முன் குறிப்பு: இராவண அரசியல் என்னும் இந்த கட்டுரைத் தொடர் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழர் மரபில் போற்றப்பட்டு வந்த இராமாயணமும் அதன் கதை நாயகனான இராமனும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட அவலத்தையும், ஒப்பீட்டளவில் மிக சமீபத்திய காலகட்டத்தில் எழுதப்பட்ட இராவண காவியம் நூலை எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு திராவிட தமிழ் தேசிய கொள்கையாளர்கள் பொய்ப் புனைவுகளால் புகுத்தியிருக்கும் கருத்து திணிப்புகளையும் பார்த்து வருகிறோம். தமிழ் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக, கருத்து திணிப்புகளை உண்மையென்று நம்பி ஏற்றுக்கொண்டிருப்பவர்களிடம் ஒரு விழிப்புணர்வையும் ,ஒரு புரிதலையும் ஏற்படுத்துவதே இந்த கட்டுரை தொடரின் நோக்கம். இந்த தொடரின் முதல் பாகம் : இராவண அரசியல் : பகுதி -1
மூல இராமாயண கதையை வடமொழியிலிருந்து மாற்றி தமிழருக்கு ஏற்றாற்போல எழுத்திருக்கிறார் என்றார் கம்பரை சாடும் கூட்டத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர். கம்பர் வடமொழியிலிருந்து இராமயணத்தை இறக்குமதி செய்து மறு சீரமைப்பு செய்து தமிழ்ப் படுத்தியிருப்பார் என்ற கருத்தை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
கம்பருக்கு முந்தைய காலத்தை சேர்த்த மணிமேகலை, சிலப்பதிகார காலத்திற்கும் முன்பே இராமனையும் இராமாயணத்தையும் தமிழர்கள் போற்றி வந்து இருக்கிறார்கள் என்பதை கடந்த கட்டுரையில் கூறியிருந்தோம்.
இளங்கோவடிகளுக்கும் சீத்தலை சாத்தனாருக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் கூற்றுப்படி ஆரியன் இராமனை போற்றி எழுத, திராவிட தமிழ் தேசியவாதிகள் காலத்தில் இருப்பது போன்ற அரசியல் நிர்பந்தங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை, அதோடு சிலப்பதிகாரத்தின் சிறப்பை சொல்லும் போது ஒன்றை சொல்லுவார்கள் மன்னர்களை எழுதி வந்த காலத்தில் குடிமக்களை காவியத்தின் மையமாக ஆக்கி எழுதப்பட்ட முதல் காவியம் என்று அப்படியான காவியத்தில் தமிழ் தெய்வம் மாயோனின் அவதாரமாக நம்பபடுகிற இராமனின் கதை கேளாத செவியென்ன செவி என்று எழுதப்பட்டிருந்தும் அதை நாம் சுட்டிக்காட்டியும் கூட தமிழ் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக திராவிட தமிழ் தேசியவாதிகளின் கருத்து திணிப்புகளுக்கு ஆட்பட்டிருக்கும் நம் தமிழ் சொந்தங்களால் இராமனை, இராமாயணத்தை, ஏன் இளங்கோவடிகளைக் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மூல ராமாயணம் என்பது வான்மீகி ராமாயணத்திருக்கும் முந்தையது. சங்க இலக்கியங்களான அகநானூறு புறநானூற்றிலும் கூட ராமாயணம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இராமனுக்கும் தமிழ் மண்ணுக்கும் தொடர்பில்லாமல் இது சாத்தியமில்லை.
வான்மீகியின் இராமாயணத்தில் இராவணன் தமிழ் அரசன் என்றெல்லாம் குறிப்பிடப்படவில்லை. அதில் சோழர்களின் பகுதிகள் பற்றியும் பாண்டியர்களின் கவாடம் பற்றியும் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் தமிழர்களையும் தெற்கில் வாழும் மக்களையும் அரக்கர்கள் என்றும் குறிப்பிடப்படவில்லை.
அது சரி, தமிழ் மன்னன் இராவணன் அரக்கனா?
நம் பாரத சமூகத்தில் அரக்க குணம் கொண்டவர்கள் மட்டுமே அரக்கர்கள் என்று சுட்டப்பெற்று இருக்கிறார்கள். அவ்வகையில் அரக்க குணம் கொண்ட ஒருவனை அரக்கன் என்று கூறுவதில் என்ன தவறு என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் சங்க இலக்கியங்களிலும், தமிழ் கடவுளான சிவனைப் போற்றிய தேவாரங்களிலுமே இராவணனை அரக்கன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்
புறநானூறு பாடல் 378. எஞ்சா மரபின் வஞ்சி!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 10-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி.
பாடலின் பின்னணி: பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். அதுபோன்ற அணிகலன்களை அதற்கு முன்னர் கண்டிராத பாணனின் சுற்றத்தார், விரலில் அணிபவற்றைக் காதிலும், காதில் அணிபவற்றை விரல்களிலும், இடையில் அணிபவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிபவற்றை இடையிலும் மாற்றி அணிந்து கொண்டனர். அந்தக் காட்சி, இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தில் விழுந்தவுடன், அவற்றைக் குரங்குகள் தாறுமாறாக அணிந்து கொண்டதைக் கண்டவர்கள் நகைத்து மகிழ்ந்ததைப் பாணனுக்கு நினைவூட்டியது. அதுபோல், பாணனும் தன் சுற்றத்தாரின் செயல்களைக் கண்டு நகைத்து மகிழ்ந்தான். அந்தக் காட்சியைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இப்பாடாலாக இயற்றியுள்ளார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
புறநானூறு பாடல் 378 வரிகள்: 16 -24
“அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
.நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.”
(கடும் = கடுமை; தெறல் = சினத்தல் / அழித்தல்; வலி = வலிமை; அரக்கன் = இராவணன்; வௌவிய = கவர்ந்த; ஞான்று = அப்போது; மதர் அணி = மதிப்புமிக்க அணிகள்; இழை = அணிகலன்கள்; செம்முகப் பெருங்கிளை = சிவந்த முகத்தை உடைய குரங்கின் கூட்டம்; பொலிந்து = நகைகளை அணிந்து பொலிவு பெறுதல்.)
திருஞான சம்பந்தர் தேவாரத்தில் இராமன் இராவணனை அழித்துத் திரும்பியது பற்றிப் பின்வருமாறு பாடியுள்ளார் :
பண் :காந்தார பஞ்சமம்
பாடல் எண் : 3 தேவாரம் "மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால் கானதில் வவ்விய காரரக் கன்உயிர் செற்றவன் ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம் ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே"
பொழிப்புரை :
மான் போன்ற மருண்ட பார்வையையுடைய சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும் புகழுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுர மானது மன்னுயிர்கட்கு நன்மைதரும் சிவஞானத்தையும், அதன் பயனான முத்தி இன்பத்தையும் தரும்.
இது இராமேசுவரம் பற்றிய பதிகத்தில் அமைந்துள்ளது
நாம் அறிந்துவைத்திருக்கும் மிகப் பழமையான தமிழ் நூல்களில் கூட இராமாயண நிகழ்வுகளை பற்றிய குறிப்புகள் இருப்பதோடு செருக்கு பேராசை பயம் போன்ற அரக்கத்தனமான குணங்களைக் கொண்ட இராவணனை அரக்கன் என்றே குறிப்பிடப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.
இராவணனும், இராமனும் தமிழ் அல்லது அதற்கும் முந்தைய மொழி பேசிய பாரத இனக்குழுவின் முன்னோர்களாகவே இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.
நான் என்கிற அகங்காரமே மனிதனுள் இருக்கும் அரக்க குணங்களை வளர்த்தெடுக்கும் தீனியாக அமைகிறது. பயம், தாழ்வு மனப்பான்மை, பேராசை, இவை எல்லாம் அரக்க குணத்தின் வெளிப்பாடே
இராவணன் செருக்கிற்கு நிறைய நிகழ்வுகளை எடுத்துக்காட்ட முடியும் .
திருமந்திரத்தில் இலிங்க புராணத்தில் 4வது பாடலில் "தாங்கி இருபது தோளுந் தடவரை ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின் நீங்க அருள் செய்தான் நின்மலன் தானே" -என்கிறார் திருமூலர்
நண்பர் ஒருவர் இராவணன் எல்லா உயிர்களிடமும் பற்றுதல் கொண்டிருந்தான் (பற்றுதல் என்பது பத்து தலை என்றானது என்றார்) அவரின் சிந்தனை கொஞ்சம் அழகாகவே இருக்கின்றது. திருமூலர் இராவணனை இருபது தோள்கள் உடையவன் என்கிறார்.
திருமூலர் போகிற போக்கில் பாடல் நயத்திற்காக எதையும் சேர்ப்பவர் இல்லை. நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த கதைகள் நடந்த காலத்தில் குறிக்கப்படும் இது போன்ற விஷயங்களுக்கு இருக்கும் காரணங்களை நாமாக யூகித்து முடிவு செய்ய முடியாது செய்யவும் கூடாது.
பத்து கலைகள் என்பது தான் பத்து தலைகள் என்றானது என்றார் இராவணனைப் போற்றும் நண்பரொருவர். பத்து கலைகளில் வல்லவன் என்றால் அதைப் பற்றிய குறிப்புகள் நம் இலக்கியங்களில் இருந்திருக்கும். ( தமிழ்க்கடவுள் ஆறுமுகனை வெறும் ஆறுகலைகளுக்கு உடையவனாக அடக்கிவிட முடியாது தானே).
தமிழ் மரபின் முன்னோர்கள் நூல்களின் மூலம் நமக்கு எடுத்துரைக்கும் ஒரு உண்மை
“உணர்ச்சிகளால் ஆளப்படுகிறவன் வீரன் இல்லை உணர்ச்சிகளை ஆளுகின்றவனே வீரன்”
திருமந்திரத்தில் சுட்டப்பெற்றிருக்கும் நிகழ்வானது ராவணனின் செருக்கை சுட்டும் ஒரு நிகழ்வு. இராவணன் கயிலாய மலையை பெயர்க்க முயன்ற நிகழ்வு.
இதே நிகழ்வு.
கலித்தொகையில், “இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக ஐயிருதலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன்போல” - என்றும்
திருஞான சம்பந்தர் பாடிய திருமுறையில்,
“எறியார் கடல் சூழ் இலங்கைக் கோன் தன்னை முறியார் தடக்கை அடர்த்த மூர்த்தி” என்றும் ,
திருநாவுக்கரசர் பாடிய திருமுறையில்,
“தலைஒருபத்தும் தடக்கையது இரட்டிதான் உடைய அரக்கன் ஒன்கயிலை..” என்றும்,
சுந்தரர் பாடிய திருமுறையில்,
“திண்தேர் நெடுவீதி இலங்கையர்கோன் திரள்தோள் இருப்பதும் நெரித்தருளி ..”என்றும்
இந்த கதை சுட்டப்பெற்றிருக்கிறது.
சிவன் என்பவர் பதஞ்சலி, அகத்தியர், திருமூலர் போன்றவர்களுக்கெல்லாம் குருவாக அறியப்படுகிறார் அவர்கள் சமஸ்கிருதத்திலும் தமிழுலும் இயற்றிய பல மெய்ஞ்ஞான அறிவியல் நூல்கள் எல்லாம் அவர்கள் சிவனிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவே திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
அத்தகைய சிவனின் கையிலாயத்தை தன் செருக்கினால் பெயர்க்க முற்பட்டு முடியாமல் வருந்தி பின் சிவனை வேண்டி விடுதலையாகி வரம் பெறுகிறான் இராவணன். இப்படியான நிகழ்வுகளைக் கொண்டு இராவணன் சிவ பக்தன் என்கிறோம் இராமனும் கூட சிவனை வணங்கிய குறிப்புகள் இருக்கின்றது ஆனால் இராமன் இராவணன் இவர்கள் இருவரும் சிவன் மீது கொண்டிருந்ததை பக்தி என்று எடுத்துக்கொள்ள முடியாது இலக்கியங்கள் அதனை பெரிய பக்தி என்று போற்றவும் இல்லை. காரணம் பூத உடல் சார் உணர்வுகள் தரும் ஆசைக்காக கடவுளிடம் வேண்டுவதை பக்தி என்று நம் முன்னோர்கள் உயர்த்தி பேசவில்லை. பக்தி என்பது தெய்வீக காதல் எனக்கு எதுவமே வேண்டாம் நீ தான் வேண்டும் என்கிற தெய்வீக காதல் நிலை.
உண்மையாகப்பட்டது பல சமயங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், அதே சமயத்தில் மறுக்க முடியாததாகவும் ஆகிறது. திராவிட தமிழ் தேசிய அரசியல் நம் மண்ணில் கருவுற்ற காலத்திற்கு முன்பு வரை இராவணனை உயர்த்தி போற்றுகின்ற போக்கு இருந்திருக்கவில்லை.
சங்க இலக்கியம் எதிலும் நம் தமிழ் பழந்தமிழ் மரபிலும் காணப்படவில்லை இருந்தும் தமிழ் மீது பற்று கொண்டவர்கள் இலக்கியம் படித்து, திராவிட தமிழ் தேசிய அரசியல் புகுத்தி இருக்கும் குழப்பங்களை பற்றி தெளிவடைந்து கொள்வதை விடுத்து அவர்கள் கூற்றின் வாதிகளாக நிற்பது வேதனைக்குரியது.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் திராவிட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் யாரும் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் திருமூலர் இளங்கோவடிகளை விடவும் பண்டைய தமிழ் சமூகத்தை அறிந்தவவர்கள் இல்லை அதோடு அப்பர் சுந்தரர் திருமூலர் இளங்கோவடிகள் இவர்கள் யாரும் வந்தேறிகளோ, வேற்று இனத்தவரோ இல்லை .
உண்மை நிகழ்வோ கதையோ எதுவென ஆகினும் இராமாயணம் இராமாயணமாகவே தமிழ் மன்னர்களின் தமிழ் குடிகளின் கால் பதிந்த தென்கிழக்காசிய நாடுகளில் எல்லாம் பரவியிருக்கின்றது.
எத்தனை விதங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் எங்கும் இராவண காவியமாக சொல்லப்படவில்லை. இராமனும் அறத்தின் குறியீடாகவே நம் பண்பாட்டில் இருந்திருக்கின்றான். அறத்தை விட்டு நீண்ட தூரம் விலகி விட்டதாலேயே அரசியல் லாபங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை நம்மால் ஏற்க முடிகிறது
அடுத்தடுத்த பகுதிகளில் சீதை தீ குளித்த நிகழ்வு, ராம ராஜ்ஜியம் என்பதன் மீது உள்ள பார்வை, சூர்ப்பனகையை இராமன் தாக்கிய நிகழ்வு, இராவணனின் மற்ற அரக்க குணங்கள் – என்று தமிழ் அறியாத திராவிட தமிழ் தேசியவாதிகள் ஏற்படுத்திய குழப்பங்ககுளுக்கான விளக்கங்கள் மற்றும் மேற்சொன்ன நிகழ்வுகளின் மூலம் நம் முன்னோர் உணர்த்தும் அறங்களும் தமிழின் துணையோடு அலசப்படும் .
தொடரும்…
இராவண அரசியல் தொடரின் பகுதிகள்