நீரின் மூலம் நெருப்பு, நெருப்பின் மூலம் நீர், நீரின் மூலம் காற்று, காற்றின் மூலம் நீர் என்றெல்லாம் சொன்னால் யார் ஏற்பார்கள்? நீரில் இருந்து எப்படி நெருப்பு வரும் என்று தானே கேட்பார்கள். இப்போது வேண்டுமென்றால் ஒரு சிலர் இதுகுறித்து சிக்கலான புரிந்து கொள்ள கடினமான விளக்கங்களை தரக்கூடும்.
ஒரு ஐந்நூறு அல்லது அறுநூறு வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தால் மக்கள் சிரித்திருப்பார்கள். நீரின் மூலம் எப்படி நெருப்பாகும்? நெருப்பில் இருந்து எப்படி நீர் வரும்? நீரில் இருந்து எப்படி நெருப்பு வரும்?
ஆனால்,மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள். நெருப்பின் மூலம் நீர்; நீரின் மூலம் நெருப்பு என்று.
மந்த்ர புஷ்பம் என்று ஒரு மந்திரம் இருக்கிறது. கோவில்களில் குறிப்பாக கும்பாபிஷேக சமயங்களில் அல்லது பெரிய பூஜைகளின் பொழுது அந்த மந்திரத்தை ஓதுவார்கள். யாரும் பெரிதாக கவனித்திருக்க வாய்ப்பில்லை. கோவிலுக்கு சென்றோமா சாமியை கும்பிட்டோமா என்று தான் எல்லோரும் வந்திருப்போம்.
நானும் உங்களைப் போலத் தான்; நானும் கவனித்ததில்லை. பின் எப்படி தெரியும் என்றால், சமயங்களில் அப்பா இந்த மந்திரத்தை ஓதக் கேட்டு இருக்கிறேன். அவர் ஓதக் கேட்டு அரைகுறையாக எனக்கும் அந்த மந்திரம் மண்டையில் ஏறியது. முழுதாக தெரியாது. அதோடு இந்த மந்திரம் எந்தக் காலத்தையது, இதில் என்ன இருக்கிறது என்று ஒன்றும் தெரியாது.
ஒருவரை நம் நினைவில் இருந்து அழிக்கும் காலம் முதலில் அவர்களின் குரலை தான் அழித்துக்கொண்டிருக்கும். அப்பாவின் குரலை நினைவுப்படுத்திக்கொள்ள கடினமாக இருக்கிற பொழுது அவர் பாடும் தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை தேடி பார்ப்பேன், அதை வாசிக்கும் பொழுது மனதில் அவர் குரல் ஒலிக்கும். அப்படி ஒரு நாள் அவர் ஓதும் இந்த மந்த்ர புஷ்பம் மந்திரத்தை படிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது.
என் மனதில் இருந்த அரைகுறை நினைவை வைத்து அந்த மந்திரத்தை தேடி கண்டும் விட்டேன். அப்படி கண்ட பொழுது, அந்த சம்ஸ்கிருத மந்திரத்தின் பொருளும் கண்ணில் பட்டது. அதைப் படித்ததும் தலைசுற்றிவிட்டது.
என்ன தான் டா சொல்ல வரீங்க என்பது போல் இருந்தது. நம் மனதுள் எழும் கேள்விக்கு பதிலையும் பிரபஞ்சமே தரும்.
ஆனால்,பதில் கிடைக்கும் வரை சற்று தொங்கல் போல் உணர்வோம். இந்த கட்டுரையும் கூட இடையில் சற்று தொங்கல் போல தோன்றலாம்; மலையாள படத்தை பொறுமையாக பார்ப்பது போல் நீங்கள் முழுதும் வாசித்தீர்கள் என்றால் முடிவில் ஒரு பெரிய புரிதலை பெற்று ஆச்சர்யத்தில் மூழ்கி போவீர்கள்.
என்ன தான் டா சொல்ல வரீங்க என்கிற கேள்விக்கு, என் மூளை அது கொண்டிருந்த தகவல்களை ஒன்றாக சேர்த்து ஆய்ந்து ஒருவாறாக பதிலை அனுமானித்து புரிந்து கொண்டது.
சுருக்கமாக அந்த மந்திரத்தின் தமிழ் அர்த்தத்தை தருகிறேன் அதை முதலில் வாசியுங்கள்.
“நீரின் மலரை அறிபவன், மலர்கள், நன்மக்கள் மற்றும் செல்வங்களைப் பெறுகிறான். சந்திரனே நீரின் மலர்; இதை அறிபவன் மலர்கள், நன்மக்கள் மற்றும் செல்வங்களைப் பெறுகிறான். நீரின் மூலத்தை (ஆதாரத்தை) அறிபவன், நிலையான இடத்தை அடைகிறான்.” இப்படி ஆரம்பிக்கிறது அந்த மந்திரம்.
நெருப்பே நீரின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். நீரே நெருப்பின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான்.
சூரியனே நீரின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். சூரியனின் மூலத்தை அறிபவனும் நிலையான இடத்தை அடைகிறான். நீரே சூரியனின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான்.
சந்திரனே நீரின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். சந்திரனின் மூலத்தை அறிபவனும் நிலையான இடத்தை அடைகிறான். நீரே சந்திரனின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். நீரின் மூலத்தை அறிபவன், நிலையான இடத்தை அடைகிறான்.
நட்சத்திரங்களே நீரின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். நட்சத்திரங்களின் மூலத்தை அறிபவனும் நிலையான இடத்தை அடைகிறான். நீரே நட்சத்திரங்களின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். நீரின் மூலத்தை அறிபவன், நிலையான இடத்தை அடைகிறான்.
மேகங்களே நீரின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். மேகங்களின் மூலத்தை அறிபவனும் நிலையான இடத்தை அடைகிறான். நீரே மேகங்களின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். நீரின் மூலத்தை அறிபவன், நிலையான இடத்தை அடைகிறான்.
வருடமே (மழைக்காலமே) நீரின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். வருடத்தின் மூலத்தை அறிபவனும் நிலையான இடத்தை அடைகிறான். நீரே வருடத்தின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான்.
நீரில் ஒரு தெப்பம் (படகு) இருப்பதை அறிபவன், அந்தத் தெப்பத்தில் (தன்னையே) நிலைநிறுத்திக் கொள்கிறான்.
என்ன உங்களுக்கும் தலை சுற்றிவிட்டதா? நிலையான இடத்தை அடைகிறான் என்பது அந்த மந்திரத்தில் நேரடியாக சொல்லப்படவில்லை. மூலத்தை அறிகிறவன் மலர்வான், உலக பற்று என்னும் பாசத்தால் கட்டப்பட்டு இருக்கிற பசு என்னும் இந்த உடலை கொண்ட ஆன்மாவிற்கு நாயகனாக ஆவான் என்கிற அர்த்தத்தில் இருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன். வார்த்தைகளை அப்படியே பொருள் கொள்கிறவர்கள் மூலத்தை அறிந்து கொள்கிறவன் பிள்ளைகளை உடையவனாகவும் பசுக்களை உடையவனாகவும் இருக்கிறான் என்று பொருள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் எழுதிய அந்த உரையை கண்டு அடப்பாவிகளா அப்படி உரை எழுதினால் முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று கூட நீங்கள் நினைக்கவில்லையா! என்றிருந்தது.
உலகப் பற்றில் கட்டப்பட்டு இருக்கும் நாம் எல்லோரும் பசுக்கள். தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் பசு என்று தான் சொல்கிறார்கள். பசு என்றால் மாடு என்கிற அர்த்தத்தில் மந்திரத்திற்கு உரை எழுதி வைத்திருக்கிறார்கள்.
சிவனை நாம் பசுபதி என்று சொல்வதற்கு காரணம் ஆன்மாக்கள் எல்லாவற்றிக்கும் அவனே தலைவன் என்பதால் அப்படி சொல்கிறோம்.
மூலத்தை அறிந்தவன் நிலையான இடத்தை அடைகிறான் என்றோ; ஆன்மாவை, உடலை கட்டுப்படுத்தி ஆள முடிந்தவன் ஆகிறான் என்றோ அநேகர் உரை எழுதவில்லை. பிள்ளைகள் கிடைக்கும் பசுக்கள் கிடைக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஞானம் அடைந்தவனுக்கு எதற்கடா பொருள் இன்பம்? என்கிற கேள்வி எனக்குள் இவர்களின் உரையை படித்த பொழுது வந்தது. வந்ததும் நீயே பதிலை கண்டடைந்துவிட்டாயா என்றால் இல்லை.
நான் சொன்னது போல என் மூளை அதுவரை நான் கற்று இருந்த எல்லாவற்றையும் சேர்த்து பகுத்து ஆய்ந்து பதில் தந்தது என்றேனே! திருமந்திரத்தில் திருமூலர் பசு பாசம் பற்றி எல்லாம் பேசுகிறார். இந்த பசு என்றால் என்ன என்பதை ஐயா இலங்கை ஜெயராஜ் போன்ற பெரியவர்களின் புண்ணியத்தில் தெரிந்து வைத்திருந்தேன். திருமூலர் ஒரு இடத்தில், கடிவாளம் இல்லாத குதிரை போல் இந்த ஆன்மாவும் ஓடிக்கொண்டிருக்கிறது அதை கட்டுப்படுத்த தெரியவேண்டும் என்கிறார்.
திருமூலர் சொன்னதை மந்த்ர புஷ்பத்தில் பொருத்தி பார்க்கும் பொழுது என்ன புரிகிறது? மூலத்தை அறிகிறவன் ஞானத்தில் மலர்கிறான். ஆன்மாவை கட்டுக்குள் வைக்க தெரிந்தவன் ஆகிறான்.
எல்லாம் சரி டா! நீரில் இருந்து எப்படியடா நெருப்பு வரும், நெருப்பில் இருந்து எப்படியடா நீர் வரும்?
நாம் எழுதி வந்த திருவாசகம் தொடரில் ‘வானாகி மண்ணாகி’ பாடலுக்கு நாம் எழுதியிருந்த விளக்கத்தை இங்கே நாம் பொருத்தி பார்க்கவேண்டும்.
இந்த மொத்த உலகமும் ஏதுமற்ற வெறுமையில் இருந்து பிறந்தது தான். வெறும் வெளி இருந்தது (வானம்), அதில் இருந்து மண் (துகள்கள் உருவானது), துகள்களில் இருந்து காற்று உருவானது (வளி), காற்றில் இருந்து ஒளி உருவானது (நெருப்பு), ஒளியில் இருந்து ஆன்மா உருவானது அதுவே ஊனாகி உயிராகி நின்றது, இது எல்லாமுமாக இறைவனே நின்றான் என்பது தான் அந்த விளக்கம். மந்த்ர புஷ்பமும் சுற்றி வளைத்து அதையே தான் சொல்கிறது..
அப்படியே இருந்தாலும் காற்றில் இருந்து நெருப்பு உருவானது சரி! நீரில் இருந்து எப்படி நெருப்பு வந்தது, நெருப்பில் இருந்து எப்படி நீர் வந்தது? அணுக்கள் தான் இங்கே எல்லாமுமாய் இருக்கிறது. நீங்கள் தண்ணீர் அருந்துகிறீர்கள். ஒரு குவளை H2O உங்கள் உடலில் வெறும் ஹைட்ரஜனும் ஆக்சிஜனுமாக இருப்பதில்லை தானே.
இப்பொழுது ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை கண்டுபிடித்துவிட்டார்கள். நீரில் இருக்கும் அதே ஹைட்ரஜன் நெருப்பை தருகிறது, ஹைட்ரஜனை எரித்தால் அது நீரை தருகிறது.
அணுக்களை எப்படி பிரிக்கிறது எப்படி சேர்க்கிறது என்று ஒழுங்கை வைத்துக்கொண்டு இருக்கிறது. அடிப்படையில் எல்லாவற்றிக்குள்ளும் இருப்பது ஒன்றே தான்.
ளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மண்ணைக் கொண்டு செங்கல் செய்யலாம் பானை செய்யலாம் சட்டி செய்யலாம் அது போலவே தான் இங்கே எல்லாம் ப்ரோட்டான்களும் எலெக்ட்ரோன்களும் எப்படி என்ன ஒழுங்கில் சேர்க்கிறது என்பது தான் ஒன்று என்னவாக இருக்கிறது என்பதை தீர்மானிக்கிறது. Pattern of proton and electrons decide what is what. Basically everything is from same source.
ஓரளவு கெமிஸ்ட்ரி தெரிந்தவர்கள் இதை புரிந்து கொள்வார்கள். ஹீலியத்தில் இருந்து ஒரு ப்ரோட்டானும் எலெக்ட்ரானும் வெளியேறிவிட்டால் அது ஹைட்ரஜன் ஆகிவிடும்.
அடிப்படையில் எல்லாவற்றிக்குள்ளும் இருப்பது ப்ரோட்டான்களும் எலெக்ட்ரான்களும் தான்.
இப்பொழுது மந்திர புஷ்பத்தின் உரையை மீண்டும் படித்து பாருங்கள். மேகத்தின் மூலம் நீர், நீரின் மூலம் மேகம் என்று நீரின் சுழற்சியை மட்டும் அந்த மந்திரத்தில் சொல்லவில்லை, பிரபஞ்ச சுழற்சியை சொல்கிறார்கள். லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன்னர் பூமி முழுதும் ஒரு நட்சத்திரம் போன்று எரிந்து கொண்டு இருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நட்சத்திரம் போன்று எரிந்து கொண்டிருந்த பூமி இன்று 75 சதவீதம் நீரை கொண்டதாக இருக்கிறது.
நட்சத்திரங்களே நீரின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான். நட்சத்திரங்களின் மூலத்தை அறிபவனும் நிலையான இடத்தை அடைகிறான். நீரே நட்சத்திரங்களின் மூலம்; இதை அறிபவன் நிலையான இடத்தை அடைகிறான் என்கிறது அந்த மந்திரம்..
எத்தனை பெரிய அறிவியல் கருத்துக்கள்! இது வெறுமனே அறிவியல் கருத்து மட்டும் இல்லை, நீங்களும் நானும் வெறும் நட்சத்திர துகள்களே தான் என்பதை நமக்கு நினைவூட்டும் மந்திரம். நீங்களும் நானும் லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன்னர் ஒரு நட்சத்திரம் போல் எரிந்து கொண்டிருந்தோம். பின் தணிந்து ஒரு கோள் என்று ஆனோம், பின் அதிலிருந்து உயிர் கொண்டு இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கிறோம். படிக்கும் பொழுதே எத்தனை பெரிய வியப்பை தருகிறது. இங்கே இருக்கிற எல்லாமும் நீங்களே தான் என்பதை உணர்த்துவது தான் அந்த மந்திரம்.
ஆனால், காலம் காலமாக எதற்கு சொல்கிறோம் ஏன் சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
இனி அந்த மந்திரத்தை கேட்கும் பொழுதெல்லாம் ஒரு வியப்பு உங்களை தொற்றிக்கொள்ளும். கீழே அந்த மந்திரத்தை தமிழில் கொடுத்திருக்கிறேன். இனி இந்த வார்த்தைகள் எங்கு ஒலித்தாலும் அது உங்களின் எண்ணங்களை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்லட்டும் .
மந்திர புஷ்பம் – தமிழ் எழுத்துப்பெயர்ப்பு
பகுதி 1 யோSபாம் புஷ்பம் வேத | புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி | சந்த்ரமா வா அபாம் புஷ்பம் | புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி | ய ஏவம் வேத | யோSபாமாயதனம் வேத | ஆயதனவான் பவதி || 1 ||
பகுதி 2 அக்னிர்வா அபாமாயதனம் | ஆயதனவான் பவதி | யோSக்னேராயதனம் வேத | ஆயதனவான் பவதி | ஆபோ வா அக்னேராயதனம் | ஆயதனவான் பவதி | ய ஏவம் வேத | யோSபாமாயதனம் வேத | ஆயதனவான் பவதி || 2 ||
பகுதி 3 வாயுர்வா அபாமாயதனம் | ஆயதனவான் பவதி | யோ வாயோராயதனம் வேத | ஆயதனவான் பவதி | ஆபோ வை வாயோராயதனம் | ஆயதனவான் பவதி | ய ஏவம் வேத | யோSபாமாயதனம் வேத | ஆயதனவான் பவதி || 3 ||
பகுதி 4 அஸௌ வை தபன்னபாமாயதனம் | ஆயதனவான் பவதி | யோSமுஷ்ய தபத ஆயதனம் வேத | ஆயதனவான் பவதி | ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம் | ஆயதனவான் பவதி | ய ஏவம் வேத | யோSபாமாயதனம் வேத | ஆயதனவான் பவதி || 4 ||
பகுதி 5 சந்த்ரமா வா அபாமாயதனம் | ஆயதனவான் பவதி | யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத | ஆயதனவான் பவதி | ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் | ஆயதனவான் பவதி | ய ஏவம் வேத | யோSபாமாயதனம் வேத | ஆயதனவான் பவதி || 5 ||
பகுதி 6 நக்ஷத்ராணி வா அபாமாயதனம் | ஆயதனவான் பவதி | யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத | ஆயதனவான் பவதி | ஆபோ வை நக்ஷத்ராணாமாயதனம் | ஆயதனவான் பவதி | ய ஏவம் வேத | யோSபாமாயதனம் வேத | ஆயதனவான் பவதி || 6 ||
பகுதி 7 பர்ஜன்யோ வா அபாமாயதனம் | ஆயதனவான் பவதி | ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத | ஆயதனவான் பவதி | ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம் | ஆயதனவான் பவதி | ய ஏவம் வேத | யோSபாமாயதனம் வேத | ஆயதனவான் பவதி || 7 ||
பகுதி 8 ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம் | ஆயதனவான் பவதி | யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத | ஆயதனவான் பவதி | ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் | ஆயதனவான் பவதி | ய ஏவம் வேத | யோSப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத | ப்ரத்யேவ திஷ்டதி || 8 ||
