பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி:
பாரதியின் வார்த்தைகள் மீது அவன் வாழ்ந்த வாழ்க்கையின் மீது எனக்கு எப்போதும் தீராக்காதல் உண்டு, தமிழுக்கு புதிய வார்த்தைகளை கொடுத்தவன் பாரதி., காட்சிப்பிழை (எனக்கு மிகப்பிடித்த பாரதிவார்த்தை 🙂 ) , பேசும்பொற்சித்திரம் ,அக்கினிக்குஞ்சு (நெருப்பை பறவையாக உருவகித்திருக்கும் அவன் சொல்லாண்மை ) அவன் படைப்பு கடலுக்குள் மூழ்கினால் இன்னும் இதுபோல நிறைய முத்தெடுக்கலாம்.
அவன் ஆத்திச்சூடி ஒன்று எழுதியுள்ளான்,அவ்வையின் ஆத்திச்சூடிக்கு எதிர்வீட்டில் குடிவைக்கலாம் அதை 🙂 அவள் அறம் செய விரும்பு என்கிறாள்,இவன் ஊன் மிக விரும்பு என்கிறான், அவள் ஆறுவது சினமென ஆற்றுப்படுத்துகிறாள், இவன் அச்சம் தவிர், ரவுத்திரம் பழகு என ஊற்றுப்படுத்துகிறான் .
அவ்வையின் வாக்கு அக்கால மாந்தருக்கு , பாரதியின் வாக்கு இக்கால மாந்தருக்கு, அவ்வையின் ஆத்திச்சூடி out of date ஆகியது கண்டு அதை update செய்தவனாக நான் பாரதியை காண்கிறேன்.
பாரதி ஆத்திச்சூடி ஒன்றே போதும் வாழ்வியலை எளிய முறையில் விரைந்து கற்க. சர்வநிச்சயமாய் சொல்வேன் , வாழ்வியல் கற்க கட்டுக்கட்டான கட்டை புத்தகங்கள் , தலையணை அளவு புத்தகங்கள், மணிக்கணக்கான பிரசங்கங்கள், சாமியார் அறிவுரைகள் தேவையில்லை. பாரதியின் இந்த 110 வரிகள் கொண்ட இந்த புதிய ஆத்திச்சூடி போதும்.
அக்கினிக்குஞ்சுகளை பிரசவிக்கும் அக்கினிப்பறவை அவன், முட்டைகளுக்குள் இருக்கும் நம்மை அடைகாத்து உயிர்செய்யும் கனல் அவன் வார்த்தைகள். வாருங்கள், நாளொரு பாட்டாய் அவன் ஆத்திச்சூடிக்கு புதுப்பொருள் கற்போம், நம் பாட்டன் பாரதி கற்றுக்கொடுத்த வாழ்வியலை கற்போம்.
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி
காப்பு – பரம்பொருள் வாழ்த்து
பாரதியாரின் ஆத்திச்சூடி: காப்பு பாடல்
—————————————————————–
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
பலரும் பல பெயரில் பலவாறு சொல்லிடும் தெய்வங்கள் யாவும் ஒன்றே, அதனியல்பு ஒளியுறும் அறிவு, அதன் நிலை கண்டவர் அல்லலை (இல்லாததை இருக்கிறது என்பதும், இருப்பதை இல்லை என்பதுமான அல்+லல் எனும் துன்பம்) அகற்றினர் என்று அந்த தெய்வத்தை வாழ்த்தி வணங்கி காப்பு சொல்லி கரம்கூப்பி ஆரம்பிக்கிறான்.
குறிப்பு: பாரதியார் பாடல்களுக்கு பொருளுரை சொல்வது மடத்தனம் என அறிந்தும் மாய மனமென்னை எழுதப்பணிக்கிறது .இந்த பொருளுரை இக்கால சந்ததியினருக்கு அவசியம் என ஆறுதல் சொல்கிறது.
தினம் ஒரு பாரதியார் ஆத்திச்சூடியும் அது சார்ந்த ஒரு சிறு விளக்கப் பதிவும் இந்த தளத்தில்- ல் இடம்பெறும். வார்த்தைகளை நீட்டி முழக்காமல் முடிந்த வரை microblogging ரகத்தில் சிற்சில வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்று எனக்கு நானே கட்டளையிட்டுக் கொண்டு , பாரதியை வணங்கி பதிவைத் துவக்குகிறேன்.