இந்த உலகம் நம்மை இகழும். நம் பெயர் கெட்டுப்போகும் இருப்பினும் நாம் இந்த இராவண அரசியல் என்னும் இத்தொடரினை எழுதுவதற்கான காரணம் தமிழ் சமூகம் கொண்டாடிய, பின்பற்றிய நல்ல விசயங்கள் அரசியல் காரணங்களுக்காக தமிழர்களின் எதிரிகள் ஆக்கப்பட்டிருப்பதை தமிழர்களுக்கு தமிழ் மூலமாகவே உணர்த்தவே.
இந்தத் தொடர் எழுத ஆரம்பித்ததில் இருந்து நாம் நிறைய பின்னூட்டங்களை பெற்று வருகிறோம் அதில் சிலவற்றுக்கான பதில்கள் மற்றும் விளக்கங்களை தனியே எழுதுவதற்கு பதிலாக இந்த தொடரின் இடையிடையே கொடுத்தால் அவை அந்த பதில்களைக் கோரியவருக்கு மட்டுமின்றி இந்த தொடரை வாசிக்கும் சகலருக்கும் சேரும் என்பது எம் எண்ணம்.
நாம் முந்தைய தொடர்களில் சிலப்பதிகாரத்தில், சங்க இலக்கியங்களில், இராமாயண கதை பற்றிய குறிப்புகள் இருப்பதையும், தமிழர்கள் கோலோச்சிய தெற்காசிய நாடுகளில் எல்லாம் வெவ்வேறு வடிவங்களில் இராமாயண கதை பரவியிருந்தாலும் அது ராவண காவியமாக அல்லாமல் ராமனின் காவியமாகவே பரவியிருப்பதையும் எடுத்து சொல்லியிருந்தோம்.
திராவிட தமிழ் தேசிய அரசியலின் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்ட அல்லது புகுத்தப்பட்ட புதிய நூலான இராவண காவியம் இராமனை பாட்டுடைத்தலைவனாக வைத்து இராமாயணம் பாடிய கம்பரை பழிக்கும் போக்கை தமிழர்கள் மத்தியில் புகுத்தியது.
சிலர் கம்பனின் கவிதை எனக்குப் பிடிக்கும் ஆனால் ராமனை பாடியது பிடிக்காது என்று கூறுவார்கள், நிச்சயம் ! அவர்கள் கம்ப ராமாயணத்தின் பாயிரம் பகுதியை கூட படித்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் இந்த கட்டுரையின் தொடக்க வரிகள் கம்பரிடம் இரவல் பெற்றதே .
" வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும், இது இயம்புவது யாது எனின்,- பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே " -(கம்ப ராமாயணம் பாயிரம் 6”)
. “என் பெயர் மாசடையும். என்ற போதிலும் நான் இராம காதை சொல்வதாகிய இந்த முயற்சியில் இறங்கியிருப்பது ஏனென்றால், கொஞ்சமும் பொய் கலவாத அறிவுத் திண்மையை உடையவர் எழுதியிருக்கும் தெய்விகமான பெருங் காவியத்தின் தன்மை, பெருமையைக் காட்டவே” என்கிறார் கம்பர்.
ஒருவர் புறநானூறில் ராமாயண கதை பற்றிய குறிப்பிருப்பதை நாம் சுட்டிக்காட்டியதை சுட்டிக்காட்டி காசுக்காக பாடிப் பிழைக்கும் புலவர்கள் பாடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டிருந்தார்.
நம் விரல் கொண்டே நம் கண்களை குத்தும் செயலை நாமே செய்வதற்கான விதையை இந்த ராவண அரசியல் சரியாகவே தூவியிருக்கிறது என்பதற்கு தமிழர் ஒருவரிடம் இருந்தே வரும் இத்தகைய கேள்வியே சான்று.
பழந்தமிழ் நாகரிகத்தில் பாடல்கள், கவிதைகள் போன்றவை அறத்தை போதிக்கவும், நம் சந்ததிகளுக்கு நாம் எப்படியிருந்தோம் என்று சொல்வதற்காகவும், மொழியை வளர்ப்பதற்காகவும், தமிழ் மொழியின் சுவையை உணர்வதற்காகவும் இயற்றப்பட்டன.
சினிமா பாடல்கள் இல்லாவிடில் கவிதைகள் நம்மில் பலரை எட்டுவதற்கு வாய்ப்பில்லாத ஒரு கால கட்டத்தில் வந்து நிற்கும் நாம் நமது பழந்தமிழ் இலக்கியங்களை பணத்திற்குப் பிழைப்பு நடத்தும் புலவன் பாடிய பாடல்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகமாக மாறியிருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.
காதல் தேசம் என்ற திரைப்படத்தில் வரும் “எனைக் காணவில்லையே நேற்றோடு” என்ற பாடலில்
“மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால்”
என்ற வரிகள் வரும்
மிக அழகான, நம்மில் பலரும் நேசிக்கும் பாடல் வரிகள். பாடலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரிகள் அல்லது இந்த வரிகளில் உள்ள பொருள் படும் படி வேறு வரிகள் ஏதேனும் இளங்கோவடிகள் காலத்திலோ , சங்க காலத்திலோ கம்பர் காலத்திலோ எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கமாட்டாது, அந்த பாடல் அரங்கேற்றம் ஆகியிருக்காது என்பதே நம் எண்ணமாக இருக்கின்றது.
( அர்த்தமற்ற எத்தனையோ குப்பைப் பாடல்கள் தற்கால தமிழ் சூழலில் இருக்கின்றன, இவ்விடத்தில் இந்த பாடலைக் குறிப்பிட காரணம், மிக நுணுக்கமாக கவனித்தாலன்றி இவ்வரிகளில் உள்ள பிழை தெரியாது என்பதாலேயே )
மேற்காண் பாடல் வரிகளில் பொருட்குற்றம் இருப்பதை நம்மில் சிலரே கவனித்திருக்க கூடும். உண்மையாக என்னை விரும்பாத போதும் கூட ஒரு பொய் சொன்னால் போதும் என் ஜீவன் வாழும் என்பது வரையில் எந்த குற்றமும் இல்லை அதன் தொடர்ச்சியாய் நிஜம் உந்தன் காதல் என்றால் என வரிகளை முடித்திருப்பது தான் பொருட்பிழை.
இதை சங்க காலத்தில் ஒரு அவையில் புலவர் ஒருவர் பாடியிருந்தால் நிச்சயம் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கும் இந்த பாடல். இத்தகைய குற்றங்கள் தமிழ் சங்கங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை என்றே தெரிகிறது.
வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும், இது இயம்புவது யாது எனின்,- பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே " -(கம்ப ராமாயணம் பாயிரம் 6”)
என்ற இந்த பாடல் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த இடத்தில் கம்பர் பாடிய அவையடக்க பாடல் இதில் அவர் வான்மீகி பற்றி சொல்லியிருப்பதை கவனிக்க வேண்டும் “பொய் கலவாத அறிவுத் திண்மையை உடைய” என்று வான்மீகியை கம்பர் பாடியதை புலவர்கள், தமிழர்கள் யாரும் எதிர்க்கவில்லை மாறாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
ராமாயணம் ஆதி காலம் தொடர்ந்தே நம் மண்ணோடு தொடர்புடைய ஒரு காவியமாக இல்லாமல் இருந்திருப்பின் அல்லது வேற்று இனத்தை போற்றும் காவியமாக இராமாயணம் இருந்திருப்பின் சங்க புலவர்கள் ராமாயணத்தை போற்றிய போக்கினை எந்த தமிழ் அரசர்களும் ஏற்று இருக்க மாட்டார்கள் வான்மீகியும் கம்பரும் மட்டுமே இராமாயணத்தை பாடவில்லை.
கம்ப இராமாயண பாயிர பாடலில் கம்பரே இதை அழகுற எடுத்துரைக்கிறார்.
“தேவபாடையின் இக் கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும், முந்திய நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ” -(கம்ப ராமாயணம் பாயிரம் 10”)
தேவ பாஷையாக தமிழ் சமூகத்தால் அறியப்பட்ட இன்று வடமொழியாக அறியப்படும் மொழியில் இராமபிரானின் கதையைச் சொல்லியவர்கள் மூவர்; அவர்களுள் ஆதிகவி வான்மீகி அருளிய காப்பியத்தின் வழியாலேயே கவிச்சக்கரவர்த்தி இராமாவதாரக் காப்பியத்தை நடத்துவதாக இச்செய்யுள் சொல்லுகிறது. காப்பியக் கதையின் பொது அமைப்பு ஆதிகாவியத்தின் வழியதே;
கம்பர் காலத்தில் பரவியிருந்த வடமொழி இராமாயணங்கள் வான்மீக இராமாயணம், அத்யாத்ம ராமாயணம், சம்பு ராமாயணம் என்பனவே எனக்கூறப்படுகிறது. இவற்றையே கம்பர் தம் பாடலில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதலாம்.
வான்மீகி, வசிட்டர், போதாயனர் என்ற இராமாயணம் இயற்றிய மூவர் பட்டியலில் வசிட்டருக்குப் பதிலாக சிலர் வியாசர் பெயரை இணைத்துரைப்பதும் உண்டு.
தமிழில் கம்பராமாயணத்திற்கு முன்பு ராமாயணம் யாப்பிசை வடிவில் இருந்திருக்கும் என்று மயிலை சீனி வேங்கட சாமி போன்றோர் கருத்துக்களை மீண்டும் இங்கு நினைவு கூறுகிறோம். மூல ராமாயணம் வான்மீகி ராமாயணத்திற்கும் முந்தையது என்பது எல்லோரும் அறிந்திருப்பதே.
இப்படியான சூழலில் தான் ராவண அரசியல் மூலமாக வான்மீகி ராமாயணத்தையும், ராமனையும் ஆரியம் என்னும் பதம் கொண்டு வேற்று இனம் சார்ந்ததாக காட்ட முற்படுகிறார்கள்.
இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் தமிழுக்கு முன்பிருந்த ‘நம் தமிழ் மொழியின் வேர் மொழியும்’ நம் இனத்தவரால் பயன்படுத்தப்பட்ட (தேவபாஷை என கம்பர் குறிப்பிடும்) ‘சமஸ்கிருதமும்’ தான் எல்லா இந்திய மொழிகளுக்கும் வேராக இருக்கின்றது. இப்போது இருக்கும் இந்திய மொழிகளில் , இந்திய இனங்களில் சம்ஸ்கிருதம் என்று அறியப்படுகிற வடமொழி தமிழ் சமூகத்தை தவிர எந்த இனத்தவரோடும் தொடர்புடையதாகவோ வேறு எந்த இனத்தவரும் சொந்தம் கொண்டாட முடிந்ததாகவோ இருக்க வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது.
ஆனால் ராவண அரசியலால் அது தமிழர்களுக்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டு அதுவே உண்மை என்று தமிழர்கள் தீர்க்கமாக நம்பும் அளவில் தமிழர்கள் மத்தியில் அந்த கருத்து திணிக்கப்பட்டு இருக்கின்றது . நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், மொழி இனம் இரண்டும் வெவ்வேறானவை என்று ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் வேறு வேறு மொழி பேசுபவர்களாக இருக்க முடியும். நாம் இன்று இரண்டு மொழிகளாக பார்க்கும் தமிழும் சமஸ்கிருதமும் ஒரே இனத்தின் ஒரே மொழியின் இரு வேறு கூறுகளாக கூட இருந்திருக்க முடியும் .
மேற்கத்திய வல்லுநர்களால் திணிக்கப்பட்ட ஆய்வுகளே ஒரே இனக்குழுவாக இருந்த நம் சமூகத்தில் குழப்பம் ஏற்படவும் அதிகார பசியில் இருந்தவர்கள் மக்களைப் பிரித்து பயன்படுத்தி அரசியல் செய்யவும் ஒரு உபாயமாக அமைந்திருக்கின்றது. இந்த ஆய்வாளர்கள் ஆரியம் திராவிடம் என்று பெயர் சூட்டி ஒரே குழுவாய் இருந்த இனத்தை இரண்டாக பிரித்து வைக்கிறார்கள் இது அரசியலாக்கப்பட இராமன் ஆரியனாகவும் இராவணன் திராவிட தமிழனாகவும் ஆக்கப்படுகிறான்.
அவர்களின் ஆய்வுகளின் படியே பார்த்தாலும் ராவணனை விட ராமனின் அங்க அடையாளங்களே திராவிட இனத்தோடு ஒத்து போகிறது. ஆனால் மேற்கத்தியர்கள் மேற்கொண்ட அந்த ஆய்வுகள் எதுவும் சங்க இலக்கியங்களையோ கல்வெட்டுகளையோ கருத்தில் கொண்டிருக்க முடியாது என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழின் தமிழ் இனத்தின் மூத்த கடவுளாக அறியப்படுகின்ற சிவனின் சீடர்களின் வழியில் வந்த திருமூலர் திருமந்திரத்தில் ஆரியமும் தமிழும் சிவன் பார்வதிக்கு சொல்லிக்கொடுத்தாக சொல்லியிருக்கின்றார் .
"மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே" ( திருமந்திரம் (1-3-10)
பெருகற்காலத்தும் சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்வு இருக்கவும், அதனை நோக்காது புலன் உணர்வு மிகப்பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து, அம்மெலிவு நீங்குமாறு சிவபெருமான் ஆரியம், தமிழ் என்னும் இருமொழிகளை உமையம்மைக்கு ஒருங்கே சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தார் என்பது இதன் பொருள்.
திருமூலரின் பாடல்களின் படி அவரின் காலம் வரையறுத்து சொல்லிவிட முடியாத ஒன்று. அவர் அவரின் பாடல்களில் சிவனின் சீடர்கள் பற்றியும் அவர் வழியில் சிவாகாமத்தை எடுத்துரைக்கப் போவோர் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் அதில் தமிழ் நிலங்களின் தெய்வமான இந்திரனைக் குறிப்பிடுகிறார்.
"நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே" ( திருமந்திரம் 1-4-1)
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என்வழி யாமே. ( திருமந்திரம் 1-4-3)
ஆனால் திருமந்திரம் இயற்றப்பட்ட காலத்திற்கு வெகு பிந்தைய காலத்தில் வந்த ஆய்வாளர்கள் அவரை பொது ஆண்டு பிறந்த பின் வந்தவராக குறிப்பிடுகிறார்கள் .
சங்க இலக்கியங்களைப் புறக்கணித்து , திருமந்திரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப இராமாயணம் போன்ற பழந்தமிழ் நூல்களை மறுதலித்து தமிழருக்கான அரசியல் என்ற மாய பிம்பத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது இந்த இராவண அரசியல்.
திராவிட தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் இந்த ராவணன் அரசியல் உருவாக்கிய பிம்பங்களைப் பற்றி அடுத்த தொடரில் விரிவாக அலசலாம்.
தொடரும்…
இராவண அரசியல் தொடரின் பகுதிகள்