“தண்ணியை இப்படி வீணாக்கினா! எப்படி காசு நிக்கும்!” கொஞ்சம் அதிகமாக குழாயை திறந்து தண்ணீரை வீணடிக்கும் பொழுதுகளில் ஒலிக்கும் அம்மாவின் கோபமான வார்த்தைகள் அது.
“தண்ணியை இப்படி வீணாக்கினா! எப்படி காசு நிக்கும்!”
வெங்காயமும் வளரும் தமிழகத்தில் வளர்ந்த நான், “தண்ணிக்கும் காசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” என்று அம்மாவை ஏளனம் செய்ததுண்டு.
தண்ணிரை வீணாக்காமல் இருந்தால் எல்லோரும் பணக்காரர் ஆகிவிடுவார்களா? பணக்காரர்கள் தண்ணீரை வீணடிப்பதில்லையா? எல்லா வெங்காய கேள்விகளும் நமக்கு உதிக்கும். ஆனால், மூட நம்பிக்கையாகவே இருந்தாலும் அது தண்ணீரின் மதிப்பை பற்றியதாக இருக்கின்றது. கொஞ்சம் யோசிப்போமே!
அம்மா ஏன் அப்படி சொன்னாங்க?
“அவங்க அம்மா சொன்னாங்க!”
வழக்கத்தில் வந்ததாகவே இருக்கட்டுமே! எப்போதோ யாரோ சொன்னதாகவே இருக்கட்டுமே! ஏன் வழக்கத்தில் வந்தது?
ஆனால், நிச்சயமாக தண்ணீர் super ஹீரோ படங்களில் வருவது போல், விரல்களை நீட்டி பணத்தை நிறுத்திவிடப்போவதில்லை.
“அப்புறம் ஏன் அப்படி சொன்னாங்க?”
சமயங்களிலும், சில இடங்களிலும் அரிதாக இருந்தாலும் எப்போதும் எளிதாக கிடைப்பது தண்ணீர் தான். எளிதாக கிடைக்கும் ஒன்றை ஒரு வீடு அத்தனை மதித்து அத்தனை சிக்கனப்படுத்துகிறது என்றால், அந்த குடும்பத்தின் மேலாண்மை திறன் எத்தனை மேம்பட்டதாக இருக்கும். அத்தனை மேம்பட்ட மேலாண்மை செலுத்தும் குடும்பம் தேடிச்சேர்த்த செல்வத்தை இன்னும் சரியாகத்தானே நிர்வகிக்கும்.
மேலே சொன்னது, எப்படி ஒரு குடும்பத்திற்கு பொருந்துமோ அதே போல் நாட்டுக்கும் பொருத்தும். ஒரு குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு சற்றும் குறைவில்லாதது தான் ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பதும்.
சிறு வயதில், ஆனந்த விகடனில், சிங்கப்பூர் பற்றி படித்த ஒரு கட்டுரை அவர்களின் நீர் மேலாண்மையை பற்றி கொஞ்சமாக விவரித்து இருந்தது. அந்த கொஞ்சமான விவரிப்பே, அந்த வயதில் அந்த விவரிப்பை முழுதும் கற்பனை செய்து பார்க்க முடியாத எனக்கு பெரும் பிரமிப்பை தந்தது.
ஒரு காலத்தில், அதிமாக தண்ணீர் தேவைகளுக்கு அண்டை நாட்டை சார்ந்திருந்த சிங்கப்பூரின் முக்கியமான் ஒரே ஒரு நீர் ஆதாரம் மழை. அந்த மழை நீரை எப்படியெல்லாம் சேர்க்க முடியுமோ அப்படியெல்லாம் சேகரிக்கிறார்கள் என்பது தான் அந்த கட்டுரையின் சாரம்.
எப்படி சேர்க்கிறார்கள்? நீங்களும் நானுமா சிங்கப்பூர் சென்றோம். முன்னொரு காலத்தில்,சென்னை பெரு நகரின் மேயராக இருந்த சமயத்தில் நம்முடைய மதிப்பிற்குரிய தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்ற பொழுது அங்கு உள்ள வடிகால் அமைப்புகளை பார்வையிட்டதாகவும் அதே போல், சென்னையில் கொண்ட வர இருப்பதாகவும் செய்திகள் படித்தகாக அரைகுறையாக ஒரு நினைவு ஒட்டிக்கொண்டு இருக்கின்றது.
அவர் பிறகு, சென்னை வந்துவிட்டார். நாம் சிங்கப்பூர் கதைக்குச் செல்வோம்.
சிங்கப்பூரின் நீர் மேலாண்மையை பற்றி சொல்ல வேண்டாமென்றால் ஆங்கிலத்தில் அதனை, “Integrated Rain water harvesting” எனலாம். தமிழக அரசு ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது சொந்த வீடு வைத்திருப்பவர்களை எல்லாம் மழை நீர் சேகரிக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தியதற்கு பெயர்,”Distributed Rain water harvesting” எனலாம். இந்த “Integrated Rain water harvesting” இல் மனிதனின், ரத்த நாளங்கள் போல், நரம்புகள் போல், மழை நீர் வடிகால் கால்வாய் சிங்கப்பூர் மொத்தமும் பரவி கிடக்கும் எல்லாம் இணைக்கப்பட்டிருக்கும் ஆங்காங்கே அந்த வடிகால்களின் நீல அகல் உயரம் அதிகப்படுத்தப்பட்டிருக்கும் ஆங்காங்கே அந்த வடிகால்கள் நீர் தேக்கங்ககளோடு இணைக்கப்பட்டிருக்கும். வடிகால்களில் அசுத்தமான எதையும் அந்த அரசாங்கம் கலக்க விடுவதில்லை, கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் சேரும் சேறு கலந்த தண்ணீரை கூட மழை நீர் வடிகால்களில் கலக்க அவர்கள் அனுமதிப்பதில்லை.
நீர் மேலாண்மையில், இண்டு இடுக்கு அளவிற்கு சிந்தித்து செயலாற்றும் அவர்கள், மற்ற விஷயங்களில் இன்னும் எத்தனை பெரிய அளவில் சிந்திப்பார்கள். எப்படிச்செயலாற்றுவார்கள்!தமிழகத்தில் வெங்காய சித்தாந்தங்கள் வளர்ந்த அரை நூற்றாண்டில் அந்த நாடு அதீத வளர்ச்சி அடைந்தது.
மொத்ததில் தண்ணீர் மீது தனிநபர்களை உள்ளடக்கிய சமூகம் கொண்ட மதிப்பு தான் அந்த சமூகத்தின் மேலாண்மை திறனை காட்டுகிறது.
நம் சமூகம் தண்ணீரை மதிப்பதில்லையா?
நம் சமூகம் கொண்டாடும் அநேகமான விழாக்களில் முக்கியமானதாக தண்ணீரே தான் இருக்கின்றது. ஊருக்கு ஒரு கோவில்; கோவிலுக்கு ஒரு தெப்பம், தெப்பத்துக்கு ஒரு திருவிழா எல்லா ஊர்களிலும் தண்ணீரும் மையப்படுத்தப் பட்ட திருவிழா, நகர வாழ்க்கைக்கு மாறிவிட்ட பின்னும் ஆடி பெருக்கு அன்று தண்ணீர் குழாய்களுக்கு பொட்டு பூ வைத்து வணங்கும் வழக்கம் என்று தண்ணீரை இத்தனை கொண்டாடி வணங்கும் இருக்கும் சமூகம்; ஏன் சிங்கப்பூர் போல அல்லாமல் பொது மேலாண்மையில் நூறு வருடங்களாக தேக்க நிலையில் இருக்கிறது.
காரணம், தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி போஸ் கொடுக்கும் அளவிலேயே தான் ஒரு சமூகமாக தண்ணீரை நாம் மதிப்பதும் இருக்கின்றது. நூறு வருடங்களுக்கு முன்னர், வெங்காய சித்தாந்தங்களின் தோற்றத்திற்கு முன்னர் நாம் அப்படியிருக்கவில்லை.
என்னுடைய பால்ய வயதில், நாங்கள் குடியிருந்த பெரிய ஒரு சந்தில் எல்லா வருடமும் எப்போது மழை பெய்தாலும் அந்த பெரிய சந்தின் மையத்தில் எப்போதும் மழை நீர் தேங்கி விடும். என்ன செய்வது, அந்த இடத்தில் விழுவதற்கு முன்பு வரை மட்டுமே தான் அது சுத்தமான நீர். வெங்காய சித்தாந்தம் வளர்ந்த தமிழக்தின் தலைநகரில் இருந்து 30 காத தூரம் தள்ளி இருக்கும் ஒரு நகரத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சந்தில் வந்து விழுந்து பின், கிட்டத்தட்ட தீண்டத்தகாத நீர் ஆகிவிடும். பாவம் அந்த தண்ணீர் அங்கேயே நிற்கிறதே என்று ஒருவர், அந்த சேறும் கலந்த நீரில் மறைந்து இருக்கும் சாக்கடை மூடியை பாதி அளவில் திறந்து விடுவார், சில மணி நேரங்களில் நீர் வடிந்து விடும். இதனை தான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாடியிருந்தார்.
எல்லா வருடமும் எல்லா இடங்களிலும் தண்ணீர் இப்படியாகவே தான் அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது இதுவும் அரசியல் பிரச்சனையே தான். ஆனால், இங்கே தண்ணீர் பிரச்சனை என்றால், தமிழகத்தை கேரளா வஞ்சிக்கின்றது, கர்நாடக வஞ்சிக்கின்றது ஆந்திரா வஞ்சிக்கின்றது மத்திய அரசு வஞ்சிக்கின்றது என்கிற கோஷங்களே தான் முதன்மைப்படுத்தப்படுகிறது. இந்தியா முழுதுமே நீர் மேலாண்மையில் மேம்பட வேண்டும் தான், ஆனால் நிச்சயமாக தமிழகம் தன் அண்டை மாநிலங்களைவிட நீர் மேலாண்மையில் மோசமாகவே தான் செயல்பட்டிருக்கிறது என்பதை புள்ளியியல் தரவுகள் இன்றி சொல்லிவிட முடியும்.
நூறாண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நீர்த்தேக்க கட்டமைப்பைகளை முறையாக பராமரித்து பாதுகாப்பதை கூட சரியாக நம் மாநிலம் செய்யவில்லை.
மதுரைக்கு சென்றிருந்த பொழுது கேட்ட மற்றுமொரு மூட நம்பிக்கை கதை. அங்கே அழகர்கோவிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு குக்கிராமத்தில் ஒரு தெப்பம் இருந்தது; நடுவில் ஒரு மண்டபம், தெப்பம் முழுமைக்கும் காவி பூசியிருந்தார்கள்.இந்த ஐந்து கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு கோவிலும் இல்லை.அந்த ஊரில் மழைபெய்ய தேவையில்லை அழகர்மலையில் மழை பெய்தாலே இந்த தெப்பம் நிரம்பிவிடும். அப்படி ஒரு வழி இருக்கிறது என்றார்கள்; நம்பவில்லை. அப்படி நடந்திருக்கிறது; ஆனால், இப்பொழுதெல்லாம் அப்படி நடப்பதில்லை என்றார்கள்.என்ன கதை!
இயற்கையான மழை நீர் வடிகால்களை நாம் மறிக்கும் பொழுது அதற்கு பரிகாரத்தை செய்யாமல் விட்டுவிடுகிறோம்.காவி பூச படாமல் இருந்திருந்தால், அந்த தெப்பமும் கூட அங்கே இருந்திருக்காது.
மூட நம்பிக்கையும் கூட நல்லது தான் முதல்வர் அவர்களே!
வெள்ளம் அதன் வழியில் போகும் வரை அல்லது அதற்கு வழியிருந்து போகும் வரை இயற்கை வெள்ளம் தான். வழிகிடைக்காமல் திணறும் வெள்ளம் செயற்கையானது தான்.
இடர் என்றால் இடர் தான். சிற்றிடர் பேரிடர் என்பது இடரை அனுபவிப்பவர்கள் வகைப்படுத்தவேண்டும். நீங்கள் வகைப்படுத்தக்கூடாது big boss. நானுமே கூட வகைப்படுத்த முடியாது.கடைசியாக 90 களில் பார்த்தது, அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் “வெள்ளம் வராதா!விடுமுறை தரமாட்டார்களா!” என்று ஏங்கியது தான் மிச்சம். காரணம், எங்க ஊரு infrastructure அப்படி ரோமை விட பழமையான infrastructure .இன்னமும் எங்களை காப்பாற்றுகிறது என்று நம்புகிறேன்.அது மூட நம்பிக்கையாவே இருந்தாலும். அது உண்மையாகவும் இருக்கலாம்.புரிந்துகொள்ளுங்கள் big boss.
Back to the article after Big boss Break!.
நம் முதலமைச்சர்,முன்னாள் சென்னை மேயர், சில முறை கண்டுகளித்த சிங்கப்பூரிலும் கூட அரிதிலும் அரிதாக மழை நீர் வடிய ஏதேனும் ஒரு மூலையில் நீர் தேங்கி, தற்போதைய சென்னை மேயர் சொல்வது போல், தானாக வடிவது உண்டு, அது சிங்கப்பூரில் சில நிமிடங்களில் வடிந்துவிடும், அந்த சில நிமிடங்கள் நிற்கும் வெள்ளத்தை அவர்கள், flash flood என்பார்கள்,மழை நிற்பதற்குள்ளாகவே அது வடிந்துவிடும் அடுத்த முறை மழை பெய்வதற்குள், அது ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து சரி செய்து விடுவார்கள். அதற்காக அவர்கள் எங்கும் சுற்றலா செல்வதில்லை.
ஒரு சமூகமாக எல்லா வகையிலும் நீரை மதித்தால், அரசியலிலும் கூட நல்ல மாற்றம்; நடக்கவே வாய்ப்பில்லாதது என நாம் நம்பிக்கொண்டிருக்கும் மாற்றம் நிச்சயம் நிகழும். கை கழுவும் போது என்ன பண்ணனும்? கொஞ்சமா தண்ணி செலவு பண்ணனும்! இல்லாட்டி என்ன ஆகும்? காசு…
தண்ணீரை எல்லா நிலைகளிலும் மதிக்கும் வீடும் ஊரும் நாடும் நல்லா இருக்கும்!