இந்தியாவில் பல காலமாகப் பேசப்பட்டு வரும் பிரச்சினை இந்த வரதட்சணை. இது சட்டமியற்றும் மன்றங்களால், மக்கள் பிரதிநிதிகளால் சரியாகக் கையாளப்பட்டு இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏன்? எந்த ஒரு நாட்டிலும் குடிமையியல் தொடர்பான சட்டத்தை இயற்றும் முன்னர், அந்த நாடு அது தொடர்பான வேர்களைச் சரியாகப் புரிந்துகொண்டு இயற்ற வேண்டும். வரதட்சணை விஷயத்தில் இது நடந்திருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.
துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டை அநேகமான காலத்திற்கு ஆண்டு வந்த அரசியல்வாதிகள், நம் கலாச்சாரத்தை விடவும் மேற்கத்திய கலாச்சாரத்தை உயர்வாக அணுகி வந்தார்கள். கிழக்கின் தொடக்கத்தில் சூரியன் உதிக்கும் மாதத்தைத் தமிழ் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த பொழுது, உத்தராயண தொடக்கத்தைப் புத்தாண்டு என்று அனுசரித்து அதை மக்கள் மீது ஒரு அரசாங்கம் திணிக்கப் பார்த்தது. மக்கள் அதைப் பெரிதாகச் சட்டை செய்யவில்லை. அவர்கள் எப்போதும் போல், கிழக்கின் தொடக்கத்தில் சூரியன் உதிக்கும் முதல் நாளான சித்திரை ஒன்றாம் தேதியையே புத்தாண்டாக அனுசரித்து வந்தார்கள். இந்த மண்ணின் கலாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இயற்றப்படும் சட்டங்களும், திணிக்கப்படும் கருத்துக்களும் இப்படித்தான் தோல்வி அடைகின்றன.
அப்படியான ஒரு தோல்வியாகத்தான் ‘வரதட்சணைத் தடைச் சட்டம், 1961’-ஐ நான் பார்க்கிறேன். சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். ஆனாலும், இந்த நாட்டில் வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இன்னும் புழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஏன்? காரணம், நாம் முன்னமே நம்முடைய ‘ராவண அரசியல்’ தொடரின் சில பகுதிகளில் குறிப்பிட்டது போல, வரதட்சணை என்பது ஒரு பாகப்பிரிவினை போன்றது. இதை நாம் நம்முடைய ‘கதிர்விஜயம்’ வலைத்தளத்தில் வெளியிட்ட பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளோம்.
நம் கலாச்சாரத்தின்படி, அசையும் சொத்துக்கள் பெண்ணுக்கும், அசையா சொத்துக்கள் ஆணுக்கும் என்று வகுக்கப்பட்டு, வருமானம் தரும் அசையா சொத்தை (நிலங்களை) வைத்திருக்கும் ஆண்பிள்ளை, பெண்பிள்ளைகளுக்குத் தரும் ஈடாகத் தருவது ‘பண்டிகை சீர்’ போன்ற முறைமைகள் செய்யப்பட்டு இருந்தது. நம்மை ஆண்ட அரசியல்வாதிகள் மேற்கத்திய மோகம் கொள்ளாமல் இருந்திருந்தால் இதைச் சரியாகப் புரிந்துகொண்டிருப்பார்கள்.
இங்கு நம் கலாச்சாரத்தில் இருந்த பல சரியான வழிகாட்டுதல்கள் காலப்போக்கில் தவறான வழக்கங்கள் ஆகின. வரதட்சணையைப் பொறுத்தமட்டில், அது பாகப்பிரிவினைதான். ஒரு பெற்றோர் தங்களின் அசையும் சொத்துக்களான நகை மற்றும் பாத்திரங்களைப் பெண்பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற முறை, காலப்போக்கில் ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஐந்து சவரன் நகையை மட்டுமே சொத்தாக வைத்திருக்கும் குடும்பங்களிடமிருந்து அதிகமான நகை எதிர்பார்க்கப்பட்டது. இதுதான் பிழை. ஒரு குடும்பத்தில் என்ன இருக்கிறதோ அதைத் தாண்டி இத்தனை சவரன் நகை வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தது, பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய நினைத்து நகை அதிகம் போடக்கூடிய குடும்பங்களில் பெண் தேடும் சமூக மனப்பாங்கு – இதெல்லாம் தான் தவறானது.
குடிமையியல் தொடர்பான சட்டங்கள் இந்தப் பிரச்சினையை இப்படி எல்லா கோணங்களிலும் அணுக வேண்டும். அப்படி அணுகாமல் இயற்றப்பட்ட இந்த வரதட்சணைத் தடுப்புச் சட்டம், ஒரு வகையில் ‘தூங்கும் சட்டமாக’ (Sleeping law) தான் இருக்கிறது. பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு விருப்பப்பட்டுச் செய்கிறார்கள். பெண்பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களிடம் விருப்பப்பட்டுக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். விருப்பப்பட்டு கொடுப்பதைச் சட்டம் தடுக்கவில்லை என்றாலும், எவ்வளவு கொடுக்கப்பட்டது, ஒருவரின் பொருளாதார நிலைக்கு மீறி அங்கே வரதட்சணை கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த விருப்பத்தோடு கொடுக்கப்படும் வரதட்சணைகள் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. சமூகத்தின் இந்த வழக்கம் தடுக்க முடியாதது என்கிற பொழுது, வரதட்சணைத் தடைச் சட்டத்தை நாம் திருத்த வேண்டும் தானே?!
இது வரதட்சணை கொடுப்பதையும் வாங்குவதையும் தடை செய்வதை விட, அதை முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறை என்று நமக்குக் காட்டுகிறது. வரதட்சணைத் தடைச் சட்டத்தைத் திருத்தி அல்லது நீக்கிவிட்டு, வரதட்சணையைச் சட்டத்தின் மூலம் ஏன் நாம் முறைப்படுத்த வேண்டும்?
எனக்குத் தெரிந்த ஒருவர் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்கிறார். சில நாட்களில் குடும்பச் சூழல் காரணமாக இரு வீட்டாருக்கும் இடையில் பெரும் சண்டை ஏற்படுகிறது. பெண் வீட்டார் காவல் நிலையத்தை அணுகுகிறார்கள். மாப்பிள்ளை வீட்டின் மீது புகார் கொடுக்கும் பொழுது, வரதட்சணை கொடுமையையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இரண்டு வீட்டிற்கும் இடையில் நடந்த குடும்பச் சண்டையில் இரு தரப்பின் மீதும் தவறு இருக்கலாம். காவல் நிலையத்திற்குப் புகார் வரும் பொழுது சட்டம் அதைச் சரியான முறையில் விசாரிக்கலாம். ஆனால், இப்படி ஒரு சண்டை வந்தாலே அங்கே ‘வரதட்சணை கொடுமை’ என்கிற புகார் தானாகச் சேர்ந்து கொள்கிறது.
எனக்குத் தெரிந்த மற்றொருவர், ஒரு 50 சவரன் நகை, மற்ற வீட்டுச் சாமான்கள், விலையுயர்ந்த இருசக்கர வாகனம் எல்லாம் வாங்கித் தந்து, தன் மகளை ஒரு பையனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார். விருப்பப்பட்டுத்தான் எல்லாம் செய்கிறார்கள். வெகு சில நாட்களில் பெண்ணுக்கும் பையனுக்கும் இடையில் ஒரு விரிசல் வருகிறது. பெண் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணத்தைப் பதிவதற்குள் இந்த விரிசல் ஏற்படுகிறது. சரி, விவாகரத்து கொடுத்துவிடுங்கள் என்றதற்கு, பையனின் வீட்டில் ஒத்துக்கொள்ளாமல் அந்தப் பெண்ணைத் தங்களது வீட்டிலும் சேர்த்துக்கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்கள். இப்படியே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இங்கே ஒரு பெற்றோரின் மனநிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் உழைப்பால் சேர்த்த செல்வத்தை, அவர்களின் மகளுக்கென்று கொடுக்கப்பட்ட செல்வத்தை, ‘திருமணம்’ என்கிற பெயரில் எடுத்துக்கொண்டு விவாகரத்தும் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதைச் சர்வ சாதாரணமாக ஒருவரால் செய்ய முடிகிறது. பிரச்சினையில் விவாகரத்து கிடைத்தாலும் கூட, பொருளாதார இழப்பைச் சரியாக ஈடுகட்டச் சட்டத்தில் தெளிவு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொடுக்கப்படும் ஒரு இருசக்கர வாகனம், மகளின் இல்வாழ்க்கைக்குப் பயன்படாமல் இரண்டு வருடங்களுக்குப் பின் விவாகரத்து கிடைத்தால், சட்டத்தின்படி அப்படியே திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் தான். ஆனால், தேய்மானம் ஆகக்கூடிய சொத்துக்களை இந்த இரண்டு வருடங்களுக்குப் பின் அப்படியே திரும்பப் பெற்றுக்கொள்வதில் என்ன இருக்கிறது? இழப்பீடு என்பது பணமதிப்பில் ஏற்படுகின்ற மாற்றம் மற்றும் வட்டி போன்றவைகளைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?
இப்பொழுது நாம் மூன்றாவதாக ஒரு நபரின் சிக்கலையும் அணுக வேண்டும். வீட்டிற்கு ஒரு ஆண்பிள்ளையாக இருக்கிறார், அவருக்கு இரண்டு சகோதரிகள். அவர் அவருடைய உழைப்பில், சகோதரிகளின் திருமணத்திற்கு ஆன செலவைச் செய்கிறார். அவர்கள் திருமணத்திற்கு வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நகைகளில் அவரின் உழைப்பும் பங்கும் அதிகமாக இருக்கிறது. இப்போது அவர்களின் பூர்வீகச் சொத்தாக ஒரே ஒரு வீடு இருக்கிறது. அந்தச் சொத்தில் இரண்டு சகோதரிகளும் சமமான பங்கை கோரி வழக்குத் தொடர்ந்து இருக்கிறார்கள். இங்கே ஒரு சகோதரனின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கெல்லாம் சட்டப் பாதுகாப்பைக் கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ‘வரதட்சணைத் தடை’ என்பதை மாற்ற வேண்டும். நம் மக்களிடையே இருக்கும் அந்த வழக்கத்தை மாற்ற முடியாது. கொடுக்கப்படும் வரதட்சணைகள், சீர்கள் எல்லாம் அவற்றின் பண மதிப்போடு பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். பெண்களுக்கான சொத்து உரிமையில், வரதட்சணை கொடுத்தது போக, அவர்களின் திருமணத்திற்கு முன்னர் அவர்களின் குடும்ப உழைப்பால் சேர்க்கப்பட்ட அசையா சொத்தில் எத்தனை பங்கு சேர வேண்டுமோ அதுதான் அவர்களின் சொத்து உரிமை என்று மாற்றப்பட வேண்டும்.
ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு 50 சவரன் நகை அவர்களின் பெற்றோரிடம் இருந்து திருமண வரதட்சணையாகக் கிடைக்கிறது. அந்த குடும்பத்தில் ஒரு ஆண் இருக்கிறான். அந்த குடும்பத்திற்கு ஒரு 20 லட்சம் மதிப்பிலான அசையா சொத்து இருக்கிறது. 50 சவரன் நகை பெற்ற பெண்களுக்கு, 20 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தில் சம உரிமை என்பது எப்படி நியாயமான பங்காகும்? அதனால், வரதட்சணையைப் பதிவு செய்யும் முறையை நாம் கொண்டு வரவேண்டும். சொத்து பிரிவு தொடர்பான வழக்கில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வரதட்சணை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். வரதட்சணையைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கிவிட்டால், வாங்காத வரதட்சணைக்காகக் குற்றம் சுமத்தப்படும் அப்பாவிகள் காப்பாற்றப்படுவார்கள். வரதட்சணை வாங்கிக்கொண்டு சில நாட்களில் மனைவியைக் கைவிட்டு, சட்டப்பூர்வமான விவாகரத்தும் கொடுக்காமல் இருக்கும் ஆண்கள், அந்தப் பெண்ணுக்கும் பெண்ணின் பெற்றோருக்கும் தர வேண்டிய சரியான பொருளாதார இழப்பீட்டைச் சட்டத்தின் மூலம் கிடைக்கச் செய்ய முடியும்.
இந்த மாற்றம் வரதட்சணை தொடர்பான புகார்களைச் சரியாக அணுகுவதில், விவாகரத்து வழக்குகளில், வரதட்சணை மற்றும் பெண்ணுக்கு உரித்தான சொத்து தொடர்பான சிக்கல்களில், ஆண் வாரிசுக்கும் பெண் வாரிசுக்கும் சொத்துப் பிரிவு விவகாரத்தில் நியாயமான தீர்வை எட்டுவதில் என்று பல வகையில் ஒரு சட்டத் தெளிவைத் தரும்.
இவ்வாறு செய்வது ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாதா என்றால்? அதற்கும் நாம் தீர்வு காண முடியும். பதிவு செய்யப்படும் வரதட்சணை என்பது பெண் வீட்டாரின் பொருளாதார நிலையை விடக் கூடுதலாக இருப்பின், அதனைச் சட்டத்தின் மூலம் தடுக்க ஏற்கனவே இருக்கும் வழியை நாம் பின்பற்றலாம்.
இதைச் சட்டமியற்றுபவர்கள் சிந்திக்க வேண்டும்