கதிர் விஜயம்

அண்ணாமலை-விஜய்; இந்திய அரசு ஒன்றிய அரசு; யார் சரி! எது சரி!

வெங்காயம், வெண்ணெய் இதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான்! இவையெல்லாம் வேண்டும் என்று ஒரு கடையில் நீங்கள் சென்று கேட்கும் பொழுது அதில் எந்த பிழையும் இருப்பதில்லை. கடைக்காரர் காசை வாங்கிக்கொண்டு உங்களுக்குக் கொடுக்கப் போகிறார். அதே கடைக்காரரை நீங்கள் கோபமாக முறைத்து, “அடே! வெண்ணெய் என்ன வெங்காயத்துக்குக் கடை வைத்திருக்கிறாய்?” என்று கேளுங்கள் காசு வாங்காமலே உங்களுக்கு நன்றாகக் கொடுத்து அனுப்புவார்.

வெங்காயம், வெண்ணெய், மயிர் இந்த வார்த்தைகளெல்லாம் யாரையும் திட்ட வேண்டும் என்று உருவானது அல்ல. முடி’ என்பது தலை உச்சியை அல்லது கொண்டையைக் குறிக்கும் சொல் (கிரீடம்/சிகரம்).மயிர் என்பதை கெட்ட வார்த்தை ஆக்கிவிட்டதால்  உடம்பில்  வளரும் மயிரை முடி என்று சுட்டிப் பழகிவிட்டோம்.

வார்த்தைகள் நம்முடைய பயன்பாட்டைப் பொறுத்து அர்த்தம் பெற்றுக்கொள்கிறது. ஒழுக்கம் என்கிற வார்த்தைக்கு நாம் புனிதத் தன்மையை அளித்துவிட்டோம். ஒருவர் தினமும் சரியான நேரத்திற்கு எழுந்து சரியான நேரத்திற்கு மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்றால் அதிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதையும் ஒழுக்கம் எனலாம். கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு தெரியும் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் பொழுது வர்ணனையில் டிசிப்ளின் (Disciplined line and length) என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்கள். சரியான ஒழுங்கில் பந்துவீசுவதை குறிக்க அப்படி சொல்வார்கள்.

இப்படியாக வார்த்தைகள் என்ன அர்த்தத்தில்; என்ன நோக்கத்தில் சொல்லப்படுகிறது என்பதை பொறுத்து தான் அர்த்தம் பெறுகிறது. அதுபோலவே தான் இந்த ‘ஒன்றிய அரசு’ என்கிற சொல்லாடலும்.

இந்த விவாதம் எழுந்த பொழுதே மத்திய அரசை, இந்திய அரசு, மத்திய அரசு, பொது அரசு என்று எப்படியும் சொல்லலாம். ஆனால், இந்தியாவே ஒரு நாடு கிடையாது ஒன்றியம் தான் என்னும் கோஷங்களையும் எண்ணங்களையும் தான் எதிர்க்க வேண்டும் என்று எழுதியிருந்தோம்.

ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்கிற முனைப்பில் தேசிய கட்சிகளுக்கு எதிராக மக்களின் உணர்வைத் தூண்ட மாநில கட்சிகள் எடுத்து வைக்க தொடங்கிய முழக்கங்களின் நீட்சியாகவே தான் கடந்த திமுக ஆட்சியில் அவர்கள் ஒன்றிய அரசு என்று சுட்டி வந்தார்கள். அவர்கள் அப்படி சுட்டுவதற்கு முன்னும் பின்னும் கூட ஆங்கில நாளேடுகளில் யூனியன் கவர்மெண்ட் (Union goverment) என்கிற வார்த்தை பிரயோகிக்கப்பட்டு இருக்கிறது. நாளேடுகளில் மட்டும் இல்லை  அரசு கோப்புகளிலும் கூட யூனியன் கவர்மெண்ட் என்கிற வார்த்தை பயன்படுத்திப் பார்த்து இருக்கிறோம்.

ஆனால், கடந்த ஆட்சியில் திமுக ஒன்றிய அரசு என்று சொன்னபொழுது சலசலப்பு ஏற்பட காரணம், அவர்களின் நோக்கம். ஆதி தொட்டே அவர்கள் எப்போதெல்லாம் அவர்களுக்கு சாதகமான ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் இல்லையோ அப்போதெல்லாம், மத்திய அரசுக்கு எதிராக மாநில மக்களின் உணர்வைத் திரட்ட இந்தியா நம்முடைய நாடு இல்லை என்பது போன்ற உணர்வை விதைத்து இருக்கிறார்கள். அதையே தான் கடந்த ஆட்சியிலும் செய்தார்கள். ஒரு முதல்வராக இருந்துகொண்டு ஸ்டாலின் இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தினம் என்று குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார். செஸ் போட்டி சென்னையில் நடந்த பொழுது (james vasanthan) யேம்சு வசுந்தனைக் கொண்டு இந்திய ஒன்றிய பண் என்று சொல்ல வைத்தார்கள். நிர்வாக ரீதியில் மாநில பிரதிநிதிகளை கொண்ட ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதில் எந்த பிழையும் இல்லை. இவர்கள் இது நாடே இல்லை என்கிற விஷ உணர்வை வளர்க்கப் பார்த்தார்கள்.

எப்போதும் அலையடிக்கிற பக்கம் தன்னை முன்னிறுத்திக்கொண்டு வெளிச்சம் தேடும் விஜய். ஒன்றிய அரசு விவகாரத்திலும் அதையே தான் செய்து வந்தார். “என்ன! ஒரு முதலமைச்சர் என்று பாராமல் இப்படி எழுதுகிறீர்கள்?” என்று சிலர் கேட்பீர்கள்.

ஸ்டாலின் முதல்வராக இருந்த பொழுது அவரை தத்தி என்று சொல்லிவிட்டு விஜய் முதல்வரானதும் எங்க அமுல் பேபியைத் திட்டாதீங்க என்கிற கூட்டத்தை சேர்ந்தவன் நான் இல்லை. விஜய்யே குறிப்பிட்டது போல் அவர் ஒன்றும் தேவ தூதன் இல்லை போற்றிக் கொண்டே இருப்பதற்கு.

சினிமாவிற்குள் நுழைந்த பொழுது ரஜினியின் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று விரும்பி ரஜினி தம்பி இளைய தளபதி ரஜினி ரசிகன் என்றார். அரசியல் பிரவேசிப்பதற்கு காய் நகர்த்த தொடங்கியதும் எம்.ஜி.ஆர் ரசிகர் ஆனார். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறாராம் எல்லா டிவியிலும் காட்டுகிறார்கள் என்று அங்கு போய் நின்றார். விஜய்யிடம் இருந்தவரே சொல்கிறார் தூத்துக்குடி சென்றது அனிதா வீட்டிற்கு சென்றதெல்லாம் பி.ஆர். திட்டத்தின் ஒரு பகுதி என்று. இன்றுவரை, நீட் எதிர்ப்பு போன்ற விஷயங்களில் ஆகட்டும்;குடியுரிமை சட்ட திருத்த போராட்டம் ஆகட்டும் கூட்டம் செல்லும் திசையில் தான் அவர் இருப்பார்.எது சரியோ அதை தைரியமாக பேசியிருக்க மாட்டார், அவரின் தைரியத்தை தான் எல்லா கட்சிகளும் ஒரு பக்கம் நின்றாலும் சரியை சரியென்று பேசியவரின் தைரியத்தோடு ஒப்பிட்டு உயர்த்தி பேசுகிறார்கள்.

முதல்வராகியும் பல திட்டங்களை செயல்படுத்த முனைவதும் பின்பு கூட்டம் எதிர்த்தால் பின்வாங்குபவராகவும்  தான் இருக்கிறார். தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதில் தவறு ஒன்றும் இல்லை; அரசு அதைச் செய்ய முனைந்து எதிர்ப்பு கிளம்பியதும் பின் வாங்கியிருக்கிறது. இப்படி அலை ஒதுங்கும் பக்கம் ஒதுங்கி காற்று வீசும் திசையை நோக்கி பயணிப்பவர் தான் அவர்.

ஒரு வகையில் இது தலைமைக்கான பண்பு இல்லை. ஆனால், அதையே விவேகம் என்றும் சொல்லலாம். இப்படி கூட்டத்தின் நிலையோடு ஒன்றி இருப்பது தான் தலைமைப் பண்பில்லாத தலைவர்களுடைய சர்வைவலுக்கு(Survival)  வழி. எல்லோர் இழுவைக்கும் உடன்பட வேண்டும்.  அப்படி உடன்படாத தலைமைப் பண்பு கொண்ட தலைவர்கள் பதவியைத் தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்து இருக்கிறோம்.

 ஒன்றிய அரசு என்கிற பயன்பாட்டுக்கும் தமிழ் உணர்வுக்கும் மானத்திற்கும் தொடர்பு இருப்பதாக தமிழகத்தை திராவிட கட்சிகளும் சீமானின் தம்பிகளும் நம்ப வைத்துவிட்டதால் வேறுவழியில்லாமல் விஜய்யும் ஒன்றிய அரசு என்று சொல்லிவந்தார்.

விஜய் மீது ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், திமுகவிடம் இருந்த வேற்றுமை எண்ணம் விஜய்யிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதோடு அவரின் ரூட் அணி அவரை வடநாடு வரை கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

காரணம், இல்லாமல் இவர்கள் ஜெயித்ததும் ரஜினியை ஏன் ஏகத்துக்கும் கிண்டல் செய்வது பொறாமை பிடித்து இருக்கிறார் என்று கிளப்புவதுமாக இருக்கிறார் என்று நாம் பதில் தேடிக் கொண்டிருந்தால், அதற்கெல்லாம் காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. விஜய்யை எல்லோரும் விமர்சிக்கிறார்கள் இனிமேலும் விமர்சிப்பார்கள். தமிழகத்தின் எட்டு கோடி பேர் விஜய்யை விமர்சித்தாலும் ரஜினி விமர்சித்தால் பொறாமை என்று முடித்து விடுவார்கள், இதற்கு தான் அந்த கடி.

ரஜினி, அண்ணாமலை போன்றவரை ஆதரித்தாலும் பொறாமை என்று முடித்துவிடுவார்கள். ரஜினி என்கிற ஒருவர் ஆதரித்தாலோ விமர்சித்தாலோ இந்தியாவே விமர்சித்தது போலவும் ஆதரித்தும் போலவும் ஆகிவிடும் என்கிற பயத்தில், சூதனாமாக முன்கூட்டியே ரஜினிக்கு பொறாமை என்று கிளப்பி வைத்திருக்கிறார்கள். இத்தனை கச்சிதமாகத் திட்டமிட்டு அவர்கள் செயல்பட காரணம் இருக்கிறது. அவர்களின் அடுத்த நோக்கம், துணை பிரதமர் தளபதி விஜய். அந்த சமயத்தில் இங்கே மீண்டும் ஒரு பெண் முதல்வராக வாய்ப்புகள் அமையலாம்.

ராகுலிடம் பங்கு கேட்கும் உயரிய நோக்கத்தோடு அவர்கள் பயணிப்பதால் ஒன்றிய அரசு என்கிற வார்த்தையை அந்த நேரத்திற்கு தேவைப்பட்டதால் மட்டுமே தான் விஜய் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நம்முடைய பார்வை.

இப்போது அதே விஜய், நிர்வாக அளவில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டோம் என்பதை முன்கூட்டியே அறிவித்தது போல், ஒன்றிய அரசு என்கிற சொல்லாடல் தேச உணர்வுக்கு எதிராகவும் மத்திய அரசை சிறுமைப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டதாலும் அதை மாற்றிக்கொண்டு இந்திய அரசு என்று குறிப்பிட ஆரம்பித்து இருக்கிறார். ஒரு பக்கம் தமிழ்மானம் என்று கூட்டத்தை கிளப்பி வைத்திருக்கிறார்கள் மறுபக்கம் திராவிட மாயையில் சிக்காத தமிழகத்தில் உள்ள தேசிய உணர்வாளர்கள். சீவல் பெருசா! சிதறல் பெருசா! என்று இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறார். இதை பிழை சொல்ல முடியாது. பிழை சொல்லிக் கொண்டிருக்கவும் கூடாது.

இது பற்றி நம் குழுவிலும் விவாதம் நடந்தது. இந்தியாவிற்குள் இருந்தே இந்திய அரசு என்று எப்படிச் சொல்லலாம் என்றார் நம் ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவர். தமிழகத்திற்குள் இருந்து தமிழக அரசு என்று சொல்வதைப் போலச் சொல்லலாம் என்றேன். ஒன்றிய அரசின் என்று சொன்ன அதே நோக்கத்தின் நீட்சியாக இந்திய அரசு என்கிற பயன்பாடு இருக்கும் என்கிற நோக்கில் அவர் அதை எதிர்க்கிறார்.

ஒன்றிய அரசு என்று சொல்பவர்கள் இந்தியாவை ஒன்றியம் என்கிற கருத்தைத் திணிக்காதவரை நாம் ஒன்றிய அரசு என்றும் கூட சொல்லலாம். இல்லையென்றால் தமிழில் நடுவணரசு என்று சொல்ல வேண்டும். செயல்பாடுகள் அடிப்படையிலும் அதிகார அடிப்படையிலும் நிர்வாக கட்டமைப்பின் மையமாகச் செயல்படும் அரசை மத்திய அரசு என்று சொல்வதால் குறை இருக்குமென்றால் திமுகவிற்கும் சீமான் தம்பிகளுக்கும் மட்டும் தான் அது குறையாக இருக்கும்.

என்னைக் கேட்டால், மாண்புமிகு இந்த விஜய்யை எதற்கெடுத்தாலும் விமர்சிக்கும் போக்கு ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் கூட ஆரோக்கியமானது கிடையாது. இந்திய அரசு என்று குறிப்பிடுகிறார் என்னும் பொழுதே அதில் பிரிவினை எண்ணம் இல்லை என்று தான் கொள்ள வேண்டும். இதை விவாதமாக்கிக் கொண்டிருக்கக் கூடாது என்பது நம் நிலைப்பாடு.

இன்று த.வெ.க.வின் செயல்பாடுகள் பலரின் மனதில் திமுக த.வெ.க.வை விட நல்ல கட்சி தான் போல என்கிற தோற்றத்தைத் தர ஆரம்பித்து இருக்கிறது, லேசான சோகத்தை கசக்கி பிழிந்து அழ வைத்து காசு பார்க்கும் டிவி சேனல்கள் போல் திமுகவும் மக்கள் மனதில் நீங்கள் கேட்ட மாற்றம் எப்படி இருக்கிறது பாருங்கள் என்று தொடர்ந்து திமுக பரவாயில்லை என்கிற அந்த எண்ணத்தை பலப்படுத்துகிறார்கள்.

என்றைக்கும் திமுக உத்தம கட்சி கிடையாது. நிர்வாகத்திற்கு வெளியே த.வெ.க.வின் செயல்பாடுகள் திமுகவை விடத் தரம் தாழ்ந்ததாக இருக்கிறது தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சொன்னதை லெட்டர் பேடில் போட்டுக் கொண்டு விஜய் பேருந்தில் பயணித்ததைச் சுட்டி ரஜினியை கண்டக்டர் என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.கண்டக்டர் தொழில் ஒன்று கேவலமானது இல்லை.இதெல்லாம் நிர்வாகத்திற்கு வெளியே நடக்கும் அக்கிரமங்கள். இதை அரசு நிர்வாகத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடாது.ஒரு தலைவனை; ஒரு அரசை அவனது (அந்த அரசின்) கொள்கை, நிர்வாக முடிவுகள் (Policy and Governance) அடிப்படையில் மட்டுமே விமர்சிக்க வேண்டும். நிர்வாகத்திற்கு வெளியே நடக்கும் அக்கிரமங்கள் மீதான விமர்சனங்கள் கட்சி சார்ந்த விமர்சனங்களாகவே தான் இருக்க வேண்டும்.

அதோடு எதற்கெடுத்தாலும் இந்த அரசின் அனுபவமின்மை, என்று சொல்லி அனுபவமின்மை என்கிற கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாக ஊன்றப் பார்க்கிறார்கள். ‘என்ன அனுபவமின்மை’ என்று புரியவில்லை. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் டீ கடைக்காரர். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறார். எப்படி செய்தார்? மோடி டீ கடைக்காரர் தானே!

அனுபவம் இருந்தால் தான் ஆட்சிக்கு வரவேண்டும். அனுபவம் தேவை அது தேவை இது தேவை எல்லாம் இருந்தால் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற கருத்துருவாக்கங்கள் மீது நாம் எப்போதும் கொதிப்படைவது உண்டு. ஒரு பக்கம் விஜய்க்கு அனுபவம் இல்லை என்கிற கருத்தாக்கங்கள், விமர்சனங்கள் ; மறுபக்கம் அண்ணாமலை அரசியல் பயிற்சி கொடுக்கப் போகிறோம் என்கிறார்.

எப்படி நாம் விஜய்யோடு ஆயிரம் விஷயங்களில் முரண்பட்டாலும் எல்லாவற்றுக்கும் விஜய்யை விமர்சிக்கக் கூடாது என்கிறோமோ அது போலவே தான் ஆயிரம் விஷயங்களில் அண்ணாமலையோடு உடன்பட்டாலும் அரசியல் அனுபவம் வேண்டும் பயிற்சி தருகிறோம் என்கிற அவர் நிலைப்பாட்டில் இருந்து நாம் வேறுபடுகிறோம்.

இது ஒரு ஆபத்தான கருத்துருவாக்கம், அனுபவம் பயிற்சி எல்லாம் இருந்தால் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பது. ஏற்கனவே சாமானியர்களுக்கு எட்டாத ஒன்றாக இருக்கும் அரசியலை இன்னும் தூரமாக செய்யும் போக்கு. இந்த அரசு இயந்திரத்தில் படித்த பயிற்சி பெற்ற அதிகாரிகளை நியமித்துவிட்டு ஏன் மக்கள் பிரதிநிதிகளுக்கு எங்கும் அப்படி ஒரு தகுதிகளை நாம் வைக்கவில்லை என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பயிற்சி அனுபவம்  இதெல்லாம் யார் தருவார்கள்? இதில் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்று யார் தீர்மானிப்பார்கள். இதை நோக்கி நாம் சென்றால் வெறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான் அரசியலுக்கு வர முடியும். அப்படியானவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற நிலையை உருவாக்கி விடுவார்கள். இந்த போக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தான் அரசியலுக்குச் செல்லும் வழி என்று கொண்டு போய் விடாதா? அண்ணாமலை அப்படி சொல்லவில்லையே எல்லோருக்கும் பயிற்சி தருகிறோம் என்று தானே சொன்னார்?என்பீர்கள்.பயிற்சியைத் தரப்போகிறவர்கள் யார்? அண்ணாமலைக்கும் சீமானுக்கும் தருவது போல் எல்லோருக்கும் நண்பர்கள் பணம் கொடுப்பதில்லை.

படித்ததும் அரசு வேலைக்கு படிக்க வேண்டும் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்று அரசியல் பயிற்சி பெற வேண்டும் என்று மரத்தடியில் ஒரு வருடத்தை செலவழிக்க எத்தனை பேரால் முடியும். 16,17 வயதில் குடும்பத்திற்காக ஓடும் நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள் அப்படியான ஒருவன் அரசியலுக்கு வர வேண்டாமா?

பயிற்சிக்கான நேரம் என்பது ஒரு சாமானியனுக்குக் கிடைக்காத ஆடம்பரம் (Luxury)’.அன்றாட வாழ்க்கைக்காக ஓடும் ஒருவனோ, பொறியாளனோ, தொழிலாளியோ அரசியலுக்கு வர நினைத்தால், தடையாக இந்தப் ‘பயிற்சி’ என்ற கற்பிதம் இருக்கக் கூடாது.

வெவ்வேறு தளங்களில் இயங்கும் இவர்களை அரவணைத்துத் தேர்தல் அரசியலுக்குக் கொண்டுவருவது தான் அரசியல் கட்சிகளின் கடமையே தவிர, அவர்களுக்குப் பயிற்சி மையங்கள் திறப்பது அல்ல

எல்லா நிலைகளில் இருக்கின்ற மனிதர்களும் தேர்தல் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியைத் தான் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் செய்ய வேண்டும். “அவனுக்கு அனுபவம் இருக்கா? இந்த பாருங்க விஜய்க்கு அனுபவம் இல்லாம என்ன பண்ணார் பாருங்க!” என்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. வலிகளைப் புரிந்து கொள்ள வைப்பதற்குப் பயிற்சி இருக்கிறதா?. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவனை இவர்கள் பயிற்சி மூலம் உருவாக்கி விடுவார்களா?. சிந்தனைகள் செயல்திறன்கள் எல்லாம் பயிற்சியால் வருவதில்லை.

பயிற்சி தேவை பயிற்சி தருகிறோம் அனுபவம் வேண்டும் என்கிற விமர்சனங்களை ஆரம்பத்திலேயே நாம் புறந்தள்ள வேண்டும். அது சாமானியர்களிடம் இருந்து தேர்தல் அரசியலை இன்னும் தூரமாகக் கொண்டு செல்லும். வெவ்வேறு துறைகளில் இருந்து நல்ல சிந்தனை கொண்ட செயல்திறன் கொண்ட தொலைநோக்குப்பார்வை கொண்ட பலரை அரசியலுக்கு கொண்டுவரும் வேலையைச் செய்ய தான் நமக்கு இங்கே ஒரு புதுக் கட்சி தேவைப்படுகிறதே ஒழியப் பயிற்சி மையங்கள் தொடங்க புது கட்சியோ இயக்கமோ தேவையில்லை.

முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் பொழுது நாம் அவரின் அணுகுமுறைகளைத் தான் விமர்சிக்க வேண்டும். அதிகாரிகள் பத்து ஆலோசனை வழங்கினால் அதில் எதைச் செய்ய வேண்டும்; அவர்களின் ஆலோசனை குறித்து எப்படி கேள்வியெழுப்ப வேண்டும்; தன் முன் இருக்கும் ஆலோசனைகள் தெரிவுகள்(choices) கொண்டு எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இதிலெல்லாம் அவரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைத் தான் விமர்சனம் செய்ய வேண்டும்.

ஒரு அமைச்சர் இது இந்த தேதியில் தான் தயாரிக்கப்பட்டது என்று எப்படி நம்புவது என்று கேட்டதற்கு கிண்டலடிக்கிறோம். அவர் கேட்ட கேள்வி சரி இடம் தவறு. அதோடு, தவறான ஆளிடம் கேட்டார் அதிகாரிகளை கேட்டு இருக்க வேண்டும் உணவுப் பொருள்களும் மருந்துப் பொருள்களும் இன்ன தேதியில் தான் தயாரிக்கப்பட்டது என்பது அரசு எப்படி உறுதி செய்கிறது அதற்கு ஏதேனும் நடைமுறை இருக்கிறதா என்று கேட்டிருக்க வேண்டும்.இப்படி நம் விமர்சனங்கள் எதை நோக்கி இருக்க வேண்டும் என்கிற தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை – உத்திரபிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான என்கவுண்டர்கள் நடந்திருக்கிறது. என்கவுண்டர்கள் சரியா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை சில வழக்குகளில் நிரபராதி தண்டிக்கப்படலாம். ஆனால், தொடர் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த அது தான் வழியென்றால் அதையும் செய்ய ஒரு அரசு தயங்காது என்கிற போன்ற அணுகுமுறை இந்த அரசிடம் தேவை.

என்கவுண்டர்களில் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால், அதைக் காரணமாக வைத்துக்கொண்டு, அமைதியைக் குலைக்கும் தொடர் குற்றவாளிகள் (Continuous law breakers) மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க ஒரு அரசு தயங்கக் கூடாது

சாமானியர்களின் வாழ்க்கை சட்ட ஒழுங்கு பிரச்சனையில் எரிந்து கொண்டிருக்கும் பொழுது சாத்வீகமாய் ஒழுக்கப் பாடங்கள் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று விமர்சியுங்கள் அது அணுகுமுறை மீதான விமர்சனம்.  கொலை கொள்ளை எல்லாம் நடந்து கொண்டிருப்பதற்கு முதல்வர் அவரின் சினிமாத்தனமான கண்டனத்தைக் கூட அழுத்தமாகப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. அதை விமர்சியுங்கள். அனுபவம் இல்லை என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அது உங்களுக்கும் எனக்கும் எதிரான விமர்சனம். அது உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்களை அரசியலை விட்டு தூரமாக விலக்கி வைக்கும். சாமானியர்களான நாம் அரசியலுக்கு இன்னும் பக்கமாகத் தான் செல்ல வேண்டும். அது தான் ஜனநாயகம்.

Error happened.
Exit mobile version