கதிர் விஜயம்

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-2) பேச்சின் தவம்

அனுத்வேக-கரம் வாக்யம்ஸத்யம் ப்ரிய-ஹிதம் ச யத் ஸ்வாத்யாயாப்யஸனம் சைவவாங்-மயம் தப உச்யதே (பகவத் கீதை 17.15)

விளக்கம் :உண்மையான பேச்சு, இனிமையான பேச்சு, நன்மையளிக்கும் பேச்சு, பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு, வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை பேச்சின் தவங்களாகும்.”

நாமெல்லாம் இப்போது 21ம் நூற்றாண்டில், பகுத்தறிவாதிகளின் யுகத்தில் இருக்கின்றோம். இங்கே இயேசுவை பின்பற்றுகிறவர்கள் குறைவு; நபிகளை பின்பற்றுகிறவர்கள் குறைவு; நம் பாரத பழம்பெரும் நூல்களில் சொல்லப்பட்ட தர்மங்களை பின்பற்றுகிறவர்களும் குறைவு.மாறாக கடவுளை நம்புகிறோமோ இல்லையோ எல்லாரும் ஒரு வித பகுத்தறிவாதிகளாய் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒழுங்குகளில் இருந்து நம்மை விடுவித்துக்கொண்டு உள்ளோம். நாத்திகராக இருந்தாலும் ஆத்திகராக இருந்தாலும் பகுத்தறிவு என்னும் எதையும் முழுதாய் அறிய முற்படாத கூட்டத்தோடு ஒன்றிணைத்துக்கொண்டு நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒழுங்குகள் மீதான சந்தேகங்களை கிளப்பி அவைகளை கேள்விக்குட்படுத்தி. என் உரிமை; என் இஷ்டம்; என் சுதந்திரம் என்கிற பெயரில் எதை எதையோ செய்துகொண்டு ஒரு வித தடுமாற்றத்தில் உள்ளோம்.இப்படி தடுமாற்றத்தில் இருக்கும் நம்மில் யாரும் பகவத் கீதை போன்ற நூல்களை வாசிக்க முற்படுவது  இல்லை.படிக்கவே முற்படாத போது  அதில் இருக்கும் உண்மைகளை பற்றியும் நாம் பின்பற்ற வேண்டிய தர்மங்களை பற்றியும் என்ன கவலை.

தவம்-இந்த வார்த்தை பற்றிய அறிமுகம் என்பது நமக்கு திரைப்படங்கள் அல்லது நாடகங்கள் அல்லது கதைகளிலும் மூலமாக தான் கிடைத்திருக்கும் அவைகளின் படி ஒரு கடினமான  சூழலில் தன்னை வருத்திக்கொண்டு உண்ணாமல் உறங்காமல் கடவுளை வேண்டி நிற்பதே தவம் என்னும்படியாகவே நம்மில் பலர் புரிந்துவைத்திருக்க வாய்ப்பிருக்கின்றது. தன்  போக்கிற்கு செல்லும் மனதினை தடுத்தாளும் எவ்வகை செயலும் தவங்களேயாம். சிவபெருமானை வேகத்தை தடுத்தாண்டவன் என்கிறார்கள் எண்ணத்தின் வேகங்களை தடுத்து நிலை நிறுத்தியவன் என்னும் பொருளில் அப்படியாக சொல்லப்பட்டது. உணர்ச்சிகளின் வேகத்தை தடுத்து பேசுவதில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களை கடைபிடிப்பதே பேச்சின் தவம் என்கிறது கீதை

இன்று இந்த பகுத்தறிவுகாலத்தில் உண்மையான;இனிமையான; நன்மையளிக்கும்; பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு என்பது அரிதிலும் அரிதாகி விட்டது.அதற்கு முக்கியமான காரணங்களில் முதன்மையாக இருப்பது பகுத்தறிவு என்னும் பெயரில் ஆன்மீகத்தில் இருந்து நாம் நம்மை விலக்கி கொண்டுவிட்டோம் என்பதாகவே இருக்க முடியும்.

ஆன்மீகம்  எல்லாவற்றிலும் நிதானத்தை கற்று தருகிறது. ஆன்மீகத்தை ஒதுக்க ஒதுக்க நம்மில் அந்த நிதானம் தவறுகிறது. தவறும் நம் நிதானம் நமக்கு எந்த விதத்திலும் பயன் அளிப்பதில்லை. மாறாக யாரோ சிலரின் ஆதாயங்களுக்கு பயனாகி போகிறது.இன்றைய சூழலில்  பொது விஷயங்கள் என்று எடுத்துக்கொண்டாலும் தனிப்பட்ட விஷயங்கள் என்று எடுத்துக்கொண்டாலும் நம் உணர்ச்சிகளுக்கு தீனி போடக்கூடிய அல்லது அந்த நேரத்தில் நமக்கு ஏதுவான கருத்துக்களையும் பேச்சுக்களையும் கேட்டு நம்பி அதையே பிரதிபலிக்க முற்பட்டு நம் உணர்ச்சிகளின் தீவிரத்தால் ஆளப்பட்டு விடுகிறோம் முடிவில் வாதங்களில் ஜெயித்துவிட்டோம் என்கிற போலியான மகிழ்ச்சியில் திளைத்து உண்மைகளை அறியாமலேயே இருந்துவிடுகிறோம். ஆசை, கோபம், அகங்காரம்,பொறாமை போன்ற உணர்வின் தீவரங்கள் பேச்சாகும் போது  அங்கே உண்மை அல்லது இனிமை என்ற ஏதோ ஒன்றிற்கு இடமில்லாமல் போகின்றது.

அரசியல் களத்தில்  நம் உணர்வுகளை தூண்டும் படியான பேச்சுக்களால் ஆட்கொள்ளப்பட்டால் நாமும் அதனையே பிரதிபலிக்கின்றோம் அரசியல் சார்ந்த நம் பேச்சுகளும் உண்மை இனிமை இல்லாத பேச்சுக்கள் ஆகி விடுவதோடு அதன் விளைவாய் நாம் தெரிந்துகொள்ள முயற்சிக்காத உண்மைகள் தெரியாமல் போகிறது. அப்படி ஆகும் போது அங்கே தேவைப்படுகின்ற முன்னேற்றம் ஏற்படாமல் இருந்துவிடுகிறது.குடும்பத்திலும் நண்பர்கள் வட்டத்திலும் உணர்வுகளால் ஆளப்படுகின்ற பேச்சுக்கள் சமயங்களில் உண்மையின் பக்கம் இருப்பதில்லை உண்மை இருந்தாலும் அங்கே இனிமை இருப்பதில்லை இது போன்ற சமயங்களில் அங்கே அன்பு தேய்கிறது.

பகுத்தறிவு என்னும் போர்வையில் .மருந்து சாப்பிடாத குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளோடு மருந்து ஊட்டுவது போல் கதைகள் நீதி நூல்கள் என   நம் கலாச்சாரத்தில் நமக்கு ஊட்டப்பட்ட  ஞானத்தை உடைத்து எல்லாவற்றிலும்  நான் நான் என சிந்திக்க தூண்டி நம் ஆன்ம வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார்கள்.இரண்டு தலைமுறைக்கு முன்னர் மாமியார் என்பவரை தாய்க்கு சமமாக நடத்திய சமூகம் இன்று “நான்” ஏன் அப்படி  நடத்தணும் என்னும் நிலைக்கு வந்திருப்பதற்கு காரணம்,ஆன்மீகம்  சார்ந்த கருத்துக்கள் கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தப்பட்டு அவைகளை அடிப்படையற்ற மூட கருத்துக்கள் என்று நமக்குள் திணிக்கப்பட்டிருக்கும் எண்ணமே ஆகும்.

அப்படியான ஒன்று தான் மனுஸ்மிருதி மீதான பருவகால எதிர்ப்பு ,சற்றே ஆழ சிந்தித்தால் நம்மால் புரிந்து கொள்ள முடிவது என்னெவெனில் ஏன் விரும்பாத அல்லது ஏற்றுக்கொள்ளாத ஒன்றை எரிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் எந்த ஒரு கருத்தையும் அது சொல்லப்பட்ட காலத்தோடு பொருத்திப்பார்ப்பதோடு எல்லாக்காலங்களுக்கும் ஏற்ற கருத்தாக இல்லாத பட்சத்தில் அதை கடந்து நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்வதே சரியாக இருக்க முடியும் அதைத்தான் ஆன்மீகம்  கற்று தருகிறது. ஆன்மீக அரசியலை முன் வைக்கும் ரஜினியும் அதையே சொல்கிறார் எல்லா மதத்தவர்களும் அவர்  அவர் மதங்களில்  சொல்லப்பட்டிருக்கும் நல்ல விஷயங்களை சடங்குகளை பின்பற்றினால் அதுவே போதும் என்கிறார்.

அதைவிடுத்து ஆன்மீகமும் மதமும் ஒன்றாகப்பார்த்து பழகிவிட்ட மனித சமூகத்தில் பகுத்தறிவு என்னும் பெயரில் மதங்களின் மீதான முதிர்ச்சியற்ற கருத்தியல் தாக்குதல்கள் நடப்பது   அந்த சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சியையே பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .  மனுவை சட்டமாக்க வேண்டும் என்பது நம் வாதமாக இருக்க வேண்டாம் அல்லது மனு போன்ற நூல்களில் உள்ள ஒன்றிரண்டு வரிகளுக்காகவோ பக்கங்களுக்காகவோ அதை எரிக்கவேண்டும்  என்பதும் நம் வாதமாக இருக்க வேண்டாம்.

நீங்கள் எந்த மதத்தவராயினும் உங்களுக்கு விருப்பமான ஒரு ஆன்மீக நூலை படியுங்கள். இந்த கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டிய கீதை தான் படிக்க வேண்டும் என்பதில்லை.

நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்

“மத்தேயு 15:10 நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். மத்தேயு 15:11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்”

கட்டுரையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கீதையில் வரும் ஸ்லோகத்திற்கும் பைபிளில் வரும் இந்த வசனத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. திருக்குறள் ஒரு கிறித்துவ நூல் என்னும் ஆய்வுகளும்; அவருக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள் என்னும் மோதல்களும் அவசியமற்றது. அவசியமற்ற மோதல்களை, சர்ச்சைகளை விடுத்து, மதத்தை எதிர்க்கிறேன், கடவுளை எதிர்க்கிறேன் எனும் பேர்வழிகள் திருக்குறள் படித்து அதன் படியேனும் நடப்பது சமூகத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணும்.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.” (திருக்குறள் 9

உலகப் பொதுமறை என்று திருக்குறளை முதலில் சுட்டியவர்  யாரென்று தெரியவில்லை. ஆனால், அவர் காரணம்  இல்லாமல் அதை சொல்லியிருக்கவில்லை.

அரசியல், குடும்பம் வேலை இடம் என எங்கும் யாரோ ஒருவர் நம் உணர்ச்சிகளை தூண்டிவிட்டால் அவரின் வாதம் சரியானதே என்று அவருக்காக வாதிடுகிறோம் என்னும் பெயரில் உண்மையும்  இனிமையும்  இல்லாத பேச்சுக்களாக நம் பேச்சு ஆகி விடாமல் பார்த்துக்கொள்வோம்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.(33:70) பேசும் போது உன் குரலையும் தாழ்த்திக் கொள் (31:19)மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் (2:83)

மதம் எதுவாயினும் ஆன்மீகம் வெறுப்புக்களை விதைப்பதில்லை;எதையும் எரிக்க கற்றுத்தருவதில்லை; உணர்ச்சி தரும் பேச்சுக்களால் பொய்களை பரப்பச்சொல்லி தருவதில்லை.அதனால்,ஆன்மீகம் கற்போம்! அதன் வழி  நிற்போம்! ஆன்மீகத்தையே ஆதரிப்போம்! அதுவே வாழ்க்கையை சிறப்பிக்கும்

Error happened.
Exit mobile version