கதிர் விஜயம்

தேவதைகளின் சொர்க்கத்தை மீட்டெடுப்போம்!

பிறந்தே வருகிறார்கள்
பெண் பிள்ளைகள்
நம்மிடம்
தேவதைகளாய்!

அந்த கவிதையில் இருக்கும் அழகே அதில் இருக்கும் தேவதைகள் தான்.அந்த தேவதைகள் தேவதைகளாக பாவிக்கப்படுவது கூட இல்லை.

சில நேரங்களில், அதிகம் பேசித் தீர்த்த விஷயம் என்றாலும் நாமே சில கட்டுரைகளின் இடையே பேசிய விஷயம் என்றாலும் அதனை மீண்டும் மீண்டும் பேச அவசியம் ஏற்படுகிறது.

மீண்டும் மீண்டும் நடக்கும் தவறுகள். நம்மை மீண்டும் மீண்டும் பேசிய விஷயங்களையே பேச வைக்கின்றது.

சீனாவை சேர்ந்த என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, “மீ அண்ட் மை வைப் கோ பார் வெகேஷன்,லாஸ்ட் டைம் வி வென்ட் டு ஆஸ்திரேலியா (me and my wife go for vacation; last time we went to Australia ” என்றார்.

அவரிடம் நான், அடுத்த முறை இந்தியா வாருங்கள் என்று நான் சொன்னது தான் தாமதம், “மை வைப் டோன்ட் லைக் இந்தியா தேய் டோன்ட் ரெஸ்பெக்ட் வுமன் (my wife don’t like India they don’t respect women)” என்றார்.

சில நேரங்களில் நீங்கள் பதில் சொல்வதற்கு இருக்கும் காரணங்களை விட பதில் சொல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் தான் அதிகமாக இருக்கும். அவரிடம் இந்தியா அப்படியில்லை என்று நான் என்ன பேசத் தொடங்கியிருந்தாலும், அவர் மனைவியின் பார்வையை என்னால் மாற்றியிருக்க முடியாது. யாரும் அவர்களின் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்கிற எண்ணம் மட்டுமே தான் அவருக்கும் ஏற்பட்டு இருக்கும்.

என்னுடைய பார்வையில், எது மதிப்புமிக்கதாய் இருக்கின்றதோ அது களவாடப்படும் பொழுது தான், அது பெரிதாக தெரியும். மதிப்பில்லாத ஒன்று தொலைந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை.  அப்படியாகத் தான் இந்தியாவில் பெண்களின் நிலையும். உலகில் உள்ள எல்லா உயிர்களும் மதிப்பிற்குரியது தான் என்றாலும். இந்தியாவில் பெண்களுக்கான மதிப்பு என்பது  உலகில் உள்ள எல்லாவற்றையும் விட மேலானதாகத் தான் இருந்திருக்கின்றது, இப்போதும் இருக்கிறது.

இந்த இடத்தில், விவேகானந்தருக்கும் ஆங்கிலேயர் ஒருவருக்கும் நடந்ததாக சொல்லப்படும் உரையாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் பொழுது கை கொடுத்து கொள்வதும் அரவணைத்துக்கொள்வதும் இயல்பானது. உங்கள் ஊரில் ஏன் பெண்கள் அப்படி கை கொடுப்பதில்லை என்று அந்த ஆங்கிலேயர் கேட்டாராம்.

உங்கள் ராணிக்கு நீங்கள் கை கொடுப்பீர்களா? இல்லை தானே? எங்கள் ஊரில் எல்லோரும் ராணி தான் என்றாராம் விவேகானந்தர்.

எங்கள் சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதில்லை என்னும் அளவிற்கு பரந்து கிடந்த சாம்ராஜ்யத்தின் ஒரேயொரு ராணிக்கு இருக்கும் மதிப்பு ஓவ்வொரு இந்திய பெண்ணுக்கும் இந்தியாவில் தந்து இருக்கிறோம். இப்போதும் தருகிறோம். அத்தனை பெரிய மதிப்பிற்கு பங்கம் வரும் சமயங்களில், அது மிக பெரிதாக, தேசங்கள் தாண்டியும் இந்தியா மீது ஒரு தவறான பார்வையை உண்டு செய்யும் அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தும் தானே!

அந்த தாக்கத்தின் விளைவுகளில் ஒன்று என் நண்பரின் மனைவி இந்தியா மீது கொண்டிருந்த தவறான பார்வைக்கும் காரணம். இப்படியான தவறான பார்வையை வலுப்படுத்தியத்தில் திராவிட சிந்தாந்தமும் அது சார் ஊடங்களும் செய்த பணி அளப்பரியது. அதை இப்போதும் அவர்கள்  செய்துகொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்கள் செய்த சமீபத்திய அளப்பரிய பணியைப் பற்றி ஓரிரு பத்திக்கு பின்னர் வருகிறேன்.

இந்திய கலாச்சாரமானது யாரும் விடுதலை பெற்று தரவேண்டிய அளவிற்கு பெண்களை அடிமை படுத்தியிருக்கவில்லை. அந்த உரையாடலில் என் நண்பர் கேட்ட ஒரு கேள்வி, “பெண்கள் திருமணத்திற்கு பணம் கொடுக்க வேண்டுமா?”

அந்த கேள்வி வரதட்சணை பற்றியது.

வரதட்சணை போன்ற ஏற்பாடுகள் எல்லாம் வன்முறையாகவும் கொடுமையாகவும் உருமாற்றம் பெற்றதுக்கு வியாபார உலகமே தான் காரணமே தவிர இந்திய கலாச்சாரத்திற்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இருந்திருக்கவில்லை.

ஒரு குடும்பத்தில், அசையும் சொத்துக்கள் எல்லாம் பெண்ணுக்கு, அசையா சொத்துக்கள் எல்லாம் ஆணுக்கு என்பதை எத்தனை ஆயிரம் வருடங்களாக இந்தியா பின்பற்றி வருகிறது. ஆங்கிலத்தில் காம்பென்சேஷன் (compensation) என்பார்கள், அப்படி நிலையற்ற சொத்துக்களை பெறும் ஒரு பெண்ணிற்கு அவளுடைய எல்லா நல்லது கெட்டதிற்கும் அசையா சொத்துக்களை பெறும் ஆண், காம்பென்சேஷன் தர வேண்டிய முறைமையை ஏற்படுத்தி அதை எத்தனை ஆயிரம் வருடங்களாக இந்தியா பின்பற்றி வருகிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக சமத்துவம் இந்தியாவில் இருக்கத்தான் செய்தது.இப்போதும் இருக்கிறது.

இந்தியர்களான நாம் அடிமைகளாக்கபட்ட பின்னரே தான், தன் சார்ந்த பெருமைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் நம்மை நாமே இகழத் தொடங்கினோம். ஆனால்,நம்மை அடிமைப் படுத்திவைத்திருந்தவர்களின் கலாச்சாரங்களை ஒரு பொழுதும் நாம் சிறுமைபடுத்தியதில்லை.

இப்படியானதொரு நிலையில், இங்கு பெண் அடிமையாக இருந்தாள், நாங்கள் தான் விடுதலை பெற்று தந்தோம் என்று பிதற்றுகிறவர்களை கண்டால் கோபம் தான் வருகிறது. பாலைவனங்களில், ஏலம் விடப்படப்பட்டது போல், இந்தியாவில் ஒருபொழுதும் நடந்ததில்லை.

புள்ளியியல் தரவுகள் எதையும் ஆராயாமல் இந்தியாவில் உள்ள சிறு தெய்வங்களில் பெண்களே தான் அதிகம் இருக்கின்றார்கள் என்பதை அடித்துச் சொல்லலாம். பத்துவீடுகள் கூட இல்லாத ஊரிலும் என்றோ வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு எழுப்பப்பட்ட கோவில் இன்றும் இருக்கின்றது.

ஒரு பெண், தன்னுடைய கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்திய கலாச்சாரத்தில் நிச்சயமாக நீங்கள் பார்க்க முடியும். அப்படி இல்லையென்றாலும் கூட ஒரு ஆணுக்கு வாய்க்க வேண்டிய மனைவியை தீர்மானிக்கின்ற இடத்தில் எப்போதும் பெண்களே தான் இருந்திருக்கின்றார்கள்.

இந்திய பெண்களிடம் இருந்த மேலாண்மை நிபுணத்துவங்களுக்கெல்லாம் பேர் வைத்து எம்.பி.ஏ பாடங்களில் பத்து மார்க் கேள்விகளாக வைத்து இருக்கின்றார்கள்.

பாட்டியிடம் இருந்த நிபுணத்துவங்களை பாடப்புத்தகத்தில் பார்த்து,”இதை சொல்லித்தர எங்கிட்ட காசு வேற வாங்கிட்டிங்களே டா” என்று நினைத்துகொண்டு நாட்கள் எல்லாம் இப்போது நினைவிற்கு வருகிறது.

தினமும் பள்ளிக்குச் சென்று படிப்பது தான் கல்வி என்று நம்பத் தொடங்கிய அடிமை மனப்பான்மை, கலாச்சாரம் கடத்திவந்த நிபுணத்துவங்களை மங்கச் செய்து, பெரியார் வந்து தான் பெண்களை படிக்க வைத்தார் என்று நம்மை நம்பச் செய்கிறது.

சொத்தில் சமஉரிமை,இருக்கும் வரை செல்லுமிடெல்லாம் சிறப்பு, பின் தெய்வ நிலைக்கு பதவி உயர்வு என்று எல்லா வகையிலும் பெண்களுக்கான மதிப்பு இந்தியாவில் அதிகமாகவே தான் இருக்கிறது.

இவனுக்கு இந்த திராவிட கோஷ்டி மேல கோபம் என்று நீங்கள் நினைக்கும் அளவிற்கு இந்த கட்டுரையில் என் எழுத்தில் அந்த கோபம் வெளிப்பட்டதற்கு காரணம், we(indians) are bad என்பதை நிறுவ எல்லா பகீரத முயற்சிகளையும் எடுத்து, எதையும் சரியாக பகுத்து அறிந்து ஆராயாமல் பெரியார் மதம் பிடித்து, நாங்க நம்புகிறது தான் உண்மை என்று திரியும் கோஷ்டி இந்தியா மீது கட்டமைத்த பொய்களும் கூட இந்தியர்களில் சிலருக்கும், வெளிநாட்டவர்களுக்கும் இருக்கும் தவறான பார்வைக்கு காரணமாக அமைந்தது தான் அத்தனை பெரிய கோபத்தத்திற்கு காரணம் .

சரி!கடந்த காலத்தில் அப்படியில்லை. நிகழ்காலத்தில் என்ன பிரச்சன்னை. ஒன்று அரசியல், மற்றொன்று ஊடகம்.

பெண்கள் பற்றிய செய்திகள் என்றால், அது ஊடகத்திற்கு ஹாட் செல்லிங் டாபிக். தெரிந்தோ தெரியாமலோ இந்த சமூகம் அப்படித்தான் இருக்கின்றது.ஊடகத்தை குற்றம் சொல்லி சமூகத்தை சேர்த்துக்கொண்டான் என்று நினைக்காதீர்கள். ஊடகமும் சமூகத்திற்குள் தான் இருக்கின்றது.

திராவிட கூட்டத்தின், முதல் தொலைக்காட்சி, எந்த ஊடகமும் தேடிப்பெறாத செய்திகளை எல்லாம் அவர்களே தான் உருவாக்குவார்கள். மன்னிக்க! அவர்களே தான் ஒளிபரப்புவார்கள்.

சமீபத்தில், உட்கட்சி பூசலின் விளைவாக,  அ.தி.மு.க. பிரமுகர், தன் ஆதங்கத்தை கொட்ட தேர்ந்தெடுத்தது அந்த தொலைக்காட்சியை தான். எல்லோரும் முன்னமே அறிந்திருக்க வாய்ப்பிருக்கும் செய்தி என்பதால் இதை இங்கே எழுதுவதில் எந்த குற்றமும் இல்லை என்று நினைக்கிறேன். தன் கட்சி சகா மீது அவதூறு பரப்ப நடிகை திரிஷாவின் பெயரை அவர் பயன்படுத்திக்கொண்டார்.

முப்பது வருடங்களை கடந்துவிட்ட காட்சி ஊடகம், எந்த வகையிலும் மக்கள் பிரதிநிதியாக கூட அல்லாத யாரோ ஒரு கட்சி பிரமுகர்  ஆதாரம் இல்லாமல் முன்வைத்த அவதூறுகளை அப்படியே ஒளிபரப்பியிருக்க கூடாது. நம்மில் ஒருவரும் அதை பேசவில்லை. நடிகை திரிஷாவும் கூட அந்த கட்சி பிரமுகருக்கு மட்டுமே தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியதாக தெரிகிறது.

இப்படியான ஒரு அவதூறை அல்லது குற்றசாட்டை ஆதாரமில்லாமல் ஒருவர் முன்வைக்கும் பொழுது, சம்மந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் அல்லது விளக்கம் கேட்க அணுகியிருக்க வேண்டும்.இது இரண்டையுமே அந்த திராவிட ஊடகம் கடைபிடித்ததாக தெரியவில்லை.

சரி! அவர்களை தண்ணி தெளித்து விடலாம். நாம் என்ன செய்தோம்? அங்கு எந்த ஆணைப் பற்றி அவதூறு பரப்பபட்டதோ அவரைப் பற்றி ஒருவரும் பேசியதாக தெரியவில்லை. இப்போதும் கூட இதை படிக்கும்  சிலருக்கு திரிஷா என்ன பெரிய ஒழுக்கமானவளா என்று தோன்றியிருக்கலாம்.

தனிப்பட்ட முறையில் ஒரு பெண் எப்படியானவராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அதற்காக யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் பொது வெளியில் பேசிவிடலாம் என்று இல்லை.இதுவும் கூட பெண்களுக்கு எதிரான ஒரு வகையான வன்முறை தான். திரிஷா சினிமா போன்ற மக்களுக்கு பொதுவான துறையில் இருப்பதால் அவர் மீதான அவதூறு எல்லோராலும் பேசப்படுகிறது. இதை எல்லா நிலைகளிலும் இருக்கும் பெண்களுக்கு பொருத்தி பாருங்கள்.

யாரோ ஒருவர், யாரோ ஒரு பெண் மீது, அவதூறாக ஒன்றை சொல்லிவிட்டு அடுத்த நொடி மன்னிப்பு கேட்டாலும், காலத்திற்கும் அந்த அவதூறு அப்படியே தான் இருக்கும்.ஒழுக்கமே இல்லாத பெண் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அது நடந்தாலும் அது மிகப்பெரிய வன்முறை தான்.

நடிகைகள் தானே! காசுக்காக கவர்ச்சியாகவும் நடிக்க கூடியவர்கள் தானே என்கிற வாதங்கள் உங்கள் மனங்களில் எழும் என்றால், கடைக்கு வெளியில் கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்கள் கால்களை தொட மாட்டேன் என்ற செருப்பு கடைக்காரரின் கதையைத்தான் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

அவர்களின் இசைவோடு அவர்கள் அப்படி நடிக்கிறார்களா; அதை ரசித்தோமா அது தான் எல்லை.

முழுக்க முழுக்க சினிமாவை சார்ந்து வளர்ந்த ஊடகம், ஊடக நெறியையும் பின்பற்றவில்லை; பெண் என்கிற அளவில் அந்த நடிகைக்கு கொடுத்திருக்க வேண்டிய மதிப்பை பற்றியும் சிந்திக்கவில்லை; அந்த நடிகைகளும் கூட அவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணம் என்கிற நன்றியும் இல்லை என்கிற பொழுது எத்தனை கோபம் வரும்! அத்தனை கோபம் இந்த திராவிட கூட்டத்தின் மீது வந்தால் நம் மீது சாயம் பூசப் பார்க்கிறார்கள்.

இதே ஊடகம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கையாண்டு வந்த விதமும் கூட இந்தியர்கள் மீது  ஏற்பட்ட தவறான பார்வைக்கு பெரிய காரணமாகி விட்டது.

சமீபத்தில், கட்சி ஆரம்பித்த விஜய் வெளியிட்ட ஒரு அறிக்கையை பார்க்க நேரிட்டது.எழுதுவதற்கும் கூட தயங்கச்செய்யும் அளவிலான ஒரு பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை பற்றிய கண்டன அறிவிப்பு அது.

இத்தனை வருடங்களில் எத்தனையோ வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருந்தது.இப்பொழுது மட்டும் இவர் ஏன் கண்டன அறிக்கை எல்லாம் வெளியிடுகிறார் என்று கேட்பதில் நியாயமில்லை என்றாலும், அந்த அறிக்கை  செயற்கையாகவே தான் தெரிந்தது. அவருக்கும் கோபம் இருந்திருக்கலாம். யார் ஒருவர் அந்த செய்தியை கடந்தாலும் கோபம் கொள்ளளவே தான் செய்வார்கள், கண்டிக்கத்தக்க செயலை யாரும் கண்டிக்கவே தான் செய்வார்கள். ஆனால், இங்கு இருக்கும் அரசியலும், இந்த சமூகமும் விஜய் போன்றவர்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தி வைத்து இருக்கின்றது.

ஒரு மனிதாக சக மனிதனின் துயர் கண்டு கண்ணீர் விட்டாலும், நீங்கள் பொது வாழ்வில் இருந்தால், அந்த ஒரு துளி கண்ணீரை எல்லோரும் பார்க்கும் நேரம் பார்த்து, அந்த நேரம் வரும் வரை நிதானித்து சிந்த வேண்டும்.

“அதற்கு நீங்கள் குரல் கொடுத்தீர்களா? இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? அவர் இதுக்கு வாய திறந்தாரா?” இப்படியான குரல்கள் ஓய வேண்டும்.

கருத்துக்களையும் கண்டங்களையும் கேட்டு வாங்கி குவித்து என்ன செய்யப்போகிறோம்! மீண்டும் அதே அநீதிகள் நடந்து கொண்டு தானே இருக்கின்றது? இப்படியான அநீதிகள் நடந்த பொழுதுகளில், சட்டமியற்றுகின்ற இடங்களில்  இருப்பவர்களை அழைத்து, அமர்த்தி, அப்படியான அநீதிகள் இனி நடக்காமல் இருக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பற்றி ஊடகங்கள் பேசி உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா? ஒரு MLA ஒரு MP?  ஆக்கபூர்வமான ஒரு கலந்துரையாடல் ?வாய்ப்பில்லை ராஜா!

ரஜினி கருத்து சொன்னாரா? விஜய் என்ன சொன்னார்? அந்த கட்சி என்ன சொல்லுச்சு?

இந்த கருத்துக்கள் என்ன செய்துவிடும்! இதையும் பேசவில்லை என்றால் நீதி கிடைக்காது என்பீர்களா?எல்லோரும் இப்படியான வன்கொடுமைகளை பொது வெளியில் பேசி பேசித்தான் நீதி பெற்று தர வேண்டும் என்பதில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் கண்டனம் தெரிவித்த எத்தனை அரசியல் கட்சிகள் சட்ட போராட்டங்களில் அந்த பெண்களுக்கு நேரடி உதவிகளை செய்து இருக்கின்றது? தேடாமல், இல்லை என்று நீங்களும் நினைப்பது எனக்கு கேட்கிறது.

ஊடகமும் அரசியலும் இப்படியான வன்கொடுமைகளை, தங்களை ஆபத்பாந்தவர்களாய் காட்டிக்கொள்ள கிடைக்கும் தீனியாகவே தான் அணுகி வந்து இருக்கின்றது. அந்த அணுகுமுறை ஏற்படுத்திய நிர்பந்தம் தான் விஜய்யின் கண்டன அறிவிப்பிற்கு காரணமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

இதை விட்டால், இந்த ஊடகமும் உங்களையும் என்னையும் உள்ளடக்கிய இந்த சமூகமும் என்ன பேசும்? தண்டனைகள் கடுமையாக வேண்டும்  என்று பேசும்.

தண்டனை என்பதே கடுமையானது தான்.சட்டங்களும் கூட சீர்திருத்தப்பட்டிருக்கிறது தான். தவறு செய்தும் மாட்டிக்கொள்ள வாய்ப்பில்லாத சூழலில் தவறு செய்கிறவர்கள் தண்டனையை பற்றி ஏன் சட்டை செய்யப்போகிறார்கள்? ஒரு அநீதி இழைக்கப்பட்ட பின் தண்டனை என்ன மாற்றத்தை செய்துவிட போகிறது.வறு செய்தும் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்கிற சூழலில் தவறு செய்தவர்களுக்கு அளிக்கும் தண்டனை என்ன தாக்கத்தை தந்து விட போகிறது?

தவறுகள் நடப்பதற்கு ஏதுவான சூழல்களை கண்டறிந்து கலைய வேண்டும்.கவனிப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது மனித மனம் தவறு செய்ய அஞ்சும்.அதை நோக்கி தான் இந்த சமூகம் நகர வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைப்பதில் அது ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும்.

வியாபார நோக்குடன் எதையும் அணுகும் உலகில், தேவதைகளுக்கான பாதுகாப்பான சூழல் கொண்ட சொர்க்கத்தை நாம் மீட்டுக்கொடுக்கப்பதற்கு அதுவே தான் வழி

அதை நாம் செய்யாமல் மாறாக அவர்களின் சொர்க்கத்தை நாமே தான் நரகமாக்கிக்கொண்டிருக்கின்றோம். சமயங்களில் தேவதைகளே தேவதைகளின் எதிரிகளாகவும் இருக்கின்றார்கள். வீட்டில் வயது முதிர்ந்த ஒரு பாட்டி இருக்கும்; அந்த பாட்டி ஏன் தனியாக இருக்கிறார்? என்று கேட்டால் அவர்கள் இருந்துகொள்வார்கள் என்னும் அசட்டையான பதிலும் ஒரு பெண்ணிடம் இருந்தே தான் வருகிறது.

பொது மகளிர் என்பதற்காக அவரைப்பற்றி பொது வெளியில் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் என்று நினைப்பதும். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஆகாத விவாதப்பொருள் ஆக்கி அதில் கருத்து சொல்லாதவர்கள் குற்றவாளிகள் என்பது போல் சித்தரிப்பதும். வன்கொடுமைகளை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைளை மறந்து அவைகளை பற்றி பூதாகரமாக பேசிக்கொண்டு மட்டுமே இருப்பதும்.வாழ்நாளில் அநேகமான நேரத்தை தனிமையில் செலவழித்த பெண்ணை எப்போதும் தனிமையில் தள்ளுவதும் என்று எல்லாமே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தான்.

இந்தியர்களை விட ஒழுக்கத்தையும் பெண்களையும் பெரிதாக பேணிக்காக்கும் சமூகம் ஒன்று இருக்குமா தெரியவில்லை. ஆனாலும்,அந்த சமூகம் தன்னை காக்கும் தேவதைகளை காக்க பலவகைகளில் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.முக்கியமாக பெண்களுக்கான சூழலை மேம்படுத்த வேண்டிய தேவை அதிகம் இருக்கின்றது. சூழல் என்பது ஒரு இடத்தில் இருக்கும் தனிநபர்களையும் உள்ளடக்கியதே தான். அதுவும் மேம்பட இந்த சமூகம், சமூக அளவில் நடவடிக்கைகளில் எடுக்க வேண்டும். பெண் சம்மந்தப்பட்டிருக்கும் எல்லா விஷயங்களிலும் எல்லா நிலைகளிலும் தன்னுடைய அணுகுமுறையையும் பார்வையையும் அது மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆண்களின் சம்மந்தம் இல்லாமல் எந்த தேவதையும் ஒழுக்கம் கெட்டவர்களாகி விடுவதில்லை. திரிஷா போன்றவர்களுமே கூட தேவதையாக பாவிக்கப்படவேண்டியவரே தான்.

என்னைப்பொறுத்தமட்டில், ஒரு பெண்ணுக்கு ஆண் அத்தியாவசியமானவன் இல்லை. அதே ஒரு ஆணுக்கு பெண் எல்லா வகையிலும் அவசியமானவள். அவளை பாதுகாக்க கூட வேண்டாம் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவள் சொர்க்கத்தை சிதைக்காமல் இருந்தாலே போதுமானது.

குறிப்பு:நெருங்கிய உறவுகளுக்குள் நிகழும் சச்சரவுகளுக்கு கடைசி வரி பொருந்தாது. கணவன் மனைவி சண்டைக்கு பொருந்தவே பொருந்தாது.😀😀பெண்களுக்கு எதிராக பெண்களாலேயே நிகழும் குடியியல் வன்முறைகள் இதில் அதிகம் பேசப்படவில்லை.that  is an endless topic I believe.😀😀

 

Error happened.
Exit mobile version