இங்கே எல்லோரும் மதவாதிகள் தான்!
அரசியலில் செகுலர் (SECULAR)என்கிற மதசார்பின்மை என்கிற இந்த பதம் எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்று வரலாற்று பக்கங்களை புரட்டினால், அது நம்மை அடிமைகளாய் வைத்திருந்த மேற்குலக நாடுகளை கைகாட்டுகிறது. மேற்குலக நாடுகளில், அரசு நிர்வாகங்களில், சர்ச்சுகளின் தலையீடு அதிகம் இருந்த காலத்தில் மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்து எழுகிறார்கள். அதன் பின்னர் அரசாங்கத்தில், சர்ச்சு போன்ற மத அமைப்புகளின் தலையீடு இருக்க கூடாது என்கிற நிலைப்பாட்டிற்கு வருகிறார்கள்.அது தான் செகுலர் ஸ்டேட் என முதலில் அறியப்படுகிறது.
படையெடுப்புக்கு முந்தைய இந்தியாவில், அரசு நிர்வாகங்களில் மத அமைப்புகளின் தலையீடுகள் இருந்தததில்லை, அமைச்சர் பொறுப்பு வகித்த சேக்கிழாரை பெரிய புராணம் எழுதச்சொல்லி மன்னர் பணித்த பொழுது, இரண்டு பெரிய பொறுப்புகளை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார்.பாரதம் இப்படித் தான் இருந்தது.
பாரதம் சமூகம்–சனாதன தர்மம்–இன்றைய இந்து மதம் எல்லா சமயங்களையும் ஏற்றுக்கொண்டது. காரணம், அடிப்படையில், இறைவன் ஒருவன் தான், அவனுக்கு பெயர் இல்லை உருவம் இல்லை,அவன் எல்லையற்ற பரம்பொருள், அவன் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறான் என்பது தான் சனாதன தர்மத்தின் அடிநாதமாக இருக்கிறது. மற்ற மதங்கள் இறைவன் பற்றி பேசும் எல்லா கருத்துக்களும் பாரத சமூகத்தின் சனாதன தர்மத்தில் முன்னமே சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால், இந்துவாக இருக்கிற ஒருவரால், ரமணரை ராகவேந்திரரை வணங்குகிற அதே பக்தியோடு இயேசுவை வணங்க முடிகிறது. கடவுள், உருவமற்றவர் என்று நபிகள் அரேபியர்களுக்கு சொன்னதை, ஆம், கடவுள் உருவமற்றவர் தான் என்பதை கீதை முன்னமே எங்களுக்கு கற்பித்து இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளமுடிகிறது.
எல்லோரும் கடவுளை பின்பற்ற ஏதோ ஒரு வழியை பற்றிக்கொண்டு தான் ஆக வேண்டும் என்பதை பாரத சமூகத்தின் சனாதன தர்மம் அங்கீகரிக்கிறது. தனி மனித அளவில் மதசார்பின்மை என்று ஒன்று எப்போதும் இருப்பது இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு வழியை, நம்பிக்கையை பின்பற்றி கொண்டு தான் இருக்கிறோம். கடவுள் இல்லை என்று நம்புவதும் கூட ஒரு வழி தான். கடவுள் இல்லை என்பவர்களும் கூட அவர்களுக்கு என்று சில பிரத்தேயேக சடங்குகளை நம்பிக்கைகளை வகுத்துக்கொண்டு தான் திரிகிறார்கள், கருப்பு சட்டை போடுவது,தாலி அறுப்பது, பூணூல் அறுப்பது, கோவில் வாசலில் கறி சோறு தின்பது என்று எல்லோரும் சில நம்பிக்கைகைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். இதையும் கீதை சொல்கிறது, “ஒவ்வொருவரும் வளரும் சூழலுக்கேற்பவும் அவர் மனதில் சில நம்பிக்கைகளை நானே (கடவுள்) வளர்க்கிறேன்“
இப்படியிருக்க அடிப்படையில், மனித சமூகத்தில் மதசார்பின்மை என்று ஒன்று கிடையாது, சர்ச்சுகள் தலையீட்டை எதிர்த்து அரசாங்கத்தில் சர்ச்சு தலையீடு கூடாது என்கிற விதத்தில், அரசியல் உலகில் புழக்கத்திற்கு வந்த செகுலர் பதத்தை காங்கிரஸ் தி.மு.க போன்ற கட்சிகளின் எடுத்துக்கொண்டு செய்யும் அரசியல் என்பது போலி மத சார்பின்மை. எல்லோரும் ஒரு மதத்தையோ நம்பிக்கையையோ பின்பற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம் சமூகத்தில், கோவில்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட்டதில்லை. எல்லா நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.க. வின் கொள்கை என்று அவர்களின் கட்சி வலைத்தளத்தில் இருக்கிறது. இத்தனை விளக்கமாக இல்லை என்றாலும் இது தான் அர்த்தம். அந்த கட்சியை சேர்ந்த எல்லோரும் இதை அப்படியே பின்பற்றுகிறார்களா இல்லையா என்பது தனி விவாதம். ஆனால், அவர்களின் கொள்கை விளக்கத்தில் சொல்லப்பட்டிருப்பது எல்லாமே உண்மை தான்.
எல்லா நம்பிக்கைகளையும் இயல்பிலேயே ஏற்க இடமளிக்கிற இந்துக்களை, அல்லது அந்த இந்து தர்ம அடிப்படையை மையமாக வைத்து இயங்குகிற பா.ஜ.க வை தான் மத வெறியர்கள், கலவரத்தை தூண்டுபவர்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள் தற்போதைய ட்ராவிடியன் ஸ்டாக்கள்.
தமிழகத்தில், கடவுள் இல்லை என்று நம்புகிற இந்துக்களும் தி.மு.க வை பின்பற்றுகிறவர்களும் தான் அறிவாளிகள் என்கிற பிம்பம் வெகுகாலமாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.கடவுளை நேரில் கண்டது இல்லை அதனால் நான் நம்பவில்லை எனும் கூற்றே மூடத்தனத்தின் உச்சம் தான். இந்த பிரபஞ்சத்தில், நம் கண்களுக்கும் காதுகளுக்கும் தெரியாத விஷயங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. மதங்கள் அந்த விஷயங்களை புரிந்து கொள்ள சில வழிமுறைகளை வைத்துஇருக்கிறது.
இந்த பகுத்த அறிவாளிகள் கண்களை திறந்து பார்க்க வேண்டும். காதுகளை குடைந்து சுத்தப்படுத்தி கூர்ந்து கேட்க வேண்டும். மதசார்பற்ற தி.மு.க கூட்டணியில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி அநேகமான சமயங்களில் இருந்திருக்கிறது. இது எப்படி மதச்சார்பின்மையாகும்?! திருச்சபைகள் நேரிடையாக தி.மு.க விற்கு ஆதரவாக இருந்திருக்கிறது. தி.மு.க. திருச்சபைகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறது. இந்த உண்மைகளை மார்க்கத்திற்கும் கடவுளுக்கும் உண்மையாக இருக்கிற இஸ்லாமியர்களோ கிறிஸ்துவர்களோ நிச்சயமாக மறுக்க மாட்டார்கள்.இது எப்படி செகுலர் கணக்கில் வரும்.
தொன்று தொட்டு, தி.மு.க ஆட்சியில் இருக்கிற பொழுதும் இல்லாத பொழுதும் எப்போதும், இந்து விரோத போக்கை கடைபிடித்து வந்திருக்கிறது என்பதை பொய் பேச முடிந்தவர்கள் தவிர யாரும் மறுக்க மாட்டார்கள்.
இன்று ஞானோதயம் பெற்ற முதல்வர் அவரின் சமூக ஊடக பக்கங்களில் தேவை வளர்ச்சி அரசியலா …… அரசியலா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். சனாதன தர்மம் டெங்கு போன்று ஒழிக்கப்படவேண்டியது என்று அரசியல் சாசனத்தின் படி நடக்க வேண்டிய ஒரு அமைச்சர் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக வெறுப்புரை செய்த பொழுது முதல்வருக்கு இந்த ஞானோதயம் வரவில்லை. இந்திய முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்து தி.மு.க கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனி தன் ஆதரவாளர்களோடு திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்டு அதை பதிவு செய்து பரப்பி திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதி வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று சொன்ன பொழுது முதல்வருக்கு இந்த ஞானோதயம் வரவில்லை.
இந்த பகுத்த அறிவாளிகள், இந்து மதத்தின் மீதான விரோத போக்கை கண்டுகொள்ளாமல் விடுவதும் ஆதரிப்பதும் தான் நடுநிலை என்கிற மூட நம்பிக்கையில் இருக்கிறவர்கள் எல்லாம் கொஞ்சமாக சிந்தியுங்கள்! சங்க கால புலவரான நக்கீரர் காலத்தில் இருந்து முருகனின் முதல் படை வீடாக அறியப்படுகிற அதாவது சீமான் அவர்களின் முப்பாட்டன் சேகர் பாபு அவர்களின் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீட்டில், மத்திய கிழக்காசியாவில் இருந்து பாரதத்தின் மீது படையெடுத்து வந்து நம்மை அடிமையாக வைத்திருந்த சுல்தானியர்களில் இருந்து தோன்றி விஜயநகர பேரரசிடம் தோல்வியுற்று மறைந்து போன ஒரு அரசனின் நினைவிடம் எழுப்பப்பட்டு அமைதியாக அங்கே இருந்து வருகிறது. அவரின் உடல் அங்கு இருக்கலாம் அல்லது மதுரையில் உள்ள கோரிப்பாளையத்தில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.ஒரு அரசனின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட 14ம் நூற்றாண்டில் ஒரு நினைவிடம் தான் அது. பொதுவாக கோவில்களைச்சுற்றி இப்படியான நினைவிடங்கள் இருப்பதில்லை. ஆனாலும், வெற்றி பெற்ற விஜயநகர அரசனோ அதற்கு பின்னால் வந்தவர்களோ அந்த நினைவிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.
எனக்கு தெரிந்த வரையில், சமாதிகளை தொழுகை செய்யும் இடமாக இருப்பதை நபிகள் எதிர்க்கவே செய்திருக்கிறார். சிக்கந்தர் ஷா நினைவிடத்தில் வழிபாடுகள் நடத்துவதையோ பலிகள் கொடுப்பதையோ இஸ்லாமும் ஆதரிக்கவில்லை.
இப்படிச் சூழலில் அங்கு பலி கொடுப்பதும் மாமிசம் உண்பதும் வழக்கமாக இருந்தது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.ஆனால், பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே அந்த மலை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இடங்களில், இப்படி விலங்குகளை கொண்டு சென்று சமைத்து உண்பதற்கு அனுமதி கிடையாது என்பது தான் சட்டம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இதனை மக்களுக்கு புரியவைத்திருக்க வேண்டும். மாறாக அவர் என்ன செய்தார் ஆதரவாளர்களோடு கறி விருந்து உண்டு அதை பிரபலப்படுத்தி, சட்ட சிக்கலாக இருந்ததை மதச் சண்டைசிக்கலாக மாற்ற வழி வகுக்கிறார். இதுவரையில் இந்த விஷயத்தில், பா.ஜ.க. மீதோ இந்துக்கள் மீதோ இஸ்லாமியர்கள் மீதோ தர்கா அமைப்பினர் மீதோ எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. தி.மு.க கூட்டணியை சேர்ந்த உறுப்பினரின் பொறுப்பற்ற செயலில் தான் பிழை இருக்கிறது.
தீபத் தூணில், விளக்கு ஏற்ற வேண்டும் என்கிற வழக்கும் இன்று நேற்று தொடங்கப்பட்ட வழக்கு அல்ல, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த வாதமும் கோரிக்கையும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதோடு ஆவணங்களின் படி, விளக்கு ஏற்ற வேண்டும் என்கிற கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்று நீதிமன்றம் அனுமதி அளித்த பின், இதை அனுமதிக்க முடியாது என்று காவல் அதிகாரி சொன்னதை இங்கே ஒரு கூட்டம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. அப்படி விளைவுகளை முன்கூட்டியே கணிக்க முடிந்த திறன் மிகு காவல் அதிகாரி நீதிமன்றம் சொன்னதின் படி விளக்கேற்ற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமோ அதை தான் செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்தது பாசிசம். ஒரு அரசு காவல் துறையைகொண்டு நீதித் துறையை கேலிக்குள்ளாக்குவதும் தான்தோன்றித்தனமாக செயல்படுவதும் தான் பாசிசம்.
எந்த ஒரு நீதிபதியாலும், அவரே நினைத்தாலும் சாட்சியங்களின் படியும் வாதங்களின் படியும் தான் ஒரு தீர்ப்பை வழங்க முடியும். நீதிபதி தான்தோன்றித்தனமாக தீர்ப்பு எழுத முடியும் என்றால் ஊர் அறிந்த குற்றவாளிகள் விடுதலையான வழக்குகளின் தீர்ப்புகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஒரு தீர்ப்பை வழங்கியதற்காக ஒரு நீதிபதியை ஜாதி பேர் சொல்லி நிந்திப்பது எல்லாம் ஜாதி வெற்றியாகவும் மத வெறியாகவும் தமிழகத்தில் அறியப்படுகிறது இல்லை. பார்ப்பான் ஒரு அவன் பார்ப்பான் ஒரு இவன் என்று எந்த மதத்தவர் பேசினாலும் தமிழகத்தில் மட்டும் அதெல்லாம் போராளி வகையில் சேர்ந்துவிடுகிறது.கண்ணாடியை திருப்பி பாருங்கள் அதுவும் மத வெறி தான் அதுவம் ஜாதி வெறி தான்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வருகிறது. அ.தி.மு.க. கூடாரமே நீதிமன்ற வாசலில் காத்துக்கிடந்தது. அந்த சமயத்தில் ஒரு காவல் அதிகாரி வந்து, “இங்கே கட்சிகாரர்கள் கலவரம் செய்வார்கள். அதனால், நீதிமன்ற தீர்ப்பின் படி ஜெயலலிதா அவர்களை கைது செய்ய முடியாது; அதனால் வரும் விளைவுகளை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று சொன்னால் அது அபத்தமாக இருக்காது?! அப்படியான ஒரு செய்கையை தான் திராவிடியன் ஸ்டோக்க்குகள் அறிவென்றும் திறனென்றும் அழகாக கையாண்டார் என்று சிலாகித்துக்கொண்டிருக்கிறது.
சட்டத்தை மீறி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் மாமிசம் உண்டதை தடுக்க முடியாத திறன்மிகு காவல் அதிகாரி தான் நீதிமன்ற தீர்ப்பின் படி நடந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் அனுமதிக்க முடியாது என்கிறார்.
இங்கே மத வெறி யாரிடம் இருக்கிறது? என்னுடைய முதல் வாக்கை தி.மு.கவிற்கு செலுத்திய நான் சொல்கிறேன். இங்கே எதற்கெடுத்தாலும் பா.ஜ.கவை எதிர்க்கின்ற தி.மு.க.வினரிடமும்; அந்த தி.மு.க. என்ன செய்தாலும் அதை ஆதரிக்கின்ற, பா.ஜ .க என்றாலே கண்ணை மூடிக்கொண்டு பா.ஜ .க எது செய்தாலும் எதிர்க்கின்ற இசுலாமியர்களிடம் கிருத்துவர்களிடமும் தான் அவர்கள் எதிர்க்கும் யாரையும் விட மத வெறி அதிகம் இருக்கிறது. நாம் பொதுப்படையாக எல்லா இசுலாமியர்களையும் கிருத்துவர்களையும் சாடவில்லை. எது செய்தாலும் தி.மு.கவை ஆதரிக்கின்ற பா.ஜ க என்றாலே கண்ணை மூடிக்கொண்டு பா.ஜ க எது செய்தாலும் எதிர்க்கின்றவர்களை தான் குறிப்பிட்டு சாடுகிறோம்.
ஆனால், இந்துக்களை சாடும் பொழுது இப்படி தனித்து ஒரு மறுப்பை குறிப்பிட வேண்டிய தேவை இந்தியாவில் இல்லை என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும்.
சனாதன தர்மத்தில் உள்ள திருமந்திரத்தின், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதை சொல்லித்தான் அண்ணா கட்சி தொடங்கினார். கடவுளை மறுக்கிறவர்களை இஸ்லாம் காபிர் என்கிறது. ஆனால், இசுலாமிய அமைப்புகள் தி.மு.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தி.மு.கவின் அரசியல் போராட்டங்களுக்கு ஜமாத்கள் மூலம் இஸ்லாமிய மக்களை தி.மு.க கேடயமாக பயன்படுத்த அனுமதிக்கிறது. இது எத்தனை பெரிய நகை முரண்!
ஊரில் நமக்கு தெரிந்த ஒரு அம்மா, குடியுரிமை சட்டத்தைப்பற்றி ஏதும் தெரியாமல் ஜமாத்களை நிர்வகிப்பவர்களால் தான் போராட்டத்தில் பங்கு கொண்டேன் என்றார். திருச்சபைகளில் கூட்டம் கூட்டி தி.மு.க.விற்கு வாக்களிக்க தீர்மானம் செய்துகொண்டு பாஜகவை மதவெறி பிடித்த கட்சி என்று பேசுவது எத்தனை பெரிய பிழை என்று இசுலாமியர்களும் கிருத்துவர்களும் சிந்திக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் விஷயத்தை பொறுத்தவரையில், சங்க காலத்தில் இருந்து முருகன் மலையாக இருந்த மலையில், ஒரு நினைவிடத்தையோ சமாதியையோ வைத்திருக்க ஒரு சமயம் அனுமதித்து இருக்கிறது என்றால், வருடத்தில் ஒரு நாள் அந்த சமயத்தவர்கள் விளக்கேற்ற்றுவதை ஏன் ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும். என்ன குறைந்த விட போகிறது! வாங்க வருடத்தில் ஒரு நாள் கார்த்திகை அன்று விளக்கேற்றி கொள்ளுங்கள் என்றால் பிரச்சனையும் இல்லை கலவரமும் இல்லை. அந்த நிலைக்கு வர முடியவில்லை என்றால் மத வெறி எங்கே இருக்கிறது?
அது மத்திய கிழக்காசியாவில் இருந்து இந்தியா வந்து ஆண்ட ஒரு சுல்தானின் நினைவிடம் அங்கு பலி கொடுத்து அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்கிற நம்பிக்கையோ சடங்கோ இஸ்லாத்துக்கும் எதிரானது என்கிற பொழுது, அங்கு அசைவம் சமைப்பதை ஏன் கைவிடக்கூடாது?
கலவரம் விளக்கேற்ற வருகிறவர்களால் மட்டும் ஏற்படுவது இல்லை அதை தடுப்பவர்களாலும் தான் ஏற்படும். இத்தனை சிக்கலுக்கும் அதுவும் காரணம் தான்.
தமிழகத்தில், மதக்கலவரம் என்று ஒன்று நிகழுமானால் அதற்கு பா.ஜ.க வை விட தி.மு.க தான் காரணமாக இருக்கும்.
இந்துக்களுக்கு விரோதமான கருத்துக்களை தி.மு.க தலைவர்கள் பேசுகிற பொழுது, அல்லது இந்துக்களுக்கு விரோதமான செயல்களில் தி.மு.க ஈடுபடுகிற பொழுது அதை தி.மு.வுடன் கூட்டணியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளும் தி.மு.கவை ஆதரிக்கும் திருச்சபைகளும் தட்டிக்கேட்க வேண்டும். இது நாள் வரையில், இந்த விஷயத்தில் திருச்சபைகளும், இஸ்லாமிய அமைப்புகளும் மௌனமாக தான் இருந்திருக்கிறது. இந்த மௌனத்திற்கு பெயர் மத வெறி இல்லையா? இந்து மதம் ஆரிய மதம் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று தி.மு.க வின் ஊடக ஆதரவாளர்களான இசுலாமியரோ கிருத்தவரோ அல்லது தி.மு.க தலைவர்களே கூட பேசும் பொழுது, ஜெருசலமும் மெக்காவும் லெமுரியா கண்டத்தில் இருந்து பறந்து சென்று மேற்காசியாவில் ஒட்டிக்கொண்டதா? என்பதை இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் கேட்க வேண்டும். எந்த நம்பிக்கை எங்கிருந்து வந்திருந்தால் என்ன? எல்லா சமயங்களையும் மதிக்க வேண்டும் என்பது தானே மத நல்லிணக்கம். அதன் பொருட்டு தி.மு.க மற்றும் அதன் சார்பு நிலை இசுலாமியர்கள் கிருத்துவர்கள் இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் பொழுது அதை இஸ்லாமியர்களும் கிறித்தவர்களுமே தான் தட்டிக் கேட்க வேண்டும்.அது நடக்காமல் நீடித்து கொண்டே போனால், இந்து சமய நம்பிக்கைகளை பின்பற்றுகிறவர்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலைக்குள் இருப்பதாக உணர்வார்கள். அதன் விளைவாய் இங்கே நீங்கள் வெறுக்கும் சங்கிகள் பெருகுவார்கள்.அது தவிர்க்க முடியாததாய் மாறும்.
இன்று எந்த அரசியல் தேவை என்கிறார் முதல்வர். அரசியல் என்பது ஒரு நிலவரையறைக்குள் இருக்கின்ற மக்களின் மத நம்பிக்கை மதிப்பது கலாச்சார சடங்குகளை பின்பற்ற இடமளிப்பது என்று எல்லா தேவைகளையும் சரியாக பூர்த்தி செய்வது தான். இந்து கோவில்களை வணிகத்தளமாக மாற்றி; சுடுகாடுகளை குப்பை மேடுகளாக்கி முன்னோர் வழிபாடுகளுக்கான இடங்களை சாக்கடையாக மாற்றி வைத்திருப்பதெல்லாம் அரசியல் குறைபாடு தான், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.உங்களுடைய தந்தையை நீங்கள் நினைத்தது படி அடக்கம் செய்ய எத்தனை போராடினீர்கள். இங்கே இந்துக்கள் வாழும் இடங்களில்,சரி தமிழர்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்,தமிழர்கள் வாழும் இடங்களில் அவர்களின் கலாச்சார சடங்குகளின் அவர்களின் சொந்தங்களின் கடைசி பயணத்தை படி முறையாக நடத்த சரியான வசதிகள் இருக்கிறதா? இதெல்லாமும் கூட நிர்வாக குறைபாடு தான் அரசியல் தேவை தான். இந்த வசதிகளும் சேர்த்தது தான் வளர்ச்சி. ஐம்பது ஆண்டு ஆட்சியில் இன்னும் ஒழுகும் பேருந்துகளை வைத்துக்கொண்டு, உங்கள் கட்சியின் மத வெறுப்பு போக்கை மறைக்க மெட்ரோவை தூக்கிக்கொண்டு வருகிறீர்கள்.நீங்கள் ஒரு நாளும் ஒழுகும் பேருந்தில் சென்றதில்லை. உங்கள் அப்பாவிற்கு வடை வைத்து மரியாதை செய்யும் அளவு வசதி செய்து கொண்டீர்கள்.வாக்கு வங்கிக்காக அண்ணா சொன்ன ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை மறந்து விட்டு மத வெறுப்பை பரப்பிக்கொண்டு அரசியல் செய்யும் நீங்கள் தீடீரென்று வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசுவது ஆற்ற முடியாத சீற்றத்தை தருகிறது.
இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் தங்கள் எண்ண போக்கை மாற்றிக்கொண்டு வாக்களிப்பதிலும் அரசியலுக்குள்ளும் ஜமாத்துகளையும் திருச்சபைகளையும் இழுக்காமல் இருந்தால் தான் தி.மு.க. அதன் போக்கை மாற்றிக்கொள்ளும். தி.மு.க. அதனின் இந்த இந்து விரோத போக்கை மாற்றிக்கொள்ளாத வரையில் பா.ஜ.க இல்லாமல் போனாலும் இந்த சலசலப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.சிந்தியுங்கள் கலவரம் என்பது ஒரு தரப்பால் ஏற்படுவது அல்ல. வீம்பால் இருதரப்பினரால் ஏற்படுவது.
