பல சமயங்களில் நம் எண்ண ஓட்டங்களை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை; அது எங்கிருந்து வருகிறது என்பதும் தெரிவதில்லை. ஆன்மீகம் தொடர்பாக நாம் எழுத நினைக்கும் சில கட்டுரைகளை இராவண அரசியலின் பகுதியாக வைக்கலாமா என்று தோன்றும். இராவண அரசியல் தொடரில் சில கட்டுரைகள் எழுதும் பொழுது அதை மதம் சார்ந்தது ஆன்மீகம் என்கிற இந்த தொடரில் வைக்கலாம் என்று தோன்றும். மனதில் அந்தளவிற்கு ஆன்மீகமும் அரசியலும் அப்படிப் பிணைந்துவிட்டதோ என்னவோ!
ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்கிறவர் பிறப்பதற்கு நூறு இருநூறு வருடங்களுக்கு முன்னதாகவே மதுரை-வடக்கு மாசி வீதியில் ராமாயணச் சாவடி என்று ஒன்று நிறுவப்படுகிறது. அதற்கு முன்பு, சிலப்பதிகார காலத்திற்கும் முன்பிருந்தே இந்தக் ராமாயணக் கதையைத் திருவிழாக்களில் கூத்துகளில் சொல்லிவந்த வழக்கம் பெரியோர்களின் மண்ணான தமிழகத்தில் இருந்து வந்து இருக்கிறது என்பது சிலப்பதிகாரம் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
இந்த ராமாயணச் சாவடியும் ராமாயணக் கதைகள் சொல்லவும் மக்கள் ஒன்று கூடி சில முடிவுகள் எடுக்கவும் நிறுவப்பட்ட இடமாகத் தான் ஈ.வே.ரா. பிறப்பதற்கு நூறு இருநூறு வருடங்களுக்கு முன்னதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஈ.வே.ரா. பிறந்து ஒரு நூறு வருடத்திற்குப் பின், ஒரு மாலை நேரத்தில், ஆறரை மணி வாக்கில், ராமாயணச் சாவடிக்கு எதிரில் வீதியின் ஓரமாக ஓரிடத்தில் அமர்ந்து சசி ஆண்ட்டி அந்த நான்கு குழந்தைகளுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தார். இந்த முறை அது ராமாயணக் கதையாக இல்லை. விநாயகர் எப்படி பிறந்தார் என்கிற கதை.
சித்திரைத் திருவிழா – அம்மா, சசி ஆண்ட்டி, இவர்களோடு என்னையும் சேர்த்து நான்கு குழந்தைகள். நாங்கள் சாமி ஊர்வலம் காணத் தெரிவு செய்து வைத்திருந்த இடம் தான் இந்த ராமாயணச் சாவடி. (நீ குழந்தையா? என்று கேட்கக் கூடாது, குழந்தையாக இருந்த பொழுது குழந்தை).
அந்த நான்கு குழந்தைகளுக்கும் என்ன திருவிழா என்று தெரியாது, என்ன சாமி என்று தெரியாது. ஊர்வலம் ராமாயணச் சாவடியை நெருங்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதும் தெரியாது. அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தது திருவிழாக் கூட்டத்திற்குச் சென்றால் ஜவ்வு மிட்டாய் சாப்பிடலாம் என்பது மட்டும் தான்.
ஊர்வலத்தில், முதலில் மாடு வரும், பின்னர் ஒட்டகம் வரும், அதற்குப் பின்பு சாமி எப்போது வரும் என்பது, சாமிக்குக் கூடத் தெரியாது. மாடு ஒட்டகம் எல்லாம் சாமி ஊர்வலத்தில் வருவது என்ன நடைமுறையோ தெரியாது. திருவிழா ஊர்வலங்களில் இவையெல்லாம் குழந்தைகளுக்கு ஒரு குதூகலத்தைத் தரக்கூடியவை.
சாமி எப்ப வரும் என்கிற கேள்விகளைத் தவிர்ப்பதற்காக விநாயகர் பிறந்த கதை ஒரு நாள், முருகன் பிறந்த கதை ஒரு நாள் என்று சசி ஆண்ட்டி எங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். இந்த ஊர்வலத்தில், மாடு ஒட்டகம் யானை எல்லாம் வந்து கடந்த பின் முதலாவதாக விநாயகர் வருவார், அடுத்து முருகன் வருவார். இவர்களை அந்த சமயத்தில் காண்கிற பொழுது சசி ஆண்ட்டி சொன்ன கதைகள் ஓடிக்கொண்டிருக்கும்.
விநாயகர் முருகன் எல்லாம் வந்து கடந்த பின் சிவன் வருகிறார். மதுரையின் சொக்கநாதராக வருகிறார். அவருடன் ஒரு அம்மன் இருக்கிறார். பின்னே மீனாட்சி அம்மன் என்கிற பெயரில் தனியே ஒரு அம்மன் வருகிறார்.
என்னடா இது! கணவன் மனைவியோடு கோவில் தெருவுக்கு, நான்கு நல்லது கெட்டதுக்குச் செல்வது தானே உலக வழக்கம்! இங்கு மீனாட்சி தனியாக வருகிறார். அப்ப சொக்கரோடு வருவது யார்?
ஏண்டா குழந்தையா இருக்கும் பொழுதே உனக்கு இந்த சந்தேகமா என்று கேட்காதீர்கள். இந்த சந்தேகம் மேலே எழுதியது போலவே எழுந்ததா என்றால் இல்லை. விநாயகர் எப்படி பிறந்தார்; முருகன் எப்படி பிறந்தார் என்கிற கதைகளில், சிவன் அப்பா பார்வதி அம்மா. சின்னம்மா சீன்லேயே இல்லை. மதுரையில் சொக்கநாதர் தான் சிவன்; மீனாட்சி தான் பார்வதி. மீனாட்சி தனியாக வருகிறார் என்றால்? சிவனுடன் இருப்பது யார் என்கிற கேள்வி எந்தக் குழந்தைக்கும் எழும் தானே!
அம்மாவிடம் கேட்டதற்கு அவங்க பிரியாவிடை என்றார்கள். சாலையில் கார் வண்டி போனாலே, “இதென்ன? இது ஏன் இப்படிப் போகுது ?அது ஏன் இப்படி இருக்கு?” என்று கேட்கிற வயதில்; வெறும் பெயரை மட்டும் கேட்டுக்கொண்டு மனம் எப்படி அடங்கியிருக்கும். “அவங்க ஏன் சிவன் கூட இருக்காங்க?” அடுத்த கேள்வியைக் கேட்டு வைத்தேன்.
யாரோ ஒருத்தர், தன் மகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி சிவனிடம் விட்டுவிட்டுச் சென்றார்களாம் அவர்கள் சிவனை விட்டுவிட்டுப் பிரியாமல் இருப்பதால் பிரியாவிடையாம். இது தான் இந்த அம்மாக்கள் எங்களுக்குச் சொல்லி வைத்த கதை. ஆனால், ஊருக்குள் அது சிவனின் இன்னொரு மனைவி என்று பேசிக்கொண்டார்கள், திருக்கல்யாண நிகழ்வு அன்று இரண்டு பேருக்கும் தாலி கட்டும் வைபவம் நடக்கிறது. திருக்கல்யாணத்தன்று மாலை ஊர்வலத்தில், அம்மன் பூப் பல்லக்கில் ஊர்வலம் வருவார். அம்மனை ஒரு பக்கமாகத் திருப்பி வைத்திருப்பார்கள் அதற்கும் இந்த மக்கள், கல்யாணத்தன்றே பிரியாவிடையோடு இருப்பதால், அம்மன் கோபமாக திரும்பியிருக்கிறார் என்று கதை கட்டியிருந்தார்கள்.
உலகம் தான் சிவனுக்கு ரெண்டு மனைவி பெருமாளுக்கு ரெண்டு மனைவி என்று கதை சொல்லி வைத்திருக்கிறதே அதனால் இந்தப் பிரியாவிடை இரண்டாவது மனைவி தான் என்று தீர்மானித்துக்கொண்டு நகர்ந்துவிட்டேன்.
காலம் சுழல நமக்குப் பெரியார் மண் கூட்டத்தின் ஆதிக்கத்தால் மனமாற்றம் செய்யப்பட்டவர்களின் ஆதிக்கத்திற்குள் என் மனமும் லயிக்க ஆரம்பிக்க, கேள்வி கேட்டால் தான் அறிவாளி என்று பார்வதி ஒரு உருண்டை பிடித்து வைத்தார் அது தான் விநாயகர் என்று சசி ஆண்ட்டி சொன்ன பொழுது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நான், “இதுல எப்படிண்ணே லைட் எரியும்?” ரகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன்.
நான் எப்போதும் குறிப்பிடுவது போல், ராகவேந்திரர் பற்றித் தலைவர் நடித்த படத்தின் தாக்கம், கேள்வி கேட்கிறவன் புத்திசாலி இல்லை பதில் தேடுகிறவன் தான் புத்திசாலி என்று பதில்களைத் தேடலானேன். சிவன் பற்றிய புராணங்களில் இல்லாத பெயர்களில் எல்லாம் கூட எப்படி இத்தனை சிவாலயங்கள்? மதுரையில் மட்டும் ஒரு பத்து கி.மீ சுற்றளவிற்குள் நீங்கள் பழமையான மூன்று சிவாலயங்களையாவது கண்டுவிட முடியும்.எல்லாம் வேறு வேறு பெயர்களில் இருக்கும்.
இந்தப் பெயர்கள் எல்லாம் மனிதர்களாக இருந்து சிவகதி அடைந்தவர்கள் பெயரால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் தான் என்பதையும் நாம் திருவாசகம் தொடரிலோ மதம் சார்ந்ததில்லை ஆன்மீகத் தொடரிலோ குறிப்பிட்டு இருக்கிறோம்.
சிவாலயங்கள் சரி! மனிதர்களாக இருந்து சிவகதி அடைந்தவர்களின் பெயரால் எழுப்பப்பட்டது. மீனாட்சியே கூடப் பாண்டிய மன்னனான மலையத்துவச மன்னனின் மகள் மதுரையின் அரசி என்றெல்லாம் நமக்குத் தெரிகிறது. அவருடைய கணவர் தான் சொக்கநாதர். பிரியாவிடை பற்றி எதில் சொல்லப்பட்டு இருக்கிறது?எங்கு சொல்லப்பட்டு இருக்கிறது?
யாரு இந்த பிரியாவிடை என்கிற கேள்வி எனக்குள் மீண்டும் எழுந்தது. எல்லா சிவன் கோவில் திருவிழாக்களிலும் அம்மன் தனியாகத் தான் ஊர்வலம் வருகிறாரா? என்று தேடினால், இல்லை. பல ஊர்க் கோவில் திருவிழாக்களில் சிவன் பார்வதி முருகன் என்று குடும்ப சகிதமாக ஒரே ஒரு தேரில் தான் வருகிறார்கள்.மதுரையிலும் குட்டியாக ஒரு முருகன் சிவனுக்கும் அம்மனுக்கும் இடையில் இருக்கிறார்.
மற்ற ஊர்களில் , இந்த பிரியாவிடை கதை இல்லை, இரண்டாவது மனைவிச் சர்ச்சைகளும் இல்லை.
என்னடா இது என்று தேடினால், மீனாட்சி யாரு? மதுரையின் அரசி. சொக்கநாதரை மணமுடிக்கும் முன்னமே அவள் ராணி தான். எப்படி முதலமைச்சருக்கு என்று சில புரோட்டோகால்கள் (protocol) இருக்கிறதோ அதே மாதிரி நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு அப்போதே இருந்தே இருந்திருக்கிறது. அரசிக்குத் தரும் மரியாதை பரிவாரங்கள் எல்லாம் எப்படி எல்லார்க்கும் தர முடியும். நண்பா நண்பி எல்லாம் இல்லை கணவராகவே இருந்தாலும் புரோட்டோகால் தான் நீங்கள் தனியாக வாருங்கள் என்று சொக்கநாதரை மதுரை மக்கள் தான் தனியாக ஊர்வலம் வர வைத்திருக்கிறார்கள். (இதைப் படிக்கும் பொழுது நிகழ்கால அரசியல் மக்கள் மனதில் நிழலாடினால் நிர்வாகம் பொறுப்பல்ல.)
இன்னும் சில ஊர்களில், குடும்ப சகிதமாக ஒரு தேர் வந்தாலும், அம்மனுக்கென்று தனியாக ஒரு தேர் இழுக்கிறார்கள். காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் எல்லாம் அம்மனுக்கென்று பிரத்தியேகக் கலாச்சாரம் இருந்திருக்கும். ஒரு ஆரம்பம் இருந்திருக்கும். திருநெல்வேலியில், சிவனும் அம்மனும் தனித்தனிக் கோவில்களாக இருந்து சேர்க்கப்பட்டு இருக்கிறது.
எல்லாம் சரி! தனிக் கோவிலாக இருந்த இடங்களிலும் மதுரையில் அரசியாக இருந்ததால் மதுரை சுற்றிய கோவில்களிலும் அம்மனுக்குத் தனித்தேர் தனி மரியாதையைத் தருவதெல்லாம் சரி! அப்படியானாலும் கூடச் சிவன் அவர் வரும் தேரில் தனியாக மனைவியைப் பின் தொடர்ந்து வந்திருக்கலாமே கூட எதற்கு பிரியாவிடை? அல்லது அம்மன் தனியாக வந்தாலும் குடும்ப சகிதமாக வருவது போல் வரலாமே? யார் தான் இந்த பிரியாவிடை?!
நம்முடைய மறைநூல்கள் படி, சைவ ஆகமங்கள் படி, உருவ நிலையில் அதாவது தோன்றிய நிலையில் சிவம் (manifested form) எப்போதும் தனித்து இயங்கவே இயங்காது. சக்தி என்பது ஆற்றல் அது சிவனின் உருவ நிலை இல்லாமலும் இருக்கும். உருவம் கொண்ட சிவம் (manifested form) சக்தி இல்லாமல் இருக்காது. சிவாஜியும் சாவித்திரியும் சண்டை போடுவது உங்கள் நினைவிற்கு வரலாம்.உருவம் கொண்ட சிவம் இல்லாமல் சக்தி இருக்கும். சக்தி இல்லாமல் உருவம் கொண்ட சிவம் (manifested form) இயங்காது.
நீங்கள் சிந்தியுங்கள், அர்த்தநாரீஸ்வரர் என்கிறார்களே. நாம் ஒரு உடலை- உருவத்தைப் பார்க்கிறோம். ஆண் பாதி பெண் பாதி என்று இருக்கிறது. அதை நாம் ஏன்? பார்வதி தான் சிவனுக்குத் தன்னில் பாதியைத் தந்தார் என்று பேசுவதில்லை. சிவன் தான் தன்னில் பாதியைத் தந்தார் என்று பேசுகிறோம்? அப்படியே பாடப்புத்தகத்தைப் புரட்டினால், XX குரோமோசோம்கள் சேர்ந்தால் பெண் ஆகவும், XY குரோமோசோம்கள் சேர்ந்தால் ஆணாகவும் குழந்தை பிறக்கும் என்று இருக்கிறது. பெண்களுக்குள் ‘Y’ இல்லை ஆண்களுக்குள் ‘X’ இருக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தில் ஆற்றல் இருந்து கொண்டே தான் இருந்தது, சடங்கள் (matter) உருவாவதற்கு(before manifestation) முன்னமும் ஆற்றல் இருந்து கொண்டு தான் இருந்தது. (matter) மேட்டருக்குள் ஆற்றல் (energy) இருக்கும். ஆற்றலுக்குள் (energy) மேட்டர் இருக்காது.
இன்று குவாண்டம் பிசிக்ஸ் (quantum physics) பேசிக்கொண்டிருப்பதையெல்லாம் சிலையாக உருவகப்படுத்தி வைத்திருக்கும் நம் கலாச்சாரத்தை என்னவென்று சொல்வது.
அப்படியென்றால் சக்தி தான் பெரிதா அம்மன் தான் பெரியவரா என்பீர்கள் என்றால்,இல்லை. சிவன் உற்சவராக உருவம் கொண்டவராக பௌதீக உருவமாக மேட்டர்(matter) ஆக ஜடமாக இருக்கும் பொழுது தான் அங்கே இயங்கு சக்தியாக சக்தி இருக்கிறது இருக்க வேண்டி இருக்கிறது.
இதே சிவனை நாம் அருவுருவ நிலையில் லிங்க வடிவில் வழிபடுகிறோம், அதுவும் கூட ஆண் பெண் சேர்க்கையை காட்டும் உருவகம் தான். நம்முடைய சிற்றறிவால் புரிந்து கொள்ள முடியாத சிவனின் சொரூப நிலை(Absolute Reality) ஒன்று இருக்கிறது என்கிறது சைவம். அதற்குள் தான் சக்தியும் இருக்கிறது, அதைத்தான் பேரறிவு என்கிறார்கள், நடராஜராக உருவாக்கப்படுத்தியிருக்கும் அண்டத்தின் cosmic dance என்கிறார்கள். அது இல்லாமல் சக்தி இல்லை.அதற்குள் தான் சக்தி (energy) இருக்கிறது.
எது படைக்கப்படாததோ எது உருவாகாததோ அதுவே அழிவில்லாதது அதுவே தான் கடவுள் அதுவே தான் சிவனின் சொரூப நிலை என்கிறது நம் மறைநூல்கள். அழிவில்லாதது படைக்கப்படாதது ஆற்றல் தான்.இந்த ஆற்றல் இதற்குள் இருக்கிறது என்றால் தோன்றாத சிவத்திற்குள் இருக்கிறது.
சக்தியாக இருப்பது தனித்து இருக்கும் இயங்கும், உருவமான சிவமாக(matter) இருப்பதற்குள் சக்தி இல்லாமல் இருக்காது. அதன் பொருட்டு உருவமாக சிவன் இருக்கின்ற இடங்களில் எல்லாம் கூடவே உமா தேவியை வைத்தார்கள் நம்மவர்கள். அப்படிச் சிவனோடு இருக்கும் பார்வதியான உமா தேவி தான் பிரியாவிடை.பிரியா + விடை’ (பிரியாத சக்தி). சிவத்தின் கிரியா சக்தியே (Action Energy) பிரியாவிடையாகும்.
எப்படி ஒரு கலாச்சாரத்தில் நாம் வந்து பிறந்திருக்கிறோம் என்று எண்ணிப்பாருங்கள் !
நடராஜர் தனியாக ஆடும் இடங்களில் கூட ஒரு ஓரத்தில் சிவகாமி இருப்பார். நாம் ஆசைக்கு அழகுக்கு வைக்கும் நடராஜர்களைத் தான் தனித்து விடுகிறோம். ஒன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தையிடம் matter, energy, சக்தி, சிவம், ஜடம், ஆற்றல், குவாண்டம் பிசிக்ஸ் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் என்ன விளங்கும்?
முதலில் நாம் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரவேண்டும்? இல்லாதது எதுவோ அதுவே தான் சிவம் என்று சொல்ல இருக்கின்ற ஒன்றை வைத்து நீங்கள் குழந்தைகளுக்கு ஒரு அறிமுகம் தரவேண்டும். அப்படி நம்மவர்கள் செய்து வைத்த உருவம் தான் சிவன்-ஆண் சக்தி-பெண், அர்த்தநாரீஸ்வரர் ஆண்-பெண். சிவன் சக்தி இருவரும் சேர்ந்து தான் படைப்பு நிகழ்கிறது என்பதெல்லாம்.
அப்படியே நாம் கீதையைத் திறந்தால், இறைவன் நான் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அலியும் இல்லை என்கிறார். எதுவுமே இல்லை என்றால் எது தான் கடவுள் என்பதை அறிந்து கொள்ள நமக்கு ஒரு அறிமுகம் தேவை; திருவிழா தேவை; ராமாயணச் சாவடி தேவை; திருவிழாக்களுக்கும் கோவில்களுக்கும் அழைத்துச் செல்லும் அம்மக்கள் தேவை; கதை சொல்ல சசி ஆண்ட்டிகள் தேவை; அந்தக் கதைகளைக் கேள்விகேட்கச் செய்யும் பெரியார் கூட்டம் தேவை அந்தக் கேள்விகளைத் தாண்டிப் பதில்களைத் தேட ரஜினிகாந்த் போன்ற ஆன்மீகவாதிகள் தேவை. இப்படிக் கட்டுரைகள் எழுத நான் தேவை, கதிர்விஜயம் போன்ற தளம் தேவை. இதைப் படித்து எடுத்துச் சொல்ல நீங்கள் தேவை.
அப்புறம், இந்த மீனாட்சி பூப் பல்லக்கில் கோவமாக ஒன்றும் திரும்பியிருக்கவில்லை. பல்லக்கில் எப்போதும் பக்கவாட்டு பகுதி தான் திறந்திருக்கும், மக்களுக்கு முகம் தெரிய வேண்டி ஒரு பக்கமாக திருப்பி ஒரு பக்கம் கண்ணாடி வைத்து இருப்பார்கள் என்பது நம் எண்ணம்.
