கதிர் விஜயம்

அரசியல் மாற்றத்தை நோக்கி அடுத்த அடி எடுத்து வைப்போம்!

தமிழகத்தை பொறுத்தவரையில், இரண்டு திராவிட கட்சிகள் அல்லாமல் மூன்றாவது தேர்வை நோக்கி மக்கள் நகர வேண்டும், இந்த இரண்டு கட்சிகள் அல்லாத மூன்றாவது கட்சி ஆட்சி அமைப்பது தான் அரசியல் மாற்றத்தின் முதல் படி என்று நாம் எழுதி வந்திருக்கிறோம்.

இன்று அடித்துப் பிடித்து நாம் அந்த முதல் அடியை எடுத்து வைத்துவிட்டோம். அதற்கு நாம் எல்லோருமே சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த மகிழ்ச்சியோடே ஒரு சமூகமாக நாம் கவனித்து மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.

மழை நின்றும் ஓயாத தூறல் போல், இந்த வெற்றி குறித்த சலசலப்புகள் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராக தோராயமாக முப்பது சதவீத வாக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதை பிரித்தே தான் இவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்று நாம் சுட்டிக் காட்டிய கணக்குகளை இப்போது திராவிட அறிவாளிகள் வேறு விதமாக கொண்டு வருகிறார்கள், தோராயமாக 70 சதவீத வாக்கு த.வெ.க அல்லாத கட்சிகளுக்கு சென்று இருக்கிறது என்று. ஆம், இங்கே தேர்தல் நடைமுறை அப்படி தான் இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் வெற்றி பெற்று ஆளும் தரப்புக்கு எதிராக ஐம்பது சதவீதிற்கும் மேலான வாக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு கட்சி 20 சதவீத வாக்குகளை பெற்றும் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியவில்லை என்றால் அந்த 20 சதவீதத்திற்கு மதிப்பு இல்லாத படி தான் நம் அமைப்பு இருக்கிறது. அமைப்பில் இருக்கின்ற குறையை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் விவாதிக்க வேண்டும். அதைத் தான் அறிவுள்ளவர்கள் செய்வார்கள்.

மாற்றம் எங்கே வந்தது? 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 126 பேர் குற்ற வழக்குகளை கொண்டவர்கள். அதில் 41 த.வெ.க.வை சேர்ந்தவர்கள் இந்த 41 பேரில் 19 உறுப்பினர்கள் தீவிரமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். தன்னுடைய பிரதான எதிரியாக விஜய் முன்னிறுத்திய தி.மு.க.வின் கல்லா பெட்டி கூட்டணியின் ஆதரவோடு தான் ஆட்சி அமைத்திருக்கிறார். இதெல்லாம் மறுக்க முடியாத எள்ளலுக்குரிய விஷயங்கள் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், இங்கே இந்த ஆட்சி மாற்றம் வேறு எப்படி சாத்தியப்பட்டிருக்க முடியும்!?

நிச்சயமாக கடந்த தேர்தலை கட்சிகள் அணுகிய விதத்தில் எந்த ஒரு நல்ல மாற்றமும் இல்லை. ஒரு ஓட்டை வண்டியை விற்கும் திறமையான மார்க்கெட்டிங் மேனேஜர் போல தான் கட்சிகள் செயல்பட்டது. ஆங்கிலத்தில் manipulation (கருத்தியல் திணிப்பு)என்பார்கள், அதற்கு நிகரான சரியான தமிழ் வார்த்தையை என்னால் கொடுக்க முடியவில்லை.

நீங்கள் எதை உண்மை என்று நம்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதையே உங்களை நம்ப வைப்பதற்கு பெயர்தான் manipulation. சமூகம் இப்போதிருக்கும் சூழலில் தேர்தலில் வெற்றிபெற இந்த கருத்தியல் திணிப்பு போன்ற உட்டாலக்கடி வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.இதில் தி.மு.க.வை மிஞ்ச ஒரு கட்சி வந்திருக்கிறது இதுவும் ஒரு வகை மாற்றம்தான்.

த.வெ.க. உட்பட எல்லா கட்சிகளும் தேர்தலை அணுகிய விதம்; வெற்றி பெற வேண்டி செய்த வேலைகள்; வேட்பாளர் தேர்வு என்று இதுவரையில் அரசியல் மாற்றம் நடக்கவில்லை என்றாலும் இனி வரும் காலங்களில் அரசியல் மாறும் என்பதற்கான சமிக்ஞைகளை விஜய் காட்டியிருக்கிறார்.

ஆம்! அவர் அந்த கதாநாயக பிம்பத்தை கட்டிகாத்துக்கொள்வதற்கான வேலைகளில் இப்பொழுதும் கவனமாக இருக்கிறார் தான். இப்படி பதவிகளில் இருப்பவர்களுக்கு அது தேவையும் கூட. தன்னை பிரதானப்படுத்தி மக்களை காக்க வந்த சூப்பர் ஹீரோ போல காட்டிக்கொண்டு நான் சாதாரணமானவன் என்கிற (self centric attitude) தன்னை மட்டுமே மையமாகக் கொண்ட மனப்போக்கு எல்லாம் ரஜோ குணத்தில் வருவது. ஆட்சி செய்பவர்களுக்கு தேவையான ஒன்று. இந்த குணம் இல்லாத பல தலைவர்கள் நேர்மையாக இருந்தாலும் அவர்களின் பதவியை தக்க வைக்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள் (நான் காமராஜரை குறிப்பிட்டேன்). அந்த நாயகத்தன்மையை தாண்டி விஜய் பேசியது, “அரசியல் இன்னும் மாறவில்லையே இந்த இருள் எப்போது விலகும்”என்கிற ஏக்கம் கொண்டவர்கள் முன் விளக்கை ஏற்றி ஒளியை காண்பித்தது போல இருந்தது.

10 லட்சம் கோடி கடன் இருக்கிறது, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், செய்ய முடிந்ததை எல்லாம் செய்கிறேன், எதை செய்ய முடிகிறதோ இல்லையோ, உங்கள் பணத்தை எடுக்க மாட்டேன் விடமாட்டேன் என்று பேசியிருந்தார். அதோடு குழந்தைகளுக்கும் அவர் நன்றி தெரிவித்து பேசியிருந்தார். இது தேர்தலுக்கு முந்தைய அவரின் நாடகங்களின்(script) நீட்சியாக கூட இருக்கலாம். ஆனால், இந்த பேச்சு அவரை இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஆளுங்கட்சியாக அல்லது பலமான எதிர்கட்சியாகவோ நிச்சயமாக இருக்க செய்யும். இடையில் ஆட்சியை கலைக்க முயற்சிகள் நடந்தால் அது அவருக்கு சாதகமாகவே தான் முடியும். அதனால் திராவிட கட்சிகள் அதை செய்ய தயங்கும்.

அவரின் இந்த பேச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்தது. “குழந்தைகளை அரசியலுக்குள் இழுக்கிறார். பட்ஜெட் வந்த பின்பு தானே வாக்குறுதி கொடுத்தீர்கள்?” இந்த விமர்சனங்கள் எல்லாம் தி.மு.க. பக்கம் இருந்து வருவது தான் முரண்.

அதிமுக ஆட்சியை குறை சொல்லி பெட்ரோல் விலை குறைப்போம் என்றெல்லாம் சொல்லி வந்தவுடன் பி.டி.ஆர். தியாகராஜனை வைத்து வெள்ளை அறிக்கை, பிரஸ் மீட் என்று காசு இல்லை நிதி நிலை மோசம் என்றெல்லாம் அவர்கள் பேசியது அவர்களுக்கு மறந்து போயிருக்கலாம்.பெட்ரோல் விலை சொன்னபடியே குறைக்கப்படவும் இல்லை.

என்னை பொறுத்தவரையில், எழுதிக்கொடுத்து பேசியதோ மனதில் இருந்து பேசியதோ, புதிதாக ஒரு வேலைக்குச் சென்று அங்கிருக்கும் வேலைகளை நாம் எப்படி செய்யப் போகிறோம் என்கிற உறுத்தல் இருக்கும் இடத்தில் இருந்து வரும் வார்த்தைகளை போலவே தான் விஜய்யின் பேச்சு இருந்தது. இன்று நிறைய தி.மு.க. ஆதரவாளர்கள் கடன்கள் பற்றி பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதே தானே அதிமுக ஆட்சியிலும், எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் சொத்து வாங்க கடன் வாங்கினால் நல்ல கடன், செலவு செய்ய கடன் வாங்கினால் கெட்ட கடன். தமிழக அரசு செலவு செய்யவும்கூட கடன் வாங்கியிருந்தது தான்.

மக்கள் நிர்வாக அரசியல் சார்ந்த புரிதலுக்கு வருவார்கள் அல்லது அவர்களை அந்த நிலைக்கு காலம் இட்டுச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.திமுகவினர் இப்பொழுது எழுதத் தொடங்கியிருக்கும் விளக்கங்கள் அதற்கு கூடுதல் உதவியாக இருக்கலாம்.

எதிர்கால வாக்குகளை குறிவைத்தே கூட அவர் குழந்தைகளுக்கு நன்றி சொல்லியிருக்கலாம். இருக்கட்டும்! இதற்காக ஒன்றும் அவரை சிறையில் வைக்க முடியாது. அவர் பேச்சில், வேலையை சரியாக செய்துவிட வேண்டும் என்கிற எண்ணம் வெளிப்பட்டதாக நாம் பார்த்தோம் என்று சொல்லியிருந்தோம். அது இல்லாமல், 8 கோடி பேர் முன் உங்கள் பணத்தை நான் எடுக்க மாட்டேன் எடுக்கவும் விட மாட்டேன் என்று ஒருவன் சொல்லும் பொழுது மக்கள் அவனைப் பார்த்து சிரிக்காமல் பூரிக்கிறார்கள் என்றால் நாம் மாற்றத்தை நோக்கிய திசையில் தான் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். இதே வார்த்தைகளை வேறு கட்சிகள் சொல்லியிருக்க முடியுமா? சொன்னால் மக்கள் சிரிக்காமல் கேட்டுக்கொண்டிருப்பார்களா?

இந்த இடத்தில் தான் ரஜினியிடம் இருந்து விஜய் இருந்து வேறுபடுகிறார். கட்சி ஆரம்பித்த பொழுதே ரஜினி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் வர வேண்டாம் என்றார். அவரே சொன்னது போல கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தில் எப்படி நல்லவன் ஒருவன் அரசியலுக்கு வருவான். இல்லை நல்லவனை எப்படி அரசியலுக்குள் வரவிடுவார்கள். மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் தான் பொங்கல் வைத்திருக்கிறார் விஜய். வெளிப்பார்வைக்கு, பொங்கலை யாரும் சாப்பிடாதீர்கள் கொஞ்சம் நேரம் பொறுங்கள் மீண்டும் பொங்கல் வைப்போம் என்பது போன்று இருக்கிறது விஜய்யின் நகர்வுகள்.

அவரின் வேட்பாளர்கள் எல்லோரும் காந்தியோ புத்தனோ இல்லை தான். ஆனால், அவர்களுக்கும் சேர்த்தே ஒரு எச்சரிக்கை பொதுப்படையாக வைத்திருக்கிறார்.

இதையெல்லாம் குறித்து தான் மாற்றத்திற்கான அறிகுறிகளை விஜய் காட்டுகிறார் என்று நாம் எழுதினோம். ஆனால், மாற்றத்திற்கு இது ஒன்று மட்டுமே போதாது. ஒரு பக்கம் நாயகப்பிம்பம் ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்து விஜய்க்கு வாக்களித்தவர்களை “ரசிக வெறி மனப்பாங்கு” என்று சாடுகிறவர்கள். மறுபக்கம் ஏதோ ஒரு கட்சியினை எதற்கெடுத்தாலும் போற்றிக்கொண்டு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள் இது ரசிக வெறி இல்லையா ஒரு பக்கம் விஜய் மீது ரசிக வெறி என்றால் மறுபக்கம் ஸ்டாலின் மீது ரசிக வெறி.

நாம் போற்றித்துதிப் பாட ஒரு மன்னனை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படியான மன்னனாக இருக்க முடியாத தலைவர்கள் தோல்வியடைகிறார்கள். எடப்பாடியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பிரதானமான காரணம், அவர் மீதான ரசிகவெறி இங்கு குறைவாக இருப்பது தான். உண்மையில் சினிமா பின்புலமும் இல்லாமல் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர். நாம் அடுத்தகட்டமாக எந்த தலைவரை பின்பற்றினாலும் அவர்களிடம் இருக்கும் நிறை குறைகளை ஆராய்ந்து கேள்விக்குட்படுத்துகிற கூட்டமாக மாற வேண்டும்.

தற்சமயத்தில், விஜய்யின் பேச்சு, பதவியேற்றபின் ஸ்டாலினை சந்தித்தது என்று மாற்றத்திற்கான அறிகுறிகளை அவர் காட்டினாலும். அவருக்காக பின்னிருந்து நாடகங்களை(script) எழுதிக் கொண்டிருந்தவர்களும் அவரின் ஆதரவாளர்களும் மற்றுமொரு உடன்பிறப்பு(திமுக) கூட்டமாக இருப்பது தான் குறை.

இந்த விஜய்யின் ஆதரவாளர்கள் உண்மைகளை உள்ள படி ஏற்க பழக வேண்டும். எதிரி வாள் கொண்டு வரும்பொழுது நாம் விறகை ஏந்திக்கொண்டிருக்க முடியாது என்கிற வகையில் தேர்தலுக்கு முன்பு விஜய் செய்ததும் அவரின் ஆதரவாளர்கள் செய்ததையும் ஏற்று மறந்து விடலாம். இனியும் அவர்கள் இதே போக்கை கையாள்வது சமூகத்திற்கு நல்லதல்ல.

விஜய் மீதான தவறுகளுக்கும் மற்றவர்களை குறை சொல்வது. அவருக்கும் அவர் வீட்டம்மாவிற்கும் சண்டையென்றாலும் அதில் தி.மு.க.வையும் ரஜினியையம் சம்மந்தப்படுத்தி திட்டி சுகானுபவம் கொள்வது போன்ற போக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டும். விஜய்யே குறிப்பிட்டது போல அவர் ஒன்றும் தேவ தூதன் இல்லை. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரும் இல்லை. அவர் செய்யும் தவறுகளை நீங்களும் சுட்டிக்காட்ட வேண்டும். அது தான் ஜனநாயகத்திற்கும் ஜனநாயகனுக்கும் நல்லது.

நாம் சுட்டிக்காட்டியதை போல் இப்படி முட்டு கொடுத்து மற்றவர்களை குறை சொல்லும் ரசிக வெறி போக்கு திராவிட கட்சியின் ஆதரவாளர்களிடமும் தன்னை மாற்று என்று காட்டிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினரிடமும் கூட இருக்கிறது தான். அவர்கள் இனிமேல் மாறுவார்களா என்று தெரியவில்லை. நீங்களேனும் மாறுங்கள் மாற்றுங்கள் என்று விஜய் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

நாம் எந்த கட்சியை பின்பற்றுகிறவராக இருந்தாலும், தலைமையை ஏற்று பழக வேண்டும். மன்னர்களை தேடிக்கொண்டிருக்க கூடாது. அப்படி தேடிக்கொண்டிருந்ததின் விளைவு தான் திராவிட கட்சிகளின் தற்போதைய வீழ்ச்சி. ஒரு பக்கம் நான் தான் மன்னன் நீ தான் மன்னன் என்கிற போட்டி மறுபக்கம் நாங்கள் மட்டும் தான் மன்னன் என்கிற மனப்பாங்கு. இது நீங்கள் பின்பற்றுகிற எந்த கட்சியில் இருந்தாலும் குறையாக சுட்டிக்காட்டுங்கள். மாற்றத்திற்கான உந்துதல் கீழிருந்து மேல், மேல் இருந்து கீழ் என்று இருபக்க முயற்சியாக இருக்க வேண்டும்.

விஜய் சொன்னது போல் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்! திராவிட கட்சிகள் தாண்டி ஒரு கட்சியின் ஆட்சி அமையாது என்றிருந்த தமிழகத்திலேயே ஒரு கட்சி ஆட்சி அமைத்து விட்டது என்கிற பொழுது. நடக்கும் நல்லது எப்படி வேண்டுமென்றாலும் நடக்கும் என்று நம்புங்கள். இப்படி இப்படியெல்லாம் மட்டும் தான் நடக்க வேண்டுமென்று இல்லை நல்லதும் எப்படி வேண்டுமென்றாலும் நடக்கும் என்று நம்புவோம்.

Error happened.
Exit mobile version