கதிர் விஜயம்

எது வீரம்! எது ஒழுங்கு!-அரசியல் பரிணாம வளர்ச்சி

 

நீங்கள் உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறீர்கள்? வீரமான குழந்தையாகவா அல்லது தைரியமான குழந்தையாகவா?

இதென்ன விந்தையான கேள்வியாக இருக்கிறது? இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதானே என்கிற எண்ணம் உங்களுக்கு எழலாம். ஆனால், வீரம், தைரியம் இரண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்கிறார் வள்ளுவர். தைரியம் கண்மூடித்தனமானதாகக்கூட இருக்கும், ஒன்றுக்கும் உதவாததாகக்கூட இருக்கும். வீரம் எப்போதும் கண்மூடித்தனமானதாக இருக்காது. கண்மூடித்தனமான ஒன்று வீரமாகவும் இருக்காது.

நாம் எப்படி வளர்க்கிறோம், பிள்ளைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதையொட்டித்தான் இந்தச் சமூகம் எப்படி வளரும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு வகையில் காலம் ஒவ்வொரு நாளும் நம்மை வளர்த்தெடுத்தபடிதான் இருக்கிறது. நிதானித்துச் சிந்தித்தால், நம்மை அறியாமல் நாம் ஒவ்வொரு நாளும் பரிணாம வளர்ச்சியின் படிகளை ஒவ்வொன்றாகக் கடந்துகொண்டிருக்கிறோம். உங்கள் தாத்தா எப்படியிருந்தார், என்ன சிந்தித்தார் என்று யோசியுங்கள்; உங்கள் அப்பா எப்படியிருந்தார், என்ன சிந்தித்தார் என்று யோசியுங்கள்; இன்று நீங்கள் இருக்கும் நிலையை யோசியுங்கள். இங்கே நம்மை அறியாமல் நாம் ஒரு பரிணாம வளர்ச்சிக்குள் அங்கமாக இருப்பது உங்களுக்குத் தெரிய வரும்.

சமூக விலங்குகளான மனிதர்களின் இந்தப் பரிணாம வளர்ச்சியில் அரசியல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கர்கள் எப்படியிருந்தார்கள், ஐரோப்பியர்கள் எப்படியிருந்தார்கள், இந்தியர்கள் எப்படியிருந்தார்கள்? இப்பொழுது இவர்கள் எல்லாம் எப்படியிருக்கிறார்கள் என்பதிலெல்லாம் இந்த நிலங்களின் அரசியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படிச் சமூகங்களின் பரிணாம வளர்ச்சியை அந்தந்த நிலங்களின் அரசியல்தான் இன்று வரை தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. மாற்றம் மெதுமெதுவாக ஒவ்வொரு நாளும் நடந்தேறும் தொடர் நிகழ்வு.

அதைக் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போன்றதுதான், தினமும் செய்திகளில் வரும் ஒவ்வொரு வன்முறை தொடர்பான சம்பவத்தையும் குறித்துப் புதிய அரசின் மீது விமர்சனங்களைத் தாண்டி வன்மங்களை விதைக்கும் போக்கு.

ஐம்பது வருட அரசியலும், இந்த நிலத்தில் அரசியல் லாபங்களுக்காகவே அரசியல்வாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட வன்முறையும் ஆறு மாதத்தில் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகையில் நியாயம்?

இதை நாம் சொல்வதால், “என் அமுல் பேபியைத் திட்டாதீங்க” ரகக் கூட்டத்தோடு சேர்ந்தவர்களாக நாம் ஆகிவிட மாட்டோம். இப்போதும் நாம் அந்த அமுல் பேபி முதல்வரைக் கேள்வி கேட்கின்ற இடத்தில்தான் நம்மை நிறுத்திக்கொண்டுள்ளோம். நாம் இந்தப் புதிய முதல்வரிடம் நமக்கிருக்கும் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசுவோம். இந்தப் புதிய முதல்வர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்துப் பேசுவோம்.

அதே வேளையில், எல்லாக் குற்றச்சாட்டுகளையும் விஜய் ஒருவர் மீது மட்டும் ஏற்றுவதைத்தான் நாம் ஏற்பதில்லை. “அதுதான் ஆறு மாதம் ஆகிவிட்டதே, இன்னும் என்ன புது முதல்வர்?” என்று நீங்கள் கேட்கலாம். ஐம்பது வருடக் கட்சிகளோடு ஒப்பிடுகையில் ஐந்து வருடம் ஆனாலும் புது முதல்வர்தான்.

இங்கே ஒரு போக்கு நிலவுகிறது: திடீரென்று ரஜினியின் வெற்றியைக் கொண்டாடுவதாகச் சொல்லி விஜய்யை அவமதிக்கும் போக்கு. இதே இந்தத் திராவிட அரசியல் கூட்டத்தின் க்ளோன்கள், ஒரு காலத்தில் ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்கிற பயத்தில், ரஜினியைக் கீழ்மைப்படுத்த விஜய்யைப் பயன்படுத்தின. இன்று அதே கூட்டம் விஜய்யைக் கீழ்மைப்படுத்த ரஜினியின் வெற்றியைக் கொண்டுவருகிறது.

அரசியல்வாதிகள் ரஜினி அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக 2017-க்கு முன்பிருந்தே பல பிரச்சாரங்களை ரஜினிக்கு எதிராகச் செய்து வந்தார்கள். இந்தச் சமயத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு வந்த விஜய்யும் அதைப் பயன்படுத்திக்கொண்டார்; அதோடு ரஜினிக்கு எதிராக அவரும் சில வேலைகளைச் செய்தார் என்பதை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. விஜய்யே ஒப்புக்கொண்டது போல, அவர் அணிய ஆசை கொண்ட, அவரின் தகுதியைவிடப் பெரிய அப்பா சட்டை ரஜினி இருந்த இடம். யானைக்குக் குறி வைத்துத் தப்பிய வீரன் போல, ரஜினியின் இடத்திற்குக் குறி வைத்து அடைய முடியவில்லை என்பதையும், ரஜினியை ஏளனம் செய்த அதே மேடையில் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் செய்வதற்கு விஜய்க்கு ஒரு தேவை இருந்தது. தான் இருந்த துறையில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில், அதே துறையில் மற்றொருவர் மீது போட்டியின் பொருட்டோ பொறாமையின் பொருட்டோ அடிவருடிகள் கொண்டு வன்மங்களை வீசியதில் அவருக்கு ஒரு தேவை இருந்தது.

அதுவே, எந்தவொரு தேவையும் இல்லாமல், ரஜினியின் குணம் அறிந்து, அவர் அரசியலுக்கு வந்தால் நியாய தர்மங்கள் பேசிக்கொண்டிருப்பார் என்று நினைத்த திராவிட அரசியல் கூடாரம், ரஜினிக்கு எதிரான பிரச்சாரத்தில் விஜய்யைப் பயன்படுத்தியதையும், தற்போது விஜய்க்கு எதிரான பிரச்சாரத்தில் ரஜினியைப் பயன்படுத்துவதையும் நாம் புரிந்துகொண்டு விலக்க வேண்டும். சினிமாவில் இருந்தவரை விஜய் தரப்பு ரஜினியைச் சீண்டியதில் ஒரு நியாயம் இருந்தது. அதை விஜய் தரப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டிருந்தால், இந்தத் திராவிடக் கூடாரங்கள் “ரஜினிக்கு எதிராக விஜய், விஜய்க்கு எதிராக ரஜினி” என்று ஆடும் ஆட்டத்தில் விஜய்யை அவர்கள் பலிகொடுக்க நேரிடும்.

இப்படி எல்லாக் காலங்களிலும் அரசியல் கட்சிகள் யாரோ ஒருவரை யாரோ ஒருவருக்கு எதிராக முன்னிறுத்தி ஆடும் ஆட்டங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேசியவாதக் கட்சியான காங்கிரஸ் தேசியம் பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே, சுபாஷின் ஆதரவாளரான முத்துராமலிங்கனாருக்கு எதிராக சேகரனாரைக் கொண்டுவந்தது வாக்கு அரசியலைக் கணக்கில் கொண்டுதான். முத்துராமலிங்கனாருக்கு நிகராக அதே சமூகத்தில் இருந்து ஒருவர் அவருக்கு எதிராக வரப்போவதில்லை என்று, எதிரும் புதிருமாக இருந்த சமூகங்களின் இரண்டு பேரைக் கொண்டு அரசியல் விளையாட்டு விளையாடி, இன்று வரை அந்த முடிவின் விளைவாக வாக்குகளைக் கட்சிகள் அறுவடை செய்துகொண்டிருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.

இங்கே நிகழ்வுகளைப் பற்றிய ஆழமான பார்வையும் சிந்தனையும் புரிதலும் ஒவ்வொரு வாக்காளருக்கும் அவசியமானதாகிறது. ஒரு வாக்காளரின் தவறான புரிதலும் முடிவும் ஒட்டுமொத்த சமூகத்தின் பரிணாம வளர்ச்சியைப் பாதிக்கின்றன.

இங்கே எல்லாவற்றுக்கும் விஜய்யைக் குறை சொல்லும் போக்கு, “திமுக, அதிமுக பரவாயில்லை” என்கிற தோற்றத்தைச் சமூகத்தில் பரப்புகிறது. நம்முடைய கவலை இந்தச் சிந்தனை பரவலாவது குறித்துத்தான்.

மிக முக்கியமாக, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்கிற பிரச்சாரத்தை மையமாகக் கொண்டு நிறுத்துகிறார்கள். இங்கே யாரிடமும் எந்த ஒப்பீட்டுப் புள்ளிவிவரங்களும் இல்லை. மேலோட்டமாக, புத்தர்கள் மட்டும் நிறைந்திருந்த தமிழகத்தை ஆறு மாதத்தில் தலைகீழாக மாற்றி அயோக்கியர்களின் கூடாரமாக மாற்றிவிட்டதைப் போன்று நடக்கும் பிரச்சாரங்களை விஜய்யை எதிர்ப்பவர்களும்கூட ஏற்கக்கூடாது.

முதலில் வன்முறையைச் சட்டம் ஒழுங்கு பற்றி அளப்பதற்கான அளவுகோலாக வைத்திருப்பதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நம் குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை, நாம் செய்வதைப் பார்த்து வளர்கிறார்கள்; அதனால் சட்டம் ஒழுங்கை முதலில் நம் வீட்டிலிருந்தே அளக்க வேண்டும். இவையெல்லாம் சட்ட மீறல்கள் என்பதே உணராத அளவுக்கு நம் சமூகம் சீர்கெட்டுப் போயிருக்கிறது; சீர்கெட்டுப் போயிருப்பதையே உணராத ஒரு சமூகத்திடமிருந்து, ஆறு மாதத்தில் சட்டம் ஒழுங்கு சீராகிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயம்?

அரசு சலுகையில் படித்துவிட்டு, வரி கட்ட வேண்டும் என்று வருகிற பொழுது “இவ்வளவு வரியா?” என்று சலித்துக்கொண்டு கணக்கை மாற்றிக்காட்ட நினைப்பதும் சட்ட ஒழுங்கு மீறல்தான்.

நம் நண்பர்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள் என்று நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நாமும் சொத்துகள் வாங்கும் பொழுது, விலையைக் குறைத்துக்காட்டி வரி ஏய்ப்பு செய்வதும் சட்ட ஒழுங்கு மீறல்தான்.

தேவையில்லாமல் ஹார்ன் அடிப்பது, ஹெல்மெட் அணியாமல் இருக்கச் சட்டம் பேசுவது, இதெல்லாமும் சட்ட ஒழுங்கு மீறல்தான். அதிமுக பிரமுகர் கைதான பொழுது, ஒரு கட்சி தன் ஆதரவாளர்களோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அரசியலுக்குச் சம்பந்தமில்லாத திரிஷாவின் பெயரைச் சொல்லி, “திரிஷா புருஷனுக்குப் பயமா?” என்று கோஷமிட்டதும் சட்ட ஒழுங்கு மீறல்தான்.

அரசியலமைப்புச் சட்டம் தந்த வழிகளை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் போராடுவேன் என்று கிளம்புவதும் சட்ட ஒழுங்கு மீறல்தான். லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக வாதாடும் வழக்கறிஞர், “லஞ்சம் வாங்கியது குற்றம் என்றால் கொடுத்ததும் குற்றம்” என்று, கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டவரையே குற்றவாளியாக்க முனைந்து, சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்திப் புகார் கொடுத்தவரை எச்சரிப்பதும், லஞ்சம் கேட்டவரைக் காப்பதும் சட்ட ஒழுங்கு மீறல்தான். நிர்ப்பந்தத்தால் லஞ்சம் கொடுத்தவர் ஏழு நாட்களுக்குள் புகார் அளித்தால் குற்றவாளி அல்ல என்று சட்டம் சொன்னாலும், பதவியில் இருக்கும் அமைச்சருக்கு எதிராக ஏழு நாட்களுக்குள் யார் புகார் கொடுக்கத் துணிவார்கள்? அந்தச் சட்டத்தை எழுதுகிறவர்களே லஞ்சம் கேட்கிறவர்களாக இருக்கும்போது?

இன்று சென்னையில், ஜீரோ டாலரன்ஸ் (Zero Tolerance) நாள் அனுசரிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல் சகித்துக்கொள்ளப்படாது என்பதற்கு ஒரே ஒரு நாள் மட்டும் அனுசரிப்பதே சட்ட ஒழுங்கு மீறல்தான். அப்படியென்றால் மற்ற நாட்களில் விதிகளை மீறலாம் என்று அர்த்தமா? ஜீரோ டாலரன்ஸ் (Zero Tolerance) என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல; ஒரு அரசும் அமைப்பும் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை.

இன்று சென்னையில் இப்படியென்றால், நேற்று தென் தமிழகத்தில் முத்துராமலிங்கனாரின் குரு பூசை. குரு பூசை ஊர்வலத்தில் செல்கிறவர்கள் முகம் கோணும்படி செய்யும் செயல்களைக் கண்டு சிறு வயதில் அச்சம் கொண்டிருக்கிறேன். அந்த அச்சம் முத்துராமலிங்கனார் மீதான வெறுப்பாகக்கூட இருந்தது. அப்போது, என்னுடைய தாயார், “தேவர் நல்லவர், முருக பக்தர்; இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்” என்று எனக்கு முத்துராமலிங்கனாரைப் பற்றி விளங்கச் செய்தார். வாக்கரசியல் நலனுக்காக, இப்படியான குரு பூசை போன்ற ஊர்வலங்களில் விதிகளை மீறும் யார் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததும் சட்ட ஒழுங்கு மீறல்தான். இந்த விமர்சனத்தைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மீதானதாக நாம் குறுக்கிவிடக் கூடாது. நேற்றைய குரு பூசை ஊர்வலத்தில், தேசியக் கட்சிகள் முதல் லெட்டர்பேடு கட்சிகள் வரை எல்லோரும் பங்குகொண்டார்கள். அதில் அநேகர் விதிகளை மீறவேதான் செய்தார்கள்.

இதைப் படிக்கிற யாரும் இதை ஒரு சமூகத்தின் குறையாகக் குறுக்கிவிடக் கூடாது என்பதற்காக ஒன்றை நினைவுகூர்கிறேன்: அண்ணன் திருமாவளவனைப் பின்பற்றுகிறவர்கள், அவர்கள் கட்சியைச் சார்ந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் செய்த இதே போன்ற விதிமீறல்களையும் நாம் முன்பே சுட்டி எழுதியிருக்கிறோம்.

இதில் நேற்று நடந்த முத்துராமலிங்கனாரின் குரு பூசையில் பெரிய முரணாக நமக்குத் தெரிவது: முத்துராமலிங்கனார் நேதாஜியின் ஆதரவாளர், ராணுவத்திற்கு ஆள் திரட்டித் தந்தவர்; ராணுவம் ஒழுங்குகள், கட்டுப்பாடுகள், கீழ்ப்படிதலுக்குப் பேர் போன அமைப்பு. தனிநபர் என்கிற அளவில், ஒழுக்கமாகவும் சாந்தமாகவும் பக்திமானாகவும் இருந்த ஒருவரைக் குருவாகப் பாவித்து, அவரின் குரு பூசை என்கிற பெயரில் ஒழுங்கே இல்லாமல் நடந்துகொள்வது என்ன மாதிரியான மனநிலை? இது எப்படி அவருக்குச் செய்கின்ற மரியாதையாக இருக்கும்? எத்தனை ஒழுங்கோடு அவரின் குரு பூசை நடந்தேறியது என்பதுதானே அவர் பெயருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

இதெல்லாமே ஐம்பது ஆண்டு கால அரசியல் நம் சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற பரிணாம வளர்ச்சி: அமைச்சர் லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டும், புகார் அளித்தால் கொடுத்தது தப்பு என்று தப்பித்துக்கொள்ளலாம். குரு பூசை, அரசியல்வாதிகள் ஊர்வலம், அரசியல் கட்சிகளின் போராட்டம் என்றால் விதிகளை மீறலாம். அப்படிப்பட்ட சூழல்களில் விதிகள் மீறப்பட்டால் கண்டுகொள்ளக் கூடாது. கலவரமே செய்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தினால் தப்பு; சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசிக்கொண்டே குற்றவாளிகளுக்குப் பச்சாதாபப்படுவது என்று, இப்படியாகத்தான் இந்த நிலத்தின் ஐம்பது ஆண்டுகால அரசியல் இந்தச் சமூகத்தை வளர்த்திருக்கிறது.

அதை மாற்ற அரசியல் மாற வேண்டும்; அது மாற நமக்குத் தெளிந்த பார்வை, புரிதல் வேண்டும். நம் எண்ணங்களும் கண்ணோட்டங்களும் மாற வேண்டும்.

தைரியமாக என்ன தவறுகள் வேண்டுமென்றாலும் செய்யலாம். தவறே செய்யாமல் இருக்கும் வீரம்தான் இங்கே எல்லோருக்கும் தேவை. அரசியல் ஊர்வலங்களிலும் குரு பூசை ஊர்வலங்களிலும் கார்களில் தொங்கிக்கொண்டு வருவதற்கும், அமைச்சராக இருக்கும் பொழுது மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவதற்கும், சட்டப்பூர்வமான கைதைக் கண்டித்து சட்டத்திற்குப் புறம்பாகக் காவல் நிலையத்தை முற்றுகையிடுவதற்கும், தேர்தல் அரசியலுக்குச் சம்பந்தமில்லாத ரஜினி போன்றவர்கள் மீது இணைய வழித் தாக்குதல் நடத்துவதற்கும் குருட்டுத்தனமான தைரியம் இருந்தால் போதும்.

வீரம் கண்மூடித்தனமானது அல்ல. வீரம் என்பது யாதெனின், அது ஒழுங்கை ஒழுங்காய்க் கடைப்பிடிப்பது, மற்றவர்களுக்குத் தொந்தரவு தராது நடந்துகொள்வது, எல்லோரும் பயன்படுத்தும் சாலை போன்ற இடங்களில் சாகசங்களைக் காட்டாமல் இருப்பது, உணர்வுகளால் ஆளப்படாமல் இருப்பது, அகங்காரம் இல்லாமல் இருப்பது, எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் சட்டத்தை மதித்து நடப்பது, தன் அகங்காரத்திற்காக இல்லாமல் மற்றவர் நலனுக்காகச் சீற்றம் கொள்வது. இதெல்லாம்தான் வீரம்.

இவையெல்லாம்தான் வீரம் என்று புரிந்துகொண்டு வீரமான குழந்தைகளைத்தான் வளர்க்க வேண்டும். ஒரு வீடு எப்படிக் குழந்தைகளை நல்லவிதமாக, வீரமாக வளர்க்க வேண்டுமோ, அப்படியாகவே இங்கே ஒவ்வொரு இயக்கத்தின் தலைவர்களும் அவரவர் இயக்கங்களைப் பின்பற்றுகிறவர்களிடம் ஒரு ஒழுங்கைக் கொண்டுவந்துவிட்டாலே சட்டம் ஒழுங்கு ஒழுங்காய் இருக்கும். அதை யாரும் செய்வதில்லை.

முதல்வர் விஜய்யால் ஐம்பது ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியின் குறைபாட்டை ஐந்து ஆண்டுகளில் சரி செய்ய முடியாது. ஆனால், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சமூகம் எப்படி வளர்ந்திருக்க வேண்டும் என்பதற்கான விதையை விதைக்க முடியும். இதுநாள் வரை அது குறித்து அவர் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து அவரிடம் இருந்து ஒரு காட்டமான எச்சரிக்கைகூட வரவில்லை. கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பேச்சுகள் போய்க்கொண்டிருக்கின்றன. இருப்பதைக் கண்காணிக்கவே ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது; அதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து எந்த எதிர்க்கட்சியும் கேள்வியெழுப்பவில்லை. கேட்டால், “ஐம்பது ஆண்டு காலம் என்ன புடுங்கினீர்கள்?” என்று கேள்வி எழும் என்கிற அச்சமாக இருக்கலாம்.

முதல்வராக விஜய் ஏதும் துரித நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலும், கட்சித் தலைவர் என்கிற ரீதியில், அவர் கட்சியினர் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒழுங்கை அவர் கொண்டுவரலாம். அதிலும், ஒழுங்கில்லாத யார் வந்து சேர்ந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்கிற போக்குதான் கஞ்சா, கொலை, கொள்ளை என்று எல்லாவற்றிலும் த.வெ.க. பெயர் அடிபடக் காரணமாக இருக்கிறது. அதையும்கூட கள அரசியல் ஏற்படுத்துகிற நிர்ப்பந்தம் என்று எடுத்துக்கொள்ளலாம். அவரின் PR வேலைகளின் நீட்சியான இணைய வழித் தாக்குதல்களையேனும் நிறுத்துவதற்கு அவர் வாய் திறக்க வேண்டும்.

இதையெல்லாம் நாம் சொல்லலாம்; தவறில்லை. அதற்காக மீண்டும் திமுக வரலாம், அதிமுக வரலாம் என்று நினைக்கக் கூடாது. அந்தத் திராவிட மாயக் கட்டுக்குள் இருந்து இந்தச் சமூகம் தன்னை விடுவித்துக்கொள்ள ஐம்பது ஆண்டு காலம் ஆகியிருக்கிறது.

குரங்கில் இருந்து மனிதனாகி மீண்டும் குரங்காகிவிடக் கூடாது. அதை நோக்கி நம்மைச் செலுத்தும் குருட்டுத் தைரியம் நமக்குத் தேவையில்லை. ஒழுங்கை நோக்கி நகரும் வீரத்தைத்தான் நாம் வளர்க்க வேண்டும்.

 

Error happened.
Exit mobile version