கதிர் விஜயம்

இராவண அரசியல்-17; திரௌபதி என்கிற கிருஷ்ணை

அப்பாவிடம் ஜோதிடம் சம்பந்தமாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கிய பின் அவரிடம் யாரேனும் ஜாதகம் பார்க்க வந்தால், அவர்களோடு நானும் உட்கார்ந்து கொள்வேன். அவர் கையில் இருக்கும் ஜாதகத்தை நானும் பார்த்துக் கொள்வேன். அவர் என்ன சொல்வார் என்கிற ஆர்வம் கேட்க வந்தவர்களை விட என்னிடம் அதிகமாக இருந்தது.

அநேகமான சமயங்களில் திருமணப் பொருத்தங்கள் பார்க்கத்தான் ஆட்கள் வருவார்கள். பத்து பொருத்தங்கள் இருக்கிறது என்பதை மட்டும் அவர் பார்க்க மாட்டார், அதோடு இரண்டு ஜாதகங்களில் இருக்கும் சாதக பாதகங்களை ஆராய்வார். சில சமயங்களில், சில கிரக அமைப்புகளைச் சுட்டிக் காட்டி, பொருத்தம் இருந்தாலும், குணம் பற்றியோ அல்லது வேறு விஷயங்கள் பற்றியோ இருக்கும் குறையைச் சுட்டி “இந்த பையன் வேண்டாம், இந்த பொண்ணு வேண்டாம்” என்று சொல்லிவிடுவார். அதே சில நேரங்களில் அப்படியான கிரக அமைப்புகள் இருந்தாலும்கூட எந்தக் குறையும் சுட்டாமல் ஜாதகம் பொருந்துகிறது திருமணம் செய்யலாம் என்று விட்டுவிடுவார்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வளர்ந்த நல்ல பிள்ளை இல்லை நான். அவருடன் எப்போதும் சரி எது தவறு எது என்று விவாதித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அநேகமானவர்கள் வீட்டில் இருப்பது போல அந்த சுதந்திரம் இயற்கையாய் எங்களிடையேயும் இருந்தது.

சில ஜாதகங்கள் சில ஜாதகங்களோடு தான் பொருந்திப் போகும், அங்கே இது சரியில்லை அது சரியில்லை என்று இருக்க முடியாது என்பது அவர் வாதமாக இருக்கும். அந்த வயதில், அவர் சொல்லும் விஷயங்களில் இருந்த ஆழத்தைப் புரிந்து கொள்கிற பக்குவம் என்னிடம் இருந்திருக்கவில்லை. காலப்போக்கில், நாம் கடந்து வரும் விஷயங்களோடு அவரின் வாதங்களைப் பொருத்திப் பார்க்கிற பொழுது அது சரிதான் எனப்பட்டது.

புரிந்து கொள்ளும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால், சில கிரக அமைப்புகளின்படி, ஒருவருக்கு ஆண் தன்மை குறைவாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நட்சத்திர பொருத்தம் இருக்கிறது என்பதற்காக அவரை ஏற்றுக்கொள்ளச் சொல்ல முடியாது. அதே ஒரு பெண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருக்கிறது, அந்தப் பெண்ணுக்கு இல்லற நாட்டம் இருக்காது என்பது போன்ற அமைப்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சூழலில், இந்த இரண்டு ஜாதகங்களை ஒரு பெண் வீட்டாரோ மாப்பிள்ளை வீட்டாரோ கொண்டு வரும் பொழுது, இது குறையாக இருக்கிறது அது குறையாக இருக்கிறது என்று அதைத் தடுக்க முடியாது. நாம் தடுத்தாலும் அவர்களுக்கு அப்படியொரு வரன் தான் அமையும்.

வயது கூடக் கூட, சில திருமண பந்தங்களை நாம் கண்கூடாகப் பார்த்த பின் தான், இந்த திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில் இருக்கின்ற சிக்கல் நமக்கு புரிந்தது. அதென்ன விதி, அது அப்படித் தான் அமையும்! இதெல்லாம் மூடநம்பிக்கை என்கிறீர்களா? இந்த மூடநம்பிக்கையைப் பற்றி வள்ளுவரே ‘ஊழ்’ என்கிற அதிகாரத்தில் எழுதி வைத்து இருக்கிறார். எது ஆகுமோ அதுதான் ஆகும்; எது ஆகாதோ அது ஆகாது. ஊழ் என்பது நம் முன்வினை பயன். அந்த முன்வினையின் படி நடக்கவிருப்பதை அறிந்து சொல்லும் கருவி தான் ஜோதிடம்.

அப்பாவின் இன்னொரு வாதம், இந்த திருமணப் பொருத்தம் விஷயத்தில் அல்லது திருமண விஷயத்தில், எல்லாமே சரியாக அமைகிற ஜாதகம் என்று இருக்காது. காரணம், இந்தப் பிரபஞ்சம் முழுதுமே அப்படித் தான் இருக்கிறது (whole universe is imperfect. ஏதோ ஒரு குறை தான் எல்லாவற்றையும் இயக்குகிறது (Imperfection makes it run). எல்லாம் நிறையாக இருந்தால் அது ஒரு அசைவற்ற நிலையில் இருந்துவிடும் (Like a neutron it will remain unmoved). முழுமையாக எல்லோரிடமும் எல்லா நல்ல குணங்களும் இருப்பதில்லை. வாழ்க்கையும் நிறைகுறைகள் நிறைந்ததாகத் தான் இருக்கிறது.

யாரடா நீ! இராவண அரசியல் என்று தலைப்பு வைத்துவிட்டு, திருமணப் பொருத்தம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.

ஒரு பூரணமான நல்ல இயல்புகளையும் குணங்களையும் கொண்ட ஆண் பெண் என்று யாருமே கிடையாது. குறைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாலோ, பூரணமான நிறைகளை மட்டும் தேடிக் கொண்டிருந்தாலோ இங்கு எல்லோரும் துறவறம் போக வேண்டியது தான். திருமண பந்தம் என்று இல்லை எல்லா பந்தங்களிலும் நாம் சில குறைகளை அனுசரிக்க வேண்டிய அவசியத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இது புரியாமல், திரௌபதி என்ன செய்கிறாள், “சிவபெருமானே, சகல சிறப்புகளும் கொண்ட ஒரு கணவனை எனக்கு அருளுங்கள்” என்று வரம் கேட்கிறாள். நாம் இறைவனை வேண்டிக் கொள்ளும் பொழுதுகளில் அதை நாம் மீண்டும் வேண்டிக்கொள்வது நம் இயல்புகளில் ஒன்று. அப்படியாகத் திரௌபதி, “சிவபெருமானே, சகல சிறப்புகளும் கொண்ட ஒரு கணவனை எனக்கு அருளுங்கள்” என்று ஐந்து முறை கேட்டு விடுகிறாள்.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது நடக்கிறது. இறைவன் கொடுக்கும் எந்த வரங்களும் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததில்லை. நம் புராணங்கள் அதைத் தான் நமக்கு காட்டுகிறது. அந்த விதிகளை வெல்ல நினைத்து வரம் வாங்கியவர்கள் எல்லாம் தோல்வியுற்றதைத் தான் நம் புராணங்கள் நமக்கு சொல்கிறது. இயற்கை விதிகளின் படி எல்லா நல்ல இயல்புகளும் ஒரே ஒருவனிடத்தில் வாய்க்கப் பெறுவது என்பது சாத்தியமே இல்லை.அதனால், ஒருங்காய் எல்லா நல்ல இயல்புகளும் கொண்ட ஐந்து பேர் திரௌபதிக்கு கணவர்களாக அமைந்து விடுகிறார்கள்.

பூரணமாக எல்லா நல்ல இயல்புகளும் ஒரேயொருவரிடம் எதிர்பார்க்கக் கூடாது என்பதும், உலக வாழ்க்கையில் சில குறைகளை அனுசரிக்கப் பயந்து இப்படி விசித்திரமான ஆசைகள் கொள்ளக் கூடாது என்பதும் தான் (கருத்து). ஆனால், இந்த பெண் விடுதலை பெண் சுதந்திரம் பேசி, ஆண் தண்ணியடித்தால் நீயும் தண்ணி அடி என்று பேசுகின்ற திராவிட போராளிகள், அவர்களின் பின்பற்றாளர்கள் என்ன செய்கிறார்கள்? இந்த ஐந்து கணவர் விஷயத்தைப் பற்றி மிக மோசமான கருத்துக்களை இன்றளவும் உலவவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

சில நேரங்களில், இவையெல்லாம் கட்டுக்கதைகள், ஆரியத் திணிப்பு, பார்ப்பான் நம்மை அடிமையாக்கச் செய்து வைத்த கதைகள் என்பார்கள். திடீரென்று வந்து ஏகலைவனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது, திரௌபதி ஐந்து பேருடன் இருந்தாள் என்று இதையெல்லாம் வரலாறாக எடுத்துக் கொண்டு மோசமான கருத்துக்களை, பொய்யான கருத்துக்களைப் பேசுவார்கள்.

எனக்கு சில விஷயங்கள் ஆச்சரியமளிக்கிறது. இது கட்டுக்கதையாக இருந்தால் இவர்கள் ஏன் இதை ஒரு வரலாறாக எடுத்துக் கொண்டு இந்த நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி கீழ்த்தரமாகப் பேச வேண்டும்? பெண் விடுதலை பெண் உரிமை பற்றிப் பேசுகிறவர்களால், ஆண்கள் மட்டும் நிறைந்திருந்த சபையில் தனியொரு பெண்ணாய் நீதி கேட்ட திரௌபதி பற்றி எப்படி கீழ்த்தரமாகப் பேச முடிகிறது? நாட்டில் தமிழ்நாடு உட்பட அநேகமான மாநிலங்களில் உள்ள சிற்றூர்களில் திரௌபதியின் பெயரால் கோயில் நிறுவப்பட்டு அது பிராமணர் அல்லாதவர்களால், ஏன் க்ஷத்ரியர்கள் என்றும் கூட வகைப்படுத்தப்படாதவர்களாலும் நடத்தப்பட்டு அதில் காலம் காலமாகப் பாண்டவர்களும் திரௌபதியும் வணங்கப்படுகிறார்கள் என்றால், இது எப்படி வெறும் கட்டுக்கதையாக இருக்க முடியும்?

சிலர் சொல்லலாம் தமிழ்நாட்டில் இருக்கின்ற வெவ்வேறு திரௌபதி அம்மன் கோயில் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த பெண்கள் என்று. ஆனால், அந்தப் பெயரும் பஞ்ச பாண்டவர்கள் இந்த மண் சார்ந்தவர்களாக இல்லாமல் இருந்திருக்காமல் போனால் இப்படி மக்களோடு மக்களாய் காலம் தாண்டி அவர்கள் பெயர் பிணைத்திருக்க வாய்ப்பில்லை.

மகாபாரதத்தில் பதிவு செய்யப்படாத ஒரு செய்தியை இந்த மண் அதன் மக்கள் மூலம் கடத்திக் கொண்டு வந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவருடன் ஒரு வருடம் வாழ்ந்த பின், திரௌபதி அக்கினியில் இறங்கி எழுவாள் என்பது தான் அந்த செய்தி. திரௌபதியைத் தங்களின் தாயாக, தெய்வமாகப் பார்த்த இந்த மக்கள், அவள் ஒரு ஒரு வருடமும் அக்னியில் இறங்கியதனைச் சுட்டி “நாங்களும் இறங்குகிறோம்” என்று அதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடுகிறார்கள். இதை பிராமணர்கள் யாரும் செய்வதில்லை. தமிழகத்தில், திரௌபதி பெயரால் இருக்கும் கோவில்களில் இந்தத் திருவிழா இன்னமும் விமர்சையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள திருவாதவூரில் இது நடக்கிறது. சமஸ்கிருத கட்டுக்கதை எப்படி இங்கே சங்கம் வளர்த்த மதுரைக்குள் புகுந்து ஒரு வழக்கமாக இருக்கிறது? அதுவும் பிராமணர்களுக்குச் சம்பந்தமில்லாத கோவில்களுக்குள் எப்படி பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் வந்திருப்பார்கள்? இந்த இதிகாசங்களுக்கு மண்ணோடும் மக்களோடும் தொடர்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை.

கண்ணகி நீதி தவறிய ஒரு அரசனிடம் அவனின் ராணியும் இருக்கின்ற சபையில் நீதி கேட்டாள். நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வது போன்றது அது. திரௌபதி, ஆண்கள் மட்டும் இருந்த சூதாட்ட சபையில், தான் ஒருடையில் (மாதவிடாய் காலம்) இருந்தது பற்றிச் சொல்லியும், தான் பலவந்தமாக இழுத்து வரப்பட்டதற்கு எதிராகத் துணிந்து நியாயம் கேட்கிறாள். அப்போதும் கூட அவள் கத்திக் கூச்சலிடவில்லை. அவளின் கணவர் அவரை இழந்த பின் அவளை இழந்தாரா இல்லை அவளை இழந்த பின் அவரை இழந்தாரா என்றெல்லாம் கேட்கிறாள்(emotional intelligence). சூதாட்டத்தில், தன்னை இழந்த ஒருவர் எப்படி மனைவியை வைத்துச் சூதாட முடியும் என்று சரியான நியாயங்களைத் தான் பேசுகிறாள். ஒருவேளை அன்றிருந்த நீதியின் படி அவள் ஏற்றுக் கொள்ளும்படி ஒரு நியாயமான காரணம் இருந்திருந்தாலும் கூட அவள் அமைதியாக இருந்திருப்பாளோ என்னவோ!

அந்த இடத்தில்,அவளின் கணவரையும் சேர்த்தே தான் குற்றம் சொல்கிறாள். ஆனாலும் ஏன் துரியோதனனையும் துச்சாதனனையும் மட்டும் பழிவாங்க வேண்டும்? ஆங்கிலத்தில் taking for granted என்பார்கள். அவள் விருப்பமில்லாமல், அவள் அவளுடைய அசௌகரியமான நிலையைச் சொல்லியும் கூடப் பொருட்படுத்தாமல், அவள் அத்தனை நியாயங்களைப் பேசிய பின்னர் அத்தனையும் அலட்சியப்படுத்தி அவளை அவர்கள் பலவந்தப்படுத்துகிறார்கள்.

மகாபாரதப் போரில், அவளுக்கு எதிராக யார் யாரெல்லாம் என்ன மாதிரியான அநியாயம் இழைத்தார்களோ அவர்கள் எல்லாம் அந்த அந்த மாதிரியான பலன்களை அனுபவித்தார்கள். மடியில் உட்காரச் சொன்ன துரியோதனன், தொடை கிழிக்கப்பட்டு இறந்தான். அவளுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு அமைதியாகச் செயலற்று கிடந்த பாண்டவர்கள், அவர்களின் புதல்வர்கள் கொல்லப்படும் பொழுது செயல்பட முடியாமல் இருந்தார்கள். இதுவும் ஊழ் தான்.ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்.

நியாயம் கேட்கிற ஒரு பெண்ணின் கோபம் என்ன செய்யும் என்பதைக் காட்ட அவளைத் தெய்வமாக ஆக்கினார்கள் இந்த மக்கள்.

எங்கள் தாய் ஒவ்வொரு வருடமும் அக்கினியில் இறங்கியது போல நாங்களும் இறங்குகிறோம் என்று அந்த நிகழ்வைத் திருவிழா ஆக்கினார்கள். அவள் வெறும் அநீதி இழைக்கப்பட்ட பெண் மட்டுமல்ல; அந்த அநீதியை அடியோடு அழித்து, அறத்தை மீண்டும் நிலைநாட்டிய ‘அறங்காவல் தெய்வம்.

அவளின் கோபம் நியாயமற்றதாக இருந்திருந்தால் அவளின் சபதம் ஒன்றும் நிறைவேறியிருக்காது.

இந்த மண், இந்த மக்களுக்குத் தர்மத்தை எப்படியான வழிகளிலெல்லாம் போதித்து இருக்கிறது. அதை இந்த திராவிட கும்பலோ அவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் வளைத்துக் கொள்கிறார்கள். தான் நினைத்தது மாதிரியான வாழ்க்கையை கற்போடு வாழ்ந்து தனக்கான நியாயம் கேட்ட ஒரு பெண்ணை இவர்கள் தேவைப்பட்டால் இழிவாகப் பேசிக் கொள்கிறார்கள்; தேவைப்பட்டால் ஆரியத் திணிப்பு என்கிறார்கள். என்னைக் கேட்டால், சமஸ்கிருதம் யார் பேசிக் கொண்டிருந்தார்களோ தெரியாது. ஆனால், கண்ணகிக்கு மேலாக இந்தத் தமிழ் சமூகம் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த புரட்சிப் பெண் தெய்வம் திரௌபதி தான்.

இயல்பில்  இராமன், கிருஷ்ணன், கிருஷ்ணை(கருநிறத்தவள்) என்கிற பெயர் பெற்ற திரௌபதி எல்லாம் கருநிறத்தவர்கள்.இந்த திராவிட ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் தாத்தாக்களான மேற்கத்திய ஆராச்சியாளர்கள் கூற்று படி திராவிட நிறத்தவர்கள்.  இங்கே பல வெள்ளை நிற திராவிட ஸ்டாக்க்கள் நாம் போற்றி வந்த இந்தத் தெய்வங்களை ஆரியக் கடவுள்கள் என்று சொல்வது தான் நகைமுரண்.

நம்மை நாம் அறிந்து கொள்வோம், திராவிட பொய்களை தூர தள்வோம்.திரௌபதியை மட்டும் இல்லை பெண்கள் பக்க நியாயங்களை எப்போதும் போற்றுவோம்/பேணுவோம்.இராவண அரசியல் தொடரும்

இந்தக் கட்டுரை தீமிதிக்கும் நடைமுறை மக்களிடையே எப்படி வந்தது என்பதைச் சொல்ல வந்ததே தவிர, இந்தச் சடங்குகளை ஆதரிப்பது கட்டுரையின் நோக்கம் அல்ல.

Error happened.
Exit mobile version