கதிர் விஜயம்

சமத்துவம் பேசும் சனாதனமும் சந்தர்ப்பவாதமும்

இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்த நொடியில் என் மனம் கவிஞரின் இந்த பாடல் வரிகளை அசைபோடுகிறது.

“ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்

தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்”

அறிஞர் அண்ணா  சனாதனத்தை ஆதரித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

“என்ன பிதற்றுகிறாய், பைத்தியம் போல” என்கிறீர்களா !

“ஒன்றே குலம் , ஒருவனே தேவன்” என்ற திருமந்திர சாரத்தை தனது கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக வைத்த அந்த அறிஞனை வேறு எப்படி சொல்ல முடியும் !

சமீப நாட்களாக சனாதனம் ஒழிக என்று சலசலப்புக் குரல்கள் கேட்கிறது.. யாவரும் அதை அறிவோம்..

சனாதனம் என்ற அந்த சமக்கிருத வார்த்தையை டெங்கு, மலேரியா, கொரோனா HIV வைரஸ்களைவிட கொடியது என்று கூறி, அதை ஒழித்தே ஆக வேண்டும் என்று ஒரு கூட்டம் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தி.மு.க என்ற அந்த மாபெரும் மக்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அண்ணாவை, பெரியார் என அறியப்படும் ஈ.வெ.ராமாசாமி அவர்களது கட்சியின் மூத்த தளபதி அண்ணாவை  சனாதன தர்மத்தின் ஆதரவாளர் என்றால்  “யாரடா இந்த பைத்தியம்” என என்னைப்பார்த்து நிச்சயம் நீங்கள் கேட்பீர்கள் தான்.

வள்ளலாரைப்போல, விவேகானந்தரைப்போல, பாரதியாரைப்போல அண்ணாவும் சனாதன தர்மத்தின் உச்சங்களில் ஒருவர் தான்.

“எல்லை மீறிப் போற நீ” என எரிச்சல் அடையாமல் இந்த கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள்.

சனாதனம் என்ற சமக்கிருத வார்த்தைக்கு புராதனமான, எப்போதும் இருக்கிற (Eternal) என்று அர்த்தம். சனாதன தர்மம் என்பதை எப்போதைக்குமான தர்மம் எனலாம். மாறாத விதிமுறைகள் என்று புரிகிற மாதிரி அர்த்தம் செய்து கொள்ளலாம்.  “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதும் இந்த எப்போதைக்கும் மாறாத விதிமுறையில் ஒன்று தான். அப்படியானால் அண்ணா ஒரு சனாதன தர்ம ஆதரவாளர் தானே !

அதேபோல ஒரு கொள்கையை, கருத்துருவை சீர்மை செய்து செம்மை செய்யும் எவரையும் உச்சம் என்று சொல்லலாம். தவறில்லை. (ஐன்ஸ்டீனின் அறிவியல் கொள்கைகள் அறிவியலின் உச்சம் என்பதைப் போல) அவ்வகையில் இந்து மதம் என்று சொல்லப்படும் மதத்தொகுப்பில் இருக்கும் நல்லவைகளை எடுத்துக் கொண்டு, அல்லவைகளை ஒதுக்க சொன்ன வள்ளல் பெருந்தகையும். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற உயரிய சிந்தனையை உண்மை என ஊருக்கு உரைத்த அண்ணாவும் Literally சனாதன தர்மத்தின் உச்சங்கள் தான்.

அப்படியெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.. சனாதனம் என்றால் இந்து மதம்.. இந்து மதம் ஏற்றத் தாழ்வுகளை கற்பிக்கும் மதம்.. அது அழியத்தான் வேண்டும். என்று மறுபடியும் நீங்கள் இன்னொரு எதிர்க் கருத்தினை எடுத்து வரலாம். அப்படியானால் நீங்கள் இந்து மதம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் இந்து மதம் என்ற பெயரில் அழைக்கும் இந்த பிரம்மாண்ட மதம் நூற்றுக்கணக்கான இந்திய மதங்களின் கூட்டு. நம் தமிழக மக்களின் பல புராதன மதங்களும், நம்பிக்கை சார் விசயங்களும் இந்த இந்து என்ற வார்த்தையால் குறிப்பிடப்படும் இந்த மதத் தொகுப்பிற்குள் அடங்கி இருக்கிறது.

சிந்து நதியைக் கடந்து நம் நாட்டுக்குள் புகுந்த அரேபியர்களே முதன் முதலில் “இந்து” என்ற வார்த்தையில் இந்த தேசத்து மக்களைக் குறிப்பிட்டதாகக் கூறுகிறார்கள். அவர்களின் அர்த்தப்படி இந்து என்பது ஒரு புவியியல் பெயர். சிந்து நதி இருக்கும் இடத்தைச் சேர்ந்த மக்கள் என்ற அர்த்தத்தில் அப்படி கூறி இருக்கிறார்கள். (பாகிஸ்தானில் இந்துகுஷ் மலைத் தொடர் இருக்கிறதே அதன் பெயர் காரணம் தெரியுமா ?… படித்துப் பாருங்கள்.) எது எப்படியோ, இந்து என்ற வார்த்தை நம் தமிழக மக்களின் புராதன நம்பிக்கை சார்ந்த பழக்க வழக்கங்களுக்கும் , நம்பிக்கைகளுக்கும் சேர்த்து பொதுவான பெயராகவே இப்போதைய காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

திராவிடம் என்ற சமக்கிருத வார்த்தை தமிழர்களைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தையாகிப் போனதைப் போலவே, “இந்து” என்ற அரேபியர்கள் கொடுத்த வார்த்தையும் காலப்போக்கில் நம் நாட்டின் அனைத்து சமய நம்பிக்கைகளுக்கும் பொதுவான ஒரு பெயராக மாறி நிற்கிறது.

சனாதனம் என்பது சமக்கிருத வார்த்தையாகவே இருந்தாலும், அது குறிக்கும் அர்த்தம் உலக மக்கள் யாவருக்கும் பொதுவான ஒன்று. இசுலாமிய மதத்தைச் சார்ந்த ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு மேடையில் “சனாதன தர்மம் என்பது இறைவன் ஒருவனே” எனக் கூறுகிறது, எங்கள் மதம் கூறுவதும், அதுவும் பொதுவாக இருக்கிறது ஆகவே நானும் அதை ஆதரிக்கிறேன் என்கிறார்.

சனாதனம் என்பது  இந்து மதத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு வழக்கு சொல்லாக மாறிவிட்டிருக்கிறது, இந்து மதம் என்பது இந்தியாவின் பூர்வீக மதங்களான சைவம், வைணவம், சாக்தம், கானபத்யம், கௌமாரம், தமிழக மக்களின் பூர்வீக நம்பிக்கைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆக நாம் எதிர்க்க வேண்டியது சனாதனத்தை அல்ல என்பது தெளிவு.

ஒரு மொழியில் கீழ்த்தரமான கருத்துக்களைப் பரப்பும் புத்தகங்கள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக, அந்த மொழியையே முற்றும் முழுதாக எதிர்ப்பது முட்டாள் தனம், மனுஸ்மிருதி போன்ற சமூக நீதிக்கு எதிரான புத்தகங்கள் இருப்பதாக சொல்லப்படும் அதே சமக்கிருத மொழியில் நல்ல நூல்களும் உண்டு, அறிவியல், கணித நூல்கள் கூட இருக்கின்றன. திராவிடம் என்பதே சமக்கிருத வார்த்தை தானே ! ஆங்கிலேயன் வாயிலிருந்து வந்ததால் அந்த ஒரு வார்த்தை மட்டும் ஓ.கே என்று சொல்லிக்கொள்வீர்களா !

நம் தமிழ் மொழியிலும் கூட புத்தகங்கள் என்ற பெயரில் நிறைய குப்பைகளும் புழக்கத்தில் இருக்கின்றன, எதிர்காலத்தில் அந்த குப்பை புத்தகங்கள் எல்லாவற்றையும் மட்டும்..  படிக்கும் யாரோ ஒரு தமிழறிந்த வேற்று மொழிக்காரர்  ஒருவர்,  தமிழ் மொழியை பழிக்கிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.. அவருக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்.

அப்படியானால் நாம் எதைத் தான் எதிர்ப்பது ? என்கிறீர்களா !

சமத்துவத்தை போற்றுவோம், சமூக நீதியைக் காப்போம்.

Error happened.
Exit mobile version