கதிர் விஜயம்

மாநாடும் மாறாத அரசியலும்!- விஜய்யின் அரசியல் தொடக்கம்

மக்கு பிடித்தவர்கள் எல்லோரும் எப்போதும் எல்லா விஷயங்களிலும் நம் எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற படி மட்டுமே நடந்து கொள்வதில்லை. எல்லோருள்ளும் சில குறைகள் இருக்கவே தான் செய்கிறது. குணங்களில் இருக்கின்ற சில குறைகள் பண்புகளில் வெளிப்படுவதுண்டு, ஒருவரின் செயல்களே தான் அவரின் பண்புகளை காட்டும் கருவியாக இருக்கிறது. அந்த செயல்கள் எப்போதும் எல்லோரும் விரும்பும்படியானதாக இருப்பதில்லை.

பிடித்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொவொரு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் செய்யும் செயல்களே தான் நாம் அவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம். அவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை தீர்மானிக்கிறது. அதைத் தான் வள்ளுவர் பெருமை என்கிற அதிகாரத்தில்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

இந்த குறளில் ‘செய்தொழில்’ என்கிற வார்த்தை ஒருவரின் தொழிலை மட்டும் குறிக்கவில்லை. தொழில் என்றால் செயல் – action. சிறப்பு என்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் அளவீடு கிடையாது, அது ஒப்பீடு கொண்டு அளக்கப்படுவது. பெருமை பெருமிதங்கள் எல்லாமும் கூட மற்றவர்கள் முன் நாம் எப்படி தெரிய வேண்டும் என்னும் எண்ணங்களின் விளைவுகளே.பெருமை கருதி ஒருவர் செய்யும் செயல்களை மற்றொருவரின் செயல்களோடு ஒப்பிட்டு அளக்கப்படுவதே தான் ஒருவரின் சிறப்பு.

என்னுடைய அளவீட்டில்,சினிமாவிற்கு வெளியில் நடிகர் விஜய் என்பவர் அத்தனை சிறப்பவனாவார் இல்லை தான். அவரின் சில செயல்களை நிச்சயமாக நான் ரசித்ததோ ஆதரித்ததோ கிடையாது. இப்போதும் அவர் செய்த சில செயல்கள் மீது எனக்கு விமர்சனம் இருக்கவே தான் செய்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

 

ரஜினி, தொடக்கத்தில் இருந்து புரட்சி வந்தால் அரசியலுக்கு கூப்பிடுங்கள் என்று தான் கூறி வந்தார். ஆனால், அதிகாரப் பசி, ஆசை, என்று எப்படி எடுத்துக்கொண்டாலும், அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ஆசை இருப்பதை இத்தனை செல்வாக்கை அடையும் காலத்திற்கு முன்பிருந்தே வெளிப்படுத்தியிருக்கின்றார் விஜய்.

மாற்றம் வரவேண்டும் என்கிற ஆசையை விட அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ஆசை தான் விஜய்யிடம் இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் வெளிப்பாடாக, அ.தி.மு.க.வை ஆதரித்தார், அ.தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு அணில் போல நாங்களும் உதவியிருக்கின்றோம் என்று பேசியதன் விளைவாக அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தான், அவரின் அரசியல் அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போதும் கூட அத்தனை நெருக்கடிகளை தந்த ஜெயலலிதா அவர்களின் மீதோ அ.தி.மு.க மீதோ அவர் பெரிய விமர்சனங்களை எடுத்து வைக்கவில்லை. மாநாட்டில் அவரே பேசியது போல,காலம் வர காத்திருந்தார்.

உங்களையும் என்னையும் போல, விஜயையும் கூட தன்னம்பிக்கை குறைபாடு உடையவராகவே தான் இருந்தார்.இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். ஆகச்சிறந்த தலைமைப்பண்பு உடையவர்களிடமும் கூட தன்னபிக்கை குறைபாடு இருக்கவே தான் செய்யும், கங்குலியையும் ரிக்கி பாண்டிங்கையும் ஒப்பிடும் பொழுது, கங்குலி பாண்டிங் அளவிற்கு தன்னபிக்கை கொண்டவர் இல்லை.

இந்த தன்னம்பிக்கை குறைபாடு நம்மை சில தவறுகளை செய்ய வைக்கும், நம் பண்புகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தும்.

“எனக்கு பெரிய டைரக்டர் வேணும்ன்னு கேட்டார் கொடுத்தேன்; எனக்கு பெரிய ஒளிப்பதிவாளர் வேணும்ன்னு கேட்டார் கொடுத்தேன்” இப்படியெல்லாம் விஜய்யின் தந்தை துப்பாக்கி பட சம்மந்தமான விழா ஒன்றில் பேசும் பொழுது, “இதையெல்லாம் இவர் ஏன் சொல்கிறார்” என்பது போல பாவனை செய்வார் விஜய். இது தான் தன்னம்பிக்கையில் உள்ள குறைபாடு. இந்த குறைபாடானது, “ஆமா! அப்பாட்ட இதெல்லாம் கேட்டேன், அவர் இல்லாமல் சினிமாவிற்கு வந்திருக்க மாட்டேன்” என்று தைரியமாக தயக்கம் இல்லமால் உங்களை பேச விடாது. சிறு தயக்கங்களோடு உங்களை ஒரு நன்றி சொல்லவைக்கும் அவ்வளவே !

ரஜினியை விஜய் ‘தலைவர்’ என்று ஆரம்ப காலத்தில் சொன்னதற்கும் கடைசியாக ஒரு பொது மேடையில் ரஜினியை விஜய் ‘தலைவர்’ என்று சொன்னதற்கும் அதற்கு பின்னர், தமிழ் தேசிய கருத்து தமிழ் நாட்டில் வளர்ந்த பின்னர், பொது மேடையில் ரஜினியை விஜயால், தலைவர் என்று சொல்ல முடியாமல் போனதற்கும் காரணம், அவரின் தன்னம்பிக்கை குறைபாடு தான். இது தான், சரத்குமார் விஜயை சூப்பர்ஸ்டார் என்று அழைத்த அதே மேடையில், ரஜினியை பார்த்து தான் சினிமாவிற்கு வந்தேன் அவர் பெயரை சொல்லியே தான் வளர்ந்தேன் என்று விஜயை சொல்ல விடாமல் தடுத்தது. விஜய் பேசுவதற்காக நடத்தப்பட்ட லியோ பட வெற்றி விழாவில், ரஜினியை மறைமுகமாக கிண்டல் செய்ய வைத்தது.

எத்தனை பெரிய உயரங்களை தொட்டாலும், நாம் யாரால் வளர்ந்தோமோ யாரை வைத்தெல்லாம் வளர்ந்தோமோ அவர்களுக்கு நாம் எப்போதும் கீழ் என்கிற பணிவு என்கிற பண்பை நம்மிடம் இருந்து பறிப்பது தன்னம்பிக்கை குறைபாடு தான். எத்தனை வளர்ந்தாலும், அப்பா அப்பா தான், அண்ணன் அண்ணன் தான், இளையவன் இளையவன் தான் என்கிற உண்மைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய் நம்மை செய்வது தன்னம்பிக்கை குறைபாடு தான். இந்த குறைபாட்டின் காரணமாக விஜய் செய்த சில செயல்களையும் அரசியல் ஆசை காரணமாக சூழல் காரணமாக அ.தி.மு.க வை எதிர்க்க முடியாமல் ஆதரித்தததையும் நான், எப்போதும் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை! நியாயப்படுத்த போவதும் இல்லை! ஆனால், இதற்காக எப்போதும் எல்லா சூழல்களிலும் எல்லா காலங்களிலும் விஜய்யின் எல்லா செயல்களையும் காரணமின்றி எதிர்க்க வேண்டியது என்பது இல்லை .

மாநாடு பற்றிய அறிவிப்பு வந்த நாளில் இருந்து, இந்த அரசியல் யார் வந்தாலும் மாறப்போவதில்லை என்றும். இன்னமும் கூட்டம் கூட்டுவதும் மாநாடுகள் நடத்துவதும் வாக்கு வங்கிக்காக சில நல்ல மாற்றங்களை எதிர்ப்பதையுமே தான் இந்த அரசியல் களம் demand செய்கிறது என்றுமே தான் தோன்றியது. இந்த எண்ணங்கள் மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தாமல் இல்லை.


மாநாடு ஏற்பாடுகளில் நடந்த கூத்துக்களையும் நான் ரசிக்கவில்லை. ஒரு பக்கம் ஈ.வே.ரா. பக்கத்தில் காமராசர், அம்பேத்கார். படிக்காத மேதை காமராசரை இன்னமும் காமராசர் என்று தான் நாம் அழைக்கிறோம், படித்த மேதை அம்பேத்காரையும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒருவரை பெரியார் என்று நம் மனதில் பதிய வைத்தது திராவிட அரசியலின் தந்திரம். பெரியாரை எதிர்த்து வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் இன்று பெரியார் பெரியார் என்று கூவிக்கொண்டு இருக்கின்றார். அம்பேத்கரை சிறுபாண்மை வாக்கு சேகரிக்கும் சின்னமாக மாற்றிவிட்ட இந்த அரசியல், பெரியாரும் கலைஞரும் தான் தமிழகம் என்கிற பிம்பத்தை வளர்த்தெடுத்து வைத்து இருக்கிறது. அது வெறும் பிம்பம் தான் என்றால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே காமராசருக்கு அருகில் ஈ.வே.ரா நிறுத்தப்பட்டிருந்தார் என்பது எம் புரிதல்.தமிழ் தேசியம் பேசுவபவர்களுக்காக தமிழ் மன்னர்களின் cut அவுட். வரும் காலங்களில் யாரும் கட்சி தொடங்கினால், கருணாநிதியின் படத்தையும் ஜெயலலிதாவின் படத்தையும் அருகருகே வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடவுளை நம்புகிறோம், அதே வேளையில் பெரியார் பேசியபெண்ணுரிமைக்காக அவரை ஏற்கிறோம் என்பதெல்லாம் நிச்சயம் வாக்கு வங்கியை நோக்கிய அரசியல் நகர்வு தான். பாரதியும் தான் women empowerment பற்றி பேசினார். பாரதியின் பெயர் சொன்னால் ஒரு வாக்கு கூட கிடைக்காது. அது தான் தமிழக அரசியல் களம் ஏற்படுத்தி வைத்து இருக்கின்ற நிலை.இதை ஒருவன் புரிந்து வைத்து இருக்கின்றான் என்றால் அவன் நிச்சயம் தமிழக அரசியல் களத்தில் களமாட தகுதியுடையவனே தான்

வெற்றிக்கு எது தேவையோ; அதை நோக்கி முதல் அடியை சரியாகவும் தந்திரமாகவும் தான் எடுத்து வைத்து இருக்கின்றார் விஜய். விஜய் வந்தால் சீமான் வாக்குகளை பிரிப்பார் என்றார்கள், இந்த மாநாட்டின் மூலம், நான் எல்லா தரப்பு வாக்காளர்களை என் பக்கம் கொண்டு வருவேன் என்று அரசியல்வாதிகளுக்கு தன் வருகையை சத்தமாக பறைசாற்றியிருக்கிறார் விஜய். பெரியார் வேணுமா பெரியார் இருக்கு; அம்பேத்கர் வேணுமா அம்பேத்கர் இருக்கு; காமராசர் வேணுமா காமராசர் இருக்கு; தமிழ் தேசியம் வேணுமா தமிழ் தேசியம் இருக்கு; தேர்தல் வெற்றிக்கு இந்த commercial கலவையை நிகழ்கால அரசியல் களம் demand செய்கிறது என்கிற பொழுது அந்த கலவையை சாதுரியமாக ஒருவர் முன்வைப்பதை எப்படி குறை சொல்ல முடியும்?!

விஜய் நடிக்கிறார்; விஜய்யிடம் ஒரு பொய்மை இருக்கின்றது. இருக்கட்டுமே! இருக்கிறது என்று நானுமே ஒப்புக்கொள்கிறேன். விஜய் நடிக்கிறார் என்றால், உதய் மட்டும் ஊதுகிறாரா? இங்கு அரசியல்வாதிகள் எல்லோரும் நடித்துக்கொண்டு தானே இருக்கின்றார்கள்.இந்த அரசியல் களத்திற்கு; நடிப்பும் பொய்யும் தேவை என்கிற பொழுது இந்த சமூகம் விரும்பும் அரசியல்வாதிகளிடம் நடிப்பு பொய்மையும் இருப்பது அவசியம் என்கிற சூழல் இருக்கின்ற பொழுது. விஜயை மட்டும் அதற்காக விமர்சிப்பது எப்படி நியாயமாகும்?!

ஒருவன் தன் இயல்பில் இல்லாத ஒன்றை செய்யும் பொழுது அது நடிப்பு போல, செயற்கைத்தனமாகவே தான் தோன்றும், ஒருவன் தன்னை வேறு ஒருவனாக வேறு ஒரு படிநிலைக்கு எடுத்துச்செல்ல இதெல்லாம் தேவை என்று நினைத்து அதை அவன் செய்யும் பொழுது அங்கும் ஒரு செயற்கைத்தனம் இருக்கவே செய்யும்.விஜய்யின் இந்த மாற்றங்கள் தலைவா பட பிரச்சனைக்கு பின்னர் தொடங்கியது.எங்கு யாரிடம் அடி வாங்கினோமோ அவர்களின் நிலைக்கு உயர வேண்டும் என்கிற ஊக்கம் அவரிடம் இருந்தது. சுயலாமாகவே இருந்துவிட்டு போகட்டும். என்ன கெட்டு விடப்போகிறது. கெடுப்பதற்கு அரசியல்வாதிகள் எதை மிச்சம் வைத்து இருக்கின்றார்கள்.சரியான திட்டங்களுடனும் வியூகங்களுடனும் இந்த இரு பெரும் இயக்கங்களை அசைத்து பார்க்கும் அளவிற்க்கு கொஞ்சம் பலத்துடனும் புதிதாக எவனோ ஒருவன் வந்தால் என்ன?அப்படி வரும் எவன் ஒருவனையும் ஆதரிக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. அதை நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் கண்கள், கலைஞர் டிவி யாலும் சன் டிவி யாலும் கட்டப்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நான் இப்படித்தான்; இது தான் என் இயல்பு; இது தான் அரசியல் கள நிலவரம்; மக்களிடம் அரசியல்வாதிகள் ஏற்படுத்தி வைத்து இருக்கின்ற பொய்யான நம்பிக்கைகளுக்கு எதிராக நான் பேசினால்,அது வாக்கு வங்கியை பாதிக்கும் என்கிற கவலை எனக்கு இல்லை; எது உண்மையோ அதைத்தான் எப்போதும் பேசுவேன்; யாரையும் புண்படுத்தும் விமர்சனங்களை எடுத்து வைக்காமல்; எதை செய்ய வேண்டுமோ அதைப்பற்றி மட்டுமே பேசுவேன்;எனக்கு பதவி வேண்டாம் என்கிற ஒருவனை ஏற்றுக்கொள்ளவதற்கு இன்னமும் மக்களும் இந்திய அரசியல் களமும் தயாராகவில்லை.

அப்படியான நல்லவர்கள் அரசியலுக்கு வருவது என்பது கனவாகவே நின்று விட்டது. கனவில் இருக்கும் சந்தோசம் நிஜத்தில் இருக்காது என்று ரஜினி அப்போது சொன்னது, இப்போது தான் ரஜினி ரசிகர்களுக்கு புரிந்து இருக்கும்.

இலங்கை ஜெயராஜ் அவர்கள், காந்தி போன்ற சாத்வீக குணம் கொண்டவர்கள்அரசியலில் தோல்வியுற்று இருப்பார்கள் என்றார். அவர்,அரசியலுக்கு ரஜோ குணம் தேவை என்கிறார். உண்மை தான்! காமராஜரை தி.மு.க. தோற்கடிக்கவில்லை அவரின் சாத்வீக குணம் தான் தோற்கடித்தது. அவரிடம் பதவி ஆசை இல்லை. ஒரு அரசனுக்கு அதிகாரத்தின் மீது நிச்சயம் ஆசை இருக்க வேண்டும், அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான சாதுரியம் இருக்க வேண்டும். வெற்றிக்காக சில சமரசங்கள் செய்து கொள்ள தயாராக இருக்க வேண்டும்; தன்னைப் பற்றி மக்களிடம் பொய்யாகவேணும் ஒரு பெரும் பிம்பத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தால் அதை செய்வதற்கு தயங்க கூடாது. இதையெல்லாம் இதுவரையிலும் செய்து, இனியும் செய்ய தான் தயாராக இருப்பதை காட்டியிருக்கிறார் விஜய்.

மாற்றங்களை ஏற்று பழகாத சமூகம் பெரிய வளர்ச்சிகளை வேகமாக எட்டாது. தி.மு.க.வை எதிர்ப்பதால் விஜயை ஆதரிக்கிறீர்களா? என்று என்னை சிலர் கேட்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்பது, தி.மு.க. பாவப்பட்ட கட்சியா? பாவங்களை செய்து வந்த கட்சி. சாமானியர்கள் அரசியலுக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்திய கட்சி. வாரிசு அரசியலை எதிர்த்து அண்ணா உருவாக்கிய இயக்கத்தில் வாரிசு அரசியலை பிரதானப்படுத்திய கட்சி. பண பலம், சாதிய பின்புலம் இல்லாமல் அவர்களுக்கு எதிராக வெற்றி பெற்ற பெண்மணியை கொலை செய்த்தவர்களை தலைவர்களின் பிறந்தநாளுக்காக விடுதலை செய்த கட்சி. அவர்களுக்கு எது நல்லதோ அதுவே தான் மக்களுக்கு நல்லது என்று நம்ப வைக்கும் கட்சி.

கலைஞர் கைது செய்யப்படுகிறார். ஒரு பெரும் இயக்கத்தின் தலைவர், மிக சாதாரணமாக கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தந்து , தன் மீதான குற்றச்சாட்டை சட்ட ரீதியில் சந்தித்து இருக்க வேண்டும்.

ஆனால், என்ன நடந்தது, ஒரு சாதாரண கைதை வைத்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று செய்தார்கள்.  மக்களிடம் இதை என்ன கண்ணோட்டத்தில் காண்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிற இடத்தில் இருந்தார்கள். இப்போதும் அப்படித் தான் இருக்கின்றார்கள்.மீடியாக்களில் வலைத்தளங்களில் திமுகவிற்கு எதிராக பேசுபவர்களும் கூட திமுகவிற்கு ஆதரவானவர்களாகவே தான் இருப்பார்கள் என்கிற அளவில் ஊடகத்துறையில் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது.குற்றம் சுமத்தப்பட்ட பின்னரும், ஆட்சி பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, சட்ட ரீதியாக மட்டுமே தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை உடைக்கப்பார்த்தார். நாம் ஜெயலலிதாவை நிரபராதி என்று சுட்டவில்லை.அணுகுமுறையில் இருந்த வித்தியாசத்தை மட்டுமே தான் சுட்டுகிறோம்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெரிய நாடகங்களை அரங்கேற்றினார்கள். மக்களை தூண்டிவிட்டார்கள்; இப்போது எல்லாம் மாறிவிட்டதா? அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததை தவிர?

கூகுளின் வருகைக்கு முன்னும் சரி, இப்போதும் சரி அவர்கள்(தி.மு.க.)தீர்மானிப்பதை தான் மக்கள் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் நம்ப வேண்டும் என்கிற ரீதியில் களமாடுபவர்களை ஒருவன் எதிர்கிறான் என்றால், அவன் மக்களின் ஆயுதம். அவனிடம் பொய்மை இருக்கட்டும், அதிகாரப்பசி இருக்கட்டும் பதவி ஆசை இருக்கட்டும்; அவனால் காசு கொடுக்காமல் கூட்டம் சேர்க்க முடிகிறது. அவனால் ஒரு கட்சியை கட்டமைக்க முடிகிறது; எல்லாவகையிலும் தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்க முடிந்தவர்களை பற்றி சத்தமாக தைரியமாக விமர்சனங்களை முன்வைக்க முடிகிறது.அவனை ஆதரிக்காமல் என்ன செய்ய?

இத்தனை காலமாக அரசியலில் ஆளுங்ககாட்சியாகவும் எதிர்கட்சியாகவும் மத்திய அரசில் அதிகார பகிர்வு கொண்டிருந்தும்; தங்களை மட்டும் வளர்த்துக்கொண்ட கட்சியை வீழ்த்த வேண்டும்; எள்ளவேணும் மாற்றம் வர வேண்டும் என்கிற வேட்கை இருக்கின்ற என் போன்றோர்.வேற்றுமை பேசும் திராவிட கட்சிகளுக்கு எதிரான எல்லா ஆயுதங்களையும் கூர் தீட்டவே தான் செய்வோம்.கண்ணை மூடிக்கொண்டு பாஜகவை எதிர்பதற்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று நம்பும் கூட்டங்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருப்போம்.

உங்களாலோ என்னாலோ ஒரு கட்சி தொடங்க முடியாது;கூட்டம் சேர்க்க முடியாது; தெருவில் நின்று தி.மு.க. அ.தி.மு.க. போன்ற கட்சிகளை எதிர்த்தாலும் சமூக வலைத்தளங்களில் எதிர்த்தாலும் அது அந்த கட்சிகளை எந்த விதத்திலும் பாதிக்காது; இப்படியான சூழலில் இதையெல்லாம் செய்ய முடிகிற ஒருவனை அவன் நடித்தாலும்; அவனிடம் பொய்மை இருந்தாலும் நாம் ஆதரிக்கவே தான் வேண்டும். அதற்காக அவனுடைய எல்லா கருத்துகளையும் செய்லபாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

தேர்தல் சூழல்களை பொறுத்து விஜயை ஆதரிக்க வேண்டிய தேவை நிச்சயமாக இருக்கிறது. அதற்காக நிச்சயம் நாம் விஜயை ஆதரிப்போம்; அதே வேளையில் அவரின் கருத்துக்களில் செயல்களில் நமக்கு மாறுபட்ட கருத்து இருப்பின் அதையும் முன் வைக்க நாம் தயங்க வேண்டியதில்லை.

விஜய் இன்னும் பல படிகளை கடக்க வேண்டியிருக்கிறது. பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.விஜய் போன்றவர்களால் அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்று கேட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயம் ஏற்படும் என்று சொல்ல முடிகிறதில்லை. ஆனால், முதல் முறையாக ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் நல்லாத் தானே இருக்கும்.

Error happened.
Exit mobile version