கதிர் விஜயம்

இராவண அரசியல் -பகுதி 4

ராம ராஜ்ஜியம் என்பதை பற்றிய பல விதமான பார்வைகள் இருப்பதுண்டு. அதில் ஒன்று ராம ராஜ்ஜியம் என்பது, பரதன் ராமனின் பாதணிகளை கொண்டு செய்த ஆட்சி அதில் ராமனும் சீதையுமே கூட காட்டில் கஷ்டப்பட்டார்கள் என்று ஒரு பார்வை இருக்கிறது. இப்படியான ஒரு கண்ணோட்டம் இருப்பதை கண்டு அதைப்பற்றி எழுத நினைத்தேன். காரணம், இதில் இருக்கும் அரசியல் சார்ந்த ஒரு உண்மை, இந்த காலம் வரை பொருத்துவதால் தான்.

குடியாட்சியாயினும் முடியாட்சியாயினும் சர்வாதிகாரிகளின் ஆட்சியாகினும்  மக்களின் ஆதரவு இல்லாமல் அது எந்த காலத்திலும் தொடர முடிவதில்லை. ராவண அரசியலை கையில் எடுத்தவர்கள் ராமன் மீது ஏற்படுத்தியிருக்கும் பிம்பங்களில் ஒன்று: ராமன் சாதிய பாகுபாடு பார்க்கும் கீழானவன் என்று .

நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் ஜாதிகள் என்பது ராமாயண காலத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை. நாம் எப்போதும் நிகழ்காலத்தோடு ஒப்பிட்டே கடந்த காலத்தை பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கும் காரணத்தாலும்  ராவண அரசியல் களத்தில்  ராமன் வில்லனாக்கப்பட்ட காரணத்தாலும் “ராமன் ஒரு சாதியவாதி”  என்றவுடன் அதை இங்கிருக்கும் பெரும்பாலோனோர் மனம் ஏற்று கொண்டு விடுகிறது. ஆனால், உண்மை அதற்கு மாறானது என்பதற்கு அடையாளம் தான் பரதன் ராமன் பெயரில் செய்த ஆட்சி.

மேலே சொன்னது போல் மக்களின் ஆதரவு இல்லாத அல்லது சர்வாதிகார ஆட்சியில் மக்களை ஒரு அச்சத்தில் வைத்திருக்க கூடிய வல்லமை கொண்ட ஆளுமையாக இல்லாமல் யாரும் ஆட்சி செலுத்த முடியாது. அப்படி செய்வது எந்த காலத்திலும் முடிவதும் இல்லை.

ராமாயண காலத்தில் ராமன் பிறக்கும் முன்னமே ஒரு எதிர்பார்ப்பு மக்களிடையே தோன்றிவிடுகிறது. மன்னன் தசரதனுக்கு  வாரிசுகள் இல்லாமல், குறிப்புகளின் படி புத்திர புத்திர காமேஷ்டி யாகம் செய்த பின்னரே வாரிசுகள் உண்டானதாக சொல்லப்படுகிறது. அந்த காலங்களில் மன்னர்களுக்கு வாரிசு இல்லாமல் இருப்பது மக்களுக்கும் ஒரு வித எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் உண்டு பண்ணக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தக்கூடியதாகவே இருந்திருக்கின்றது.அந்த ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்பவனாக ராமன் பிறக்கிறான். “ஏன் ராமன் மட்டும் தான் அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யக்கூடியவனா?” என்றால், நிச்சயம் அது தான் உண்மை. நம்முடைய எல்லா கனவுகளும் ஏக்கங்களும் நிறைவேறும் போது முதலில் எது அதனை பூர்த்தி செய்கிறது அல்லது பூர்த்தி செய்யப்பட்ட அந்த முதல் நொடி எதுவோ அதுவே எப்போதும் சிறப்பானதாக மனதில் நின்று விடுகிறது. அப்படியாகவே ராமன், பிறக்கும் போதே மக்களின் ஏக்கங்களை பூர்த்தி செய்தவனாக பிறந்து, மக்களின் எல்லையற்ற,எதிர்பார்ப்புகளும் காரணங்களும் தேவைப்படாத ஒரு காதலை பெறுகிறான். அந்த அன்பானது அவன் வளர வளர இன்னும் வளர்கிறது. ஒருவர் மீதான நம்முடைய அன்பு, அது பிறந்த தருணத்தில் இருந்ததை போன்றே எப்போதும் புதிதாக இருக்கவும் அது வளர்ந்து கொண்டே இருப்பதற்கும் அந்த நபரிடம் அதீத அன்பு இருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்படி இல்லாமல் ஒருவர் மீதான அன்பு எப்போதும் புதிதாகவே இருப்பதற்கும் வளர்ந்து கொண்டே இருப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதில்லை.ராமன் எல்லாருடைய அன்பிற்கும் பாத்திரமான ஒரு பாத்திரமாகவே இருக்கின்றான். கதை என்று கொண்டாலும் கூட, எல்லாருடைய அன்பிற்கும் பாத்திரமாக  இருக்க அவன் அன்புடையவனாக இருக்க வேண்டும் ராமன் அப்படியானவனாகவே இருந்திருக்கிறான்.

இராமாயணத்தில், எல்லா பாத்திரங்களும்  ராமன் மீதான அன்பை  வெளிப்படுத்தும் விதமாகவே காட்சிகள் இருக்கின்றது. அதில், குகனை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம். குகன் ஒரு படுகோட்டி என்றும் வேடன் என்றுமே அறியப்படுகிறான் அதிகாரம் இல்லாத சாதாரண மனிதனான ராமனோடு தான் அவன் சந்திப்பு அமைகிறது அத்தகைய சாதாரண ஒரு மனிதனுக்காக அரசாங்கத்தையே எதிர்க்க துணிகிறான். தசரதன் இறந்ததும் வசிஷ்டர் பரதனைக்  கோசல நாட்டிற்கு வரவழைத்தார். நடந்ததை அறிந்த பரதன்  இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வந்து அவனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று நினைத்து அன்னையர் மூவருடனும் சத்ருக்னனுடனும்  படை பரிவாரங்களுடனும் காட்டிற்குச் சென்றான்

அவர்கள் கங்கைக் கரையை அடைந்தபோது  போர் புரியத்தான் பரதன் வந்திருக்கிறான் என்று தவறாகப் புரிந்து கோபம் கொண்டு இவ்வாறாக  சபதம் செய்கிறான்

“ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ

தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ

ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ”

மேலே உள்ள பாடலுக்கு விளக்கம் தேவையிருக்காது இன்று சினிமாக்களில் வரும் வசனங்கள் தருகின்ற தாக்கத்தை  தருகின்ற அளவிலான ஒரு பாடலாக;  குகனின் கோபம், ராமன் மீது உள்ள அன்பு என்று உணர்ச்சிகளின் தீவிரத்தை வார்த்தைகளுக்கு வைத்து கம்பன் கொடுத்திருப்பார் . இப்படியான காட்சிகளில் வரும் மாஸ் வசனங்கள் வீட்டுக்கு போய்  யோசிச்சா தான் புரியும் என்பது போல் இருந்துவிட கூடாது என்பதை கம்பர் அறிந்திருப்பார் அதன் காரணமாகவே வார்த்தைகளில் எளிமையை கையாண்டு இருக்கிறார் .சினிமா வசனம் போன்றே சொல்ல  வேண்டுமேயானால் “என்னை  தாண்டி தொட்றா பாக்கலாம்” என்பதே அந்த பாடலின் அர்த்தம்

“இந்த ஆத்த தாண்டி போய்டுவானா அவன்

பத்து பேர் சேர்ந்து வந்தா பயப்படுற ஆளா நான்

என்னை நண்பரா ஏத்துக்கிட்டது எவ்வளவு பெரிய விஷயம்

என்னை மீறி ராமனை தாக்கினா ராமனுக்கு பதிலா இந்த வேடன் இறந்திருக்க கூடாதா னு இந்த ஊர் என்னை பேசாதா”

(குகனின் உணர்ச்சிகளை கடத்தவே விளக்கம் பேச்சு வழக்கில் கொடுக்கப்பட்டது).

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, ராமனும் குகனும் பள்ளி தோழர்களோ கல்லூரி தோழர்களோ அல்ல.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பழகிய காலம் என்பது மிக குறைவு. நட்பில் நெடு நாள் பழக்கம் சற்றே தான் பழகினோம் என்கிற வித்தியாசம் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால்,  ராமன் தன்னை நண்பனாக ஏற்று கொண்டதை குகன் பெரிய பாக்கியமாக கருதுகிறான். ராமன் மீது அப்படியொரு ஈர்ப்பு தேசம் முழுதும் பரவியிருக்க வேண்டும் ராமனை குகன் சந்திக்கும் போது  ராமனிடம் செல்வம் இல்லை, அரச பதவி இல்லை எதுவும் இல்லாத போதும் ராமனை பற்றிய மிக பெரிய பிம்பம் குகன் மனதில் இருந்ததை அறிய முடிகிறது.எதுவும் இல்லாத ராமனிடம் அன்பு இருந்திருக்கிறது அந்த அன்பு தான் குகனின் கோபமாக பிரதிபலிக்கிறது.அரசனாக போகும் பரதன் படைகளோடு வந்ததை பார்த்த பின்னும் கிட்டத்தட்ட ஒரு நாட்டையே; ஒரு அரசனையே ராமனுக்காக எதிர்க்க துணிகிறான்.இப்படியான அன்பை நாம் சம்பாதிக்க, நம்மிடம் அதை விட அதிகமான பாகுபாடில்லாத அன்பு இருக்க வேண்டும்.   

சரி, குகனை  விட்டு பரதன் ஆட்சி செய்த முறைக்கு வருவோம். ராமனுக்கு முடி சூட்டுவது குறித்து அறிவிக்கப் பட்ட பின்னரே ராமன் கைகேயி வரம் கேட்டு காட்டிற்கு  அனுப்பும் காட்சிகள் அரங்கேறுகிறது. இது நிச்சயம் நாட்டில் மக்கள் மத்தியில் அரசின் மீது ஒரு அவநம்பிக்கையை குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும்.ராமன் காட்டிற்கு போன செய்தி கேட்டு துயருற்றான் பரதன். உடனடியாக அண்ணனை அழைக்க காட்டிற்கு  கிளம்புகிறான் அன்னைகளுடனும் படை பரிவாரங்களுடனும்.அவன் தனியாக சென்று ராமனை அழைத்திருக்கலாம்; அண்ணன் மீது உள்ள அன்பில் அண்ணனை அரசனாகவே அழைத்து வர வேண்டும் என்பதையும் தாண்டி பழி  சொல்லுக்கு அஞ்சிய அரசர்களும் அரச பதவிகளை கொண்டிருப்பவர்களும் வாழ்ந்த காலத்தை சேர்ந்த பரதன், நடந்த குற்றங்களில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதை உணர்ந்தே அப்படி செய்கிறான். ராமன் தான் அரசாள வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி பரதன் நல்லாட்சியே தந்தாலும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்பதும் அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அண்ணன் மீதுள்ள அன்பு;நம்மை உலகம் பழி சொல்லுமே என்ற அச்சம்;மக்கள் தன்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிற கவலை;நாம் அழைத்தால் இராமன் வரப்போவதுமில்லை; தேடி வந்த பொறுப்பை துறப்பது ஷத்ரிய தர்மமும் இல்லை என்பதையெல்லாம் பரதன் உணர்ந்து இருக்கின்றான்.

அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்ற ஒரு வழக்கு உண்டு. அண்ணனை கானகம் அனுப்பிவிட்டு ஆட்சியை தம்பி எடுத்துக்கொண்டான் என்று நாட்டில் மக்கள் ஒரு தவறான எடுத்துக்காட்டை எடுத்துக்கொண்டு வழிதவறி விடக்கூடாது என்று அறத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டு வாழ்ந்த நம் பாரத சமூகத்தில், அரச குடும்பத்தை சேர்ந்த அரசு பதவியில் இருக்கும் பரதன் அறத்தின் படி நிற்கவும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்க்கவும் கடமைப்பட்டவனாய் ஆகிறான்.ராமன் மீதுள்ள பக்தி; மக்கள் ராமன் மீது கொண்டிருந்த அன்பினால் வேறு ஒருவரை அரசனாய் ஏற்க மாட்டார்கள் என்கிற எண்ணம் ராமனின் பாதுகைக்கு  முடிசூட்டி ஆட்சி செலுத்துகிறான். அறத்தை நிலை நிறுத்த; மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க; அண்ணன்  மீது உள்ள பக்தியை மக்களுக்கு காட்ட பரதன் செய்த யோசனையை தான் இன்றைய கால கட்டத்தில் அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். மக்களிடம் நேரடியாக செல்வாக்கு பெற முடியாதவர்கள் மக்களின் அன்பை பெறாமல் அதிகாரத்திற்கு வர துடிப்பவர்கள் reverse bharathan technique ஐ கையாளுகிறார்கள் அதாவது பரதன் எல்லா credit யம் ராமனுக்கு கொடுக்கின்றான். இன்றைய அரசியல்வாதிகள் credit stealing technique ஐ பயன் படுத்துகிறார்கள். அவர்கள் பின்னால் இருக்கும் நிழற்படங்களை நீக்கிவிட்டு பார்த்தால் அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வழி வந்தவர்களும் நிழற்படங்களை கொண்டே அரசியல் நடத்துகின்றவர்களாக இருக்கின்றார்கள். அத்தகைய கூட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகளே ராவணனை முன் நிறுத்தும் ராவண அரசியல்வாதி வகையில் சேர்ந்தவர்களாகிறார்கள்.

மக்களை முன் நிறுத்தி, மக்கள் முன் யாரோ ஒரு தலைவரின் நிழற்படத்தை காட்டி கூட்டம் சேர்க்காமல் “இது தான் சரி நல்லது நடக்கணும்னா என் பின்னால் வாங்க”என்று அழைப்பதும்; அப்படி அழைப்பவர் பின்னால் மக்கள் கூடுவதும் அறத்தின் வழி நிற்கும் ராமனுகளுக்கே சாத்தியப்படுகிறது. அறம் தவறிய இராவணன் பக்கம் தம்பியே (தம்பிகளே) விலகி செல்லும் நிலையே இருக்கின்றது.

இராமனுக்காக குகன் எழுச்சி பெற்றது போல் இராவணனுக்காக மக்கள் எழுச்சி கொண்டதாகவோ; மக்கள் மனங்களில் ராமன் இடம் பெற்றது போல் ராவணனுக்கு இடம் இருந்ததாகவோ ராவண காவியத்தில் கூட இல்லை. ராவணனுக்கும் ராமனுக்கும் ஆன போரை இன போராக சித்தரிப்பவர்கள் பொய்யாக கூட சித்தரிக்க முடியாமல் போன விஷயம்:’இராமனுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்ததாக விபீஷணன் மீது குற்றம் சொல்லும் ராவண அரசியல்வாதிகள், ராவணனுக்காக விபீஷணனுக்கு எதிராக மக்கள்எழுச்சி பெற்றார்கள் என்பது தான்’.

இராவணன் மீது மக்களுக்கு அதீத அன்பு இருந்திருப்பின்; அறம் தவறாத அரசனாக அவன் இருந்திருப்பின்; இராவணனுக்காக மக்கள் எழுச்சி கொண்டிருப்பார்கள். ஆனால், காலம் நமக்கு காட்டுவது என்னவெனில் மக்களுக்காக அதீத அன்பு கொண்டு மக்களின் அன்பை சம்பாதித்த அறத்தின் வழி நிற்கும் ராமங்களுக்காகவும் ராமன்களின் வார்த்தைகளுக்காகவுமே மக்கள் எழுச்சி பெறுகிறார்கள் என்பதையே.

ராம ராஜ்யம் என்பது அன்பால் மக்கள் மனங்களை ஆளும் அரசனால் மக்களில் யாராலும் வெறுக்க முடியாத மக்களுக்காக அதீத அன்பு கொண்ட ஒருவரால் நடத்தப்படும் ராஜ்யமே ராம ராஜ்ஜியம். “இந்த காலத்தில் மக்கள் அப்படி யாரு மேல அன்பு கொண்டிருக்கிறார்கள் யார் அன்பு ஒன்றையே எல்லோருக்கும் தருபவராக இருக்கிறார்” என்றார் ஒருவர். இன்னொரு நண்பர் சொன்னார் “பாக்க தான போறீங்க ஆன்மீக அரசியல் என்றார் ” உடன் இருந்த குகன்கள் உற்சாகம் ஆனார்கள்.

ராவணன் அரசியலின் எல்லா பிம்பங்களும் தமிழின் துணையோடு இதற்கு முந்தைய பகுதிகளில் உடைக்கப்பட்டது போலவே அடுத்தடுத்த பகுதிகளிலும் உடைக்க படும் 

Error happened.
Exit mobile version