இந்தியா ஒரு குடியரசாக மாறியும், இந்தியர்களாகிய நாம் நமக்கான சொந்த அரசியலமைப்பை வரையறுத்துக்கொண்டும் 75 ஆண்டுகளை முடிந்துவிட்டது. ஆனால், “குடியரசு” என்ற சொல் இந்தியாவில் அதன் அர்த்தத்தை இழந்து வருவதாக நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. இங்கே குடியரசு என்பது ஒரு சுழற்சி முறை முடியரசாகவே இருக்கிறது. அதை இங்கே சட்டமியற்றும் பாராளுமன்றம் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. மக்களும் அதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
பாரதம் அதன் அரசியலமைப்பின் படி, அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், பாரதம் ஓரளவிற்கு அதன் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக தேர்தல்களில் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகளை வழங்கத் தவறிவிட்டது என்பதுதான் நிடர்சனம்.
ஒரு உண்மையான குடியரசில், அதன் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்த நியாயமான வாய்ப்பு இருக்கும், இருக்க வேண்டும். ஆனால், இந்திய குடியரசில், இந்த வாய்ப்புகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. எந்தவொரு தகுதியுள்ள குடிமகனும் தேர்தலில் போட்டியிட முடியுமென்றாலும், சூழல்கள் ஒரு சாமானியனுக்குச் சாதகமாக இல்லை என்பதுதான் உண்மை. சூழல்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை அறிந்தும், சிலர் பெரும் பண பலம் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிடுகிறார்கள். இங்கு சட்டபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், அரசியல் கட்சிகளிடம் பண பலம் மட்டும் இல்லை; அவர்களால் ஒரு வன்முறையை உருவாக்கவும் வழிநடத்தவும், வன்முறையைக் கட்டுக்குள் வைக்கவும் முடிகிற ஒரு மோசமான படைபலமும் இருக்கிறது. இப்படியான கட்சிகள் சாமானியர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள், ஒரு குடியரசு தேர்தல் மூலம் மக்களுக்குத் தரும் வாய்ப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
தேர்தலில் போட்டியிடுவது என்பது அடிப்படை உரிமை இல்லை என்றாலும், தேர்தல் களத்தைச் சம வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் களமாக மாற்ற வேண்டியதும் முக்கியம். இங்கே சாமானியர்கள் அரசியலில் பங்குகொள்ள சரியான ஒரு சூழலும் வாய்ப்பும் நிச்சயமாக இல்லை. தேர்தல் களம் சம வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் களமாக மாறினால், அது சாமானியர் யார் ஒருவரும் கூட நிர்வாக அரசியலில் பங்கேற்கவும், அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தரும். துரதிர்ஷ்டவசமாக, கட்சிகள் பெறும் நன்கொடைகளில் பெருவாரியான பங்கு பெரிய நிறுவனங்களுடையதாக இருந்தாலும், அதுவும் ஒருவகையில் மக்களின் பணம் தான். மக்களின் உழைப்பு தான் அந்த பணமாக இருக்கிறது. எப்படி அணுகினாலும் மக்களின் பணத்தால் தான் கட்சிகள் நடத்தப்படுகிறது. ஆனால், கட்சிகள் மக்களுக்கு சமமான வாய்ப்புகளை தருவதில்லை. கட்சிகள் வேட்பாளர்களைத் தீர்மானிக்கிறார்கள்; மக்கள் கட்சிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் சாமானியர்கள் மக்கள் பிரதிநிதிகளாகும் வாய்ப்பு எங்கே இருக்கிறது?
தேர்தல் களம் சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் களமாக மாற, சாமானியர்களும் சரியான அரசியல் பாதையை ஏற்படுத்தித் தர, நாம் ஒரு ஜனநாயகமாக எவ்வாறு செயல்படுகிறோம் என்பதில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
தேவையான அந்த மாற்றங்கள்:
- ஒவ்வொரு கட்சியும் அது பெறும் நன்கொடையை எவ்வாறு செலவிடுகிறது என்பதற்கான வெளிப்படையான தணிக்கைகள் நடத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் அல்லது அரசியல் கட்சிகளுக்கான புதிய கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
- கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது குறிப்பிட்ட சதவீத வேட்பாளர்களை, அரசியல் பின்னணி அல்லாத சாமானியர்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். அப்படியான வேட்பாளர்களை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்குச் சில வழிகாட்டுதல்கள் கொண்டு வரப்பட வேண்டும். மிக முக்கியமாக அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் யாரும் அரசியலில் இருந்திருக்கக் கூடாது. வெவ்வேறு பொருளாதார நிலைகளில் இருந்தும், வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றுத் துறை சார் வேலைகளில் அனுபவம் கொண்டவர்களாக அந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைக்கலாம். ஆனால், சாமானியர்களில் இருந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் தேர்வு செய்வதில், வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்பதைச் சட்டமாக்க வேண்டும். இங்கே அமைச்சர்களின் வாரிசுகள் பாராளுமன்றம் செல்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
மேலும், தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்த திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நம்முடைய அமைச்சர் ஜெய்சங்கர் இவர்களும் கூட நேரடியான தேர்தலைச் சந்திக்காதவர்கள் தான். இந்த நிலைமை நமது ஜனநாயக அமைப்பிற்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேர்தலில் ஜெயிக்க வாய்ப்புகள் இருக்கின்ற கட்சியைச் சேர்ந்தவராக இருந்தும், தேர்தலில் செலவுகளை ஏற்கத் தயாராக இருக்கிற அளவு செல்வம் படைத்த கட்சிகளில் இருந்தும் இவர்களைப் போன்றவர்கள் தேர்தலில் பங்குகொள்ளாமல் அமைச்சர்களாக முடிகிறது என்பது, இங்கே வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் காண்பிக்கிறது. அதோடு, இவர்களைப் போன்றவர்கள் அமைச்சர்களாக வேண்டிய தேவை இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம், பெரிய கட்சிகளால் அத்தகைய திறமை வாய்ந்தவர்களைக் கண்டெடுத்து அவர்களைச் சட்டமியற்றும் மன்றங்களுக்குத் தேர்தல் மூலமாக ஏன் அனுப்ப முடிவதில்லை? காரணம், கட்சிகள் வேட்பாளர்களைத் திறமையை வைத்தும், சாதாரண மக்களில் இருந்தும் தேர்வு செய்வதில்லை. அதோடு அவர்கள் தேர்தல் களத்தைச் சாமானியர்கள் இருக்கும் நிலையில் இருந்து அதிகமான உயரத்தில் வைத்திருக்கிறார்கள்.
நமது தற்போதைய அமைப்பு, தனிநபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இல்லாமல் அமைச்சர்களாக மாற அனுமதிக்கிறது. இது ஜனநாயகப் பங்கேற்பில் ஏற்றத்தாழ்வுக்குப் பங்களிக்கிறது. நிர்வாகத்தை வழிநடத்த தேவையான திறமையான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்கிற பொழுது, அமைச்சர்கள் என்பவர்கள் மக்களில் ஒருவராக, மக்களின் சாட்சியாக, மக்களின் பிரதிநிதியாக நிர்வாகத்தின் அங்கமாக இருக்க வேண்டாமா?
தற்போதைய அமைப்பும் நிலையும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தங்களை வளர்த்துக்கொள்ள மட்டும் பயன்படுகிறதே அன்றி, நமது ஜனநாயகத்தை மேம்படுத்த அது பயன்படவில்லை. இந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய, நாம் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்:
- ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில், கட்சி அல்லாத உறுப்பினர்களுக்கென்று இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவது.
- ஒருவர் ஒரு முறை மட்டுமே கட்சித் தலைவராக இருக்க முடியும் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு வருதல்.
- ஒரு கட்சித் தலைவரின் உயிரியல் வாரிசுகள் அவர்களின் முன்னோடியின் பதவிக்காலம் முடிந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்குக் கட்சி அல்லது கட்சி சார் தொழிற்சங்கத்திற்குள் அல்லது சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்தல். இங்கு நாம் ஒரு தனிநபர் தேர்தலில் போட்டியிடும் உரிமையை பறிக்கவில்லை மாறாக தற்காலிகமாக நிறுத்திவைக்க கோருகிறோம். (suspension). ஒரு நிறுவனத்தின் தணிக்கையாளர் (Auditor) எப்படி அதே நிறுவனத்தில் உடனடியாகப் பதவிக்கு வர முடியாதோ அது போன்ற ஒரு நெறிமுறையை தான் நாம் இங்கே கோருகிறோம்.
இவ்வாறு கட்சிகள் எப்படிச் செயல்படுகிறது என்பதில் நாம் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அந்த வழிமுறைகளைக் கட்சிகளைப் பின்பற்றச் செய்யும் படி நிர்பந்திக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும். கட்சி ரீதியான ஜனநாயகத்தில் ஒரு ஒழுங்கு இருப்பதை இந்தியக் குடியரசு உறுதி செய்ய வேண்டும்.
அதோடு நாம் ஒரு கட்சி பெறும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்திற்குச் சிறப்புப் பிரதிநிதிகளை அனுப்புவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது சட்டமன்றத் தேர்தலிலோ ஒரு கட்சி 10 சதவீத வாக்குகளைப் பெறுகிறது, ஆனால் அது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அப்படியென்றால் யாரும் அந்த கட்சி சார்பாகச் சபைகளுக்குச் செல்ல முடியாது; அதாவது வாக்காளர்களில் 10 சதவீதம் பேரின் குரல் இங்கே புறக்கணிக்கப்படுகிறது. அதனால், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெற்றும் ஒரு தொகுதியையும் வெல்லாத கட்சிகளில் இருந்து சிறப்பு உறுப்பினர்களை நாம் சபைகளுக்கு அனுப்புவது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் (special Representation). அந்தக் கட்சியில் மிக அதிகமான வாக்கு சதவீதம் பெற்ற ஒருவரை நாம் சிறப்பு உறுப்பினராக சபைகளுக்கு அனுப்பலாம்.
தற்போதுள்ள தேர்தல் முறையைச் சிதைக்காமல், விடுபட்டுப்போன 10% அல்லது 15% மக்களின் பிரதிநிதித்துவத்தை இதன் மூலம் நாம் உறுதி செய்யலாம். இதை ஒத்த பரிந்துரை இந்தியாவின் 170வது சட்ட ஆணைய அறிக்கையில் (1999) இருந்தும், இன்னும் நாம் அதையொட்டி ஒரு படி கூட எடுத்து வைக்கவில்லை.
.
அதோடு இங்கே தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பெறும் வேட்பாளர்கள் சில வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியுறுகிறார்கள். அப்படியென்றால் அங்கே சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பல லட்சம் மக்களின் குரல்/வாக்கு பயனற்றுப் போகிறது. நாம் ஏன் ஒவ்வொரு தொகுதிக்கும் ஓர் எதிர்க்கட்சி உறுப்பினரை நியமித்து, அவரைத் தொகுதியின் கண்காணிப்பாளராகச் செயல்பட வைக்கக் கூடாது? ஜெயித்த உறுப்பினர் சபைகளில் மக்களின் குரலாக இருப்பார். இரண்டாமவர் தொகுதி சார் பணிகளில் மட்டும் கண்காணிப்பாளராக ஏன் இருக்கக் கூடாது? வெற்றி பெற்றவர் சட்டமியற்றும் அதிகாரம் (Voting Power) பெற்று சபைக்குச் செல்வார்; இரண்டாம் இடம் பிடித்தவர் அந்தத் தொகுதிக்கான ஒரு ‘நிழல் கண்காணிப்பாளராக’ (Shadow Monitor) இருந்து மக்களின் குறைகளையும், பணிகளின் தரத்தையும் கண்காணிப்பார். (check and balance).
இவ்வாறு செய்வதன் மூலம் அநேகமான வாக்காளர்களின் குரல்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று நாம் நம்பலாம்.
மேலே நாம் குறிப்பிட்டவைகள் எல்லாம் ஒரு விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியதுதான். நடைமுறைக்கு ஏற்ற சரியான வழிகாட்டுதல்களை உருவாக்க முழுமையான விவாதம் நிச்சயம் தேவை. ஆனால், நாம் இன்னும் அந்த விவாதத்தைத் தொடங்கவில்லை என்பதை இங்கே வலியுறுத்துகிறேன். அந்த விவாதத்தைச் சீக்கிரம் தொடங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
மேலே குறிப்பிட்டவைகள் அல்லாமல், பெரிய செல்வம் இல்லாமல் அரசியலில் ஈடுபட விரும்பும் நபர்களை ஆதரிக்க, அரசியல் கட்சிகள் கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் சட்டமாக்கலாம். இங்கே ஒரு கட்சிப் பணி செய்ய வேண்டும் என்றால், அவரால் மற்ற வேலைகளுக்குச் செல்ல முடியாது. இதுவும் சாமானியர் ஒருவர் அரசியலில் ஈடுபட முடியாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று. கட்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களில் அநேகமானவர்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியம் அல்லாதவர்களாகவேதான் இருக்கிறார்கள்.
ஒரு ஜனநாயக நாடு, ஜனநாயக முறையில் செயல்பட இந்த மாற்றங்கள் அவசியமாகிறது. இந்த மாற்றங்கள் சீக்கிரம் கொண்டு வரப்பட வேண்டும்.
