வாசிப்பு பழக்கம் இருக்கிறவர்களுக்கு ஒரு விருந்து இந்த கட்டுரை.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரத்தை, விவகாரமாக்கி அனுமார் வால் போல நீட்டித்து கொண்டே போகிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் இருந்து தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டுமென்பது தான் கோரிக்கை. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அது சர்வே கல் என்று பெயர் பெற்று; இப்போது, சமணர்களின் தீபத்தூண் என்கிற கதையின் கதாபாத்திரம் ஆகி நிற்கிறது.
யார் இந்த சமணர்கள் என்று நீங்கள் பேஸ்புக்கிலும் வாட்சப்பில்லும் தேடினீர்கள் என்றால், “சமணம் தான் தமிழர்கள் மதம்; ஆதி தமிழர்கள் எல்லாம் சமணர்கள்; இந்த சமணர்களை ஆரியர்கள் வீழ்த்தி அவர்கள் மரபை நம் மீது திணித்துவிட்டார்கள்” இப்படியெல்லாம் நிறைய கதைகளை நீங்கள் படிக்கலாம் ஆச்சரியமில்லை. அந்தளவிற்கு வராலாறு திரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களை சமணர்கள் என்று சொல்வது வரலாற்று திரிபு என்று சொன்னால், நம்மை தமிழ் துரோகிகள் என்று தமிழர்களே சொல்லும் அளவிற்கு சமணம் தான் தமிழர் மதம் என்றெல்லாம் ஒரு கூட்டம் நம்பிக்கொண்டிருக்கிறது.
சமணம் என்பது என்ன மதம்? ஏன் அந்த மதத்தோடு தமிழர்களை தொடர்பு படுத்தினார்கள்.
ஜெயின் எனச் சொல்லப்படுகிற மதம் தான் சமணம் மதம். ஆண்டனி என்பது தமிழில் அந்தோணி ஆனது மாதிரி, ஜைனம் சமணம் ஆனது.பெயரே தமிழ் கிடையாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள் யுவர் ஆனர்.
பரந்துபட்ட பாரத சமூகத்தில் வடமேற்கு பாரதத்தில் தோன்றி,ஒரு அமைப்பாக சங்கமாக தனித்து ஒரு மதமாக அறிவிக்கப்பட்டு கொண்ட ஒரு மதம் தான். இப்படி ஒரு பெயரோடு தங்களை தனியாக ஸ்தாபித்துக்கொண்ட பாரத தேசத்தின் முதல் மதம்.
அப்படியென்றால் அதற்கு முன்னர் பாரத சமூகத்தில் மதங்கள் இல்லையா?
மதமும் இல்லை; மதங்களும் இல்லை; பரந்த பாரதம் எங்கும் சடங்குகள் இருந்தது, வழிபாடுகள் இருந்தது, யோகம் இருந்தது, பரதம் இருந்தது.மருத்துவம் இருந்தது.இயற்கையை வழிபட்டு கொண்டிருந்தார்கள், இயற்கைக்கு உருவம் கொடுத்து கொண்டிருந்தார்கள். வேதம் இருந்தது. அக்னியை வணங்கினோம். வருணனை வணங்கினோம், இந்திரனை வணங்கினோம், சிவனை வணங்கினோம். யோகத்தில் நிலைத்து உயர்நிலை அடைந்தவரையெல்லாம் சிவனாகவே பாவித்தோம். சீடர்கள் இல்லாத யோகிகள் சித்தர்கள் முனீஸ்வரர்கள் ஆனார்கள். இன்றும் தமிழகம் எங்கும் இருக்கும் பல முனீஸ்வரர்களும்,ஐயன்களும் யோகிகள் தான். இடத்திற்கேற்ப சில இடங்களில் அவர்கள் சைவமாக அசைவகமாகவும் ஆனார்கள். சமூகக்காவலர்கள் சிறுதெய்வம் ஆனார்கள்.சூரியன் வருகையை பாரதம் எங்கும் கொண்டினோம், கொண்டாடுகிறோம். எல்லா மாதங்களிலும் இருக்கும் பௌணர்மியும் விழா நாட்களானது. அமாவாசை முக்கியம் பெற்றது.இதெல்லாம் சேர்த்து நம் பாரத சமூகத்தின் ஒழுங்குகளாக இருந்தது. தமிழில் ஒழுங்கு என்பது தான், சமஸ்கிருதத்தில் தர்மம்.நீங்கள் இந்திரனை மட்டும் வணங்கலாம், சிவனை மட்டும் வணங்கலாம், முன்னோர்களை மட்டும் வணங்கலாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் இது தான் செய்ய வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை.இதற்கு என்று அமைப்போ பெயரோ தேவைப்பட்டு இருக்கவில்லை. பழைய தர்மம் என்பதாலும் என்றைக்கும் மாறாதது என்கிற அர்த்தத்தில் சனாதன தர்மம் என்று ஆனது.
சரி! சமணத்திற்கு முன்னமே வேதம் இருந்ததா? அதற்கு முன்னமே பாரத சமூகத்தில், யோகம் எல்லாம் இருந்ததா?
ஆம்! சமணத்திற்கு முன்னரும் வேதம் இருந்தது. யார் சொல்லி யாரால் எழுதப்பட்டது என்று தெரியாமல் இருந்தது. அதை ஒருவர் தொகுத்து வைக்கிறார். ஆனால், சில சைவ நூல்கள் வேதங்கள் சிவன் கொடுத்ததாக குறிப்பிடுகிறது. நாம் முன்னமே குறிப்பிட்டது போல யோகத்தில் உயர் நிலை அடைந்தவர்களை நாம் சிவனாகவே தான் வைத்திருக்கிறோம். அப்படியொரு சிவன் எப்போதோ வேதங்களை கொடுத்திருக்கலாம். சமணர்களும் தங்கள் மதமும் பழமையான மதம் என்பதை நிறுவ வேதங்களில் இருக்கின்ற குறிப்பைத் தான் காட்டுகிறார்கள்.
வேதங்களில் சமணம் தனி மதம் என்கிற குறிப்பு இருக்கிறதா?
இல்லை. சமணம் எப்படி எல்லாவற்றையும் துறந்து ஆன்மீகத்தில் உன்னத இலக்கை அடைய சொல்கிறதோ, அப்படி எல்லாவற்றையும் துறந்த ரிஷிகள் பற்றி குறிப்பு வேதங்களில் இருக்கிறது.
அப்படியென்றால் வேதமும் சமணமும் ஒன்றா?
மழைமேகமும் கடலும் ஒன்றா? ஒன்று தான். ஆனால், இரண்டும் வேறு வேறு. கடல் நீர் தான் ஆவியாகி மேகமாகிறது. ஆனால் மேகத்தை கடல் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் வேதமும் சமணமும். வேதத்தின் படி எல்லாம் ஒன்று அதை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இதை இப்படித்தான் அணுக வேண்டும் என்பதில்லை, என்று கடவுளைப்பற்றியும் கடவுளை அடைவது பற்றியும் நூறு வழிகள் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், சமணம் அதில் ஒன்றை பிரத்தேயேகமாக எடுத்துக்கொள்கிறது. மற்றதை நிராகரிக்கிறது.
வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்? சமணம் எதை எடுத்துக்கொண்டது? எதை விலக்கியது?அதையெல்லாம் தெரிந்து கொள்ள வேதம் மொத்தமும் படிக்க வேண்டுமா?
வேதம் மொத்தமும் படிக்க வேண்டுமா? தேவை இல்லை. வேதங்களை வகுத்த வேத வியாசர் தந்த மஹாபாரதத்தில் இருக்கும் கீதையை படியுங்கள், இன்னும் சுருக்கமாக வேண்டும் என்றால் கம்பரின் கடவுள் வாழ்த்து பாடலை படியுங்கள்.
அது என்ன கடவுள் வாழ்த்து? அதில் என்ன சொல்லியிருக்கிறார்?
ஒன்றே என்னின் ஒன்றேயாம்,பல என்று உரைக்கின் பலவேயாம்அன்றே என்னின் அன்றேயாம்,ஆமே என்னின் ஆமேயாம்இன்றே என்னின் இன்றேயாம்,உளது என்று உரைக்கின் உளதேயாம்நன்றே நம்பி குடி வாழ்க்கைநமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா
“ஒன்றேயென்னின் ஒன்றேயாம் பலவென்றுரைக்கின் பலவேயாம், உளதென்று உரைக்கின் உளதேயாம்.”
கடவுள் இருக்கு என்கிறீர்களா? ஆம்! கடவுள் இருக்கிறார். கடவுள் இல்லை என்கிறீர்களா? ஆம் கடவுள் இல்லை. கடவுள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிறீர்களா? ஆம் கடவுள்கள் நிறைய பேர். கடவுள் ஒருவர் தான் என்கிறீர்களா ? ஆம் ஒருவர் தான் என்று இயற்கையாய் இந்த உலகம் கடவுளை எப்படியெல்லாம் அணுகுமோ அப்படியெல்லாம் கடவுள் இருக்கிறார் என்பதை சொல்வது தான் அந்த பாடல். இது வேதத்தில் இருக்கும் கருத்து, கீதை வேதத்தின் சாரம் என்றால், இந்த ஒரு பாடல் கீதையின் ஒரு பகுதியின் சாரம். ஒருவன் சூழலுக்கேற்ப அவனுள் கடவுள் பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் நானே தான் வளர்க்கிறேன் என்கிறார் கிருஷ்ணர். சமணம் என்ன செய்கிறது, எல்லா நம்பிக்கைகளையும் விலக்குகிறது. கடவுளே இல்லை என்கிற நம்பிக்கையில் நிலைகொள்கிறது. எல்லாவற்றையும் துறந்து ஒரு மகோன்னத நிலையை எய்துவது தான் இலக்கு என்கிறது. இல்லறம் மேற்கொண்டாலும் சில காலத்தில் துறவை தழுவ வேண்டும் என்கிறது. சமணத்தை பொறுத்தவரையில் அழிவில்லாத பிரபஞ்சம் மட்டும் தான் இங்கு இருக்கிறது. அதை யாரும் இயக்கவில்லை யாரும் உருவாக்கவில்லை, கடவுள் என்று ஒன்றும் இல்லை அருள் என்பதும் இல்லை என்கிறது சமணம்.
என்னை சாட்சியாக கொண்டு இந்த பிரபஞ்சம் தானே இயங்குகிறது என்று கடவுள் சொல்வதாக கீதை சொல்கிறது. அதோடு கீதை, பக்தி அகிம்சை யோகம் துறவு என்று கடவுளை அடைய பல வழிகளை சொல்கிறது. கடவுள் உருமற்றவர். ஆனால், உருமற்ற கடவுளை தேடுவதில் அடைவதில் சாதாரணமானவன் குழம்பிப்போகலாம் அதனால் அப்ப்டியானவர்களுக்கு உருவ வழிபாடே சிறந்தது என்கிறது கீதை.
இந்த பாரத சமூகம் பின்பற்றி வந்த நம்பிக்கைகள் சடங்குகள் எல்லாமே எந்தவொரு ஸ்தாபிக்கப்பட்ட அமைப்புகளுக்கு மட்டுமே உரித்தானது இல்லை. யார் வேண்டுமென்றாலும் எது வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம்.இது மட்டும் தான் வழி என்கிற கட்டுப்பாடு இல்லாத இடத்தில். இது மட்டும் தான் வழி என்று சொல்லி ஸ்தாபிக்கப்பட்ட மதம் சமணம். படைப்புக்கான ஆற்றலை பிரம்மா என்றார்கள், இல்லை அதுவும் ஒரு ஆற்றல் தான் என்றார்கள் சமணர்கள். இப்படி மனித மனங்களின் வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உருவங்களை நிராகரித்து அதன் பின்னனியில் சனாதன தர்மமான வேதங்களில் உள்ள சைவத்தில் உள்ள கருத்துக்களை மட்டும் சமணம் எடுத்துக்கொண்டது.சமணம் தனி ஒரு சங்கமாக உருவெடுக்கவும் சைவமும் வைணவமும் தனியானது. கடலில் இருந்து மேகங்கள் உருவாகி குட்டைகள் ஆனது போல் சமணத்தின் தொடக்கம் சனாதன தருமத்தின் உட்பிரிவுகளை உருவாக்கியது.
அப்படியென்றால், சமணர்களின் கடவுள் யார்?
நாம் முன்னமே குறிப்பிட்டது போல, யோகத்தில் உயர்ந்த நிலை அடைந்தவரை சிவனே என்கிறது சைவம்(இதை புரிந்துகொள்ள நீங்கள் கீதை அல்லது திருமந்திரம் படிக்க வேண்டும்). அப்படி இங்கே பல சிவன்கள் இருந்தார்கள். வெவ்வேறு காலகட்டத்தில் அப்படி இருந்த சிவன்களுக்கு சீடர்கள் இருந்தார்கள். அதனால் தான் சிவன் கோவில்களில் நீங்கள் குருவாக இருக்கும் சிவனை காண முடிகிறது.இப்படியொருவராக இருந்த ரிஷப தேவர் தான் சமணர்களின் முதல் குரு. பிரபஞ்சத்தோடு ஒன்றுகிற நிலையை எய்திய ஒரு முனி,ரிஷி அல்லது சிவன் அவரை பின்தொண்டர்ந்தவர்கள் தான் அவரை குருவாக்கி சமணத்தை தனி மதமாக்கினார்கள். அவர்களின் குருவை போன்றே எல்லோரும் ஆக வேண்டும் என்பது தான் சமணத்தின் இலக்கு. அப்படி எல்லோரும் எல்லாவற்றையும் துறந்து யோகத்தில் உயர்நிலை எய்த முடியாது என்கிற இயற்கையான புரிதலை கொண்டிருப்பது சனாதன தர்மம்.இந்த சனாதன தர்மம் சமணம் சொல்லும் வழியையும் ஒரு வழியாக தான் சொல்லி வைத்திருக்கிறது.
வரலாற்று திரிபு இதில் எப்போது எப்படி வந்தது?
நாய் இல்லாத ஊரில் இருந்து ஒருவன் மொழி தெரியாத ஊருக்கு பூனை விற்க வருகிறான். அவன், நாய் எப்படி இருக்கும் என்றே பார்த்தது இல்லை. ஊரில் பூனை விற்பதற்காக மொழி கற்றுக்கொள்கிறான். ஒரு நாள் தெருவில் ஒருவர் தன் பையனை திட்டும் பொழுது நாய் வாலை நிமித்த முடியுமா என்று கேட்கிறார்? அதற்கு அர்த்தம் என்ன? நாய் என்றால் என்ன? என்று கேட்கிறான். அவர் அவனுடைய மகனை காண்பித்து இவன் தான் நாய் என்கிறார். அவனுக்கு வால் இல்லையே அதை இல்லாத வாலை நிமிர்த்த முடியாது அது தான் அர்த்தம் என்று அவனாக விளங்கி கொள்கிறான். பின்னாளில் அவன் ஒரு கதை எழுதி அதில் வரும் வாலிப வயது ஆண்பிள்ளைக்கு நாய் என்று பெயர் வைக்கிறான். பின்னாளில் அந்த ஊரில் நாய் இனமே அழிந்து போகிறது, பூனை விற்க வந்தவன் எழுதிய கதை காலம் தாண்டி நிற்கிறது. நாய் எப்படி இருக்கும் என்று இப்போது யாருக்கும் தெரியாது. கதை படித்தவர்கள் எல்லாம் அது ஒரு ஆண்பால் பெயர் என்றே நினைத்தார்கள்.
அந்த நாய் கதை போன்று எழுதப்பட்டது தான் நம் வரலாறு, அவர்களின் மதத்தை பரப்ப வந்த மேற்கத்தியர்கள், தர்க்க ரீதியான ஆழமான புரிதல் இல்லாமல், மொழியின் கலாச்சார ஆழங்களை அறியாமல், வெற்று வார்த்தைகளாய் நம் மொழியை கற்றுக்கொண்டு, அவர்கள் விளக்கம் சொல்ல எது சாதகமாக இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு தோதாக நம் வரலாற்றை எழுதி வைத்துவிட்டு போனார்கள். நாம் எப்படி இருந்தோம் என்பதை மறந்து போன நம் இனம்,c இப்படி வரலாறுகளை தான் உண்மை என்று நம்புகிறது. சிந்து சமவெளி ஆய்வுகளில், சிவன் போன்ற தோற்றம் கொண்ட முத்திரைகள் கிடைக்கிறது. மதத்தை பரப்ப வந்தவர்களால் அதை எப்படி சிவன் என்று சொல்ல முடியும்? அதோடு சிவன் என்று சொன்னால் எப்படி வரலாற்று ஆய்வு ஆகும். திரும்புகிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்லி குருவை தெய்வமாக வணங்கும் சமணம் அவர்கள் கண்ணுக்கு தெரிகிறது, ரிஷப தேவராக இருக்கும் என்கிறார்கள். அல்லது ரிஷப தேவருக்கு முந்தையவராக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால், யோகிகளை சிவனாக குருவாக வணங்கிய இந்த சமூகத்தின் கலாச்சாரம் அவர்களுக்கு தெரியாது. அதனால், அவர்கள் தவறான ஒரு தீர்மான
த்திற்கு வருகிறார்கள்.
இதைமட்டும் வைத்துக்கொண்டு வரலாறு திரிக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா? வரலாற்று ஆய்வாளர்கள் தவறான முடிவுகளை எட்டியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ?
ஒன்று இல்லை இரண்டு இல்லை கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மொழிசார் கலாச்சாரத்தின் புரிதல் இல்லாதவர்களால் வரலாறு மாற்றி எழுதப்பட்டது.
வள்ளுவரையும் இளங்கோவையும் எடுத்துக்கொள்வோம்!
சிவாலயங்களில் இருந்த வள்ளுவரை கொண்டு போய் சமணர்களோடு வைத்தது இந்த வரலாற்று திரிபுகள், மதுரையில் திருப்பரங்குன்றத்தில் இருக்கின்ற சொக்கநாதர் கோவிலில் இன்றும் வள்ளுவர் இருக்கிறார்.
மேற்கத்திய ஆய்வாளர்ககளும் , அவர்களை தழுவிய திராவிட அரசியலில் ஊறிய ஆய்வாளர்களும் , தமிழ் தேசியம் என்கிற பெயரில் தமிழர்கள் பின்பற்றிய முறைகளை சடங்குகளை கேலிக்குள்ளாக்கும் அரசியல் குழந்தைகளும் என்று இவர்கள் எல்லோரும் வைக்கும் வாதம், அல்லது எல்லோரும் நிறுவுவது,”வள்ளுவரும் இளங்கோவும் சமணர்கள் அவர்கள் சனாதன தர்மத்தை பின்பற்றியவர்கள் இல்லை” என்பது தான்.
எப்படி இவர்கள் இதையெல்லாம் சொல்கிறார்கள்? அதில் என்ன தவறு இருக்கிறது.
சமணம் கடவுள் இல்லை என்கிறது. இந்த ஆய்வாளர்கள், திருவள்ளுவர் சிவன் என்றோ வேறு கடவுள் பெயரையோ சுட்டவில்லை ஆதிபகவன் என்று சுட்டுகிறார் அது ஆதிகுருவான ரிஷபதேவரை சுட்டுகிறது என்கிறார்கள்.
நம் மொழியறியாதவன் நம் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாதவன் நம்மை ஆய்வு செய்தால் முடிவுகள் இப்படியானதாக தான் இருக்கும்.
கடவுள் இல்லை, பிரபஞ்சம் மட்டும் தான் இருக்கிறது என்பது சமணர்களின் கோட்பாடு ,வள்ளுவர் சமணர் என்றால், கடவுள் வாழ்த்தை எதற்கு எழுதினார்?ஆதி பகவன் என்பதில், பகவன் என்பது சில குணங்களை கொண்டிருப்பவரை குறிப்பது என்று வைத்துக்கொண்டாலும். குருவை வழிகாட்டியாக தான் கொள்ள வேண்டும். முதற்றே உலகு எனும் பொழுது, அந்த குருவிற்கு முன்பு உலகம் இருக்கவில்லையா என்கிற கேள்வி வருகிறது. சமணம் சொல்வது போல பிரபஞ்ச தோற்றத்தை சொல்கிறது என்றும் பொருள் கொள்ள முடியாது. பிரபஞ்ச தோற்றம் என்பது வினை, ஆதிபகவன் என்பது பெயர்ச்சொல். ஆதிபகவன் என்பது யாரோ ஒருவரை குறிக்கிறது.அவரில் இருந்து தான் உலகம் தொடங்குகிறது என்று பொருள். இது சைவ சிந்தாந்தத்திலும் கீதையில் சொல்லப்பட்ட பிரபஞ்சம் இறைவனில் தோன்றி இறைவனில் முடிகிறது என்கிற கருத்தோடு ஒத்துபோகிறதே தவிர முதல் குருவில் இருந்து உலகம் தோன்றியது என்றோ, அல்லது அவர் வழியில் உலகம் என்றோ பொருள் கொள்ள முடியாது. அதற்கு அந்த வார்த்தைகள் அப்படி இடமளிக்கவும் இல்லை.
புலால் மறுத்தல் பற்றி திருவள்ளுவர் பேசுகிறார் அவர் சமணர் என்கிறார்கள்.சமணம் இல்லறத்தை தூக்கி பிடிக்கவில்லை, துறவறம் தான் மோட்சத்தின் வழி என்கிறது. வள்ளுவர் அவரும் இல்லறம் மேற்கொண்டு, இல்லறத்தை தூக்கி பிடித்து எப்படி ஒரு இல்லறத்தான் இருக்க வேண்டும் என்று பேசுகிறார். இதுவும் தன் செயல்களை சரியாக செய்யவதாலேயே இறைவனை அடைய முடியும் என்கிற கீதை மற்றும் சைவ கருத்துக்களோடு ஒத்து போகிறது. திருமந்திரத்திலும் கூட புலால் மறுத்தல் பேசப்பட்டு இருக்கிறது. புலால் மறுத்தல் என்பதும் சனாதன தர்மத்தின் பல வழிமுறைகளில் ஒன்றே தான். சமணம் தண்டனைகளை எதிர்க்கிறது, திருவள்ளுவர் அரசன் எப்படி தண்டனைகள் வழங்க வேண்டும் என்று பேசுகிறார். சமணம் எல்லாவற்றையும் துறக்க சொல்கிறது, காமத்தை வள்ளுவர் அனுபவித்து எழுதியிருக்கிறார்.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
ஐம்புலனும் பெறும் இன்பம் காமத்தில் தான் கிடைக்கிறது என்று பேசுகிறார். இது முற்றிலும் சமண கொள்கைகளுக்கு முரணானது.
சில இடங்களில், லக்ஷ்மியை பற்றி பேசுகிறார்.பெண்ணின் மார்பில் சாய்ந்து உறங்குவதை விட தாமரைக்கண்ணான் உலகு இனியதோ என்கிறார். கடவுள் இல்லை என்று சொல்லுகிற சமண மதத்தின் குருவின் கண்களையே குறிப்பிட்டார் என்று கொண்டாலும், குறளின் அர்த்தம், முற்றிலும் சமணத்திற்கு முரணானது. பெண் இன்பத்தை குருவின் உலகை விட உயர்வாக சமணர்கள் சொல்லமாட்டர்கள். இது தமிழ் கடவுள்களில் ஒருவரான வேதங்களும் போற்றும் திருமாலின் வைகுண்டம் என்கிற பார்வையில் மிகச்சரியாக பொருந்தி போகிற அர்த்தத்தை தருகிறது.
இளங்கோ அடிகளுக்கு மெரினாவில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள் அவரை ஒரு சமணராகவே பாவித்து வைத்து இருக்கிறார்கள். கேட்டால் அவர் பெயரில் அடிகள் வருகிறது,சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகள் சமணப்பெண் துறவி . இளங்கோ ஒரு கோட்டத்தில் இருந்தார்.கவுந்தி அடிகளும் ஒரு கோட்டத்தில் இருந்தார். இப்படி அங்கங்கே சிலதை தூக்கிப்பிடிக்கும் இந்த ஆய்வாளர்களின் பார்வையில் அடிகள் என்றால் சமணர்களாக மட்டும் தான் இருக்க வேண்டும். அதோடு கோட்டம் என்றால் அது சமணர்களின் கோட்டமாக தான் இருக்க வேண்டும். வரலாற்றை எப்படியெல்லாம் தவறாக அணுகமுடியும் என்பதற்கு இப்படியான பார்வைகள் தான் எடுத்துக்காட்டு.
இளமையில் துறவறம் பூண்டதால்,இளங்கோ அடிகள் ஆனார் என்பது தான் நமக்கு தெரிந்தது. ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள் அதை நிராகரிக்க என்ன செய்கிறார்கள் என்றால் சிலப்பதிகாரத்தின் பதிகத்தில் வரும் இளங்கோவின் அறிமுகத்தை இடைச்செருகல் என்று முடிக்கிறார்கள். கேட்டால் வார்த்தைகள் இளங்கோ காலத்து வார்த்தைகள் போல் இல்லை என்கிறார்கள். இதை யார் சொல்கிறார்கள் என்றால் மொழி தெரியாமல் பூனை விற்க வந்து நம் மொழி கற்றுக்கொண்டவர்கள் சொல்கிறார்கள்.
சென்னை தமிழில் அந்தாண்டை இந்தாண்டை என்கிற வார்த்தைகள் இருப்பது நமக்கு தெரியும். அது கொச்சை தமிழா? என்றால் இல்லை. குறுந்தொகையில் அண்டை என்கிற வார்த்தை பயன்பாடு இருக்கிறது. அந்தாண்டை என்கிற வார்த்தை நாம் பதியெடுக்காமல் விட்ட சங்க இலக்கியங்களில் கிடைத்தால் அதனை இந்த வரலாற்று ஆய்வாளர்கள் ஐயோ இதை இடைச்செருகல், வடசென்னை படத்திற்கு எழுதப்பட்ட பாடல் போல இருக்கிறது என்று விடுவார்கள் போல. அப்படித்தான் திருமந்திரத்தின் விநாயகர் வணக்கத்தை இவர்கள் விலக்கி வைக்கிறார்கள்.
சரி ஒரு வாதத்திற்கு இவர்களின் திரிபுகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக்கொள்வோமே! அப்படியென்றாலும் கூட ஒரு சமண துறவியின் இலக்கு யோகத்தால் உன்னத நிலை எய்துவது, அவருக்கு பழிவாங்கலை முன்வைத்து ஒரு காவியம் எழுத வேண்டுமென்பது தேவை இல்லாத ஆணி. அதோடு அந்த காவியத்தில் அரசமுறைகள் பற்றி எழுதுகிறார். இளமையில் துறவறம் பூண்ட ஒருவருக்கு அரசமுறைமைகள் பற்றி தெரிந்திருக்க அவர் பதிகத்தில் குறிப்பிட்டது போல அரசு குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்பதை நிறுவுகிறது. சிவ நடனங்களை பற்றி விரிவாக எழுதுகிறார். ராமர் புகழ் பாடும் ஒரு திருவிழா நிகழ்வு தமிழர்களிடம் இருந்ததை பதிவு செய்கிறார். ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோவில் அழகை விவரிக்கிறார்.
அவர் அரசு குடும்பத்தை சார்ந்தவர் என்று ஏற்றுக்கொண்டால், நிச்சயம் அவர் சமண மதத்தை பின்பற்றிய குடும்பத்தை சேர்ந்தவர் என்று கொள்ள முடியாது. அரச வாழ்க்கை என்பது சமண மத கொள்கைகளுக்கு விரோதமானது. அவர் துறவறம் மேற்கொண்ட பொழுது சமணத்தை ஏற்றுக்கொண்டார் என்றால், பழிவாங்குவதை காவியமாக ஒரு சமண துறவியும் எழுத மாட்டார்கள். அதோடு கண்ணகிக்கு கோவில் எழுப்பி யாகம் வளர்த்த பொழுது தானும் அங்கு இருந்ததாக குறிப்பிடுகிறார். அவரை சமண துறவியாக ஏற்றுக்கொண்டால் இந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ள முடியாது.சமணத்துறவிக்கு சம்மந்தம் இல்லாத இடங்களை கண்டு ரசித்து எழுத வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் நிராகரிக்கும் சிலை வழிபாடு கடவுள் வழிபாடு பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியமென்ன? நம் முதல் கேள்வியான சமண துறவி பழிவாங்கல் பற்றி ஏன் எழுத வேண்டும் என்பதே அவரை சமணர் என்பதை கேள்விக்குள்ளாக்குகிறது.
இப்படியெல்லாம் தர்க்க ரீதியான கேள்விகள் எழுப்பினாலே நம் வரலாற்றை நாமே சரியாக புரிந்து கொள்ள முடியும்.அது தான் பகுத்தறிவும் கூட. ஆனால், இத்தனை கேள்விகள் எழுப்பினாலும். சரியான வாதங்களை முன்வைத்தாலும். ஐயோ அதெல்லாம் இல்லை தமிழர்கள் சமணர்கள் தான் என்று பொய்களை தேடிக்கொண்டு வருவதற்கு பெயர் பகுத்தறிவு இல்லை.
அஹிம்சை மட்டும் தான் சமணர்கள் வழி, அவர்கள் ஒரு மதமாக தங்களை வியாபித்து, தென்னகம் வருவதற்கு முன்பிருந்தே திருப்பரங்குன்றத்தில் முருகன் இருக்கிறார்,சம்ஹாரம் செய்ததாக அறியப்படுகிற முருகனின் வழிபாட்டு தளங்களுக்கு எல்லாம் அவர்கள் வந்திருக்க வாய்ப்பே இல்லை.
உலகு காமம் தவம் ஆசாரம் என்று திருவள்ளுவர் சைவம் ஏற்றுக்கொண்ட சம்ஸ்கிருத வார்த்தைகளை தொல்காப்பியர் இலக்கணப்படி தமிழ்ப்படுத்தி பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனால், இங்கே தமிழ் தேசியம் மதசார்பின்மை திராவிடம் என்கிற பெயரில் இந்து விரோத அரசியல்வாதிகள் தமிழர்கள் பின்பற்றிய எல்லாவழிகளையும் ஏற்கும் பழமையான என்றும் மாறாத சனாதன தர்மத்தையும் சமஸ்கிருதத்தையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.சில வார்த்தைகளை மொழி பெயர்க்க முடியாது என்பதை அறிந்தே தான் மொழி இலக்கணம் வார்த்தைகளை கடன் வாங்க ஒரு வழி செய்து கொடுக்கிறது, இவர்களோ அவர்களுக்கு சாதகமாக சிலவற்றை மட்டும் எதிர்த்து அநேகமான உருது வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் என்று நினைத்துக்கொண்டு ஆங்கில வார்த்தைகளை கேவலமாக தமிழ்ப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள், முகநூல், கொட்டை வடிநீர் ( எந்த கொட்டை என்று நண்பன் கேட்டது நினைவிற்கு வருகிறது)என்றெல்லாம் மொழிபெயர்த்து கொண்டிருக்கிறார்கள் .இட்லி எல்லா மொழியிலும் இட்லி தான். மற்ற மொழிகளின் மீதான வெறுப்பும் கூட நம் வரலாறை நாம் தவறாக அணுக வழி வகுக்கும்.
சனாதன தர்மம் போல் எல்லா உண்மைகளையும் ஏற்பதற்கு இடமளித்து. தர்க்க ரீதியான கேள்விகளால் வரலாற்றை அணுகினால் தான். தீபத்தூண் சர்வே கல்லாக மாறி சமணர் கல்லாக மாற்றப்படும் கோமாளித்தனங்கள் தடுக்கப்படும்.