதுவான பிம்பத்தை ஏற்படுத்திய ஒரு வழக்கில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சமூக நீதிக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல; நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்புஎன்று கருத்து தெரிவித்து இருந்தார் (உண்மையில் விஜயை சாடியிருந்தார்). இது கவனிக்கப்படுகிற தீர்ப்பாக இருக்கும் என்று  அவர் நினைத்திருக்கலாம். தன்னை ஒரு கண்டிப்பான நீதிபதி என்று மக்களிடம்  நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம். அவருள் இப்படி இன்னும் பல உணர்வுகள், எண்ணங்கள் இருந்திருக்கலாம்.வெளிப்புற காரணிகளால்  நீதிபதி மனதில், ஏற்பட்ட எண்ண ஓட்டங்கள் தான், நீதிபதி அந்த வழக்கில் அப்படியொரு கருத்தை முன் வைக்க காரணம். அது முதலில் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கே இல்லை.  

ஏற்கனவே செலுத்தப்பட்ட வரிகளோடு, சட்டத்தெளிவு இல்லாத நுழைவு வரியை சேர்த்தால், காரின் மதிப்பை விட அதிகமாக இருக்கிறது என்று, நுழைவு வரி சம்பந்தமான சில வழக்குகளில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி வரி விலக்கு கேட்டு விஜய் தரப்பால் தொடரப்பட்ட வழக்கு, வரி ஏய்ப்பு செய்ய வேண்டுமென்று நினைக்கிறவர்கள் ஏன் நீதிமன்றத்தை அணுகப் போகிறார்கள்?நுழைவு வரி கட்ட வேண்டும் தான் விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை. அல்லது நுழைவு வரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் ஒன்று தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்திருக்க வேண்டும். வேறு எந்த கருத்துக்களும் இருந்திருக்க வேண்டியதில்லை.

மோகன்.சி.லாசரஸ். என்கிறவர் பிற மதங்களை இழிவு படுத்தி பேசினார் என்பதற்காக போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் இனி இப்படி மற்ற மதங்களை விமர்சனம் செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறி வழக்கை தள்ளுபடி செய்கிறார்கள். இது எப்படியானது என்றால் திருடுவது சட்டப்படி குற்றம். அதனால், பிறர் பொருள் பிரியர் ஒருவர் மீது வழக்கு போடப்படுகிறது, நீதிபதி இனிமேல் திருடாதீர்கள் திருடரே என்று வழக்கை தள்ளுபடி செய்வதை போன்றது.இந்த வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது மேற்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கருதியிருக்கலாம்.சில வழக்குகளை சட்டத்தின் படி அணுக நீதிமன்றமும் தயங்கும் சூழல் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ரஜினி தரப்பில், கொரோனா காலத்தில், மண்டபத்திற்கு சொத்து வரி விலக்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நீங்கள் மீண்டும் ஒருமுறை மாநகராட்சியிடம் முறையீடு செய்து அப்போதும் பதிலில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று அறிவுரை வழங்காமல் (அறிவுறுத்தாமல்), மீண்டும் மீண்டும் மாநகராட்சியிடம் முறையீடு செய்யாமல், எதற்கு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது.

அறிவுறுத்த வேண்டிய இடத்தில் கண்டனம்; கண்டிக்க வேண்டிய இடத்தில் அறிவுரை. இப்படியான வேறுபாடுகளை, அல்லது குறைகளை தொழில்முறை வல்லுனர்களிடம் (professionals) நீங்கள் பார்க்க முடியாது; அப்படி தொழில்முறை வல்லுனர்களிடம் இந்த குறைகள் இருந்தால் அவர்கள் அந்த தொழிலில் இருக்க சரியானவர்கள் கிடையாது.மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள், கங்குலி போன்ற பண்புகளை கொண்ட நீதிபதிகளை தான் நமக்கு காட்டுகிறது. புறச் சூழல்கள் தங்களின் தொழிலை பாதிக்க அனுமதிக்கிறவர்கள்.உணர்ச்சிவசப்படுபவர்கள் தொழில்முறை நிபுணர்களாக இருக்க முடியாது.

The emotional can never be professional; the professional can never be emotional

நீதிபதி குன்ஹாவின் பெயரை எல்லோரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஒரு மாநில முதலமைச்சருக்கு எதிரான வழக்கு. அவருடைய தீர்ப்பில், சினிமாத்ததனமான கண்டனங்களை நீங்கள் பார்க்க முடியாது. வாத பிரதிவாதங்களில் அவர் எதை ஏற்றுக்கொண்டார், எதை ஏற்கவில்லை, சட்டத்தின் எந்த வழிகாட்டுதலின் பெயரில், தீர்ப்பை வழங்குகினார், அபராதம் விதிக்கப்பட்டதற்கான அடிப்படை இவையெல்லாம் மட்டுமே தான் நீங்கள் பார்க்க முடியும்.ஒரு தீர்ப்பை வழங்குவதிலோ,அல்லது ஒரு ஆணையை பிறப்பிக்கும் பொழுதோ ஒரு நீதிபதி; வாத பிரதிவாதங்கள் சொல்வதை கருத்தில் கொண்டு சட்டத்தின் படி ஆராய்ந்து; சட்டத்தின் படி என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே தான் எடுத்துரைக்க வேண்டும். தொழில்முறை நிபுணர்கள் இந்த கோடுகளை எப்போதும் தாண்டுவதில்லை. எந்தவொரு காரணிகளும் அவர்களின் வேலையை பாதிக்க அவர்கள் அனுமதிப்பதும் இல்லை.

நீதிபதிகள்  அவர்கள் வழங்கும் தீர்ப்புகளிலோ அல்லது முன்வைக்கும் கருத்துகளிலோ அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளின் தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று சரிபார்த்து கொள்ள வேண்டும். எல்லாமே சட்டத்தின் படி சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்தால் போதுமானது, அது அவர்களின் உணர்வுகளின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.நீதிமன்றங்களில் உணர்வுகளின் தாக்கம் இருக்கின்ற பொழுது, அது நீதியை கேள்விக்குறியாக்குகிறது .

ஒரு குழந்தையை கொன்றதாக அறியப்படும் தஸ்வந்த் இப்போது உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

ஏன்? இது உச்ச நீதிமன்றத்தின் பிழையா? நிச்சயமாக இல்லை.

ஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என்று நிரூபிக்கப் பட வேண்டும். சாட்சியங்கள் எந்த சந்தேகங்களுக்கும் இடம் தர கூடாது? அப்படி சந்தேகம் எழுமானால், அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்ல முடியாது; நாம் சொல்லிக்கொள்ளலாம். நாம் இதை எப்படி அணுகுகிறோம் என்றால், உயர்நீதிமன்றமும் கீழமை நீதிமன்றமும், விசாரணையில் மற்றும் சாட்சியங்களில் இருந்த குறைபாடுகளை கவனிக்க தவறியிருக்க வேண்டும்.அவர்களைப் பொறுத்தவரையில், ஒரு குழந்தையை கொன்றிருக்கிறான்  இவனை எப்படி குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிப்பது, என்று இருக்கின்ற சாட்சியங்கள் போதும் என்று அவனுக்கு மரணதண்டனை விதித்துவிட்டார்கள். இது தான் தனிமனித உணர்ச்சிகள் வேலை செய்கிற இடம்.

கீழமை நீதிமன்றமோ,உயர்நீதிமன்றமோ, விசாரணையில் இருக்கின்ற குறைபாடுகளை சுட்டி காவல்துறையை கண்டித்திருந்தால், மேற்கொண்டு சாட்சியங்களை பலப்படுத்த கேட்டு காவல்துறையை நிர்பந்தித்து இருந்தால். இன்று உச்ச நீதிமன்றத்தால், ஒருவரை விடுதலை செய்திருக்க முடியாது.

கரூர் வழக்கிலும், இப்படி உயர்நீதிமன்றத்தில் உணர்ச்சிகளின் வேகத்தை தான் நம்மால் காண முடிந்தது.

அரசியல் பேரணிகள்; ஜாதி பேரணிகள் நடக்கும் பொழுது; சாலை விதிகளை மீறுகிறவர்களை காவல் துறை ஏன் கண்டுகொள்வதில்லை என்று கேட்க வேண்டிய நீதிமன்றம்; விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஓட்டி வந்த  ஓட்டுநர்    மீது ஏன் வழக்கு பதியவில்லை என்று கேட்டு இருந்தது. காவல் துறையில் 600 பேர் எங்கெங்கு பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள், காவல் துறை என்ன திட்டங்கள் வைத்திருந்தது என்று கேட்காமல், கட்சியினர் யார் ஒருவரும் ஏன் அங்கு இல்லை என்று கேட்டு இருந்தது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இறந்துவிட்டார்கள், அந்த நடிகரை ஒரு வழி செய்துவிட வேண்டும் என்கிற உணர்ச்சி தீவிரம் தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் அதிகம் வெளிப்பட்டதாக நாம் பார்க்கிறோம். இன்னும் இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படவில்லை; எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினார்கள் சில உத்தரவுகளை பிறப்பித்தார்கள் ; உச்சநீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மாதிரி இதில் சுவாரஸ்யம் கூட்ட இந்த ஊடகங்கள், சரமாரி கேள்வி; விஜய் தரப்பு தடுமாற்றம்; அரசுக்கு பின்னடைவு என்று ஐபில் அணி ரசிகர்களை போன்ற இதிலும் இரண்டு பிரிவுகள் அடித்துக்கொள்ளட்டும் என்கிற வகையில் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

நீதிமன்றமோ நீதிபதியோ எழுப்பும் கேள்விகளிலும் கூட ஒரு அடிப்படை இருக்க வேண்டும்.அது உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் இருக்க கூடாது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற குழப்பங்களை பற்றி கேள்வியெழுப்பியிருக்கிறது.உயர்நீதிமன்ற பிறப்பித்த ஆணையில் இல்லாத சட்டத்தெளிவுகளைப் பற்றி கேள்வியெழுப்பி இருக்கிறது.அதாவது, இதை இவர்கள் எப்படி செய்ய முடியும். இப்படி செய்தது சரியா? இதற்கெல்லாம் சட்டத்தால் மறுக்க முடியாத விளக்கங்களை அரசு தரப்பால் கொடுக்க முடிகிறதா என்று நாம் கவனிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றம், காவல் துறை முதல் தகவல் அறிக்கையில், அல்லது குற்றச்சாட்டுகளில் தெளிவில்லாமல் இருக்கும் விஷயங்களில் தெளிவினை பெறுவதற்கு தான் கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும் மாறாக உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் விஜய் தரப்பு தான் குற்றவாளி என்கிற போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும்  கேள்விகளாக இருந்தது.பிறப்பித்த சில உத்தரவுகளும், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கேட்டதை மறுத்ததும் பொது பார்வைக்கு ஒரு சார்பு நிலையை தான் காட்டுகிறது.

மருத்துவர்கள் நீதிபதிகள் என்று வெவ்வேறு துறைகளில் இருக்கின்ற ஒவ்வொருவரும், தங்கள் உணர்ச்சிகளை கையாள தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். உணர்ச்சிகள் தொழிலை பாதிக்காதபடி கவனமாக இருக்க வேண்டும்.

நினைத்துப்பாருங்கள், இந்தியர் ஒருவர் இந்தியா பாகிஸ்தான் விளையாடும் ஒரு இறுதி போட்டியில் நடுவராக இருந்து, அவரின் உணர்ச்சிகள் அவரின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்த அனுமதித்தால் அது எப்படி இருக்கும்?!அது ஆட்டத்தின் மீதான பார்வையையே மாற்றிவிடும். அது விளையாட்டு வீரர்களுக்கும் நல்லதல்ல அந்த போட்டிக்கும் நல்லதல்ல.

இது ஆளுமை சார்ந்த விஷயம், நீதிபதிகள் மட்டும் இல்லை, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் நம் உணர்ச்சிகளை கையாள தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.அது தான் எல்லோருக்கும் நன்மை பயக்கும்.சமூகத்தை பலமான சமூகமாக கட்டமைக்கும்.Every professionals must learn to deal their emotions

 நாம் நம் குழந்தைகளை வலிமையான நம்பிக்கையுடைய குழந்தைகளாக வளர்க்க வேண்டும். வலிமையும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் தான் சிறந்த தொழில்முறை நிபுணர்களாக ஆகிறார்கள்.

The emotional can never be professional; the professional can never be emotional

 

Error happened.
Exit mobile version