கதிர் விஜயம்

மீட்பரைத் தேடும் அரசியல்!

சிறுவயதில் நீங்கள் பள்ளி செல்லும் காலத்தில், உங்கள் ஆசிரியர் உங்களிடம், உங்கள் அம்மா எத்தனை கஷ்டப்படுகிறார் அதை மனதில் வைத்துப் படியுங்கள்; உங்கள் அப்பா எத்தனை கஷ்டப்படுகிறார், அதை நினைத்துப் படியுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொல்லிக் கேட்டிருப்பீர்கள். என்றேனும் அவர்கள் கஷ்டப்படுவதால் நான் ஏன் படிக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எந்தப் பிள்ளைகளும் படித்துப் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் என்கிற எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படியே நல்ல பிள்ளைகளாக இருந்தாலும் பிள்ளைகள் வளர்ந்து வேலைக்குச் செல்லும் சமயத்தில், பெற்றோர்கள் அவர்கள் வாழ்வின் முக்கால்வாசி காலத்தைக் கடந்து இருப்பார்கள்.

பின்னர் ஏன் எல்லாப் பெற்றோர்களும் மிகவும் சிரத்தையோடு பிள்ளைகளுக்காக உழைக்கிறார்கள்? நம் தலைமுறையில் நாம் பட்ட கஷ்டங்களை வரும் தலைமுறை அனுபவிக்கக் கூடாது என்னும் அக்கறை அது. அவர்களை வளர்த்தெடுக்க அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் உழைத்து இருப்பார்கள்.

இப்படித்தான் ஒரு நாடும். நாம் ‘நன்றியுடன் வரி செலுத்துங்கள்’ என்று எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, நாம் வளரும் பொழுது இந்த நாடு கொடுத்த எல்லாப் பணப் பயன்களையும் அனுபவிக்கிறோம், நம் உழைப்பில் அதைத் திருப்பிச் செலுத்த நேர்கிற பொழுது, வலிக்கிறது என்கிறோம். இது பெற்றோர் உழைப்பில் வளர்ந்த பிள்ளைகள் தன் உழைப்பு என்று வரும் பொழுது தனக்கு மட்டும்தான் என்று நினைப்பதை ஒட்டிய மனநிலை. அதுதான் வரிகள் மீது நமக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்துகிறது. அதை நியாயப்படுத்திக்கொள்ள இது சரியாக இருக்கிறதா அது சரியாக இருக்கிறதா என்று வெற்று கேள்விகள் எழுப்பிக்கொண்டிருப்போம்.

உண்மையில் நாம் செலுத்தும் வரி என்பது, அது நேரடி வரியானாலும் சரி, நாம் அன்றாடம் செலுத்தும் மறைமுக வரியானாலும் சரி (GST), ஒரு போஸ்ட் பெய்டு சேவை போலத்தான். அரசு உருவாக்கும் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துகிறோம், அரசுப் பள்ளியில் படிக்கிறோம், இலவச மருத்துவம் மற்றும் காப்பீடு போன்ற அரசு தரும் சலுகைகளை அனுபவித்து வளர்கிறோம், வளர்ந்து ஒரு வேலையில் சேர்ந்த பின் வரி கட்டச் சொன்னால், என் சம்பாத்தியம் என் பணம் இவ்வளவு வரிக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கிறதே என்று நொந்து கொள்கிறோம். இது ஒரு அநியாயமான அறியாமை நிலை.

எல்லாக் காலங்களிலும் ஒரு தலைமுறையின் உழைப்பின் பயனை அதே தலைமுறையினர் முழுதும் அனுபவிப்பதில்லை. எதிர்வரும் தலைமுறைதான் அதன் பயனை அனுபவிக்கிறது. குடும்பங்கள் என்று இல்லை, இந்த முறையில் தான் எல்லா நாடுகளும் இயங்குகின்றன.

நம்மைச் சுற்றி இருக்கும் நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குடும்பங்களுக்கிடையேயும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இருப்பதை நாம் பார்க்கிறோம். அதற்கு என்ன காரணம்? எல்லாக் குடும்பங்களும் ஒரே இடத்தில் இருந்து போட்டியை ஆரம்பிக்கவில்லை, ஒவ்வொருவரின் தொடக்கமும் வெவ்வேறு நிலையில் இருந்திருக்கும்.

தாத்தா காலத்தில் தொழில் தொடங்கியவர்கள் சொத்து சேர்த்து வைத்திருப்பார்கள். அப்பா காலத்தில் படித்தவர்கள், சொத்து சேர்க்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்பம் எப்படி எல்லாக் குடும்பங்களுக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லையோ அதேதான் நாடுகளுக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலையில், எல்லா நாடுகளின் தேவைகளும் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை, எல்லா நாடுகளும் ஒரே ஆரம்பப் புள்ளியில் இருக்கவில்லை.

எப்படிக் குடும்பங்களுக்கு மத்தியில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு சில குடும்பங்களை நாட்டாமை குடும்பங்கள் ஆக்குகிறதோ அதேதான் நாடுகளிடையேயும்.

மேற்கத்திய நாடுகள் எப்போதும், இந்த நாட்டாமை மனப்பாங்கிலேயே தான் இருந்து வந்திருக்கிறார்கள் இப்போதும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அதிலும் அமெரிக்கா எப்போதும் பெரியண்ணன் மனப்பாங்கிலேதான் இருந்து வந்திருக்கிறது.

நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், இந்த வருடத்தில் ஒரு ஏழு மாதங்களில் மட்டும் ஹாலிவுட் நமது நாட்டில் இருந்து ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கிறது.யூட்யூபையும் இன்ஸ்டாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். பைத்தியக்காரத்தனமாகவே இருந்தாலும், உழைப்பு இந்தியர்களுடையது, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு இந்தியர்களின் உழைப்பிற்கு அவர்கள் விலை வைக்கிறார்கள். ஏற்கனவே டிஜிட்டல் மார்க்கெட்டில் நம்முடைய தரவுகளையும் உழைப்பையும் கொண்டு அதிகம் சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். உலகம் முழுதும் பயன்படுத்தப்படும், விசா மற்றும் மாஸ்டர் கார்டு பணப்பரிவர்த்தனை மூலம் இந்திய சந்தையில் இருந்து சம்பாதிக்கிறார்கள். பொருள் வர்த்தகம் இருதரப்புப்க்கும் பயன் தருகிறது என்றாலும், டிஜிட்டல் தளங்களில் மதிப்பு (தரவு, விளம்பரம், சந்தாக் கட்டணம்) சமமற்ற முறையில் ஒரு பக்கமே சேர்கிறது.டிஜிட்டல் தளங்களில் நூறு கோடிப் பயனர்களின் நேரமும் தரவும் ஒரே திசையில் மட்டும் பணமாகின்றன.

இப்படிப் பல வகையில் இந்தியாவை சந்தையாகப் பயன்படுத்தியும் அவர்களுக்குப் போதவில்லை, ஏதோ அவர்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற கருத்தை நிறுவி நமக்கு வரி விதிக்கிறார்கள். அமெரிக்கப் பெருநிறுவன முதலாளிகள் நம் நாடு ஏழைகளுக்காய்க் கண்ணீர் சிந்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

மாஸ்டர், விசா போன்ற பரிவர்த்தனைக்கு மாற்றாக நாம் ஒரு பரிவர்த்தனையைக் கொண்டு வர நமக்கு அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகியிருக்கிறது. அதை அநேக நாடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நாம் இருக்கிறோம். அமெரிக்கா அதை ஏற்கவில்லை.

இப்படியான சூழலில், நம் நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கிடைக்கத் தாமதமாகிறது என்றதும், தேர்ந்தெடுக்கப்பட்ட நம் நாட்டின் பிரதமர் மீது ஒரு குற்றச்சாட்டை எலன் மஸ்க் போன்ற அந்நியர்கள் வைக்கும் பொழுது வைக்கும் பொழுது, அதில் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது எத்தனை பெரிய இழி செயல், சுதேசிப் பொருட்களை ஆதரித்து வந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் வாரிசுதான் அப்படியொரு ஆதாயம் தேட நினைக்கிறார்.

நாம் எப்போதும் எழுதிவருவதுதான். காங்கிரசின் இந்தப் போக்கும் நிலையும் ஜனநாயகத்திற்கு நல்லதே இல்லை. பாஜகவை நோக்கிச் சரியான கேள்விகளையும் சரியான விமர்சனங்களையும் இன்றளவும் வைக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பது, கட்சியின் பயணம் எதை நோக்கி இருக்கவேண்டும் என்கிற தெளிவில்லாமல் இருப்பது என்று ஒரு தேசியக் கட்சியின் பலவீனம் என்பது நாட்டின் பலவீனமாகவே தான் நான் பார்க்கிறேன்.

முன்பு சுட்டிக்காட்டியது போல, காங்கிரஸ் தேசியம் என்கிற நீரோட்டத்தில் இருந்து மெல்ல விலகத் தொடங்கியதுதான் அதைப் பலவீனப்படுத்தியது. அதை மேலும் பலவீனப்படுத்துவது போன்றுதான் இன்று ராகுல் காந்தி, நம் நாட்டை அவமதித்த மஸ்க்கிற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். 2024-ல் எலான் மஸ்க் EVM இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்றபோது, ராகுல் காந்தி அதை ஆமோதித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தை விமர்சித்தார். ஒரு தேசிய கட்சியின் தலைவர் உள்நாட்டு அமைப்பை விமர்சிக்க வெளிநாட்டுத் தொழிலதிபரின் கருத்தை ஆயுதமாக்குவது அரசியல் முதிர்ச்சியின்மை. அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்தை நாம் ஏற்பதற்கு நாம் அவர்களை இங்கு சோதனைகள் மேற்கொள்ளச் சொன்னோம் அதற்கு அவர்கள் மறுத்தார்கள்.அவர்கள் இழப்பீட்டுப் பொறுப்பிலிருந்து விலக்கு (Indemnity) கேட்டனர்; அதை இந்தியா மறுத்தது. நாம் கடைசி வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுதும் இந்தியர்களிடம் இருந்தே எதிர்ப்பு வந்தது. ஒரு வேளை நாம் ஏற்றுக்கொண்டிருந்தால், எதிர்காலங்களில் அவர்கள் நாட்டில் சோதனையில் வெற்றி பெற்றதாகச் சொல்லி நம் நாட்டில் மருந்துகளை விற்பதாகச் சொல்லி நம்மை சோதனை எலிகளாக ஆக்கியிருப்பார்கள். ஒரு பெரிய தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவரிடம் இத்தனை ஆழமான அரசியல் நோக்கம் இல்லாமல் இருப்பதுதான் வருத்தம்.

இங்கே ராகுலை நய்யாண்டி செய்து அவருக்கு எதிராக அவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று பரப்புரை செய்கிறார்கள் என்கிற குற்றசாட்டு இருக்கிறது.நீங்கள் அடிப்படையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை வைத்து மட்டும் ஒருவரை கீழே தள்ளிவிட முடியாது. அவரவரின் செயல்கள் தான் அதை தீர்மானிக்கிறது.

திமுகவுடன் கூட்டணி வைத்து ஜெயித்த பின் த.வெ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தையும் வாக்கு இயந்திரத்தையும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் யார் ஏற்பார்கள்.தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும்ஆதாரமற்றவை. ஏனெனில், களத்தில் தேர்தலை நடைமுறைப்படுத்துவது அந்தந்த மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் மாவட்ட அதிகாரிகளே ஆவர். தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளே ஆட்சியில் இருந்தது. காங்கிரஸின் இந்த குற்றசாட்டை காங்கிரஸோடு கூட்டணியில் இருக்கின்ற த.வெ.க போன்ற கட்சிகளும் கார்த்திக் சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்களுமே கூட ஏற்பதில்லை.  குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் செய்யப்பட்டது என்பது விவாதத்திற்குரியதாக இருக்கலாம்; ஆனால் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் என்பது தொடர்ச்சியாக நடக்க வேண்டிய ஒன்று வாதிடுவதும் அது சார்ந்து நிர்வாக ரீதியில் செய்யப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்து பேசுவதும். குறிப்பிட்ட கட்சியின் வாக்காளர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டார்கள் என்றால், அது தொகுதி/பாக வாரியான பெயர்ப்பட்டியலுடன் நிரூபிக்க முயற்சிகள் எடுப்பதும் தான் சரியான முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறை.அதை விடுத்து தேர்தல் ஆணையத்தின் மீது ஒட்டுமொத்தமாக ஆதாரமற்ற பழியைப் போடுவது ஒரு கட்சியின் தலைமை என்கிற ரீதியில் அது உங்கள் கட்சியின் பலவீனமாகவே தான் வெளிப்படும்.

இத்தனை பெரிய தேசத்தின் ஒரு பகுதி வாக்காளர்களின் பிரதமர் வேட்பாளராக அறியப்படுகிற ஒருவர் இந்த நிர்வாகத்தின் மீது வைக்கின்ற விமர்சனத்தில் எத்தனை கவனமாக இருக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த தேசத்திற்கு எப்படிக் குரல் கொடுக்க வேண்டும்? அதற்கெல்லாம் நேர்மாறாகத் தான் ராகுல் செயல்படுகிறார்.

அவரை அமுக்குகிறார்கள் பிதுக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. கிரிக்கெட்டில் ஒரு ராகுல் இருக்கிறார், அவருக்குச் சில நட்சத்திர வீரர்களுக்குக் கிடைத்த வசதியான வாய்ப்புகள் எல்லாம் தரப்படவில்லை. எங்கு இறங்கினாலும் ஆட வேண்டும் என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். அவர் என்ன செய்தாலும், எத்தனை நிர்பந்தங்கள் ஏற்படுத்தினாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளிலும் சிறப்பாகச் செயல்பட்டார். அது அவர் மேல் ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது, இந்த நம்பகத்தன்மையைத்தான் ராகுல் பெறத் தவறுகிறார். கரப்பான்பூச்சி இயக்கம் போல் செயல்படும் சில அமைப்புகள் இந்திய இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்களில் ஈடுபட்டாலும், அவர்களால் ஏற்படுத்த முடிகிற அரசியல் அழுத்தங்களைக்கூட காங்கிரஸ் ஏற்படுத்தத் தவறுகிறது.

தேசிய அளவில் காங்கிரசைப் பழைய நிலைக்கு மீட்டெடுக்க காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்று ராகுலைக் கேளுங்கள் அவர் தெளிவான ஸ்திரமான பதிலைப் நிச்சயம் தர மாட்டார். அதைக் கவலைக்குரிய விஷயமாகவே தான் நாம் பார்க்கிறோம். இப்படி இருக்கும் பொழுது, காங்கிரஸ் அவர்கள் கட்சியில் இருக்கும் திறமையான தலைவர்களைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்.

துரதிஷ்டவசமாக இந்திய மக்கள், அரசியலில் வசீகரம் அல்லது வாரிசு அரசியல் இதில் ஒன்றைத்தான் விரும்புகிறார்கள். பாஜகவிலும் கூட மோடிக்கு அடுத்து யார் என்கிற பெரிய கேள்வி இருக்கிறது, அதற்கு பாஜகவிடம் பதில் இருக்கலாம். ஆனால், மக்கள் யாரொருவரையும் உடனடியாக ஏற்கப்போவதில்லை.

இது நம் நாடு அரசியலில் இருக்கும் பெரிய சிக்கல். தமிழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள், விஜய், உதயநிதி, ஸ்டாலின், எடப்பாடி என்று சட்டமன்றத்தில் இருக்கின்ற கட்சிகளை சேர்ந்த தலைவர்களில் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் தெளிவாகச் சில கருத்துக்களைப் பேசுகிறவராக எடப்பாடி தான் இருக்கிறார். அவர் புதிதாக ஒன்றும் இப்படி இல்லை, ஆரம்பம் தொட்டே நிர்வாக ரீதியில் ஒப்பீட்டளவில் சிறந்தவராகத்தான் இருந்தார். ஆனால், அவரிடம் வசீகரம் இல்லை, அவர் அரசியல் தலைவர்களின் வாரிசு இல்லை. கட்சியே கூட அரசியல் வாரிசான தினகரன் பிடியில் இருந்தால் தான் பிழைக்கும் என்கிற நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு சமூகத்தின் பிழை. இதுதான் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் வாரிசுகளைத் தாண்டி ஒரு நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்களை உருவாக்குகிறது.

நாட்டிலுள்ள எந்தக் கட்சிகள் அரசியல் தலைவர்கள் இந்த நிலையை மாற்றத் துணிய வேண்டும். அதுதான், பல வளர்ந்த நாடுகளுக்குப் பிந்தைய நிலையில் இருந்து தொடங்கிய நம்முடைய ஓட்டத்தை வேகமெடுக்கச் செய்யும்.

இங்கே

ஒரு மீட்பர் தேவைப்படுகிறார்.அதுதான் விஜய் இருக்கிறாரே என்று வாதிடாதீர்கள். த.வெ.க. மீது புகார் அளித்தவரை மிரட்டி மாட்டுவண்டி ஓட்ட வைப்பது, கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து விட்டு மற்ற கட்சியைத் திணறடிக்குக்கும் திமுகவையே கட்டுக்கதைகளால் திணறடிப்பது, கூவத்தூரில் அத்தனை உறுப்பினர்களை அடக்கி வைத்திருந்த மன்னார்குடிகாரரிடம் இருந்தே உறுப்பினரைக் களவாடுவது என்று தீய சக்திக்கான அத்தனை தகுதிகளையும் விஜய் கொண்டிருக்கிறார். அவர் கேள்விக்குட்படுத்த முடியாத ஒரு சக்தியாக உருவெடுப்பதும் ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை.

இங்கே எல்லாக் கட்சிகளிலும் ஒரு மீட்பர் வரவேண்டும். அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பேசிக்கொண்டு உழைப்பாளர்களுக்காய் நிற்கும் கம்யூனிஸ்டுகள் அதை மறந்துவிட்டு மதத் துவேஷம் பேசியும் மாநிலத்திற்கு ஒரு கூட்டணியும் வைத்து வீணாகிப் போகிறார்கள். உழைக்கின்ற நம் ஒவ்வொருவரின் உரிமையும் பேச கம்யூனிஸ்ட் கட்சியை மீட்க ஒரு மீட்பர் வரவேண்டும்.

சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த வேண்டும் தேசியத்திற்கு எதிராகத் தொடங்கப்பட்ட பிராந்திய கட்சிகளின் ஆதரவு வேண்டும் என்றும் தேசிய சிந்தனையில் இருந்து விலகி தூரமாக இருக்கும் காங்கிரெஸ்ஸை மீட்க ஒரு மீட்பர் வரவேண்டும்.

தமிழகத்தில் வாரிசு அரசியலை எதிர்த்து அரசியல் செய்து வந்த அதிமுகவை வாரிசு அரசியல் பீடிக்காமல் காக்க ஒரு மீட்பர் வரவேண்டும். ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று திருமந்திரத்தை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட கட்சி ஒரு சார்பு இறை நிந்தனைகள் செய்து வாரிசு அரசியலை முன்னெடுத்து வீணாவதில் இருந்து தடுக்க ஒரு மீட்பர் வரவேண்டும்.

பாதைகளும் முழக்கங்களும் வெவ்வேறாக இருந்தாலும், தேசத்தை முன்னோக்கிச் செலுத்தும் அரசியலை முன்னெடுக்க இங்கு மீட்பர்கள் வரவேண்டும். அந்த மீட்பர்களும் உங்களிலும் என்னிலும் இருந்து தான் வருவார்கள். அப்படி அந்த மீட்பர்கள் வருவதற்கு நாம் சரியான பிரச்சனைகளைப் பேச வேண்டும்.

விஜயை ஆதரித்தாலும், விஜய் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களாக இருக்க வேண்டும். திமுக காரர்களாக இருந்தாலும் திமுக செய்த தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும், அதை விடுத்து விஜய் போராடி தான் ஜெயித்தார் தேர்தல் ஆணையத்தை வைத்து ஜெயித்தார் என்று நகைச்சுவை செய்துகொண்டிருக்கக் கூடாது. 3 வயது கட்சியிடம் அரைநூற்றாண்டைக் கடந்த கட்சி போராடித் தோற்றிருக்கிறது என்று பார்க்கத் தவறினாலும் நீங்கள் மற்றுமொரு காங்கிரஸ் ஆவீர்கள். தற்பொழுது இருக்கும் திமுக அப்படி ஒரு நிலையை அடைந்தால் மகிழ்ச்சி தான். அதிமுகவைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, தனியொரு நபராக எல்லாப் பக்கங்களில் இருந்து வரும் அம்புகளையும் எதிர்கொண்டு உள்ளே இருந்து செய்யப்படும் சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு வருகிறார் எடப்பாடி, இதற்குப் பின் தினகரனின் தலையீடு இல்லாமல் கட்சியை மீட்டெடுப்பது சிரமம் தான். ஆனால், தினகரனின் தலையீடு அதிமுகவை மற்றுமொரு திமுகவாகச் செய்யும்.

இங்கே கட்சிகள் வாரிசு, வசீகரம் என்கிறதைத் தாண்டித் தலைவர்களைத் தேர்வு செய்யத் தொடங்க வேண்டும் அதுதான் நாட்டுக்கு நல்லது. நாம் அதை நோக்கிக் கட்சிகளைச் செலுத்த வேண்டும். யார் ஒருவரையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது எந்தக் கட்சிக்கும் அந்த நிர்பந்தத்தை ஏற்படுத்தாது. திமுக காரர்கள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தால் அங்கே வாரிசு அரசியல் இருக்காது. ஆனால், அது குழப்பத்தை ஏற்படுத்தும் யாரும் சம்பாரிக்க முடியாது என்று அவர்கள் அப்படியே இருக்கிறார்கள். காங்கிரஸில் யார் தலைவராக இருந்தாலும் நேரு குடும்பம் தான் நாட்டாமை என்கிற நிலை இருக்கிறது அதற்கெதிராகக் கிளர்ந்தெழவும் அங்கே ஆளில்லை.

வாக்காளர்களாகிய நாம், கட்சிகளுக்குச் சில நிர்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும், இப்போதும் நாம் சில நிர்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம், ஆனால், எதிர்மறையான நிர்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். மின்சாரக் கட்டணத்தை ஏற்றக்கூடாது, வரி விதிக்கக் கூடாது அதையெல்லாம் செய்தால் ஓட்டை மாற்றி குத்துவோம் என்கிற நிர்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். பணவீக்கத்திற்கு நிகராகக்கூடச் சமயங்களில் மின்கட்டணம் ஏற்றப்படுவதில்லை. அரசு மானியம் மூலம் அது நேர்செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அதுவும் மறைமுகமாக நம்மைத்தான் பாதிக்கிறது என்கிற சிந்தனை நமக்கு வர வேண்டும், நேரடியாக நம் பையில் இருந்து சென்றால் மட்டுமே நாம் கவலை கொள்கிறோம். அது தவறு, நமக்கு அதில் ஒரு தெளிவு வர வேண்டும். இப்படியான நிர்வாக அரசியல் குறித்த தெளிவு எல்லோரிடத்திலும் வந்து விட்டால் நாம் எல்லோரும் அரசியல் மீட்பராகிவிடுவோம்.

Error happened.
Exit mobile version