வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!
இந்த ஆண்டு பொதுத்தேர்வுகளும் முடிந்து முடிவுகள் வெளியாகி விட்டது. இந்த நீட் தேர்வு பிரச்சனை இன்னும் முடிந்தபாடில்லை.
சமத்துவத்தையும் சமூக நீதியும் நீட் தேர்வு தான் வந்து குழைப்பதாக இன்னமும் குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இராவண அரசியல்வாதிகள். சுதந்திரம் அடைந்தது முதலாகவே கல்வியில் சமத்துவம் இருந்ததாக தெரியவில்லை. நாம் முன்னமே நீட் பற்றிய கட்டுரைகளில் குறிப்பிட்டது போல்,மாணவர்களின் ஊர், பள்ளி என்கிற பல காரணிகளில் இருக்கும் வேறுபாடுகளால் எப்போதும் யாவருக்கும் ஒரே தரத்திலான கல்வி கிடைத்ததேயில்லை.
இது பற்றி அரசை இயக்கம் அரசியல்வாதிகள் சரியான முறையில் அணுகி ஆலோசித்து முறையான முன்னெடுப்புகளை இன்னுமும் எடுத்ததில்லை. மாறாக பிரிட்டிஷ் காரன் வந்து தான் எங்களை படிக்க வைத்தான்; நாங்கள் ஆட்சிக்கு வந்து தான் எல்லோரையும் படிக்க வைத்தோம். நாங்கள் இல்லாவிட்டால் பெண்கள் படித்திருக்கவே மாட்டார்கள் என்றெல்லாம் பொய்யுரைகளை பரப்புவதில் தான் மும்மரமாக இருக்கின்றார்கள்.
இராவண அரசியல்வாதிகளால் விதைக்கப்பட்ட எண்ணம் பரவலாகவே பலரது மனதில் வேரூன்றி கிடக்கின்றது.கல்வி என்று நாம் எதை நினைத்துக்கொண்டிருக்கின்றோம்?என்பதில் இருக்கின்றது இந்த வாதங்களின் நுணுக்கம்.
விடியற்காலை எழுந்து சாப்பிட்டும் சாப்பிடாமலும் சீருடைகளை மாட்டிக்கொண்டு எட்டு ஒன்பது மணிக்குள் வகுப்பறைக்குச் சென்று எப்போது மணி ஐந்து அடிக்கும் என்று காத்திருந்து பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று, சிலபஸ்சில் விட்டது போக படித்ததை மறந்தது மறந்தது போக எழுதி வருடத்திற்கு ஒரு தேர்வு கண்டு தேர்ச்சி பெற்று பெறுவது தான் கல்வி என்று நினைத்துக்கொண்டிருந்தால், அந்த முறை கல்வி பிரிட்டிஷ்காரர்கள் தான் கொடுத்தார்கள். அதிலும் எது கற்றாலும் கற்காவிட்டாலும் எட்டாவது வரை பாஸ், கட்சிக்காரர்கள் திறந்து வைத்திருக்கும் கல்லூரி சீட்டுகளை நிரப்ப வேண்டுமென்றால், பாஸ் செய்திருந்தால் போதும் திறந்து வைத்திருக்கும் கல்லூரிகள் இருக்கிறது வாருங்கள் எல்லோரும் என்ஜினீயர் என்று தமிழகத்தில் தான் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இருக்கின்றார்கள் என்று டிவி நிகழ்ச்சிகளில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு ஒருவர் பேச அதற்கு பெருமிதம் பட்டுக்கொள்ளும் நிலைக்கு நாம் உயர்நது இருப்பது தான் கல்வி என்று நினைத்தால் அப்படி ஒரு கல்வியை சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு மோசமான கட்சிகள் ஆட்சி செய்தாலும் கொடுத்திருக்கும். அந்த வகையில் அப்படியான கல்வியை இந்த இராவண அரசியல்வாதிகள் தான் கொடுத்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், கல்வி என்பது நமக்குள் இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வது என்று நினைத்தீர்கள் என்றால், அது இந்த தேசத்தில், இராவண அரசியல்வாதிகள் விதைக்கப்படுவதற்கு முன்னம் இருந்தே எல்லோருக்கும் இருந்திருக்கிறது.
சரியாக ஒரு இருபத்தைந்து வருடத்திற்கு முன்னால், அம்மாச்சி, பக்கத்து வீட்டு அத்தை,அக்கா, எங்கையோ பக்கத்து தெருவில் இருந்து வந்த பாட்டி எல்லாம் கோலம் போடுவதை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.நம்மூரில் முன்னம் எல்லாம் கோலம் எப்படி போடுவார்கள் என்று தெரியும் தானே கோலமாவை உள்ளங்ககைக்குள் அள்ளி வைத்துக்கொண்டு கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிய இடைவெளி விட்டு அதன் வழியே பெரிய பெரிய ஓவியங்களையும் கோலமாக இடுவார்கள்.அன்று அவர்கள், பேசிக்கொண்டிருக்கும் பொழுது யார் கைக்கு சிக்கனமாக இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று முனைந்தார்கள்.அக்காவில் ஆரம்பித்து பக்கத்துக்கு தெரு பாட்டியோடு முடிந்தது அந்த போட்டி, அந்த பாட்டி கோலமாவை கையில் எடுத்து மெல்லியதாய் ஒரு கோடு கிழித்ததுமே அத்தனை பேரும் அசந்து போனார்கள், அந்த பாட்டி ஒரு பெருமிதத்தோடு சின்னதாய் ஒரு நட்சித்திரம் வரைந்து முடித்து போனார்.
இப்ப என்னடா எல்லாரையும் கோலம் போடா சொல்றீயா?ஜாக்கி சான் படம் எல்லோரும் பார்த்து இருப்பீர்கள் தானே? கராத்தே கிட் படம் மட்டுமேனும் பார்த்து இருப்பீர்கள் தானே? ஒழுங்குடன் செய்யப்படும் எல்லா வேலைகளிலும் குங் பூ இருக்கிறது என்பார். அப்படி ஒழுங்குடன் செய்யப்படும் வேலைகளின் பொழுது மனமும் உடலும் ஒரு தாளத்தில் இயங்கும், குங் பூ கலைக்கு அது மிகவும் முக்கியம் என்பார். குங் பூ கலைக்கு மட்டும் இல்லை, எல்லா கலைகளுக்குமே உடம்பும் மனமும் ஒரு தாளத்தில் இயங்க வேண்டும் அந்த பாட்டிக்கு இயங்கியது போல, அவரிடம் இருந்ததது ஒரு கலை தான். கைக்குள் இருக்கும் கோல மாவு இந்த அளவில் மட்டும் தான் கை விட்டு செல்ல வேண்டும் என்று அந்த பாட்டியின் மனம் சொன்ன படிக்கு அந்த கை இயங்கிக் கொண்டிருந்தது. குங் பூ போன்ற கலைகளுக்கு சற்றும் குறைவில்லாதது அவரிடம் இருந்த அந்த திறன். இப்படி இந்திய பெண்களிடம் இருந்த கலையும் திறனும் இன்னுமும் கூட அவர்களின் மரபணுக்களுக்குள் ஒளிந்து கொண்டு தான் உள்ளது. சிலர் அதை வெளிக்கொணர்கிறார்கள். சிலர் அதை மழுங்க செய்துகொண்டிருக்கின்றார்கள்.
எனக்கு இன்னொரு அம்மாச்சி இருந்தாங்க, அவர்கள் அவருடைய வீட்டை எப்படி நிர்வகித்தார்; எப்படி வைத்திருந்தார்; என்பதெல்லாம் total quality management இல் பாடமாக இருந்தது. வீட்டை அவர் நிர்வகித்தது போன்று; வீட்டை அவர் வைத்திருந்தது போன்று அலுவலகத்தையும் பணிமனைகளையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த பாடம் விளக்கிக் கொண்டிருந்தது. இப்படி நம்முடைய பெண்களிடம் இருந்த திறன்கள், எல்லாம் இன்று கல்லூரிகளில், nursing,hosiptal management, catering, tailoring, administration, literature என்று பட்டபடிப்புகளாகவும் பட்டையபடிப்புகளாகவும் உருவாகி இருக்கின்றது.
அறம் பொருள் இன்பம் இவற்றுள், இன்பம் பற்றி பேசும் காமசூத்ரா போன்ற நூலும் கூட, பெண்கள் அறுபத்து நான்கு, கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றும்;ஆணின் உதவியில்லாமல் ஒரு பெண் சுயாதீனமாக செயல்பட அந்த கல்வி உதவும் என்றும் பேசுகிறது. அறிவு தான் அழகு என்கிறது. இந்த நூல் தோராயமாக கி.மு.400க்கு முந்தைய நூலாக இருக்கலாம், இந்த நூல் அதைவிட பழைமையான நூலின் சுருக்கும்; இந்த நூலின் ஆதார நூல் அதைவிட பழமையான நூலின் சுருக்கம். இப்படியே பின்னால் சென்றால், நந்தி தேவர் எழுதியது தான் ஆதார நூல் என்கிறார்கள். அப்படியென்றால், நம்முடைய புராண புனைவுகளின் படியே கூட கல்வி பெண்களுக்குமானதாகவே தான் இருந்திருக்கின்றது. பெண்களும் கற்க வேண்டும் என்பதை அழுத்தமாகவே சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
அறுபத்து நான்கு கலைகளில் போர்கலைகளும் கூட இருக்கிறது, பெண்கள் அதை கற்றுக்கொள்வதற்கு கூட எந்த இடர்பாடுகளை இருந்ததாக தெரியவில்லை.ரிக் வேதத்தில் பெண்களால் இயற்றப்பெற்ற ஸ்லோகங்கள் இருக்கின்றது.
பாரத கண்டத்தில், ஆண் பெண் பேதமில்லாமல், மேலோர் கீழோர் பேதமில்லாமல் கற்றல் எல்லோருக்குமானதாகவே தான் இருந்திருக்கின்றது.வேதமும் கற்றறிந்த வேதம் சொல்லும் சமத்துவம் பற்றி உணர்ந்த பாரதியார் வந்து தான் சாதிகள் இல்லையடி என்று பாட வேண்டிய தேவை இருந்ததே தவிர ஒளவையார் காலத்தில் அப்படி ஒரு தேவை இருந்ததாக தெரியவில்லை.
ஒரு கட்சி ஆரம்பிக்கப்படுகிறது. அது எல்லா மக்களுமானதாக ஆரம்பிக்கப்படுகிறது, மக்களுக்கான கட்சி என்று மக்களிடமும் பணக்காரர்களிடமும் நிதி வசூலிக்கப்பட்டு கட்சி வளர்க்கப்படுகிறது. இப்போது அதில் நிர்வாக அளவில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு வரும் பாதுகாப்பற்ற உணர்வு, அவருடைய அதிகாரத்தை யாரோ ஒரு சாமானியனிடம் கொடுக்க விடாமல் தடுக்கிறது. தொழில்முறை வேறுபாடுகள் ஜாதிய வேறுபாடுகளானது அப்படியாக தான் இருந்திருக்கும் அப்போதும் கூட, கற்றலில் யாருக்கும் எந்த தடையும் இருந்ததாக தெரியவில்லை.
யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் என்கிற நிலை இருந்ததாக தான் தெரிகிறது. ஆனால், ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால்,அந்த மாணவன் உலக வாழ்வில் இருந்து விலகி அந்த குருவுடனே பயணிக்க வேண்டும். அந்த குரு உலக வாழ்வில் இருந்து விலகியிருக்க வேண்டும். என்ன மாதிரியான ஏற்பாடு என்று எனக்கு வியப்பாக இருக்கின்றது. ஒன்றை இப்படித்தான் செய்யவேண்டும் என்று கல்வி சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். உலக வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள், text book இல் இருப்பது போன்றே அதை பின்பற்ற வேண்டும் என்பதில்லை. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறவனுக்கு, இது இப்படியும் செய்யலாம்,என்கிற எண்ணம் வரக்கூடாது, இது எனக்கு தேவை என்கிற கேள்வி வரக்கூடாது. இப்படியெல்லாம் நடக்க கூடாது என்றால், அவன் உலக வாழ்வை(distractionகளை) விட்டு விலகியிருக்க வேண்டும். செம்மையான ஏற்பாடு இல்லை?
நமக்கிருக்கும் distractionகள் நம்மையும் நம் பிள்ளைகளையும் எப்படியெல்லாம் சிந்திக்க வைத்து இருக்கின்றது. நான் ஏன் algebra படிக்கணும்?; நான் ஏன் integration படிக்கணும்?ஏதோ ஒன்றில் நிபுணத்துவம் பெற எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. ஒன்றை கற்றுகொள்வதற்கு முன்னமே இது எதுக்கு என்கிற கேள்வி ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் அதை எப்படி உள்வாங்கிக்கொள்வான்! இயல்பிலேயே DNAவில் கணிதம் ஊறிக்கிடக்கின்ற இந்தியர்கள் பள்ளிக்கு சென்றதும் எனக்கு கணக்கு வாராது என்று சலித்துக்கொள்வதற்கு. இன்றைய கல்வி முறையில் இருக்கும் குறைபாடுகளும், அதில் இருக்கும் நிறைகளையும் குறைகளாக பேசும் அதிமேதாவிகளுமே தான் காரணம்.
கல்வி கற்பதற்கும் ஏற்ப எளிமைப்படுத்த பட வேண்டுமே தவிர கற்க தேவையில்லை என்கிற ரீதியில் எளிமைப்படுத்தப்படக்கூடாது. தேர்வுகள் ஒரு மாணவன் இதில் சிறந்து விளங்குகிறான் என்று தெரிந்து கொள்ளவும் அவன் தனக்கு எதெல்லாம் தெரியவில்லை என்று தெரிந்துகொள்ளவும் உதவும் வகையில் இருக்க வேண்டும்.
தேர்வுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை தீர்க்கமாக கற்றுக்கொள்ளும் ஒருவனால் அந்த பாடம் சார்ந்த எந்த தேர்வுகளையும் எதிர்கொண்டு வெற்றியும் பெற முடியும்.தேர்வுகள் இருக்க கூடாது என்பதும் தேர்வுகள் எளிமைப்படுத்த பட வேண்டும் என்பதும் சரியான அணுகுமுறை அல்ல. 35 மதிப்பெண்கள் பெற்று கற்றும் கற்காமலும் தப்பித்தவறி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டாலும் கூட அவர் எண்ணவேண்டுமென்றாலும் படிக்கலாம். விளைவு, BA ஆங்கிலம் பட்டம் பெற்றவரால் ஆங்கிலத்தில் பிழையில்லாமல் ஒரு வரைவை உருவாக்க முடிவதில்லை. தமிழின் நிலை இன்னும் மோசம் அனேகமாக ஏதாவது ஒரு பட்டம் பெற வேண்டும் என்பவர்கள் மட்டும் தேர்ந்து எடுப்பதாக இருக்கின்றது. இலக்கணம் தெரியாமல் இலக்கியத்தில் பட்டம், எந்தவொரு பொறியியல் சார் கல்வியையும் சரியாக கற்றுக்கொள்ள நான்கு வருடங்கள் போதாது என்றே தான் நான் நினைக்கிறன். நாமோ நான்கு வருடங்களை ஏனோ தானோவென கடந்து விட்டு வரும் எண்ணற்ற பொறியாளர்களை உருவாக்கி கொண்டு பெருமிதம் கொள்கிறோம்.
நம் ஊரில், ஆயிரம் பேரில் எத்தனை பேர் அந்த பட்டம் சார்ந்த கல்வியை ஓரளவேனும் முழுமையாக கற்று வெளியே வருகிறார்கள்.புள்ளியியல் தரவுகளை தேட வேண்டியதில்லை நீங்கள் இதில் பட்டம் பெற்று இருக்கிறீர்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்.
ஆனால், இங்கே கற்றலிலும் கற்பித்தலிலும் பெரிய குறை இருக்கிறது. பெரிய இடைவெளி இருக்கிறது. பள்ளிக்கல்வி தொடங்கி ஒருவனுக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்க வேண்டுமென்பதை அவன் இருக்கும் இடமும் அவனுடைய பொருளாதாரமும் தான் நிர்ணியக்கிறது.அதைத் தான் மாற்ற வேண்டும். அரசு சமச்சீர் கல்வி என்று ஒன்றை அறிமுக படுத்திய பொழுது மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாட திட்டத்திற்கு ஏற்ப அரசு பள்ளி மாணவர்களின் பாடத்திட்டம் மேம்பபடுத்த பட்டிருக்க வேண்டும் அது அப்படி நடக்காமல், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் அரசு பள்ளி பாடத்திட்டத்திற்கு ஏற்ப எளிமைப்படுத்தப்பட்டது. மக்கள் என்ன செய்தார்கள்? CBSE பாடத்திட்டத்திற்கு மாறினார்கள். அப்படியென்றால் குறை எங்கு இருக்கிறது. சமத்துவமின்மை எங்கு இருக்கின்றது?
ஒரு காலம் வரை,பத்தாவது வரை மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கற்கும் பாடங்களை எதையும் கற்காமல் வரும் அரசு பள்ளி மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு வந்தது மெட்ரிகுலேஷன் மாணவர்கள் அதுவரை விரிவாக கற்று ஓரளவு தேறியிருக்கும் பாடங்களை முதன்முறையாக கற்க ஆரம்பிக்க வேண்டும். ஒரே கல்லூரிக்கு வந்து சேரும் மாணவர்களும் கூட ஒரே மாதிரியாக அறிவுடன்(knowledge) வந்து சேர்வதில்லை.
இந்த குறைபற்றியெல்லாம் ஆலோசிக்காமல், கேரளாவை விட இங்கே பட்டம் பெற்றவர்கள் அதிகம்; பீஹாரை விட படித்தவர்கள் இங்கே அதிகம்; நாங்கள் வந்து தான் பெண்களை படிக்க வைத்தோம் என்று பெருமிதங்கள் பேசி திரிவது மூடத்தனம்.
வளர்ந்த ஒரு நாட்டில் ஒருவர் படிக்கும் பட்டைய படிப்பு ஒருவரை தயார் செய்யும் அளவிற்கு கூட நம் நாட்டில் நம் ஊரில் பட்டப்படிப்பு ஒருவரை தயார் செய்வதில்லை. நிச்சயமாக எப்போதும் நம் ஊரில் எப்போதும் மக்கட்தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு இருந்ததில்லை.டிப்ளமோ முடித்து ஒருவன் வேலை தேடி வெளியில் செல்கிறான் என்றால் அவனுக்கு என்ன மதிப்பளிக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது நம் கல்வியின் தரம். நாம் உருவாகும் பொறியாளர்களில் எத்தனை பேர் பொறியாளர்களாகவே அவர்கள் துறையில் மேம்படுகிறார்கள் என்பதில் இருக்கிறது நம் கல்வியின் தரம்.
குறைவான எண்ணிக்கையும் கடுமையான போட்டியும் தேர்வும் மருத்துவத்துறையின் தரத்தை பெரிதாக இன்னும் குறைத்துவிடவில்லை. தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியிருந்தால் அதைப்பற்றி பேசலாம் தேர்வே வேண்டாம் என்று பேசுவதும் இன்னும் மூன்று தேர்தல்களுக்கு அதை சொல்லியே வாக்கு கேட்பதும் சரியான அணுகுமுறை ஆகாது.
கோச்சிங் சென்டர்களுக்காண அவசியம் இல்லாமல், பள்ளியில் ஒரு மாணவனுக்கு கொடுக்கப்படும் கல்வி எந்த அளவு முழுமையாக சென்றடைகிறது என்பதை உறுதி செய்யும் அளவிலும் பள்ளியில் இருந்தே ஒரு மாணவன் எதில் சிறந்து விளங்குவான் என்று கண்டு கொள்ளும் அளவிலும் கல்வி மேம்பட வேண்டியது இருக்கின்றது என்பதை ராவண அரசியல் கூடாரம் உணருமோ உணராதோ. அந்த கூடாரம் தவிர்த்து அத்தனை பேரும் உணர்ந்து விட்டாலே மாற்றம் சாத்தியம் ஆகிவிடும்.
நாம் certificate எனும் வெற்று பேப்பர்களாக போராடும் மாணவர்களை தான் அதிகம் உருவாக்குகிறோம். திறன் மேன்பாடு என்பது துளியும் இல்லாமல் போய்விட்டது. நிறைய செவிலியர்களை உருவாக்கிறோம், ஆனால், பாட்டியிடம் இருந்த care responsibility போன்ற திறன் கொண்ட செவிலியர்களை குறைவாகவே உருவாக்குகிறோம். பொறியாளார்கள் நிலைப்பற்றி பேச வேண்டியதேயில்லை.
இதில் ஆலோசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் இன்னும் நிறைய இருக்கின்றது.தற்போதைக்கு நம்மால் அரசியல்வாதிகளை திருத்திவிட முடியாது என்றாலும் பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும் கவனித்து அவர்களை வழிநடத்த முடியும். உங்களால் முடிந்த வரை கல்வி கற்கும் எல்லா பிள்ளைகளையும் வழிநடந்துங்கள்.