நாம் ராவண அரசியல் எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே தேவதாசி முறை பற்றி எழுத எண்ணியிருந்தோம். இன்று தான் சாத்தியமானது. கடந்த இரண்டு நாட்களாக நான்கு கட்டுரைகள் எழுத வேண்டும், அதில் எதை முதலில் எழுதலாம் என்று எண்ணங்கள் அலையாடியது. நான்கும் நான்கு வேறு திசையைச் சேர்ந்த கட்டுரைகள்.
இக்காலத்தவர்கள் மத்தியில் தேவதாசி முறை என்பது ஏதோ வேசித்தனம் என்பது போன்ற கண்ணோட்டம் இருக்கிறது. அந்த கண்ணோட்டம் பற்றி சமூகம் தன்னைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.
இந்த சமூகம் இறைவனை எப்படியெல்லாம் வணங்கி வந்தது என்பதை நாம் மறந்து போனோம். நம் சமூகம் இறைவணக்கம் செலுத்தும் ஒவ்வொரு வழிகளும் உடம்பைக் கோவிலெனப் பேணும் வழிகளாகவே தான் இருந்தது.
மாணிக்கவாசகர், திருச்சதகத்தில் இப்படியாகப் புலம்புகிறார்.
ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பு இலை என்புருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணையிலி பிணநெஞ்சே தேடுகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே
நாம் திருவாசகம் பற்றி எழுதியும் பல நாட்களாக ஆகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் ஒரு வாசகம் நம்மை எழுதத் தூண்டினாலும் அதை எழுத முடியாத மனநிலையில் இருந்ததால், இன்னும் நாம் எழுதவில்லை. இந்த கட்டுரை எழுதத் தொடங்கிய பொழுது, இந்த திருச்சதக வாசகத்தை நாம் எழுதுவோம் என்று எந்தத் திட்டமிடலும் கூட இல்லை. எழுதிக்கொண்டிருக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.
“ஆடுகின்றிலை, என்புருகிப் பாடுகின்றிலை” தன்னை ஆட்கொண்ட இறைவன் மீது கொண்ட நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்த மாணிக்கவாசகரின் தவிப்பு தான் திருவாசகம். நாம் இதை திருவாசகம் பகுதியில் நிறைய எழுதியிருக்கிறோம். அவருடைய தவிப்புகளில் ஒன்று தான், “ஆடுகின்றிலை, என்புருகிப் பாடுகின்றிலை“.
என்ன சொல்லுகிறார்? அவர் தன் மனத்தைத் தானே நொந்து கொள்கிறார். ஆடவும் மாட்டேன் என்கிறாய், பாட மாட்டேன் என்கிறாய், அவன் பெயர் சொல்லி வீதி தோறும் திரிய மாட்டேன் என்கிறாய். அவன் காலுக்கு மலர் சூட்ட மாட்டேன் என்கிறாய், அவன் காலை மலராய் உன் தலையில் சூட்டிக்கொள்ளவும் மாட்டேன் என்கிறாய் என்று அவர், இறைவன் பற்றிய சிந்தனையும் அன்பும் தன் மனதிற்குப் போதாமல் இருப்பது குறித்து தன் மனத்தைத் தானே சாடுகிறார். எந்நேரமும் இறைவன் பற்றிய சிந்தனை கொண்ட ஒருவர் அவர் மனத்தை எப்படிச் சாடுகிறார் பாருங்கள். நானோ நாளுக்கு நாலு முறை நினைத்துவிட்டு நாற்பது கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறேன்.
சரி! இறைவனை வணங்குவதில், இறைவனுக்குப் பூச்சூட வேண்டும் என்று நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இறைவனின் பாத கமலத்தைத் தன் தலை மீது சூட்டிக்கொள்ள வேண்டும் என்பதையும் ஒரு வழிபாடாகப் புரிந்து கொள்ள முடிகிறது. பாட வேண்டும் என்பதைக் கூட நாம் ஏற்றுக்கொள்கிறோம். அரண்மனை 5, காஞ்சனா 6 என்று இப்போது வரை சாமி வந்து காப்பாற்ற வேண்டுமென்றால் பாட்டுப்பாடி தான் அழைக்கிறார்கள். அது என்ன ஆடுவது? மாணிக்கவாசகர் ஏன் ஆடுகின்றிலை என்று தவிக்கிறார்.
கலையும் இறைவணக்கமும் இந்த மண்ணில் வெவ்வேறாக இருந்திருக்கவில்லை. அது ஏன் அப்படி வெவ்வேறாக இருந்திருக்கவில்லை? எண்ணங்களற்ற நிலை தான் உண்மையான தியான நிலை என்கிறார்கள். Being at present. நீங்கள் செய்கிற எல்லா வேலைகளிலும் உங்கள் மனம் எண்ணங்களற்ற ஒரு அமைதியில், ஒரு இன்பத்தில் இருக்கிறதா? நிச்சயமாக நூற்றுக்கு 95 சதவீதம் இருப்பதில்லை.
கலை என்பதே தியானம் தான். எல்லாமே கலை தான். பதட்டம் இல்லாமல், வேகம் இல்லாமல், வேறு எண்ணங்கள் இல்லாமல் முழு கவனத்தோடு நீங்கள் உங்கள் வாகனத்தை இயக்குவதும் கூட கலை தான், தியானம் தான். விளையாட்டும் கூட தியானம் தான். ஆனால், அந்த விளையாட்டில் வெற்றி தோல்வி பற்றிய எண்ணம் இருக்கக் கூடாது. யாரோடு விளையாடுகிறோம் எதற்காக விளையாடுகிறோம் என்கிற எண்ணம் இருக்கக் கூடாது. விளையாடும் பொழுதும் வாகனத்தை இயக்கும் பொழுதும் எல்லோரும் எல்லா நேரங்களிலும் ஒரு சீர்மையான தியான நிலையில் இருப்பதில்லை.
நடனம், இசை போன்ற கலைகள் நிச்சயமாக ஒருவரை ஒரு முழு தியான நிலையில் வைத்திருக்கும். இசை உங்கள் மூச்சை ஓரளவு நீங்கள் நினைப்பது போல் கட்டுப்படுத்தக் கற்றுத் தருகிறது. நடனம் கிட்டத்தட்ட ஒரு யோகப் பயிற்சி போன்றது தான். உடலையும் மனதையும் ஒருமைப்படுத்த வல்ல இந்தக் கலைகளின் இந்தச் சிறப்புகளால் தான் இறைவணக்கங்களில் நம் சமூகம் இந்தக் கலைகளை எல்லாம் சேர்த்து வைத்து இருந்தது.
நடனாஞ்சலி, கீதாஞ்சலி, இதெல்லாம் செய்வதால் இறைவனுக்கு என்ன பயன்? இறைவனுக்கு ஒரு பயனும் இல்லை. உடம்பை ஒரு ஆலயமாகக் காத்து உள்ளே ஆன்மாவாக இருக்கும் இறைவனை அடைய இதெல்லாம் சில வழிகள்.
இப்படியான கலைகள் மூலம் நாம் செலுத்தும் இறைவணக்கங்கள் இன்று குறைந்து வழக்கொழிந்து போய்விட்டது. திருவையாறு எனும் ஊரில் மட்டும் வருடத்திற்கு ஒரு முறை கீர்த்தனைகள் பாடிக்கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவில்களில் ஓதுவார்கள் சம்பிரதாயத்திற்கு என்று சில திருவாசகப் பாடலும் தேவாரப் பாடலும் பாடுவார்கள். இப்போது அதுவும் கூட நடக்கிறதா தெரியவில்லை. கோவில் பூஜைகளில் கலந்து கொண்டு பல வருடங்கள் ஆகிறது.
கோவிலில் இசை வழிபாடு எப்படியோ? ஓதுவார்கள் எப்படியோ? அதே போன்றதொரு வடிவம் தான் நடனத்தின் மூலம் இறைவனை வணங்கும் முறை. இந்தப் பக்கம் ஓதுவார்கள் என்றால், அந்தப் பக்கம் தேவதாசிகள். இறைவனுக்குப் பணி செய்வது தான் அவர்கள் வேலை.
இந்த தேவதாசி முறை என்பது மரியாதைக்குரிய, போற்றுதலுக்குரிய இறைவணக்க வழக்கமாகவே தான் இருந்தது. தேவதாசிகள் குறிப்பிட்ட சமூகத்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. சமூக பேதங்கள் இன்றி சமூகத்தின் எல்லா நிலைகளில் இருந்தும் தேவதாசிகள் வந்தார்கள், இருந்தார்கள். இவர்களில் சிலர், இறைவனையே கணவனாகப் பாவித்து யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல், இறைவனுக்காக நடனம் புரிவதை மட்டுமே வாழ்க்கையாக அர்ப்பணித்துக்கொண்டவர்களாக இருந்தார்கள். திருமணமானவர்கள் சிலரும் கூட தேவதாசிகளாக இருந்து, இறைவனுக்காக நடனம் புரிவதை தங்கள் பணியாகக் கொண்டிருந்தார்கள்.
நடனம் என்றால், டிஸ்கோ, பிரேக் எல்லாம் இல்லை, பரதம். பரதம் என்றால் நமக்கு இன்று தெரிந்ததெல்லாம், “ரா ரா சரசக்குரா ரா” வகை பரதம் தான். பரதம் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருப்பது மட்டும் இல்லை. வார்த்தைகளுக்குப் பாவம் பிடிப்பது. ஸ்ரீ ராகவேந்திரர் படம் பார்த்திருப்பீர்கள். பாடலின் எல்லா வார்த்தைகளுக்கும் பாவம் பிடித்தவரால், ஒரு ராகத்தின் பெயர் சொல்லிப் பாடவும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போவார். இப்படி மொழியில் உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஒரு பாவத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேவதாசிகள் என்பவர்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும், தேவதாசியாக ஆக வேண்டுமென்றால் அவர்கள் பரதத்தில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தேர்ச்சி அடைவது என்றால், எட்டாவது வரை கட்டாய தேர்ச்சி போன்ற தேர்ச்சி கிடையாது.
சரி! கலை மூலமாக இறைவனுக்கு அஞ்சலி செலுத்தும் முறைகளில் ஒன்று தான் நடனாஞ்சலி, அதைச் செலுத்த தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் தேவதாசிகள். இதில் என்ன பிழை இருக்கிறது? இதை ஏன் தடை செய்ய வேண்டும்? இதைத் தடை செய்தது பெண்களுக்கான பெரிய விடுதலையா?
இப்படி நடனாஞ்சலி செலுத்தும் தேவதாசிகளுக்கென்று இடங்கள் தானமாக வழங்கப்பட்டது. கோவில் பணிகள் செய்து கொண்டிருந்த எல்லாப் பணியாளர்களுக்கும் அவர்கள் வருமானத்திற்கு என்று இப்படியான ஏதோ ஒரு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
காரணம், நம் மண்ணில், கோவில்கள் ஒரு சமூக மையமாக இருந்தது. அங்கே கேளிக்கைகள் இருந்தது, அந்தக் கேளிக்கைகள் இறைவனைச் சார்ந்ததாக இருந்தது. கதைகள் சொன்னார்கள், நடனம் காட்டினார்கள், இசையைப் பற்றிய அறிமுகம் தந்தார்கள். கோவில்கள் மருத்துவமனைகளாகச் செயல்பட்டு இருக்கின்றன. வெள்ள அபாயங்கள் ஏற்படும் சமயங்களில் அடைக்கலம் தந்து இருக்கின்றன. அதனால், கோவில்கள் மற்றும் கோவில்கள் சார்ந்த பணிகளுக்கு நம் சமூகம் பெரிய முக்கியத்துவம் அளித்து வந்தது. மொழி, கலை இவையெல்லாம் கோவிலைத் தொட்டே தான் வளர்ந்து வந்தது.
நம் நாடு படையெடுப்புகளுக்கு உட்பட்ட பின்னர் செயற்கைப் பஞ்சங்களைச் சந்திக்கிறது. கோவில்கள் சீரழிக்கப்படுகின்றன. சமூக ஒழுங்கு குலைகிறது. அந்த இடம், தேவதாசி என்கிற முறை அதனின் நோக்கத்தில் இருந்து வழுவத் தொடங்கிய இடம்.
சமூகத்தில் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிற பொழுது, அங்கே தர்மத்திற்கு எந்தச் சீர்குலைவும் ஏற்படுவதில்லை. அந்தச் சமநிலை கெடும் பொழுது எல்லாம் கெடுகிறது. தேவதாசிப் பெண்கள் செல்வந்தர்களால், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இது நம்மைப் படையெடுத்து வந்தவர்களிடம் சாதாரணமாக இருந்த பழக்கவழக்கம்.
முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர், காந்தி சுதந்திரப் போராட்டத்திற்கு அழைத்த பொழுது அதை மறுத்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசின் வழியாகவே சட்டபூர்வமாகச் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் நினைத்தார். அவர் தான் 1926-இல் மதராஸ் மாகாண கவுன்சில் உறுப்பினராக இருந்த பொழுது தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். எப்போதும் போல் அதற்கும் இங்கே திராவிடச் சாயம் பூசப்பட்டுவிட்டது.
1608-இல் இந்தியாவிற்குள் வந்து, 1858 முதல் நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயன், அதாவது, இங்கிருக்கும் திராவிட ஸ்டாக்குகள் ஈ.வெ.ராமசாமி அவர்கள் போன்றவர்களின் பார்வையில் இந்தியாவைச் சிறப்பாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் 1926-இல் முத்துலட்சுமி ரெட்டி என்பவர் தீர்மானம் கொண்டு வரும் வரை இந்தத் தேவதாசி முறையைச் சீர்திருத்த நினைக்கவில்லை. ஆங்கிலேயே அரசின் அநேகமான அரசுப் பணிகளில் பிராமணர்களே தான் இருக்கிறார்கள் என்பதன் எதிர்வினையாக நடத்தப்பட்ட பிராமண எதிர்ப்பு மாநாடுகளின் விளைவாய் செட்டியார்கள், முதலியார்கள், நாயுடுகள் சேர்ந்து தொடங்கிய இயக்கம் தான் நீதிக்கட்சி; இது 1916-இல் தொடங்கப்படுகிறது. இதில் சேர்ந்த ஈ.வெ.ராமசாமி அவர்கள் அதனை 1944-இல் திராவிடர் கழகமாக மாற்றுகிறார்; காரணம் மதராஸ் மாகாணம் தமிழர்கள் மட்டும் வாழும் பகுதியாக இருக்கவில்லை.
முத்துலட்சுமி ரெட்டி அவர்களை அரசியலுக்குக் கொண்டு வந்ததும், மதராஸ் மாகாண கவுன்சிலின் உறுப்பினராகப் பரிந்துரைத்ததும் வுமன்ஸ் இந்தியா அசோசியேஷன் (Women’s Indian Association). முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1926-இல் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு வரை அரசியல் ரீதியில் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது பற்றி நீதிக்கட்சியோ ஈ.வெ.ராமசாமி அவர்களோ பேசியதாகவோ, எழுதியதாகவோ, முயற்சிகள் எடுத்ததாகவோ அதிகாரப்பூர்வமான பதிவுகள் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஒரு தனிப் பெண்மணியின் (முத்துலட்சுமி ரெட்டி) போராட்டத்தையும் துணிச்சலையும், ஒரு பெரிய இயக்கம் (திராவிட இயக்கம்) தனதாக்கிக் கொண்டது “வரலாற்று நேர்மையற்ற செயல்“
அந்தக் காலகட்டத்தில், இந்திய நிர்வாகமோ அதிகாரமோ முழுவதுமாக இந்தியர்கள் கையில் இல்லை. 1926-இல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் , 1935-க்குப் பிறகு இந்தியர்களுக்கான அதிகாரம் பரவலாக்கப்பட்ட பின்னர் 1947 வாக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு தேவதாசி முறை ஒழிக்கப்படுகிறது..அந்தக் காலகட்டத்தில் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், இந்தத் தேவதாசி முறையால் பெண்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள், அடிமையாக்கப்படுகிறார்கள், அதனால் இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று நினைத்தது சரி.
அது சார்ந்த விவாதம் ஒன்றில், உறுப்பினர்கள் சிலர் இது கலாச்சாரம் சார்ந்தது, இதைத் தடை செய்ய முடியாது, அரசு மத விஷயங்களில் தலையிடக் கூடாது, இது இறைவனுக்குச் சேவை செய்யும் புண்ணியம் தரும் பணி என்றெல்லாம் பேசியதாகவும், அதற்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ராமசாமி அவர்களிடம் கேட்டுப் பதில் சொன்னது மாதிரியும் உறுதிப்படுத்தப்படாத கதைகளை நீங்கள் தமிழகத்தில் பரவலாகப் படித்து இருப்பீர்கள். அதில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல், அப்படிச் சில உறுப்பினர்கள் பேசியதற்கு, “புண்ணியம் தரும் அந்தப் பணியை இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்களை (உங்கள் குடி பெண்களை) செய்யச் சொல்லுங்கள்” என்று முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் சொன்னது மட்டும்தான்.
நீதிக்கட்சியின் அடிப்படை நோக்கம் ‘பிராமண எதிர்ப்பு‘ (Anti-Brahminism). தேவதாசி முறை ஒழிப்பு தீர்மானத்திற்கு அவர்கள் ஆதரவு அளித்ததற்குக் காரணம், அந்தப் பெண்கள் மீதான சமூக அக்கறையை விட, அந்த விவகாரத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளை (அன்றைய பழமைவாதப் பிராமணர்களை) விமர்சிப்பதற்கே அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது சரியான வாதமாக இருக்கலாம்.
அந்தக் காலகட்டத்திற்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் என்ன நோக்கத்தோடு அதைத் தடை செய்ய நினைத்தாரோ அந்த நோக்கம் சரியானது. ஆனால், தடை சரியானதா என்பதை உறுதிபடச் சொல்லிவிட முடியாது.
மேற்கத்திய கலாச்சாரத்தில் இறைவணக்கத்தோடு இசை இன்றும் இருக்கிறது. தேவாலயங்களில் பாடுவதற்கெனவே பாடல் கற்றுக் கொள்கிறார்கள், வாத்தியங்கள் இசைக்கப் பழகுகிறார்கள். நாமோ நம் கலைகளை மறந்து அழிய விட்டுவிட்டோம். தவில், நாதஸ்வரம், பரதம், தமிழிசை இதெல்லாம் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது.
ஒரு செய்யுளை அது எந்த ஓசையில் எழுதப்பட்டதோ அதே ஓசையில் பாட முடிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறோம்? பழங்கால தேவதாசிகள் போல் செய்யுள்களுக்கும் கூட பாவங்கள் பிடிக்கத் தெரிந்த அளவு பரதத்தில் தேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறோம்?
பிரச்சனை என்பது பெண்களை உடல் ரீதியாகவோ உழைப்பு ரீதியாகவோ சுரண்டுவது. அது தான் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும். இப்போதும் கூட பெண்கள் உடல் ரீதியாகவோ உழைப்பு ரீதியாகவோ சுரண்டப்பட்டுக்கொண்டு தானே இருக்கிறார்கள். பெண் காவலர்கள் எத்தனை பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். பெண் காவலர்களே இருக்கக் கூடாது என்று தீர்மானம் போடுவது சரியா? 1930-களில் 1940-களில் நாடகங்களிலோ சினிமாவிலோ ஒரு பெண் வாய்ப்புத் தேட தவறான வழிகள் இருந்திருக்குமா? வாய்ப்புகளுக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருந்திருக்குமா? இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. இருக்கிறது என்று நிரூபணம் செய்யவும் முடியாது; அப்படியான சிக்கல்கள். நாகரிக வளர்ச்சியில், பெண்களின் உடை கவர்ச்சியானதாகவும் ஆண்களின் உடை சட்டை மேல் சட்டை போடுவதாகவும் இருப்பது எல்லாம் சுரண்டல் கணக்கில் வராதா? சினிமா வியாபார நோக்கத்திற்காகப் பரவலாக்கிய உடைகள் பெண்களிடம் பரவலாகிவிட்டது தானே? ஹாலிவுட் படங்களில் கூட பனிப்பிரதேசத்தில் பெண்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டு வருகிறார்கள். நம் சினிமாக்களில் அப்படி இருக்கிறதா? சினிமாவையே தடை செய்து விடலாமா?
முத்துலட்சுமி அவர்கள் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஒரு ஆழமான விவாதம் நடந்திருக்க வேண்டும். பெண்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றியும் அவர்கள் வாரிசு ரீதியாக அடிமையாக்கப்படுவதையும் தடுக்கிற, தடை செய்கிற அதே வேளையில் கோவில்கள் மூலம் நாம் வளர்த்தெடுத்த நம் பாரம்பரியக் கலைகளை அப்படியே வளர்த்து எப்படி உயிர்ப்போடு வைத்திருந்திருக்க வேண்டும் என்றும் நாம் விவாதித்து இருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் இருந்த பிராமண எதிர்ப்பு அரசியல், இடைக்காலப் பிராமணர்களிடம் இருந்த ‘தான்‘ என்கிற அகம்பாவ வேற்றுமை மனநிலை, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த நம் அரசியல் மற்றும் வரலாற்றுப் புரிதல், நம்மைப் பற்றி ஆங்கிலேயர்கள் புரிந்துகொண்டதை நாம் கல்வி என்று கற்றுக்கொண்டது – இதெல்லாம் சேர்த்து நாம் நம்முடைய மண் சார்ந்த பிரச்சனைகளைத் தவறான கண்ணோட்டத்தோடு அணுக வழி செய்துவிட்டது. அதில் ஒன்று தான் இந்த தேவதாசி முறை ஒழிப்பு. கலை சார்ந்த ஒரு இறைவணக்க முறை இடையில் கெட்டுவிட்டதால் அதை ஒழித்துவிட்டார்கள். ஆனால், அது எதனால் கெட்டதோ அதை ஒழிக்கவில்லை. அதில் என்ன சிக்கல் இருந்ததோ அது இன்னமும் வேறு வடிவங்களில் இருக்கவே தான் செய்கிறது. பெண்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், கலை வடிவிலான தியானத்தை ஊக்குவித்த ஒரு பாரம்பரியத்தை நாம் அழித்துவிட்டோம். ஆனால், இன்னும் பெண்கள் சுரண்டப்படுவதை நாம் அனுமதிக்கின்றோம். அதைத் தான் நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.
While seeking to shield women from exploitation, we dismantled a tradition that integrated meditation and art, yet the exploitation of women persists
நம்முடைய குரல்கள் அதற்கு எதிராக தீர்க்கமாக தெளிவாக ஒலிக்கட்டும்
கெட்டதை ஒழிப்பதில் நல்லதை அழித்துவிடக் கூடாது; ஒழிப்பது மட்டுமே தீர்வல்ல, சீரமைப்பதே வளர்ச்சி!
