கதிர் விஜயம்

இராவண அரசியல்-23; சமஸ்கிருத பெயரில் தமிழ் தாத்தன்!

இந்தத் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் திராவிட இயக்கங்களின் நீட்சியாகத்தான் இருந்திருக்கிறார்கள், அப்படித்தான் இப்போதும் இருக்கிறார்கள் என்பதை நாம் எப்போதுமே நிறுவி வந்திருக்கிறோம்.

இப்போது முருகனுக்குக் காப்புரிமை கேட்டு கொடி பிடிக்கிறவர்களும், எப்போதும் இராவணனின் பெயரன்களாகத் தங்களைப் பற்றித் தாங்களே பெருமை பேசிக்கொள்கிறவர்களும் தமிழ்ச் சித்தாந்தங்களால் அல்லாமல் திராவிடச் சிந்தனைகளாலும், அனுமானங்களின் அடிப்படையில் நிறுவப்பெற்ற ஆங்கிலேய ஐரோப்பிய ஆய்வாளர்களின் முரணான முடிவுகளாலும் ஆட்கொள்ளப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சீமானை எடுத்துக்கொள்ளுங்கள்; தமிழ் தேசியம் பேசினார், கடவுள் இல்லை என்றார், பின்னர் முப்பாட்டன் முருகன் என்றார். இவையெல்லாமே பொய், திராவிடச் சித்தாந்தங்களின் நீட்சியேதான்.

ஆங்கிலேய ஐரோப்பிய ஆய்வாளர்களின் முரணான அனுமானத்தின் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளின் படி, திராவிடத் தமிழ்த்தேசியவாதிகள் நம்புவது, பிராமணர்கள் ஆரியர்கள், திராவிடர்களின் நிறம் கருப்பு. இப்படி நிறைய இருக்கிறது.

இவர்களிடம் எப்போதேனும் பேச்சு கொடுத்திருக்கிறீர்களா?

இராமாயணம் வெறும் கட்டுக்கதை என்பார்கள்; ஆனால், இராவணன் தமிழன் என்பார்கள். கட்டுக்கதையைச் சேர்ந்த இராவணன் மட்டும் எப்படி உங்களின் தாத்தன் ஆனான் என்றால், அதுவந்து ஆரியத் திணிப்பு என்பார்கள்.

சரி! இந்த அனுமான ஆய்வுகளின் படி, வெள்ளையாக இருக்கிறவன் ஆரியன், கருத்தவன் திராவிடன் என்றால், சிவந்த மேனியன் என்கிற அர்த்தத்தில் சேயோன் என்றும் அழகன் என்றும் சொல்லப்படுகிற முருகன் எப்படி முப்பாட்டன் ஆனான்,கருநிற கிருஷ்ணனும் இராமனும் எப்படி ஆரியர்கள் ஆனார்கள்? அதுவந்து ஆரியத் திணிப்பு என்று முடித்துக்கொள்வார்கள்.

பிராமணர்கள் ஆரியர்கள் என்றால், சிவதாண்டவ தோத்திரத்தைச் சமஸ்கிருதத்தில் படைத்த பிராமணன் இராவணன் எப்படி திராவிடன் ஆனான்? அவனை முடிவாகத் தமிழ்தேசியவாதிகள் எப்படி திராவிடத்தில் இருந்து தமிழ் தேசியவாதியாகத் தத்தெடுத்துக்கொண்டீர்கள்? இப்படிக் கேள்விகளை எந்த திராவிடத் தமிழ்தேசியவாதிகளிடமும் கேட்டு விடாதீர்கள்; கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஓடிவிடுவார்கள்.

தமிழ்தேசியம் பேசிய சீமானும் அவரைப் பின்பற்றுகிறவர்களும் கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது, நிலங்களுக்கு உரிய தெய்வங்கள் தமிழில் இருந்திருக்கிறதே என்று கேட்டதும் முப்பாட்டன் முருகன் என்றதையே தான் இன்று வெற்றிமாறன், தனுஷ் வரை கையில் எடுத்துக்கொண்டு  முரண்பாட்டின் உச்சமாக வேல் தூக்கிப் போலி உரிமை கொண்டாடுகிறார்கள்

சரி! சேயோனை முப்பாட்டனாக்கி, காப்புரிமை கேட்டு சண்டையிடுகிறீர்கள் சரி. மாயோனை ஏன் மொத்தமாகக் கைகழுவி விட்டீர்கள்?சைவம் கௌமாரம் போல் அல்லாது வைணவத்தில் ரொம்ப சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பதாலா? சைவம் கௌமாரம் வைணவம் போன்ற உட்பிரிவுகள் எல்லாம் இவர்களுக்கு வேறு வேறு சமயங்கள் கத்தோலிக்கமும் பெந்தகோஸ்து போன்ற உட்பிரிவுகள் மட்டும் இவர்களுக்கு ஒரே மதம்.

சிலப்பதிகாரத்தில், ஆய்ச்சியர் குரவை என்கிற பகுதியில், ஆயர்கள் கூடிப் பாடும் பாடலில் மாயோனின் அதாவது பெருமாளின் அவதாரங்கள் பற்றிப் பாடுவது போன்று எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாக எழுதப்பட்ட சிலப்பதிகார காலத்திற்கும் முன்பிருந்தே கதையாக, கூத்தாக மாயோனின் அவதாரம் பற்றிய செய்தி தமிழர்களிடம் கடத்தப்பட்டு வந்திருக்கிறது என்கிற பொழுது, இராமன் எப்படி தமிழனின் எதிரி ஆவான்? இவர்களிடம் பதில் இருக்காது.

மாறாக, ஒரே போடாகச் சிலப்பதிகாரத்தையும் ஆரியக் கருத்துத் திணிப்பு என்று விட்டான் இந்த திராவிட நீட்சியின் தமிழ் தேசியக் குட்டிச் சாத்தர் ஒருவர். நாம் இந்த இடத்தில் அவரை மரியாதைக் குறைவாகப் பேசவில்லை. அவர் நாளைக்கே குட்டிச்சாத்தான்தான் எங்கள் குல தெய்வம், ஆரியர்களும் இல்லுமினாட்டிகளும் சதி செய்து அதை மாற்றிவிட்டார்கள் என்பார். அதனால் அவரைக் குட்டிச்சாத்தான் என்று சொல்வது உயர்வு நவிற்சியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

மரியாதைக்குரிய தமிழ் நூல்களை மறுக்கும் போலித் தமிழ் பற்றாளரான அந்தக் குட்டிச் சாத்தர் சொல்கிறார், கோவில்களில் மணியடிக்கும் வழக்கம் புத்த மதத்திலிருந்து ஆரியம் எடுத்துக்கொண்டதாம். ஆம்! அப்படியே புத்தத்தில் இருந்து ஆரியம் வந்து, கடல் வழியாக ஐரோப்பா சென்று தேவாலயங்களில் நிலைகொண்டுவிட்டது.

முடியுடையோர்களான இவர்களிடம் யாரேனும் சொல்ல வேண்டும், உலகம் முழுமைக்கும் பாடுவதும் ஆடுவதும் மணியோசைகள் எழுப்புவதும் வழிபாட்டு முறைகளில் வேறுவேறு வடிவங்களில் இருந்துவந்திருக்கிறது என்று.

கடவுள் இல்லை என்று கூவிக்கொண்டிருந்த ராமசாமி, ராமனை எதிரியாக நிறுவி வந்தார். அவரின் கூட்டத்தில் இருந்த புலவர் குழந்தை என்ன செய்து வைத்தார்? இராவண காவியம் என்று ஒன்றைப் படைக்கிறார். இந்தத் திராவிடக் கூட்டம் இப்படித்தான் நம்மிடம் கருத்துகளைத் திணிக்கிறது. அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் காவியமாகவே செய்து வைத்து, இவன்தான் தமிழர்களின் தலைவன் என்று இராவணனை நிறுவுகிறார்கள்.

இவர்கள் இப்படிச் செய்த பொழுது இராவணனின் பெயரை மட்டுமேனும் மாற்றியிருக்கலாம்; செய்யாமல் விட்டுவிட்டார்கள். நூல்களின் படி, இராமன், இராவணன் இருவரும் கருநிறத்தவர்கள். இருவரின் பெயரும் சமஸ்கிருதப் பெயர். நம்மிடம் இருக்கும் பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் படி, ‘ர’ தமிழில் ஒரு வார்த்தையின் முதல் எழுத்தாக வராது.

அதன் காரணமாகவேதான் அதோடு துணை எழுத்துச் சேர்த்து எழுதுகிறோம். அது தமிழில் சரி கிடையாது. தமிழும் சமஸ்கிருதமும் இன்னும் மற்ற பல இந்திய மொழிகளைப் பொறுத்தவரையில், எழுதப்படுகின்ற ஒரு எழுத்து சொல்லில் எழுதப்பட்டது போலவேதான் ஒலிக்கும். ஆங்கில ஐரோப்பிய மொழிகளில் know (க்நொவ்) என்பது நோ என்று ஒலிப்பதுபோல் இந்திய மொழிகள் இருப்பதில்லை.ஒரு சொல்லின் எழுத்து வடிவமும் ஒலி வடிவமும் மாறாமல் இருப்பதுதான் அட்சரம் (Syllabic nature of Indian scripts).அட்சரம்” என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லே. சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லி நம் கலாச்சார அடிப்படை எல்லாவற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்

நாம் ராமன், ராவணன் என்றுதான் சொல்கிறோமே தவிர இ ராமன், இ ராவணன் என்று சொல்வதில்லை. நீங்கள் இ ரவி என்று சொல்வதில்லை. ரங்கநாதன் என்கிற பெயரை ‘இ’ சேர்த்து வாசித்தால் இரங்கநாதன் ஆகிவிடும். அதனால், சிலர் அரங்கநாதன் ஆக்கிக்கொண்டார்கள்.

தமிழில் அதற்கான தேவையில்லை. சில சமஸ்கிருத வார்த்தைகளையும் பெயர்களையும் நாம் சேர்த்துக்கொண்ட பொழுது, ஆங்கிலம் போல் தேவையில்லாமல் ஒரு எழுத்தைச் சேர்ந்துகொண்டோம். know க்நொவ்வில் கே (K) சைலன்ட் என்பது போல.

தமிழ் இலக்கணப்படி இராவணன் பெயரே தமிழ் பெயர் இல்லை என்று ஆகிவிட்டதா? பிராமணர்கள் ஆரியர்கள் வெள்ளை நிறத்தவர்கள் என்றார்கள் தானே! ராத்திரி போன்ற நிறமுடையவன் ஆனதால் அவன் ராவணன் என்றானான் என்று ஒரு தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவன் உண்மையான பெயர் தசக்ரீவன். பேரொலி எழுப்புபவன் என்கிற அர்த்தத்தில் சிவன் அவனுக்கு வைத்த பெயர் தான் இராவணன்.

அதிலும் நிறம் என்பது தான் தமிழ், வண்ணம் என்பது சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம். கொண்டையை மறைக்காத கதையாக, வடக்கில் பிறந்த பிராமணனை இவர்களின் தாத்தனாகத் தத்து எடுத்துக்கொண்ட பொழுது பெயரை மாற்றாமல் விட்டுவிட்டார்கள்.

இராவணன் பெயரை மாற்றவில்லை வேறு என்ன செய்தார்கள்? இராவணனைத் தமிழ் கடவுள் மாயோனின் எதிரியாக்கி, மாயோனை மோசமானவனாகச் சித்தரித்துக்கொண்டிருக்கிறார்கள். இதைச் சொன்னால், அந்த மாயோன் வேறு இந்த மாயோன் வேறு என்பார்கள். சிலப்பதிகாரம் அந்த மாயோனின் அவதாரமாகத்தானே இராமனைச் சொல்கிறது என்றால்… அதெல்லாம் செல்லாது, அதெல்லாம் பிற்காலத்தையது என்பார்கள். அதாவது இரண்டாயிரம் வருடத்திற்கும் முன்னர் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் எல்லாமே ஆரியத் திணிப்பு. ஐரோப்பிய ஆங்கிலேயர்களின் அனுமானம் உண்மை.

இவர்களுக்கு ஜெருசலத்தில் இருந்தோ, மெக்காவில் இருந்தோ கொண்டுவந்து எதைத் திணித்து இருந்தாலும் வாயை மேலும் திறக்க முடியாதபடி வைத்துக்கொண்டு பேசாமல் இருப்பார்கள்.

ஒரு வாதத்திற்கு, சரி திராவிடத் தமிழ்தேசிய அறிவு வழிந்தவர்களே! நீங்கள் சொல்கிறதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் நம்பிக்கைகள் திணிப்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும். சிலப்பதிகாரத்தை, திருவாசகத்தை, திருமந்திரத்தை, ஔவையாரை, திருப்புகழை, பரிபாடலை, திருமுருகாற்றுப்படையை, அகநானூற்றில் புறநானூற்றில் வரும் ராமனை நாங்கள் அதிலெல்லாம் சொல்லியபடி அப்படியே ஏற்றுக்கொண்டு போகிறோம். மெக்காவில் இருந்தும் ஜெருசலத்தில் இருந்தும் வந்த கதைகளுக்கு மூடிக்கொண்டிருப்பது போல் இதிலும் மூக்கை நுழைக்காமல் முடிகொண்டிருக்க வேண்டியதுதானே! என்று நாம் கேட்க வேண்டும்.

போகர், அகத்தியர், திருமூலர் எல்லோரும் சமஸ்கிருதம் தமிழ் இரண்டும் அறிந்தவர்களாக, இரண்டிலும் நூல்களைச் செய்தவர்களாக இருக்கிறார்கள். போகர் செய்து வைத்த பழனி முருகன் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கிற சாத்வீகத் தன்மையற்ற மூர்க்கனைப் போலத் தோற்றம் கொண்டவராகவா இருக்கிறார்?

போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையாகட்டும், பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களாகட்டும், முருனை “சேயோன்” (சிவந்தவன்/அழகன்) என்றும், வீரனாக நின்றாலும் கருணை பொருந்திய சாந்தமான முகம் (சாத்வீகம்) கொண்டவனாகவுமே சித்தரிக்கின்றன.

இன்னும் கொஞ்ச நாள் போனால் பழனியில் இருப்பது முருகனே இல்லை என்று விடுவார்கள். போர்த்துகீசிய காலத்துக் கிறிஸ்துவ மறைபணியாளர்கள் என்று வந்தாலும் வருவார்கள் நம் ஊர் இறைநம்பிக்கை இல்லாத திராவிடத் தமிழ் தேசிய கம்யூனிசக் கூட்டம். இந்த கூட்டத்தை நாம் வெற்று சீற்றத்தால் பொதுமைப்படுத்தவில்லை.

திராவிட தமிழ் தேசிய இயக்கங்களின் அரசியல் வரலாற்றை கூர்ந்து நோக்கினால், திருவள்ளுவரை கிறிஸ்தவராக முன்னிறுத்திய தெய்வநாயகம் போன்றோரின் சர்ச்சைக்குரிய நூல்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்து வெளியிட்டதும், இந்தி திணிப்பை எதிர்க்கும் அதே வேளையில் உருது மொழியை ஆதரித்ததும், இஸ்லாமிய / கிறிஸ்தவ மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளை விமர்சிக்காமல் கடந்து செல்வதுமாக இவர்கள் இருந்து கொண்டிருப்பதை மனசாட்சி உள்ள தமிழ் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் கூட பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரு பெருநாள் திருநாளை கொண்டாட முடியவில்லை எல்லாவற்றிலும் இவர்களின் அரைகுறை அனுமானங்களை திணித்து அவன் திணித்தான் இவன் திணித்தான் என்று குழப்பம் செய்து கொண்டு இவர்கள் நம் மீது குப்பைகளை திணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில் இருந்து வந்த சமணம் தமிழர் மதம். கடவுள் மறுப்பை பேசும் சமணத்திற்கு எதிரான மரண தண்டனையும் வாழ்வியல் இன்பங்களையும் பேசிய கடவுள் வாழ்த்து எழுதிய வள்ளுவர் சமணர். நட்சத்திர அடிப்படையில் பிறந்தநாள் கொண்டாடி வந்த தமிழ் வள்ளுவருக்கு ஆங்கில தேதியை அனுசரித்து அதற்கு தோதான தமிழ் தேதியில் பிறந்தநாள். வருடப்பிறப்பு என்று எல்லாவற்றிலும் உனக்கு இது கிடையாது அது கிடையாது எல்லா ஆரியத்திணிப்பு என்று வெறுப்பையும் பிரிவினையும் இவர்களே தான் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட நம்பிக்கைகளின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் மட்டும் தொடர்ந்து வைக்கப்படும் இப்படியான பொய் வாதங்களும் வெறுப்புகளும் தான் மதத்தின் பெயரால் கிளர்ச்சியையும் பிரிவினையையும் ஏற்படுத்தும். அதை ஏற்படுத்தி குளிர் காய்ந்துகொண்டிருக்கிற இராவண அரசியல்வாதிகள் அவர்களை எதிர்ப்பவர்களை பிரிவினைவாதிகள் என்பது முரணின் உச்சம்.

இவர்களின் இராவண அரசியலுக்கு எதிரான இந்த இராவண அரசியல் தொடர் அவர்கள் நிறுத்தும் வரை தொடரும்.

Error happened.
Exit mobile version