கதிர் விஜயம்

இராவண அரசியல் -19; பிரிவினை செய்த மொழி ஆய்வு!

நாம் இந்தச் சமஸ்கிருத வெறுப்பு பற்றி எழுதிய கட்டுரைகள் மற்றும் இன்னும் சில இராவண அரசியல் தொடர் பகுதிகளிலும் சமஸ்கிருதம் மற்றும் தமிழுக்கிடையில் இருக்கின்ற ஒற்றுமைகள் குறித்து எழுதியிருக்கிறோம். சரி! ஒரு முழுமையான கட்டுரை, நாம் ஏன் சமஸ்கிருதம் மற்றும் தமிழை இரு வேறு மொழி குடும்பத்திற்குள் வைத்தது பிழை என்கிறோம், வைத்தவர்கள் ஏன் அப்படி வைத்தார்கள் என்று எழுதலாம் என்று முடிவு செய்து இந்தக் கட்டுரையை எழுதுகிறோம்.

தமிழில் சங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்து வெளிவந்த அந்நியன் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் அந்நியன் ஒரு ஸ்லோகம் சொல்லிக்கொண்டே வருவார். அல்லது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே தவறு செய்தவர்களைத் தண்டிப்பார்.

எப்படியடா நியாயமே இல்லாமல் இந்திய மொழிகள் அனைத்திற்கும் பல ஒற்றுமைகள் இருந்தும், ஒன்றோடு ஒன்று அடிப்படை கட்டுமானத்தில் தொடர்பு இருந்து, இரண்டு வேறு வேறு மொழி குடும்பமாகப் பிரித்தீர்கள் என்று எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். இலக்கண கட்டுமானம் இரண்டிற்கும் வெவ்வேறாக இருக்கிறது, அதனால் பிரிக்கிறோம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். என்னால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மொழிகளைக் குடும்பங்களாகப் பிரிக்கும் பொழுது இலக்கண கட்டுமானத்தை மட்டும் ஏன் அளவுகோலாக வைத்துக்கொண்டார்கள் என்கிற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

இன்று காலையில் லல்லி மிஸ் (அடிப்படை ஹிந்தியும் சமஸ்கிருதமும் கற்றுத் தந்த ஆசிரியர்), ஒரு தேவாரப் பாடலை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் (WhatsApp Status) வைத்திருந்தார். அதைப் பார்த்ததும் எனக்குக் கீதையில் உள்ள ஸ்லோகங்கள் நினைவிற்கு வந்தது. அவர்கள் வீட்டில் தான் கீதையும் முதலில் கற்றுக்கொண்டேன்.

தேவாரப் பாடலைப் பார்த்துக் கீதை ஏன் நினைவிற்கு வர வேண்டும்? அது ஏன் என்று சொல்வதற்காகவே தான் அந்நியன் படத்தையெல்லாம் நாம் இந்தக் கட்டுரைக்குள் இழுத்தோம். அந்தத் திரைப்படத்தில், விக்ரம் சொல்லும் ஸ்லோகம் கீதையில் இருந்து எடுக்கப்பட்டது தான். (ஆசிரியர் குறிப்பு: விக்ரம் கருட புராண ஸ்லோகங்களையும் சொல்வார், ஆனால் இந்த கீதை ஸ்லோகமும் அந்தத் திரைப்படத்தின் கருப்பொருளோடு தொடர்புடையது).

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஸுச”

“எல்லாச் சடங்குகளையும் தியாகம் செய்துவிட்டு என்னை மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிப்பேன். கவலைப்படாதே!”என்பது தான் அர்த்தம். நமக்கு இப்போது அது தேவையில்லை.

நான் கீதை சில அத்தியாயங்களைச் சமஸ்கிருதத்தில் கற்றுக்கொண்ட பொழுது ஒன்றைக் கவனித்தேன். என் கையில் இருந்த புத்தகத்தில், தேவநாகரி எழுத்து வடிவிலும், தமிழ் எழுத்து வடிவிலும் என்று இரண்டு எழுத்து வடிவங்களில் ஒரு ஸ்லோகம் இருக்கும். ஸ்லோகத்தில் வார்த்தைகளுக்கு இடையில் ஒரு இடைவெளி விட்டிருப்பார்கள். ஆனால், நாம் வார்த்தைகளை ஒலிக்கும் பொழுது அந்த இடைவெளியின் படி இடைவெளி விட்டு ஒலிக்க முடியாது.

ஒரு ஸ்லோகத்தின், ஓசை நயத்திற்காக வார்த்தைகள் பிரித்து சேர்த்து கலைத்து எழுதியிருப்பார்கள். மாமேகம்- என்பதில், மாம்- ஏகம் என்று இரு வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால், ஸ்லோகத்தின் ஓசை குறித்து அது மாமேகம் என்றே எழுதப்பட்டது.

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன

மேலே உள்ள ஸ்லோகம் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று சொல்கிற ஸ்லோகம். இதில் கர்மண்யேவாதிகாரஸ்தே – கடமையில் மட்டுமே அதிகாரம் உனக்கு என்று நான்கு வார்த்தைகள் சேர்ந்து ஒலிப்பு குறித்து ஒரே வார்த்தை ஆகியிருக்கிறது.

கர்மணி-கடமையில்; ஏவ (Eva) – மட்டுமே; அதிகார: (Adhikarah) – உரிமை; தே (Te) – உனக்கு.

இதை நீங்கள் ஐரோப்பிய மொழிப் பாடல்களில் காண முடியாது. ஆனால், தமிழ் செய்யுள்களில் காணலாம். தமிழ் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஓசை இருக்கிறது. செய்யுளுக்கு ஒலி அளவீடுகள் இருக்கின்றன.

ஆடல் புரிந்த நிலையும்
அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம்
பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும்
நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

காலையில் லல்லி மிஸ் பகிர்ந்த தேவாரப் பாடல் இது தான். இதில், பல்லாயிரம் என்பது பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது. நன்கு உயர் என்பது சேர்த்து எழுதப்பட்டு இருக்கிறது. தமிழில், செய்யுள் அமைப்புக்கும் செய்யுளின் ஓசை அமைப்புக்கும் முக்கியத்துவம் இருந்தது போலவே தான் சமஸ்கிருதத்திலும் இருந்தது.

சரி! இந்த வார்த்தைகளைப் பிச்சுப் போட்டுக் கலைத்துச் சேர்த்துக் குழப்பி அடிக்கிற வழக்கம் எப்படிச் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் சாத்தியப்படுகிறது? ஐரோப்பிய மொழிகளுக்கு ஏன் சாத்தியப்படுவதில்லை?

காரணம், எழுத்து மற்றும் ஒலி அமைப்பின் படி அகரவரிசை மற்றும் அதில் இருக்கும் ஒற்றுமை தான் சமஸ்கிருதத்தாலும் தமிழாலும் சொற்களைச் செய்யுளின் ஓசை நயத்திற்கு ஏற்ப, செய்யுளின் ஓசை அளவீட்டிற்கு ஏற்ப எழுத முடிகிறது.

இரண்டு மொழிகளிலுமே உயிர்மெய் (Abugida) என்ற கட்டமைப்பு இருப்பதால் மட்டுமே, ஒரு வார்த்தையின் இறுதி மெய்யெழுத்தும் (Consonant), அடுத்த வார்த்தையின் முதல் உயிரெழுத்தும் (Vowel) ஒன்றோடு ஒன்று இணைந்து புதியதொரு உயிர்மெய் எழுத்தாக உருமாறுகிறது. இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு வார்த்தைகளை எப்படிச் சேர்க்கலாம் என்பதற்கு விதிகள் செய்து வைக்க ஏதுவாக அமைகிறது. தமிழில் புணர்ச்சி விதிகள் என்றும் சமஸ்கிருதத்தில் சந்தி என்றும் அழைக்கிறார்கள்.

ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் இந்த உயிர்மெய் எழுத்து முறை இருக்கவில்லை, அகர வரிசையும் கூடத் தமிழும் சமஸ்கிருதமும் போல் இருக்கவில்லை. தமிழிலும் சமஸ்கிருதத்திலும், ‘அ’ எல்லா வார்த்தைகளிலும் ஆ என்று தான் ஒலிக்கும். கூடுதலாகச் சமஸ்கிருதத்தில் க, ச, எல்லாம் நான்கு வைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய மொழிகளில் A எல்லா இடங்களிலும் ‘ஏ’ என்று ஒலிப்பதில்லை. எழுத்து மற்றும் ஒலி அமைப்பின் படி இந்திய மொழிகள் அனைத்திற்கும் இருக்கின்ற ஒற்றுமையை நீங்கள் ஐரோப்பிய மொழிகளோடு சேர்த்துப் பார்க்க முடியாது.

ஏறத்தாழ அனைத்துப் பாரம்பரிய இந்திய மொழிகளிலும் இந்த ஒற்றுமையை நாம் பார்க்க முடியும்.

சமஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒரு எழுத்து எங்கெங்கு எத்தனை மாத்திரை (Mathra – Measure of Time) ஒலிக்கும் என்கிற கணித அளவீடை (Mathematical calculation) வைத்திருக்கிறார்கள். குறில் (1 மாத்திரை), நெடில் (2 மாத்திரை), மெய் (1/2 மாத்திரை). இப்படி ஒலியைத் துல்லியமாக அளந்து எழுதும் அறிவியல், பண்டைய இந்திய நிலப்பரப்பைத் தவிர உலகில் வேறு எங்கும் கிடையாது

எந்த எழுத்துக்களும் அனாவசியமாக ஒரு வார்த்தையில் வந்து இருப்பதில்லை. no என்பது நோ என்று ஒலிக்கும் பொழுது Know எதற்காக?இது ஐரோப்பிய மொழிகளின் ஒரு மிகப்பெரியப் பிழை.இப்படியான விஷயங்களை நீங்கள் ஒலி அமைப்பு சார் எழுத்துக்கள் மற்றும் கட்டுமானத்தைக்(structure) கொண்ட இந்திய மொழிகளில் பார்க்க முடியாது.

ஆங்கிலத்தில் நாம் “An Apple” என்று எழுதுகிறோம். பேசும்போது அல்லது பாடும்போது அதை “A napple” என்று சேர்த்துத்தான் உச்சரிப்போம். ஆனால், எழுதும்போது “Anapple” என்று எழுத முடியாது; எழுதினால் அது இலக்கணப் பிழை (Spelling mistake). காரணம், அவர்களிடம் இருப்பது “Alphabet” (தனித்தனி எழுத்துக்கள்).

ஆனால், இந்திய நிலப்பரப்பில் உள்ள மொழிகள் அனைத்தும் உடலும் (மெய்) உயிரும் (உயிர்) சேர்வது போன்ற தத்துவார்த்தமான ‘உயிர்மெய்’ கட்டமைப்பைக் கொண்டவை. ஒரு வரியில் உள்ள வார்த்தைகள், ஓசை நயத்திற்காக அடுத்த வார்த்தையின் உயிரோடு கலந்து, உருமாறி, வளைந்து கொடுக்கும் இந்த அற்புதப் ‘புணர்ச்சி/சந்தி’ இலக்கண முறை அல்லது அமைப்பு தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவானது.

இந்த மேற்கத்திய ஆய்வாளர்கள், மொழிகளைக் குடும்பங்களாகப் பிரித்தார்கள். முதலில் இதற்கான அவசியம் என்ன என்பது தெரியவில்லை. அப்படிப் பிரித்தவர்கள் என்ன செய்தார்கள்?

சமஸ்கிருதமும், தமிழும் ஒரே எழுத்துருவான பிராமி எழுத்துருவைக் கொண்டிருக்கிறது; ஒரே குடும்பத்தில் வருமா என்றால், நாட்டாமை விஜயகுமார் மாதிரி, “செல்லாது! செல்லாது!” என்றுவிட்டனர். சரி! இரண்டும் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து என்கிற அமைப்பைக் கொண்டிருக்கிறதே இரண்டையும் ஒரு மொழி குடும்பத்தில் வைக்கலாமா என்றால் மீண்டும் “செல்லாது செல்லாது” என்று விட்டனர். அட! நீங்கள் திராவிட குடும்பம் என்று பிரித்து வைத்திருக்க மலையாளம் தெலுங்கு கன்னடத்தில் இருந்து ஆரிய மொழி என்று வகைப்படுத்திய சமஸ்கிருதத்தைப் பிரித்துவிட்டால் அந்த மொழிகள் இயங்கவே இயங்காது என்றால் செல்லவே செல்லாது என்றார்கள்.

இவர்கள் வினைச்சொற்கள் எப்படி மாறுகிறது என்கிற இலக்கண அடிப்படையில் மொழி குடும்பத்தைப் பிரிக்கிறோம் என்கிறார்கள். கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் செந்திலைக் கேட்பது போல், “இப்படித்தான் பிரிக்க வேண்டும் என்று உனக்கு எவன்டா சொன்னது?”

இங்கே சமஸ்கிருதத்தில் ஒரு வினைச்சொல், வேறு வேறு காலங்களைக் குறிக்கும் பொழுது அடிப்படைச் சொல்லில் இருந்து திரிந்து மாறுபடும் என்கிறார்கள். தமிழிலும் அது தானே நடக்கிறது என்று கேட்டால், மாறுபடுகிறது, ஆனால் மாறுபடும் விதத்தில் வேறுபடுகிறது என்கிறார்கள்.

சமஸ்கிருத உதாரணம்: வேர்ச்சொல் : வித் (vid) – அறிதல் (To know) நிகழ்காலம்: வேத்தி (vetti) – அவன் அறிகிறான். இறந்தகாலம்: வேத (veda) – அவன் அறிந்தான். (இங்கே ‘வி’ என்பது ‘வே’ என்று உள்ளுக்குள் உருமாறுகிறது). வேர்ச்சொல்: கும் (gam) – போதல் (To go) நிகழ்காலம்: கச்சதி (gacchati) – அவன் போகிறான். இறந்தகாலம்: ஜகாம (jagāma) – அவன் போனான்.

தமிழில் வா என்கிற வேர்ச்சொல், வரு-கிறு-ஆன் = வருகிறான் என்றும், வந்-த்-ஆன் = வந்தான் என்றும் உருமாறும். சமஸ்கிருதம் போன்று உள்ளுக்குள் உடைந்து மாறுவதில்லை என்கிறார்கள். தமிழ், செங்கற்களை அடுக்குவது போல் வினைச்சொல்லின் சொற்களை அடுக்கித் திரிகிறது. செய்-செய்தேன்-செய்கிறேன். சமஸ்கிருதம் இரண்டு உலோகங்களை உருக்கி ஒன்றாக்கியது போல் திரிகிறது.

இரண்டிலும் வினைச்சொல் மாறுபட்டுத் திரியும் முறையில் வேறுபாடு இருந்தாலும், இரண்டிலும் அடிப்படையில் இந்த மாற்றத்தைப் புணர்ச்சி மற்றும் சந்தி இலக்கணங்களால் வகுத்துச் சொல்ல முடியும்.

 “கம்” (Gam) எப்படி “ஜகாம” (Jagama) ஆனது என்பதைப் பாணினியின் இலக்கணம் ஒரு சூத்திரத்தின்  மூலம் சமஸ்கிருதம் விளக்குகிறது.

ஐரோப்பிய மொழியான ஆங்கிலத்தின் come – came, went என்பதைப் புணர்ச்சி மற்றும் சந்தி இலக்கணம் கொண்டு விளக்க முடியாது.

மேற்கத்திய ஆய்வாளர்கள் சமஸ்கிருதம் வினைச்சொற்களை உள்ளுக்குள் உடைத்து மாற்றுகிறது (Fusional), அதனால் அது எங்களைச் சேர்ந்தது என்றார்கள். ஆனால் அவர்களைப் பார்த்து, சமஸ்கிருதம் அப்படி உடைந்து மாறினாலும், மற்ற இந்திய மொழிகள் போல் அது ஒரு துல்லியமான இலக்கண விதிக்கு (Rule-based) உட்பட்டு மாறுகிறது என்று நாம் சொல்ல வேண்டும்.வினைச்சொற்கள் இணைப்பு குறித்து அவர்கள் மொழியை பிரிக்க வைத்துக்கொண்ட அடிப்படையில் பல ஓட்டைகள் இருக்கிறது.

சமஸ்கிருதம் மற்றும் தமிழில் செயல், செய்பவர் இரண்டும் ஒரே வார்த்தையாக இருக்க முடியும், ஐரோப்பிய மொழிகளில் அது சாத்தியமா? He went என்று தான் எழுத வேண்டியிருக்கிறது.

ஆக, எழுத்து மற்றும் ஒலிப்பு அமைப்பில் இருந்து தான் வினைச்சொற்கள் மாறுபட்டுத் திரிகிறது. அப்படி மாறுபடும் முறையில் மட்டும்தான் சமஸ்கிருதமும் தமிழும் வேறுபடுகிறதே தவிர அடிப்படையில் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கிறது.

இரண்டும் ஒரே எழுத்துருவான பிராமி எழுத்து முறையைக் கொண்டிருந்தது. இரண்டிலும் பல்வேறு பொதுவான வார்த்தைகள் அல்லது பரிமாறிக்கொள்ளப்பட்ட வார்த்தைகள் இருக்கின்றன. பிராமி வடிவில் எகிப்து பிரமிட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் வார்த்தையில் சிகை என்பது சம்ஸ்கிருத சொல்லாக அறியப்படுகிறது. இது தமிழ் மற்றும் சமஸ்கிருதத்திற்கு முந்தைய நிலையாக இருந்திருக்கலாம்.

சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் ட, ண, ல, ள, ற, ன போன்ற உச்சரிப்புகள் (Retroflex sounds – நாக்கைப் பின்னே வளைத்து ஒலிப்பது) கிடையாது. ஆனால் இந்திய நிலப்பரப்பில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய அனைத்திலும் இந்த உச்சரிப்புகள் உண்டு. வேத சமஸ்கிருதத்திலேயே ‘ட’, ‘ண’ (Retroflex) ஒலிகள் உள்ளன. இந்தோ-ஐரோப்பிய மொழிகளான லத்தீன், கிரேக்க மொழிகளில் இந்த ஒலிகள் இல்லை.

ஐரோப்பிய ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில், வார்த்தைகள், எழுத்துக்கள், ஒலிப்பு முறைகள் இவையெதையும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. வினைச்சொற்களின் இலக்கண அமைப்புப் படி மொழி குடும்பத்தைப் பிரித்தவர்கள், ஐரோப்பிய மொழிகளில் இருக்கும் துணை வினைச்சொற்கள் போன்ற அமைப்பு தமிழிலும் இருக்கிறது என்று கருத்தில் கொள்ளவில்லை. ஜப்பான் மற்றும் கொரியா மொழிகள் தமிழ் மொழியின் வினைச்சொற்கள் போல வேர்ச்சொல்லோடு சொற்களை இணைக்கும் அமைப்பைக் கொண்டிருக்கிறதே என்று கொள்ளவில்லை. நீங்கள் ஜப்பான் மொழியை இந்தக் காரணத்திற்காகத் திராவிட மொழி குடும்பத்தில் வைக்க முடியுமா? முடியாது.

முதலில் ஒரு மொழிக்குடும்பம் எப்படிப் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும்? உயிரியல் வகைப்படுத்தலில் (Biology) Kingdom, Phylum, Class, Order, Family, Genus, Species என்று ஒரு படிநிலை (Hierarchy) இருப்பதைப் போல, மொழியியலிலும் படிநிலை இருக்க வேண்டும், அதில் ஓசையும் எழுத்தும் (Sounds & Letters) மேலே இருக்க வேண்டும்.

மொழி வகைப்படுத்தலில் ஓசை ஏன் முதலில் இருக்க வேண்டும்? உயிர்களை நாம் இடங்களுக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ப வகைப்படுத்துகிறோம். நாயும் புலியும் ஒரே மாதிரி சத்தமிடுவதில்லை. ஒரு நிலப்பரப்பில் உருவாகும் ஒலிப்புமுறைகள் வேறு நிலப்பரப்பில் அதே மாதிரி இருக்கவில்லை என்பதே தான் மொழிகளில் ஒலிப்பு முறைகளில் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது.

புலி, சிங்கம், சிறுத்தை எல்லாம் எப்படி ஒரே மாதிரி சத்தமிடும் இயல்பைக் கொண்டிருக்கிறதோ, அது போல இந்திய மொழிகள் இயல்பில் ஒலிப்பு முறையில் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. ஒலிப்பு முறைக்குப் பின் எழுத்துரு தோன்றுகிறது. இதுவும் ஒரு நாகரிகத்தின் அடையாளம். அந்தக் கண்ணோட்டத்தில், சமஸ்கிருதம், தமிழ் என்று எல்லா இந்திய மொழிகளுக்கும் பிராமி எழுத்து முறை தான் மூலமாக இருந்திருக்கிறது. நாக்கைப் பின் வளைத்து உச்சரிக்கும் எழுத்துக்கள் இந்திய மொழிகளில் தான் இருக்கிறது. இதற்கெல்லாம் அடுத்ததாக இலக்கணத்தை எடுத்துக்கொண்டால், கருத்தியல் ரீதியாகப் பல இலக்கண அமைப்புகள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஒத்ததாக இருக்கிறது. தமிழில் புணர்ச்சி விதியைப் போல், சமஸ்கிருதத்தில் சந்தி, இந்த இலக்கணங்கள் அடிப்படையில் ஒலிப்பு முறை சார்ந்ததாகத் தான் இருக்கிறது. வினைச்சொற்கள் திரிகிற முறையில் இருக்கின்ற மாறுபாட்டை மட்டும் வைத்துக்கொண்டு இரண்டு மொழிகளை வேறு வேறு குடும்பம் என்று பிரித்தது அபத்தமே அன்றி அறிவார்ந்த ஆய்வு இல்லை.

என் பூட்டனுக்குப் பூட்டன் ஒருவன் இருந்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். என் தாத்தன் காலத்தில் பங்காளிகள் பிரிந்து திரிந்து பரிணாம வளர்ச்சி அடைகிறார்கள். அந்த வளர்ச்சியின் நீட்சியாக நான் இருக்கிறேன். என் பிள்ளை என் மனைவியின் குணநலன்களை அதிகமாகக் கொண்டும் என்னுடைய குணநலன்களைக் கொஞ்சம் மட்டுமே கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டால், என் பிள்ளை என் பூட்டன் வழியைச் சார்ந்தது இல்லை என்று ஆகி விடுமா? என் பிள்ளை குணம் என் மனைவி போன்றதாக இருக்கிறது, ஆனால் முகம் என்னைப் போன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், மேற்கத்திய ஆய்வாளர்களின் தர்க்கத்தின் படி நான் வேறு குடும்பம், என் பிள்ளை வேறு குடும்பம். ஒரு மொழி எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி (evolve) அடையும் என்பதை ஒதுக்கிவிட்டு அவர்கள் மொழி குடும்பங்களைப் பிரித்து இருக்கிறார்கள்.

ஒருவர் அவர்கள் வளர்ந்த சூழலைப் பொறுத்துத் தான் எதையும் புரிந்து கொள்வார்கள். மாட்டைப் பார்த்திராத ஒருவன், அவர்கள் ஊரில் பன்றியையோ மான்களையோ மட்டும் பார்த்து வளர்ந்த ஒருவன் நம் ஊருக்கு வந்து மாட்டைப் பற்றி ஆய்வு செய்தால் அவன் அறிவு எப்படி வேலை செய்யும்? இது நம் ஊர் மான் அல்லது பன்றி போன்ற ஒரு நான்கு கால் பிராணி என்று தானே நினைக்கும். அப்படியானது தான் நம்மைப் பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆய்வுகள்.

அவனுக்குக் கலாச்சாரம் தெரியாது. மொழி ஒலிப்பு முறைகளின் நுணுக்கம் தெரியாது. இந்த இரண்டு மொழிகளும் இந்தியா முழுமைக்கும் இருக்கும் மொழிகளில் எப்படி ஆதிக்கம் செலுத்தியிருக்கும் என்று தெரியாது. ஆனால், அவர்கள் மிக லாவகமாகச் சமஸ்கிருதத்தை அவர்களோடு சேர்த்துக்கொண்டு இந்திய மொழிகளை இரண்டாகப் பிரித்துக் குழப்பிவிட்டுச் சென்று இருக்கிறார்கள்.

நம்மைப் பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டும். மேற்கத்திய தாக்கம் இல்லாமல். நான் தமிழன் நீ பானிபூரி காரன் என்கிற சார்புநிலை இல்லாமல் ஆய்வு செய்ய வேண்டும். தெலுங்கு- தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டும். திருக்குறளில் சம்ஸ்கிருத வார்த்தைகள் இருக்கிறது என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒன்றாக இருந்த கலாச்சாரத்தை, அவர்களுக்கு லாவகமான விதிமுறைகள் கொண்டு ஆய்வு செய்து ஆரியம் திராவிடம் என்று பிரித்து வைத்திருக்கும் ஆய்வுகளைப் பொய்கள் என்று நிராகரிக்க வேண்டும்.

நம்மை நாம் அறிவோம்! நம் அறிவு கொண்டு! (we learn about us not using western knowledge, but using our own knowledge).

Error happened.
Exit mobile version