கதிர் விஜயம்

சொர்க்கத்தில் இருந்து சோவின் பதில்கள்-03;சட்டத்தைப் பின்பற்றத்தான் தைரியமும் வீரமும் தேவைப்படுகிறது

தவெக அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்காததை நீங்கள் வரவேற்கிறீர்களா?

விளக்குமாறு எடுத்து வைத்திருக்கிறேன்; சுத்தம் செய்து சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டியதுதான் பாக்கி. நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டியதில்லை என்கிற நிலை தொடருமானால், கர்நாடகாவிடம் இராணுவம் கட்டியெழுப்பிச் சண்டைக்குச் செல்வீர்களா? கேரளாவின் பெரியாறு அணை, கர்நாடகாவின் காவிரி, இன்னும் சில தேர்தல் முடிவுகள் குறித்த வழக்குகளை நினைத்துப் பாருங்கள். ஆட்சியில் இருப்பவர்கள் தீர்ப்பைப் பின்பற்றாமல் இருக்க என்ன சூழலை வேண்டுமென்றாலும் உருவாக்கலாம் என்கிற நிலையை நீங்கள் வரவேற்பீர்களா? ஆளுங்கட்சி உறுப்பினர் மீது ஆட்சியர் புகார் அளித்து வழக்கு நடக்கிறது. தீர்ப்பு ஆளுங்கட்சிக்கு எதிராக வந்தால் வன்முறை நடக்கும் என்று தீர்ப்பைப் பின்பற்றாமல் இருக்கலாமா?

உச்சநீதிமன்ற உத்தரவை விஜய் தலைமையிலான தமிழக அரசு பின்பற்றாதது குறித்து அவரது இரசிகர்கள் சிலாகித்துக் கொள்கிறார்களே, அவர்களுக்கு உங்கள் செய்தி என்ன?

“ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்று திரிவதற்கு, இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது சாலையில் உள்ள தடுப்புகளைப் பொறி பறக்க இழுத்துச் செல்லும் பொறுக்கிகள் போதும்; முதலமைச்சர் தேவையில்லை. இரண்டுமே சட்ட மீறல்கள்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதெல்லாம் சட்டத்தைப் பின்பற்றத்தான் தைரியமும் வீரமும் தேவைப்படுகிறது.

அரசியலமைப்புப்படி நடந்திருக்க வேண்டிய அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது, அதனால் ஆட்சியைக் கலைக்க முடியும் என்கிறார்களே?

முடியும்; வழி இருக்கிறது. ஆனால், கலைக்க மாட்டார்கள். கலைத்தால் விஜய்க்கே சாதகமாக முடியும் என்று செய்யமாட்டார்கள். அதே வேளையில், மேற்கொண்டு நடக்கும் விசாரணையில், தீபத்தூணில் விளக்கு ஏற்றலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மீண்டும் மீறப்பட்டால், அப்போது இந்த அரசுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படலாம்.

தீர்ப்பை நடைமுறைப்படுத்தாததற்கு ஆட்சி கலைக்கப்பட வேண்டுமெனில், சபரிமலை வழக்கு, காவிரி வழக்கு இரண்டிலும் தீர்ப்பைப் பின்பற்றாத அரசு கலைக்கப்படவில்லையே?

அந்த வழக்குகளில் தீர்ப்பு பின்பற்றப்படவில்லை என்று யாராவது திமுககாரர்கள் உங்களுக்குச் சொன்னார்களா? அப்போதைய கேரள முதல்வர், களேபரங்களை மீறி இரண்டு பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்யப் பாதுகாப்புக் கொடுத்தார்; நீதிமன்ற உத்தரவு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று சொன்னார். கர்நாடகம் நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறந்துகொண்டுதான் இருக்கிறது. வறட்சிக் காலத்தில் பெங்களூருவின் நீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு தாமதித்தார்கள். பெங்களூருவிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்தானே. அதோடு, சபரிமலை வழக்கு அரசியல் நோக்கத்தோடு, தெய்வபக்தி இல்லாதவர்களால் வீம்புக்குப் போடப்பட்ட வழக்கு. அது பாஜகவே பிரச்சனை உருவாக்க அப்படிச் செய்திருக்கலாம்; அல்லது பாஜகவைச் சீண்டி, சிறுபான்மையினர் நலம், பெண்கள் நலம் என்று காட்டிக்கொள்ள எதிர்க்கட்சிகள் செய்திருக்கலாம்.

இந்தத் தீபத்தூண் பிரச்சனை ஏன் இத்தனை சலசலப்பை உண்டாக்க வேண்டும்?

திமுகதான் அதற்குக் காரணம் என்று சொன்னால், “எல்லாவற்றுக்கும் திமுகவைச் சொல்லாதே” என்று சிலர் வருவார்கள். உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த சமயத்தில் விளக்கு ஏற்றிவிட்டு அப்பீல் செய்திருந்தால் பிரச்சனை இல்லை. முன்னாள் முதல்வர் ஜெ. மறைவிற்குப் பின், தமிழகத்தில் பாஜக எதிர்ப்புதான் அரசியல் என்கிற மனநிலையை விதைத்து வளர்த்துவிட்டார்கள். பாஜகவுக்கு ஆதரவாகப் பேசினால் “முட்டாள்”, “சங்கி”, “மாட்டு மூத்திரம் குடிக்கிறவன்” என்றெல்லாம் பரப்பியதன் விளைவு. சாமானிய இஸ்லாமியர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத பொழுதும், “என் ஆர்ம்ஸ் பாத்தியாடா” என்பது போல, பாஜகவை நாங்கள்தான் எதிர்க்கிறோம் என்று காட்டிக்கொள்ள, வீம்பாய் விளக்கேற்ற விடாமல் தடுத்து, மேல்முறையீடு செய்து, நீதிபதி மீது தனிநபர் தாக்குதல்களைச் செய்து, “நாங்கள் மாட்டு மூத்திரம் குடிக்காதவர்கள்” என்று நிரூபணம் செய்ததைப் போல் பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். திரிசங்கு ஆட்சி நடத்தும் விஜய், இப்ப விளக்கு ஏற்றினால் நம்மை “மாட்டு மூத்திரம் குடிக்கிறவன்” என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று அஞ்சி, அதையே செய்கிறார்.சட்டப் படி நடக்க வேண்டிய சட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி சட்டத்தை மீறினால் வரும் பின்விளைவைகளை சந்திக்க தயார் என்கிறார். அதை இந்த சமூகம் கொண்டாடியது அப்படி கட்டமைக்கப்பட்ட சமூக மனநிலையின் தொடர்ச்சி தான் இது

விளக்கேற்றியிருந்தால் கலவரம் நடந்திருக்குமா?

கலவரம் நடக்க வேண்டுமென்றாலும், கலவரம் செய்ய வேண்டுமென்றாலும் விளக்கு ஒரு பொருட்டே இல்லை. இஸ்லாமியர்கள் எதிர்க்கவும் இல்லை. திமுக அரசு இஸ்லாமியத் தலைவர்களைத் தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு, எதிர்ப்பு இருப்பது போல பிம்பத்தை வளர்த்திருக்கிறது.

போன முறை திமுக அரசும் அறநிலையத்துறையும் மேல்முறையீடு செய்த பின்னர்தான் ஜமாத் அமைப்புகள் தங்களை மேல்முறையீட்டில் சேர்த்துக்கொண்டன.

குடியுரிமைச் சட்டத்திருத்தப் போராட்டம் போன்றுதான் இதுவும்; அதிமுக ஆட்சிக்கு இடையூறு செய்ய, இஸ்லாமியத் தலைவர்களைக் கொண்டு திமுக போராட்டத்தை முன்னெடுத்தது. திமுக ஆட்சியில் சட்டம் அமல்படுத்தப்பட்டது; யாரும் ஏன் போராடவில்லை?

திமுக சிறுபான்மையினரை அரசியல் ஆதாயங்களுக்காகப் பொம்மை போல் பயன்படுத்துகிறது.

ஜவாஹிருல்லா, “திருவண்ணாமலையில்தான் ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை; புதிய நடைமுறை கூடாது என்கிறோம்” என்கிறாரே?

மலைகள் எல்லாவற்றிலும் தீபம் ஏற்றும் வழக்கம், வேற்று நாட்டு மதங்கள் இங்கே வருவதற்கு முன்பிருந்தே இருந்தது. தர்கா வழிபாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது; ஆனால் இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள், அதற்கு மதிப்பளிக்கிறோம்தானே! முன்பு சொன்னது போன்று, இங்கே இஸ்லாமியர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஆட்சேபனையும் இல்லை. அவர்களை வழிநடத்தும் தலைவர் திமுக போன்ற கட்சியின் பிடியில் இருப்பதுதான் பிரச்சனை. ஒருவேளை ஜெ. இருந்திருந்தால், இதே இஸ்லாமியத் தலைவர்கள் முன்னிலையில், அவர்களையும் சேர்த்து வைத்தே விளக்கேற்றியிருப்பார்.

பல அரசியல் தலைவர்களும் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தில்தான் ஏற்ற வேண்டும், புதிய நடைமுறையைக் கொண்டு வரக்கூடாது என்று பேசுகிறார்களே?

1947 ஆகஸ்டு 15 சமயத்தில், ஒரு கூட்டம் “200 ஆண்டுகளாக எங்களை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் ஆட்சியே வழக்கம் போலத் தொடர வேண்டும்” என்று எழுதிக்கொண்டும் இருந்தார்கள். அது மாதிரிதான் இதுவும். ஆங்கிலேயர்கள் நம்மை நூறு வருடம் ஆட்சி செய்தார்கள் என்பதற்காக அது வழக்கமாகிவிடுமா?

ஆகமச் சான்றுகள் அடிப்படையில் எப்போதும் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது என்று கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறதே, ஆகமம் என்ன சொல்கிறது?

மலையில் எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றெல்லாம் ஆகமம் ஒன்றும் சொல்லவில்லை. ஆகமங்கள் எழுதப்பட்ட பொழுது இந்தக் கோவிலே இல்லை; பின் எப்படி இந்த மலையின் எந்த இடத்தில், எந்த உயரத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆகமம் சொல்ல முடியும்? அரசு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாக அமைப்புகளைக் காரணம் தேடச் செய்கிறது. தீபம் ஏற்றுவது மதச்சடங்கு என்று குறுக்கிவிட முடியாது. நீண்ட இரவுகளைக் கொண்ட காலத்தை வரவேற்கும் மண்ணின் கலாச்சாரம். உயரமான இடங்களிலெல்லாம்தான் தீபம் ஏற்றினார்கள். முருகன் கோவிலுக்கு முன்னதாகவே அங்கே சிவன் கோவில் இருந்தது. இதை ஏதோ முருகனுக்கானது என்பது போல் ஆக்கிவிட்டதோடு, ஆகமத்தை வேறு துணைக்கு அழைக்கிறார்கள்.

திருமாவளவன், விளக்கு ஏன் ஏற்றக்கூடாது என்று புதுப்புதுக் காரணங்கள் கண்டுபிடித்து விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றி உங்கள் கருத்து?

இதே திருமாவளவன் பாஜக கூட்டணியில் இருந்திருந்தாலோ, அல்லது தவெக அரசு விளக்கு ஏற்ற முடிவு செய்திருந்தாலோ, விளக்கு ஏன் ஏற்ற வேண்டும் என்று காரணங்களை அடுக்கிக்கொண்டிருந்திருப்பார். தனிமனித நேர்மை, கொள்கைகளைத் தாண்டி, இங்கே அரசியல்வாதிகள் அரசியலுக்காக அவர்களே ஏற்படுத்திக்கொண்ட நிர்ப்பந்தங்களுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அம்பேத்கரைக் கொள்கைத் தலைவர் என்றுவிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததை வரவேற்பது எல்லாம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில்தான் நடக்கும்.

எங்கு விளக்கேற்றினால் என்ன?

சரிதான். நம்முடைய கலாச்சாரம், சனாதன தர்மம் “நீ இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும்” என்று எதையும் நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால், மனிதர்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நாம் மதிக்க வேண்டும். தர்கா வழிபாட்டை நபிகள் எதிர்க்கிறார்தான்; ஆனாலும் சில முஸ்லிம்களின் உணர்வுகளும் நம்பிக்கையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்வது போலத்தான் இதுவும்.

இந்த பாஜக எல்லா இடங்களிலும் மதக்கலவரத்தைத் தூண்டப் பார்க்கிறார்களே?

இந்தியாவின் மற்ற பகுதிகளில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது. திருப்பரங்குன்றம் பிரச்சனை, பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-உம் தொடங்குவதற்கு முன்னால் இருந்தே வழக்காக இருக்கிறது.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, இதற்கு ஏன் எல்லோரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

எல்லோரும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவே செய்கிறார்கள். இன்று ஒரு தெருவில் குப்பை அள்ளப்படாமல் இருந்திருக்கலாம். அரசு மருத்துவமனையில் யாருக்கேனும் மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். இதெல்லாம் வேறு வேறு சமயங்களில், வேறு வேறு மனிதர்களுக்கு, வேறு வேறு இடங்களில் நடப்பது. காவிரி பிரச்சனை, திருப்பரங்குன்றம் பிரச்சனை எல்லாம் சம்பந்தப்பட்ட எல்லார் மீதும் ஒரே சமயத்தில் தாக்கம் ஏற்படுத்த வல்லது. அதனால் இத்தகைய பிரச்சனைகளில் இயல்பாகவே அதிக கவனம் குவிகிறது.

Error happened.
Exit mobile version