கதிர் விஜயம்

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-8) மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

திருமூலர் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். திருமந்திரம் என்னும் மறை நூல் தந்த ஞானி. மகிழ்ச்சியின் உச்சத்தை அடைவதை பற்றி  அவர் என்ன சொல்லியிருக்கார் என்று இந்த பகுதியில் பார்க்கலாம். அதற்கு முன் ஒரு  சினிமா பற்றி கொஞ்சம் பார்க்கலாம். அந்த சினிமாவிற்கும் திருமந்திரத்திற்கும்  கூட ஒரு சம்பந்தம் இருக்கின்றது.

“actually  அந்த டைரக்டருடைய  படம் யாருக்கும் புரியமாட்டேனுது அதான் பெரிய hit  ஆகல but,  படம் என்ன படம் தெரியுமா!”

“படம் Hollywood range”

இப்படியான குரல்களை நீங்கள் நிச்சயம் ஒருமுறையாவது கேட்டு இருப்பீர்கள்.

கவுண்டமணி அவர்கள் ஒரு நகைச்சுவையில் சொல்லுவது போல, “அவர் ஒன்னு சொல்லுவார் நமக்கு இப்ப புரியாது வீட்டுக்கு போன பிறகு தான் புரியும்” என்பது போன்ற வெகு ஜனங்களுக்கு புரியாத  மேதமையான படத்தின் ரசிகர்கள்  மேதைகளாகவே கூட இருக்க கூடும்.

ஆனால்,ரசிப்பதற்கும் ரசிகர்களாய் இருப்பதற்கும் என்ன மேதமை வேண்டிக்கிடக்கின்றது.மேதமையின் உச்சக்கட்டமே ரசிப்பதும் மகிழ்ந்து இருப்பதும் தானே.

ஹாப்பி பர்த்டே அண்ணாத்த! ஆம்! இந்த கட்டுரையில் அண்ணாத்த திரைப்படத்தை பற்றி தான் பேச போகின்றோம்.

ட்ரைலர் பார்த்தவுடனேயே  மேதைகள் தங்கள் மேட்டிமைத்தனங்களை கொட்டி, இது பழைய கதை என ஆரம்பித்துவிட்டார்கள்.வியாபார வெற்றியை மனதில் கொண்டு வெகுஜன பார்வைக்கு எடுக்கப்படும் திரைப்படங்கள் மொத்தமாக ஒரு நாலைந்து வடிவங்களில்(pattern); ஒரு நாலைந்து கருவை சுற்றி தான் இருக்கின்றது.அதை சொல்லும் விதங்களில் காட்டும் வேறுபாடும் புதுமையுமே மீண்டும் மீண்டும் வெகு ஜன பார்வைக்கு எடுக்கப்படும் படங்களை நம்மை ரசிக்க  செய்கிறது.

அதிலும், ரஜினி போன்றவரை ரசிப்பதற்கு, இயற்பியல் உயிரியியல் வரலாறு என்று எதிலும் நீங்கள் மேதமை கொண்டிருக்க வேண்டியதில்லை; உங்களுக்கு உலக சினிமா பற்றிய உயர்ந்த ஞானம் கூட தேவையில்லை; புலன்களை கொண்ட மனிதனாக நீங்கள் இருந்தால் போதும்; நிச்சயம் உங்களால் அவரை ரசிக்காமல் இருக்க முடியாது.  அவர் உங்களை அவர் தன்  பக்கம் இழுத்துவிடுவார்.(To be a fan of rajini you don’t have to be a genius but it does not mean you have to be a fool. Just being a human you will sure love him).

கதையை குறைப்பட்டு கொள்ளும் மேதாவிகளுக்கு ஒன்று புரிவதில்லை. ரஜினி படங்களில் ரஜினியை பார்ப்பதற்காகவே தான்  மக்கள் திரையரங்கு செல்லுகிறார்கள் என்பது தான் அது.

ரஜினியின் புதுப்படத்தை முதல்முறை பார்க்கும் யாரும், ரஜினியைத் தவிர சட்டகத்திற்குள்(frameக்குள்) இருக்கும் எதையும் எவரையும் சட்டை செய்வதில்லை.

நீங்களே கூட ரஜினியின் புது படங்களை முதல் முறை பார்க்கும் பொழுது, ரஜினியும் இருக்கும் frame இல் ரஜினியை மட்டுமே கவனித்திருப்பீர்கள்.கவனத்தை இழுக்கும் காந்தம் அது.

நீங்கள் ரஜினியை வெறுப்பவராக இருக்கலாம்;அவர் வயதை சொல்லி விமர்சிப்பவராக இருக்கலாம்; ஆனால், அவரை திரையில் பார்க்கும் நொடியில் நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பை மறக்க செய்து உங்களை அவர் பக்கம் இழுத்து மகிழ்விப்பார்.அது தான் ரஜினி. அதுவே அண்ணாத்த படத்திலும் நிகழ்ந்திருக்கின்றது.

இமான் அவர்கள், அவரின் பெரும்பாலான படங்களை போலவே இந்த படத்திற்கும் அருமையாகவே இசையமைத்து இருக்கின்றார்.

இசையை பற்றி பேசும் பொழுது,ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும், இசை என்றாலே அருமையாக தானே இருக்கும்.நாம் விரும்பாத பாடலை அல்லது நமக்கு புரியாத இசையை  கூட யாரோ ஒருவர் ரசிக்க தானே  செய்கிறார்.ஆனால், இங்கு ரஜினிக்கு என்று இசைக்கப்படும் பிரத்தேயக இசை கோர்வைகள்(Hero BGM ) மட்டும்  எல்லோரையும், பெரியவர் சிறியவர் பாகுபாடின்றி; இசையை அறிந்தவர் அறியதாவர் பேதமின்றி; குதூகலத்தின் உச்சத்தை அடைய செய்கிறது. இது எப்படி நிகழ்கிறது!

ரஜினியை பார்ப்பதை விட மிகழ்வானதும் குதூகலமானதும் ரஜினியை பார்ப்பதற்காக காத்திருக்கும் அந்த நொடிகளில் இருக்கும் எதிர்பார்ப்பு  தான். அத்தகைய எதிர்பார்ப்போடு அமைதியாய் அமர்ந்திருக்கும் இருக்கும் கூட்டத்தில் திரையரங்கின் இருட்டில் ஏதோ ஒரு மூலையில் இருந்து   டடடான் டான் டட்டான்  டட்டான் டான் என்று ஒலிக்கும் இசை, “ஏ! ரஜினி வராரு ரஜினி வராரு ரஜினி வரப்போறாரு” என்பதை அறிவிக்கும் அறிவிக்கையாகவே இருக்கின்றது.அது  ஒவ்வொருவருள்ளும் இருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் “ஏ! ரஜினி வராரு ரஜினி வராரு ரஜினி வரப்போறாரு”  என்பதை  கடத்த, அந்த எதிர்பார்ப்பு மிகுதியாகி வெடிக்க போகும் தருணத்தில் யாரும் இருக்கையில் இருப்பதில்லை. அவர்களின் உடல் இருக்கையில் இருந்தாலும் மனம் பறந்து கொண்டு இருக்கின்றது. உற்சாகத்தின் உச்சத்தைத் தொட போகும் நேரத்தில், அந்த உற்சாகத்திற்காக இருந்த காத்திருப்பு முடியப்போகிறது என்கிற அறிவிப்பு நிச்சயம் ஒரு surgeஐ, ஒரு hype  ஐ  ஏற்படுத்தவே செய்யும். அதன் காரணமாகவே ரஜினிக்காக அமைக்கப்படும் பிரத்யேக இசை இன்னும் பிரத்தேயகமாக ஆகின்றது.

Hero BGM ஐ தவிர்த்து விட்டு பார்த்தாலும் கதையோடும் காட்சிகளோடும் கணகட்சித்தகமாக   பொருந்தும் இசையை இமான் அவர்கள் தந்து இருக்கின்றார். கணம் என்பது காலத்தின் மிக குறுகிய அளவீட்டை குறிப்பது. இசையை எங்கு தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதே பின்னணி இசை கோர்வையின் முக்கிய அம்சம். அந்த வகையில் காட்சிகளின் அளவோடு பொருந்தும் இசையை தந்து ஒரு காட்சியில் இசை எங்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் சரியாக செய்து கணகட்சித்தமான பின்னணி இசையை தந்து இருக்கின்றார் இமான் அவர்கள்.Climax இல் சித்ரா அவர்களின் குரல் எந்த இடத்தில் எந்த நொடியில் ஒலிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்தற்காகவே இமான் அவர்களை பாராட்டலாம்.சித்ரா அவர்களின் குரலே அந்த நொடியில் சரியான பின்னணி இசையாக அமைந்து உயிர் உள்ளவர்களின் உயிரை தொட்டு பார்க்கின்றது.

SPB-திரையில் அவர் குரலோடு ரஜினியை பார்க்கும் பொழுதில் நமக்கு SPB  தெரிவதே இல்லை அந்த குரலும் ரஜினி எனும் காந்தத்தோடு ஒன்றிவிடுகிறது.ரஜினியின் பாடல்களில் SPB உப்பை போன்றவர். அவர் ரஜினிக்காக பாடிய பாடல்களில் SPB  நமக்கு புலப்படுவதேயில்லை.மாறாக, SPB ரஜினிக்காக பாடாத ஒரு பாடலிலேனும் நாம் SPB ஐ தேடியிருப்போம் அதன் காரணமாகவே ரஜினி SPB கூட்டணியில் SPB ஐ உப்போடு ஒப்புமை படுத்த வேண்டியதாகிற்று.

படத்தை பற்றி இன்னும் நிறைய பேசலாம். நல்ல படம்.

இதில் இமானின் இசை, சித்ரா SPBயின் குரல், ரஜினி எல்லாவற்றிக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை உயிரோட்டமாக இருப்பது(being soulful). உயிர் எல்லோருக்குள்ளும் இருக்கின்றது.ஆனால், எல்லோரும் எல்லா தருணங்களிலும் உயிரோட்டமாக இருப்பதில்லை.திருமந்திரத்தில் சொல்லப்பட்டதற்கும் படத்திற்கும் இருக்கும் சம்மந்தம் இது தான்.அதிலும் மிக முக்கியமாக ரஜினி தான் அந்த தொடர்பு புள்ளி.

சோர்வாக இருக்கும் ஒருவரை உயிரோட்டமாக இருக்கிறார் என்று நிச்சயம் சொல்ல முடியாது.நாமும் பெரிய அளவில் உயிரோட்டமில்லாமல் இருக்கின்ற வேளையில் சோர்வாக இருப்பவரின் அருகில் இருக்கும் போது  இன்னும் சோர்வடைந்து விடுவோம்.

அதுவே சோர்வாக இருக்கும் ஒரு கூட்டத்தின் நடுவே நல்ல உயிரோட்டமான ஒரு ஆளை அனுப்புங்கள், அந்த கூட்டம் புத்துயிரும் புது ஆற்றலும் பெரும். நேர்மறையான அதிர்வுகளை(positive vibes) ஏற்படுத்தும் அந்த உயிரோட்டமான ஆளாகவே தான் ரஜினி சுமார் 5 தசாப்தங்களாக இருந்து வருகிறார்.

ஊக்கத்தோடு இருப்பது தான் உயிரோட்டத்தோடு இருப்பதற்கு அடையாளம்.

“ஊக்கமது கை விடேல்”- ஒளவையார். அந்த வாக்கியத்தின் அழகு பாருங்கள். ஊக்கம் கைவிடேல் என்றாலும் அதே பொருள் தான். ஊக்கம் + அது என்பதில் ‘அது’ என்கிற ஊக்கத்தை மது என்றாக்கிறது.

இந்த ஊக்கம் இருக்க வேண்டுமெனில் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அது தான் இயல்பும் கூட.மகிழ்ச்சியை தாராத கோபம் பொறாமை போன்ற உணர்வுகள் இயல்பை மீறிய உணர்வுகள் ஆகும்.(being soulful is nothing but being happy which is being self motivated)

மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி? ஸ்வதர்ம பரிபாலனா. ஏற்கனவே கேட்டு இருப்பீர்கள்.பாபா திரைப்படத்தில் சொல்லப்பட்டது தான் ஸ்வதர்ம பரிபாலனா. உடல், மனம், இவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு சுற்றி இருப்பவர்களையும் கவனித்து கொள்வது தான்  ஸ்வதர்ம பரிபாலனா.

திருமூலர், இந்த உடலோடு இருப்பதற்கு உடன்பாடு இல்லமாலேயே கோடி வருடங்கள் இதில் இருந்தேன் என்றும் இதில் ஒளிந்திருக்கும் கள்வனான சிவனை கண்டேன் என்கிறார்.  (சிவன்-சிவம் என்பதை பற்றி போன பகுதியில் விளக்கி இருந்தோம்). மது அருந்துவதை போதை என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் சிவ சமாதி நிலையின் போதையை அறியாதவர்கள் என்கிறார்.அதோடு உடம்பை நோயில்லாமல் வைத்துக்கொள்வதற்கான வழிகளையும் சொல்லியிருக்கின்றார்.

பிராணாயாமம்,அது தான் அவர் நோயில்லாமல் உடலை வைத்துக்கொள்ள பரிந்துரைக்கும் முதன்மையான விஷயம்.பிராணாயாமம் மாலையில்  செய்தால் கபம் சார்ந்த நோய்கள் வாராது; மத்தியானத்தில் செய்தால் வாதம் சார்ந்த நோய்கள் வாராது. காலையில் செய்தால் பித்தம் சார்ந்த நோய்கள் வாராது என்கிறார்.உடம்பை சரியாக வைத்துக்கொண்டு அதன் மூலமாகவே இறைவனை அடைந்து பேரின்பத்தை அடையலாம் என்கிறார் திருமூலர்.புத்தரும் கூட ஞானம் அடையும் வழிகளை தேடும் போது உடம்பை பேணாமல் இருந்தால் நிச்சயம் அது சாத்தியப்படாது என்கிற தீர்மானத்திற்கு வருகிறார்.

அஞ்சனம் போன்றுடல் ஐஅறும் அந்தியில் வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும் நஞ்சறச் சொன்னுேம் கரைதிரை நாசமே. -திருமூலர்

கர்ம யோகத்தின் தொடக்கத்தில், எந்த செயல்களும் செய்யாமல் இருப்பது துறவு ஆகாது. அப்படி இருந்தால் உன் உடம்பை கூட உன்னால் பேண முடியாது என்கிறார். கிருஷ்ணர்.

நிச்சயம் நாம் இந்த நிலை முயற்சிகளை சரியான முறையில் எடுப்பதற்கு  வாய்ப்பில்லை.

மீண்டும் ரஜினியிடம் வருவோம்.ரஜினி என்றால் ஒரு உற்சாகம் வருது. ஒரு மகிழ்ச்சி வருது எப்படி! ஒருவர் எதை அதிகமாக கொண்டு இருக்கின்றாரோ அதையே தான் அவர் உலகிற்கு கொடுக்கின்றார்.

சோகத்தில் தன்னை அழுந்தி கொண்டவரிடம் சென்று ஒரு நல்ல பாட்டு பாடு என்றால் நிச்சயம் அவர் உங்களையும் சோகத்தில் ஆழ்த்திவிடுவார். நாம் கோபத்தை வெளிப்படுத்தும் போது அங்கே பதிலாக கோபம் தான் கிடைக்கின்றது.அங்கே கோபம் தான் பெருகுகிறது. ரஜினியிடம் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே அதிகம் இருக்கின்றது.அது அவர் இருக்கும் இடங்களிலெல்லாம் பல்கி பெருகுகிறது. நீங்கள் கவனியுங்கள் உங்களுடைய இருப்பு எத்தனை பேர்களை மகிழ்விக்கிறது என்று.

70 வயதை நெருங்கிவிட்ட ரஜினியால் எப்படி முடிகிறது? அவர் பாபா படத்தில் சொன்ன ஸ்வதர்ம பரிபாலனா. உடம்பு, மனம், சுற்றம் இதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார். நிச்சயம் நம் கர்மவினைகளுக்கு ஏற்ப உடம்பு நோய்களுக்கு ஆட்படுவது நடந்தே தீரும். ரஜினியின் புகைபிடிக்கும் பழக்கம், ஆரம்ப கால முன் கோபம் இவையெல்லாம் ரஜினியின் உடம்பை பாதிக்கமால் இல்லை.அத்தனை பாதிப்புகளையும் தாண்டி இன்றும் ரஜினி தானும் மகிழ்வாய் இருந்து மற்றவர்களையும் மகிழ்விக்கிறார். காரணம்,அவர் ஊக்கத்தை எப்போதும் கைவிட்டதில்லை.   மனமே தான் இங்கு உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் என்ன ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அவர் மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு இருக்கின்றார்.

மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதில் வெறுப்பு பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருப்பதோடு உடம்பிற்கு நேரும் துன்பம் பற்றிய கவலை இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு nervous breakdown; ஒரு சிறுநீரக சிகிச்சை; தற்போது ரத்தக்குழாய் சிகிச்சை இது எதுவும் ரஜினியின் மனதையோ ஊக்கத்தையோ பாதிக்கவில்லை. பாதித்து இருந்தால் நிச்சயம் அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, மற்றவர்களை மகிழ்விக்கவும் முடியாது.அதோடு, எத்தனை வருடம் இருக்கிறோம் என்பதை விட எத்தனை வருடம் நாம் நாமாகவே இருக்கிறோம் என்பதிலும் உடல் மனம் இவற்றின் ஆரோக்கியம் முக்கியமாக அமைகிறது. “நான் முன்ன மாதிரி இல்லை” என்னும் வசனத்தை ஒரு சோக நிகழ்விற்கு பின்னரோ அல்லது சில உடல் உபாதைகளுக்கு பின்னரோ நம்மில் பலர் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால், ரஜினி, ரஜினியாகவே தான் இருக்கின்றார். ரஜினி, ரஜினியாகவே இருக்க முடிவதன் ரகசியம் தான் ஸ்வதர்ம பரிபாலனா. உடலை பேணுவதற்கு,திருமூலர் சொல்லும் யோகம் ப்ரானணயமாம் தியானம் இவற்றையும் பயிற்சி செய்து மிக முக்கியமாக மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றார் ரஜினி.

அதன் காரணமாகவே நமக்குள் இருக்கும் ஆனந்தத்தை அவரால் வெளிக்கொண்டு வரமுடிகிறது.ஆம். திருமூலர் சொன்ன அந்த போதை நமக்குள்ளேயே தான் இருக்கின்றது.ஊக்கம் கை விடாமல் மனதை ஆரோக்கியமாக வைத்து, கூடுமானவரையில் உடம்பையும் பேணி; ஒரு மகிழ்வான அதிர்வோடு நாம் எப்போதும் இருப்போமானால் நிச்சயம் ரஜினியின் இருப்பு எத்தகைய ஆனந்தத்தை நமக்குள் இருந்து வெளிக்கொணர்கிறதோ அதே அளவு மகிழ்ச்சியை நம்முடைய இருப்பும் மற்றவர்களிடம் இருந்து வெளிக்கொணரும்  என்பது திண்ணம்.

இனிமை மாறாமல் 72 வது வயதில் அடி எடுத்து வைக்க இருக்கும் அந்த இளைஞர் ரஜினிக்கு   அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ஹாப்பி பர்த்டே அண்ணாத்த!

Error happened.
Exit mobile version