இராவண அரசியல் #1
இராவணன் – மிக கம்பீரமான ஒரு பெயர். சொல்லும் போதும் நினைக்கும் போதும் கூட அந்த கம்பீரம் நம்மை ஒட்டிக்கொள்கிறது.
இராமன் – இராவணன் என்னும் பெயரில் உள்ள கம்பீரமும் பிரமாண்டமும் சற்றேக் குறைவாக கொண்ட ஒரு எளிமையான பெயர்.
வீரனாக அறியப்பட்டாலும் எளிய வீரனாகவே தெரிகிறான் இராமன். கதைகள் என்று ஆனாலும் உண்மை என்று ஆனாலும் வெறுப்பும் விருப்பும் கதையின் நாயகனுக்கும், வில்லனுக்கும் என்று இருவர் மீதும் ஏற்படுவது என்றுமே இயல்பு.
இயேசுவையும் நபிகளையும் கூட அவர்களின் சம காலத்தில் ஆதரித்தவர்களை விட எதிர்த்தவர்கள் மிக அதிகம். இராமாயண காவியத்தில் இராமன் நாயகனாகவும், இராவணன் வில்லனாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளனர் (வில்லன் என்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தையைத் தேடினால் இன்று வில்லன் என்கிற வார்த்தைக்கு கொள்ளப்படுகிற அர்த்தத்தை ஒட்டிய சரியான நிகரான வார்த்தையைக் கொடுக்க முடியவில்லை).
நம் பாரத இனக்குழுக்களின் எந்த ஒரு பழமையான கதைகளிலும் சரி, காவியங்களிலும் சரி, தீயவன் என்று யாரையும் முற்றும் முழுதுமாக முன்னிறுத்தியதில்லை . யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் அல்லது செய்த செயல்களைப் பொறுத்தே அவர்களின் விதி (செயல்களின் பலனாக விளையும் விளைவுகள்) அமைகிறது என்பதைத்தான் நம் பாரத பண்பாட்டில் கதைகள், காவியங்கள் எல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.
இப்படி நாயகன் தரப்பிலும், வில்லன் தரப்பிலுமாக இரு தரப்பின் நியாயங்களையும் நமது நாட்டின் கதைகள் பதிவு செய்த காரணம் தான் இன்று இராவண அரசியலுக்கான புள்ளியாக அமைந்துவிட்டதோ என அய்யம் கொள்ள வைக்கிறது.
சரி, அதென்ன இராவண அரசியல்?
அரசியலை பொறுத்தவரையில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எந்த அளவு முக்கியத்துவம் உள்ளதோ அதே போல, மக்களை (வாக்காளர்களை) ஒரு பொதுவான இணைப்புப் புள்ளியில் சேர்க்க வேண்டிய பகீரத முயற்சியும் அரசியல்வாதிகளுக்கு தேவைப்படுகிறது.
பிரிப்பதைப் போல சேர்ப்பதென்பது அத்தனை எளிதாக செய்ய முடிந்த ஒன்றில்லை. சேர்ப்பதற்க்கு அனைவருக்கும் பொதுவான நல்ல விஷயங்களைக் காட்டிலும் பொதுவான தீய விஷயங்களைக் கையிலெடுப்பது கை மேல் பலன் தருகிறது.
அப்படியான முயற்சியில் “திராவிடர்களுக்கு” என்ற போர்வைக்குள் மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு எதிரான ஒரு பொதுவான எதிரியைத் தேடி, கிடைக்காத காரணத்தால் பொது எதிரியை உருவாக்கினார்கள்.
இன்றைய காலகட்டத்தில் திராவிடம் என்று இல்லாமல், அந்த எதிரியை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் எதிரானதாக்கிக் கொண்டார்கள் அந்த தமிழ் தேசியவாதிகள்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால்
ஆயிரமாயிரம் வருடமாக தமிழ் சமூகம் கொண்டாடிய, போற்றிய அனேக விசயங்களை தமிழர்களுக்கு அந்நியமாக்கி தமிழுக்கு எதிராக நிறுத்தி இன்றைய தமிழ் சமூகத்தை நம்ப வைத்தது தான். அப்படியான விசயங்களில் ஒன்று தான் “இராவணன் தமிழ் மன்னன்”, “இரவணன் என்ற தமிழனை ஆரியர்கள் வில்லனாக்கி உள்ளனர்” என்ற போர்வைக்குள் மக்களை ஒன்று திரட்டி பொதுப்புள்ளியில் ஒன்றினைந்த பொது மக்களின் பொது எதிரியாக இராமனை சித்தரித்து இவர்கள் செய்யும் பிரச்சாரம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் தமிழ் சமூகம் இராவணனை போற்றத் தெரியாத சமூகமாக இருந்ததா என்ன? . இப்படி யோசிக்காமல் புதுக்கதைகளை நம்பி அறிவாளித்தனமான கேள்விகளோடு நிற்கும் திராவிட தமிழ் தேசியவாத தமிழர்கள் இராவணனை நல்லவனாய் பார்ப்பது தவறில்லை.
ஆனால் தமிழ் படிக்காமல் இராவணன் தரப்பு குற்றங்களை நியாப்படுத்த தமிழ் சமூகத்தின் தருமங்களை குறைத்துக் கூறி இராமனை இழிவுபடுத்துவது இராமனை இழிவுபடுத்தும் செயல் இல்லை அது நம் முன்னோர்களை நாமே இழிவுபடுத்தும் செயல்.
இராவணனை ஏன் போற்றவில்லை தமிழ் சமூகம்:
சங்க இலக்கியங்களையும் , பழந்தமிழ் நூல்களையும் சற்றேப் புரட்டிப் பார்க்கிற போது , நம் தமிழ் முன்னோர்கள் ஒருவனை தெய்வ நிலைக்கு உயர்த்த வேண்டுமானால் அவன் நல்ல பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
அப்படியாக, நற்பண்புகள் கொண்ட மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்துவதை கண்ணுறுகிற சமூகம் அந்த பெரிய மனிதர்களின் பண்புகளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு அவர்களை பின்பற்ற வேண்டும் என்று இப்படி செய்தார்கள்.
இராவணன் நல்ல பண்புகளை கொண்டிருக்காமல் இல்லை. ஆனால் தன் எல்லா நல்ல பண்புகளையும் மங்கச் செய்யும் பெருங்குற்றம் ஒன்றை செய்தது தான், இராவணன் எனும் அந்த கதாபாத்திரத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்த தடையாக உள்ளது. பிறனில் விழையாமை என்பது வள்ளுவர் உலகிற்கு சொன்ன ஒழுக்கங்களுள் ஒன்று.
திருமூலரும் கூட பிறன் மனை நயவாமை பற்றி சொல்லிறியிருக்கிறார் .
" பிறர் பொருளால் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் இல் " - திருக்குறள்: 141 வது குறள்
மற்றவனுக்கு உரிமை உள்ள மனைவியை விரும்பி அவளிடம் செல்வது அறியாமை. இவ்வுலகில், அறம் இன்னது, பொருள் இன்னது என்று அறிந்தவர்களிடத்தில் இந்தத் தீய நெறி காணப்படுவதில்லை.
சீதையின் விருப்பமில்லாமல் இராவணன் அவளை நெருங்கவில்லை என்பது உண்மையாகவே இருந்தாலும், தங்கையை அவமதித்ததால் தான் சீதையை கடத்தினான் என்று சப்பைக்கட்டு கட்டினாலும் அடுத்தவன் மனைவியை தன் மனைவியாக ஆக்க முற்பட்டான் என்பது மறுப்பதற்கில்லை.
அடுத்தவன் மனைவியை கடத்தி வந்து சிறைப்படுத்தி, விருப்பம் சொல் கட்டிக்கொள்கிறேன், விருப்பம் இல்லையென்றால் தொட மாட்டேன் என்ற இராவண குணத்தை பழம் தமிழ் நூல்கள் எதுவும் உயர்வானதாக சித்தரித்ததாக குறிப்புகள் இல்லை.
கம்பன் தான் இயற்றிய ராமாவதாரத்தில் ஒரு நீதிபதி போல இருந்தே எல்லா பாத்திரங்களையும் கையாண்டுள்ளான். யாரையும் போகிற போக்கில் ஏற்றியும் குறைத்தும் பேசவில்லை எல்லா இடங்களிலும் அவர்களின் செயல்களில் உள்ள நியாய அநியாயங்களை அழகாக சொல்லிருப்பான்.
நம் மண்ணின், நம் முன்னோர்களின் ஒழுக்கத்தை எல்லா இடங்களிலும் காட்டியிருப்பான். பிறனில் விழையாமை பற்றி அவன் காட்டியிருக்கும் விதம் எல்லா ஒழுக்கங்களும் இருப்பினும் அத்தகைய செயல் ஒருவனை அழித்து விடும் என்பதை காட்டுவதாக அமைந்திருக்கும்.
குகன் பரதனிடம் கூறுவது போல் அமைந்துள்ள கம்ப இராமாயணப் பாடல் பின்வருமாறு:
“அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச வில்லை ஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன் கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல் எல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்” - கம்ப இராமாயணம் : 2344 வது பாடல்
(இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் கண் இமைக்காமல் காவல் நின்றான். எனவே அவன் உறங்கவில்லை).
இதில் கவனிக்க வேண்டியது இலக்குவன் இராமனையும் சீதையையும் கண் இமைக்காமல் காத்தான் என்பது அல்ல. குகன் இராமனும் சீதையும் உறங்கினார்கள் என்பதை எப்படிக் கூறுகிறான் என்பதே.
இராமனின் அழகை “இருளை ஆட்சி செய்யும் கருமை பொருந்திய உடல் அழகை உடையவன்” என்று கூறுகிறான். ஆனால் சீதையை வர்ணிக்க வில்லை. சீதையை வெறுமே “அவள்” என்று மட்டுமே கூறுகிறான். சீதை இன்னொருவன் மனைவி. எனவே அவளை வர்ணிக்கக் கூடாது என்ற தமிழர் ஒழுக்கத்தின் வழி நின்று ஓடம் ஓட்டும் குகன் மூலமாகக் கம்பன் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்.
சூர்ப்பனகை இராவணனிடம் சீதையைக் கவர்ந்து வருமாறு சொல்லுமிடத்தில் பின்வருமாறு கூறுகிறாள்,
"வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் கிள்ளைபோல் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே" - கம்ப இராமாயணம்: 3143 வது பாடல்
( வள்ளல் தன்மை கொண்டவனே, உனக்கு மட்டுமே நான் நல்லவள். உன் மனையில் கிளியைப் போல் உரையாடும் உன் காதலிகளுக்கெல்லாம் நான் கேடு செய்தவளாவேன் )
இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் தன் மாமனான மாரீசனை உதவுமாறு வேண்டுகிறான். அப்போது மாரீசன் கூறுவது :
“நாரம் கொண்டார் , நாடு கவர்ந்தார், நடையல்லா, வாரம் கொண்டார், மற்றொருவர்க்காய் மனைவாழும், தாரம் கொண்டார், என்றிவர் நம்மைத் தருமந்தான், ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா !” - கம்ப இராமாயணம் : 4064 வது பாடல்
(நடு நிலைமை தவறியவர்கள், பிற நாட்டைப் பலவந்தமாகக் கவர்ந்தோர், ஒழுக்கமற்ற செயல்களில் ஆசை கொண்டோர், இன்னொருவனுக்கு உரியவளாக அவனது மனையில் இருப்பவளைக் கவர்ந்தவர் இவர்கள் அனைவரையும் தருமம் அழித்துவிடும் )
இவை இராவணன் மீது மிக்க அன்பு கொண்ட மாரீசன் கூறும் வார்த்தைகள். அவனே மாய மானாக மாறி சீதையைக் கவர உதவினான் என்றாலும், முடிந்தவரை அறத்தின்பால் நின்று இராவணனைத் தடுத்துப் பார்த்தான். “தர்மமே உன்னை அழித்துவிடும்”, என்று பயமுறுத்தினான். இவை அனைத்தையும் மீறி இராவணன் சீதையைக் கவர்ந்தான் என்பதால் இராவணன் பிறன் இல் விழையும் தன்மை உடையவன், பல தார மணமோ அல்லது பல பெண்டிர் தொடர்போ கொண்டவன் என்பது புலனாகிறது. (இதனால் தானோ என்னவோ தமிழகத்தில் பலர் தங்களை இராவணன் குலத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர்)
கம்பன் அத்துடன் நிற்கவில்லை. பிறன் இல் விழையாமையை மேலும் வலியுறுத்துகிறான்.
கும்பகர்ணன் இராவணனிடம் அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துள்ள பாடல் நக்கலும் நையாண்டியுமாகவும் அதே நேரத்தில் ஆணி அடித்தது போலவும் உள்ளது. அது பின் வருமாறு :
"ஆசில்பரதாரம் அவை அம் சிறை அடைப்போம் ! மாசில் புகழ் காதல் உறுவோம்! வலிமை கூரப் பேசுவது மானம்! இடைப் பேணுவது காமம், கூசுவது மானுடரை! நன்று நம் கொற்றம்!" - கம்ப இராமாயணம் : 6122 வது பாடல்
(குற்றமற்றவர்களாக உள்ள மற்றவர் மனைவியரை எல்லாம் கொணர்ந்து நமது அழகிய சிறைகளில் அடைப்போம்; அச் செயலைச் செய்துவிட்டு, “எமக்கு மாசற்ற புகழ் வேண்டும்” என்று விரும்புவோம்; வெளியில் “எங்களுக்கு மானமே பெரிது” என்று உரைப்போம் ஆனால் அறிஞர் வெறுக்கும் காமத்தை விரும்புவோம். இப்படிப்பட்ட நமது வெற்றி வாழ்க, நம் புகழ் வாழ்க !)
மேலே கூறிய பாடலில் கும்பகருணனின் நேர்மை தெரிகிறது. அதே சமயம் இராவணன் சீதை தவிர மற்ற பலரது மனைவியரையும் சிறைப்படுத்தியுள்ளான் என்றும் அறிகிறோம். அதைக் கும்பகருணன் கேலியாக “நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோம், என்ன ஒரு பெருமை, என்ன ஓர் ஆட்சி !” என்று கூறுகிறான்.
தங்கையை அவமதித்ததாக நினைத்து இருந்தால் இராமனுடன் போரிட்டு இருக்கலாம் இல்லை ராமன் வீட்டு பெண்ணை அவமதிக்க நினைத்து இருந்ததால் ராமன் இடத்திற்க்கு சென்று சீதையை தாக்கி விட்டு திரும்பி இருக்கலாம். இப்படி எதுவும் செய்யாமல் சூழ்ச்சியால் கடத்தி சென்றதை நாங்கள் தமிழர்கள் என்கிற போர்வையை போர்த்திக் கொண்டிருப்போர் விமானத்தில் கடத்தி சென்றான் என்று பெருமை பேசுகிறார்கள்
இராமனைப் போற்றிய தமிழ் சமூகத்தில் வந்தவர்களும் இராவண வம்சம் நாங்கள் என பெருமை பேசி சிறுமை கொள்ளும் அவ நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த இராவண அரசியல்.
இராமனை எதிரியாக்கிய போதே கம்பனை ஆரிய அடிமையாக்கிவிட்டார்கள் நவீன தமிழ் போராளிகள். அதனால் கம்பன் மேற்சொன்னவைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் நியாமில்லை.
கம்பருக்கு முன்பவாகவே தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. வெண்பா யாப்பில் அமைந்த இராமாயணமும், ஆசிரியப்பாவில் அமைந்த இராமாயணமும் முன்பு இருந்து, பின்பு அழிந்திருக்க வேண்டும் என்று மயிலை. சீனி வேங்கடசாமி போன்ற தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ராமனை போற்றியதா தமிழ் சமூகம் என்னும் கேள்வி எழலாம். இராமன் நம் மண்ணோடு தொடர்ப்புடையவன் ஆதலாலும் க்ஷத்ரிய தர்மத்தின் படி அரசன் பல தாரா மணம் புரியலாம் என்று இருந்தும் கூட ஏக பத்தினி விரதத்தில் உறுதியாய் இருந்ததாலும் அறத்தின் வழி நின்ற அவனை பற்றி கதைகள் வழியாகவும் இதிகாசம் வழியாகவும் மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார்கள் நம் தமிழ் முன்னோர்கள் இதையெல்லாம் மக்களை நல்வழி படுத்தவே செய்தார்கள் .
தமிழ் நிலங்களுக்கான தெய்வங்களில் ஒருவராக திருமால் வைக்கப்படுகிறார் அத்தகைய திருமாலை பற்றி ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சிலப்பதிகாரமும் பேசுகின்றன. இதில் நோக்கவேண்டியது என்னவென்றால் சிலப்பதிகாரம் சமண காவியம், மணிமேகலை பௌத்த காவியம்.
இராமன் இராவணனை அழிக்கக் கடலில் பாலம் அமைத்தான் என்னும் கருத்தை விளக்கும் விதமாக மணிமேகலை எனும் தமிழ் காப்பியம்
"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம் அணங்குடை அளக்கர் வயிறுபுக்கு" - மணிமேகலை: உலக அறவி புக்க காதை
என்கிறது.
(திருமால் பூவுலகில் இராமனாகத் தோன்றி இராவணனைக் கொன்று சீதையை மீட்க இலங்கைக்குப் போகும் பொருட்டு வலிமை சிறந்த கடலில் அணை போட்டான். அந்நாளில் அணை போடுவதற்காகக் குரங்குகள் வீசிய பெரிய மலைகள் எல்லாம் வருத்தத்தைத் தரும் கடலின் வயிற்றிலே புகுந்தன)
சிலப்பதிகாரத்தில் உள்ள குறிப்புகள்
"தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வன் பயந்தோன் என்பது நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ" - சிலம்பு. ஊர்காண் காதை. 46-49
(தாதை = தந்தை / தயரதன்; மாது = பெண் / சீதை; வேதமுதல்வன் = நான்முகன் / பிரம்மன்; வேதமுதல்வன் பயந்தோன் = பிரம்மனைப் பெற்றெடுத்த திருமால்; நெடுமொழி = பழங்கதை.)
இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்). அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான். பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?
திருமாலைப் போற்றி இடைக்குல மக்கள் பாடும் ஆய்ச்சியர் குரவையிலும் அவனது இராம அவதாரம் பற்றிய குறிப்பு வருகிறது.
"மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே" - சிலம்பு- ஆய்ச்சியர் குரவை
(மூஉலகு = மூன்று உலகம் / மேலுலகம், கீழ் உலகம், பூமி ; ஈரடி = கால்கள்; நிரம்பா வகை = குறைவுபடும்படி; சேப்ப = சிவக்க; சோ அரண் = சோ என்ற மதில்; சீர் = புகழ்.)
திருமாலின் பத்து அவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. வாமன அவதாரத்தில் மாவலி மன்னன் தானமாகத் தந்த மூன்றடி மண்ணையும் அளந்து பெறுவதற்காக வாமனன் பேருருக் கொண்டான். மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளால் அளந்தான். அத்தகைய திருவடிகள் சிவக்க, இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.
இதிலிருந்து தெளிவாவது தமிழ் தெய்வங்களின் ஒருவனான மாயோனின் அவதாரம் தான் ராமன் என்பதனை சிலப்பதிகாரம் பறைசாற்றுகிற்றது என்பதும். சிலப்பதிகார காலத்திற்கும் முன்பே தமிழுக்கும் தமிழர்க்கும் இராமாயணத்துடன் தொடர்பு இருந்துள்ளது என்பதனையும் தான் . இங்கு இராவணர் என்பவர் தமிழர் என்றே எடுத்துக்கொண்டாலும் ராமனை தமிழ் சமூகம் அந்நியனாக பார்க்கவில்லை என்பதும் தான் .
இராமனை இகழ்ந்து இராமனுக்காக கம்பனையும் இகழும் திராவிட தமிழ் தேசிய அறிவாளிகள் இளங்கோவடிகளை விட தமிழையும் தமிழ் முன்னோர்களையும் அறிந்தவர்களா என்ன?
ஐம்பெருங்காப்பியங்களுக்கும் கம்ப ராமாயணத்திற்கும் இடையிலும் கூட தமிழ் நூல்களில் இராமனை பற்றி பேசப் பட்டிருக்கிறது.
இராமனைப் பற்றி எழுப்பப்படும் விதண்டாவாத கேள்விகளுக்கான பதில்கள் கம்ப ராமாயணத்திலே இருக்கின்றது இருந்தாலும் நாங்கள் மேடை பேச்சுக்களையும் மேற்கத்திய அறிஞர்கள் ஏற்படுத்திய குழப்பங்களையும் தான் நம்புவோம் என்பவர்களுக்காக இனி வரும் பகுதிகளில் இராமன் இராவணன் பற்றி தமிழ் நூல்களில் இருக்கும் குறிப்புகள் பற்றியும் திராவிட அரசியல் தோற்றுவித்த இராவண அரசியல் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் பற்றியும் அலசுவோம்.
தொடரும் ….
இராவண அரசியல் தொடரின் பகுதிகள்
Good post waiting to continue
MayaMEDetroit