மழை நின்ற பின்னும் தூறல் போல விஜய் பதவியேற்ற பொழுது இருந்த சத்தமும் சலசலப்பும் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. முன்னாடி திரும்பினா விஜய், பின்னாடி வந்தா விஜய். சமையல்குறிப்பு எழுதிக்கொண்டிருந்த பக்கங்கள், தினசரி வீட்டு வேலைகளை பதிவு செய்து கொண்டிருந்த பக்கங்கள், நகைச்சுவை பதிவுகள் போட்டு கொண்டிருந்த பக்கங்கள், ஏன்! 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான பதிவுகளை இடும் பக்கங்கள் கூட விஜய்! விஜய்! என்று ஏதேதோ பதிவேற்றி அரசியல் பேசுவதாக பெருமைப்பட்டு கொள்கிறார்கள். அரசியலை விஜய் கவனிக்க வைத்ததாக சொல்கிறார்கள். விஜய்யை கவனிப்பது அரசியலை கவனிப்பதாகாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திராவிட கட்சிகளின் நிலையும் மாற்று அரசியலும்
அநேகமான சாமானிய வாக்காளர்கள், இரண்டு திராவிட கட்சிகளின் முடிவிற்கு பின் தான் தமிழகம் உருப்படும் என்று பல சந்தர்ப்பங்களில் எண்ணியிருக்கக் கூடும். அப்படியொரு வீழ்ச்சியின் தொடக்கத்தில் தான் நாம் இருக்கிறோமா? அந்தக் கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ தீர்க்கமான பதிலை எழுத முடியவில்லை. இதற்கு முன்னரும் திமுகவும் அதிமுகவும் வேறு வேறு காலகட்டங்களில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. திமுகவிற்கு அப்படி மீண்டு எழுவது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால், முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலையில் தமிழகம் இருக்கிறது. இதற்கு முன் இந்த இரண்டு கட்சிகள் மீண்டு வந்ததற்கு காரணம், இந்த இரண்டு கட்சிகளுக்கு நிகரான சரியான மாற்று இல்லாமல் இருந்தது தான்.
இந்த முறை விஜய் வந்து இருக்கிறார். களம் அவர் சொல்லிக்கொண்டிருந்தது போலவே மற்றொன்று த.வெ.க. – தி.மு.க. என்று மாறிக்கொண்டிருக்கிறது. அதிமுகவிற்கு முடிவுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு திராவிட கட்சிகளும் வீழ்ந்து தமிழக அரசியலில் ஒரு புதுமை நிகழ வேண்டும் என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், அதிமுகவின் இத்தகைய வீழ்ச்சி நெருடலாக இருக்கிறது. அதிமுகவில் நடக்கும் குழப்பங்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள பெரும் பிழைகளைக் கண்ணாடியில் காட்டுவது போல நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.
அதிமுகவின் வீழ்ச்சியும் தலைமையின் பிடிவாதமும்
இங்கே எல்லோரும் மாற்றத்தை தேடுகிறார்கள். ஆனால், மாற்றத்திற்கு யாருமே தயாராக இல்லை. காசு கொடுத்து தான் எடப்பாடியார் இந்த பதவிக்கு வந்தார் என்கிற விமர்சனங்களை மறுத்து அவரை காமராஜர் கக்கன் என்றெல்லாம் நாம் நிறுவ முயற்சிக்கவில்லை. ஆனால், காசே கொடுத்தாலும் கூட ஒருவர் திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஆக முடியாது. அதிமுக போன்ற கட்சியில், இன்னமும் எடப்பாடி பின்னர் யாரோ ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். அப்படியொரு கட்சி, இப்போதும் நிலையான ஒரு பெரிய படைபலமும் பணபலமும் கொண்ட கட்சி சிதறிக்கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?
எடப்பாடியாரின் பிடிவாதம் என்பார்கள் சிலர். கொஞ்சம் வேறு கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள், ஜெயலலிதா இருந்த பொழுது அவர் எடுப்பது தான் முடிவு. பணபலம் படைபலம் என்ன இருந்தாலும் அவர் முடிவுக்கு மாறாக யாரும் நின்றதில்லை, அவரை பிடிவாதக்காரர் என்றும் யாரும் விமர்சித்ததில்லை. இந்த வருட ஐ.பி.எல். தொடரில் ரோஹித், பும்ரா, சூர்யகுமாரையெல்லாம் விட்டுவிட்டு குஜராத் அணியில் இருந்து ஹர்திக்கை கூட்டி வந்து அணித்தலைவர் பதவி கொடுத்த புகைச்சல் தான் அந்த அணியின் தோல்விக்குக் காரணம் என்று பரவலாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதில் எது உண்மையோ தெரியாது. அதிமுக சிதறிக்கிடப்பதற்கும் இன்னமும் சிதறிக்கொண்டிருப்பதற்கும் அது தான் காரணம். அம்மா இருந்த பொழுது சமத்து புள்ளையாக முதல்வர் பதவியில் இருந்து சுகம் கண்ட ஓபிஎஸ்; அம்மா மறைவிற்குப் பின் சின்னம்மா அவதாரம் எடுத்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர் தினகரன். இதற்கிடையில் இடையில் தீபா கொஞ்ச நாள் என்று, வடிவேல் நகைச்சுவையில் வரும் வசனம் போல் ஆள் இல்லாத சொத்தை ஆட்டைய போட்டுடலாம்ன்னு பாத்தா எடப்பாடியார் வந்து இடம் போட்டு உட்கார்ந்துகொண்டார் என்கிற ஏக்கம்.
கட்சி அரசியல்: தொண்டர்களும் தலைமைத்துவமும்
அதோடு ஏதோ வகையில் அடிமைகளாய் இருக்க ஒரு மன்னனை தேடுகிறோம். அந்த மன்னனிடம் ஒரு கவர்ச்சியை தேடுகிறோம். மன்னனுக்கு வாரிசு இருந்தால் அப்படியே ஏற்றுக்கொள்வதும், இல்லாது போனால் ஒவ்வொருவரும் மன்னனாக அடித்துக்கொள்வது தான் எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. ‘கட்சிகள்’ என்று நாம் எழுதும் பொழுது, நீங்கள் ஆம்! எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று நினைப்பீர்கள். ஆனால், ஒரு நாளும் அந்த எல்லோரும் என்பதில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை உணரமாட்டீர்கள். அது தான் இங்கே சிக்கல். இது தான் வாரிசு அரசியல் கட்சிகளுக்கும் மட்டும் இங்கே ஒரு பிடிப்பை தருகிறது.
தேசிய அளவில் கொள்கை அளவில் இணைக்கப்பட்டிருக்கும் கட்சியாக நாம் பாஜகவையும் கம்யூனிஸ்ட்டையும் மட்டுமே பார்க்கிறோம். அதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் தேர்தல் அரசியல் அணுகுமுறை மாறுபடுகிறது. காங்கிரசைப் பொறுத்தவரையில் அவர்களுடைய இன்றைய கொள்கை என்னவென்று அவர்களுக்கே தெரியாது. தேசிய எண்ணங்களுக்கு மாறுபட்ட கொள்கை கொண்டவர்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சியின் தலைவர் கார்கேவாக இருந்தாலும் ராகுல் தான் எங்கு பிரதானப்படுத்தப்படுகிறார். ராகுல் அல்லாத யாரையும் நீங்கள் அங்கே பிரதமர் வேட்பாளராக யோசிக்க முடியாது. அப்படி யோசித்தால் ஏற்கனவே லட்சம் கோஷ்டி பூசல்கள் இருக்கும் காங்கிரஸில் இன்னும் லட்சம் பூசல்கள் உருவாகும். இதையெல்லாம் கட்சிகளின் பிழை என்று நாம் கருதவில்லை. சமூகத்தின் பிழையாக என்று தான் பார்க்கிறோம்.
உங்களையும் என்னையும் போன்றவர்கள் தான் திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். கீழே இருப்பவர்கள் எதை கேள்வி கேட்கிறார்கள், எதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும் கூட தலைமையளவில் மாற்றங்களைக் கொண்டு வரும். அதே வேளையில் கீழே இரைச்சல்கள் அதிகமாக இருக்க கூடாது, நீ நான் என்று அடித்துக் கொள்ளக் கூடாது. திமுகவைப் பொறுத்தவரையில் கலைஞரின் குடும்பம் தலைமை பொறுப்பில் இருக்கும் வரை கீழே உள்ளவர்கள் எதற்காகவும் அடித்துக்கொள்ள மாட்டார்கள். மேலே நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், மாவட்டம் வட்டம் பஞ்சாயத் எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இருப்பார்கள். வாரிசு அரசியலை நோக்கி கேள்வி கேட்டால் வரும் குழப்பங்கள் அவர்கள் எடுக்கும் ஒப்பந்த வேலைகளில் மண் அள்ளி போடலாம் என்று அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.
இங்கே என்ன நடக்கிறது? கவர்ச்சியான தலைவன் இல்லை என்றால் தலைமை சொல்வதை கேட்கமாட்டோம்? கவர்ச்சியான தலைமையோ வாரிசு அரசியலோ மேலே தொடர்கிறது என்றால், அதை கேள்வி கேட்கமாட்டோம். கேட்டால் கீழே அதே வாரிசு அரசியலைச் செய்ய முடியாது என்கிற அச்சம். நம் சமூகம் இந்தப் பிழைகளைத் திருத்திக்கொள்ளவே இல்லை. அதன் பொருட்டு நான் தற்போதைய சூழலை நான் நினைத்த மாதிரியான திராவிட கட்சிகளின் வீழ்ச்சியாக நான் பார்க்கவில்லை. ஒரு பக்கம் முன்னாள் அதிமுககாரர்கள் எல்லாம் திமுகவில் த.வெ.க-விலும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு அவர்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் இல்லாத தலைமை வேண்டும் அவ்வளவே! நல்லது செய்ய வாய்ப்பு தேடி யாரும் இங்கே கட்சி மாறுவதில்லை.
த.வெ.க-வின் வருகையும் பழைய அரசியல்வாதிகளின் தஞ்சமும்
இப்படியொரு சூழலில், முன்னாள் திமுக அதிமுக உறுப்பினர்கள் எல்லாம் சேர்த்துக்கொண்டு விஜய் இப்போது பலமாக இருக்கிறார் என்றாலும் ஐந்தாண்டுகளுக்கு பின் விஜய்யின் கட்சி என்னவாக வளர்ந்திருக்கும், எப்படியானதாக இருக்கும் என்பதை விஜய்யும் விஜய் சார்ந்தவர்களும் அவர்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். அந்த விழிப்புணர்வு விஜய்யிடம் இருக்குமா தெரியவில்லை, நிச்சயமாக அவரை பின்பற்றுபவர்களிடம் இல்லை. மாற்றத்தின் முதல் படியான ஆட்சி மாற்றத்தில் மட்டும் அடியெடுத்து வைத்து அங்கேயே தான் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சென்னை அணியை சூதாட்ட புகாருக்காக தடை செய்திருந்த சமயத்தில் சென்னை அணி வீரர்கள் வேறு அணிகளுக்காக விளையாடினார்கள் அது போல ஒரு மாற்றம் தான் இப்பொழுது நடந்திருக்கிறது.
2017இல் ரஜினிகாந்த் அரசியல் வருகை பற்றி அறிவிக்க இருந்த சமயத்தில், நான் கட்சி ஆரம்பித்தால், மற்ற கட்சியில் ஊழல் செய்தவர்கள் வந்து சேர வாய்ப்பு இருக்கிறது அவர்களை தடுக்க முடியாது. ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு அவர்களை நான் சேர்த்துக்கொண்டால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் அது தான் அரசியலுக்கு வர எனக்கு இருக்கும் தயக்கம் என்று பேசியிருந்தார். இந்த சமூகத்தில் அது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
கவர்ச்சியும் ஏதோ ஒரு காரணத்தினால் கிடைக்கப்பெற்ற மக்கள் வரவேற்பும் இருக்கின்ற ஒருவரிடம் இருந்தால் தான் அரசியலில் இருக்க முடியும் என்று பழைய அரசியல்வாதிகள் பலர் விஜய்யிடம் தஞ்சமடைகிறார்கள். அவர்களின் பணபலம் படைபலம் மீறி சாமானியர்களுக்கு எப்போதும்போல் அரசியல் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. இதை எப்படி அரசியல் மாற்றம் என்று எடுத்துக்கொள்ள முடியும்.
கட்சியின் அடையாளமும் கொள்கை முதிர்ச்சியும்
அதோடு த.வெ.க. என்கிற கட்சியின் அடையாளம் என்ன? விஜய் என்கிற ஒரு நபரை தவிர வேறு அடையாளத்தை யாராலும் சொல்ல முடியவில்லையென்றால் அதுவும் கூட மாற்றத்தை நோக்கிய நம் பாதையில் இருக்கும் பாதகம் தான். சில முரணான கருத்துக்கள் இருந்தாலும், நாம் தமிழர் கட்சியில் துரைமுருகன் தவிர்த்து பலர் ஆழமான அரசியல் பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் நம் மாநிலத்தில் திமுகவைச் சார்ந்து கம்யூனிஸ்ட்கள் இருந்தாலும் உழைப்பவர்களுக்காகப் பேசுகிற கட்சி என்கிற அடையாளத்தை அவர்கள் கொண்டு இருக்கிறார்கள். நேற்று வரை திமுகவிற்கு மாற்று என்கிற அடையாளத்தை அதிமுக கொண்டிருந்தது. த.வெ.க-வின் அடையாளம் என்ன, இதுவரையிலும் முதிர்ச்சியற்ற அரசியல் என்பதாகவே தான் இருக்கிறது. அதை எப்படி மாற்றப்போகிறோம் என்பதை விஜய்யை பின்பற்றுகிறவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஆர்ப்பரிப்பும் நிதர்சனமும்
ஆனால், என்ன நடந்துகொண்டிருக்கிறது? சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவதும் எவராலே? எல்லாம் எங்கள் விஜயாலே! எல்லாம் எங்கள் விஜயாலே! என்று பாட்டு பாடிக்கொண்டிருக்கிறீர்கள். சில நாளில் சில உத்தரவுகளில் எதுவும் மாறிவிடாது, மாற்ற முடியாது என்பதை விஜய் ஆதரவாளர்கள் தவிர்த்து எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
போதைப் புழக்கத்தைத் தடுக்க தனிப்படை, பிரத்யேக காவல் நிலையம் அமைக்க ஆணை என்றதும் ஆர்ப்பரிக்கிறீர்கள். 100 காவலர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே 200 பேரின் பணியை செய்ய வேண்டியதாக இருக்கும் சூழலில் அதே நூறு பேரை வைத்துக் கொண்டு ஒரு ஆணையில் என்ன சாதித்துவிட முடியும்? காவலர்களின் பணிச்சுமை என்பது போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் போன்ற மற்றுமொரு தொடர்கதை.
டாஸ்மாக் கடைகளை இப்படி அவ்வப்பொழுது மூடும் நிகழ்வுகள் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. விஜய் வருவதற்கு முன்னமே கணக்கு எடுக்கப்பட்ட கடைகள் தான் மூடப்பட்டு இருக்கிறது. சில நேரங்களில் அதீத ஆர்ப்பரிப்பு, தேவையற்ற ஆரவாரம் எதிர்வினைகளை வெறுப்புகளையும் தான் சம்பாதித்துத் தரும். விஜய்க்கு நீங்கள் அதை தான் செய்துகொண்டு இருக்கிறீர்கள். எடப்பாடி, அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்களை ஒப்பிடும் பொழுது சாதாரண தொண்டனாக இருந்து உயர்மட்டத்திற்கு வந்தேன், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்து அரசியலுக்கு வந்தேன் என்கிற வெற்றி கதைகளை உங்கள் தலைவர் கொண்டிருக்கவில்லை. சினிமா வாரிசாக இருந்ததால் தான் சினிமாவிற்கு வரமுடிந்தது, அதன் பின் ஒரு பிம்பத்தை எப்படியெல்லாம் படிப்படியாக கட்டமைத்தார்கள், முதல்வர் ஆகும் வரை அதற்கு எவ்வளவு செலவழித்தார்கள் என்பதெல்லாம் எல்லோரும் அறிந்தது தான். சமூகம் இருக்கின்ற சூழலுக்கு அப்படித் தான் அரசியலுக்கு வந்து குறிப்பிட்ட வெற்றி அடைய முடியும் என்பது புரிகிறது. நீங்கள் அதை வைத்துக்கொண்டு செய்யும் ஆர்ப்பரிப்புகள் அனாவசியமானது, அது எதிர்மறை விளைவுகளைத்தான் உங்கள் கட்சிக்கு கொண்டு வரும் என்கிறோம்.
முடிவுரை: உண்மையான அரசியல் மாற்றம்
விஜய் நிற்பதற்கு நடப்பதற்கெல்லாம் பயர் விட்டுக்கொண்டிருக்காமல் விஜய் கேட்ட அவகாசத்தை விஜய்யை பின்பற்றுகிறவர்களும் கொடுக்க வேண்டும். இந்த அரசு கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளட்டும், அதுவரை விமர்சனங்களை மட்டுமில்லை ஆர்ப்பரிப்புகளையும் ஆரவாரங்களையும் கூட அடக்கி வையுங்கள். இன்னும் தெளிவாக அரசியலை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எல்லாம் அரசியலை ஆழமாக புரிந்துகொண்டு எப்படி செயல்படுகிறீர்கள் என்ன மாதிரி எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதையும் சேர்ந்தது தான் அரசியல் மாற்றம். அது தான் உங்கள் கட்சியின் அடையாளமாகவும் ஆகும்.
