எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும், வீட்டில் எல்லோரும் பாட்ஷா படத்திற்கு சென்று இருந்தோம். சில நிமிடங்கள் வரை ரஜினியை திரையில் காண்பிக்கவில்லை. அம்மாவிடம் ரஜினி எப்ப வருவார் என்று கேட்டபடியே இருந்தேன். பாடலின் முன் இசை ஆரம்பிக்க வேகமாக ஓடி வரும் ஒருவரின் காலை காண்பித்து; பின் பூசணிக்காயை உடைப்பதை பக்கவாட்டில் காண்பித்து;கடைசியாக, அந்த முழு திரையையும் திரையரங்கையும் ஆக்கிரமித்த வசீகரமான அந்த முகத்தை திரையில் காண்பித்தார்கள்.அப்பொழுது சிறுவனாக இருந்ததால், ரஜினியின் காலை காண்பித்த மாத்திரத்தில் என் இருக்கையில் மீது நின்று கொண்டேன்.(ரஜினியை காண்பிக்கும் பொழுது முன் இருக்கை மறைத்துவிட்டால் என்ன செய்ய!)அம்மாவும் அப்பாவும் உட்கார சொல்லி உட்கார்ந்தேன்.
கோச்சடையான் படம் வெளியாகிறது. அந்த சமயத்தில் என்னுடன் தமிழ் என்கிற ஒருவர் பணிபுரிந்தார்.சாந்தமானவர், நல்ல ரசிகரும் கூட.
அவரும் ரஜினி ரசிகர் என்று தெரியவும் எனக்கு ஒரு வித சந்தோசம்.ஏனெனில்,இங்கு எல்லோரும் ரஜினியை ரசிக்க கூடியவர்களே ஆயினும் எல்லோரும் தங்களை ரஜினி ரசிகர் என்று சொல்லிக்கொள்வதில்லை.இந்த இருபடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் என் நண்பர்கள் பலர், உனக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்கிற கேள்விக்கு ரஜினி, விஜய் அல்லது ரஜினி,அஜித் என்று பதில் தர ஆரம்பித்து, ரஜினியை பிடிக்கும் ஆனால், விஜய் ரசிகர் அல்லது அஜித் ரசிகர் என்கிற இடத்திற்கு வந்து இருந்தார்கள்.
தமிழ்,அவர் தம்பியுடன் சேர்ந்து முதல் நாள் காட்சிக்கு செல்வதாக சொன்னார்.
நான், “எனக்கு சேர்த்து ஒரு டிக்கெட் எடுங்க; நானும் சேர்ந்துகிறேன்” என்றேன். நானும் அவரும் வேலையை முடித்துவிட்டு நேராக தியேட்டர்க்கு சென்றோம். அவருடைய தம்பி, டிக்கெட் எடுத்துவிட்டு எங்களுக்காக காத்துக் கொண்டு இருந்தார்.
வெளியான முதல் நாளே நான் பார்த்த முதல் ரஜினி படம் அது தான்.
மூவரும் உள்ளே சென்று இருக்கையை தேடி அமர்ந்தோம்.படம் ஆரம்பித்தது,முன் கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். மன்னர் காலத்து கதை, பெயரளவில் ரஜினி படம். பொம்மை படம் தான் என்றாலும் பாட்ஷா படத்தில் தேடியது போல ரஜினி எப்போது வருவார் என்று தேடிக்கொண்டு இருக்கின்றேன். இந்த முறை குதிரையில் வருகிறார், குதிரை ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு பறக்கிறது. பறந்து அது இன்னொரு மலையை அடைந்த நொடியில், குதிரையின் முன் பக்கத்தில் இருந்து அப்படியே குதிரையின் மேல் இருக்கும் முகத்தை காண்பிக்கிறார்கள்.பெருத்த ஏமாற்றம்.”இது ரஜினி மாதிரியே இல்லையே” என்கிற அளவிலேயே இருந்தது அந்த ஏமாற்றம்.
பாட்டு ஆரம்பிக்கிறது.அந்த பொம்மை ரஜினிக்கு SPB உயிர் கொடுக்கின்றார்.பொம்மை இப்பொழுது ஓரளவு ரஜினி ஆகி விட்டது. பாடலின் இடையிசையில் ஒரு நடன அசைவில்,ரஜினியின் signature step ஐ காண்பிக்கிறார்கள் பார்த்த நொடியில் எனக்கு அப்படி ஒரு உற்சாகம் ஆனால், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
தமிழ் அவர் தம்பியிடம் “டான்ஸ் எல்லாம் மிரட்டி விட்டு இருக்காய்ங்க” என்கிறார். நான் என் மனதில் அதே தான். இப்படி ஏதோ ஒன்று தான் என் மனதில் பட்டது என்று நினைத்து கொள்கிறேன்.பாட்டு முடிந்தது.SPB யும் சென்றுவிட்டார்.
தியேட்டரின் ஒரு மூலையில், எங்களுக்கு பின் பக்கமாக இருந்து, எந்த ஒரு பின்னணி இசையும் இல்லாத காட்சியில், “நன்றி மன்னா!” என்கிற வார்த்தைகள் ரஜினியின் குரலில் என் காதுகளை தொட்டது தான் தாமதம் அப்படி ஒரு பேரானந்தம். இந்த முறையும் என் மனதில் எந்த வார்த்தைகளும் எழவில்லை. இப்போது தமிழ், அவர் தம்பியிடம் “ரஜினியின் voice” கேட்பதற்காகவே தியேட்டருக்கு வரலாம் போல என்கிறார். “yes அதே தான்” என்கிறது என் மனம்.
மொழி வெறுப்பு அரசியலை பற்றி பேச வந்த இடத்தில்.இந்த கதையெல்லாம் எதுக்கு?
நம் ஊரில் திராவிடம் தமிழ் தேசியம் என்கிற பெயர்களில் அரசியல் செய்ய ஆரம்பித்தவர்கள். மக்களிடம் நம் மொழி மீதான பற்றை வளர்த்தார்களோ இல்லையோ? நிச்சயமாக மற்ற மொழிகளின் மீதும் மற்ற மொழி பேசுபவர்களும் மீதும் வெறுப்பை வளர்த்து இருக்கின்றார்கள்.இன்றைய தேதி வரை இது மறுக்க முடியாத உண்மை.அரசியல் என்கிற பெயரில் மக்களின் உணர்வுகளை தூண்டி மற்ற மொழிகள் மீதும் மற்ற மொழி பேசுபவர்கள் மீதும் வெறுப்பை திணிப்பது எத்தனை அபாயகரமானது என்பதை உணர்ந்து இந்த சமூகம் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை. தமிழ் மீது பற்றுகொண்டு தமிழை படித்ததாகவும் தெரியவில்லை.
தமிழை ஆய்ந்தறிந்து படித்து இருக்கும் இலங்கை ஜெயராஜ் அவர்கள், ஒரு மேடையில் கவலையோடு இந்த வார்த்தைகளை உதிர்க்கிறார்,”மொழி, மனிதர்களை இணைக்க உருவாக்கப்பட்டது அதனை கொண்டு இன்று மனிதர்களை பிரித்து கொண்டு இருக்கின்றார்கள்” என்று.
மொழி எதிர்ப்பு அரசியல்வாதிகள் மிக முதன்மையாக எதிர்ப்பது சமஸ்கிருதம்.இவர்களின் வீராவேச பேச்சுக்களை கேட்டு சமஸ்கிருதத்தை வெறுப்பவர்கள், ஒருவரும் தமிழ் நூல்களில் சொல்லப்பட்டதையும் கூட அறிந்திடாதவர்களாகவே இருக்கின்றார்கள். இது அரசியல்வாதிகளின் வேலையை இன்னும் சுலபமாக ஆக்கிவிட்டது.
ஒருகாலத்தில் தமிழ் தேசிய அரசியல் பேசி வந்த சீமான் கடவுள் மறுப்பு பேசி வந்தார். பின் தமிழர்களிடம் நிலங்களுக்குரிய தெய்வகளை வழிபடும் முறை இருந்து இருக்கின்றதே என கேள்வி எழ,தெய்வம் இருக்கின்றது; கடவுள் இல்லை என்று முப்பாட்டன் முருகன் பெரும் பாட்டன் சிவன் என்று நின்றார்.தற்போது, ஹிந்து மதமோ கிறிஸ்தவமோ இஸ்லாமோ தமிழர் மதம் இல்லை.சைவம் தான் தமிழர் மதம் என்கிற இடத்திற்கு வந்து இருக்கின்றார். ஆனாலும், அவரும் அவரை பின்பற்றுபவர்களும், இவர்களின் மூதாதையாரான திராவிட இயக்கங்களும் முதன்மையாக எதிர்ப்பது சமஸ்கிருதமாக இருக்கின்றது. இவர்கள் பரப்பும் எதிர்ப்பும் வெறுப்பும் சமஸ்கிருத்ததோடு நின்றுவிடவில்லை. ஒரே மாநிலத்திற்குள் வாழும் மக்களுக்குள்ளும் கூட, “இவர் தெலுங்கர் அவர் மலையாளி” என்கிற அளவிற்கு அது நீண்டு இருக்கின்றது.
சீமான் சுட்டிக்காட்டும் இந்த சைவ நூல்களே கூட சமஸ்கிருதமும் தமிழும் சிவன் கொடுத்த மொழி என்கிறது.
(சிவன் யார் என்பதை அறிய நம் திருவாசகம் தொடரில், திருவாசகம்-3: பொம்மை காதல் கட்டுரையையும் .மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-7) -சிவம் என்பது யாதெனின் கட்டுரையையும் படியுங்கள்).
சைவ நூல்களின் படி ஆகமங்களையும் வேதங்களையும் தந்ததும் சிவனே தான்.
இந்த சைவ நூல்களின் சொல்லப்பட்டுள்ள தத்துவங்கள் படி,ஒரு பொருளை உணர்த்த முற்படும் ஆற்றல் தான் மொழி. அதன் வளர்ச்சி நிலைகள் நான்கு.அதன் அடிப்படையில் மொழிகள் நான்கு நிலைகளை உடையதாக சொல்லப்படுகிறது.
`சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி’ முறையே
தமிழில் இவை “நுண்மை, பொதுமை, இடைமை, பருமை” எனப்படுகிறது.
மொழி என்றால் நம்மை பொறுத்தவரையில் நம் காதில் ஒலிக்கும் வார்த்தைகள்;வடிவங்களை கொண்ட எழுத்துக்கள்.மொழியின் இந்த நிலை கடைசி இரண்டு நிலையான மத்திமை, வைகரி யை சேர்ந்தது.
இதில் முதல் இரண்டு நிலை, வேறுபாடற்ற நிலையிலானது.
இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டு தான் இருக்கின்றது.ஆற்றல் தான் தகவலாக பரிமாறிக்கொள்ளப்படுகிறது. அந்த வகை தகவல் பரிமாற்றத்தை நாம் நுண்மை நிலையாக எடுத்துக்கொள்ளலாம். சிவன் வேதங்களையும் ஆகமங்களையும் ரிஷிகளுக்கு இந்த நிலையில் தான் கடத்தியிருக்கின்றார்.
இப்பொழுது நான் படம் பார்த்த கதைக்கு வாருங்கள். நான் கோச்சடையான் படம் பார்த்த பொழுது, என்னுள் ஒரு உணர்வு தோன்றுகிறது. அதை வார்த்தைகளாக கூட நான் நினைக்கவில்லை. பாட்ஷா படம் பார்த்த பொழுதும் அதே போலவே தான் நிகழ்கிறது.இரண்டிலுமே என்னுள் ஏற்பட்ட உணர்வு, என்னுள்ளும் கூட வார்த்தைகளாக வளரவில்லை.வேறுபாடற்ற நிலையிலேயே தான் இருந்தது.
அதே அந்த உணர்வு என் அருகில் இருந்தவருக்கும் ஏற்படுகிறது. ஆனால், அவருள் எழுந்த ஆற்றலால் அது மொழியின் நான்காவது நிலைக்கு வளர்ந்து வார்த்தைகளாக மற்றவர் கேட்கும்படிக்கு வெளிப்படுகிறது. அவர் மூலம் அது வார்த்தைகளாக வெளிப்படுகிறது.
இதில், மொழி(language ) அளவில் வேறுபாடற்ற உணர்வாக, என்னுள் இருந்த நிலை தான் மொழியின் இரண்டாவது நிலையான பைசந்தி என்னும் பொதுமை நிலை. இதை மயில் முட்டையில் உள்ள நீரோடு ஒப்பிடுவார்களாம்.மயில் முட்டையிலுள்ள நீரில் மயிலினிடத்துள்ள ஐவகை நிறங்களும் தோன்றியும் தோன்றாதும் நிற்குமாறு. ஒரு உணர்வு அல்லது தகவலை பரிமாற்ற எத்தனிக்கும் ஆற்றல், வேறுபாடற்ற நிலையில் இருப்பது. படம் பார்த்த பொழுதில் என்னுள் தோன்றியும் தோன்றாமலும் இருந்த நிலை போல.
இது வளர்ந்து,சொல் வடிவமும் எழுத்து வடிவமும் பெற்று ஒரு சொல் பிறப்பதற்கு முழுதும் தயார் நிலையில் இருந்து.நாம் மட்டும் வார்த்தைகளாக உணர்ந்து கொள்ள கூடிய நிலையில் இருப்பது தான் மத்திமை எனப்படும் இடைமை நிலை.
கடைசி நிலையான வைகரி என்னும் பருமை நிலையில் தான் நாம் பேசியும் எழுதியும் எண்ணங்களை பரிமாறிக்கொள்கிறோம்.
மொழியின் கடைசி இரண்டு நிலையில், சொல் ஒலிப்பு முறையும் எழுதும் முறையும் காலம் மற்றும் இடத்தை பொறுத்து மாறுபட்டு கொண்டே வருகிறது.
கடந்த பத்து வருடத்தில், என்னுடைய slang மற்றும் உச்சரிப்பும் கூட வெகுவாக மாறியிருக்கின்றது.
இப்படி இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப ஒலி வடிவிலும் எழுத்து வடிவிலும் ஏற்பட்ட மாற்றங்களளாலேயே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஆற்றல் பல மொழிகளாக பிரிந்தும் சேர்ந்தும் கலந்தும் பிரிந்தும் பல பல மொழிகளாக நிற்கிறது.இதை வைத்துக்கொண்டு தான் அரசியல் செய்துகொண்டு இருக்கின்றார்கள்
சிவனிடம், மொழியின் நுண்ணிய நிலையில் வேதத்தையும் ஆகமங்களையும் பெற்றவர்கள்,சிற்றறிவை பெற்ற மனிதர்கள் புரிந்து கொள்ள சிவன் கொடுத்த இரண்டு மொழிகளான தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அதனை எழுதி வைத்து இருக்கின்றார்கள் என்கிறது சைவ நூல்கள்.
இதில் இரண்டு, மொழியும் பல வகைகளில் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இருக்கின்றது. சம்ஸ்கிருத மொழியில் இருக்கும் பல வார்த்தைகள் தமிழில் திருக்குறள் உட்பட பல சங்க கால நூல்களில் கையாளப்பட்டு உள்ளது. இந்த பயன்பாட்டை தொல்காப்பியரும் ஆதரிக்கிறார் என்றே சொல்லலாம்.
வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் ;
தொல்காப்பியம்
வடமொழிச் சொல்லில் வடவெழுத்துப் (ஓசை) பொறுத்துத், தமிழ் எழுத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சொல்லாக்கலாம்.
இதை எல்லாம் மறுக்கும் வண்ணம்; தமிழின் இந்த நூல்களையும் சிதைக்கும் வண்ணம்; உரை எழுதும் வேலையும், சில செய்யுள்களை நீக்கிவிட்டு டிஜிட்டல் வடிவங்களில் வெளியிடுவதையும் ஒரு கூட்டம் செய்துகொண்டு இருக்கின்றது.
மொழியின் தத்துவ உண்மைகளை அறிந்து நம் முன்னோர் தமிழ் சமஸ்கிருதம் இரண்டையும் ஏற்று; இரண்டிலும், உலக மக்களுக்கு தேவையான ஞானங்களை எழுதி வைத்து சென்றுள்ளனர்.
திருமந்திரம், தமிழ் அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றை படித்து உணர்ந்தாலும் தத்துவ ஞானத்தை பெற முடியும் என்கிறது.
இதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ளாமலும் ;தமிழ் நூல்களை படிக்காமலும், தமிழ் சமூகம் ஏற்று வந்த விஷயங்களை தமிழருக்கு எதிராக காட்டி பரப்புரை செய்வது போல மொழியை வைத்தும்அரசியல் செய்து மற்ற மொழிகள் மீது வெறுப்பை திணிக்கிறார்கள். அதிலும், தமிழ் சமூகம் எல்லா வகையிலும் ஏற்றுக்கொண்ட சமஸ்கிருதத்தை யாரோ வேற்று கிரகவாசிகளின் மொழி போல சித்தரிப்பதை என்னவென்று சொல்ல!
தமிழை கற்று அறிந்தால், நிச்சயம் இந்த ராவண அரசியல் செய்யும் மொழி வெறுப்பு பரப்புரை, அதிலும் முக்கியமாக சம்ஸ்கிருத வெறுப்பு பரப்புரை எடுபடாமல் போகும்.
இங்கும் இன்னும் சில விஷயங்களையும் பேச வேண்டியது இருக்கின்றது. மொழி மீதான பற்று எந்த மொழி மீதான வெறுப்பாகவும் ஆகிவிடக்கூடாது.அப்படி ஆகும் என்றால் அது நிச்சயம் மொழி பற்று ஆகாது.மொழியையும் மொழியின் அடிப்படையில் மனிதர்களையும் கீழ்மைப்படுத்தும் அரசியலுக்குள் நாம் சிக்காமல் இருப்போம்.
தனிப்பட்ட முறையில், என்னுடைய எண்ணம், நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொவரும் தமிழ் அல்லது சமஸ்கிருதத்தை அல்லது இரண்டையும் கற்று அதில் இருக்கும் தத்துவ நூல்களை படிக்க வேண்டும் என்பதே.
எந்த மொழியின் மீதும் வெறுப்பு இருக்க கூடாது. அந்த வெறுப்பை கொண்டு நடத்தப்படும் அரசியலுக்கு நிச்சயம் இடமளிக்க கூடாது. அதே வேளையில், என்னுடைய மற்றுமொரு தனிப்பட்ட கருத்து ஹிந்தி பேசாத இந்தியர்கள் எந்த மொழியை கற்று கொண்டாலும் கற்று கொள்ளாவிட்டாலும் ஹிந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்பதே (ஹா!ஹா!)
அது ஏன்? என்பதை படிக்க மொழி எதிர்ப்பு அரசியலும் மையமாய் அமர்த்தப்பட்டிருக்கும் ஹிந்தியும் கிளிக்குங்கள்