“இங்க நான் தான் கிங்கு (King). நான் வச்சது தான் ரூல்ஸ் (Rules). அந்த ரூல்ஸை (Rules) அப்பப்ப என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன்.” இதை வாசிக்கும் பொழுது உங்கள் மூளை ரஜினியின் குரலில் இதை ஒலித்திருக்கும். இதே வசனத்தைக் கிருஷ்ணர் பேசினால் எப்படியிருக்கும்? சரி! கிருஷ்ணரின் குரல் எப்படியிருக்கும்? இறுதியில் சொல்கிறேன்.
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தில் வரும் இந்த வசனம் எப்போது எந்தக் காட்சியில் வரும் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? சிறைச்சாலையில் ஒழுங்குகளை மீறிக் கலவரம் செய்தவர்களுக்குத் தன் இஷ்டத்துக்குத் தண்டனை அறிவிப்பார் ரஜினி. அப்போது ஒரு கைதி, “இதெல்லாம் சிறை விதிகளில் கிடையாது” என்பார். ரஜினி அதற்கு, “இங்க ரூல்ஸை (Rules) ஃபாலோ (Follow) பண்றவங்களுக்கு தான் ரூல்ஸ் (Rules) ஃபாலோ (Follow) பண்ணப்படும்” என்பார். அதிலிருந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளின் முடிவில் ரஜினி இந்த வசனத்தைப் பேசுவார்.
திரைப்படத்தில் அந்தக் கதையோட்டத்தோடு இந்தக் காட்சியைப் பார்த்தபொழுது நம் மனதில் வேறு எந்த எண்ணங்களும் எழுந்திருக்காது. அந்தப் பொழுதில் ரஜினியே தான் நம் மனம் முழுவதையும் ஆக்கிரமித்து இருப்பார்.
சில நாட்களுக்கு முன் மஹாபாரதக் கதையின் போர்க்காட்சிகள் குறித்து சில விஷயங்களைப் படிக்க விழைந்தபொழுது, ஜெயிலர் படத்தின் இந்த வசனம் என் நினைவிற்கு வந்தது. “இங்க நான் தான் கிங்கு (King). நான் வச்சது தான் ரூல்ஸ் (Rules). அந்த ரூல்ஸை (Rules) அப்பப்ப என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன்.”
மஹாபாரதக் கதையைச் சிறு வயது முதலே கேட்டு வந்திருக்கிறோம். தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு ஒவ்வொரு விதமான புரிதல் ஏற்பட்டிருக்கும். நம் வயது, அனுபவம், படிப்பினை இவையெல்லாம் சேர்ந்து நம் புரிதலையும் பார்வையையும் மேம்படுத்தியிருக்கும்.
அப்படி என்னுள் என்ன மாறுதல்கள் நடந்தனவோ தெரியவில்லை. மஹாபாரதப் போர்க் காட்சிகளைச் சமீபத்தில் காமிக் (Comic) கதைகள் போன்ற வடிவத்தில் படித்தபொழுது ஜெயிலர் படத்தின் வசனம் ஞாபகத்திற்கு வந்தது.
அப்படி என்ன இரண்டிற்கும் ஓர் ஒற்றுமை? போரில், மாபெரும் வீரர்கள் எல்லாம் கௌரவர்கள் படையில் இருந்தார்கள். அவர்களில் அநேகம் பேர் போரில் எப்படி வீழ்த்தப்பட்டார்கள்? போர் விதிகள் ஏதும் பின்பற்றப்படாமல் அநியாயமாக வீழ்த்தப்பட்டார்கள்.
அந்த அநியாயத்தை யார் செய்கிறார் என்று பார்த்தால், பாரதக் கதையில் இறைவனின் அவதாரமாகப் பார்க்கப்பட்ட கிருஷ்ணர் செய்கிறார். “இங்கே நான் வைத்தது தான் சட்டம்” என்று போர் விதிகளுக்குப் புறம்பான செயல்களில் பாண்டவர்களை ஈடுபடுத்துகிறார்.
நீங்கள் போருக்கு இடையில் சென்று கிருஷ்ணரிடம், “இறைவா! நீயே இப்படி விதிகளை மீறி அநியாயம் செய்யலாமா?” என்று கேட்டிருந்தால், அவர் ஜெயிலர் ரஜினி போன்று, “இங்க ரூல்ஸை (Rules) ஃபாலோ (Follow) பண்றவங்களுக்கு தான் ரூல்ஸ் (Rules) ஃபாலோ (Follow) பண்ணப்படும்” என்று சொல்லியிருப்பார்.
இங்கே வியாசர், வில்லிபுத்தூரார் இவர்களெல்லாம் எழுதிய மஹாபாரதக் கதையை நாம் வாசிப்பதில்லை. யாரேனும் கதை சொன்னால் கேட்போம், தொலைக்காட்சிகளில் காட்டினால் பார்ப்போம். இந்தக் கதைசொல்லல்களில் நிறைய பார்வைகள் இருக்கின்றன. அந்தப் பார்வைகள் எல்லாம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. இன்று துரியோதனனையும் ராவணனையும் இந்தச் சமூகம் கொண்டாட முக்கியக் காரணம், நாம் கேட்ட கதைகளை நமக்குச் சொன்னவர்களின் பார்வை. கதையை அவர்கள் எப்படிப் பார்த்தார்களோ, அவர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்களோ அப்படியே நமக்கும் சொன்னார்கள்.
இதன் விளைவாய் இங்கே கர்ணன் ஆகப்பெரும் உத்தமனாகப் பார்க்கப்படுகிறான். அத்தனை பெரிய உத்தமனையும் கூட ஏன் இறைவன் விதிகளை மீறி வீழ்த்த வேண்டும்?
தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்து, அதைத் தூக்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆயுதம் இல்லாமல் இருந்த கர்ணன் மீது அம்பு எய்யச் சொல்கிறார் கிருஷ்ணர். நிராயுதபாணியாய், உதவ ஆளின்றி நின்ற கர்ணன் மீது அம்பு எய்யப்பட்டு அவன் வீழ்த்தப்படுகிறான்.
ஜெயிலர் திரைப்படத்தில் அந்தக் கைதி ரஜினியை நோக்கிக் கேள்வி கேட்பது போல, “இது ரூல்ஸ் (Rules) கிடையாதே! இதென்ன அநியாயம்?” என்று கர்ணனும் கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்கிறான்.
கிருஷ்ணர் அப்போது கர்ணனை நோக்கி, வடிவேலு கேட்பது போல், “உனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று கேட்கிறார். “சூதாட்டச் சபையில் பாஞ்சாலியை இழுத்து வந்தபோது, அரக்கு மாளிகையில் பாண்டவர்களை எரிக்கத் திட்டமிட்டபோது, தனியாக நின்ற அபிமன்யுவின் வில்லைப் பின்னாலிருந்து முறித்தபோது, அப்போதெல்லாம் இந்த நியாய தர்மங்கள் எங்கே போயின?” இங்கே விதிகளைப் பின்பற்றுகிறவர்களுக்குத் தான் விதிகள் பின்பற்றப்படும் என்பது போன்று கர்ணனுக்குப் பதிலளிக்கிறார் கிருஷ்ணர்.
பாஞ்சாலியின் துகில் உரியப்பட்டபொழுது, கர்ணன் அங்கே எந்த நியாயங்களையும் பேசவில்லை என்பதைத் தாண்டி, அவளை இழிவாகப் பேசியவர்களில் கர்ணனும் ஒருவனாக இருக்கிறான்.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்” (குறள் 35) “
இந்தக் குறள் சொல்வது போல், பிறர் மீது இருக்கும் பொறாமை அல்லது ஆற்றாமையால் வரும் கோபம் நம்மைச் சிந்திக்க விடாது. கர்ணன் தான் பெரிய வீரன் என்பதற்கு அங்கீகாரம் தேடிக்கொண்டிருந்தான். வீரன் ஒருவனுக்கு யார் ஒருவரின் அங்கீகாரமும் தேவையில்லை. இந்த அங்கீகாரத்தைத் தேடிக்கொண்டிருந்த கர்ணன் தாழ்வுமனப்பான்மைக்கு உட்பட்டிருந்தான் என்று நிச்சயம் சொல்ல முடியும். அதன் விளைவாய் அவன் பாண்டவர்கள் மீது கொண்டிருந்த வன்மம், அவனைப் பாஞ்சாலியை இழிவாகப் பேச வைக்கிறது. மனதைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் எந்தச் சூழலிலும் யார் மீதும் நாம் வன்மங்களைக் கொட்டப் போவதில்லை.
தான் செய்த தவறுகள் எல்லாம் தன் மனதில் இருந்த அழுக்கின் காரணமாக எழுந்த தவறுகளாக இருந்ததால், கர்ணனுக்கு அவன் செய்த தவறுகள் எல்லாம் அநியாயம் என்று தெரியவில்லை. அதே கர்ணன் தனக்கென்று வரும்பொழுது மனம் தெளிந்து நியாயங்களைப் பேசுகிறான். அப்பொழுது இறைவன் அவன் செய்த அநியாயத்தை அவனுக்கு நினைவுகூர்கிறார். கர்ணன் தன் தவறுகளை உணர்கிறான்.
கர்ணன் மட்டும் தான் அநியாயமாக வீழ்த்தப்பட்டானா என்றால், இல்லை. பீஷ்மர், துரியோதனன் என்று எல்லோரும் அநியாய வழிகளில் தான் வீழ்த்தப்பட்டார்கள்.
பீஷ்மர் நியாய அநியாயங்களை விடவும், தான் செய்த சத்தியத்தையே பெரிதாக எண்ணினார். அரியணைக்குக் கட்டுப்பட்டவன் என்ற அந்தச் சத்தியத்துக்காக, பாஞ்சாலியின் துகில் உரியப்பட்டபொழுது அந்தச் சபையில் அமைதி காத்தார். தர்மத்தைவிடச் சத்தியம் ஒன்றும் பெரிதில்லை என்று அவர் நினைக்கவில்லை. அதே பீஷ்மர், சிகண்டியின் முன் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற தன் நியதியாலேயே வீழ்ந்தார். சிகண்டியை முன்னிறுத்தி, அவன் பின்னால் நின்று அர்ஜுனன் எய்த அம்புகள் அவரை அம்புப் படுக்கையில் சாய்த்தன.
அப்படியென்றால் இறைவனை வைத்துக்கொண்டே நாம் விதிகளை மீறி பீஷ்மர் போன்று சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவர்களை வீழ்த்தலாமா? இறைவனே கூட விதிகளை மீறி கர்ணன் போன்றவர்களை வீழ்த்த வழி செய்வாரா?
நாம் தெய்வத்திடம் நியாயம் கேட்கிறோம். தெய்வமே அநியாயங்கள் செய்யுமா? இறைவனுக்கு விதிகள் இல்லையா என்றால், இருக்கின்றன.
இறைவன் எல்லாவற்றுக்கும் சாட்சியாக மட்டுமே இருக்கிறான்; அவன் மேற்பார்வையில் இயற்கை தன் போக்கில் இயங்குகிறது (கீதை 9:9–10). இறைவனே உருவம் பெற்று வந்தாலும், உலகுக்கு வழிகாட்டுவதற்காகத் தானும் கடமைகளைச் செய்வதாகக் கிருஷ்ணர் சொல்கிறார் (கீதை 3:22–23). அதாவது, உருவம் பெற்று வந்த இறைவனும் இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டே நடக்கிறார். ஆனால், இங்கே விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக விதிகள் மீறப்படும் என்பதும் இறைவனின் விதி தான்.
இங்கே பீஷ்மரைப் போன்று நாம் விடாப்பிடியாக எதையும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டியதும் இல்லை. கர்ணனைப் போன்று அறியாமையால் நியாயங்களை மறந்துவிட்டு, தானதர்மங்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதும் இல்லை.
கிருஷ்ணரின் குரல் எப்படியிருக்கும் என்று கட்டுரையின் தொடக்கத்தில் கேட்டேன் தானே! அது உங்களுக்குள் உங்கள் குரலாகவே தான் ஒலிக்கும். அது அந்தச் சமயத்திற்கும் சூழலுக்குமான நியாய தர்மங்களை நமக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் கதை என்றே எடுத்துக்கொண்டாலும், இறைவன் இறைவனாகவே இருக்கின்ற மஹாபாரதக் கதையில், அர்ஜுனனை வழிநடத்தியது போல் நம்மையும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று, நாம் விதிகளை மீறி யாருக்கும் அநியாயம் செய்யக்கூடாது; செய்தால் அது நமக்கும் நடக்கும் என்பது. மற்றொன்று, தர்மத்தின் பொருட்டு விதிகளை மீறலாம் என்பதும் ஒரு விதி தான் என்பது.
இங்கே இரண்டு திருக்குறள்கள் உங்கள் நினைவிற்கு வந்திருக்கக்கூடும். “பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” (குறள் 292, வாய்மை). அது பொய் பேசுவதை மட்டும் குறிக்கவில்லை. பொய்மையும் என்பதில், தர்மத்தின் பொருட்டுச் செய்யப்படும் அநியாயங்கள் எல்லாம் அடங்கிவிடுகின்றன. இங்கே “புரைதீர்ந்த நன்மை” என்பது தான் முக்கியம். நாம் செய்யும் அந்தச் செயல், மற்றவர்களுக்கு எந்தக் கேடும் விளைவிக்காத நன்மையாக இருக்க வேண்டும். மற்றொரு குறள், “வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.” (குறள் 250, அருளுடைமை)
நம்மை விட மெலியவர் மேல் அதிகாரம் காட்டப் போகும்போது, நம்மை விட வலியவர் முன் நாம் அஞ்சி நின்ற நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். அன்று சபையில் வலிமையோடு அமர்ந்திருந்தவர்கள் கர்ணனும் துரியோதனனும். மெலியவளாக நின்றவள் பாஞ்சாலி. வேடிக்கை என்னவென்றால், அரங்கேற்றத்தின் போது “தேரோட்டியின் மகன்” என்று பலர் முன் இழிவுபடுத்தப்பட்டு, வலியவர்கள் முன் அவமானத்தோடு நின்றவன் தான் கர்ணன். அந்த வலியை அறிந்த அவனே, மெலியவளாக நின்ற பாஞ்சாலியை இழிவாகப் பேசினான். வலியார்முன் தான் நின்ற நிலையை அன்று அவன் நினைத்திருந்தால், அப்படிப் பேசியிருக்க மாட்டான். கர்ணன், துரியோதனன், சகுனி என்று எல்லோரும் அவர்களைவிட வலிமையான கிருஷ்ணர் முன் மெலியவர்கள் ஆனார்கள். சூழ்ச்சியால் வென்றுவிடலாம் என்று நினைப்பவர்களை, அவர்களைவிடச் சிறந்த சூழ்ச்சியால் இறைவன் வீழ்த்துவான் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இங்கே ஒரு பைபிள் கதையும் என் நினைவிற்கு வருகிறது. இது மத்தேயு நற்செய்தியில் (18:21–35) வரும் “மன்னிக்காத பணியாளர்” உவமை.
ஓர் அரசனிடம் ஒருவன் பெரும் கடன் பட்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அடைக்க முடியாத கடன் அது. அவன் காலில் விழுந்து கெஞ்ச, அரசன் இரக்கம் கொண்டு முழுக் கடனையும் தள்ளுபடி செய்தான். வெளியே வந்த அதே பணியாள், தன்னிடம் சிறு தொகை கடன் பட்டிருந்த உடன் பணியாளனைக் கண்டான். அவனைக் கழுத்தைப் பிடித்து நெரித்துச் சிறையில் அடைத்தான். செய்தி அரசனுக்குச் சென்றது. “நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் அவனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று கேட்டு, அரசன் அவனுக்கு அளித்த மன்னிப்பைத் திரும்பப் பெற்றான்.
இறைவனோ நம்மை விட வலியவர்களோ நமக்காக செய்யும் நன்மைகளை நாம் பிறருக்காக செய்ய வேண்டும். பிறருக்காக நாம் செய்வதை இறைவன் நமக்கு செய்வான்.
உலகவாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் இந்த உயிர்களுக்கு இறைவன் ஒரு ஜெயிலர் மாதிரி. அவன் குரல் நமக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும். இங்கே அவன் தான் கிங்கு அவன் வைத்தது தான் சட்டம்.அவன் நம்மை மேய்த்துக்கொண்டிருப்பான். விதி மீறி வழி மாறினால், அவனும் விதி மீறி வழி நடத்தி நம்மை நேர் செய்வான்.