அரசியல் அபத்தங்கள் – என்ன தலைப்பு இது? இங்கே நம் ஊர் அரசியலில் எல்லாம் அபத்தம் தானே! என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கலாம்.
சில சிக்கலான விஷயங்களைப் பொதுமைப்படுத்தும் பொழுது, அதன் காரணங்களைக் கண்டறிந்து சிக்கல்களைச் சரிசெய்யும் முனைப்பு குறைந்து விடுகிறது. அதன் பொருட்டாய் இங்கே பொதுமைப்படுத்தப்படும் சில அரசியல் அபத்தங்கள் குறித்துக் குறிப்பிட்டு எழுத வேண்டிய தேவை இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர், விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ அதீத ரசிக மனப்பாங்கு குறித்து விவாதம் நடத்தியது. அந்த விவாதத்தில், “ஒரு துக்க நிகழ்வில் கூட புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த ரசிகர்கள் நிற்கிறார்கள்” என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சி அநேகமான விஜய் ரசிகர்களைக் கொந்தளிக்கச் செய்தது. அநேகமானவர்கள் விஜய் ரசிகர்களுக்கு எதிராக மேலும் எள்ளல்களை உருவாக்கவும் வழி செய்தது. சரிதான்! இன்றைய தேதியில் விஜய்யும் விஜய் ரசிகர்களும் தான் எல்லாப் பக்கமும் தெரிகிறார்கள். எதிர்மறையான விளம்பரங்களாக இருந்தாலும் அவர்களே தான் அங்கே மையமாக இருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டது போல், முதல்வர் விஜய், மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த பொழுது, விஜய் ரசிகர்கள் விஜய்யைக் காணக் காட்டிய ஆர்வம், அதற்குச் சிரித்தபடி விஜய் கையசைத்துச் சென்றது முதற்கொண்டு இன்று விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
விஜய்யும் விஜய் ரசிகர்களும் தான் இப்படியிருக்கிறார்களா? இல்லை, இப்பொழுது அவர்கள் மட்டும் தான் நம் கண்களுக்குத் தெரிகிறார்கள். இதைப் பற்றிப் பேசுகிற பொழுது, பல சினிமா சார்ந்த அரசியல் ஞானிகள், “இந்தச் சமூகம் ரசிக மனப்பாங்கில் இருந்து வெளியே வர வேண்டும்” என்றெல்லாம் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நான் இங்கே விஜய்யையும் விஜய் ரசிகர்களையும் ஆதரிக்கவில்லை. ஆனால், அவர்கள் தான் இங்கே ஆகப்பெரும் பாவத்தைச் செய்து தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துவிட்டார்கள் என்று பேசுவதையும், இந்த ரசிக மனப்பாங்கு சினிமா சார்ந்ததாக மட்டும் இருப்பதாக இந்த ஞானிகள் கூட்டம் நம்புவதையும் நிராகரிக்கிறேன்.
நாஞ்சில் சம்பத் த.வெ.க.வில் சேர்ந்த பின் கொடுத்த ஒரு பேட்டியில், இந்த ரசிக மனப்பாங்கு குறித்துப் பேசும் பொழுது, “இளம் வயதில் எல்லோருக்கும் அந்த வேகம் இருக்கத்தான் செய்யும். நானும் கூட அண்ணாவின் வண்டியின் பின்னால் ஓடியவன் தான்” என்று பேசியிருந்தார். மேலோட்டமாக அணுகினால் அவர், ரசிகர்களின் அதிதீவிர ஒழுங்கின்மையை ஆதரிப்பது போலத் தோன்றும். ஆனால், ஆழமாகப் பார்க்கும் பொழுது தன்னைச் சாட்சியாக வைத்து இந்தச் சமூகத்தின் யதார்த்தத்தை அவர் பேசினார் என்பது புரியும்.
இங்கே எல்லோரும் அரசியல், சமயம், சினிமா என்று யாரோ ஒருவரை அல்லது ஒன்றை அதிதீவிரமாகப் பின்பற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே எதிர் தரப்பினரை மதிக்காதவர்களாகவும், எதிர் தரப்பை ஆபாசமாக வசைபாடுபவர்களாகவும் தான் இருக்கிறார்கள். நான் கடவுளை நம்பவில்லை என்பதற்காக மற்றவர்கள் நம்பிக்கையில் மூக்கை நுழைப்பதும் கூட, நான் விரும்பும் அல்லது நம்பும் விஷயத்தின் மீதான அதிதீவிர தன்முனைப்பு தான்.
தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு எதிராக, தேசிய எண்ணங்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இயக்கம் திமுக. இந்த இரண்டு இயக்கங்களும் கூட்டணி சேர்ந்த பொழுது திமுக ஆதரவாளர்கள் யாரும், “அவர்களை எதிர்த்துத் தான் நாம் இயக்கம் தொடங்கினோம்” என்று கேள்வியெழுப்பவில்லை. காங்கிரஸ்காரர்களும் திமுக தேசிய சிந்தனைகளுக்கு எதிரானது என்று கூட்டணியை எதிர்க்கவில்லை. த.வெ.க.வுடன் இணைவதற்கு முன், ஒரே தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் கூட்டணி அமைத்துக்கொண்டார்கள். இதையெல்லாம் பற்றி அந்தந்தக் கட்சிக்காரர்கள் கேள்வியெழுப்பவே இல்லை.
இன்று இரண்டு துருவங்களாக நிற்கும் பாஜகவும் திமுகவும் கூட கூட்டணியில் இருந்தவர்கள் தான். ஆனாலும், அந்தந்தச் சமயங்களில் அந்தந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் இதற்கெல்லாம் முட்டுக்கொடுக்கவே செய்தார்கள்.
இன்னமும் கூட நன்கு படித்த, வெளி அனுபவம் உள்ள பலரும் கூட காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் ஆதரவாளர்களாக இருப்பதால், அவர்களுக்கு எதிரான கட்சிகள் அல்லது கருத்து உடையவர்களை முட்டாள் என்று பொதுமைப்படுத்துவதும், அல்லது மதவாதிகள் என்று பொதுமைப்படுத்துவதும், இந்தக் கட்சிகளின் எல்லாச் செயல்களையும் புனிதப்படுத்துவதுமாக இருக்கிறார்கள். இதெல்லாம் ரசிக மனப்பாங்கு இல்லாமல் என்ன? இன்று திமுக ஆதரவாளர்கள் மீண்டும் காங்கிரஸைக் கடித்துத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் பின்பற்றுகிற ஒரு கட்சியோ தலைவரோ எது செய்தாலும் சரி என்று இருப்பதற்குப் பெயர் ரசிக மனப்பாங்கு இல்லாமல் வேறென்ன? நான் பின்பற்றுகிற ஒரு கட்சி வேறு ஒருவரைப் பற்றி என்ன பொய்களைப் பரப்பினாலும் அதை நான் அப்படியே நம்புகிறேன் என்றால், அதற்குப் பெயர் என்ன?
இங்கே எல்லோருக்குள்ளும் ஒரு தன்முனைப்பு (ஈகோ) இருக்கிறது. தொலைக்காட்சி நெறியாளராக இருந்து, இன்று தன் யூடியூப் தளத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசிவரும் செந்தில்வேல் போன்றவர்களை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இன்னும் நிறைய திமுக ஆதரவு பொருளாதார வல்லுநர்களைக் கண்டிருப்பீர்கள். திமுக எது செய்தாலும் சரி என்று பேசித்திரிந்திருப்பார்கள். அப்படிப் பேசியதெல்லாம் தான் கடந்த ஆட்சியின் மீது இருந்த வெறுப்பை இன்னும் அதிகமாக்கியது.
இங்கே நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் தன்முனைப்பு, நம்முடைய விருப்பமும் தேர்வும் தான் சரி என்று நம்மை எப்போதும் வாதிடச் சொல்கிறது. அதன்படியே தான் நாம் எல்லோரும் நடக்கின்றோம். அதில் விஜய் ரசிகர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இது சினிமா மோகத்தால் வந்த நோயும் அல்ல.
இங்கே அரசியலை அப்படித் தான் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அரசியலிலும் தனி மனித பிம்பம் தான் முக்கியம் என்கிற அபத்தமான ஒரு நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது. நம் மனசாட்சிக்குத் தெரியும். எடப்பாடி முதல்வர் ஆன பொழுது, அவரின் தோற்றத்தை வைத்தும், அவர் பெரும்பான்மை மக்களுக்குப் பரிச்சயமில்லாதவராக இருந்ததாலும், “இவரெல்லாம் முதல்வரா” என்கிற எண்ணம் நமக்குத் தோன்றியது.
இந்தச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற பெரும் பிழை, அரசியலுக்கு எல்லோருக்கும் தெரிகிற வசீகரமான ஒரு பிம்பம் தேவை என்பது. இந்த நிர்ப்பந்தங்களை 50 ஆண்டுகால அரசியல் வரலாறு கொண்ட கட்சிகள் தான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
மொத்த இந்தியாவிலும் மோடிக்கு முந்தைய பாஜகவும், தற்போது வரை கம்யூனிஸ்ட்டும் தான் இந்தத் தனி மனித பிம்பத்தைச் சாராத ஒரு அரசியலைக் கட்சி அளவில் நடைமுறைப்படுத்தியிருந்தார்கள்.
இத்தனை ஆண்டு காலம் ஆண்டவர்கள், அரசியல் களத்தில் இப்படி நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திவிட்டு, “நடிகன் நாடாள்கிறான், ரசிகர்கள் மோசமாகச் செயல்படுகிறார்கள்” என்று திரும்பும் பக்கம் எல்லாம் சமூகத்தின் ஒரு கூட்டத்தை மட்டும் மட்டுப்படுத்துவது என்பது அரசியல் ஆதாயம் தேடும் அயோக்கியத்தனம் அன்றி வேறில்லை.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் – இந்தக் கட்சிகள் எல்லாம் நடிகர்களுக்கு வாய்ப்பளித்திருக்கின்றன. நடிகர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கியிருக்கின்றன; சட்டமன்ற உறுப்பினர்களாக்கியிருக்கின்றன. நடிகர் நெப்போலியன் திமுகவின் சார்பில் மத்திய இணை அமைச்சராகச் செயல்பட்டிருக்கிறார்.
அவர்களுக்கெல்லாம் என்ன தெரியும் என்று வாய்ப்பளித்தார்கள்? இங்கே தெரிந்தோ தெரியாமலோ, அரசியல் தெரியாதவர்கள் என்றே கொண்டாலும், விஜய்யின் ரசிகர்கள் நம்மை ஒரு ‘உள்ளே வெளியே’ ஆட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். அது முழுமையான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவில்லை என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால், இங்கே களத்தில் இருக்கும் சில நிர்ப்பந்தங்களைத் தாண்டி ஒரு முழுமையான மாற்றம் வரவேண்டுமெனில், அதற்கு வெறுமனே விஜய் ரசிகர்களைத் ‘தற்குறி’ என்று பொதுமைப்படுத்துவதும், “விஜய் ஒரு நடிகர், அவருக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று கூப்பாடு போடுவதும் உதவப்போவதில்லை.
அரசியல் கட்சிகள் தானாக முன்வந்து தகுதியானவர்களை நிர்வாக அரசியலுக்குக் கொண்டுவரலாமே! அதையெல்லாம் ஐம்பது வருடமாகச் செய்யவே இல்லை; இனியும் செய்யப்போவதில்லை. அப்படியிருக்க, புதிய அரசை நடத்தும் கட்சிக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
விஜய்யை ஒன்றும் தெரியாதவராக நான் நினைக்கவில்லை. அவர் இந்த அரசியலில் இருக்கும் நிர்ப்பந்தங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார். அந்த நிர்ப்பந்தங்களுக்கு வளைந்து கொடுக்கிறார். பதவியை அடைவதற்கும், அடைந்த பதவியைத் தக்கவைப்பதற்கும் என்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செய்கிறார்.
அப்படி என்ன செய்தார்? எழுபது நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஒரு மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து, முதல் சில அறிக்கைகளுக்குப் பிறகு எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. தகவல் கேட்டு ஒரு வாக்காளர் உயர்நீதிமன்றத்தை நாடினார். அதற்கு மறுநாளே மரணச் செய்தி வருகிறது. நவம்பர் 19 அன்றுதான் அவர் இயற்கை எய்தினாரா என்ற கேள்வி தமிழகத்தில் பலரின் மனதில் எழுந்ததில் வியப்பில்லை. ஜெயலலிதாவின் மரண நேரம் குறித்து ஆறுமுகசாமி ஆணையமே கேள்வி எழுப்பிய மாநிலம் இது.
எழுபது நாட்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறார் என்கிற பொழுதே, அவரையும் அவர் குடும்பத்தையும் நினைத்து நாம் வருந்தினோம். இந்த அரசியல் அபத்தங்கள் எத்தனை அபாயகரமாக இருக்கின்றன! முன்னாள் முதல்வர் மரணத்தைக் காலம் தாழ்த்தி அறிவித்திருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம் என்றாலும், அதற்குக் காரணமும் தேவையும் இருந்தது. ஒரு மாநிலத்தின் அரசுத் தலைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து என்னவெல்லாம் நடக்கலாம் என்பதைச் சிந்தித்து, தேவையான நடைமுறைகளைச் செய்துவிட்டு அறிவிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இருக்கும் என்பதைப் பலர் புரிந்துகொண்டிருப்பார்கள்.
ஆனால், சாதாரண சட்டமன்ற உறுப்பினர் – அவரையும் கூட இந்த அரசியல் இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறதே என்று நினைக்கிற பொழுது, அரசியல் குறித்துப் பயம் வருகிறது. அரசியல் என்றைக்கும் சாமானியனுக்கு எட்டாத ஒன்றாகி விடுமோ என்கிற அச்சம் எழுகிறது. கொளத்தூர் உறுப்பினர் விஷயத்தில், அவர் பெரும்பான்மை இல்லாத அரசை நடத்தும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர். திமுகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, திமுகவின் முதல்வரையே தோற்கடித்தவர். அது அவருடைய வெற்றியின் மதிப்பைக் கூட்டியதோடு, கட்சியின் பிரதான வெற்றியாகவும் பார்க்கப்பட்டது. விஜய் ஜெயித்ததை விடவும் ஸ்டாலின் தோற்றது தான் பேசுபொருளானது.
இப்படியிருக்க, த.வெ.க. முட்டி மோதி ஆட்சியைத் தக்க வைக்க எல்லா வேலைகளையும் செய்து வைத்திருந்தாலும் இன்னமும் அவர்களின் ஆட்சி ஒரு திரிசங்கு நிலையில் தான் இருக்கிறது. ஆதரவு தரும் கட்சிகளில் பெரும்பாலானவை நேற்றுவரை எதிர்முகாமில் நின்றவை; இன்னமும் அந்த முகாமுடன் நல்லுறவைத் தொடர விரும்புபவை. எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் பக்கம் மாறலாம். அது இந்த ஆட்சிக்கு ஒரு நம்பிக்கையின்மையை வளர்த்திருக்கிறது. பெரும்பான்மை உறுப்பினர்களோடு எடப்பாடி முதல்வராக இருந்த சமயத்தில் திமுக என்னவெல்லாம் செய்தது என்று நாம் அறிவோம். மக்களைக் கேடயமாக வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்; சட்டமன்றத்தில் இருந்து சட்டையைக் கிழித்துக்கொண்டு வந்தார்கள். இப்படியான ஒரு அரசியல் எதிரியோடு களமாடும் பொழுது வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து ரகசியம் காக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. எல்லாவற்றுக்கும் திமுகவைக் குறை சொல்வது போன்று நாம் இதைச் சொல்லவில்லை.
நிச்சயமாக பாபு அவர்களின் உடல்நிலை குறித்து வழக்குப் போட்ட மறுநாள் அவர் மரணம் குறித்துச் செய்தி வருகிறது என்றால், மனித மாண்புகள் தாண்டிய அரசியல் விளையாட்டு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதை நியாயப்படுத்தவும் முடியாது. ஆனால், இந்த நிர்ப்பந்தங்கள் உடையாமல் இப்படியான அபத்தங்கள், அவலங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கப்போகின்றன.
த.வெ.க.வின் முதல் மாநாட்டிற்குத் திருச்சியில் இருந்து காரில் சென்ற ஒரு குழுவின் வண்டி விபத்துக்குள்ளாகி, ரசிகர் மன்றமாக இருந்தது முதல் விஜய்க்காக உழைத்தவர்கள் இறந்து போனார்கள். அங்கே விஜய் அந்த ரசிகர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை; மாநாட்டில் அவர்களுக்காக அஞ்சலியும் செலுத்தவில்லை; இரங்கல் அறிக்கை கூட மறுநாள் தான் வந்தது. விஜய்யின் பெரியம்மா காப்பகத்தில் இருந்து இறந்து போனார்; விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், ஆனால் அவரை ஒன்றும் சுமந்து செல்லவில்லை.
திமுக, அதிமுக எனப் பயணித்து, கடைசி நேரத்தில் த.வெ.க. வேட்பாளராகி, ஆட்சி நடந்த 6 மாதங்களில் 70 நாள் மருத்துவமனையில் இருந்த ஒருவரை விஜய் சுமந்து செல்லுகிறார் என்பதை விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றால் பெரிய தலைமைப் பண்பாகவோ மனித மாண்பாகவோ பார்க்கலாம். ஆனால், உண்மை என்னவெனில் இது ஒரு அரசியல் அபத்தம்; இங்கே அரசியலும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற நிர்ப்பந்தம்.
அரசியலுக்கு வரும் புதியவர்களிடம் “மக்களுக்காக என்ன போராடினாய்?” என்று கேட்பது. அமைச்சர் வந்து நேரில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. இதுபோன்ற நிர்ப்பந்தங்களும் எதிர்பார்ப்புகளும் அரசியல் அபத்தங்கள் தான். இப்படியான நிர்ப்பந்தங்கள் தான் ஒரு அமைச்சர் தான் செய்ய வேண்டிய வேலைகளை விட்டுவிட்டு முறுக்குப் பாக்கெட்டைச் சோதனை செய்ய வைக்கிறது. இதெல்லாம் செய்தால் தான் நாம் நல்ல அமைச்சர் என்று இந்தச் சமூகம் நம்புகிறது. அப்படிச் சமூகத்தில் இருந்து வரும் அமைச்சர்கள் அதையே தொடர்கிறார்கள்.
நாம் முன்னம் சொன்னது போல, விஜய் பதவியை அடைவது, தக்கவைப்பது இரண்டும் குறித்து மிகக் கவனமாக இருக்கிறார். அதனால், இந்த அரசியல் களம் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற நிர்ப்பந்தங்களுக்கு அவர் வளைந்து கொடுக்கிறார். யாருக்கும் சொல்லாமல் அனிதா வீட்டிற்குச் சென்றது, வழிநெடுகப் பெரும் படையைத் திரட்டிக் கரூர் சென்றது என்று இந்த நிர்ப்பந்தங்களின் வழியே அவர் அரசியல் பயணத்தைத் தொடர்கிறார். இதற்கு விஜய்யைக் குறை சொல்லவும் முடியாது; விஜய் ரசிகர்கள் போலப் பாராட்டவும் முடியாது. இரங்கல்களை வைத்து அரசியல் செய்து இந்தச் சமூகத்தைப் பழக்கிய கட்சிகளின் பிழை இது. விஜய் வராமல் இருந்திருந்தாலும், வந்து சில நிமிடங்கள் மட்டும் இருந்துவிட்டுக் கிளம்பியிருந்தாலும் – என்ன செய்திருந்தாலும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார்.
அதோடு மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் ஜெயிக்க வேண்டிய நிர்ப்பந்தம். என்னுடைய கணிப்பு, நிச்சயம் ஸ்டாலின் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப்போவதில்லை. அது அவருக்கு மரியாதையாகவும் இருக்காது. ஸ்டாலின் நின்றாலும் கூட, அவரை விட இடைத்தேர்தலில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் த.வெ.க.விற்குத் தான் அதிகம் இருக்கிறது.
இந்த இரங்கல் என்று இல்லை. விஜய் எல்லோரையும் வாக்குகளாகப் பார்க்கிறார். எந்தப் பக்கம் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் பின்வாங்குகிறார். எல்லாத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெறப் பார்க்கிறார். சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த சில கட்சிகள் சில தரப்பைக் கீழ்மைப்படுத்துவது போன்ற வேலைகளை அவர் செய்வதில்லை. அதே வேளையில் திமுக சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த என்ன செய்ததோ, என்ன செய்யுமோ அதையும் செய்கிறார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திமுக ஆட்சியில் தமிழக அரசு நீதிமன்றத்தில் அதைச் சமணர் கல் என்றது. இப்பொழுது த.வெ.க. ஆட்சியில் அதே தமிழக அரசு சர்வே கல் என்கிறது. இஸ்லாமியப் பொதுமக்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டாலும், இஸ்லாமியர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள, ஜமாத் மற்றும் இஸ்லாமியக் கட்சித் தலைவர்களின் துணையோடு, இரண்டு அரசுகள் மட்டும் இல்லை, எல்லாக் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.
மதத்தில் அரசு தலையிடக் கூடாது என்ற மதச்சார்பின்மை பேசும் கம்யூனிஸ்ட்டுகளும் கூட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்கிறார்கள் மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த இஸ்லாமியக் கட்சி சார்ந்த தலைவர்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் திருமாவளவன். “ஒரே ஒரு நாள் விளக்கேற்றினால் என்ன?” என்று ஒருவரும் பேசவில்லை, சீமானைத் தவிர. தீர்ப்பில் சட்டரீதியான பிழைகள் இருக்கின்றன என்று யாரும் பேசவில்லை; காரணம், அப்படிச் சட்டரீதியாக எந்தப் பிழையும் இல்லை.
இங்கே வழக்கு சட்டப்பூர்வமாக யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்; முதல்வர் விஜய்க்கும் தெரிந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். இங்கே இஸ்லாமியர்களிடம், “திமுகவைப் போல் நாங்களும் நீதிமன்றத்தை அணுகினோம்” என்று சொல்லிக்கொள்வதற்காகவே அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.
சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தின் பெயரால் நடப்பதும் அரசியல் அபத்தங்கள் தான். இது என்ன வகையான மதசார்பின்மை என்பதை எல்லோருமே சிந்திக்க வேண்டும்.
தர்கா உருவாவதற்கும் முன்பிருந்தே அங்கே கோவில் இருந்தது என்கிற பொழுது, இந்த விளக்கேற்றும் கலாச்சாரம் தமிழர் கலாச்சாரம் என்கிற பொழுது, “ஒரேயொரு நாள் இஸ்லாமியர்களையும் சேர்த்துக்கொண்டு அங்கே விளக்கேற்றினால் என்ன?” என்று கேட்கிற தைரியமான ஒரு தலைவன் இங்கே வர வேண்டும் (நாம் நிச்சயமாக இங்கே சீமானைக் குறிப்பிடவில்லை). சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை யாருக்கும் அஞ்சாமல் செய்கிற ஒருவன் வர வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களையும் அரசியல் சடங்குகளையும் உடைக்கின்ற ஒருவன் வேண்டும். அவன் இந்தச் சமூகத்தில் ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். அப்படி ஒருவன் பின்னால் இந்தச் சமூகம் மயங்கிக் கிடந்தாலும் தவறில்லை.
முதலில் இந்த நிர்ப்பந்தங்கள் மாற வேண்டுமெனில், இந்த அரசியல் அபத்த நிர்ப்பந்தங்கள் குறித்து மக்கள் ஒரு தெளிவான புரிதலுக்கு வர வேண்டும். அந்தப் புரிதல் வந்துவிட்டால், இதெல்லாம் இனி மக்களிடம் வேலைக்கு ஆகாது என்று தலைவர்களும் மாறுவார்கள். அது மாற்றத்தை நோக்கிய நம்முடைய அடுத்த படியாக இருக்கட்டும்.
