கதிர் விஜயம்

கேள்வியும் நானே பதிலும் நானே! மும்மொழிக்கொள்கை பஞ்சாயத்து!

மும்மொழி கொள்கை தொடர்பாக நம் வலைத்தளத்திற்கு வந்த கேள்விகளுக்கு நம் ஆசிரியர் குழுவின் பதில்கள் தான் இந்த பகுதி.

தற்போது புதிதாக மும்மொழி கொள்கை என ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டு இருக்கிறார்கள் என்று விஜய் சொன்னது பற்றி உங்கள் கருத்து?-புதுக்கோட்டையில் இருந்து கணேசன்

விஜய்யின் அரசியல் வருகையை விடவும் இது ஒன்றும் புதிய பிரச்சனையில் இல்லை. தனுஷின் படிக்காதவன் படத்தில் வரும் நகைச்சுவை வசனம் போல், எப்போது எல்லாம் தி.மு.க அரசின் நிர்வாகத்தின் மீது அதிக விமர்சனம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நரம்பு புடைத்து எழுப்புவதை போல், இது சமாச்சாரம் பிரச்சனையாக வெளியில் தோன்றி, பின் கொஞ்ச நாளில் மறைந்து விடும்.

மூன்று மொழிகளில் ஐந்தாவது வரை தாய் மொழி கட்டாயம் படிக்க வேண்டும், மூன்றாவது மொழியாக ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று இந்த கல்வி கொள்கை சொல்கிறது என்று அண்ணாமலை பேசியிருக்கிறாரே? பிறகு ஏன் பிரச்சனை செய்கிறார்கள்?- தேனாம்பேட்டையில் இருந்து லதா

எல்லா அரசியல் கட்சிகளும் அதிகாரத்திற்கு வருவதற்கும் அதை தக்க வைப்பதற்கும் இல்லாத பிரச்சனைகளை எடுத்து வைத்து பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். காரணம், இருக்கின்ற பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்று அவர்களுக்கு தெரியாது. அண்ணாமலை சொன்னது சரி தான், மூன்றாவது மொழியாக ஹிந்தி படிக்க வேண்டியதில்லை என்று தான் புதிய கல்வி கொள்கை சொல்கிறது. ஆனால், சிக்கல் என்னவெனில் மக்கள் எல்லோரும் ஹிந்தியை தான் தேர்ந்துப்பார்கள்.நம் மாநிலத்தில் தோராயமாக 57லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கின்றார்கள், தோராயமாக 55 லட்சம் மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில் படிக்கின்றார்கள். இந்த தனியார் பள்ளி மாணவர்கள், புதிய கல்வி கொள்கையின் அறிமுகத்திற்கு முன்னர் இருந்தே ஹிந்தி தான் படித்துக்கொண்டு இருந்தார்கள். சமச்சீர் கல்வி திட்டம் என்று வந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளை டம்மி ஆக்கியதும் பள்ளி நிர்வாகங்கள் சி.பி.எஸ்.இ அவதாரம் எடுக்க தொடங்கியது.மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உப்புக்கு இருந்த ஹிந்தியை சமச்சீர் கல்வித்திட்டத்தின் புண்ணியத்தில் சி.பி.எஸ்.இ மூலம் சிம்மாசனம் ஏறி ஏற்கனவே பரவலாக ஊடுருவி விட்டது என்கிற பொழுது, மக்கள் மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லாத மொழியை தேர்வு செய்வது அரிது.

அரத பழைய கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய் வரை ஹிந்தி திணிக்கப்படுகிறது என்கிறார்களே! அதென்ன வாழைப்பழமா திணிப்பதற்கு?-உடுமலைபேட்டையில் இருந்து மணி

உங்களிடம் நகைச்சுவை உணர்வும் குசும்பும் அதிகம் இருக்கும் போலிருக்கிறது, பெரிய பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் இந்த வாழைப்பழத்தை வைத்து தான் குழாயடி சண்டை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், சிலர் இதை வைத்து தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள், நீங்கள் அதை வைத்து நகைச்சுவை செய்கிறீர்கள்.இந்த கேள்வியை நகைச்சுவையாக அல்லாமல் நுட்பமாக அணுகினால், அதற்கு தோன்றிய பதில், “எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்க முடியாது.விருப்பம் இருக்கிறவர்கள் மட்டும் அவர்கள் விரும்பும் மொழியை கற்றுக்கொள்ளட்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். இந்த விருப்பம் யாருடையது, நம் வீடு குழந்தைகளுக்கு நாம் டி .வி யை அறிமுகம் செய்கிறோம் போனை அறிமுகம் செய்கிறோம்,சப்பாத்தி, பப்ஸ், பானி பூரி எல்லாம் அறிமுகம் செய்கிறோம், அவர்களும் நாம் எதை எப்படி கொடுக்கிறோமோ அதை தான் அவர்கள் எடுத்துகொள்கிறார்கள்.இந்த வார்த்தைகள் எல்லாம் நாம் இன்று பேசும் தமிழோடு ஒன்றி விட்டது.இந்த வேற்று மொழி வார்த்தைகள் நம் மீது திணிக்கப்பட்டதா இல்லை. பேக்கரியை கொண்டு வந்தவன் கையில் பப்ஸை கொடுத்து பப்ஸ் என்றான் நமக்கு அப்படித்தான் தான் பப்ஸ் அறிமுகம் ஆனது. பேக்கரி என்பதும் கூட தமிழ் கிடையாது. நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ்காரர்கள் உட்பட ஐரோப்பியர்களின் மொழி.சரி! நம் யார் வீட்டிலேனும் நம்முடைய குழந்தைகள் வந்து அப்பா பிரெஞ்சு என்று ஒரு மொழி இருக்கிறதாம், அது சூப்பர் மொழியாம் நான் அதை படிக்க போகிறேன் என்று சொல்லுமா? நாமாக நம் வசதிக்கு ஏற்ப ஒரு பள்ளியை தேர்ந்தெடுப்போம். அங்கே இன்னும் இரண்டு ஆசிரியர்கள் வேலை செய்யட்டும் என்கிற நல்லெண்ணத்தில், ப்ரெஞ்ச்சு, ஹிந்தி,ஜெர்மனி, போன்ற மொழிகள் கற்றுத் தரப்படுகிறது.இங்கே யாரும் விருப்பத்தின் பெயரில் ஒரு மொழியை கற்றுக் கொள்ள ஆரம்பிப்பதில்லை. 90ஸ் கிட்ஸ்களின் பள்ளிக் காலத்தில், மாதம் 100 ரூபாய் அதிகம் கல்விக்கென செலவழிக்க முடிகின்ற குடும்பத்தில் இருந்து வந்த பிள்ளைகள், ஹிந்தி கற்றுக்கொண்டிருந்தார்கள்.அப்போது பிரஞ்சு மொழி இந்தியாவில் அத்தனை பிரபலம் ஆகவில்லை.ஒரு வகையில் பொருளாதாரம் தான் கூடுதலாகவோ குறைவாகவோ ஒருவர் ஒரு மொழியை ஒரு கற்றுக் கொள்வதை தீர்மானிக்கிறது.எத்தனை மொழி கற்றுக்கொள்ள வேண்டும் எந்த மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் குடும்பத்தின் பொருளாதாரம் தான் தீர்மானிக்கிறது, விருப்பத்தின் பெயரில் ஒரு மொழியை கற்றுக்கொள்ள நாம் தேர்ந்தெடுக்க முடியாது, love at first sight மாதிரி ஹீப்ரூ என்று ஒரு மொழி இருக்கிறது என்று கேட்டவுடன் அந்த மொழி மீது காதல் வந்து கற்றுக்கொள்வீர்களா?கிடையாது.மொழிகளை திணிக்க முடியாது, 12வருட பள்ளிப்படிப்பில் ஆங்கிலம் கற்றவர்கள் எல்லாம் தடை தயக்கம் தவறுகள் இல்லாமல் ஆங்கிலம் பேச முடிந்தவர்களாக இருக்கிறார்களா? இல்லை. காலமும் தேவையும் தான் நம் மீது பிற மொழிகள் படருவதற்கோ அல்லது ஆங்கிலம் போல் ஆதிக்கம் செலுத்துவதற்கோ காரணமாக அமைகிறது.காலம் அதை செய்யும் பொழுது யாரும் எந்த கருப்பு மை கொண்டும் அதை தடுக்க முடியாது.”

உங்களுக்கு ஹிந்தி பிடிக்குமா?ஹிந்தி படிப்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா?-கிருஷ்னகிரியில் இருந்து சிவாஜி

தனிப்பட்ட முறையில், எனக்கு நன்கு பரீட்ச்சயமான தமிழ் மொழி தவிர்த்து,எந்த மொழியிலும் எதையும் பிடிக்கும் பிடிக்காது என்கிற அளவில் அணுகியதில்லை.தமிழ், தாய்மொழி தெரியும், அம்மாவை பிடிக்குமா பிடிக்காத என்றால்? முட்டாள்தனமான கேள்வி நம்முடைய விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஜீவன், அதே தான் தமிழ் . ஆங்கிலம் தெரியும் அவ்வளவே! “ஷேஸ்பியர் என்னமா எழுதிருக்கார்!” என்று ரசிக்கிற அளவிற்கு தெரியாது, ஹிந்தியில் சில வார்த்தைகள் தெரியும், வாசிப்பேன் அர்த்தம் தெரியாது.அதனால், ஹிந்தி பிடிக்காது என்று சொல்வது, நியாயமாகாது. இந்தியாவின் மையமான மொழியாக ஹிந்தி இருப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆட்சேபங்கள் இருக்கிறது. சமஸ்கிருதம் தமிழ் போன்ற தொன்மையான இந்திய மொழிகள் இந்தியாவின் மைய மொழியாக இருந்திருக்க வேண்டும். முகலாயர்களின்(சுல்தான்கள்) வருகைக்கு பின் பெர்சிய அரேபிய மொழிகள் சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளோடு கலந்து உருவானது தான், ஹிந்தியும் அதே போன்று இருக்கும் உருதுவும்.இதையெல்லாம் கருத்தில் கொண்டால், ஹிந்தி ஆதிக்கத்திற்கு அல்லது தோற்றத்திற்கு முகலாயர்கள் ஆட்சி தான் காரணம்.ஹிந்தி பிடிக்குமா ஹிந்தி ஆதரவாளரா என்று விவாதங்கள் கேள்விகள் எழும் இடத்தில், பெர்சிய அரேபிய எழுத்துருக்களுக்கு பின்னல் உருது ஒளிந்து கொள்கிறது.

ஹிந்தி படிக்கலாமா? எனக்கு ஒரு நண்பன் இருந்தான் அவன் தாய் மொழி தமிழ், ஆனால், பள்ளியில் அவன் முதன்மை மொழியாக படித்தது ஹிந்தி. நீங்கள் இப்படி ஹிந்தி படிக்க ஆதரவு கேட்பீர்கள் என்றால், நான் எழுந்து என் காலணிகளை தேட வேண்டும். இல்லை, தாய் மொழி கற்றுக்கொண்டு இன்னொரு மொழியாக ஹிந்தி படிப்பதற்கு ஆதரவு கேட்பீர்கள் என்றால், நிச்சயம் என் ஆதரவு உண்டு, ஹிந்தி படியுங்கள், ஹிந்தி படித்தால், தமிழ் துரோகி என்பார்கள் என்று அச்சம் இருக்குமென்றால், உருது படியுங்கள், யாரோ ஒரு அறிஞர் ஒரு கூட்டத்தை ஆள வேண்டுமென்றால் நீங்கள் அவர்களின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சீமான் ஒரு பேட்டியில் சொல்ல கேட்டேன், அவர் பேசியது உண்மையோ பொய்யோ, ஆனால், பேசிய விஷயம் சரி. பெரும்பான்மையாக ஹிந்தி பேசும் மக்கள் இருக்கும் நாட்டை ஆளும் ஆசை இருக்கும் தமிழர்கள் ஹிந்தியோ உருதோ கற்றுக்கொள்ளுங்கள். ஏன்!அதை கற்றுக்கொள்ளாமல் விட்டால் ஆள முடியாதா என்றால், அதிகாரம் யார் கைக்கு வேண்டுமென்றாலும் வரலாம், மக்களோடு யார் தங்களை கனெக்ட் செய்து கொள்கிறார்களோ அவர்கள் தான் தலைவர்கள் ஆவார்கள்.ஹிந்தியை எதிர்க்கும் தமிழ் பற்றாளரான தெலுங்காரரான நம் முதல்வர் ஸ்டாலின் கூட மேற்க வங்கத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் சிரமத்தோடு துண்டுக்காகிதங்கள் வைத்துக்கொண்டு பெங்காலியில் பேசியிருக்கிறார்.நீங்கள் பானி பூரி வாங்க ஹிந்தி தேவை இல்லை தான். ஆனால், பானி பூரிகாரர்களையும் சேர்த்து இந்த நாட்டை ஆள்வதற்கு ஹிந்தி ஒரு கருவியாக நிச்சயம் தேவைப்படும், இந்த காரணத்திற்காக , ஹிந்தி கற்பதை நான் நிச்சயம் ஆதரிப்பேன்.

ஹிந்தியும் தமிழ் போல் ஒரு மொழி தானே என்று கரிசனத்தோடு கேட்பவர்களிடம் சமஸ்கிருதற்கு பதில் தமிழில் அர்ச்சனை செய்யலாமே என்று கேளுங்கள் அவர்களின் நோக்கமும் அடையாளமும் வெளிப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் இதை எப்படி பார்க்கிறீர்கள்?-காரைக்குடியில் இருந்து ராஜா

முதல்வரின் அடையாளமும் நோக்கமும் வெளிப்பட்டுவிட்டதாக பார்க்கிறேன். அரபியில் பாங்கு ஓதுகிறார்கள், அந்த அந்த மாநில மொழிகளில் ஓதுவதில்லை.இந்த இடத்தில், அவர் முதல்வர் ஸ்டாலினாக பேசவில்லை தி.மு.க. தலைவர் ஸ்டாலினாக பேசியிருக்கிறார் என்று தான் நான் பார்க்கிறேன்.எல்லா வீடுகளும் கேட்டு நன்மை பெற வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அரபியில் ஓதப்படும் பாங்கு தி.மு.க. தலைவர்களுக்கு கேட்காது.அதெற்கெல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

சமய நம்பிக்கைகளுக்குள் அரசோ தனிநபரோ தலையிட முடியாது தலையிட கூடாது.ஸ்டாலினுடைய தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் வரும் அறநிலையத்துறை சமஸ்கிருதத்தை ஒன்றும் ஒதுக்கி விடவில்லை. தமிழ் ஒரு பக்கம் சமஸ்கிருதம் ஒரு பக்கம் என்று சோழர் கால நடைமுறையை தான் பின்பற்றுகிறது.எப்போதும் போல தி.மு.க. வின் சமய வெறுப்பு தான் இங்கு வெளிப்பட்டு இருக்கிறது, அகத்தியர் போன்ற சிவனின் சீடர்கள் எல்லோரும் தமிழ் சமஸ்கிருதம் இந்த இரண்டு மொழிகளில் புலமை பெற்றிருந்தார்கள் என்று தெரிகிறது, திருமந்திரத்தில் சிவன் தான் இந்த இரண்டு மொழிகளையும் தேவிக்கு கற்றுத்தந்தான் என்று இருக்கிறது. இதெல்லாம் பொய். தி.மு.கவும், கருப்பு சட்டைக்காரர்களும் சொல்லுவதை போன்று சமஸ்கிருதம். ஆரியத் திணிப்பாகவே இருந்துவிட்டு போகட்டும், அது சமய நம்பிக்கைகளில் ஒன்றாக ஆன பின்,நூறு வருடங்களுக்குள் இந்தியாவிற்குள் வந்த சமய நம்பிக்கைகளையும் மொழியையும் நாம் ஏற்றுக்கொண்டது போலவே தி.மு.கவும். ஏற்றுக்கொண்டது மாதிரி திமுக தன் கூற்றின் படியே எத்தனை வருடங்கள் முன்னர் என்று வரையறுத்து சொல்ல முடியாத வருடங்களுக்கு முன்னாள் வந்த ஆரிய சமய நம்பிக்கையையும் மொழியையும் ஏற்றுக்கொண்டு விட்டு அதைப் பற்றி பேசாமல் இருப்பதே, அவர்களின் வாக்கு வங்கிக்கு நன்று. அர்ச்சனையை பொறுத்தவரையில்,அர்ச்சனை செய்து தான் இறைவனை வணங்க வேண்டும் என்பதில்லை.சமஸ்கிருதம் பிடிக்காதவர்கள். கோவிலுக்கு செல்லும் கருப்பு சட்டைக்காரர்கள் எல்லாம் மனதிற்குள் வேண்டிக்கொள்ளலாம். அர்ச்சனை செய்து தான் வணங்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது.

மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில்,நீங்கள் உங்கள் கருத்தை எடுத்து வைக்கும் வேண்டுமென்றால், என்ன பேசுவீர்கள்?-திருச்சியில் இருந்து சிவா

முதலில் மத்திய மாநில அரசாங்கங்கள்,மாணவர்களுக்கு இப்போது கல்வி முறையின் படி அவர்கள் கற்றுக்கொள்ளும் இரண்டு மொழிகளை அவர்கள் சரியாக கற்றுக்கொள்வதை உறுதி செய்யும் அளவில் கல்வி முறையை மேம்படுத்த வேண்டும்.இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாட்டில், மும்மொழி கொள்கை என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.துரதிஷ்டவசமாக இங்கு மூன்றாவது மொழியாக எல்லோரும் ஹிந்தியை தேர்ந்தெடுக்கும் போக்கு நிலவுகிறது.எல்லா மாநிலங்களும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஏற்றுக்கொள்ளவதோடு நிற்காமல்,அரசு பள்ளி மாணவர்கள் உட்பட எல்லா மாணவர்களும் தாய் மொழியையும் ஆங்கிலத்தையும் சரியாக கற்றுகொள்வதற்கான வசதிகளை நிர்பந்தத்தையும் ஏற்படுத்த வேண்டும். தாய் மொழி கற்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கும் பொழுது, டெல்லியில் இருக்கும் தமிழர் குடும்பத்தில் இருக்கும் குழந்தை தமிழ் படிப்பதை தவிர்க்க முடியாது.தமிழகத்தில் இருக்கும் மற்ற மொழி பேசும் மக்கள் அவர்கள் மொழியை கற்றுக்கொள்வதையும் தவிர்க்க முடியாது. தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் ஹிந்தி, சௌராஷ்டிரா,மலையாளம் தெலுங்கு பேசும் மக்கள் இருக்கின்றார்கள்.லட்சக்கணக்கான மலையாளம் பேசும் மக்கள், ஐந்து சதவீதத்திற்கும் அதிகமான தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள், இவர்கள் எல்லாம் தமிழ் ஆங்கிலம் மற்றும் அவர்களின் தாய் மொழியான தெலுங்கு அல்லது ஹிந்தி படிப்பதற்கு இந்த மும்மொழி கொள்கை வழி செய்யலாம். நீட் தேர்வு வருவதற்கு முன்னதாக தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பு பெரிதாக இருந்ததில்லை (தமிழகத்திலேயே படிக்கவேண்டுமென்றாலும் மருத்துவ படிப்பு என்பது இன்னமும் அரிதான வாய்ப்பாக தானே இருக்கிறது). இப்போது மருத்துவம் படிப்பதற்கு அஸ்ஸாம் வரை செல்லுகிறார்கள். இப்படி மாணவர்கள் வெளிமாநிலங்களில் படிக்கச் செல்லும் பொழுது,அவர்களுக்கு இந்திய மொழிகளில் ஏதேனும் இரண்டு மொழிகள் தெரிந்திருக்கும் பொழுது அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் வேறு மாநில கல்லூரியை தங்கள் தேர்வில் (சாய்ஸ்)வைத்துக்கொள்ளலாம்.பிற மாநிலங்களில் சில வேலைகளுக்கு அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் இரண்டு இந்திய மொழிகளை கற்று வைத்திருக்கும் பொழுது, அவரின் வாய்ப்புகள் இப்படியும் கூடுகிறது. இப்படியான சாதகங்கள் இருக்கும் ஒரு கொள்கையை எதிர்ப்பதை விட்டுவிட்டு, இதை எப்படி கையாள்வது என்று அணுகினால், நீங்கள் ஹிந்தியை ஒதுக்கிவிட்டு கூட இந்த மும்மொழிக்கொள்கையால் பயன் பெற முடியும்.இதிலிருக்கும் நடைமுறை சிக்கல்களை எப்படி கையாள்வது என்று பார்க்க வேண்டும், தாய் மொழி ஆங்கிலம் கட்டாயம் என்பதை போல மாநில மொழியும் கட்டாயம் கற்க வேண்டும் செய்யலாம். ஆனால், சில குடும்பங்கள் குடும்பத்தலைவரின் பணிநிமித்தமாக வேறு வேறு மாநிலத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்படும் அப்படி சந்தர்ப்பத்தில், மாநில மொழி கட்டாயம் என்பது சிக்கலை ஏற்படுத்தும். விதிவிலக்கான இந்த சூழலை தவிர்த்து, தாய் மொழி மாநில மொழி ஆங்கிலம் கற்க வேண்டும் என்றாலே ஹிந்திக்கு பெரிய இடம் இருக்க போவதில்லை.

ஹிந்தி எதிர்ப்பு சம்மந்தமான முதல்வரின் கருத்தை வெளியிட்ட செய்திக்கு கீழே ஹிந்தியும் அரபியும் கற்று தர வாய்ப்பிருக்கின்ற மெட்ரிகுலேஷன் பள்ளியின் விளம்பரம் இருந்தது அதை பார்த்து சிரித்தீர்களா?-திருவாச்சியில் இருந்து கட்ட துரை
பார்த்தேன்! சிரிக்க தான் முடியவில்லை. அந்த செய்திக்கு கீழே அந்த விளம்பரத்தை வெளியிட்ட எடிட்டர் ஒரு வேளை சங்கியாக இருப்பாரோ

மூன்றாவது மொழி கற்பது மாணவர்களுக்கு சுமை என்கிறார்களே! அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?- திருச்சூரில் இருந்து கீர்த்தி
துரோணர், வில் வித்தை கற்றுக்கொடுத்தது பற்றி கதை கேட்டு இருப்பீர்கள், அவர் எல்லா மாணவர்களையும் வரிசையில் நிறுத்தி, வில்லையும் அம்பையும் கொடுத்து, ஒரு பொம்மை கிளியை மரத்தில் கட்டி, எல்லோரிடமும், என்ன தெரிகிறது என்று கேட்டார், அர்ஜுனன் மட்டும் கிளியின் கழுத்து தெரிகிறது என்றானாம்.வில்வித்தைக்கு தேவையான கவனம் (focus) அர்ஜுனனிடம் இருப்பதை அவர் கண்டறிந்தார். அவர் எல்லா மாணவர்களின் கைகளிலும் வில்லை கொடுத்தார், எல்லா மாணவர்களிடமும் ஒரே கேள்வியை கேட்டார்,யாருக்கு வில் வித்தை பழக பிடித்திருக்கிறது அவர்கள் மட்டும் கையை தூக்குங்கள் என்றால்,குழந்தைகளுக்கு என்ன தெரியும், அவர்களால் அதை சிறப்பாக செய்ய முடியுமா என்பதும் கூட தெரியாது,யாருக்கெல்லாம் வில் வித்தை கற்றுக்கொள்ள வேண்டும்? என்று கேட்டிருந்தால், ஒரு ஆசையில் ஆர்வத்தில் துரியோதனமும் பீமனும் வில்லை தூக்கி கொண்டு கிளம்பியிருப்பார்கள்.அர்ஜுனன் வில்லை தூக்காமல் கூட இருந்திருப்பான். துரோணர் எல்லா மாணவர்கள் முன்னரும் ஒரு வாய்ப்பை எடுத்து வைத்தார். நாம் எல்லோரும் எல்லா பாடங்களும் படித்தோம், நம்மில், எத்தனை பேருக்கு ஆங்கிலம் சரியாக பேசத் தெரிகிறது.algebra வும் integration உம் தேவையற்ற பாடங்கள் என்று நம்மில் எத்தனை பேர் கடந்திருக்கிறோம்.குழந்தைகள் முன்னர்,மாணவர்கள் முன்னர் வைக்கப்படும் எல்லா வாய்ப்புகளும் எல்லோராலும் சுமைகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. பாடங்களை குழந்தை முன் வைக்கும் பொழுது, இரண்டில் ஒன்று நடக்கும் ஒன்று அவர்கள் அந்த பாடங்களை நல்ல முறையில் கற்று தேர்ச்சி பெறுவார்கள் அல்லது அந்த பாடத்தை கூடுமானவரை ஒதுக்கி எப்படியும் 35 மார்க் எடுத்துவிட்டு பின்னர் மறந்து விடுவார்கள். இது இரண்டுமே சுமையாக இருக்க போவதில்லை.

மற்ற அரசியல்வாதிகளை ஆதாயத்திற்காக பேசுகிறார்கள்என்கிற என்று கொள்வோம்,நடிகர் விஜய்யும் கூட மும்மொழி கொள்கையை எதிர்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
-துபாயில் இருந்து பாண்டி

நாம் முன்னமே எழுதியிருக்கிறோம், விஜயால் அரசியல் மாற்றம் வருமா என்பது சந்தேகம். ஆனால், ஆட்சி மாற்றம் நடந்தால் நல்லது. விஜய் எப்போதும் வெள்ளம் போகும் போக்கில் போகிறவராக இருக்கின்றார். எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், எல்லா தரப்பு வாக்காளர்களையும் கவர வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இருக்கும் அவர், சில நேரங்களில் இப்ப நீட் எதிர்ப்பு சீசன் என்று நீட் க்கு எதிராக ஒரு கருத்து, மொழி எதிர்ப்பு சீசன் என்று அதற்கு எதிராக ஒரு கருத்து என்று இருக்கிறார். இந்த இடத்தில்,அநேகமான வாக்களார்களுக்கு எதிரியாகி விடுகிறார், நீட் தேர்வின் தயவில் வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், 57 லட்சம் தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் என்று இப்படி தனக்கு தெரியாமலேயே எதார்த்தத்துக்கு எதிராக பேசிவிடுகிறார்.தி.மு.க அ.தி.மு.க அல்லாத ஒரு ஆட்சியை விஜய்யால் கொண்டு வர முடியுமென்றால் அதற்காக அவரை முதல் ஆளாக வரவேற்பேன் ஆதரிப்பேன், அதற்காக அவரின் பத்து பேர் கொண்ட நிபுணர் குழுவோ பிரசாந்த் கிஷோர் எழுதி தரும் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. இளைஞர்களை மாவட்ட நிர்வாகிகளாக நியமித்தாக சொல்லி பெருமிதம் கொள்ளும் அவரே அந்த இளைஞர்களை நம்பாமல் தேர்தல் புரோக்கரை நம்பி அவரோடு பகிரங்கமாக கை கோர்த்து இருப்பது நிச்சயம் சகித்துக்கொள்ள முடியவில்லை, இது காலத்தின் தேவை என்று அவரின் கட்சிக்காரர் தொலைக்காட்சிகளில் முட்டு கொடுத்துக்கொண்டு வருகிறார். காசு கொடுத்து, தேர்தல் ப்ரோக்கர்கள் மூலம் வியூகங்கள் வகுத்து வெற்றி பெற வேண்டுமென்பது எத்தனை கொடூரமான நிலை.கட்சி என்கிற பெரிய கட்டமையில் இருக்கின்ற ஒருவராலும் முடியாது, காசு இருந்தால் தான் முடியும் என்று நம்புகிறவரை என்னால் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது, அதே வேளையில், ஏதோ ஒரு மாற்றம் எப்படியோ தொடங்கினால் நல்லது தான்.

ஒரு மாநிலத்தை கைப்பற்ற வேண்டுமென்றால்,அதன் கலாச்சாரத்தை கையிலெடுப்பதும் மொழியை அழிப்பதுவேமே சிறந்த வழி என்று குடியரசு துணைத்தலைவர் பேசியதை சுட்டி கனிமொழி எம்.பி. பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது என்று சொல்லியிருக்கார் அதைப்பார்த்தீர்களா?-நாகரத்தினம் சென்னை 

நிச்சயமாக அது கண்ணிலும் பட்டது. கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் கட்சி சார் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.முதல்வர் பதவியிலும் பிரதமர் பதவியிலும் இருந்து கொண்டு நீங்கள் லீவு கேட்காமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பலாம், நான் கிறிஸ்டியன் தான் என்று ஹிந்து மதத்தை டெங்கு மலேரியா என்று சொல்லலாம். ஆனால், ஆளுநர், ஜனாதிபதி போன்ற பதவியில் இருந்து கொண்டு அதெல்லாம் செய்ய முடியாது.சரி! துணை ஜனாதிபதி பாஜக ஆதரவாளர் என்றே வைத்துக்கொள்வோம். தமிழகத்தில் இப்படியொரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் பொழுது, அவர் இப்படி ஒரு கருத்தை பேசினால், அவர் ஆதரிக்கும் கட்சிக்கே பின் நெருப்பு(backfire) பற்ற வைத்ததை போன்றகாதா? என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது, இந்த தமிழ் செய்தி ஊடங்களை விட்டுவிட்டு ஆங்கிலம் ஊடங்கள் பக்கம் சென்றேன். அவர் மாநிலம் என்று சொல்லவில்லை. அவர் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்களை குறித்து பேசியிருந்தார், ஒரு நிலத்தை கைப்பற்ற அதன் கலாச்சாரத்தை கையிலெடுத்து மொழியை அழிக்க வேண்டும் அதை இந்தியாவை அடிமைப்படுத்தியவர்கள் செய்தார்கள். நாம் நம் கலாச்சாரத்தை காக்க வேண்டும் மொழியை காக்க வேண்டும் என்பது தான் துணை ஜனாதிபதி பேச்சின் சாராம்சம், இந்தியர்களின் நீங்கள் வங்காள மொழி பேசுகிறவர் என்றால் வங்காள மொழியை காக்க வேண்டும், அதன் கலாச்சாரத்தை காக்க வேண்டும், தமிழ் மொழி பேசுகிறவர் அந்த மொழியை காப்பாற்ற வேண்டும்,இப்படியெல்லாம்அவரின் பேச்சு அர்த்தம் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பெருச்சாளிகளுக்கு எப்போதும் பூனைகளை பற்றிய கவலை தான். எந்த பூனையும் வெளிவரவில்லை,எந்த பூக்களும் மலரவில்லை;ஆனால்,பெருச்சாளிகள் இங்கையே தான் இருக்கிறது.

கடைசியாக பரமக்குடியில் இருந்து சீனிவாசன் என்கிற அனுப்பிய கேள்வி,உங்கள் வலைத்தளத்திற்கு உண்மையில் அத்தனை வரவேற்பு இருக்கிறதா? உங்களுக்கும் வாசகர்கள் பதில் எழுதச் சொல்லி கேள்விகளை அனுப்புவார்களா?

அதான் இல்லை! வாக்காளர்கள் ஒவ்வொருவரும் நடக்கும் அத்தனை அரசியல் நிகழ்வுகளையும் ஒட்டி தங்களுக்குள் இப்படியான கேள்விகளை எழுப்ப வேண்டும், அப்படி உங்களுக்குள் கேள்விகள் எழும் பொழுது, பதில்கள் தானாக வரும், அந்த பதில்களில் ஒரு தெளிவும் உண்மையும் இருக்கும், அது காலத்திற்கு தகுந்த சரியான முடிவுகளை உங்களை எடுக்கச் செய்யும்.

உங்கள் யாருக்கும் ஏதும் கேள்விகள் இருந்தால், நம் முகநூல் பக்கத்திற்கு அனுப்புங்கள், மின்னஞ்சல்கள் திறந்து வருடங்கள் ஆகிறது.

மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுதோ! அல்லது கோபம் கொப்பளிக்கும் பொழுதோ கேள்வியும் நானே பதிலும் நானே போன்ற பகுதியோடு வருகிறேன்.
அதுவரை அந்த கேள்வி அனுப்பிய வாசகர்களுக்கும் சில நடிகர்களுக்கும் இருக்கும் சம்மந்தத்தை கண்டுபிடியுங்கள் 😉

Error happened.
Exit mobile version